<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சாதனை இளைஞரும் ஒரு கொசுறு செய்தியும்


கோவையை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகரான முத்து என்பவர் சந்திரமுகியை தொடர்ந்து 102 நாட்கள் பார்த்து சாதனை (?!) படைத்துள்ளார்.


கேவையை அடுத்த சர்க்கார் சாமக்குளத்தை சேர்ந்த இவர், காய்கறிக் கடையில் பணி புரிந்து வருகிறார். சந்திரமுகி வெளியான ஏப்ரல் 14ம் தேதி முதல் கோவை ராம்நகரிலுள்ள குமரன் திரையரங்கில் தினமும் படத்தை பார்த்து வந்துள்ளார். ஒரு வாரம் படத்தை தொடர்ந்து பார்த்த பிறகு, இந்தப் படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். 100 நாட்களும் நான் தொடர்ந்து படத்தை பார்க்க வருவேன் என்று முத்து தியேட்டர் நிர்வாகியிடம் கூறியுள்ளார். முத்து கூறியபடியே தினமும் படத்தை பார்க்க வந்துள்ளார். தினமும் படம் பார்க்க வரும்போது தியேட்டர் நிர்வாகியிடம் சென்று தனது ஆஜரை பதிவு செய்துள்ளார்.

கொசுறு செய்தி:

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பல குடும்பங்களால், தங்கள் வாழ்வே கேள்விக்குறியாகிய நிலையில் குழந்தைகளின் கஷ்டத்தை காணச்சகியாமல், பெற்றோரால் கைவிடப்பட்ட 106 ஆதரவற்ற சிறுவர்/சிறுமியர் எங்களிடம் வளருகின்றனர். அவர்களோடு விளையாடவும், அவர்களுக்கு கல்வி கற்க உதவவும், பாடல், நடனம், இசை ஆகியவற்றை பயிற்றுவிப்பதற்கும், அவர்களுக்கு கைத்தொழில் முதலியவற்றை அறிமுகப்படுத்தவும் தங்கள் நேரத்தை தர இயலும் தன்னார்வலர்கள் தேவை - தேவதாஸ், India Volunteer Work Projects


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

மண்ணின் மைந்தன் vs அந்நியன்...


ரொம்ப லேட்தான்... இருந்தாலும் செக்கூலரிஸ்ட் ஆனப்புறம்தானே இதெல்லாம் தோனுது... இணையத்துல அந்நியன பத்தி அக்குவேற ஆணிவேறயா பிச்சி பெடலெடுத்தாங்களே... யாராவது கலைஞரின் 'மண்ணின் மைந்தன்' பத்தி எழுதுனாங்களா... அட அந்நியன நாங்க திட்டித்தானய்யா எழுதுனோம்னு சொன்னா கூட, அது ஏதோ ஒரு வகையில அந்நியனுக்கு விளம்பரம் இல்லையா...


அந்நியன் அளவுக்கு மண்ணின் மைந்தனுக்குக்கு ஏன் விமர்சனமோ விளம்பரமோ இல்லை... இதன் பிண்ணனியில் சுஜாதாவிற்கும் கலைஞருக்கும் இருக்கும் வர்க்க வேறுபாடு ஒரு காரணியா. img crtsy: behindwoods.com

பாகிள் வலைப்பதிவு மண்ணின் மைந்தன் படம் குறித்து எடுத்த புள்ளிவிபரத்தை பாருங்கள்

See it again and again 14.21%(13)
You can see it once 2.21%(02)
Keep off the theatre 78.42%(75)
No comments 3.16%(03)

கீப் ஆப்பு த தியேட்டர் என்பது சீழ்பிடித்த சமூகத்தின் நோய் பீடித்த மன விகாரத்தின் வெளிப்பாடில்லையா...


அந்நியன் ரிலீஸான 12 மணிநேரத்துக்குள் அந்நியன் பத்தி 67 பதிவுகள் வந்தன என்கிறது பாகிள் புள்ளிவிவரம்...ஆனால் மண்ணின் மைந்தன் வெளியான 12 மாதங்கள் கழித்தும் ஒரு பதிவு கூட வரவில்லையாம்... ஷங்கரை விட பல மடங்கு அதிகமான படங்களை இயக்கிய ராமநாராயணனுக்கு தமிழக இணைய மக்கள் செய்யும் கைம்மாறு இதுதானா...

புலியை பார்க்க வசதியில்லாத எவ்வளவு ஏழை தமிழர்களுக்கு தன் படங்களில் புலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்... அறிமுகம் மட்டுமா, புலி, மாடு, குரங்கு, பாம்பு என்ற போன்ற ஜீவராசிகளெல்லாம் அறிவு இல்லாதவை என்றே காலம் காலமாக எல்லா தமிழர்களும் ஏமாற்றப்ப்ட்டு வந்தனர்... ஆனால் தம் கடும் முயற்சியால் பாம்பு டைப் அடிப்பது, குரங்கு போட்டோ எடுப்பது, யானை ரசத்துக்கு பதில் மூச்சாவை மாத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை படம் பிடித்து பலரின் நீண்ட நாள் மூட நம்பிக்கைகளை தகர்த்தெரிந்தார்... ஒரு குழுவாக ஏகப்பட்ட டாலர்களை கொட்டி ராப்பகலாக காட்டில் ஜல்லியடித்தாலும், ஆங்கில சேனல்களுக்கு சிங்கம் புலிகளின் அப்பா அம்மா விளையாட்டைத்தான் படம் பிடிக்க முடிகிறது... ஆனால் தனி ஒரு மனிதராக மெனக்கெட்டு நமது அண்ணன் ரா.நா அவர்கள் தந்த விஷயங்களுக்கு ஈடாகுமா அவர்கள் படம்... ஏழைகளின் டிஸ்கவரி சேனல் என்று ரா.நாவின் படைப்புக்களை குறிப்பிட்டால் கூட அது கம்மிதான் (ரா.நா வின் நாகலிங்கம் படத்திலிருந்துதான் முதல்வன் பட பாம்பு க்ராபிக்ஸ் செய்வதற்கான கற்பனை பிறந்தது என்பதை இப்போதாவது ஷங்கர் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்)

ரா.நா வுக்கு நன்றி சொல்லி டிஸ்கவரி/அனிமல் ப்ளானட் சேனல்களின் தலைவர்கள் எழுதிய கடிதங்கள் எல்லாம் நடுநிலை நாளிதழ்கள் என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் இந்த பத்திரிக்கைகள் வெளியிட வில்லை... ஆனால் ஷங்கர் தன் வீட்டு மேஜை நாற்காலி ஆடாமல் இருக்க வைக்கும் கிழிந்த பேப்பரை கூட இந்த மேட்டுக்குடி பத்திரிக்கைகள் படம் பிடித்து வெளியிடுகின்றன... அதுவும் இலவச இணைப்பாக...

சரி நாமாவது இந்த நற்பணியை செய்வோம் என்றுதான் இந்த பதிவு... இதன் மூலமாக குறைந்த செலவில் நிறைந்த பயனாக மண்ணின் மைந்தன் எவ்வளவு சிறந்த கருத்துக்களை சொல்கிறது /கோவணத்துக்கு வழியில்லலத தமிழகத்தில் அநியாய செலவு செய்து எடுத்த அந்நியன் எவ்வளவு அபத்த கருத்துக்களை சொல்கிறது என்ற முக்கிய விஷயத்தை மூளை மழுங்கிய தமிழினத் தமிழனுக்கு மட்டுமின்றி தெலுங்கின/கன்னடின தமிழனுக்கும் சொல்லுவது என் குறிக்கோள்

இப்போது ப்ரச்னை என்னவென்றால், நான் இந்த இரு படங்களையுமே இதுவரை பார்க்கவில்லை... எனவே பார்த்தவர்கள் யாராவது இதை பற்றி தயவு செய்து எழுதுங்கள்...
இருபதாம் நூற்றாண்டு தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற அவப்பெயரில் வரலாற்றில் நாம் அறியப்படவேண்டாம்

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அண்ணா பல்கலை மன்னராட்சி


துணை வேந்தர் = துணை அரசன் என்பது மக்களாட்சியில் செல்லுமா...


அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் வரும் கல்லூரிகளில் மாணவர்கள் டீ.சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் ஆடைகளில் எந்தவிதமான வாசகங்களோ அல்லது உருவப் படங்களோ இருக்கக் கூடாது.

மாணவிகள், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணியக் கூடாது. சேலை, சுடிதார் போன்ற கவர்ச்சி இல்லாத உடைகளை அணியலாம். உடல் உறுப்புகள் தெரியும் அளவுக்கு மிகவும் மெல்லிய துணிகளால் ஆன ஆடைகளை அணியக் கூடாது. இறுக்கமான உடைகளையும் அணியக் கூடாது.

எல்லா கல்வி நிறுவனங்களிலும் நன்னடத்தை விதிமுறைகள் என்று ஒரு வழிகாட்டி இருக்கும். அதில் ஒழுக்கமான உடை என்று சில வழிகாட்டுதல்கள் இருக்கும்... ஆனால் சிலர் தங்கள் (பிற்போக்கு) சிந்தனைகளை தாங்களாக வகுத்துக்கொண்ட சில விதிகளின் படி - அதிகாரம் இருப்பதால் - சட்டங்களாக செயல்படுத்திவிட்டு இவையெல்லாம் மாணவர்களின் நன்மைக்கு என்று ஒரு காரணத்தை சொல்லிவிடுவார்கள்...

கல்லூரி காலத்தில் எங்களின் துறையிலும் ஒரு பேராசிரியர் இப்படித்தான்.. முதல் நாள் லேபிற்கு சென்றவுடன் 25 பேரில 10 பேரை வெளியேற்றி விட்டார்... "இது என் லேப். நான் சில வழிமுறைகள் வகுத்திருக்கிறேன்... அதனை பின்பற்றினால் இங்கு வரலாம், இல்லையெனில் உங்கள் இஷ்டம்" என்றது அவர் சட்டம்...

அவரின் வழிமுறைகள்...

இன்ஜினியர் என்பவனுக்கு டீ.சர்ட் கூடாது, அரைக்கை சட்டை கூடாது, சட்டையில் பொம்மை எதுவும் இருக்ககூடாது, கட்டம் போட்ட சட்டை கூடாது... கோடு அல்லது ப்ளெயின் முழுக்கை சட்டை அணிந்து பேண்டில் இன் செய்து சூ போட்டு இருக்க வேண்டும். தலை கலையாமல் சீவி இருக்க வேண்டும்..

பெண்கள் ஓவர் கோட் போட்டு வரவேண்டும். சடையை கோட்டுக்குள் போட்டு இருக்க வேண்டும்.. சடை பின்னாமல் வரக்கூடாது. குட்டை முடியாக இருந்தால் போனி டெயில் போட்டு வரவேண்டும்... நம்புங்கள்... (இதில் சின்ன எழுத்தில் இருப்பது எனக்கும் உடன்பாடே... அந்த பேராசிரியர் இப்போது துறை தலைவராக இருக்கிறாராம்... இப்போது துறைக்கு என்ன சட்டமோ)

இதாவது பரவாயில்லை.. நான் இன்டர்நேஷனல் ட்ரைவிங் பர்மிட் எடுக்க பின்தங்கிய மாவட்டம் ஒன்றின் (நிரந்தர முகவரி அந்த ஊரில்) மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் சென்றிருந்தேன்... அழைக்கப்பட்டவுடன் உள்ளே சென்ற என்னிடம் ஆய்வாளர் I எடுத்தவுடன், "என்ன தம்பி வெளிநாடு எல்லாம் போறீங்க, ஆனா மரியாதை தெரியலையே" என்றார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை.. இன்னமும் பேசவே ஆரம்பிக்கவில்லையே... அவரே தொடர்ந்து, "பெரியவங்கள பாக்க வரும்போது இப்படியா மரியாதை இல்லாம டீ.சர்ட் போட்டு வருவீங்க..." அந்த சித்தாந்தத்தை கேட்பது அதுவே முதல் முறை. இத்தனைக்கும் காலர் வைத்த 250 ரூ மதிப்புள்ள பைபோர்டு டீசர்ட் போட்டு பேண்டில் இன் செய்து செமி-·பார்மல் சூ போட்டு டீசண்டாகத்தான் இருந்தேன்... "போங்க போய் சட்டை போட்டுகிட்டு வாங்க, மத்தத அப்புறம் பேசலாம்" என்று சொல்லி விட்டார்...

நான் என் தரப்பு வாதத்தை பேச வாயெடுத்தால் அங்கே இருந்த உதவியாளரோ, மன்னர் முன் நிற்கும் குற்றவாளிக்கு மன்னிப்பு கிடைத்திருக்கிறது, இவனென்றால்... என்ற பாணியில் வெளில போயிருங்க தம்பின்னு அடித்தொண்டையில் முனகுகிறார்... நான் இருப்பதோ வீட்டை விட்டு 300 கி.மீ தொலைவில்.. இதற்காக நான் ஒதுக்கி இருந்ததோ ஒரே நாள்.. வெளியில் வந்து ஒரு நண்பனை பிடித்து அவன் சட்டையை வாங்கி போட்டுக்கொண்டு அரை மணியில் மீண்டும் சென்றேன்... அப்புறம்தான் பர்மிட் கொடுத்தார்....

இவர்கள் எல்லாம் தம் சித்தாந்தங்களை செயல்படுத்த யார் அதிகாரம் கொடுத்தது... இது எல்லாம் தம் அதிகாரம் தரும் இறுமாப்பில் செய்யும் அகந்தை செயல்களில்லையா...

ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கும்
வயசு வந்த நமக்கு
உடைய பார்த்தா கலைஞ்சி போகா
முதிர்ச்சி இல்லையாம்

மாணவர்களின் நன்மைக்காகத்தான் இதை செய்கிறோம் என்பது சுத்த பேத்தல்... கவர்ச்சி உடையால் கவனம் கலையலாம் என்றால் வெளியில் அவர்களின் மனதை ஒருமுகப்படுத்த யார் என்ன செய்கிறார்கள்... குறைந்த பட்சம் வகுப்புக்கு உள்ளே கவனம் கலையாமல் பாதுகாக்கிறோம் என்றால், இதற்கெல்லாம் கலையும் மனது உடையவன் வெறும் முகத்தை பார்த்தே கவனம் கலைவான்... இல்லை கல்லூரிக்கு உள்ளே நடக்கும் பாலியல் துன்புறுத்தலுல் முதலான குற்றங்களுக்கு இதுமாதிரியான உடைகள் காரணம் என்றால் அது பற்றி ஏதாவது ஆய்வு நடந்திருக்கிறதா... ஆய்வு முடிவில் எடுக்கப்பட்ட முடிவென்றால் தமிழகம் முழுவதும் இதை நடைமுறைப்படுத்தலாமே...

ஒரு வேளை இது தமிழகம் முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டால் மாணவர்கள் இன்னமும் சிறப்பாக நன்மை பெற ஏதோ நம்மாலான சில இலவச யோசனைகள் ::

பெண்கள் எல்லாரும் புர்கா அணிந்து கல்லூரிக்கு வரவேண்டும்...
ஆண்கள் எல்லாம் வேறு ஒரு நிறத்தில் புர்கா அணிய வேண்டும்...
பையனும் பெண்ணும் பேசினால் இன்டர்னல் மார்க்கு கோவிந்தா...
வகுப்பில் சந்தேகம் கேட்கும் போது ஆணா பெண்ணா என்று குரல் தெரியாமல் ஸ்க்ரேம்ப்ளர் பொருத்தப்படும்...
பைக் வைத்து அலம்பல் விடுவதை தவிர்க்க இனி அனைவரும் மாட்டு வண்டியில்தான் வரவேண்டும்...
வகுப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் திரைச்சீலை வைக்கப்படும்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட...


நீங்கள் ஒரு தனி மனிதரோ, இயக்கமோ, நம்பிக்கையோ, கொள்கையோ "விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட" உயரிய விஷயமாக கருதினால்


எச்சரிக்கை ::

நீங்கள் புதியதாக ஒரு விக்கிரகத்தை, ஒரு பொய்க்கடவுளை கண்டுபிடித்திருக்கிறீர்கள்...

நன்றி:: Philocrites

விரைவில் வரவிருக்கும் "விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்" தொடர்பதிவுக்கு ஒரு முன்னோட்டம்

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

செக்கூலரிசம் - 8 வரி கவிதை


தலித் எழுச்சி நாயகன் திருமா வாழ்க

தேவேந்திரர்களின் இந்திரன் கிருஷ்ணசாமி வாழ்க
வயிறு காய்ந்தோர் வழிகாட்டி வாண்டையார் வாழ்க
பாட்டாளிகளின் பகலவன் மருத்துவர் வாழ்க
தமிழர்கள் மானம் காக்கும் கலைஞர் அய்யா வாழ்க
பாவப்பட்டவர்களின் தேவதை மாயாவதி வாழ்க
கால்நடைக்கும் கருணை செய்யும் லாலூஜி வாழ்க
ஜெ, உமா, அத்துவானி வாழ்க இல்லை, வாழ்க இல்லை.


8 வரி
கவிதைப்போட்டிக்கு ஏதோ நம்மாலான சிறு பங்களிப்பு...

பரிசு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கவிதையை (?!) எழுதவில்லை நான்... இதை படித்த பிறகாவது
இணைய நண்பர்கள் என்னை செக்கூலரிஸ்ட் (secularist) என்று அங்கீகரித்து, இனி வரும் என் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுப்பார்கள் என்ற நப்பாசைதான்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

குமுதம் ஆசிரியருக்கு:: திருமாவின் அபத்த கருத்துக்கள்


குமுதம் ஆசிரியருக்கு,


திரு.திருமாவளவன் கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை- கலாச்சாரம் என்ற பெயரில் சில கருத்துக்களை இந்த வார குமுதத்தில் குறிப்பிட்டுள்ளார்.. அதை பற்றிய ஒரு பாமரனின் எண்ணம்...

எல்லோரும் ஏதோ ஒரு வேலை பார்க்கிறார்கள். யாரையும் ‘சும்மா’ பார்க்க முடியவில்ல. எட்டுமணிநேர வேலை மட்டும் பார்த்தாலே போதும்.. பொருளாதார வசதி அமோகம். இருப்பினும் இருபது மணி நேரம் உழைக்கிறார்கள் இந்தத் தமிழர்கள்.

இதன் மூலம் கனேடிய 'தமிழர்களை' புகழ முயற்சிக்கிறாரா... மேலை நாடுகளின் பொதுவான வேலை முறை 'ஒரு மணிநேரத்துக்கு இவ்வளவு சம்பளம்' என்ற அளவில் இருக்கும்.. ஆக 8 மணி நேரமோ 20 மணிநேரமோ உழைப்புக்கேற்ற காசு கிடைக்கும்... மாதச்சம்பளம் வாங்குபவர்களுக்கு comp time off என்ற முறையில் அதிக உழைப்புக்கு ஏற்ற விடுமுறை கிடைக்கும்... சில நேரங்களில் 'குறிக்கோளை அடையவேண்டும்' என்பதற்காக சலுகைகள் எதுவுமில்லாமலும் ஒரிரு மாதங்கள் ஒரு சிலர் அதிக நேரம் வேலை பார்க்கலாம்.. ஆனால் ஒரேடியாக - கடின உழைப்பாளிகள் என்ற தோற்றம் தர - 20 மணிநேரம் உழைக்கிறார்கள் என்று சொல்வது அபத்தமாக இல்லையா.. இவர்கள் குடும்பம் குட்டிக்களுக்காக எவ்வளவு மணிநேரம் செலவிடுகிறார்கள்.. தூங்குகிறார்களா...

மக்கள் தொகையில் கறுப்பர்களுக்கு இணயாக தமிழர்களும் இருக்காங்க. இருப்பினும் பிரச்னகள் இல்ல.

கறுப்பர்களுக்கும் தமிழர்களுக்கும் எதற்கு ப்ரச்னை இருக்க வேண்டும்... இல்லை உலகின் வேறு பகுதியில் எங்காவது ப்ரச்னை இருந்து இங்கு மட்டும் இல்லாமல் இருக்கிறார்களா? பொதுவாக தமிழர்களால் எங்குமே ப்ரச்னை இல்லை என்பதுதான் உண்மை (தமிழ்நாட்டை தவிர என்று வேண்டுமானால் சொல்லலாம்)

நயாகராவை அடைந்தபோது நன்றாக இருட்டி விட்டது. இரவில் நிறய காதல் ஜோடிகள் நயாகராவில் குதித்து தற்கொல செய்து கொள்வதால், மெயின் கேட்டை மூடியிருந்தார்கள். அதனால் உள்ளே செல்ல முடியவில்ல.

நயாகரா அருவி அரசின் பூங்காத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது... அருவியை சுற்றி இருக்கும் பூங்கா, அருவி அருகில் செல்ல இயக்கப்படும் தனியார் படகுகள், அருவியின் மீது அடிக்கும் வண்ண விளக்குகள் என்று எல்லாவற்றிற்கும் ஒரு வேலை நேரம் உள்ளது... கனடா பகுதியில் இருந்துதான் சக்தி மிகுந்த வண்ண விளக்குகள் அருவியின் மீது ஒளிபாய்ச்சும்.. இரவில் விளக்கு அணைக்கப்பட்ட பிறகு அருவியை பார்த்தால் இருட்டில் என்ன தெரியப்போகிறது.. அருவியின் மீது கயிறு கட்டி நடந்து சாகசம் செய்த போது தவறி விழுந்தவர்கள், பீப்பாயில் உட்கார்ந்து அருவியில் இருந்து குதித்த போது அடிபட்டு இறந்தவர்கள் என்றுதான் இறந்தவர்கள் பட்டியல் இருக்கிறதே தவிர நிறைய பேர் நயாகராவில் தற்கொலை செய்தார்கள் என்பதற்கான புள்ளிவிபரம் இல்லை. மேலும் தற்கொலை செய்பவர்கள் இரவில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிப்பார்கள் என்பது நகைப்புக்கிறிய விஷயமாக படுகிறது... பகலில் விழுந்தால் தடுக்க அரசாங்கம் என்ன செய்கிறதாம்..

மேற்கத்திய கலாசாரம் அவர்களிடம் எந்தத் தாக்கத்தயும் ஏற்படுத்தவில்ல. பட்டுச் சேலை, வேட்டி கட்டி ஜொலிக்கிறார்கள். தமிழர் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லல. சிறுவர், சிறுமியர் பரதநாட்டியம், தெருக்கூத்து தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

போகிற போக்கை பார்த்தால் அவர்கள் அரிசி சோறு சாப்பிடுகிறார்கள், வீட்டில் தமிழில்தான் பேசுகிறார்கள், தூங்கும் போது புலம்பினால் கூட தமிழில்தான் புலம்புகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்படும் போலிருக்கிறது

கனடா முழுவம் சுற்றியபோது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது... தமிழ்நாட்டை விட கனடாவில் தமிழுணர்வு அதிகமிருக்கிறது.

மேற்சொன்ன இந்த ஒரு கருத்துதான் என்னை இக்கடிதம் எழுத தூண்டியது... "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி" என்று ஒரு சொலவடை உண்டு... மாறுதலை கண்டு ஆச்சரியத்தில் பிரமிப்பவர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள்... கனடாவில் தமிழுணர்வு சிறப்பாக இருக்கிறது என்று சொன்னால் பத்தாதா? எப்போது யார் எந்த வெளிநாடு போனாலும் திரும்பி வந்து 'தமிழ்நாட்டை விட அங்கே தமிழுணர்வு சிறப்பாக இருக்கிறது' என்று, என்ன உளறல் இது... எப்படி கண்டுபிடிக்கிறார்கள் இதை...


வெளிநாட்டில் தங்களை அழைத்தவர்கள், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் என்று மிகச்சிலரோடு பேசிவிட்டு, சிலரின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு அவர்கள்தான் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதி மாதிரியும் அவர்கள் வாழ்க்கைமுறைதான் தமிழர்களின் வாழ்க்கை முறைமாதிரியும் நினைத்து பொத்தாம்பொதுவாக தமிழ்நாட்டோடு ஒப்பிடுவதை ஒரு வியாதியாகவே வைத்திருக்கிறார்கள்...

இவர்கள் மற்ற நாட்டை பற்றி "அதிகமாக" புகழ்வதை எப்போது நிறுத்தப்போகிறார்கள்... நல்ல விஷயங்களை உள்ளது உள்ளபடி பாராட்டத்தெரியாதா.. ஒரு சுவைக்காக "அதிகமாக்கப்பட்டது" என்றால், அதிக மக்களை சென்றடையும் இது போன்ற செய்திகளுக்கு ஒரு வரைமுறை இல்லையா? எப்போதும் எதற்கெடுத்தாலும் நம் நாட்டோடு ஒரு ஒப்பீடு எதற்கு.. அமெரிக்க/கனடா அரசியல்வாதிகள் இவர்களை போல் மூன்றாம்தர அரசியல் செய்யாமல் கண்ணியமாக அரசியல் செய்கிறார்கள் என்று ஏன் ஒரு ஒப்பீடு செய்வதில்லை இவர்கள்??

****

இக்கடிதம் குமுதம் ஆசிரியருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது... வழக்கம் போல பதிலோ விளக்கமோ எதிர்பார்க்கவில்லை...

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ப.ம.க தமிழ்நாட்டின் Risk - ஒரு Analysis


ப.ம.க தொண்டர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக படங்களும் கொடுக்கப்பட்டுள்ளது


மைனஸ் பாயிண்ட்ஸ்

பொதுக்குழு (மகனும் மருமகளும் அல்ல)








செயற்குழு








(அடுத்த) நகர கழக செயலாளர்கள்























மாங்காய் ம(ண்)டையன் அல்ல... தொண்டர் ஒருவர் தன் கட்சி சின்னத்தை நெத்தியில் - கட்சி போட்ட நாமத்துக்கு பதில் - வரைந்துள்ளார்.








பிளஸ் பாயிண்ட்


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

பெண்களின் வார்த்தைகள் புரியாதோ


சரி
::


ஒரு வாக்குவாதத்தை முடிக்க பெண்கள் உபயோகப்படுத்துவது... சரியான அர்த்தம்: "நான் நினைப்பது சரி, வாய மூடிகிட்டு எடத்த காலி பண்ணு..."

ஒன்னுமில்லை ::


இது ஒரு அறிகுறி. அதாவது புயலுக்கு முன் வரும் அமைதி என்பது அர்த்தம். ஒன்னுமில்லை என்றால் ஒன்றாவது இருக்கிறது என அர்த்தம். இதற்கு அப்புறம் ஆரம்பிக்கும் வாக்குவாதம் (கண்டிப்பாக ஆரம்பிக்கும்) பொதுவாக சரி என்பதாக முடியும்

5 நிமிஷம் ::


அவர்கள் அலங்காரம் செய்து கொண்டே இதை சொன்னால் இதன் அர்த்தம் அரை மணி நேரம். அவர்கள் வேலை எதுக்காவது கூப்பிடும் போது நீங்கள் சொன்னால் இதன் அர்த்தம் 4 நிமிஷம்

பெருமூச்சு ::


இது வார்த்தை அல்ல... அவர்களின் செயல். இதன் அர்த்தம் "நீ ஒரு முட்டாள். உங்கிட்ட பேசி உருப்படியா ஆகப்போறது ஒன்னுமில்லை.. என் நேரத்த வேஸ்ட் பண்ணாம எடத்த காலி பண்ணு"

பரவாயில்லை ::


பெண்கள் உயயோகிக்கும் வார்த்தைகளில் மிகவும் ஆபத்தான வார்த்தை. பரவாயில்லை என்பதன் உண்மையான அர்த்தம் "நீ பண்ணிய தப்புக்கு உனக்கு என்ன தண்டனைன்னு நான் இன்னும் யோசிக்கணும், அதுக்கு அவகாசம் வேணும்" இதனோடு பொதுவாக சரி மற்றும் புருவம் உயர்த்தல் கொசுறாக கிடைக்கும்

உங்க இஷ்டப்படி பண்ணுங்க ::


தொனி எப்படி இருந்தாலும் இதன் அர்த்தம், "பண்ணிடுவியா?" சில அப்பாவிகள் இதை அனுமதி என்று தப்பர்த்தம் பண்ணிக்கொள்வார்கள்... அவர்களுக்கு நம் செய்தி :: (பொழச்சி இருந்தா) ஆழ்ந்த அனுதாபங்கள்..

ஓஹோ ::


ஏதாவது வாக்கியம் ஆரம்பிப்பதன் முன் ஓஹோ என்று ஒரு பெண் சொல்லுவாரென்றால் நீங்கள் செய்ய வேண்டியது... ஓடுங்கள் நடக்க எல்லாம் அவகாசம் இல்லை... ஓடுங்கள்.. இதன் தொடர்ச்சியாக சில நிலையான பொருட்கள் பறக்கும் சாத்தியம் உள்ளது.

நன்றி ::


பெண் நன்றி என்று சொல்கிறார்... ஆச்சரியமோ, மயக்கமோ அடையாமல், மூச்சா போகாமல், பரவாயில்லை (ஆண்களின் பரவாயில்லைக்கு அர்த்தம் பரவாயில்லை மட்டுமே) என்று மட்டும் சொல்லவும்

ரொம்ப நன்றி ::


இதற்கும் சாதா நன்றிக்கும் வித்தியாசம் உள்ளது... இதை சொல்லும் போது தொனி வேறாக இருக்கும். இதை ஒரு பெண் உங்களிடம் சொன்னால் நீங்கள் அவரை மிகவும் காயப்படுத்தி இருக்கிறீர் என அர்த்தம். இதன் தொடர்ச்சியாக ஒரு பெருமூச்சு வேறு வரும். நீங்கள் இப்போது இடத்தை காலி பண்ணுவது உசிதம்

நன்றி: இணைய ஜங்கி.. மொழிபெயர்ப்பு: முகமூடி


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சென்று வருகிறேன்... நன்றி


கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட பல நிகழ்வுகளின் பின்னணியில் மிகுந்த மனவேதனையுடன் இந்த முடிவை எடுக்கிறேன்... ஒரு குடும்பம் போல் பழகிய என்னை, உங்களில் ஒருவனாக கருதிய உங்கள் எல்லாரையும் பிரிவது மிகுந்த வலியை தருகிறது, என்றாலும் என்ன செய்வது... எனக்கு ப்ரமோஷனோடு ட்ரான்ஸ்பர் கிடைக்கிறதே... ஆகவே நண்பர்களே சென்று வருகிறேன்... நன்றி.


இது எங்கள் மேலதிகாரி மாற்றலாகி செல்லும்போது அனுப்பிய மெயிலின் தமிழாக்கம்.

முக்கிய கவனத்திற்கு :: பின்னூட்டப்பெட்டி திறந்துதான் இருக்கிறது... பழக்க தோஷத்துல நீங்க பாட்டுக்கு தனி மடல்ல சோகத்த புழிஞ்சிடாதீங்க... நான் ஆடிக்கு ஒரு தபா அமாவாசைக்கு ஒரு தபாத்தான் தனி மடல பாக்குறது வயக்கம்...


அடச்சே பின்னூட்டத்துக்கு எங்க போவேங்கற டைப்பா நீங்க... ஒன்னியும் கஷ்டப்பட வேண்டாம்... இன்ஸ்டந்த் காபி பேஷ்ட் (ரெடிமேட் பின்னூட்டங்கள்) தயாராகவே உள்ளன...

உங்களின் முடிவு புரிகிறது. முடியுமானால் வேறு எங்கேனும் எழுதினால் தெரியப்படுத்துங்கள்.... அந்த பக்கமே வாராமல் எஸ்கேப் ஆயிப்போம்

போறதுன்னு முடிவாயிடுச்சி... உங்கட படம் ஒண்டை புளொக்கில ஏத்தீட்டுப் போனீங்கன்னா புள்ளங்க பூச்சாண்டி எப்படிம்மா இருப்பாங்கன்னு கேட்டா காமிக்க வசதியா இருக்கும்

ஆரக் கேட்டு நைனா கடைய இஸ்து மூட்றன்னு சொல்ற நீ? இதுக்கு பூட்டு இருக்கா முதல்ல...

பயம் போகலியா, இந்தாங்க ஒரு அருமருந்து :: jack daniels (அ) old monk

நீங்கள் எழுதாமற் போவது (இங்கே வார்த்தை வரவில்லை)... அதற்காக உங்களுக்கு என் நன்றிகள்

எங்கிருந்தாலும் வாழ்க (வெள்ளை சிப்பா, நாலு நாள் தாடி எல்லாம் வைத்து கோப்பையுடன் பாட்டாக படிக்கவும்)

நிலவுக்கு அஞ்சிப் பரதேசியாய் ஆவதும் எலியைக் கொல்லக் பேகான் ஸ்ப்ரே அடிப்பதும் (அதுக்கு வேற மருந்து இருக்கு) சரியா

நானும் உங்களை போன்றே முடிவெடுத்துள்ளேன்.. அதாவது திரும்பி வருவதற்கு

என் வலைப்பதிவுக்கு வந்து போகும் ஒரே ஒருத்தர் நீங்க மட்டும்தான்.. இப்ப நீங்களும் போனா நான் எதுக்கு வலப்பூ எழுதறதாம்.. அதனால நானும் டாட்டா

வழக்கம்போல, "போய் வருக". ;-) எல்லாம் நன்மைக்கே! , எங்களுக்கு

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இப்பத்தான் நாங்க ஹாப்பியா இருக்கோம்

உங்களுடைய ஐந்து ரூபாய் இஷ்டாம்பு ஒட்டிய சுயவிலாசமிட்ட மின்னஞ்சலை எனக்கு கட்டாயம் அனுப்பி வைக்கவும், ப்ளீஷ்

நீங்களூமா ? எனக்கென்னவோ கானாப்பாடல்கள்தான் நினைவுக்கு வருகின்றன... ஆல அஞ்சல பஜாரு நிஜாரு கனியப்பன் முனியப்பன்...

சும்மா தமாசுக்கு... யாரையும் தனிப்பட கிண்டல் செய்வது நோக்கம் இல்லை... யாராவது ஆட்சேபித்தால் குறிப்பிட்ட பகுதியை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். (அட, இது இந்த பதிவுக்கு நான் மனப்பூர்வமாக தர்ற டிஸ்க்ளெய்மர்ப்பா...)

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

பின்னூட்டம் இட்டால் பரிசு கிடைக்குமாம்


பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரின்னு சொல்வாங்க...
நல்லத யாரு சொன்னா என்ன, கேக்கணும்னு எங்க தெருல பொறி உருண்டை விக்கிற முனீயம்மா சொல்லும் (அத நான் எப்படி பின்பட்றேன் பாருங்க) அதுப்படி இந்த பதிவு...

அதாவது உங்கள் வலைப்பதிவில் அதிக பின்னூட்டங்கள் வேண்டுமா? அப்படீன்னா இத கேளுங்கன்னு நம்ம அக்கினிகுஞ்சு சில கருத்த பட்டியல் போட்டுருக்காரு... அவரோட யோசனைப்படி...

ஒரே சமயத்துல ஒரு பதிவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்பு தர முடியாததால... தலைப்புக்கள் இங்கே

'நான் பார்ப்பனவாதியல்லாத தலித்வாதி''
ரஜினிகாந்த் ஒரு பொறம்போக்கு'
'பிரபாகரன் ஒரு போராளி அல்ல, பெருச்சாளி'

மேலும் அவர் சொன்ன யோசனப்படி ::

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

என்று பார்த்த பதிவுகளில் எல்லாம் பதித்திருக்கிறேன்.. நீங்கள் இப்பதிவை படிக்கும் இந்நேரம் உங்கள் பதிவிலும் இருக்கலாம்.. (எத்தன பேரு டின்னு கட்டப்போறாங்களோ தெரியல) இப்ப இந்த பதிவுக்கு அதிக பின்னூட்டங்கள் வரும்னு நம்புறேன்... அதுக்காக சும்மா உக்கார முடியுமா... அதுனால என் பங்குக்கு ஒரு பரிசு அறிவிக்கிறேன்... அதாவது

இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அட்டாச்மெண்டாக அனுப்பி வைக்கப்படும்...

யார் யார் பதிவில் எல்லாம் நான் பின்னூட்டம் இட்டேனோ, அவர்கள் எல்லாம் தயவு செய்து இந்த ஐடியாவை ஒரிஜினலாக கொடுத்தவரை திட்டவும்....

மேலும் உங்கள் வசதிக்காக சில பின்னூட்டங்கள்... நீங்கள் காப்பி பேஸ்ட் செய்ய வசதியாக :

* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...

* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்

* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

வலைப்பூவின் சக்தி - தாஜ் இந்தியருக்கே சொந்தம் என தீர்ப்பு


சென்ற நமது பதிவில் தாஜ்மஹாலுக்கு வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதை சுட்டிக்காட்டி சாட்டையடி கருத்து ஒன்று எழுதியதை நமது பதிவை தொடர்ந்து வாசித்து வரும் லட்சக்கணக்கான வாசக அன்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள்... அந்த செய்தியின் வெப்பம் ஷாஜஹானின் வாரிசுகளை அடைந்திருக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..


அதன் தொடர்ச்சியாக மொகலாய பேரரசின் கடைசி மன்னர் பகதும்ர் ஷா ஜாபரின் வாரிசான மைசுதீன் துசி, இன்று கொடுத்த அறிக்கை யில் "தாஜ் மகால் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சொந்தம்" என்று கூறியுள்ளனர்.

நாளை மறுநாள் நமது வலைப்பூவில் வர இருக்கும் செய்தி ::

"தாஜ் மகால் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சொந்தம்" என்ற அறிவிப்புக்கு காரணமாக இருந்த நமது பதிவை பாராட்டி லட்சக்கணக்கான வாசகர்கள் கடிதத்திலும் ஆட்டோவிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசியிலும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்..


எனினும் விரல் விட்டு எண்ணும் அளவு வாசகர்கள், உங்கள் பதிவால்தான் அப்படி ஒரு அறிக்கை வெளியானதென்பதற்கு என்ன ஆதாரம்... மொகலாய மன்னரின் வாரிசுகளுக்கு தமிழ் தெரியுமா என்றெல்லாம் கேட்டு "காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக" நமது பதிவை சித்தரிக்க முயலுகிறார்கள்...

அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது:: ஒரு கருத்து சொன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான்...

மேலும் நாம் சூடான ஒரு கருத்தை சொல்ல, அதற்கு மறுநாளே அவர்கள் பதிலுரைத்தால், நமது கருத்தின் பாதிப்புதான் அது என்று கருதுவதற்கு இடமிருப்பதாக கருட புராணம் விளக்கும் பத்திரிக்கை தர்மம் ('05 செயின், 03 பவ்யம், 12:07 கக்காகுக்கூகிக்கீ) சொல்கிறது

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

பாராளுமன்றம் என் தாத்தாவுக்கு சொந்தம்


நம்ம ஷாஜகான் கட்டின தாஜ்மகால் சன்னி வக்பு வாரியத்துக்கு சொந்தமாம்... இன்னிக்கி அறிவிப்பு வுட்டுட்டாங்க... தமாசு இல்லப்பு... வக்பு வாரிய தலைவர் ஹபீப் உஸ்மான் மெனக்கட்டு மும்பை, கொல்கத்தா எல்லாம் போயி தகவல திரட்டி இத சொல்லியிருக்காரு... ஷாஜகானுக்கும் வக்பு வாரியத்தும் என்னா உறவுன்னு பின்னாடி சொல்லுவாரு போல...


இத படிச்சங்காட்டி ரொம்ப நாளா எங்கையில் உறுத்திகிட்டே இருக்கற முக்கிய ஆதாரத்த வெளியிடறதா முடிவு செஞ்சிட்ம்பா நானு... அதாவது எங்க தாத்தா இல்ல, அவரு ரொம்ப நாளக்கி முந்தி தில்லில (அப்போ டில்லின்னு சொல்லுவாங்களாம்) பாய் வியாபாரம் செஞ்சி கஷ்டப்பட்டு காசு சேத்து ஒரு குடிச கட்னாராம்... அந்த இடம் அப்ப வெறும் காடு போல.

பின்னாடி ஒரு நாளு பேக்கர்ங்கவரு வந்து, "நீங்க இருக்கற காட்டுல பெரிசா கட்டடம் ஒன்னு கட்டடலாம்னு இருக்கேன்... பில்டிங் கட்டமா இருந்தாலும் ஒரு ஓரமா இருங்கன்னு சொல்லிடுவேன், ஆனா நான் வட்டமா கட்டப்போறேன்.. அதனால எனக்கு உங்க குடிசய குடுத்திடுங்க" ன்னு கேட்டாராம்... அதுக்கு எங்க தாத்தா, உயிரயே குழச்சி கட்டியிருக்கேன்யா அத எப்படிய்யா விப்பேன்னு சொல்ல அவரும் சரின்னு போயிட்டாராம்... தாத்தாவுக்கு வயசானப்புறம் சவுத்ல என்னமோ செயின்டு சார்ஜு கோட்டைன்னு இருக்காமே, அங்க ஜாகைய மாத்திக்கிட்டு வந்திட்டாரு... அப்பால நல்ல வெலக்கி வித்துக்கலாம்னு நெனச்சிருப்பாரு போல, குடிச பட்டாவ பத்தி எங்களான்ட ஒன்னியுமே சொல்லல...

ஒரு நா நாங்க பொங்கலுக்கு வெள்ள அடிக்கலாம்னு பழச கிளருறப்பத்தான் குடிச பத்திரம் கண்ணுல சிக்கிச்சி... அடிரா ஜாக்பாட்டுன்னு நாங்களும் ஆசயா டில்லிக்கி போனா, அங்க எங்க குடிசய காணம்... பாராளுமன்றம்னு ஒரு கட்டிடம்தான் இருக்குது... நாங்களும் என்னான்னமோ சொல்லிப்பாத்தோம், துப்பாக்கி வச்ச காவக்காரங்க எங்கள உள்ளயே உடல... சரி பெரிய எடத்து பொல்லாப்பு எதுக்குன்னு எதுவும் பேசாம வந்திட்டோம்...

அப்புறம் வெவரம் தெரிஞ்ச பெரிய மனுசங்க சிலரு சொன்னாங்க :: அத்துவானி, உமாபாரதின்னு ரெண்டு கில்லாடிங்க இருக்காங்க, இது மாதிரி விசயத்துக்கெல்லாம் அவங்கள பாருன்னு... நம்ம நேரம் அப்பத்தான் ரெண்டு பேரும் இது மாதிரி ஒரு ஆக்கிரமிப்பு விசயத்த ஹேண்டில் பண்ணியிருப்பாங்க போல... நெம்ப கஷ்டப்பட்டும் ரெண்டு பேரயுமே பாக்க முடியல...


இப்ப வக்பு தாஜுமஹால உரிமை கொண்டாடுறத பாக்க சொல்ல, எனக்கும் ஆச ஆசயா வருது... யாராவது பெரிய மனுசருங்க சொல்லுங்கய்யா... வெறும் தகவலுக்கே உரிமை கொண்டாடுறாங்களே, நாங்க பட்டாவோட போராடுறோமே... அட பாராளுமன்றம் கூட வேணாம், அட்லீஸ்ட் எங்க தாத்தா பேர்ல இருக்கற பட்டா நிலத்தயாவது எங்களுக்கே திருப்பி தருவாங்களா...

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சைக்கோ பற்றி பேசியது போதும்


ஆபாச பின்னூட்டங்கள் நிற்கும் நேரம் நெருங்கிவிட்டது... அதை பற்றி பார்க்கும் முன் ஒரு விஷயம்...


ஆபாச பின்னூட்டங்களை பற்றி நிறைய பேசியாகிவிட்டது... இதை பற்றிய விவாதங்கள் இன்னும் தொடருவது தமிழ் வலைப்பூ உலகிற்கு ஒரு பின்னடைவாகவே இருக்க முடியும்... இந்த விஷயத்தை பற்றி நிறைய பேசுவதால் ஒருவித சலிப்பு நிலையே வளரும். இந்த பின்னூட்டங்கள் தந்த அலுப்பினால் சிலர் சிலகாலம் ஓய்வெடுக்கவும் சென்று விட்டனர்...
குழுவாக சில விஷயங்களை பேசுபவர்கள், அசிங்க பின்னூட்டங்கள் வந்த போது ஏன் ஒன்று சேரவில்லை என்ற கேள்வி இப்போது கேட்கப்படுகிறது... ஒன்று சேர்ந்து என்ன செய்வது...

எனக்கும் அசிங்க பின்னூட்டங்கள் வரத்தான் செய்கின்றன... வைகோ பற்றிய (கவனிக்க: வைகோ பற்றிய..) பதிவில் ரஜினிகாந்த என்ற நாய் 37 முறை ஒன் பாத்ரூம் சென்றிருந்தது... சுவர் கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பது நாயின் குணம்... அதற்காக அதே வேலையை நாமும் செய்ய முடியுமா...
எப்போது அசிங்க பின்னூட்டங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் அதை அடையாளம் ஒன்றும் விடாமல் நான் அழித்து விடுகிறேன்... அந்த பின்னூட்டங்கள் கிஞ்சித்தும் எனக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை... நாயின் மூச்சா அளவுதான் அதற்கு மதிப்பு... ஆனால் என் பதிவின் கதை வேறு... என் பதிவை என் நெருங்கிய வட்டாரம் யாரும் படிப்பதில்லை போல் தெரிகிறது (இவனெல்லாம் என்னத்த எழுதி கிழிச்சின்னு நினைக்கிறாங்களோ என்னவோ... மேதைகளை மதிக்காமல் என்னடா சமுதாயம் இது... சரி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... )

ஆனால் பெயரிலி, உஷா மற்றும் வேறு பல பதிவர்களுக்கு இம்மாதிரி பின்னூட்டங்கள் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்... ஒரு சிலரின் அடையாளம் ஒரு பெரிய வட்டாரத்தில் அறியப்படுகிறது... மேலும் சிலரின் சொந்தக்காரர்கள் அவர்களின் பதிவை படிக்கும் போது அவர்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்ற எண்ணமும் வருத்தம் தரும் விஷயம்... அப்பொழுதெல்லாம் அவர்கள் தனது பின்னூட்ட வசதியை தற்காலிகமாக செயலிழக்க வைக்கலாம்... பெயரிலி இப்போது தற்காப்பு அரண் சிறப்பாக அமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்...


இதில் பேசப்படும் இன்னொரு விஷயம் privacy statement பற்றியது... இதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து... என் பதிவில் stat counter இருக்கிறது... பெரும்பாலானவர்களின் பதிவில் இது இருக்கிறது... அதை ஆராய்ந்தால் ip address கிடைக்கும்... ஆனால் அதை பொதுவாக நான் ஆராய்வதில்லை... மேலும் google, yahoo ஆகிய சேவை அமைப்புகள் ip address சேமிக்கின்றன... மேலும் உங்கள் நண்பருக்கு நீங்கள் e-mail அனுப்பினால் கூட உங்கள் ip address அவரை சென்றடைகின்றது... ஆகவே அதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ள தேவையில்லை...


உங்கள் PC hack செய்யப்படலாம் என்று நினைப்பீர்களேயானால் zone alarm போன்ற இலவச firewall சேவைகளை பயன்படுத்துங்கள்... மேலும் ad-aware முதலிய spam blocking tool, இலவசமாக கிடைக்கும் anti-virus tool ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.... முக்கியமாக உங்கள் இ-மெயிலுக்கு உங்கள் தனித்தகவல் (பாஸ்வேர்டு மற்றும் மற்ற தகவல்கள்) வேண்டி ஒரு செய்தி வந்தால் அதை நம்பாதீர்கள்... முக்கியமாக உங்களுக்கு தெரியாதவரிடமிருந்து மெயில் வந்தால், அதில் இணைப்பு இருந்தால் அதை திறக்காதீர்கள்...


இப்பொழுது ஆபாச பின்னூட்டங்கள் நிறுத்தம் பற்றி...

போன வாரம் googleல் வேலை செய்யும் ஒரு தமிழரின் தொடர்பு கிடைத்தது... இந்த ஆபாசங்களின் செயல்களை திரட்டி அளித்து என் அனுமானங்களையும் கொடுத்திருக்கிறேன். தமிழ்மண பயன்பாட்டினை மெச்சிய அவர், ஒரு சிலரால் பதிவுகளின் பயன்பாட்டில் நசிவு நிலை ஏற்பட்டதை கண்டு வருத்தமடைந்தார்... கண்டிப்பாக இதை ஆராய்வதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செயலாற்றுவதாகவும் உறுதியளித்தார்... நாடு விட்டு நாடு மாறி பொறி அமைக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லையாதலால் குற்றப்புலனாய்வுக்கு புகார்கள் எடுத்துச்செல்லப்படும் என்றார். அவர்கள் செயலபட - அவர்களுக்கு இருக்கும் இதை விட முக்கியத்துவம் அதிகமான வேலைகள் அடிப்படையில்- சில காலம் பிடிக்கும் என்றார்.... ஆக free sites that offer proxy services போன்ற விஷயங்களை கொண்டு சிலர் மத்தாளம் கொட்டலாம், பறை ஒலிக்கலாம், முரசு கொட்டலாம்... ஆனால் என்னதான் hacking பற்றிய விஷய ஞானத்தை புத்தகங்களின் மூலம் அறிந்து கத்துகுட்டி வேலை காண்பித்தாலும் அரசாங்கத்தின் குற்றப்புலனாய்வு துறை கண்களில் மண்ணை தூவ முயன்ற ஜித்தர்களை அது பிடித்த கதையை படித்தால் தெரியும் இந்த ஆள்மாறாட்ட வேலைகள் எல்லாம் குழந்தைத்தனம் என்பது...
ஆபாசத்தார், ஜெயிலில் படிக்க hacking புத்தகங்களுக்கு அனுமதி இருக்கிறதா என்று சிறைத்துறையிடம் விசாரித்து தெரிந்து கொள்ளட்டும்...

நாம் அதுவரை ஆபாச பின்னூட்டங்களை அழிப்போம் அல்லது பின்னூட்டங்களை நிறுத்தி வைப்போம்... ஆனால் சைக்கோ(க்களு)க்கு கொடுக்கும் எந்த செய்தியுமே அதற்கு ஊக்கம்தான் என்பதால் இதுவே அதை பற்றி பேசும் கடைசி பதிவாக இருக்கட்டும்... அது குறித்து பேசுவதை அறவே தவிர்ப்போம்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

வறுமைக்கோடு என்றால் என்ன...


உலக மதிப்பீட்டின் படி தனிநபர் நாள் வருமானம் $1 (தோராயமாக மாதத்திற்கு ரூ.1300) க்கு கீழ் இருந்தால் அவர் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கிறார்... இந்தியாதான் ஏழை நாடாயிற்றே, இந்த கணக்கெல்லாம் நமக்குதவாது.... இந்திய அளவில் 1999-2000 வருடத்தைய மதிப்பீட்டின் படி, கிராமப்புறத்தில் தனிநபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு 327 ரூபாய்க்கு கீழும், நகர்ப்புறத்தில் தனிநபர் ஒருவர் மாதத்திற்கு 454 ரூபாய்க்கு கீழும் சம்பாதித்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வருவார்... இல்லையெனில் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இல்லை...


ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஷேசன் (NSSO) ஒரு மாதம் முழுவதும் ஒரு குடும்பம் செய்யும் செலவின் அடிப்படையில் இந்த கணக்கை எடுக்கிறது... planning commission புள்ளிவிபரப்படி ::

வருடம் ** கிராமப்புறம் ** நகர்ப்புறம் ** மொத்தம் ** சதவீதம்
1973-74 ** 26 .13 கோடி ** 6.00 கோடி ** 32.13 கோடி ** 54.9%
1993-94 ** 24.40 கோடி ** 7.63 கோடி ** 32.04 கோடி ** 36%

மேலே கண்டது வருமானத்தை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கணக்கு.... img crtsy:gbgm-umc.org வறுமைக்கோடு என்பதை உணவு ஊட்ட குறைபாடு (ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 2400 நகரம்/ 2100 கிராமம் Kcal க்கும் குறைவான உணவு ஊட்டம்), கல்வியறிவு, அடிப்படையான மருத்துவ சுகாதாரம், வாழும் காலம் அதிகரிப்பது என்று கொண்டால் இந்த அளவு இன்னும் - கிட்டத்தட்ட 50% அளவு - அதிகரிக்கிறது... துல்லியமான புள்ளிவிவரம் இல்லையெனினும் 50 %க்கும் அதிகமான மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள்... 70 %க்கும் அதிகமான பெண்கள் கல்வியறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு. கிராம மக்கள் நகர்ப்புறத்திற்கு குடிபெயர்வதின் தாக்கம் கிராமப்புற அளவு குறைவதிலும் நகர்ப்புற அளவு அதிகரிப்பதிலும் தெரிந்தாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மொத்த ஜனத்தொகையின் அளவில் ஒன்றும் பெரிய மாறுபாடு இல்லை...

img crtsy:unknown internet source1999-2000 சர்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது... அதாவது 1993-94ல் 36 சதவீதமாக இருந்த வறுமைக்கோடு மக்கள் தொகை 1999-2000ல் 26 சதவீதமாக (26 கோடி மக்கள்) குறைந்து விட்டது என்பதே அது... அட ஒருபக்கம் என்னடா என்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், பட்டினிச்சாவுகள் அதிகரிப்பு, மக்கள் எலிக்கறி சாப்பிடுகிறார்கள் ; மறுபக்கம் என்னடாவென்றால் அரசாங்கத்தின் சீரமைப்பு காரணமாக சதவீதம் குறைந்திருக்கிறது ஏன் இந்த முரண் என்றால் இந்த முறை நிகழ்த்தப்பட்ட சர்வேயின் முறையில் மாறுபாடாம், அதுதான் காரணமாம்...

ஆனால் இனி கவலை இல்லை... வி.வி.ஐ.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பயன் படுத்த தற்போது பயன்பாட்டில் இருக்கும் "ஆவ்ரோ' ரக விமானங்களுக்கு பதில் புது ரக ஜெட் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மூன்று "எம்பரர்" ரக விமானங்களும் (ஒவ்வொன்றும தலா 100 கோடி ரூபாய்), மூன்று "போயிங்" விமானங்களையும் ( ஒவ்வொன்றும் தலா 150 கோடி ரூபாய் ) வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. 14 இருக்கைகள் கொண்ட எம்பரர் விமானங்களை உள்நாட்டு பயன்பாட்டுக்கும், போயிங் விமானங்களை வெளிநாட்டு பயணங்களின் போதும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விமானங்கள் வாங்கப்பட்டவுடன் அமைச்சர்கள் பறந்து பறந்து வறுமைக்கோடு மறைய பாடுபடுவார்கள்...

வறுமைக்கோடுக்கு கீழ் உள்ள மக்கள் நலன் ஒன்று மட்டுமே கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை நடக்க விடாமல் கூச்சலிடும்போது சபை நடக்காத ஒவ்வொரு நிமிடமும் வரி செலுத்துவோருக்கு ஆகும் செலவு $350 (தோராயமாக ரூபாய் 16 ஆயிரம் ஒரு நிமிடத்துக்கு - அரசாங்கம் பாராளுமன்றம் நடக்க ஒதுக்கும் பட்ஜெட் கணக்கின் படி) மட்டுமே என்பதை கணக்கில் எடுத்தால் இவர்களை ஓட்டு பொறுக்கிகள் என்று சொல்வது எவ்வளவு தவறென்று விளங்கும்...

துன்பத்தை தவிர வேறெதுவும் தெரியாத தங்கள் சந்தோஷத்துக்காகத்தான் செப்டம்பர் 7, 1995 அன்று 100 கோடி ரூபாய் செலவு செய்து கல்யாணம் செய்தார்கள் என்பதையும், பாவப்பட்ட பிறப்பான தங்கள் நலனுக்காகத்தான் அரசியல்வாதிகள் ஹைதராபாத் வரை சென்று ஓய்வான மனநிலையில் சிந்திக்கிறார்கள் என்பதும், அய்யனுக்காகவும் கண்ணகிக்காவும் சிலை வைத்து பாடுபடுகிறார்கள் என்பதும், ராமரையும் பாபரையும் கூப்பிட்டு தீர்வு காண முயல்கிறார்கள் என்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள், தார் அடிக்கிறார்கள் என்பதும் தெரியாமல் அதை தெரிந்து கொள்ள நேரத்தை செலவிட்டால் அடுத்த வேளை சோற்றுக்கு வழி கிடைக்காது, கூலி கொடுக்கும் முதலாளி திட்டுவான் என்று வாழும் இந்த மக்களை என்னவென்று சொல்வது...

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

இவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்


வான்புகழ் கொண்ட வள்ளுவம் நூலின் முதல்படியைப் பெற்றிடும் வாய்ப்பினை முத்தமிழ் அறிஞர் நல்கிட, ஜூன் இரண்டாம் நாள் என் நெஞ்சில் இன்பம் பொங்கிய நாள் ஆயிற்று! அமெரிக்க நாட்டில் இருந்து நெடுந் தொலைவுப் பயணித்த களைப்பின் முற்றுகையில் இருந்து விடுபடா நிலையிலும், என் மனதுக்கு நிறைவாகவே உரையாற்றிட முடிந்தது. அடுத்த நாள் காலையில் ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் 82-ஆவது பிறந்த நாள் விழாவில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுத் தலைநகர் தில்லிக்கு விரைந்தேன்.


அரியலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கழகத்தின் உயர்வே தனது உயிர் மூச்சாகக் கருதும் கர்ம வீரர் கலிங்கராஜன் அவர்கள் கொள்கைக்காக வாழ் கின்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது இளவலின் திருமணத்தை என் தலைமையில் நடத்திட பெரிய அளவில் ஏற்பாடு செய்து இருந்தார். நான் காலையிலேயே வந்து சேர முடியாத காரணத்தால் அவைத் தலைவர் ஆருயிர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். எனினும் அரியலூர் மண்டபத்துக்குள் நான் நுழைந்தபோது என் வாழ்த்துகளைப் பெறுவதற்காக மேடையிலேயே மணமக்கள் மாலை வரையிலும் காத்து இருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். எனது வாழ்த்துரைக்குப் பின்னர்தான் கலிங்கராஜனின் முகவாட்டம் நீங்கியது.

அங்கிருந்து விழுப்பணங்குறிச்சிக்கு வந்தேன். உழுத நிலம் போல் ஆயிற்று உள்ளம்! ஞாபகக் கலப்பை கடந்த காலத்தைக் கீறியது. கொள்ளிடம் ஆற்றங்கரையில் தன் மேனியில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு திகுதிகுவென பனைமர உயரத்துக்கு நெருப்பு பற்றி எரித்தபோதும் ஒரு அலறல் சத்தம் கூட இன்றி உடம்பெல்லாம் கருகிய நிலையில் தஞ்சை மருத்துவமனையில், ‘நான் கண்ணை மூடுவதற்குள் வைகோ அண்ணா வந்து பார்ப்பாரா?’ என்ற ஏக்கம் அணையாமலேயே மரணத்தை அணைத்துக் கொண்டானே அந்த இடிமழை உதயன் ஊர் அல்லவா இந்த விழுப்பணங்குறிச்சி. என்னை அறியாமலேயே மனம் பதட்டப்பட்டது. காரை நிறுத்தச் சொன்னேன் தம்பி துரையிடம்.அந்த எளிய கிராமத்தில் இடிந்த இடிபாடாய்க் காட்சி அளித்தது இடிமழை உதயன் பிறந்த வீடு. பக்கத்தில் ஒரு ஓலைக் குடிசை. என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே கதறி அழுதனர் அவனது தாய், தம்பி, ‘காட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். நீங்கள் இந்தப் பக்கமாக வருவதாகச் சொன்னார்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தேன் என்று கூறினார் உதயனின் தந்தை. அந்தக் குடிசையில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தேன். எந்த உதவியும் கேட்கவில்லை அவர்கள். குடி இருக்க ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று என் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். உதயனுக்கு மட்டும் அல்ல - மற்ற நான்கு பேர்களின் குடும்பங்களுக்கும் எவ்விதத்திலாவது உதவுவதற்கு உரிய வேளையைத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது மனம்

பாசமுடன், வைகோ

நன்றி: வைகோ எழுதிய கடிதம் ம.தி.மு.க வலைத்தளத்திலிருந்து. பதிவின் நீளம் கருதி கடிதத்தின் சில பகுதிகள் மட்டும் - பத்தி அமைப்பிலோ எழுத்திலோ எந்த மாறுதலும் இல்லாமல் - கொடுக்கப்பட்டுள்ளது.

இடிமழை உதயன் - வைகோ தலைமை பொறுப்பிற்கு வர ஏதுவாக விடுதலைப்புலிகள் கருணாந்தி உயிருக்கு குறி வைத்திருக்கிறார்கள் என்ற உளவுத்துறை கண்டுபிடிப்பை ஜெயலலிதா சொன்னதும், ஜெயலலிதா மீது முழு நம்பிக்கை கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் (பார்க்க முதல் பத்தி), 'அய்யகோ கொலைச்சதியா' என்று வைகோவை அடிப்படை உறுப்பினர் அந்தஸ்திலிருந்து விடுவித்ததும், தாய்நாட்டின் மேல் பழி என்றாலும் பொறுக்கலாம், தலைவன் மேல் பழியா என்று தீக்குளித்த 5 தொண்டர்களில் ஒருவர்.

கணவனின் சகோதரனின் கொள்கைக்காக நாள் முழுதும் மேடையிலேயே காத்திருந்த அந்த புதுமணப்பெண் - காலமெல்லாம் ரேசன் கடையில் கால்கடுக்க காத்திருக்கும் மக்களை விட கொள்கைக்காக காத்திருக்கும் நாம் எவ்வளவோ மேல் என்று நினைத்திருப்பாரோ?

தீயின் வெப்பம் தன் தோலை கருக்கிய போதும் பின்பு வலியை உணர்ந்து மருத்துவமனையில் காத்திருந்த போதும் இடிமழை உதயன் - கொலைப்பழியை தன்னாலேயே தாங்க முடியவில்லையே, தலைவன் தாங்குவானா, பழி சுமத்தியோர் முகத்தில் மீண்டும் முழிக்க அவன் தன்மானம் இடம் தருமா என்று நினைத்திருப்பானா?

தலை நிமிர்ந்தே பழக்கப்பட்ட தன்மான சிங்கம் மருத்துவமனைக்கு வந்து தனக்காக கண்ணீர் சிந்துவதை கூட விரும்பாத அவன், முன்னாள் தலைவர் சிறையில் பார்த்த சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு முன்னாளோடு இருந்த மலரும் நினைவுகளை மேடை போட்டு கண்ணீர் உகுப்பான் என்று கண்டிருப்பானா?

எல்லா இடத்திலும் கர்ஜிக்கும் தன் தலைவன், வாய் மூடி மௌனியாய், கொடுப்பதை கொடுங்கள் என்று பணிவு காட்டி, தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டும், விழாக்களிலும் வேண்டா விருந்தாளியாய் உதாசீனப்படுத்தப்பட்டும், எதையும் பெரிது படுத்தாமல் மனதுக்குள் மறுகி வாழும் காலத்தை காணுவான் என்று நினைத்திருப்பானா?

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அப்படி போடு அறுவாள (சூன் மாத டாப் 10)


டாப் 10.
நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என் பதற்காகத்தான்; நான் ஒன்றும் அரசியல் ஆதாயத்துக்காக தனி தெலுங்கானா பிரச்னையை கையில் எடுக்கவில்லை. "சமமான ஆந்திரா' கோஷம் போடும், சந்திரபாபு, அடுத்த தேர்தலில் தெலுங்கானாவில் தலித் தான் முதல்வர் என்று வாக்குறுதி அளிக்க தயாரா?' - சவால் விடுபவர் நடிகை விஜயசாந்தி (விஜயசாந்திக்கு நடிக்க தெரியலைன்னு யாருப்பா சொன்னது... இக்கட ச்சூடு...)


டாப் 9. திமுக கூட்டணியில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது. குழப்பம் ஏற்படுத்த நினைப்போரின் செயல்களால் பாமக தொண்டர்கள் ஏமாந்து விடக்கூடாது - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (நம்மால் மட்டும்தான் குழப்பமே ஏற்படும் என்பதால் இதில் நாமே குழம்புவதற்கு ஒன்றுமில்லை)

டாப் 8. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னை சென்ட்ரலில் இராதாகிருஷ்ணன் தலைமையில் 100 பா.ஜ.க வினர் மறியல் செய்து கைதாகினர்... மேலும் தர்மபுரியில் 50 பா.ஜ.க வினர் கைதாகினர் (இப்படி தமிழக பா.ஜ.க வினர் எல்லாரும் ஒரே நாள்ல கைதாகிட்டீங்களே... உங்க கட்சி செய்ல்பாடு இதனால ஸ்தம்பிக்காதா?)

டாப் 7. சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்ள சென்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டவுன் பஸ்சிற்கு தீ வைத்தது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை தேடிவருகின்றனர். (கூட்டணி கட்சியோட கண்டுபிடிப்ப நீங்க செய்யறீங்களே... அவங்க கோச்சிக்க மாட்டாங்களா...)

டாப் 6. இயக்குநர் ராம. நாராயணனின் செல்லக்கிளி என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை காலை திடீரென பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் சென்ற அவர்களை விமான நிலையத்தில் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். (போற போக்க பாத்தா *** போறதுக்கெல்லாம் வழியனுப்ப போவாங்க போலருக்கேப்பா...)

டாப் 5. ஈரோடு அருகே விவசாயப் பண்ணை வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த நான்கு பேரை கிராம மக்கள் வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவரான முத்துச்சாமி என்பவர் எழுமாத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக நிர்வாகி (எவ்வளவு நாள்தாங்க வேலைய ஒரே மாதிரியே செய்யறது... ஒரு மாறுதலுக்கு அதே வேலைய வித்தியாசமா செய்யலாம்னு பாத்தா...)

டாப் 4. விடுதலைப்புலிகளுக்கும், அல்குவைதா தீவிரவாதிகளுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. அல்குவைதா தீவிரவாதிகளுக்கு புளுடோனியம் தேவைப்படுகிறது. இதை கல்பாக்கம் மற்றும் மும்பை அருகே உள்ள டிராம்பே ஆகிய இடங்களில் இருக்கும் அணு உலைகளில் இருந்து திருடுவதற்காக அந்தந்த இடங்களின் அருகே விடுதலைப் புலிகள் ரகசிய முகாம் அமைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று நான் கூறியதையடுத்து ராமேஸ்வரம் பகுதியில் போலீசார் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைத்துள்ள விமான தளத்தை நமது விமானப் படையை அனுப்பி அழிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு நான் கடிதம் எழுதினால் அதை சசிகலா கிழித்து எறிந்து விடுவார். அதனால் தான் பத்திரிகைகள் மூலம் கோரிக்கை வைக்கிறேன் - ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி (நமக்கு வேல வக்காத ஒரே மனுசன் சுசாமிதான்யா...)

டாப் 3. தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பெண்கள் உட்பட 300 பேருக்கு ஆட்டோ ரிக்ஷாக்களை நேற்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார் (அம்மா ஆட்டோ ரெண்டையும் ஒரே செய்தில பாக்குற இதய பலவீனமுள்ள மனுசங்கள கருத்தில் கொண்டு இனி இது போன்ற செய்திகளை ஜாக்கிரதையாக அச்சிலேற்றும்படி...)

டாப் 2. பெட்ரோல் பங்க் டீலர்கள் 5 சதவீத கமிஷன் கேட்பது கேலிக்குரியது - மத்திய பெட்ரோலிய அமைச்சர் மணிசங்கர் அய்யர். (அரசியல்வாதிங்க ரேஞ்சுக்கு சாமான்யர்கள் பேசுறது கேலியாக இருக்கும்னு தெரியாதா)


டாப் 1. மரணமடைந்தோர்க்கு ஆண்டுதோறும் திதி, திவசம் என்ற பெயரால் புரோகிதர் மூலம், அரிசி, காய்கறிகள், காசு பண தட்சணை யெல்லாம் அனுப்புகிறோமே, இறந்தோர் தான் மறு ஜென்மம் எடுத்திருப்பாரே... அங்ஙனமாயின் அவருக்கு புரோகித மந்திரப்படி அனுப்பிய அரிசி, பருப்பு, காய்கறி, பணமெல்லாம் எங்கே போய்ச் சேரும்? யார் வாங்கிடுவர்? - கருணாநிதி (பெரியார் சிலைக்கு மாலை போட்டு கண் மூடி கை கூப்பி தியானிக்கும் அக்கணத்தில் கருணாநிதிக்கு இச்சிந்தனை வந்தது என்பதை சுயமரியாதை உள்ள பகுத்தறிவு கொண்ட தமிழன் நம்ப மாட்டான்)

சூப்பர் டாப். சென்னையில் மோட்டார் வாகனச் சோதனை மையம் அமைப்பது தொடர்பாக நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி முயற்சிகள் எடுத்த போது அதற்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு, கருணாநிதி இத்திட்டத்திற்கான நற்பெயரைத் தட்டி செல்ல முனைகிறார். சாதனைகள் யாவுமே அவருடைய தலையீட்டினால் தான் சாத்தியமாயிற்று போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது அவரது வாடிக்கை -முதல்வர் ஜெயலலிதா (உங்களுக்காவது வெளில சொல்லி மனச தேத்திக்க முடியுது... சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம புழுங்கிகிட்டே சேது சமுத்திர திட்டத்துல யாரோ மனம் கலங்கியிருந்தாங்களாமே... )

கொசுறு. இந்தியாவில் எப்பொழுதுமே பரம்பரை ஆட்சிதான் நடந்து வருகிறது. ஒரே ஒரு குடும்பத்தினர் தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்துள்ளனர். மவுரியர், முகலாயர், கருணாநிதி, சேர, சோழ, பாண்டியர்கள் என ஒரு குறிப்பிட்ட பரம்பரை ஆட்சிதான் இங்கு நடந்திருக்கிறது (கருத்தின் முடிவில் வர வேண்டிய பெயர் கருத்துக்கு நடுவில் தவறாக அச்சடிக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்)

மே மாத டாப் 10
ஏப்ரல் மாத டாப் 10


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

நாய், சிறுத்தை மற்றும் குரங்கு


எஜமானருக்கு ஒத்தாசயா எப்பவும் கூடவே போகும் வேட்டை நாய் ஒன்னு ஒருநா காட்டுக்குள்ள தடம் மாறி போயிடுச்சி... img crtsy:originalbirdart.comதிருப்பியும் வழி கண்டுபிடிக்க அலையிரப்போ சிறுத்தை ஒன்னு தன்னை நெருங்கறத கண்டுச்சி. சிறுத்த கிட்ட மாட்னா காலின்னு நாய்க்கு தெரியாதா என்ன... தப்பிக்கறதுக்கு இப்ப என்னடா பண்ணலாம்னு யோசிச்ச நாய், பக்கத்துல கொஞ்சம் எலும்புத்துண்டுங்க கெடக்கறத பாத்திச்சி... உடனே சிறுத்தைக்கு தன் பின்புறத்தை காட்டி உக்காந்து எலும்பை கடிக்க ஆரம்பிச்சிது... சிறுத்தை நெருங்கவும், 'ங்கொக்கமக்கா... சிறுத்த கறி ருசியாத்தான் இருக்கு, இன்னிக்கி இன்னொரு சிறுத்த கெடச்சா கூட நல்லாத்தான் இருக்கும்' ன்னுச்சி... இத கேட்டவுடனே 'அடடா ஆழம் தெரியாம கால வுட இருந்தேனே... நல்ல வேளையா நூலிழையில தப்பிச்சோம்டா சாமி, மாட்டியிருந்தா என்னா ஆகியிருக்கும்'னு நினைச்சி சிறுத்தை நைசா சைடுல ஒதுங்கிகிச்சி......

இந்த கூத்தயெல்லாம் மரத்துல உக்காந்து குரங்கு ஒன்னு கவனிச்சிகிட்டே இருந்திச்சி...
img crtsy:gakusyu.shizuoka-c.ed.jpகுரங்கு பயங்கர சாணக்கியம்.. இந்த நாய மாட்டிவுட்டுட்டு சிறுத்தகிட்ட நல்ல பேர் வாங்குனா, அடுத்த தடவ சிறுத்தகிட்ட எதுனா காரியம் சாதிச்சிக்கலாம்னு ரோசனை பண்ணிச்சி... உடனே அது சிறுத்தய பாக்க ஓடிச்சி... குரங்கு சும்மாகாச்சிக்கும் அம்மணமா ஓடாதேன்னு நாய்க்கு தோனிச்சி...

குரங்கு சீக்கிரமே சிறுத்தய வளச்சிடுச்சி... மேட்டர சொல்லி தனக்கு ஆதாயமா ஒரு ஒப்பந்தம் போட்டுகிச்சி... சும்மாவே சீறுற சிறுத்தைக்கா, ஒரு நாய் நம்மள ஏமாத்திபுடுச்சே செம கோவம்... 'குரங்கு வா ஏறு எம்முதுகுல, அந்த நாய உண்டு இல்லையின்னு ஆக்கிபுடுறேன்'னு சொல்லி ரெண்டு பேரும் கெளம்பினாங்க...

img crtsy:pbskids.orgகுரங்கும் சிறுத்தையும் கூட்டணி போட்டு வர்றத நாய் பாத்துச்சி... இதுங்க ரெண்டும் சேந்து வேற வருதுங்களே, இப்ப நமக்கு ஆப்பாச்சே, எப்படி தப்பிக்கலாம்னு சட்னு ஒரு யோசனை பண்ணிச்சி... உடனே பழைய மாதிரியே அதுங்களுக்கு எதிர்ப்பக்கமா உக்காந்துகிட்டு "எங்க அந்த அறிவு கெட்ட குரங்கு... ஒரு சிறுத்தைய புடிச்சிகிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா" ன்னு சவுண்ட் விட்டுச்சி...

பின்குறிப்பு :: சமயோசிதம் வேணும்கறதுக்காக இந்த கதய சொன்ன பாட்டி, அப்புறம் குரங்கு கதி என்னாச்சி... சிறுத்தை, நாயெல்லாம் என்னாச்சி... எதுவும் சொல்லல... நானும் கேட்டுக்கல... முக்கியமா நான் சொல்ல விரும்புறது என்னன்னா, இந்த கதையில வர்ற சிறுத்தை, நாய், குரங்கு எல்லாம் நாம மிருகம்னு சொல்வோமில்ல, அந்த விலங்குகள்... இந்த கதை முழுக்க முழுக்க கற்பனைதான்... உயிரோடவோ அல்லது வேற மாதிரியாவோ இருக்கற சிறுத்தை, நாய், குரங்கு எதையாவது குறிப்பால உணர்த்துனா, அது தற்செயலானது, அதுக்கு நான் எந்த வித்ததிலயும் பொறுப்பில்ல...

š இப்பதிவை மின்னஞ்சலிட