தங்கர் பச்சா அடிப்பொடிகளுக்கு ஒரு கேள்வி
ஒரு அலுவலகத்தில் கொள்கை பிடிப்போடு பணியே உயர்வென்று dedicated ஆக ஒருவர் வேலை செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த அலுவலகத்தில் உங்கள் வீட்டு பெண்கள் வேலை செய்கிறார்கள்... அந்த workaholic மனிதருக்கு 5 மணிக்கு பஸ் பிடித்து அவசரமாக வீட்டுக்கு போகும் பெண்கள் எல்லாம் தொழில் பக்தி இல்லாமல் காசுக்காக மட்டும் வேலை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது... அவர் அலுவலக பெண்களை பார்த்து நீங்கள் எல்லாம் விபசாரிகள் என்று சொன்னால் அவர் சொல்வதும் நியாயம்தான் என்று உங்கள் வீட்டு பெண்களை சமாதானப்படுத்துவீர்களா?
நர்சரி ரைம்ஸாராய்ச்சி
எச்சரிக்கை : குழந்தை பாடல்களான baa baa black sheep, rain rain go away போன்றவற்றை குழந்தைகளுக்கு பாடிக்காண்பிப்பவர்கள் இதை படிக்காதீர்கள்
Rain Rain go away :: எலிஸபத் அரசி காலத்து பாடல் இது
1533-1603 காலகட்டத்தில் ஸ்பெயினும் இங்கிலாந்தும் எப்பொழுதும் சண்டைக்கோழிகள். 1588 வாக்கில் ஸ்பெயின் தனது கப்பற்படையோடு இங்கிலாந்துடன் சண்டைக்கு சென்றது. ட்யூக் ஆஃப் மெடினா, செடோனியா தலைமை வகித்த இப்படையில் 130க்கும் மேற்பட்ட பெரிய போர்க்கப்பல்கள் இருந்தன. அட்மிரல் லார்டு ஹோவர்டு தலைமை வகித்த ஆங்கிலப்படையிடம் இருந்ததோ 34 சிறிய போர்க்கப்பல்களும் 163 வணிக கப்பல்களும்.. ஆனால் ஆச்சரியமாக ஸ்பெயின் படுதோல்வி அடைந்தது.. இந்த தோல்விக்கு ஆங்கிலப்படையின் சிறிய கப்பல்களின் விரைந்து தாக்கும் திறன் மட்டுமல்ல, சூறாவளி மழையும் முக்கிய காரணம்.. சூறாவளியில் ஸ்பெயினின் பெரிய கப்பல்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை... எனவே தான்
Rain rain go away,
Come again another day.
We want to go outside and play
Come again some other day.
Jack and Jill :: பதினாறாம் லூயி சிரச்சேதம் செய்யப்பட்ட காலகட்டத்திய பாடல் இது
ப்ரெஞ்சு அரச பரம்பரையில் வந்த பதினாறாம் லூயி அவரது முன்னோடிகளோடு ஒப்பிடும் போது வலிவற்றவராக, அறிவு குறைந்தவராக, எளிதில் திசை திருப்பப்படுபவராக கருதப்பட்டார். 1770ல் மேரி ஆண்டோனெடை கல்யாணம் செய்த பின் மன்னரின் முடிவுகளில் மேரியின் ஆதிக்கம் மேலொங்கி இருந்தது (அப்பவே இப்படித்தானா?) (Jack and Jill)
இவர்கள் அரசனாகவும் அரசியாகவும் 1774ல் ஆனார்கள் (went up the hill)
அந்த காலகட்டத்தில் ப்ரான்ஸில் கடுமையான நிதி நெருக்கடி. ஆகவே மன்னர் கடுமையாக வரிவிதித்தார். அதனால் மன்னரின் மேல் மக்களுக்கு பற்று குறைந்து போராட தயாரானார்கள். மக்களை ஒடுக்குவதற்காக மன்னர் மேலும் வரி விதித்து நிதி மற்றும் சட்டத்தால் கசக்கி பிழிய ஆரம்பித்தார் (To fetch a pail of water)
ப்ரெஞ்சு மத்திய தர வர்க்கத்தால் இதை தாக்கு பிடிக்க முடியவில்லை. 1789ல் பரீஷிய நகர மக்கள் ஒன்று சேர்ந்து கோட்டையை முற்றுகை இட்டு மன்னரையும் அரச குடும்பத்தினரையும் சிறை பிடித்தார்கள் (Jack fell down)
1792ல் ப்ரான்ஸ் குடியாட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு மன்னர் மேல் வழக்கு தொடரப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டது. பாரிஸில் 1793 ஜனவரியில் கில்லட்டின் கொண்டு மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டார் (and broke his crown)
அரசி மேரி அவர் மகனிடமிருந்து பிரிக்கப்பட்டு தீர்ப்பாணையத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பாரிஸில் அக்டோபர் 1793ல் சிரச்சேதம் செய்யப்பட்டார் (And Jill came (தலை உருண்டது) tumbling after)
Jack and Jill went up the hill
To fetch a pail of water;
Jack fell down
and broke his crown,
And Jill came tumbling after.
Ring around the rosies :: பொதுவாக சிறுவர்கள் கை கோர்த்துக்கொண்டு இப்பாடலை பாடியபடியே வட்டமாக சுற்றி வந்து கடைசி வரியில் கீழே விழுவார்கள்
1600ல் கடுமையான ப்ளேக் காய்ச்சலால் அவதிப்பட்டது இங்கிலாந்து. ப்ளேக்கின் ஆரம்ப அறிகுறி தோலில் ரோஸ் நிறத்தில் வரும் சொறி. (Ring around the rosies)
அப்போது எலிகளால் காற்றின் மூலம் ப்ளேக் பரவுவதை டாக்டர்கள் அறிந்திருக்கவில்லை. பிணங்களின் துர்நாற்றத்திலிருந்துதான் ப்ளேக் பரவுவதாக அவர்கள் நினைத்தனர்.. ஆகவே வேர்கள், மூலிகை, பூக்களின் இதழ் போன்றவற்றை கொண்டு அவர்கள் முகமூடி ;) அணிந்தனர் (A pocket full of posies)
ப்ளேக்கின் அடுத்த அறிகுறி தும்மல் (A-tishoo! A-tishoo!) > பிற்காலத்து பாடல்கள் தும்மலை மாற்றி ashes என்று பாடப்பட்டது. அது எரிக்கும் போது வரும் சாம்பலை குறிக்கும் < குழந்தைகள் கடைசி வரி பாடும் பொழுது அவர்களை அறியாமலேயே வீழ்ந்த அவர்களின் முன்னோரை நினைவு கூறுகின்றனர் (We all fall down)
Ring around the rosies,
A pocket full of posies,
A-tishoo!
A-tishoo!
We all fall down.
Humpty Dumpty sat on a wall :: ஹம்டி டம்டி என்பது கூன் விழுந்த ராஜாவான மூன்றாவது ரிச்சர்டை குறிக்கும்
அவர் wall என்ற பெயரில் ஒரு குதிரை வைத்திருந்தார் (Humpty Dumpty sat on a wall ஷேக்ஸ்பியர் கவிதையான ரிச்சர்டு III லும் இது வரும்)
போஸ்வொர்த் போரில் அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார் ( Humpty Dumpty had a great fall)
அவரின் எதிரிகள் அவரை சூழ்ந்து அவரை அங்கேயே கண்ட துண்டமாக வெட்டிப்போட்டு விட்டார்கள் (Couldn’t put Humpty together again)
Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall.
All the king’s horses,
And all the king’s men,
Couldn’t put Humptytogether again.
Baa baa, Black Sheep :: கடுமையான வரிவிதிப்பை சொல்லும் பாடல்
உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவுக்கு (மாஸ்டர்), ஒரு பங்கு ட்யூக் டச்சஸ் போன்ற உயர்குடி மக்களுக்கு (dame), கடைசி ஒரு பங்குதான் உழைப்பாளிக்கு (little boy) என்பதை சொல்லும் பாடல்.
Baa baa, Black Sheep,
Have you any wool?
Yes, marry, have I,Three bags full:
One for my master,
One for my dame,
And one for the little boy
That lives in the lane!
****
ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கா பதிவின் பின்னூட்டத்தில் அல்வா.சம்மி லண்டன் பிரிஜ் , ஜேக் அண்ட் ஜில் எல்லாம் நெகட்டிவ் திங்கிங்ல் முடிவதை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். மழை சேகரிப்பு காலகட்டத்தில் இருக்கும் நாம் ஏன் இன்னமும் rain rain go away என்று பாடிக்கொண்டிருக்கிறோம் என்று எனக்கும் ரொம்ப நாளாக ஒரு கேள்வி உண்டு... ஒரு நாள் அலுவலகத்தில் இது பற்றி கேட்ட பொழுது ஸ்பெயினை பிறப்பிடமாக கொண்ட சக ஊழியர் "ரெயின் ரெயின்" பின்னால் ஒரு அரச பரம்பரை கதை உண்டு என்ற செய்தியை சொன்னார். பின்பு வலையாராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இந்த பதிவு. இதில் சில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் உண்டு...
எவ்வளவு சோகமான வரலாறுகளை உள்ளடக்கிய பாடல்களை குழந்தைகளுக்கு ஜாலியாக சொல்லிக்கொடுக்கிறோம் என்று சிலருக்கு தோன்றலாம். முதலில் ஆங்கில பாடல்களே நம் குழந்தைகளுக்கு தேவையா என்றும் சிலருக்கு தோன்றலாம். எனக்கு தோன்றியதென்னவோ, எனக்கு இந்த அர்த்தமெல்லாம் தெரியாமலே இருந்திருக்கலாம் என்றுதான்...
நாத்திகர் கருணாநிதி கட்டிய கோயில்
கடவுள் இல்லவே இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டடாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி - பெரியார் கடவுள் மறுப்பு
***
கருணாநிதி முதல்வராயிருந்த போது 23.04.1975ல் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரசாங்கம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி தரப்படுகிறது. இறுதிக்கட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு மேலும் ஐந்து லட்சம் நிதி ஒதுக்குகிறது. 16.4.1993 அன்று கருணாநிதியின் பொற்கரங்களால் கோயில் திறந்து வைக்கப்படுகிறது.
ஒரு கையில் விளக்கு, இன்னொரு கையில் வீணை, மற்றொரு கையில் உத்திராட்ச மாலை, மற்றொரு கையில் பனையோலை என நான்கு கைகள் கொண்டு தாமரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இக்கோயிலின் கடவுளை வடிவமைத்தவர்கள் பிரபல சிற்பிகள் கணேசன் மற்றும் கணபதி ஸ்தபதி ஆகியோர். இக்கோயில் காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகில் கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்திருக்கிறது.வழிபாட்டு முறைகள், கடவுளுக்கு உகந்த பொருட்கள், காணிக்கைகள், அபிஷேக பொருட்கள் போன்றவை குறித்த விபரங்கள் விளக்கமாகவே (பார்க்க : சென்னை ஆன்லைன் தமிழ்த்தாய் கோயில்) வரையறுக்கப்பட்டிருக்கின்றது... எந்த பெயரில் அழைத்தால் என்ன, கடவுள் கடவுள்தான்... இருந்தாலும் இக்கோயிலில் அமைந்த கடவுளின் பெயரை தெரிந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு தகவலாக - தமிழ்த்தாய் கடவுள்.
***
நிதி வசூலிக்கும் உயரிய எண்ணம் கொண்டவர்கள் கண்ணகி (அ) கருணாநிதி ஆகியோருக்கு கோயில் கட்டும் விளக்கமான திட்டம், வரைபடம், வழிபாட்டு முறை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அறிவாலயத்தை அணுகவும். புரவலர் முதல்வராயிருந்தால் மக்கள் வரிப்பணம் பத்து லட்சமும், இல்லையெனில் பயணப்படியுடன் கட்சி நிதி 13 ரூபாய் 50 பைசாவும் கிடைக்கும்
எஸ்.ஏ.ராஜ்குமார்- தினமூடி நிருபர் சந்திப்பு
பிரபல(?) இசையமைப்பாளர், கோரஸ் புகழ் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களை தினமூடி நிருபர் தன் கனவில் சந்தித்து பேட்டி கண்டார். அது இங்கே...
நிருபர்: எவ்வளவோ இசையமைப்பாளர் இருக்காங்க... ஆனா உங்க தனித்தன்மை என்ன சார்.
எஸ்.ஏ: ஸ்வரங்களை சேமிக்கிறது... என்ன அதிர்ச்சி லுக் விடறீங்க.. இப்ப பாத்தீங்கன்னா, ஏழே ஸ்வரங்கள்தான் இருக்கு. இவ்ளோ குறைச்சலா இருக்குற ஸ்வரங்கள நாம பாட்டுக்கு கன்னா பின்னான்னு வேஸ்ட் பண்ணிட்டா அடுத்த தலைமுறைக்கு ஸ்வரங்கள் இல்லாம போயிடும் இல்லையா, அதனால ஒரு படத்துக்கு ஒரு மெட்டு மட்டும்தான்னு சிக்கனமா பாட்டு போடறேன்.
ஆனாலும் ஒரு படத்துக்கு கொறஞ்சது 5 பாட்டுங்கற தமிழ் சினிமா இலக்கணத்த மீற்றதில்லை நான். என் படத்துலதான் ஒரே மெட்டு பலவித பாட்டா ஆகும்... முதல்ல ஒரு பாட்ட ஹீரோ ஜாலியா பாடற மாதிரி போடுவோம். அப்புறம் அதையே ஹீரோயின் ஜாலியா பாடுவாங்க. அப்புறம் ரெண்டு பேரும் சேந்து ஜாலியா பாடுவாங்க. அப்புறம் ஹீரோ அதே பாட்ட சோகமா பாடுவாரு, அப்புறம் ஹீரோயின் சோகமா பாடுவாங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேந்து... நடு நடுல கொஞ்சம் கோரஸ் தூவுவோம்.. இதுவே குடும்ப கதைன்னு பாத்தா முதல்ல அப்பா, அப்புறம் அம்மா, அப்புறம் அவங்க வீட்டு டாமி, அப்புறம்....
நிருபர்: போதும் சார், புரிஞ்சி போச்சி.. விக்ரமன் படத்துல மட்டும்தான் நீங்க இசையமைக்கிறீங்க.. அது உங்க கொள்கையா சார்.
எஸ்.ஏ: மண்ணாங்கட்டி. வேற எவன் கூப்பிடறான். ஸ்வர சேமிப்பு மாதிரி உயர்ந்த விஷயத்த பண்றவனுக்கு இந்த தமிழகம் கொடுக்கற கௌரவம் இதுதான் தம்பி... ஆனா விக்ரமன் அப்படி இல்ல. விக்ரமன் ஒரு சிறந்த லோ பட்ஜெட் இயக்குனர். இன்ஃபாக்ட் அவரு வீட்டுல மளிகை சாமான் வாங்குறப்போ போடற பட்ஜெட்டுல விழற துண்டுலதான் அவரு படமே எடுக்குறாரு... ஆனா அவரு படங்கள்ல நடிக்கிறவங்களுக்கு மூணு வேளை சாப்பாடு, சைக்கிள் ஓட்டியோட கூடிய வாகன வசதி மட்டுமல்ல நடிக்கிற வாய்ப்பும் சம்பளமா கொடுக்கிற பெரிய மனசு கொண்டவரு. என்னோட ஸ்வர சிக்கன கொள்கையால ஒரு மெட்டுக்கான சம்பளம்தான் வாங்குவேன்... அதான் எங்க வெற்றிக்கூட்டணியோட ரகசியம்.
நிருபர்: அப்புறம் ஏதோ ஒரு படத்துல கூட நடிச்சீங்க போலருக்கு
எஸ்.ஏ : ஆமாம்பா, நம்ம விஜயும் ரம்பாவும் நடிச்ச படம். பேர் ஞாபகம் இல்ல. ஒரு வடக்கத்தி இசையமைப்பாளர்தான் இசை. அதுல நான் ஒரு விழாவுல பாட்டு பாடறவனா நடிச்சேன். 'நாடோடி மன்னாஆஆஆ போகாதே...' ன்னு பெருங்கொரலெடுத்து நான் பாட்ட ஆரம்பிச்சதும் மக்கள் எல்லாம் ஒரு ரிலாக்ஸேசன் மூடுக்கு வந்து அல்லாரும் தம்மடிக்க வெளில போயி சந்தோசமா இருந்தாங்கன்னு பத்திரிக்கை காரங்க எல்லாம் புகழ்ந்து கூட எழுதுனாங்களே. அதுக்கப்புறம் மைக் எஸ்.ஏ ங்கர அளவுல வாய்ப்பு கிடைக்கும்னு பாத்தேன். படம் ஊத்திகிச்சி. ராசியில்லாத பாடக நடிகர்னு முத்திரை குத்திட்டாங்க...
அதுல இன்னொரு சோகம் என்னன்னா, படத்துக்கு நாந்தான் இசையமைப்பாளர்னு தப்பா நினைச்சி நிறைய பேரு பாட்டு கேட்டு வந்திட்டாங்க. ஒரே நேரத்துல அவ்ளோ மெட்டுக்கு என்ன பண்ணுவேன். அதனால அந்த படத்தோட பாட்ட போட்டு காமிச்சேன். பாட்டெல்லாம் நல்லா இருக்கவும், அது என் இசை இல்லன்னு தெளிஞ்சி அவங்களா போயிட்டாங்க...
நிருபர்: கொஞ்ச நாளா உங்க இசையில படமே வரலையே அது ஏன் சார்.
எஸ்.ஏ: அது ஒரு சோகமான காரணம்பா. என்ன பத்தி தெரியாத ஒரு வங்காளி தயாரிப்பாளர் ஒரு படத்துக்கு இசை அமைக்க கூப்பிட்டாரு. மெட்டு ரெடி. பாட்டு போட உக்காந்தா வாத்தியக்காரங்கல்லாம் இருக்காங்க, நம்ம கோரஸ் ஆர்டிஸ்ட் மாத்திரம் வரல. உங்களுக்கே தெரியும், கோரஸ் இல்லையின்னா இந்த எஸ்.ஏ. இல்ல... எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது.. மயக்கமா வருது... இருந்தாலும் சமாளிச்சி என் வாழ்க்கைல முத தடவ கோரஸ் இல்லாம பாட்ட போட்டு முடிச்சேன்...
அப்புறம் வந்திச்சிப்பா சோதனை, பிண்ணனி இசைங்கற பேர்ல.. நீங்களே சொல்லுங்க, பிண்ணனி இசைன்னா என்ன... படத்தோட மெயின் தீமுக்கான மெட்ட 10 பொண்ணுங்க சேந்து லல்லல்லல்லான்னு வாயாலயே ம்யூசிக் கொடுக்கணும்... கடைசி வரைக்கும் பிண்ணனி இசை போட முடியல. இந்த சம்பவத்தால நான் மனதளவில ரொம்ப நொந்து போனேன். ரொம்ப நாள் கழிச்சி இப்பத்தான் மீண்டு வந்திருக்கேன். நான் இல்லாம விக்ரமனும் படம் எடுக்கறத நிறுத்திட்டாரு.
ஆனா இப்ப 5 மெட்டு போட்டு வச்சிருக்கேன். மொத்தம் 5 X 5 = 25 பாட்டாச்சி. விக்ரமனும் இந்த காலகட்டத்துல 5 படம் எடுக்கற அளவு 15 லட்சம் ரெடி பண்ணிட்டாரு... என் கோரஸ் ஆர்டிஸ்டுங்க மட்டும் திரும்பி வரட்டும், அப்புறம் தமிழ்நாடு எங்கும் நம்ம இசைதான்..
கை தொலைபேசியில் ICE (வர்யா ராய் அல்ல)
உங்கள் கைத்தொலைபேசியில் ICE (In Case of Emergency) என்ற பெயரில் உங்களுக்கு விபத்து ஏற்படின் தொடர்பு கொள்ள வேண்டியவரின் தொலைபேசி எண்ணை சேமியுங்கள்.
ஒரு ப்ரிட்டிஷ் பாராமெடிக் முன்மொழிந்த இந்த யோசனை ஏப்ரலில்
அறிமுகப்படுத்தப்பட்டாலும் லண்டன் விபத்திற்கு பிறகுதான் மக்களால் பரவலாக முக்கியத்துவம் பெற்றது என்று USA Today செய்தி சொல்கிறது.. லண்டனில் படுகாயமடைந்து சுயநினைவு இழந்த பலரிடம் கைத்தொலைபேசி இருந்தும் பாரமெடிக்குகளுக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை என்கிறது இன்னொரு செய்தி. ICE <பெயர்> என்ற அளவில் ஒரு அட்ரஸ் புக் என்ட்ரி, அதில் நம்மை பற்றி நன்கு அறிந்த சொந்தத்தின் தொலைபேசி எண்...உதாரணம்
Name: ICE SIMRAN
Mobile: 1234567890...
இது இருந்தால் பாராமெடிக்கஸ்க்கு ஒரு அவசர உதவி தேவைப்படும் சம்பவத்தின் போது நோயாளியை பற்றி அறிந்தவரை தொடர்பு கொண்டு நோயாளியின் மருத்துவ சரித்திரம், அவருக்கு இருக்கும் ஒவ்வாமை குறித்து அறிய இயலும். இது மருத்துவ சிகிச்சைக்கு இன்றியமையாதது.
இம்முறை ப்ரிட்டனில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. பாராமெடிக்ஸ் இம்முறையை செயல்படுத்த சொல்லி மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த செய்தி பல ஊடகங்களிலும் செய்தி வந்தாலும்/வந்துகொண்டிருந்தாலும், இந்த செய்தியே ஒரு எரிதம் என்று ஒரு வலைப்பதிவு எதிர்ப்பாட்டு பாடுகிறது. இம்முறையில் பரப்பப்படுவதாக சொல்லப்படும் செல்போன் வைரஸ் எல்லாம் நிரூபிக்கப்படாத நிலையில் எரிதமாக இருந்தால்தான் என்ன... நான் பேசிய பலருக்கும் பரவலாக இந்த முறை பற்றி தெரிந்திருக்கும் நிலையில் ICE என்று ஒரு என்ட்ரி இருப்பது நல்லது என்றே படுகிறது.
அ) இந்த பதிவில் போட கை தொலைபேசி படம் ஒன்று போட்லாம் என்று பாகிளில் தேடினால் ஒரு படமும் கிடைக்கவில்லை. சரி என்று கிடைத்த படத்தை போட்டிருக்கிறேன்.
ஆ) இப்பதிவின் மூலம் இருட்டில் இருந்த ஐஸ்வர்யா ராயை வெளிச்சம் போட்டு காட்டியாகிவிட்டது.. கனடாவில் ஜொள்ளர்கள் ஏமாறாமல் இருக்க ஏதோ நம்மாலான உதவி.. (தன்னை பற்றி எழுதியதற்கு நன்றி தெரிவித்து என் கையெழுத்திட்ட புகைப்படம் அனுப்ப கோரி ஐஸ்வர்யாவிடமிருந்த வந்த கடிதம் அடுத்த பதிவில்..)
இ) என் கை தொலைபேசியில் என்னை பற்றி நன்கு அறிந்த அஸினின் நம்பரை சேமித்துவிட்டேன்...
எனது புகைப்பட பதிவு - 2
தாடியுடன், தாடி இல்லாமல், மீசையுடன், மீசை இல்லாமல், தலையில் முடியுடன், தலையில் முடியில்லாமல் எடுத்த எனது புகைப்படங்களை கால மாற்றத்தின் சாட்சியாக இங்கு பதிகிறேன்.
இது போன்ற விஷயங்களுக்காகவே இருக்கும் yahoo photos, flickr, snapfish போன்ற வலைத்தளங்களை உயயோகப்படுத்தாமல் வலைப்பதிவை இதற்கு உபயோகப்படுத்த காரணம் : ஹிஹி.




சிறுகதைப் போட்டி நிறைவு
ஆகஸ்ட் 21 நள்ளிரவு வரை வந்த படைப்புக்களின் எண்ணிக்கை முப்பது. இரண்டு வாரங்கள் என்ற அவகாசத்துக்கு இது மகிழ்ச்சியை தரும் ஒரு எண்ணிக்கை. அதிலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புக்களை எழுதி அசத்திவிட்டார்கள்.
இதுவரை பின்னூட்டமாக வந்த இணைப்பில் குறிப்பிட்ட பதிவுக்கு சென்று கதைளை (மட்டும்) அதன் format கெடாமல் வேர்டு கோப்புகளாக மாற்றி, பின்பு அக்ரோபாட் உதவியுடன் அதை PDF கோப்பாக செய்து நடுவருக்கு அனுப்பிவிட்டேன். இதன் மூலம் அனைத்து கதைகளுக்கும் ஒரு சீரான தன்மை கிடைத்தது (படங்களுடன் இருந்த இரண்டு படைப்புகளும், படத்தோடே இருக்கும்)
இதோடு என் வேலை முடிந்தது. இனி நடுவர் பொறுப்பு. தனது கடினமான வேலைப்பளுவுக்கு இடையிலும் இந்த போட்டிக்காக நேரம் ஒதுக்கியமைக்கு திரு.மாலன் அவர்களுக்கு மிகவும் நன்றி.. நடுவர் தனது முடிவுகளைத் தெரிவிக்கும் போது ஒவ்வொரு கதையைப் பற்றிய அவரின் கருத்துக்களையும் அவை மேலும் மேம்பட சில யோசனைகளையும் தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நிறைய நேரம் பிடிக்கும் வேலை இது. அனுபவசாலியும் ஆசிரியருமான திரு.மாலனின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்போட்டியின் முடிவுகள் மகாகவி பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள் அன்று இங்கு பார்க்கலாம்..
அனைத்து கதைகளுக்குமான சுட்டியை இங்கே பார்க்கலாம். உங்கள் யூகப்படி முதல் மூன்று இடங்களை பிடிக்கும் என்று நீங்கள் கருதும் கதைகளின் பெயர்களை தனி காகிதத்தில் எழுதி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், முடிவுகள் வெளியானதும் அலச சுவாரசியமாக இருக்கும்.
முகமூடி - 67
என் முகத்தினிலே பளபளப்பாய் இருப்பவனும் நீதான்...
எண்ணமெல்லாம் எழுதி இங்கே பதிப்பவனும் நீதான்...
என் பதிவை பாதி மட்டும் படித்துவிட்டு...
பின்னூட்டத்தில் திட்டிவிட்டு...
நெகட்டிவ் குத்துவிட்டு ஓடுபவனும் நீதான் !
வாசக மகா ஜனங்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி சாமியோவ் !!!
டிஸ்க்ளெய்மர் : படத்தை பார்த்துவிட்டு தலைப்பில் இருக்கும் 67 என்பது என் வயதென்று எண்ண வேண்டாம்... அது இதுவரை வந்த என் பதிவின் எண்ணிக்கைங்கோ...
USA வலை பதிவாளர் டெலிகான் சந்திப்பு
நேற்று தமிழ் வலையுலகத்தில் முதல் முறையாக டெலிகான்ஃபரன்சிங் முறையில் வலைபதிவாளர் சந்திப்பு கலிபோர்னியாவுக்கும் சின்சின்னாடிக்கும் இடையில் நிகழ்ந்தது...
நேற்று ஒரு நண்பனிடம் தொலைபேசினேன்.. வழமையான விசாரணைகள், அவனது நயாகரா பயணத்திட்டம், வளர்ந்த ஒரு குக்கிராமமான சின்சினாட்டியில் இளைஞர்களுக்கு இருக்கும்/இல்லாத ப்ரச்னைகள் போன்ற சமூக அக்கறையுள்ள விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது அவன் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதாக சொன்னான்...
login செய்யும் போது password கட்டத்தில் எந்த எழுத்தை அடித்தாலும் அது '*' என்றே தெரிவதால் அதை சரி செய்வதிலேயே நேரம் கழிகிறது, அதை நிவர்த்தி செய்ய என்ன செய்வது என்ற அவனின் சந்தேகத்தில் ஆரம்பித்து, தமிழில் கதைக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற எனது கூற்றை அலசியது வரை சுவாரசியமாக சென்ற எங்கள் உரையாடல் முடிந்தவுடந்தான் உணர்ந்தேன், சாதாரண விஷயமாக ஆரம்பித்த எங்கள் பேச்சு வலைப்பதிவாளர் சந்திப்பாக முடிந்திருப்பதை....
இன்னொரு முக்கிய விஷயமும் புலப்பட்டது... இதுவரை எத்தனையோ வலை பதிவாளர் சந்திப்பு நடந்திருந்தாலும், யாரும் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி இது போன்ற ஒரு சந்திப்பு நிகழ்த்தியதில்லை என்பதும், முதல் முறையாக தமிழ் வலையுலக வரலாற்றில் நடந்த டெலிகான் சந்திப்பை நான் நிகழ்த்தியிருக்கிறேன் என்பதும் உணர்ந்த போது டெலிபோனை கண்டுபிடித்த போது கிரஹாம்பெல் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது...
இச்சந்திப்பில் என் வீட்டில் மிச்சம் மீதி இருந்த நொறுக்குத்தீனிகளும் அவன் வீட்டில் இருந்த குவார்ட்டர் + கோழி பிரியாணியும் சிற்றுண்டியாக உபயோகப்பட்டது. டெலி சந்திப்பில், நேரடி வலையர் சந்திப்பு போல் அல்லாமல் சுவையான உணவு கிடைக்கிறது என்பது இங்கு அவசியமில்லாத ஒரு செய்தி என்பதால் அதை சொல்வதை தவிர்க்கிறேன்...
இதன் அடுத்த கட்டமாக வலைப்பதிவு வைத்திருக்கும் என் நண்பனுடன் அடுத்த வாரம் webcam முறையில் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்த்தலாம் என்று நினைக்கிறேன்.. அதில் அவன் weekendல் செய்யப்போகும் விஷயங்கள், அவன் செய்யும் டேடிங் ஏன் எப்போதுமே சொதப்புகிறது, அவன் இந்தியா பயணத்திட்டம் போவது போன்ற பயனுள்ள பல விஷயங்களை விவாதிக்கலாம் என்று உள்ளேன்...
முகமூடி இளைஞர்... வலையுலகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் இவர் போன்றவர்கள்தான் எனக்கு நம்பிக்கையை தருகிறார்கள் என்று என் அபிமான எழுத்தாளர் சுஜாதா தனது கற்றதும் பெற்றதுமில் ஒரு வரி என்னை பற்றி எழுதினால் யாரும் பொறாமை+ ஆச்சரியப்படாதீர்கள்
எனது 'கேள்விகள்' பதிவு
பொதுவாக புத்தகம் விற்றால் 'விலை : ரூ. 80' என்று இருக்கும்... அது ஏன் கி.வீரமணி எழுதிய 'வாழ்வியல் சிந்தனைகள்' புத்தகத்துக்கு மட்டும் 'நன்கொடை ரு.80' அப்படீன்னு சொல்றாங்க? நன்கொடை என்றால் விரும்பி கொடுப்பதுதானே? இல்லை 'தலைவர் பிறந்த நாள், 2000 ரூ நன்கொடை எழுதுங்கண்ணா' ன்னு சைக்கிள் செயின் சகிதம் கேப்பாங்களே, அந்த மாதிரி நன்கொடையா? எனக்கு நன்கொடை கொடுக்க விருப்பமில்லை, ஆனால் புத்தகம் வேணுமுன்னா, என்ன செய்யனும்? இந்த புத்தகத்தை எழுதியதற்காக ஆசிரியர் வீரமணிக்கு 'அமவுண்டு' எதுவும் உண்டா? எல்லாமே அவரு சொத்துதுதான், இருந்தாலும் அஃபிஷியலா...
பொதுவாக போட்டிகளில் ஆறுதல் பரிசு என்று ஒன்று தருகிறார்கள்... இதனால் அந்த பரிசை வாங்குபவர்கள் "நல்ல வேளை, முதல் பரிசு கிடைக்கவில்லை" என்று உண்மையிலேயே ஆறுதல் அடைகிறார்களா? இந்த பரிசை கண்டுபிடித்தவர் யார்? காரணம் என்ன? வந்த படைப்புகளில் சிறந்ததாக தீர்மானிக்கப்படும் படைப்புகளை வரிசைப்படுத்தி பரிசு வழங்கலாம் என்றால் முதல்,இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று அறிவிக்கலாமே.. எதற்கு ஆறுதலாக பரிசு தரவேண்டும்?
பேய் ரீலி என்பவரின் பதிவிலே தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன... ஆனால் அர்த்தம் புரிவதில்லை. யாருக்க்கும் புரியவில்லையா, அல்லது நமக்கு மட்டும்தான் புரியவில்லையா என்று பார்த்தால் அப்பதிவுக்கு 10 பேர் பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள் (அப்பின்னூட்டங்களும் புரியவில்லை)... ஆக தவறு எனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் மேல்தான். அவர் மீது விசாரணை கமிஷன் வைக்கலாம் என்றால் அவர் தற்போது உயிருடன் இல்லை. எனவே இது போன்ற பதிவுகளுக்கு அகர முதலி கிடைக்குமா?
புண்ணாக்கு தவிடு போன்றவை மிகுந்த சுவையாக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்... நிறைய பேர் ப்ரேக்பாஸ்டுக்கு புண்ணாக்கு, ஸ்நாக்ஸுக்கு தவிடு என்ற ரேஞ்சில் சாப்பிடுவதாக வழிமொழிகிறார்கள்... இவர்கள் இந்த ரேஞ்சில் இந்த சரக்கையெல்லாம் காலி பண்ணினால் மாடுகள் என்ன சாப்பிடுகின்றன? பீஹாரில் கால்நடைகள் பட்டினியில் இறந்ததற்கும், அங்கு நடந்த கால்நடை தீவன ஊழலுக்கும் பீஹார் மக்கள் புண்ணாக்கு சுவை அறிந்ததுதான் காரணமா? ஏன் யாரும் வைக்கோல் சுவை பற்றி எழுதுவதில்லை? அப்போ "அவன பாரு எப்படி மாடு மாதிரி இருக்கான்" என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டதால் இனி இந்த வாக்கியம் வழக்கழிந்துவிடுமா?
சந்திரமுகி, அந்நியன், மங்கல் பாண்டே, திருவாசகம் என்று, எழுதினால் வரிசையாக எல்லாரும் வூடு கட்டி ஒரே விசயத்தை பற்றியே எழுதுகிறார்களே... இவர்கள் எல்லாம் ஏன் மற்ற படங்களை பற்றியோ இசையை பற்றியோ எழுதுவதில்லை? இவர்கள் குறிப்பாக ஒரு சில படைப்புக்களை பற்றி எழுத, எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்?
அரசியல் அறிக்கையும் ஆத்தா கெழவியும்
மதிமுகவில் இருக்கும் ஒன்றிரண்டு குறுந்தலைவர்-cum-தொண்டர்களில் எல்.கணேசன் ஒருவர் ( இந்த பதிவில் எல்ஜி என்றிருந்தால் அது நம் அண்ணன் எல். கணேசன்... கூட்டு பெருங்காயம் அல்ல என்று தெளிக)
ஒரு சில வீடுகள்ல பாத்தீங்கன்னா, வயசான பெரியவங்க அப்பப்போ சில கருத்து சொல்லுவாங்க. அத அந்த வீட்டுல யாரும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க. அதுக்காக அவங்க கருத்த சொல்றதயும் நிறுத்த மாட்டாங்க. உத்து கவனிச்சா அவங்க சொல்றதுல பல விஷயம் பயனுள்ளதா இருக்கும்... (இந்த பதிவில் கெழவி என்று இருந்தால் அது வீட்டு பெரியவரை, மருத பாஷையில மரியாதையாக அழைக்கிறோம் என்று தெளிக)
நம்ம அண்ணன் எல்ஜி அப்பப்போ விடற சில அறிக்கை பத்தி யாரும் கண்டுக்கறதில்லை. இன்னிக்கி பொழுது போகாததால எல்ஜி அறிக்கை பத்தி யோசிச்சே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்...
"ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் எந்த ப்ரச்னையும் இல்லை"
வீட்டுக்கு யாராவது வந்தால் அவங்களாண்ட போயி "ஏம்பா நீ சொல்றத பாத்தா பெரியவனுக்கு அவன் பொண்டாட்டி கூட ஏதோ ப்ரச்னைங்கிர மாதிரியில்ல இருக்கு, அதெல்லாம் ஒன்னியும் இல்ல... ரெண்டு பேரும் சந்தோசமாத்தான் இருக்காங்க" ன்னு கெழவி சொல்லும். நாம எதுவும் கேக்கவேயில்லியே, எதுக்கு எலி அம்மணமா ஓடுதுன்னு நெனப்பான் வந்த விருந்தாளி..
"கூட்டணியில் விரிசல் என்று வெளியாகும் தகவல்கள் அனைத்துமே பொய்யானவை. கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மதிமுக தொடர்ந்து நீடிக்கும்"
இதான் ப்ரச்னை. கெழவி ஒரு விசயத்த ஒரே விசயமா சொல்லாது. அதுக்கு அப்படியே ஒரு இன்னொரு விசயத்த ஒரு 'க்'ன்னா போட்டு முடிச்சாத்தான் நிம்மதி. கேக்குறவன் நினைப்பான், அதான் ஒரு ப்ரச்னையும் இல்லையில்ல.. அப்புறம் எதுக்கு யார் இருந்தாலும், இல்லையின்னாலும்னு, சந்துல ஒரு பொடிய வச்சி பேசுது கெழவின்னு...
"திமுகவுடன் இணைந்து தான் சட்டசபைத் தேர்தலை சந்திப்போம்"
"ஆயிரம்தான் சொல்லு, இந்த ஒண்டு குடிசதாம்பா நமக்கு சொர்க்கம்... சின்ன பேரன் பட்டணத்துல மச்சு வீட்டுல மொசேக் போட்ட வூட்டுலதான் இருக்கானாம்... கொழாய தெறந்தா தண்ணி வருதாம், வெக்க தெரியாம இருக்க ஏசி எல்லாம் போட்றுக்கானாம்.... என்னய வா கெழவின்னு முன்னூறு தடவ கூப்பிட்டான்... ஆனாலும் இந்த கட்டைக்கி அதெல்லாம் சரி வருமா சொல்லு... மண் தரைதான், மழ பேஞ்சா கூர ஒழுவுதுதான், சாயங்காலமானா கொசுக்கடி... இருந்தாலும் இந்த வூட்ட உட்டு போனா நல்ல படி தூக்கம் வருதா சொல்லு" அப்படீன்னு பிலாக்காணம் படிக்கும் கெழவி... உண்மை என்னன்னா, பேரன் கூப்பிட்டுருக்கவே மாட்டான். வேற போக்கிடம் இல்லாத ஒரு ஏக்கத்துல அப்படி சொல்லி மனச தேத்திக்கும் கெழவி.
"சபலத்திற்கு மயங்கும் புத்தி உடையவர்கள் யாரும் திமுக கூட்டணியில் இல்லை"
கெழவி, "வயசானாலே இப்படித்தான் மறதி அதிகமா போகும்"னு அப்பப்போ சொல்லிக்கும்... ஆனாலும் சும்மா இருக்காது. பேரன் மறுநா கோழி கூவ மொத பஸ்ஸ புடிச்சி ஊருக்கு போறேன்னு சொல்லியிருப்பான். அது பாட்டி மனசிலயே தங்கிரும்... அப்பால யாராவது வந்து பேரன் எங்கன்னு கேட்டா "அவன் இல்லையே, அப்பவே போயிட்டானே'ன்னு சொல்லும்... ஆனா பேரன் உள் ரூமில மாங்கா சாப்பிட்டு தூங்கிகிட்டு இருப்பான்.
"மத்திய அமைச்சரவையில் மதிமுக சேருவது குறித்து வைகோ தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்பதை கொள்கை முடிவாக வைத்துள்ளோம். எனவே அதை மாற்ற வேண்டுமானால் பொதுச் செயலாளரான வைகோ தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் எல்.கணேசன்"
பங்காளி குடும்பத்துல கை நனைக்கிறதில்லையின்னு மவனுக்கு ஒரு வைராக்கியமப்பா... மருமவ போய் ஒரு எட்டு பாத்துட்டு வரணும்னு அப்பப்போ மூக்க சிந்துவா... ஆனா மவன் செத்தாலும் வைராக்கியத்த மாத்த மாட்டேன்னு சொல்லிபுட்டான்... என்ன ஒன்னு பங்காளி கெடா விருந்து கொடுத்தாருன்னா கை நனையாம சாப்பிடுறத பத்தி யோசிப்பானா இருக்கும்.. ஆனா அத வீட்டுல உள்ள பொம்பளயாளுங்க சொன்னா கொலதான் விழும். அவன் சொல்றப்போ சந்தோசமா தூக்கு சட்டிய தூக்கிகிட்டு ஒரு எட்டு போயிட்டு வருங்க... எப்ப அந்த எல்லச்சாமி கண்ண தொறப்பானோ தெரியல..
பாருங்க அண்ணன் எல்ஜி அறிக்கைய பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு வந்து பெரிசு கதைய பேசிக்கிட்டு கெடக்கோம்... சரி விடுங்க.. இன்னொரு சமயத்துல அண்ணன பத்தி பேசிக்கலாம் தப்பில்ல...
மங்கல் பாண்டே
கோவணம் கட்டாத ஊர்ல கோவணம் கட்னவன் பைத்தியம்னு சொல்வாங்க... எல்லாரும் இப்போ மங்கல் பாண்டே பத்தி எழுதும் போது நாம மட்டும் எழுதாம இருந்தா நல்லாவா இருக்கும் சொல்லுங்க, அதனால நாமளும் எழுதலாம்னு பாத்தா நான் இன்னும் அந்த படத்த பாக்கல...
ஆமா, தமிழ் பத்திரிக்கைல எல்லாம் படத்த பாத்துட்டா எழுதறாங்க, ஒரு குத்து மதிப்பா எழுதலாம்னா, இது இந்தி படம்... ஃபார்முலா எல்லாம் ஒன்னுதான்னாலும், கொஞ்சம் கம்மி ஜாஸ்தியா எழுதனுமே...
அதுவும் இது சரித்திரப்படம் வேற... நான் பாட்டுக்கு மொழியினால சரித்திரத்த தப்பா புரிஞ்சிக்க கூடாது பாருங்க. இப்படித்தான் ஒருதபா, சின்ன வயசுல வீரபாண்டிய கட்டபொம்மன் படத்த பாத்துட்டு, கட்டபொம்மன தூக்குல போட்டதும், "போப்பா, பேசாம ரஜினி அங்கிள கட்டபொம்மனா போட்றுக்கலாம்ல, வெள்ளகாரன எல்லாம் அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி வந்திருப்பாரு"ன்னு சொன்னதும் பொளேர்னு முதுகுல ஏன் ஒரு மொத்து உழுந்துதுன்னு இன்னி வரைக்கும் தெரியாது...
ஆக நல்ல ஒரு மொழி பெயர்ப்பாளரோட போயி இந்த படத்த பாத்துட்டு விமர்சனம் எழுதணும்னு "கயாமதி ஜாறன்" கிட்ட எழுதி கேட்ருக்கேன். அவரும், "தாத்தா அடுத்த வாரம் ப்ராத்மிக் பரிச்சை எழுத போறார் முகமூடி, அது முடிஞ்சவுடன் வொக்காபுலரி இம்ப்ரூவ்மெண்ட்காக தாத்தாவும் படத்துக்கு வரேன்னு சொல்லியிருக்கார். எப்படியும் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும்... அப்ப ஒன்னா பாத்துக்கலாம்"னு சொல்லியிருக்கார். பாத்தவுடன் கண்டிப்பா விமர்சனம் எழுதறேன்.
அறிவுப்பசி அண்ணாசாமி : இந்த வலைப்பதிவருங்க எந்த அடிப்படையில சில படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதறாங்கன்னு புரிஞ்சிக்கவே முடியலியேப்பா...
"பாடகர்" உன்னி - ஒரு சந்திப்பு
உள்ளடக்கம் ::
உன்னியின் குரல் மற்றும் தோற்றம்
உன்னியை புகழ்தல்
உன்னியுடன் ஒரு கலந்துரையாடல்
இன்ஷ்டந்த் பின்னூட்டங்கள்
குரல் மற்றும் தோற்றம் ::
இரு மாதங்களுக்கு முன்பு லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினருடன் உன்னிகிருஷ்ணன் அவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் வட்டாரம் வந்திருந்தார்கள். அப்பொழுது அவரின் பாடல்களையும் நேயர்களுடன் அவரது கலந்துரையாடலையும் கேட்கும் பாக்கியம் கிடைத்தது (தலைக்கு $25 வேட்டு என்பது வேறு விஷயம்) நான் அவர் பாடுவதை நேரில் கேட்பது இதுவே முதல் முறை.
அவருக்கு வயது கிட்டத்தட்ட 35க்கு மேல் இருக்கலாம். ஆனால் அவர் குரலில் இருந்த இனிமை, தளர்ச்சி இல்லாமை (மதுரை புலி டாக்டர் எஸ். மாரிமுத்து கிட்ட ஏதாவது லேகியம் வாங்கி சாப்பிருறாரா என்று யாரோ கமெண்ட் அடித்தார்கள்) அவர் மைக்கை பிடித்த ஸ்டைல் ஆகியவை என்னை ஆச்சரியப்படுத்தியது... ஏண்டா மைக் பிடிக்கிறதுல எல்லாம் ஸ்டைல் இருக்காடா என்று யாரும் கேட்க கூடாது. நான் ஒரு பட்டிக்காட்டான். இதுவரை மைக்கை பார்த்தது கூட இல்லை. அப்படியிருக்க வயர்லெஸ் மைக் எல்லாம் பாத்தா சொக்க மாட்டேனா...
புகழாரம் ::
உண்மையை சொல்லப்போனால் தமிழ் பாட்டை பருவாயில்லாமல் பாடிய பல பேரின் பாட்டை கேட்டிருந்தாலும் அதை உன்னியின் குரலில் கேட்டது எனக்கு புத்துணர்வை தந்தது என்றால் அது மிகையாகாது (ஏண்டா சொல்ல மாட்ட, வெளில கோக்குக்கு நான் இல்ல காசு கொடுத்தேன்றான் என் ஃப்ரண்டு)
தமிழ் பாடல்களை தமிழில் மிக அருமையாக எல்லாருக்கும் புரியும் படி பாடினார். கிட்டத்தட்ட 5 மணிநேரம் போனதே தெரியவில்லை. நடுவில் என் ஃப்ரண்டுங்க தண்ணியடிக்கணும், வண்டி ஓட்ட ஆள் வேணும்னு கூப்பிட்டாங்கன்னு அவங்கள தண்ணி கடைக்கு கூப்பிட்டு போய்ட்டு வந்தது, கார் பார்க்கிங் ஏரியாவுல தண்ணியடிச்ச அவங்களோட நின்னது, அவங்க தத்துவங்கள கேட்டதுன்னு ஒரு 2 மணிநேரம் காலியானது வேற விஷயம்
கலந்துரையாடல் ::
ஜீன்ஸ் படத்தின் பாடலான "ஹைர ஹைர ஹைரப்பா" பாடலை உன்னி வித்தியாசமாக செய்தார். அவர் ஹைர ஹைர என்றவுடன் ஆடியன்ஸ் ஹைரப்பா என்று சொல்ல வேண்டும். இது ரொம்ப நேரம் நடந்தது.. இதை ஒரு கட்டுரை ஆசிரியர் பாஷையில் சொல்வதானால் கலந்துரையாடல் என்று சொல்லலாம்.
வெளியே பக்கத்து காரில் தண்ணியடித்துக்கொண்டிருந்த சிலரிடம் தண்ணியடித்திருந்த என் நண்பன் ஒருவன் சென்று புலம் பெயர்ந்தவர்களை பற்றி கேட்டான். அவர் ஒரு சிகரெட் இனாம் வாங்கிக்கொண்டு, புல்ம் பெயர்ந்த தமிழர்களை ஆஹா ஒஹோவென புகழ்ந்தார். புலம் பெயர் தமிழர்கள்தான் உண்மையான தமிழர்கள் என்றும் தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களே இல்லை, அவர்கள் எல்லாம் தமிழ் என்று நம்பிக்கொண்டு இருப்பது உண்மையில் மலையாளம் என்றும் சொன்னார்.
பின்பு என் நண்பன், நான் புலம் பெயர்ந்தவர்கள் என்று பொதுவாகத்தானே கேட்டேன், நீங்க ஏன் தமிழர்களை பத்தி சொல்றீங்க. நான் ஒரு புலம் பெயர்ந்த தெலுங்கன்னு சொன்னவுடன், அவர் புலம் பெயர் தெலுங்கந்தான் உண்மையான தமிழன், மத்தவனெல்லாம் கன்னடன்னு என்னமோ சொன்னார். அதுக்கு மேல நின்னா எனக்கே சரக்கடிச்ச எபக்டு வந்திடும் போல இருந்ததால நைசா அரங்கத்துக்குள்ள அப்பீட்டு ஆயிட்டேன்
கன்க்ளூசன் ::
35 வயசிலும் அழகாக இருப்பது, தமிழ் பாடல்களை தெளிவாக பாடுவது, உலக நாடுகளில் எங்கெல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கெல்லாம் தமிழ் பாடல்கள் பாடுவது, மத்த இடத்தில் ஹிந்தி பாடல்கள் பாடுவது என்று சுறுசுறுப்பாக இருக்கிறார் உன்னி. இனிய நைட் பொழுது சூப்பரா இருந்தது..
இன்ஷ்டந்த் பின்னூட்டங்கள ::
# உன்னி ட்ரூப்புக்கு காரோட்டியவருக்கு தமிழுணர்வு நன்றாக இருந்ததா... விழாவின் சாராம்சம் புரிந்து வண்டி ஓட்டினாரா.
# இப்படித்தான் பாருங்க போன வருசம் ஜார்ஜ் புஷ்ஷோட பேசிகிட்டு இருந்தப்போ, அடுத்த வருசமும் பேசணும்னு கேட்டுக்கிட்டாரு
# கானா பாடிய குயிலை கண்ட நெருப்புக்கோழி
# மதிப்பிற்குரிய ஆருயிர் அண்ணன், கலங்கரை விளக்கம், முத்தமிழ் நாடு பெற்றெடுத்த முத்து, வாழ்நாள் முழுதும் தூய தமிழிற்காக தன் இன்னுயிரை ஈயத் துடிக்கும் பைந்தமிழ் பகலவன் டாக்டர் உன்னியார் அவர்களை எல்லேக்கு வருக வருக என்று வரவேற்கிறோம்.- அ.இ.ஜெ.பூ. எல்லே கிளை
அறிவுப்பசி அண்ணாசாமி :: எதுக்கு இந்த பதிவின் தலைப்பு சந்திப்புன்னு இருக்கு... கூட்டத்தோட கூட்டமா கோவிந்தா போட்டத எல்லாம் சந்திப்புன்னு சொல்ல முடியுமா.. ஒருத்தர நேருக்கு நேர் சந்திச்சு பேசுனாதானே அத சந்திப்புன்னு தமிழ் கூறும் நல்லுலகம் நெனச்சிகிட்டு இருக்கு
சுதந்திர தினம்

ஆலையில்லா ஊருக்கு
இலுப்பை சர்க்கரை
அரசியல் வியாதிகளிடமிருந்தும்
அதிகார வர்க்கத்திடமிருந்தும்
நிஜ சுதந்திரம் கிடைக்கும் வரை
ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்ததை
அனுபவித்து கொண்டாடுவோம்
ஜெய் ஹிந்த்
****
குண்டு துளைக்காத காரில் வந்து
குண்டு துளைக்காத கூண்டில் நின்று
கறுப்பு பூனையினர் பாதுகாப்பு அரணில்
பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவார்.
பொதுமக்களிடம் பேச இவ்வருடமும் அனுமதி இல்லை...
எனது புகை பட பதிவு
இன்று பலர் புகைப்படத்துக்காக தனி வலைப்பூவே வைத்திருக்கும்போது நாம் குறைந்தபட்சம்
ஒரு பதிவு கூட போடவில்லையெனில் எப்படி. ஆகவே இப்பதிவு.என்ன எனது புகை பட பதிவு நன்றாக இருக்கிறதா... படம், whatcom falls parkல் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இணைப்பு குழாய் வெடி விபத்தின் போது யாரோ எடுத்தது.
இது போன்ற இன்னும் பல புகைப்பட பதிவுகள் காத்திருக்கின்றன, உங்கள் விருப்பத்திற்கேற்ப அவை வெளியிடப்படும்.
இன்ஷ்டந்த் பின்னூட்டங்கள்
# புகை படத்தோடு அது (புகை & படம் இரண்டும்) எப்படி உருவாகிறது என்றும் சொன்னால் வசதியாக இருக்கும் நன்றி
# அனைத்து படங்களும் மிக அருமை (ஒரு படம்தான், இருந்தாலும் வழக்கமா எழுதறது மாற்ற சோம்பேறித்தனமாக இருக்கிறது)
# புகை வானத்தை பார்த்து கைகாட்டும் (எனது பதில் : நல்ல வேளை, இந்த புகை சிகரெட் புகை அல்ல)
# தூங்கும் நேரம் (புகைக்கும் நெருப்புக்கும் ஏது தூக்கம்)
# ஒரே புகை மூட்டம், என்னால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்க இயலவில்லை. எனினும் உங்கள் பதிவு அருமை.
ஆளில்லாத ஊரின் ராஜா
அந்த இயக்கத்திலிருந்து போராடினேன்
துரோகி என்றார்கள்இந்த இயக்கத்திலிருந்து போராடினேன்
தீவிரவாதி என்றார்கள்
பெரிய இயக்கத்தில் சேர்ந்த பின்பே
போராளி என்றார்கள்
கொள்கைக்கு மாற்றானால்
அரசாங்கம் மட்டுமல்ல
அடுத்த இயக்கமும்தான் எதிரிதான்
அடுத்த இயக்க தலைவன் அழிய
உயயோகப்படாத உயிர் எதற்கு,
உரிமை கேட்டு போராடியவன்
சுவரில் மட்டும் தியாகியானேன்
பலியை பார்த்தால் முடியுமாபோரல்லவா முக்கியம்
களத்தில் பாதி
பெயர்வதில் மீதி என்று
காலியானது ஊர்
ஒரு நாள் உரிமையும் கிடைத்தது
முடி சூடியபின் ராஜா கேட்டார்
மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரி
மழையில் ஒன்றும் குறைவில்லை ராஜா
அறுவடை செய்யத்தான் ஆளில்லை
© முகமூடி
ஒரு சைவப் பதிவு
நேற்றிரவு என் கனவில் இறைவனிடம் ஒரு வரம்
கேட்டேன்.. இறைவா... அரசியல் இல்லாமல், மதம் கலக்காமல், இலக்கியம் அறவே அற்று, பின்னூட்டத்தில் வசவு இன்றி உய்ய வழி செய்யும் ஒரு பதிவு எழுத பலம் தா...
இறைவன் அருளிய வார்த்தைகள் விடிந்தும் ஞாபகம் இருந்தது.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறை போட்டு
ஈயை தூர ஓட்டு
தலையனை அருகில் இறைவன் ஒரு டிஸ்க்ளெய்மரும் வைத்திருந்தான் ::
அம்மா என்பது "அம்மா" இல்லை...
இலை என்பது "ஒரு இலை" மட்டுமே...
திகம்பர சாமியார்- நாட்டை ஏன் நேசிக்க வேண்டும்
"நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்" என்ற ஒரு கேள்வி ஒரு ராணுவ வீரரை திகம்பர சாமியாராக மாற்றியது என்றால் நம்ப முடிகிறதா... நமது 'தினமூடி' நிருபர் மிகவும் கஷ்டப்பட்டு காடு மலைகள் எல்லாம் திரிந்து ஸ்ரீலஸ்ரீ. திகம்பர சாமிகள் அவர்களை பேட்டி கண்டார்... அந்த எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி இங்கே...
நிருபர் :: சாமி... நீங்க திகம்பர சாமியான கதைய எங்க வாசகர்களுக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா...
தி.சாமி :: அது ஒரு பெரிய கதைப்பா
நிருபர் :: சுருக்கமா சொல்லுங்க சாமி. உங்களுக்கு நாலு பக்கம்தான் அலாட்டட்
தி.சாமி :: சரிப்பா... அதாவது நான் ராணுவத்துல இருந்தேன் அப்போ.. பாகிஸ்தான் எல்லையில போஸ்டிங்... ஒரு நாள் ஜார்ஜ் மோன்பியாட்னு ஒரு அறிஞர் " நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்? " அப்படீன்னு ஒரு அருமையான கேள்விய கேட்டுட்டாரு ன்னு ஊரே பரபரன்னு ஆயிடுச்சி.. என் ஞானக்கண்ண திறந்த கேள்வி அது... அப்பத்தான் இந்திய-பாகிஸ்தான் சண்டை வந்திச்சி...
முதல்ல பஞ்சாபி ரெஜிமெண்ட்தான் போறதா இருந்திச்சி.... ஆனா பஞ்சாபி கேப்டன் முடியாதுன்னு சொல்லிட்டாரு.. பாகிஸ்தான்ல இருக்கிற பாதி பேரு இங்க இருந்து போனவங்க.. அதுவுமில்லாம லாகூர்ல முக்காவாசி பேரு பஞ்சாபியும் சிந்தியும் பேசற நம்ம சகோதரர்கள்... பாகிஸ்தானுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கு.அதனால நாங்க சண்டைக்கு போக மாட்டோம்னு சொல்லிட்டாங்க..
அப்புறம் எங்க ரெஜிமெண்ட்ட போக சொல்லி உத்தரவாச்சி... நான் "நாட்ட ஏன்" யோசனையில இருந்தே இன்னும் மீளல... எனக்கு இந்தியாவ புடிக்கும், பாகிஸ்தானும் புடிக்கும்... தனிப்பட்ட முறையில பாகிஸ்தான்காரன் கூட எனக்கு ஒரு விரோதமும் இல்ல... சம்பாரிக்க வக்கில்லாமத்தான் இந்த பொழப்ப செய்றோம்னும் சொல்ல முடியாது... ஊர்ல அய்யன் தோட்டத்துல மாடு மேக்கிறவன் கூட என்ன விட அதிகமா சம்பாரிக்கிறான்... அப்ப இந்த பொழப்புக்கு நாட்ட நேசிக்கிறதுதானே காரணம், அது இப்படி மனுசன கொல்ற அளவுக்கு ஆகிடுச்சேன்னு தோணிச்சி. போக முடியாதுன்னு சொல்லிட்டேன்...
மேலதிகாரி கூப்பிட்டு என்னத்தான் நினைச்சிகிட்டு இருக்கேன்னாரு. பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேசம் கூட எல்லாம் சண்டைக்கு போக முடியாது... சிலி, பெரு, சோமாலியா இந்த மாதிரி நாடுன்னா சொல்லுங்கன்னேன். அந்த மாதிரி சூழ்நிலை வந்தா சொல்லி அனுப்பறோம்னு பொட்டிய கட்டி வூட்டுக்கு அனுப்பிட்டாங்க...

எங்க கிராமத்துக்கு வந்தப்புறம் நீங்க ஏன் என் நாட்டை நேசிக்கணும்னு ஊர் மக்கள எல்லாம் சிந்திக்க வச்சேன்... உடனே நம்ம சினிமா ஷ்டாருங்க அர்ஜுனும் விஜயகாந்தும் என்ன ஆளனுப்பி கூப்பிட்டாங்க... "தம்பி, உன்னால எங்க படத்த பாக்க யாரும் வர மாட்டேங்குறாங்க... எல்லாரும் நாம ஏன் நாட்ட நேசிக்கணும்னு நினைச்சா, நாங்க இந்த வயசுக்கு மேல தீவிரவாதிங்க இல்லாத கதைக்கு எங்கப்பா போவோம். அதனால இனி கொஞ்சம் மாத்தி சிந்தி" ன்னாங்க...
நான் உடனே, இப்ப என் கேள்வியே வேற... "நான் ஏன் மனுச மக்கள நேசிக்கணும்"னு என்ன நானே கேட்டுகிட்டு இருக்கேன்னேன். அதுக்கு அவங்க, தமிழ்நாட்டுல மகான் ஒருத்தரு இருக்காரு... எல்லாம் துறந்தவரு... உன் நல்ல நேரம் நம்ம த/நா மகான் இன்னொரு பெரிய மகான பாக்குறதுக்காக இமயமலைக்கு கெளம்பிகிட்டு இருக்காரு... அவரு கூட போறதுக்கு ஒரு போட்டோகிராபரு வேணுமாம்.. அந்த கெட்டப்புல நீயும் ஜாயின்ட் அடிச்சிக்கன்னு சொல்லி காவி வேட்டி, ஹவாய் செருப்பு எல்லாம் கொடுத்து கெளப்பி விட்டாங்க...
நானும் அவரு கூடவே போனேன். இமயமலை அடிவாரத்துல போட்டோ செஷனுக்காக த/நா மகான் ஒரு கூடாரம் போட்டாரு.. 4 நாள் ஆச்சி, போட்டோக்கு லைட்டிங் சரியா இல்லன்னு அங்கியே இருக்காங்க... இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு நான் நைசா எஸ்கேப் ஆகி பக்கத்துல இருந்த குகைக்குள்ள போனேன்... உள்ள ஒருத்தர் கல்லோட கல்லா இருந்தாரு...
அவரு பேரு காகா சாமியாராம். என் கண்ண பாத்தாரு பாருங்க ஒரு பார்வை... அந்த இருட்டுலயும் சிலித்து நடுங்கிடுச்சி... அத பாத்துட்டு காகா சொன்னாரு, நீ நடுங்குறதுக்கு குளிர்தான் காரணம் , அடுத்த வாட்டி வரும்போது ஜாக்கெட் போட்டுகிட்டு வான்னு.. அவரோட அன்ப பாத்து புல்லரிச்சி அவரோட சிஷ்யனா சேந்துக்கணும்னு ஆசப்பட்டேன்... காகாவும் ஒத்துக்கிட்டாரு... ஆனா ஒரு கண்டிசன் போட்டாரு... அதாவது, அவருக்கு 13543 வயசாகுதாம்... எந்த தாசில்தார் ஆபிஸ்லயும் அவருக்கு பர்த் சர்டிபிகேட் கெடக்க மாட்டேங்குதாம். அத வாங்கி கொடுத்தா அவருக்கு சிஷயனா ஆகலாம்னாரு... திரும்பி நடக்கிற வழியில "நான் ஏன் என் உடைகள நேசிக்கணும்"னு எனக்கு ஒரு கேள்வி வந்திச்சி... உடனே திகம்பர சாமியாகி இங்கயே செட்டில் ஆகிட்டேன்...
நிருபர் :: முதன் முதல்ல திகம்பரமா ஆகறப்போ உங்க மனநிலை எப்படி இருந்திச்சி சாமி...
தி.சாமி :: ஏண்டா... இதுக்கு முந்தி நீ சினிமா ரிபோர்ட்டரா இருந்தியா...
நிருபர் :: (ஆச்சரியமாக) எப்படி சாமி கரெக்டா கண்டுபிடிச்சீங்க... ஞான திருஷ்டியா...
தி.சாமி :: மண்ணாங்கட்டி... அவனுங்கதானடா நடிகை கிட்ட போயி "முதன் முதல்ல கேமரா முன்னாடி நின்னப்ப எப்படி ஃபீல் பண்ணீங்க"ன்னு கேனத்தனமா கேப்பாங்க... காலம் காலமா இதையே கேக்கிறீங்களே, அவ என்ன நினைச்சா இப்ப நாட்டுக்கு என்னடா.. அதுவுமில்லாம நடிகைங்க ஃபீலிங்க எல்லாம் கேட்டு ஃபீலாவுற நெலமக்கி ஆகிட்டீங்களேடா... எக்கேடோ கெட்டு போங்க, வாட் நெக்ஸ்ட்..
நிருபர் :: கடைசியா ஒரு கேள்வி சாமி... உங்க எதிர்கால ப்ளான் என்ன...
தி.சாமி :: "நான் ஏன் என்னையே நேசிக்கணும்"னு எனக்கு தோனறுதுக்கு முந்தி அந்த ஆண்டவன் என்ன கூப்பிட்டுக்கணும்... அதான் என் ப்ளான். இப்ப எடத்த காலி பண்ணு...
சனநாயகமும் subversive எழுத்தும், ஒரு கோணல் பார்வையும்
*** சப்வர்ஸிவ் வாசகர்களுக்கு சமர்ப்பணம் ***
நான் ஒரு subversive எழுத்தாளன். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளில், நாடு கடத்தப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது (சில சமயங்களில்) கொல்லவும் பட்டார்கள். அதனால்தான் நான் முகமூடி போட்டு எழுதுகிறேன் -- முகமூடி
subversive = Intended or serving to subvert, especially intended to overthrow or undermine an established government -- நன்றி :: dictionary.com
உயிர்மை ஜனவரி இதழ் 'கண்காணிப்பு - தணிக்கை - தண்டனை' என்பது பற்றி நான் எழுதித் தர வேண்டுமென கூறினார் மனுஷ்யபுத்திரன். ஒரே நாளில் கட்டுரையை முடித்து மனுஷ்யபுத்திரனிடம் கொடுத்தேன். ஆனால் என்ன ஒரு கொடுமை! ஜனவரி உயிர்மையை ஆவலுடன் புரட்டியபோது என் கட்டுரையின் மூன்றில் ஒரு பகுதி காணாமல் போயிருந்தது. கட்டுரையின் ஜீவனான உயிர்ப்பகுதியை வெட்டி விட்டு வெறும் சடலத்தை வெளியிட்டிருந்தார் மனுஷ்யபுத்திரன். உண்மையில் என் நெஞ்சு வலித்தது என்று சொன்னால் அது மிகையாகாக இருக்காது. அப்போது என் உடன் இருந்தவர் - ரஞ்சன். அழுதுவிட்டேன். உயிர்மையின் ஆசிரியர் குழுவிலுள்ள செந்தில்குமாரை தொலைபேசியில் அழைத்து கதறினேன். இனிமேல் உயிர்மையில் எழுதுவதில்லை என்று முடிவு செய்தேன் -- நன்றி :: சாரு, கோணல் பக்கங்கள்
I don't feel courageous. I don't really feel exposed, either. I think of my books as tricks. They're like X-ray Spex. You think you're looking at an X-ray. But it's really feathers -- Derek McCormack
Librarians are subversive. You think they've just sitting there at the desk, all quiet and everythin. They're like plotting the revolution, man. I wouldn't mess with them -- Fahrenheit 9/11 இயக்குனர் Michael Moore
******
நல்ல எழுத்துக்கள் (அதாவது இலக்கியம் என்று எழுதுபவரால் மட்டும் விளம்பரப்படுத்தப்படுவது) தமிழ் கூறும் நல்லுலகத்தில் கௌரவிக்கப்படும்போது ஆ.ஸ்ரீயருடன் சிறையில் இருக்கும் வாய்ப்பு பெறும் பாக்கியவான்கள் ::
% பஸ்ஸ்டாண்டில் மேசைக்கு அடியில் 'மருதம்' விற்பவர்கள்
% பர்மா பஜாரில் மறைத்து வைத்து குறுவட்டு விற்பவர்கள்
% கேசினோ / பல்லாவரம் ஜோதி தியேட்டர் உரிமையாளர்கள்
% சிவப்பு சட்டை அணிந்து துண்டு பிரசுரம் விநியோகிப்பவர்கள்
% அந்த துண்டு சீட்டை அச்சடிப்போர்
% நக்கீரன், தராசு, ஜீனியர் விகடன் ஆசிரியர்கள்
% முரசொலி (அ) நமது எம்ஜிஆர் ஆசிரியர்கள், ஆளுவோரை பொறுத்து
% தமிழ் வலைப்பதிவாளர்கள்
மனைவிக்கு ஒரு வாக்குமூலம்
"நான் ட்யூட்டியில இருந்தப்போ ஸ்ட்ரிப்பருடன் செக்ஸ் வைத்துக்கொண்டேன்" என்று ஒரு வாக்குமூலம் எழுதி அதை வேலை மெனக்கெட்டு நோட்டரியிடம் சான்றும் வாங்கி மனைவியிடம் கொடுத்தால் என்ன ஆகும்... ஸ்காட்டின் கதிதான்...
2003ல் ஒரு நாள் மிஷெல் தங்கள் குடும்ப கம்யூட்டரை ஆன் செய்த போது எதேச்சையாக ஒரு குறிப்பை பார்த்தார்.. அது ஒரு adult dancer மிஷெலின் கணவர் ஸ்காட்டுக்கு எழுதியது. உடனடியாக மிஷெல் சில ஆராய்ச்சிகள் செய்து அந்த பெண்மணியை கண்டுபிடித்து, அவர் வேலை பார்க்கும் van nuys adult clubல் சென்று சந்தித்து சண்டை போட்டார். அந்த டான்ஸர் பெண்மணி ஸ்காட் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே சென்று மிஷெலின் மேல் புகார் கொடுத்தார். "மிஷெல் என்னும் பெண்மணி இரு முறை எனக்கு போன் செய்து தொந்தரவு கொடுத்தார். இரண்டாவது முறை 'நான் கேட்கும் கேள்விகளுக்கு நேரடி ப்தில் வேண்டும்' என்று மிரட்டலாகவும் அதன் தொடர்ச்சியாக மரியாதைக்குறைவான வார்த்தைகளையும் உபயோகித்தார்"... இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
மிஷெல் தன் கணவரிடமும் சண்டை போட்டார். தங்கள் கல்யாணம் தொடர வேண்டும் எனில் ஸ்காட் பணியில் இருந்த போது அந்த பெண்மணியுடன் செக்ஸில் ஈடுபட்டார் என்று வாக்குமூலம் எழுதி தரவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அப்படியே எழுதி அதை ஸ்காட் ஒரு நோட்டரியிடம் சென்று சான்றும் பெற்று கொடுத்தார்...
நாளாக நாளாக இருவரின் உறவும் சொல்லிக்கொள்ளும் படியாக செல்லவில்லை... சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் ஸ்காட் ஏதோ ஒரு வாக்குவாத்த்தில் கோபமாக மிஷலை படுக்கையில் பிடித்து தள்ளவும் மிஷெல் கடுப்பாகி, இந்த கடிதத்தை LAPD உள்துறைக்கும் (லாஸ் ஏஞ்ஜலீஸ் போலீஸ் டிபார்ட்மெண்ட்) மற்றும் ஸ்காட்டின் நேரடி உயரதிகாரிகளுக்கும்
அனுப்பி விட்டார்.
விசாரணயின் முடிவில் "ஸ்காட்டும் சம்பவத்தின் போது ஸ்காட்டின் பார்ட்னராக இருந்த ராபர்டும் பணியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்" என்று LAPD ஒழுக்கக்கட்டுப்பாட்டு துறை பரிந்துரைத்தது. போன வாரம் ஸ்காட் தானாகவே போலீஸ் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். பல விருதுகள் பெற்ற பார்ட்னர் ராபர்டின் கதி இப்பொழுது LAPD தலைவர் கையில்.
***
ஸ்காட் தன் கேப்டனுக்கு எழுதிய கடிதத்தில் :: என் செயல்களுக்கு மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை என் தற்போதைய மனநிலையை பிரதிபலிக்க போதுமானதாக இருக்காது. என் மனைவி, காவல் துறை, நகர குடிமக்கள் ஆகியோரிடம் எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் அது கம்மிதான்..
LAPD உப தலைவர் மைக்கேல் பெர்கொவ் :: பொதுவாக பணி நேரத்தில் ஆபிஸர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவது என்பதே நம்ப முடியாதது... இந்த கேஸில் நம்பவே முடியாதது, ஒரு மனைவி தன் கணவனிடம் தவறான நடத்தை பற்றி எழுத்து மூலம் வாக்குமூலம் வாங்கி அதை நோட்டரி கையெழுத்தும் வாங்க வைத்து, அதை நீண்ட நாட்களாக வைத்திருந்து அப்புறம் எங்களிடம் கொடுத்தது...
டிஸிப்ளினரி பேனல் கேப்டன் க்ரோபர், தன் ஜுன் 15 பரிந்துரையில் :: நீங்கள் (ஸ்காட்) உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இல்லாதது, வேலை நேரத்தில் சொந்த வேலைகளை பார்த்தது போன்ற காரணங்கள் குற்றமாக கருதப்படவில்லை.... எனினும் டான்ஸருடனான உங்கள் தொடர்பு மூலம் வரி கட்டும் பொதுமக்கள் அழைக்கும் போது அவர்களுக்கு சேவை செய்யும் ஒரு போலீஸ் கார் இல்லாமல் செய்திருக்கிறீர்கள். இது பணிநேரத்தில் பணியில் இல்லாத குற்றம்.
மேல் விபரங்கள் ஜீலை 9, LA Times தினசரியில்
மெட்டி ஒலி காற்றோடு...
'நமக்குள் சரிப்பட்டு வரும்போல் தோன்றவில்லை... இனி நாம் நண்பர்களாக இருப்போம்...'
இதை சொல்லும்போது அவளால் என் கண்ணை பார்த்து கூட சொல்ல முடியவில்லை.. சற்று நேரம் கழித்து முகம் நிமிர்த்திய போது ஒரு அடிபட்ட பார்வை.. குற்ற உணர்ச்சி.. நான் எதுவுமே பேசவில்லை.. அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். பேசவும் தோன்றவில்லை... 'சரி' என்று மட்டும் சொன்னேன்.. விவாதம் பண்ணுவேன், மனம் மாற்ற முயற்சிப்பேன், குறைந்தபட்சம் ஏனென்றாவது கேட்பேன் என்று நினைத்திருக்க வேண்டும்.. ஜீவனேயில்லாமல் 'ரொம்ப தாங்க்ஸ்' என்றாள்.
மூன்று மாதங்கள்தான் ஆகிறது.. ஆனால் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்ததில் ஒரு ஜென்மத்திற்கான நினைவுகள்.. மனதுக்குள் கணவன் மனைவியாகவும் வரித்தாயிற்று. நண்பர்களாம் நண்பர்கள், காதலித்தவர்கள் நண்பர்களாக வாழுவது எப்படி சாத்தியமாம்.. இருவருக்கு மட்டுமேயான அந்த அன்னியோன்னியத்தை எப்படி துறப்பது.. பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் காதலித்த காலத்தின் வாசம் மிஞ்சியிருக்கிறதே, அதை என்ன செய்வது. ஒவ்வொரு பொருளையும் சொல்லையும் நமக்கு மட்டும் ஏற்றார் போல் மாற்றி உபயோகித்தோமே, அதை மீண்டும் சாதாரணமாக உபயோகிக்க முடியுமா.
மறுநாளிலிருந்து எதுவுமே நடக்காத மாதிரி நடக்க முயற்சித்தேன்.. இயல்பாக இருப்பது போல் நடிக்கிறேன் என்பதை அவள் உணர்ந்திருக்கலாம்.. ஆனால் அவள் மிகவும் சாதாரணமாக இருந்தாள்... அழுத்தம் என்று தெரியும், அதற்காக இப்படியா.. இயல்பான பேச்சு, செய்கை என்று நாளாக ஆக பழகிவிட்டது...
ஒருநாள் மழை சாரலடித்துக்கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில்
'நாளைக்கு லீவாச்சே என்ன ப்ரோக்ராம்..'
'இல்ல டவுனுக்கு வரணும் ஆர்கெஸ்ட்ராக்கு டிக்கெட் வாங்கி வச்சிருக்கா என் ப்ரெண்டு..'
'அப்படியா போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வாயேன்..'
நான் எதேச்சையாகத்தான் சொன்னேன், அதுவரை எத்தனையோ வற்புறுத்தியும் வீட்டுக்கு வந்ததில்லை அவள்.
'சரி ஈவனிங் 5 மணிக்கு முடிஞ்சா வரேன்'..
இந்த முடிஞ்சாவுக்கு அர்த்தம் நாசூக்கான இல்லை என்பதாகத்தான் உணர்ந்திருந்தேன். ஆனாலும் முதல் முறை சரி என்றதே ஆச்சரியம்தான்..
அழைப்பு மணி ஒலித்த போது நான் பாட்டு கேட்டுக்கொண்டே துணிமணி மடித்துக்கொண்டிருந்தேன்.. அவள் தோழி மற்றும் தம்பியோடு வந்திருந்தாள். என் அறையை ரசித்து ரசித்து பார்த்தாள். என் சுவரில் இருந்த சித்திரங்கள், அறையில் நிரம்பியிருந்த வாசனை, காண்ட்ராஸ்டாக இருந்த வண்ணங்கள் எல்லாவற்றையும் சிலாகித்து பேசினாள். மேஜை விரிப்பை நீவிவிட்டு அதன் மேலிருந்த பொருட்களை மாற்றி அமைத்தாள். அடுக்கி இருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து கூட பார்க்காமல் மீண்டும் அங்கேயே வைத்தாள். "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சில் தாலாட்ட" ஒலிக்க ஆரம்பித்தது.. அவள் தம்பி எதையோ உருட்டிக்கொண்டிருந்தான்... என்ன செய்வதென்று அறியாமல் அமர்ந்திருந்த அவள் தோழியிடம் நான் பேச்சுக்கொடுத்தாலும் அவள் செய்கைகளையே மௌனமாக கவனித்துக்கொண்டிருந்தேன்...
"வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்...."
இந்த வரி கசிந்த போது அவள் என்னை பார்த்த பார்வை... இந்த ஜென்மத்துக்கும் மறக்காது எனக்கு..
கேஸட் கவரை எடுத்து பார்த்தாள்... 'இந்த 2 காஸெட்டையும் நான் கேட்டுட்டு தரட்டுமா..' உனக்காகத்தானடா பப்பி அந்த காஸெட்டே பண்ணேன்.. 'ஓ எடுத்துட்டு போங்க..'
'சரி டைம் ஆச்சி.. நாங்க கிளம்பறோம்.. நீங்களும் வாங்களேன் ஆர்கெஸ்ட்ராவுக்கு..'
'இல்லை, எனக்கு ஆர்கெஸ்ட்ரா எல்லாம் அவ்ளோ இஷ்டம் இல்லை..'
பொய்.. என்னால் ரொம்ப நேரம் நடிக்க முடியாது... அவளுக்காக வாங்கி வைத்த 'லிட்டில் ஹார்ட்ஸ்' பிஸ்கட் சாப்பிடப்படாமலேயே இருந்தது...
அவர்களை வழியனுப்பி அங்கேயே நின்று கொண்டிருந்தேன். தெருமுனை திரும்பும்போது தலை திருப்பி விழியாலேயே 'சென்று வருகிறேன்' என்றாள். மீண்டும் அதே பார்வை..
மறுநாள் அவள் வேலையிடத்தில் அவளை பார்த்த போது மேஜை மேல் ஊன்றியிருந்த என் கையை திருப்பி, என் சட்டைப்பையில் இருந்து பேனா எடுத்து என் உள்ளங்கையில் அவள் பெயர் எழுதினாள்... அதன் அர்த்தம் இரண்டு நாள் கழித்து அஞ்சலில் வந்தது... நான்கு பக்க கடிதத்தில் சொல்லியிருந்தாள், இனியும் அவளால் நடிக்க முடியாதென்று.
மூன்று மாதங்கள்.. நான் கோயமுத்தூரில் வேலை கிடைத்து சென்ற பிறகு அவளுக்கு எழுதிய கடிதம் ஒவ்வொன்றையும் ஒரு நேர்த்தியோடு தயார் செய்வேன். அவளிடமிருந்துதான் பதில் கடிதமே இல்லை. அவளிடம் போனில் பேசும் சூழ்நிலையும் இல்லை.. ஒரு நாள் கடிதம் வந்தது.. "நன்கு யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். நமக்கு இந்த ஜென்மத்தில் பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.. என்னால் வீட்டை விட்டு வெளியில் வரும் திடமும் இல்லை.. தினம் தினம் மனதோடு போராடி, இந்த டார்ச்சரை என்னால் தாங்க முடியவில்லை.. நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுவதற்கு உரிமையுண்டு.. ஆனால், இனி நாம் சந்திக்க வேண்டாம். என்னை தொடர்பு கொள்ளவும் முயற்சிக்காதீர்கள்.."
மறுநாள் காலையில் 300 கி.மீ தள்ளி அவளுடைய பஸ்நிறுத்தத்தில் என்னை அவள் எதிர்பார்க்கவில்லை.. என்னை கண்டவுடன் அருகில் வந்து ஏதாவது சொல்லுவாள் என்று காத்திருக்க, எதிர்பாராமல் வந்த அவள் தோழியிடம் கேட்டு அவளுடன் சைக்கிளில் செல்லுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.. நான் 'வந்த பஸ்ஸில்' ஏறி அவர்களுக்கு முன்பே அடுத்த நிறுத்ததில் இருந்தேன்.. அவர்கள் முன்பு இரு கைகளையும் நீட்டி நின்றேன்.. அப்போதைய மனநிலையில் லாரி முன்பு கூட நின்றிருப்பேன்...
என்ன நெனைச்சிகிட்டு இருக்க நீ...
மௌனம்...
கதவை விடாம தட்டினா என்னைக்காவது ஒரு நா திறக்காமலா போயிடும், தட்றதுக்கு முன்னாடியே திறக்காதுன்னு முடிவுக்கு வந்தா எப்படி...
மௌனம்...
சரி மூஞ்சிக்கி நேரா ஒரு தடவ் சொல்லிட்டு போலாம்ல.. அது என்ன ஒரு லெட்டர்ல மேட்டர் முடிச்சிட்ட.. ஏன் என்கிட்ட பேசற அளவு கூடவா உனக்கு நம்பிக்கை இல்ல, ஒரு வார்த்த கூட பேசாம போற...
மௌனம்...
என்னடா பப்பி நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன், நீ பாட்டுல பேசாம இருந்தா எப்படி.. நீ வேணும்கிறப்ப விளையாடுறதுக்கும் வேணாம்னா தூக்கி மூலையில போடுறதுக்கும் நான் என்ன உன்னோட விளையாட்டு பொம்மையா... எனக்கும் மனசுல உணர்ச்சி இருக்குடி...
பொசுக்கென அவள் கண்ணில் கண்ணீர்...
என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண விரும்பாத விஷயம் அது... எதுவும் பேசாமல் வழிவிட்டேன்... இந்த முறை கடைசி வரை திரும்பி பார்க்கவே இல்லை...
அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய... வாழ்க்கையில் மீண்டும் அவளை என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது...
*
தொடர்ச்சி...
சிறுகதைப் போட்டி
விதிமுறைகள்
1. கதை 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. கதை தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் படைப்பு இதற்கு முன் எந்த வகையிலும் (வலைப்பதிவு உட்பட) பிரசுரிக்கப்பட்டிருக்கக்கூடாது. கதையின் காப்புரிமை எழுதிய ஆசிரியருக்கு சொந்தமானது
3. இயன்ற வரை ஆங்கில வார்த்தைகள் தவிர்த்தல் நலம்.. எனினும் கதை நடைக்கு பங்கம் வராமல் வழக்கில் உள்ள ஆங்கில வார்த்தைகள் (பஸ், காபி போன்றவை) உபயோகிக்கலாம்
4. கதையை தமது வலைப்பதிவில் பிரசுரித்து அது குறித்த இணைப்பு இந்த பதிவின் பின்னூட்டமாக ஆகஸ்டு 21ம் தேதி நள்ளிரவு 12 மணி PDT க்குள் (இந்திய நேரம் ஆகஸ்டு 22 , 1230 hrs)அளிக்கப்பட வேண்டும்
5. கதை அமையும் பதிவின் தலைப்பு "சிறுகதை - கதை தலைப்பு" என்ற முறையில் இருக்க வேண்டும். உதாரணம், கதை தலைப்பு "அம்மா" எனில் பதிவின் தலைப்பு "சிறுகதை - அம்மா" என்று இருக்க வேண்டும்
6. இணைப்பு கொடுக்கும் அதே நேரத்தில் அதன் ஒரு நகலை பிரபலமான ஏதாவது ஒரு தமிழ் எழுத்துருவில் (யூனிகோடு எனில் மிகவும் நலம்) mugamoodi@hotmail.com எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதன் பின்னர் கதையில் எந்த மாற்றமும் செய்யலாகாது.
பரிசு :: முகமூடி இலக்கிய விருது மற்றும் தாமிர பட்டயம்... சரி சரி அடிக்க வராதீங்க...
முதல் பரிசு :: US $75 gift card
இரண்டாவது பரிசு :: US $25 gift card, இருவருக்கு
********
பத்திரிக்கையாளர்/ எழுத்தாளர்/ இலக்கியவாதி திரு. மாலன் பரிசு பெறும் படைப்புகளை தெரிவு செய்து தர அன்புடன் இசைந்துள்ளார்.
********
இதுவரை வந்த கதைகளின் பட்டியல் :
01. முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை
02. கானல்நீர்
03. என் பெயர் சித்ரா
04. கல்லூரி மாமா
05. நேர்மை எனப்படுவது யாதெனில்
06. பனி விழும் மலர்வனம்...
07. இடையை கையில் பிடித்து..
08. ஒரே கேள்வி
09. உணர்வுகள்
10. என்ன செய்யப் போகிறாள்
11. குலதெய்வம்
12. தனக்கு வந்தால்தான்..
13. பணமிருந்தால் மார்க்கமுண்டா!
14. பார்வைகள் பலவிதம
15. முகமூடி
16. விட்டு விடுதலையாகி
17. முன்னர் செய்த வினை
18. இரு சம்பவங்கள்
19. நூர்பாய்
20. சின்ன வட்டம்
21. அழுகுரல் கேட்கிறதா...
22. யார் குற்றம்
23. வேட்டையாடு! விளையாடு!!!
24. மாயவரத்தான்
25. யாதார்த்தம்
26. இளமையில் கல்
27. ஒரு தலைவனின் உதயம்
28. ஸ்வேதா!
29. பரிணாம வளர்ச்சி ...!!?
30. அப்பா?!
பரிசுக்கு இல்லாமல், பார்வைக்கு மட்டும்
**. மெட்டி ஒலி காற்றோடு...
**. எது முகமூடி
**. சபலம்
**. தப்புக் கணக்கு
********
வெங்கிட்டுவின் கவிதைப் போட்டி கண்டு நான் அடைந்த உற்சாகமே இந்த சிறுகதைப் போட்டி... அவருக்கு நன்றி. அவரது நம்பிக்கை கவிதைப்போட்டியில் வென்ற சுரேஷ் , ராஜ்குமார் , கப்ஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
பதிவுக்கு மூடுவிழா இன்ஷ்டந்த் காரணங்கள்
பலர் தமது பதிவுக்கு உடனடியாக மூடுவிழா காண விரும்பினாலும் அதை தள்ளிப்போடுவதற்கு காரணம், காரணம்தான்... அதாவது மூடுவிழாவுக்கு சொல்ல காரணம் இல்லை. தாம் மூடுவிழாவுக்கு காரணமாக சொல்ல நினைப்பதை ஏற்கனவே பழைய மூடர்கள் (அட, இது மூடுவிழா கண்டவர்களின் சுருக்கம்பா) சொல்லிவிட்டதால் மூடும்போது கூட ஒரு தனித்தன்மை இல்லையே என்ற வருத்தத்தில் தள்ளிப்போடுகிறார்கள்...
அவர்கள் விரைந்து மூடுவிழா காணும் வண்ணம் ஒரு இன்ஷ்டந்த் காரணப்பதிவு...
$2 கொடுத்து ரெஜிஸ்தர் செய்பவர்கள் நட்சத்திர தூக்கலுக்குக்கும், பின்னூட்ட வசதி தூக்கலுக்கும் இக்காரணங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
பையன் கம்பூட்டரில் மூச்சா போயிட்டான்
என் பதிவில் கரப்பு கூடு கட்டிடுச்சி
கம்பூட்டருக்கு வெளியில் இருந்த எலி உள்ளே போயிடுச்சி
அடிக்கடி கரண்டு போயிடுது
மாடு பால் கறக்க மாட்டேங்குது
பொண்டாட்டி திட்டறா.
தப்புத் தப்பா இணையத்துல பேசறாங்க.
ஐ'பீ கலெக்ட் பண்றாங்க.
எரிதம் வருது.
ஆபீஸ¤ல வலைப் பதிய முடியல.
தமிழ்மண நிர்வாகிகள் ராத்திரில தூங்கறாங்கோ
தமிழ்மண நிர்வாகிகள் பகல்ல வேல செய்றாங்கோ
பேப்பர்ல பேனா வச்சி எழுதுனா தமிழ்மணத்துல தெரிய மாட்டேங்குது
அமாவாசை அன்னிக்கி கூட நட்சத்திரம் தெரியுது
அல்கய்த
9/11
ஐடஹோல இன்னிக்கி மழை
வாந்தி எடுத்து அத பதிவா போடறாங்கோ
சரக்கு தீந்து போச்சி (ஸ்டாக் வச்ச பியர வயசுக்கு வராத என் பையனும் கூட்டாளிங்களும் சேந்து தீத்துபுட்டாங்கோ)
புதியது
நான் பதிவெழுதுனா மட்டும் நீங்க திருந்தவா போறீங்க..
நட்பை சம்பாரிக்காட்டாலும் எதிர்ப்பை சம்பாதிக்க கூடாது..
எனக்குன்னு ஒரு அடையாளம் உருவாகிடுச்சி..
விடாது கருப்பு..
கெட்டப்ப மாத்தரேன் - மாற்றமே நிலையானது, ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கபோறேன்..
I do not want to pick a fight, I just want to kill..
நடிப்பு எனது இரத்ததில் கலந்து விட்டது, அதனால கட்சி ஆரம்பிச்சி நாசமாக போறேன்.. கடலோரத்துல கருவாடு காயப்போடுறாங்க..
டிஸ்க்ளெய்மர் 0 :: இந்த பதிவின் பிண்ணனியில் இருக்கும் அரூப இணைய இயல் புரியாதவர்கள் இணைய குசும்பனின் "தொட்டாற்சிணுங்கியும் சில விளம்பரப்பலகைகளும்" படிக்கவும்... (குசும்பன் எழுத்தாதலால் அது மட்டும் என்ன புரியவா போகிறது)
டிஸ்க்ளெய்மர் 1 :: இதுனால யார் மனதாவது புண்பட்டிச்சின்னா... எச்சுச்மி... நோ சில்லி பீலிங்கஸ்... இதுக்கு போயி அலட்டிக்கலாமா
டிஸ்க்ளெய்மர் 2 :: இந்த பதிவு இன்னும் நீளும்... இப்ப ஆபிஸ் போணும்.. மீட்டிங் மதியம்தான், அதனால அப்பத்தான் மத்த காரணத்த பத்தி யோசிக்க முடியும்..
டிஸ்க்ளெய்மர் 3 :: இதுல வர சில காரணங்களுக்கு நான் யாருக்காவது கோப்பிரைட் ஆக்ட்படி நன்றி சொல்லணும்னு நினைச்சாங்கன்னா, கிணறு(well).... கோர்ட்ல சந்திப்போம்
டிஸ்க்ளெய்மர் 4 :: பதிவு தூக்குனவங்கோ, பின்னூட்ட வசதி தூக்குனவங்கோ, நட்சத்திர வசதி தூக்குனவங்கோ இவங்க மேல எல்லாம் வருத்தமா இருந்தா, நட்சத்திர வசதி இருக்கற வேற யார் பதிவுலயாவது போய் நெகட்டிவ் ஓட்டு போடுங்கோ...
கூட்டி கழிச்சி பாத்தா சனி யார்
இன்றைய தினமலர் முக்கிய செய்திகள்ல ஒரு குறிப்பால் உணர்த்தும் செய்தி இருக்கறா மாதிரி எனக்கு ஒரு எண்ணம்... கூட்டி கழிச்சி பாத்துட்டு உங்களுக்கு எதுனா தோனுதான்னு சொல்லுங்க...
செய்தி 7 :: சனியும், ஞாயிறும் ஒரே "வீட்டில்' தங்கியிருப்பதால் மும்பை வெள்ளம்!
மும்பையைச் சேர்ந்த ஜோதிட மற்றும் வாஸ்து நிபுணராக சாசேஷ் ஷா :: மும்பை வெள்ளத்துக்கு காரணம், ராசி மண்டலத்தில் "ஒரே வீட்டில்' சனியும், ஞாயிறும் சேர்ந்திருப்பதே... ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் சனியும், ஞாயிறும் ஒரே "வீட்டில்' , கடக ராசியில் தற்போது அமர்ந்துள்ளன. கடகம் என்பது தண்ணீர் சார்ந்த தன்மையைக் கொண்டது. இதில் ஞாயிறு எந்தக் கெடுதலையும் செய்யாது. ஆனால் சனி அங்கு உள்ளதால் தண்ணீர் தொடர்பான கெடுதல் நடக்கிறது.
செய்தி 9 :: இடம் மாறிய தாக்கரே வீடு திரும்பினார்
கடந்த 28ம் தேதியிலிருந்து பால் தாக்கரே தன் மருமகன் ராஜ்தாக்கரே வீட்டில் தங்கியிருந்தார். ஒரு வாரத்திற்குப் பின் அவர் நேற்று தனது வீட்டிற்கு திரும்பினார்.
செய்தி 1 :: மகாராஷ்டிராவில் மக்களை மூழ்கடித்த மழை ஓய்ந்தது : அடித்தது வெயில்! சகஜ நிலைக்கு திரும்புகின்றனர் மும்பைவாசிகள்
இதெல்லாம் சுயநினைவோடதான் செய்றீங்களா...

காமராஜர் பிறந்த நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலை அருகில் 103 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நடிகை மனோரமா இதில் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
நன்றி : மாலைமலர்


தினமலர் தினம் தரும் Junk மலர்
தினமலர் எரிதங்களை (ஜங்கி) உண்மை என்று நம்பி அதை வாசகர்களுக்கு வேறு உண்மை செய்தி போலவே சொல்கிறது... தினமலர் வலைத்தளத்தின் கடைசி செய்திகள் பகுதியில் கீழ்க்கண்ட இரண்டு செய்திகளை தினமும் பார்க்கலாம்.
செய்தி 1: மீனாட்சி அம்மன் கோயிலுக்காக இந்தியாவிலிருந்து ஓட்டுப் போடுவதற்கான டெலிபோன் எண்கள்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டு போடும் விஷயம் ஏதோ ஒரு டெலிபோன் கம்பெனியின் குயுக்தி எண்ணமாக இருக்க வேண்டும். ஒரு நம்பகத்தன்மை இல்லாத இணணயதள முகவரி, அது தரும் ஒரு டெலிபோன் நம்பர், யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒட்டு போடும் வசதி.... ப்ராடு என்பட்தற்கு வேறு என்ன வேண்டும்... உலக மக்கள் ஓட்டின் படி உலக அதிசயம் தேர்ந்தெடுக்கப்படுகிறதென்றால் உலகின் ஜனத்தொகையில் 6ல் இரண்டு பங்கு கொண்டிருக்கும் சீனாவிலும் இந்தியாவிலும்தான் அனைத்து உலக அதிசயங்களும் இருக்கும்... தினமலர் இதற்காக செய்த வாசகர் வளைப்பு மிகவும் பெரிது.. மக்கள் கொஞ்ச நாள் சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் கொஞ்ச நாள் கழித்து எல்லாம் அடங்கிவிட்டது. அந்த டுபாக்கூரை எல்லாரும் மறந்து விட்டார்கள். ஆனால் தினமலர் மட்டும் இன்னும் இதை ஒரு செய்தியாக போட்டு வருகிறது.
செய்தி 2: அமெரிக்காவில் தீபாவளி சிறப்பு தபால்தலை வெளியிட உங்கள் பங்கை ஆற்றுங்கள்... இந்தியாவின் மாபெரும் பண்டிகையான தீபாவளியை சித்தரித்து ஸ்டாம்ப் வெளியிட அமெரிக்க தபால் துறை ஆலோசித்து வருகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு சமூகத்தினரும் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கத் தபால் துறை ஸ்டாம்ப் வெளியிட வேண்டுமானால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெப்சைட் மூலம் பரி ந்துரை செய்ய வேண்டும். இதுவரை ஏறத்தாழ 3 லட்சம் பேர் இதற்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்திய திருவிழாவின் பெருமை உலகம் முழுவதும் பரவச் செய்ய நீங்களும் இங்கு சென்று பரிந்துரைக்கலாம்.
இதில் "ஸ்டாம்ப் வெளியிட அமெரிக்க தபால் துறை ஆலோசித்து வருகிறது" என்பது அப்பட்டமான பொய்... தினமலர் குறிப்பிடும் சுட்டி செல்லும் இடம் petitiononline.com. இதில் பொழுது போகாத யார் வேண்டுமானாலும் ஒரு பெட்டிஷன் தயார் செய்யலாம்... (அமெரிக்கா H1Bல் வேலை செய்பவரிடம் social security பிடித்தம் செய்யக்கூடாது , visitor visa விதிகளில் திருத்தங்கள் வேண்டும் போன்றவை இதற்கு முன் இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட மனுக்கள்..)
தினமலர் குறிப்பிடும் தீபாவளி ஸ்டாம்ப் மனுவை அமெரிக்க தபால்துறைக்கு ஒரு கோரிக்கையாக அமிதாப் ஷர்மா என்பவர் தயாரித்திருக்கிறார். இது போன்று நாளொரு வண்ணமாக வரும் ஜங்கிக்கள் பெரும்பாலோனாரை பொறுத்தவரை Inbox -> Trash... அமெரிக்க அரசாங்கமோ Direct to Trash... தினம் தோறும் நூற்றுக்கணக்கானோர் தயாரிக்கும் மனுக்கள் அமெரிக்க அரசின் பார்வைக்கு போகுமா... போனாலும் இது போன்றவற்றை அவர்கள் பாத்ரூம் டிஷ்யூ ஆக கூட உயயோகப்படுதுவார்களா என்பதெல்லாம் நமக்கு யோசனையின் அப்பாற்பட்டது... யோசிக்க வேண்டியது இந்த எரிதங்களை உண்மை என்று நம்பி தினமலர் ஏன் தினமும் தனது வாசகர்கள் காதில் பூ சுற்றுகிறது...
தினமலரை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று நான் கூட ஒரு பெட்டிஷன் தயார் செய்யலாம் என்றிருக்கிறேன்..
