ஆளில்லாத ஊரின் ராஜா

அந்த இயக்கத்திலிருந்து போராடினேன்
துரோகி என்றார்கள்
இந்த இயக்கத்திலிருந்து போராடினேன்
தீவிரவாதி என்றார்கள்
பெரிய இயக்கத்தில் சேர்ந்த பின்பே
போராளி என்றார்கள்
கொள்கைக்கு மாற்றானால்
அரசாங்கம் மட்டுமல்ல
அடுத்த இயக்கமும்தான் எதிரிதான்
அடுத்த இயக்க தலைவன் அழிய
உயயோகப்படாத உயிர் எதற்கு,
உரிமை கேட்டு போராடியவன்
சுவரில் மட்டும் தியாகியானேன்
பலியை பார்த்தால் முடியுமா
போரல்லவா முக்கியம்
களத்தில் பாதி
பெயர்வதில் மீதி என்று
காலியானது ஊர்
ஒரு நாள் உரிமையும் கிடைத்தது
முடி சூடியபின் ராஜா கேட்டார்
மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரி
மழையில் ஒன்றும் குறைவில்லை ராஜா
அறுவடை செய்யத்தான் ஆளில்லை
© முகமூடி
*
இது ஒரு மீள்பதிவு.. என்றோ எழுதிய இதை, ஏனோ, இன்று ஆனந்தவிகடனில் புஷ்பராஜாவின் நேர்காணலை வாசித்த பின் மறுபிரசுரம் செய்யத்தோன்றியது. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தைத் துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவரான புஷ்பராஜா கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவத்தால் கைவிடப்பட்ட நிலையில் ஈழப்போராட்டம் குறித்த இரு புத்தகங்கள் எழுதும் முயற்சியில் இருக்கிறார்.
நேர்காணலிலிருந்து :: எண்பதுகளில் தொடங்கி இன்று வரை ஈழத்தில் சகோதர யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 6,000 பேர். சுடப்பட்டும், மின்சாரக் கம்பங்களில் தொங்கவிடப் பட்டும் கொலை செய்யப்பட்ட இந்தப் போராளிகளெல்லாம் யார்? சிங்களர்களா? இலங்கை ராணுவத்தினரா? இல்லை, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகத் தங்களின் வீட்டை, சொந்தங் களைத் துறந்து, ஆயுதம் தரித்தவர்கள்!
தமிழ்ப்பதிவுகள்
மீள்பதிவு - நாய் அழகுதான் கடிக்கும் வரை
சுதந்திரமாம் சுதந்திரம்
அண்டிப்பிழைக்கும் நமக்கெதற்கு
என் பிழைப்பே நாய்ப்பிழப்பு
சுயமென்ன வேண்டியிருக்கு
ஆயிரம் வருடம் அடிமை வாழ்வை
அனுபவித்து வாழ்ந்த என்னை
அவிழ்த்துவிட்டால் என்ன செய்ய
கோண வாலும்
கேன சிரிப்பும்
பொழைப்போட்ட போதுமெனக்கு
ஏற்றுக்கொண்டவனே எஜமான்
எஜமான் சொல்லே வேதம்
அடிபணிந்து காலம் ஓட்ட
போட்டதை தின்று பாதுகாக்க
எவனாயிருந்தால்தான் என்ன
நல்லவனா கெட்டவனாநமக்கெதற்கு கவலை
எஜமானுக்கு முன் நடந்தால்
எலும்பு கிடைக்கும் ரவைக்கு
நியாயமா அநியாயமா
நமக்கெதற்கு சிந்தனை
தலைவனுக்கு எதிரியா
பாய்ந்து பிடுங்கு அஃதே மந்திரம்
மனித பாஷை புரியாதுதான்
எஜமானுக்கு வசவா வாழ்த்தா
நாய் நமக்கு அது எதற்கு
சிரிப்பில்லையா எதிராளி முகத்தில்
முதல் குரைப்பில் நன்றி காட்டு
தேவைப்படின் குரைத்து
அளவாக முறைத்து
அவ்வப்போது வாலாட்டி
அழகென்றே சொல்கிறது ஊர்
எனக்கும் வயதாகும்
என் குரைப்பும் மதிப்பிழக்கும்
குரல் நல்ல காவல் என்ற பார்வை
சகிக்க இயலா ஊளையென்றாகும்
அப்போது ஊரே என்மேல் கல்லெறியும்
*
இருந்தால் போல் இருந்து நேத்து பக்கத்து வீட்டு நாய்க்கு வெறி பிடித்து விட்டது... இவ்வளவு நாள் எப்போதாவது பொத்தாம் பொதுவாக குரைக்கும் நாய் இப்போது சம்பந்தமில்லாமல் எல்லாம் குரைக்க ஆரம்பித்து விட்டது. நாக்கில வெறி நீர் ஒழுக ஊளையிடும் அதன் குரலை கேட்க பாவமாக இருக்கிறது. அதன் வாழ்க்கை முறை பற்றி சிந்தித்த போது விளைந்த வார்த்தைகள் மேலே... இதை கவிதை என்று எவரேனும் சொன்னால் :: அட எனக்கு கூட கவிதை வருகிறதே...
*
டிஸ்கி :: மீள்பதிவு செய்யும்போது பின்னூட்டங்களையும் சேர்த்து போடவேண்டுமா என்பது முன்னோர் நோட்ஸில் சொல்லப்படாததால் வெறும் பதிவு மட்டும் இங்கு மீள்கிறது. பின்னூட்டத்துடன் கூடிய அசல் பதிவு இங்கு
தமிழ்ப்பதிவுகள்
நன்றிக்கடன் - ஈஸ்ட்மென் கலர்
ப்ளாஷ் நியூஸ் :: தமிழக வரலாற்றில் முக்கிய திருப்பமாக வைகோ திமுகவில் இணைந்து விட்டார். (வைகோ கட்சி அல்ல, வைகோவே) அரசியல் வட்டாரம் தீப்பற்றி எரியும் இந்த பரபரப்பான நள்ளிரவு நேரத்தில், அறிவாலயம் வாசலில் நின்றிருந்த மக்களின் கருத்தாக பிரபல நாளிதழில்::
சுப்பிரமணி, அரசு மருத்துவர் :: இன்றக்கும் நாகரீக (?!) அரசியல் நடத்தும் வெகு சில அபூர்வ தலைவர்களில் வைகோ ஒருவர். புலிங்கள மதிமுக வெளிப்படையா ஆதரிக்கும், திமுக வெளிப்படையா ஆதரிக்காதுங்கறது தவிர திமுக மதிமுக இடையே கொள்கை அளவிலயும் ஒரு வித்தியாசமும் இல்லை. எனவே இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்ட இயக்கங்கள் ஒற்றை குழல் பீரங்கியாவது நல்லதுதானே. வைகோ எதற்கு தனியாக கட்சி நடத்தி கஷ்டப்பட வேண்டும். வைகோவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டால் வைகோவின் முடிவு சரிதான்.
கந்தன், டீக்கடைக்காரர் :: இப்ப பாத்தீங்கன்னா, கருணாநிதி அளவுக்கு தமிள்ல வெளையாட இன்ன்னிக்கும் மதிமுகவுலயும் செரி, திமுகவிலயும் செரி ஆள் கெடையாதுங்க.. ஸ்டாலின் கூட்டம் போட்டா, அல்லாரும் தூக்கம் வராம இருக்க நெறைய டீ வாங்கி குடிப்பாங்க, கடைக்கு யாவாரம் நல்லா ஆவும்.... வைகோ பேசினா சும்மா பாய்லருக்கு அடியில வச்ச கரியில வெச்ச கங்கு கணக்கா தீப்பொறி பறக்கும். மயங்காத ஆளே கெடியாது. முன்னாடி தீப்பொறி ஆறுமுகம் வகையறாவும் தீப்பொறி பறக்க பேசும், ஆனா பாதி பேச்சுல ஆடியன்ஸ¤க்கு போதை தெளிஞ்சிட்டா பேஜாராய்டுவாங்கோ. அத்தால நல்லா பேசுற வைகோ திமுகவுக்கு போறது திமுக வளர்ச்சிக்கு நல்லதுதாங்கோ..
பெயர் சொல்ல விரும்பாதவர் (தொழில் வலைப்பதிவாளர் என்றார்) :: வைகோ வெளியேற்றப்படுவதற்கு முன் திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த சக்தி வாய்ந்த தலைவர் அவர்தான். கொலைப்பழி எல்லாம் சுமத்தினாலும் வைகோ வெளியேற்றப்படுவதற்கு உண்மையான ஒரே காரணம் வாரிசு அரசியலை பற்றிய அவரின் விமர்சனம்தான் என்று பாமரத்தனமாக இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். கொலைப்பழியுடன் வைகோ வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் வை. கோபால்சாமி, கருணாநிதி ஆகியோரை சந்தித்த ஒரு அனுபவ கட்டுரை படித்த பின் அது அப்படி இல்லை, ஐ.பி அறிக்கை உண்மை, கருணாநிதி உண்மையிலேயே பயந்திருந்தார் என்பதெல்லாம் தெரிய வருகிறது. நாப்பது நாட்கள் கெடு கொடுத்து வைகோவிடமிருந்து பதில் வராமல் போனதாலேயே வைகோ வெளியேற்றம் நடந்தது என்று தெரிகிறது. ஆக வைகோ தானாகவே வெளியேறி அவரே இணைந்து கொள்வதால், இதில் வெட்கப்படவோ வேதனைப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை.
மதிமுக தொண்டர் :: தலைவர் திமுகவில் ஜாயின் பண்ண உட்கட்சியில எதிர்ப்புன்னு சொல்றாங்கோ... தலைவரோட முடிவுக்கு செயற் குழு, பொதுக்குழு, செகண்ட் லைன் தலைவர்கள்னு யாரும் முட்டுக்கட்டை போட முடியாதுங்க. எங்களது ஜனநாயக கட்சி. ரெண்டாம்கட்ட (ரெண்டுங்கெட்டான்னு படிக்காதீங்க) தலைவர்கள்னு பாத்தா எங்க கட்சியில யாரும் கிடையாதுங்க.. வைகோவோட எல்லா கட்டமும் முடியுது. திமுகவும் பாமகவிலயாவது அடுத்த வாரிசை கோடி காமிச்சிட்டாங்க. எங்க கதிய நெனச்சி பாத்தீங்களா... வைகோ அரசியல் துறவு பூண்டால் மதிமுக கூடாரம் உடனே காலின்னு கவலையா இருந்தோம்... இப்ப கவலையே இல்ல.. நாங்க சந்தோஷமா கூண்டோட தாவிட்டோம். தாய்க்கழகத்துடன் இணைந்ததில் சந்தோஷம்தாங்க.
மண்ணெண்ணய் டின்னோடு இருந்த ஒரு தொண்டர் :: திமுகவுல இருந்து தலைவர அபீட் ஆக்கிட்டாங்கன்னவுடனே அந்த அமீபா முளை ஆட்டு மந்தை கோழைகங்க பாட்டுக்கு தற்கொல பண்ணிகிட்டானுங்க... அவனுங்களுக்கு இன்னும் எதுவும் செய்ய முடீலயே, எதுனா செய்யனுமேன்னு தலைவர் எப்ப பாரு கவலையாவே கீறாரு. தலைவர பாத்து, இங்க பாரு தலைவா, எப்பியோ செத்தவனுங்களுக்காக இப்ப எதுக்கு உனக்கு மனக்கிலேசம். இத்தோட எல்லாத்தையும் மூட்ட கட்டு. இல்லையின்னா என்னயே கொளுத்திகினு சாவேன்னு சொல்லத்தான் சீமெண்ண கேனோட வந்தேன். தலைவரு நல்ல விசயம் பண்ணிட்டாரு. அபீட் ஆக்கின கச்சியிலயே தலைவர சேத்திக்கினாங்கோன்னு தெரிஞ்சா இனி அவனுங்க ஆத்மாவும் சாந்தமாவும்.
*** மனைவி (நேற்று அரசியலுக்கு வந்தவர்) :: ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்து நிற்பதுதான் வைகோவின் நீண்ட கால திட்டமாக இருக்க முடியும் என்பதை குழந்தைகள் கூட சொல்லும். ஆக வெளியே இருந்து கஷ்டப்படுவதை விட உள்ளேயே இருந்து ஆட்டத்தை ஆடுவதே வைகோவின் எதிர்காலத்துக்கு நல்லது. வைகோவின் முடிவு நல்ல முடிவு.
நாஞ்சில் சம்பத் :: மதிமுகவிற்கு திமுக ஓட்டு வங்கியை எந்த விதத்திலும் விட்டு கொடுக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக விருப்பமில்லாவிட்டாலும் வயசான காலத்தில் மிகுந்த மனக்கஷ்டத்தோடு செய்யும் வேலையான, மதிமுகவை விட அதிக தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கும் அந்த கஷ்டமான வேலையை இனி தலைவர் கலைஞர் விட்டொழிப்பார் என்பதை நினைக்கும் போது தளபதி வைகோவின் முடிவை வரவேற்கிறேன்.
எல்.ஜி, செஞ்சியார் கூட்டாக :: மதிமுகவோ திமுகவோ எங்களுக்கு ஒரு வித்தியாசமும் இல்லைங்க. மதிமுகவில் இருந்தால் எப்படியும் வைகோ மனசுத்தி காரணம் காட்டி பதவி வாங்கித்தரப்போவதில்லை. திமுகவிலோ மனதில் இடம் என்று காரணம் காட்டி பதவி தரப்போவதில்லை... ஆக இலவு காத்த கிளி தங்க கூண்டில் இருந்தால் என்ன தகர கூண்டில் இருந்தால் என்ன?
பெயர் சொல்ல விரும்பாத திமுக குட்டித்தலைவர் :: தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சேர்(த்)ந்தாலும் இங்கே அவருக்கு மரியாதை கிடைக்காதுங்க. ரொம்ப கேவலப்படுத்துவாங்கன்னு அதிமுக விற்கு போகாம கொஞ்சமா கேவலப்படுத்துற திமுக கூட்டணியில இருந்த வரைக்கும் கிடைச்ச மரியாதைய விட இப்போ ரொம்ப குறைஞ்சிடும். பேசாம புலிக்கு வாலாக இருப்பதை விடவும் எலிக்கு தலையாகவே இருந்திருக்கலாம் (யோவ், இது பழமொழி... புலின்னு மிருகத்த சொன்னேன், எதுனா சிக்கல்ல மாட்டி வுட்றாத)
அட, எல்லா தரப்பு மக்களையும் பேட்டி எடுத்திருக்கானே, என்ன பத்திரிக்கை இதுன்னு முதல் பக்கத்தை பார்த்தா தினமூடி...
திடுக்கென முழிப்பு வந்தது.. அடச்சே... கனவு... இப்படியா கனவு அலைபாயிறது. முதல்ல இமயமலை பா(ப்)பாவ பாக்கணும். அதுக்கு முன்னாடி ஏன் இந்த கனவு வந்ததுன்னு கொசுவத்திய சுத்தினா...
*
எல்லாத்துக்கும் அந்த அறிக்கைதான் காரணமா இருக்கணும். நேற்று "திமுக கூட்டணியில் இடம்பெற்று அவர்களை வலுப்படுத்த போராடவோம்"னு மதிமுக மீண்டும் ஒரு உறுதிமொழி எடுத்ததா? தொகுதி எண்ணிக்கை, விரும்பிய தொகுதி அப்படீன்னு எதுனா விஷயத்துல அந்தர்பல்டி அடிக்கிறதுக்கு முந்தி இது சம்பந்தமா தலைவர் விட்ட அறிக்கைய படிக்கலாம்னு உக்காந்தேன். அதுல ஒரு துணுக்கு ரொம்ப ரோசனை பண்ண வச்சிடுச்சி.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி கலைஞருக்கு நன்றி தெரிவித்துப்பேசியது 18ம் தேதி காலை பத்திரிக்கைகளில் வெளியாகிய சூழ்நிலையில் மதிமுக கூட்டணியில் நீடிக்கிறதா என்ற கேள்வி சர்ச்சைக்குள்ளானது குறித்து வேதனைப்படுகிறேன் - வைகோ
மேற்கோள் என்னவோ கலிங்கப்பட்டி பள்ளிக்கு கலைஞர் பதவி உயர்வு கொடுத்ததுக்குத்தான்... ஆனா, "குறள் சொல்லப்பட்ட போதும் கூட்டணி குழப்பம் வேதனை அளிக்கிறது" என்று வைகோ சொன்னத பாத்தா, அந்த குறள் திமுக அல்லது கருணாநிதிக்கு அவர் கொடுத்த "மெஸேஜ்/வாய்ஸ்" மாதிரி தோணுச்சி.
செஞ்சோத்துக்கடன் இருக்கே, அது எல்லாத்த விடவும் பெரிய விஷயம் இல்லியா? நமக்கு தெரிஞ்சது ஐஸ்பெர்க் மாதிரி... இன்னும் கருணாந்திக்கும் வைகோவிற்கும் இடையில் இருக்கிற தந்தை-மகன், அண்ணன்-தம்பி பாசத்தில் ஊரு உலகத்துக்கு தெரியாத, இன்னும் ஆயிரம் மேடையில் அழுதாலும் மாளாதுங்கற அளவுல எவ்வளவு கடன் இருக்கோ?
இப்ப அறிக்கை கொடுத்தவுடனே வைகோ கலைஞர பாக்க போவாரு. கோபாலபுரத்து எல்லைய தொட்டவுடனேயே கண்ணுல தண்ணி கட்டும். கருணாந்திக்கும் வைகோவ பாத்தா நா தழுதழுக்கும்... "தம்பி, உன்னிடம் மனம் திறந்து ஒன்று கேட்க விரும்புகிறேன்... உன் ஆதரவு பொதுவாக திமுக கூட்டணிக்கா அல்லது அண்ணன் தலைமையிலான திமுக கூட்டணிக்கா? ஒரு வேளை இந்த தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெற்று நான் மீண்டும் பதவிக்கு வந்தால், என் உடல் நிலை காரணங்களால் சில மாதங்களிலேயே ஓய்வு பெற வேண்டும் என்று இப்போதே மருத்துவர் குழு சொல்லிவிட்டது... அந்நிலையில் உன் தம்பி ஸ்டாலின்தான் முதல்வராக திமுக ஓடத்தை திறம்பட வழிநடத்த வேண்டும் என்று திமுக பொதுக்குழு, செயற்குழு மற்ற எல்லா குழுக்களும் நான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல கேட்காமல் ஏற்கனவே தீர்மானமும் போட்டு விட்டார்கள்.
அப்போதைய நிலையில் கருணாநிதி தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதுதான் மதிமுகவின் "இலட்சியமே" தவிர ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் அல்ல என்று சொல்லி நட்டாற்றில் விட்டுவிடுவாயா? அல்லது,
(வளர்ப்பு) மகன் தந்தைக்காற்றும் உதவி அவன் (ரத்த) மகன்
முதல்வராய் பாராள்கிறான் எனும் சொல்
என்ற குறளுக்கேற்ப உன் இளவல் - என் மகன் ஸ்டாலினுக்கும் உன் நன்றிக்கடனை நீட்டிப்பாயா? இதனை உணர்ச்சிக்குவியலாய் இருக்கும் இப்போதே சொல்" இந்த பாசக்கேள்விக்கு வைகோ என்ன பதில் சொல்வாருன்னு ரோசனை வரதுக்கு முந்தியே தூங்கிப்போய்ட்டேன். அப்ப வந்ததுதான் இந்த திடுக் கனவு.
தமிழ்ப்பதிவுகள்
கொறிக்க
(வழக்கம் போலவே) இதையும் ஆந்திரா தட்டிகிட்டு போனதை பற்றி ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இந்தியாவின் முதல் பெரிய சில்லுத்தொழிற்சாலை ஆந்திராவில் அமையும்னு சொல்லிட்டாங்க. மூணு பில்லியன் டாலர் ப்ராஜக்ட். உடனடியா 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் பல ஆயிரக்கணக்கானவுங்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு. வரும் வருடங்களில் இந்த முக்கிய தொழிற்சாலையை நம்பி பல சிறு தொழில்சாலைகள், அதன் மூலம் தொழில் மூலதனம், லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு எல்லாம் ஆந்திராவுக்கு ஸ்வாகா.
சுருக் விஷயங்கள் ::
1. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்றும் போட்டியில்... தமிழ்நாடு இதில் அக்கரை காண்பிக்காததால் மற்ற விஷயங்களை கருத்தில் கொண்டு ஹைதராபாத்தை தேர்ந்தெடுத்தோம் என்கிறார் semindia தலைவர்.
2. ஹைதராபாத்தில் அமையப்போகிறது என்ற அறிவிப்பை பெங்களூரில் அறிவித்தது தமிழக அமைச்சர் தயாநிதி மாறன்.
3. இந்த நிருபர் சந்திப்பு முழுவதும் semindia தலைவர் அகர்வால், தனது ஆலோசகர் மற்றும் முதலீட்டாளர் கொண்டமூரி, மென்பொருள் பூங்கா பி.வி.நாயுடு மற்றும் தனது ஆலோசகர் சி.எஸ்.ராவ் ஆகியோருக்கே மேடையில் முக்கியத்துவம் கிடைக்கச்செய்து தான் அடக்கியே வாசித்தாராம் ஆந்திர முதல்வர் ராஜசேகர் நாயுடு... ஹும்.
*
மேற்படி வெவகாரமெல்லாம் கிடக்கட்டும்... இத விட முக்கியமான வேற ஒரு விசயத்துக்காக மதுரைக்கார வக்கீலு ஒருத்தரு தலைக்கு மேல கோவம் வந்து ஷில்பா, ரீமா, தமிழ்முரசு மேல எல்லாம் கேஸ் போட்டுட்டாரு. பாண்டியன் காலத்துல இருந்து இன்னி வரய்க்கும் மதுரக்காரய்ங்களுக்கு கேஸுன்னா அம்பூட்டு பிரியம்...
அதாவது தமிழ்முரசுல வந்த ஷில்பா ஷெட்டி, ரீமா சென் ரெண்டு பேர் படமும் கவி(ர்)ச்சியா இருக்காம். அத பாத்தா பசங்க மனசு கெட்டுப்போயிருமாம். அத என்னான்னு விசாரிக்கணுமாம். அவங்கள மார்ச் 10 அன்னிக்கி பாத்து என்ன ஏதுன்னு கேக்கறேன்னு நீதிபதியும் சம்மன் அனுப்பிட்டார்.
சரி, அவங்க போட்டோவ எங்கியோ புடிச்சி தமிழ்முரசுல படமா போட்டுட்டான், அதுக்கு ஷில்பாவும் ரீமாவும் வந்து என்ன செய்யணுமாம்... இந்த மாதிரி கேஸ எடுத்துகிட்டு எவனாவது நீதிமன்றத்துக்கு வந்தா, சர்தான் போயி வேற எதுனா ஒளுங்கான பொளப்ப பாருய்யான்னு சொல்றத வுட்டுபோட்டு நம்ம நீதிபதிங்களும் உடனே நடிகைங்க நேரில் ஆஜராகணும்னு ஒரு கட்டளைய போட்டுற்றாங்க...
சரி எனக்கும் மாஸ்க் நாயகி காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ், மிஸஸ் ஸ்மித் ஆன்ஜலீனா ஜோலியெல்லாம் பாக்கணும்னு ஆசையா இருக்கு. அவங்க என் மனச கெடுக்கறாங்கன்னு சிலுக்குவார்ப்பட்டி மாஜிஸ்திரேட்டுகிட்ட பிராது கொடுத்திருக்கேன். அவரும் அவங்க ரெண்டு பேரும் நேர்ல ஆஜராயி வெளக்கணும்னு கட்டளை போடுவாரு... கோர்ட்டுக்கு வர்றப்போ அவங்கள பாக்க பிரியப்படுறவங்க ஜோன்ஸுக்கு 10 ரூவா, ஜோலிக்கு 20 ரூவான்னு முன்கூட்டியே பணத்த கட்டி சீட்டு வாங்கிருங்க.. நீதிபதி, வக்கீல், போலீஸ் வேலை பாக்கறவங்களுக்கு தரிசன கட்டணத்துல தள்ளுபடி உண்டு...
(அந்த ஷில்பா படம் இதுவாத்தான் இருக்கணும். மனசு கெட்டுப்போற வாய்ப்பு இருந்தா சுட்டிய க்ளிக்காதீங்க. ரீமா படம் கண்டுபிடிக்க முடியல)
*
நீங்க ஜோசியம் பார்த்துவிட்டு, அதன்படி கட்சி ஆரம்பிச்சு இருக்கிறதா மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்காரே?
‘‘அய்யா, நான் ஜோசியம், ஜாதகம்னு கொஞ்சம் நம்பிக்கை உள்ளவன்தான். இல்லைனு சொல்லமாட்டேன். எங்களுக்கு எதிலும் நம்பிக்கை இல்லைனு சொல்லிட்டு, திருட்டுத்தனமாகப் போயி சாமி கும்பிடுவது, திருட்டுத்தனமாக ஜோசியம் பார்க்கிறது என் பிழைப்பு கிடையாது. உங்களுக்கு வேண்டுமானால் இது கைவந்த கலையாக இருக்கலாம். இதைப்பற்றி அவர் திரும்பத் திரும்பப் பேசினால், அவரைப் பற்றி புட்டுப்புட்டு வைப்பேன். ஏப்ரலுக்குப் பிறகு, அவர் முகத்திரையைக் கிழிப்பேன். யார், யார் எந்தக் கோயிலுக்குப் போறாங்க, வர்றாங்கன்னு எனக்குத் தெரியும். நீங்க திருச்சி மாநாட்டுக்கு வாழையிலை போட்டு, சாமி கும்பிட்டுப் பூமிபூஜை நடத்தலையா? கே.என்.நேரு எலுமிச்சம்பழத்தைச் சுத்திப்போடலையா? வெள்ளிக்கிழமை பத்தரை பன்னிரண்டு ராகுகாலம். போட்டியிடுகிற விண்ணப்பத்தைப் பத்துமணிக்குள்ளே வாங்கி, அடுத்து பன்னிரண்டு மணிக்கு விண்ணப்பம் வாங்கலையா? ஏன் உங்களுக்குத்தான் ராகுகாலம், எமகண்டம் எதுவும் கிடையாதே. அதெல்லாம் எங்களை மாதிரி சாதாரண ஜனங்களுக்குத்தானே!’’
- விஜயகாந்த், குமுதம் 15.02.06
*
‘புயலுக்குப் பின்’ வாழ்க்கை எப்படியிருக்கு?
‘‘குஷ்புக்கு அசாத்திய துணிவு. என்னோட சைடில் அவங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் அவங்களுக்குப் பக்கபலமாக நின்னேன். சாஞ்சிக்க தோள் கொடுத்தேன். சொல்லாத ஒரு விஷயத்தை, ஊதிப் பெரிசாக்கி, பறக்கவிட்டாங்க. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மை ஆக்கப் பிரயத்தனப்பட்டாங்க. எல்லாம் ஓவர். அவங்க டி.வி., நான் ஹீரோன்னு வாழ்க்கை திரும்பி ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு சின்ன அளவில் சறுக்கினால், பின்னாடி சிரிக்க ஆயிரம் பேர் இருக்காங்க என்ற பயம் முதுகில் குறுகுறுப்பாக ஓடிக்கிட்டு இருக்கு.
- சுந்தர் சி., குமுதம் 15.02.06
*
பா.ம.க., மோனோ ரயில் திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பது ஏன்?
‘‘மோனோ ரயில் என்பது நமக்குப் புதிது. இந்தியாவில் இது எங்கும் இல்லை. மோனோ ரயிலுக்கான பாதையை எப்படி அமைப்பது என்று நமக்குத் தெரியாது. மோனோ ரயிலை நாம் தயாரிப்பதில்லை. வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். அதை எப்படி இயக்குவது, பராமரிப்பது என்பதும் நமக்குத் தெரியாது. தப்பித் தவறி ஏதாவது ரிப்பேர் என்றால்கூட, அதைச் சரி செய்ய வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டும். இப்படி நமக்கு எள்ளளவுகூட பரிச்சயம் இல்லாத ஒரு திட்டத்தைத் தமிழக அரசாங்கம் கொண்டு வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என்று கேட்கிறார்கள் பா.ம.க. தலைவர்கள்.
மக்கள் கருத்து :
கோவிந்தராஜ் (பெட்டிக்கடைக் கடைக்காரர்): ‘‘இது வெளிநாட்டு விஷயம். நமக்குத் தேவையான்னு கேக்குறாங்க. பஸ், ரயில், விமானம்னு எல்லாமே வெளிநாட்டு விஷயம்தான். அதை நாம கத்துக்கிட்டு ஓட்டலையா? அதுமாதிரிதான் மேனோ ரயிலும்.’’
குமுதம் 15.02.06
*
பி.ஜீவன், திண்டுக்கல் :: ஒரு புதிய திரைப்படத்தில் திருமாவளவனின் ‘போஸ்’களைப் பார்த்தீர்களா? அரசு பதில் :: சில புலிகள் இருந்ததாம். சில அதைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டதாம்.
குமுதம் 15.02.06
*
வி.இராசு, திருப்பத்தூர் :: ‘கேபிள் டி.வி.க்களை அரசுடைமை ஆக்குவதை வரவேற்கிறேன் என்கிறாரே கருணாநிதி?
அரசு பதில் :: வேறு வழி?
குமுதம் 15.02.06
*
அரசு ஊழியர்களுக்குச் சலுகைகள், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை என்று, முதல்வர் வாரி வழங்குவதெல்லாம் தேர்தல் பயத்தினால்... என்று கிண்டலடிக்கிறாரே கருணாநிதி?
எங்களுக்குத் தேர்தல் ஜுரமோ, பயமோ துளிகூட கிடையாது. அதுவும் எங்கள் அம்மாவுக்குப் பயமா? (சிரிக்கிறார்) துணிச்சல்தான் அவரது மிகப் பெரிய பலம். நிதிநிலை சரியில்லாதபோது கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தினோம். சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டார் முதல்வர். குடும்ப வரவு செலவைப் பார்த்துக் கொள்ளும் ஒரு தாய், அப்படித்தானே செய்வார்! ஒரு கட்டுக்குள் வந்ததும், இப்போது செய்யவேண்டியதைச் செய்கிறார் அம்மா.
எங்களை நக்கலடிக்கும் கருணாநிதி, எந்தப் பதவியிலும் இல்லாமல் வாராவாரம் அடிக்கல் நாட்டுகிறார். சேது சமுத்திரத் திட்டம், தேசிய நெடுஞ்சாலை, பாலங்கள் என்று மத்திய அரசின் திட்டங்களைத் தன் கட்சியின் சொந்தத் திட்டம் போல அறிவிக்கிறார். முழுப்பக்க விளம்பரத்தில் சிரிக்கிறார். இதெல்லாம் மட்டும் தேர்தலுக்காக இல்லையா? பொழுது விடிந்து பொழுதுபோனால் அம்மாவைத் திட்டி அறிக்கை விடுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். சரி, சட்டசபையில் வந்து மக்கள் பிரச்னையைப் பேசுங்கள் என்றால் பதுங்குகிறார்!
- அமைச்சர் வளர்மதி, குமுதம் 15.02.06
*
விரைவில் எதிர்பார்க்கப்படும் பதிவுகள் ::
% குமுதம் காழ்ப்பின் பிண்ணனியில் உள்ள உள்குத்து அரசியல்
% குமுதம் அரசுவின் நியூரான் நெட்வொர்க்ஸ் செயல்படும் முறையில் உள்ள குறைபாடுகள்.
% குமுதம் ஆர்யர்களின் கைக்கூலியா? அலசுகிறார் திராவிட திலகம்.
% வளர்மதி என்பவர் ஆர்ய சூர்ப்பனகை.. விளக்குகிறார் மேட்ரிக்ஸ் ஹீரோ.
தமிழ்ப்பதிவுகள்
சுழல்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

குஷ்புவும் நானும்

ஏன் உங்களையே மீண்டும் மீண்டும் தாக்குகிறார்கள்?
‘‘பழைய பிரச்னையில் நான் கவலைப்பட்டது, உடம்பு சரியில்லாமல் இருந்த குழந்தையை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போக முடியலை என்கிற வருத்தம்தான். தூங்கிட்டு இருந்தால் எழுப்பி, விஷயம் இதுதான் என்று சொல்லலாம். ஆனால், தூங்குகிறவன் மாதிரி நடிக்கிறவனை யாராலும் எழுப்ப முடியாது. அதனால் எதுவேண்டுமானாலும் சொல்லட்டும் என்று ஒரு கட்டத்தில் அமைதியாகிட்டேன். அப்புறம் சிம்பிள் லாஜிக் இருக்கு. எளிதான உண்மையும் அதுதான். அதாவது, எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக் கொள்கிற போக்குதான். இதற்காக கண்ணீர் வடித்துக் கொண்டு மூலையில் உட்காரமுடியாது. முன்னிலும் அதிகமாக சுறுசுறுப்பு அடைந்திருக்கிறேன். தெளிவாகியிருக்கிறேன். என்னை யாரும் இனி அசைத்துப் பார்க்க முடியாது.’’
உங்களை வேதனைப்படுத்தியதின் உச்சம், நீங்கள் இந்தத் தேர்தலில் அரசியலுக்கு வருவதாக இருக்குமா?
‘‘அவசியம் இல்லை. social reformer ஆக இருக்கணும் என்றுகூட அவசியமில்லை. குமுதத்தில் பிரார்த்தனைன்னு யாரோ முகம் தெரியாத, அவதிப்படுகிற ஒரு மனுஷனுக்காக, மனம் உருகுவீங்க இல்லையா? அதுமாதிரிதான். சாதாரண மனுஷியாக இருந்து, தினமும் ஒரு நன்மை செய்துகிட்டுப் போய்கிட்டே இருக்கலாம். அதற்கு அரசியல் தேவையாக இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.’’
எப்படி எல்லாவற்றிலும் இருந்து மீள்கிறீர்கள்?
‘‘நீங்க எல்லோரும் குஷ்பு என்ன பண்ணுவாங்களோன்னு கவலைப்பட்டுகிட்டு இருக்கும்போது, நான் லேண்ட் மார்க் போய் என் குழந்தைகளுக்கு புக்ஸ் என்னவெல்லாம் கிடைக்கும்னு தேடிட்டு இருந்தேன். நம்ம சந்தோஷத்தையும் யாரும் அள்ளிக்கிட்டுப் போக அனுமதிக்கக்கூடாது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்திட்டு, நல்ல வாழ்க்கை எனக்குக் கிடைச்சாலும், அதை வேண்டாம் என்று நினைப்பவள் நான். நான் சுந்தரோடு வாழ்வது அன்பும், அக்கறையும் இணைந்து அவரவர் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் ஒரு உறவுமுறை. பகிர்வு. ஒரு கத்தல் இல்லை. கூச்சல் இல்லை. இந்த மனோபாவம்தான் காப்பாற்றுகிறது. சந்தோஷமான குடும்பம் கைகொடுக்கிறது. ஆனால், பெரிய கொடுமை என்னவென்றால், குறிப்பிட்ட டி.வி.யில் செய்தி ஆரம்பிப்பாங்க. அவர்களுக்கு குஷ்புன்னு சொல்லி ஆரம்பிக்கவே தெரியாது. பாவம் ‘தமிழ்ப் பெண்களைப் பற்றித் தவறாகச் சொன்ன குஷ்பு!’ என்று முழங்கித்தான் ஆரம்பிப்பார்கள். என்ன செய்யச்சொல்றீங்க!’’
உங்களைத் தாக்க அவங்களுக்கு என்ன தனிப்பட்ட காரணம் இருக்கு?
‘‘அவர்களுக்கு insecurity, அவங்க சேனலில் ஒரு கேம் ஷோ நடக்குது. என்னோட ‘ஜாக்பாட்’ பெரிய வெற்றி. அதை டி.ஆர்.பி. ரேட்டிங்கில் ஒழிச்சுக்கட்டணும். இப்படி ஏதேதோ இருக்கு. எனக்கும் அவங்களுக்கும் தனிப்பட்ட எந்தப் பிரச்னையும் கிடையாது. யாரையும் எனக்குத் தனிப்பட்டுத் தெரியாது. அவங்களுக்கு என்மேல் ஒரு பிரச்னை என்றால், அர்த்தம் இருக்கு. அதாங்க கேம் ஷோ. அதுதான். வேறென்ன?’’
‘எதையும் சொல்லாமல், இந்தியா டுடே நிருபரையே சந்திக்காமல் இருந்திருக்கலாம் சாமி’னு நினைச்சதுண்டா?
‘‘‘இந்திய டுடே’ கிட்டே சொன்னதை நான் மறுத்ததேயில்லையே. மற்ற பேட்டிகளைத்தானே ‘அப்படிச் சொல்லவில்லை, என்று சொன்னேன். சொல்லாததைப் போடும்போது, சொல்லவில்லை என்றுதானே சொல்லமுடியும்!
உங்க Dimension மாறிப்போச்சு. அறிவுஜீவிகள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். திடீரென்று எல்லாமே மாறியது. எப்படி?
‘‘நான் என்றைக்கும் Selfmade Person. நமக்கு ஒரு பெண் புத்திசாலியாக இருக்கக்கூடாது. எனக்கே பயங்கர சந்தோஷம். பெரிய அறிவுஜீவிகள் கைகொடுத்ததும் இவ்வளவு பெரிய தைரியம் எனக்கு எப்படி வந்ததுன்னு தெரியலை. சமுதாயப் பொறுப்பு அவங்க கையில்தான் இருக்குன்னு சிலபேர் நினைச்சிட்டு இருந்தாங்க இல்லையா, அவங்களுக்கு விழுந்தது அடி. நானே நிறைய மாறியிருக்கேன். பெண்களின் பிரச்னை என்னென்னு கவனிக்க ஆரம்பிச்சிருக்கேன்.’’
நன்றி & முழுமையான பேட்டியை படிக்க :: குமுதம்
*
டிஸ்கி 1 :: மேலே இருக்கும் படத்துக்கும் பேட்டிக்கும், பேட்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாய்களின் பின்புறம் ஆராய்ச்சியாளர் ஒருவரின் படம் கட் ஆகியிருக்கலாம், அல்லது மறைந்து மறைந்து வெளிப்படும் அவர் குணத்திற்கேற்ப மறைந்திருக்கலாம்.
டிஸ்கி 2 :: வேறு பதிவில் நான் சொல்லியிருக்கும் சில வார்த்தைகளை படம் பிடித்து போட்டு நான் சொல்வதையே குஷ்புவும் சொல்வதால் குஷ்புவும் நானும் ஒன்றே என்று ஹைஜாக்கர்ஸின் கிடா வெட்டு மாநாட்டு அறிக்கை வெளிவர இருக்கும் அறிவு சீவி சூழ்நிலையில் (அட டேவுடா) ஒரு ட்ரெயிலர் போல் "குஷ்புவும் நானும்" என்ற தலைப்பு வைக்கப்படுகிறது.
டிஸ்கி 3 :: அறிவு சீவிகளின் சந்தேகத்தின் பலன் என்ற -பெயரில் வெளிவரும் யாருக்கும் புரியாத எழவு நடையை படித்து ஏகப்பட்ட பேர் பொம்மைகளை விடாமல் உடைத்தால் ஒருவேளை நான்தான் குஷ்புவோ என்று எனக்கே சந்தேகம் வந்தால் நான் மட்டுமாவது தெளிவடைய வசதியாக "குஷ்புவின் ரசிகன் என்பதை தவிர குஷ்புவுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை" என்பதை என் பதிவில், நான், எனக்காக மட்டும் ஒரு டிஸ்கியாக விட்டுக்கொள்கிறேன்.
டிஸ்கி 4 :: குஷ்புவுக்கு மட்டுமா நடந்தது எனக்கும்தான் நடந்தது என்று யாருக்கேனும் சொல்ல தோன்றினால் தாராளமாக சொல்லலாம். ஆனால் அது 1000 வார்த்தைகள் தாண்டி இருந்தால் தயவு செய்து அதை உங்கள் பதிவில் வெளியிட்டு ஒரு சுட்டியாக மட்டும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதை மீறி ஒரு பதிவு + அப்பதிவுக்கு வந்த 70 பின்னூட்டம் எல்லாத்தையும் ஒரே பின்னூட்டமாக தந்தால், அதில் குஷ்பு சம்பந்தப்பட்டதை தவிர வேறு விஷயங்களை வெளியிட இயலாது என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்ப்பதிவுகள்
பத்ம வியூகம்

கடந்த வாரம் முகமூடிக்கு கேள்வி, முகமூடிக்கு பதில், முகமூடிக்கு கடிதம், முகமூடிக்கு ஆலோசனை/அறிவுரை, முகமூடியின் முகத்திரை கிழிப்பு என்று ஒரே முகமூடி ஸ்பெஷல்தான்... புல்லரிக்கிறது. அத்தனையிலும் நான் கண்ட ஒரே ஒற்றுமை - அவை யாவும் ஊகங்கள்/எதிர்பார்ப்புகள் அடிப்படையில் அமைந்திருந்தன.
நீங்கள் வலையுலகிற்கு புதியவரா :: எனில் STOP. உடனே போன பதிவுக்கு செல்லுங்கள். சில விசயங்களில் ignorance really is bliss.
M
நான் திருமா பட்டை போட்டு விகடனில் வந்திருந்த புகைப்படத்தை போட்டு ஒரு பதிவு எழுதினேன். அதை எழுதிய பின்புதான் திருமா நாத்திகர் இல்லை என்பது அறிய வந்தது. திருமாவுக்கும் பெரியார் கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பை சரிபார்த்துவிட்டு மீள்பதியலாம் என்று அதை மறைத்து வைத்தேன்.
இதன் தொடர்ச்சியாக தருமி திருமா நெற்றியில் திருநீறு என்று ஒரு பதிவு எழுதுகிறார். மனசாட்சி மழுங்கியவர்களின் பார்வையில் படாமல் போகும் என்று இரு விஷயங்களை அதில் குறிப்பிடுகிறார். அட, தருமியின் மனதை தைத்த, அவரின் மனதில் நின்ற அந்த இரு விஷயங்களை பற்றி அவராவது விரிவாக விளக்கியிருக்கலாம், ஆனால் முகமூடியின் முகத்திரையை கிழிப்பதே பதிவின் பிரதான நோக்கம் என்பதால் அவரும் அவ்விரு விஷயங்களை விளக்கவில்லை.
அட, முகமூடிக்கு மனதில் வேண்டாம், கண்ணில் கூட ஏன் தைக்கவில்லை என்று அவராக யூகம் செய்து ஒரு கேள்வியை கேட்கிறார். முகமூடிக்கு தைத்ததா இல்லையா, ஒரு வேளை வேறு விதமாக தைத்திருக்கலாம் என்றெல்லாம் யோசிககவில்லை. முகமூடிக்கு தைத்தது வேறுவிதமாக :: இனியன் கொல்லப்பட்டதை தமிழ்நாட்டில் யாரும் கண்டிக்காததற்கு காரணம் இனியன் தலித், தாழ்த்தப்பட்டவன் என்பது திருமாவின் வாதம். இனியன் ஒரு அரசியல் கட்சியின் அங்கம். இனியன் கொலை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவா, சொந்த காரணங்களுக்காகவா, உட்கட்சி பூசலா என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது. சரி, அப்படியே தலித் என்பதால் மீடியா புறக்கணிக்கிறது என்று கொண்டாலும் கூட திருமா வேண்டிய அளவு கவனம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நடந்தினாரா? அல்லது நடத்த முயற்சித்து போலீஸ் அனுமதி
கொடுக்கவில்லை என்பதையாவது பதிவு செய்தாரா? போலீஸ் அனுமதி தராதது மக்கள் விரோதம் என்று கூக்குரல் இட்டாரா? ஏதேதோ ப்ரச்னைகளையெல்லாம், தினமும் காலை மாலை இரு வேளை பத்திரிக்கைகளில் வரும் வரை ஆர்ப்பாட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தனது கட்சியின் பொறுப்பாளர், அதுவும் தலித் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீடியா கவனம் பெறும் வகையில் அதை எடுத்து செல்லாமல் வெறுமே "போதிய அளவு" கண்டிக்கவில்லை என்று ஆனந்த விகடனுக்கு ஆதங்கப்பட்டு பேட்டி கொடுப்பதோடு முடித்துக்கொள்வதா? இப்படியெல்லாம் கேட்க முகமூடிக்கு தகுதி இருக்கிறதா? கேட்டால் எடுபடுமா?
இரண்டாவது சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் திருமாவின் பெற்றோர் ஒண்டு குடிசையில் நாட்களை நகர்த்தியது. "ஒரு அரசியில்வாதியின் வீட்டிலா இப்படி" என்று தருமியே ஆச்சர்யம் கொள்கிறார். தருமி கொள்ளலாம், ஆனால் முகமூடி கேட்டால் அதில் இருக்கும் உள்குத்து பார்ட் 1 பார்ட் 2 வெளிவரும்.
என் கண்ணில் தைத்த இந்த விஷயத்தை பற்றியெல்லாம் நான் எதுவும் எழுதவில்லை. சமீப போராட்டங்களின் போது பெரியாரை முழங்கிய திருமாவை நாத்திகவாதி என்று தவறாக நினைத்து இவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று ஆச்சரியத்துடன் ஒரு பதிவை போட்டுவிட்டேன். உடனே விபூதிக்கு முகமூடி ஹோல்சேல் ஏஜன்ஸி எடுத்திருக்கிறாரா? என்று கேட்கிறார். முகமூடி தவறை உணர்ந்து பதிவை தூக்கினார் என்பது உண்மைதான். ஆனால் அது அவர் எழுதிய பதிவு தவறானது என்பதால் அல்ல, திருமா நாத்திகராக இருப்பார் என்ற அபிப்ராயம் தவறாக இருந்ததால். இப்பொழுதும் நான் போட்ட அந்த பதிவில் எந்த தவறும் இருப்பதாக நினைக்கவில்லை. திருமாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று வேறு யாராவது பட்டை போட்டோவோடு பதிவு எழுதினால், தமிழ் கடவுள் வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்ற விளக்கமெல்லாம் கிடைக்கும். நான் எழுதினால் அது கண்களை உறுத்தும் பதிவு.
that said, இங்கே தருமியின் ஒரு முக்கியமான எதிர்பார்ப்பை குறிப்பிடவேண்டும் "திருமாவின் நெற்றியில் இருந்த திருநீற்றைவிடவும் அதில் திருமா சொல்லியிருந்த இரு விஷயங்களே வாசிப்பவர்கள் மனதில் ஏறி இருக்க வேண்டும்" தன்னை போலவே மற்றவர்களும் சிந்தித்து, அதை அவர் போலவே வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இல்லையெனில் அவராக சில யூகங்கள் செய்து கொள்வார். பதிவுகள் என்பது personal diary of free minds/common public என்பது மாறி சிற்றிலக்கிய சம்மேளனமாக மாறி வருகிறது என்பதை பல இடங்களில் நான் பதிவு செய்திருக்கிறேன்.. இங்கேயும் அதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வலையுலகத்துக்கு ஒரே ஒரு தருமி போதும். மற்றவர் அவரவர் பாணியில் சிந்திக்கட்டும், எழுதட்டும்.
அவரின் வாதமான "முகத்திரைக்குள்ளிருந்து எழுதுவதால் மட்டுமே பதிவுகளில் ‘இத்தகைய தரம்’ அமைந்துவிடுகிறதோ" என்பது மிகவும் போலியாக எனக்கு தோன்றுகிறது. தருமி என்ற புனைபெயரில் எழுதும் பதிவர் ரொம்ப நாள் கழித்தே தம் உண்மையான பெயர், புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டார். அந்த ஒரே காரணத்துக்காகவே அடுத்தவரின் முகத்திரையை பற்றி கேள்வி கேட்கும் உரிமையை அவராகவே எடுத்துக்கொள்கிறார். அவரின் வாதத்தின் படி அவர் படம் வெளியாவதற்கு முன் ஒரு தரமும் இப்பொழுது வேறு தரமும் உள்ளதா அவர் எழுத்தில். இல்லை, அவர் புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன் எழுதப்பட்ட பதிவுகளை குப்பை பதிவுகளாக கணக்கில் கொள்ளலாமா என்பதை அவர் தயவு செய்து சொல்லட்டும். ஒருவருக்கு அவர்களின் மதிப்பீடுகளை பொறுத்து உயர்வு/தாழ்வாக தெரியும் விஷயங்கள் எல்லாருக்கும் அப்படி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. எனவே தயவு செய்து, நீண்ட நாட்களாக முகமூடி என்ற பெயரில்/அடையாளடத்தில் எழுதி வரும் என் முகத்திரை பற்றி மீண்டும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதிவர் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் எழுதிய வாக்கியத்தை ஒரு சக பதிவர் என்ற முறையில் என் மேல் உள்ள அக்கரையில் சொல்கிறார் என்பதாக மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன். அக்கரைக்கு நன்றி. அதே சமயத்தில் சமீபத்திய "அங்கீகரிப்பால் உயரத்தில் வைக்கப்பட்டுப் புகழ் பெற்றதால் அதற்குறிய பொறுப்போடு" என்ற அடைமொழியெல்லாம் வேண்டாம். நான் அந்த அங்கீகரிப்பை ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பார்க்கிறேன். முதலில் நான் என் கருத்துக்களை பதியும் ஒரு பதிவர். அங்கீகாரம் என்பது தணிக்கை என்ற ஆயுதத்தை தாங்களாக கையில் எடுக்கும் ஒரு நிலையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி அதனால் என் கற்பனையை பாதிக்கும் பாரமாக மாறும் எனும்பட்சத்தில் அந்த முள்கிரீடத்தை நான் சுமக்க தயாராயில்லை. ஆகவே உங்கள் விமர்சனங்களை தாராளமாக எழுதுங்கள். ஆனால் என் மேல் பிம்பம் எல்லாம் வேண்டாம்.
M
தருமியின் பதிவிலே கருத்து சொல்ல வரும் இளவஞ்சியின் கண்களுக்கு, மற்ற எல்லாவற்றையும் விட திருமா பதிவை தூக்கியது குற்றமாக தெரிகிறது. அப்படியே வெகு காலத்திற்கு முந்தைய ஒரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. "க.நா.சுவும் கக்கூஸ் க்ளீனரின் வாக்குமூலமும்" என்ற ஒரு பதிவின் தலைப்பு மட்டும் ஞாபகம் இருக்கிறது அவருக்கு. பதிவு உள்ளே எழுதியிருந்தது என்ன, அது எதைப்பற்றி, யாரைப்பற்றி என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. ஆனால் திருமா பதிவு தூக்கப்பட்டதற்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும்போது சும்மா ஞாபக அடுக்கிலிருந்து முந்தைய பதிவையும் தூசி தட்டுகிறார்.. அதாவது "முன்பொரு முறை சகபதிவாளர் கழிவரை சுத்தம் செய்பவர் என்று தெரிந்தவுடன் ‘கக்கூசுகிளினர்’ என்றொரு பதிவு வந்து அதையும் காணோம்" என்று ஒரே போடாக போடுகிறார். எந்த பிண்ணனி/விபரமும் தெரியாமல், அப்பதிவு எழுதப்பட்டது கழிவரை சுத்தம் செய்யும் தொழில் மேற்கொண்ட ஒருவரை பற்றி என்றும், அந்த காரணத்தினால்தான் அப்பதிவு தூக்கபட்டது என்றும் தனது சந்தேகத்தை உண்மை போலவே எழுதுகிறார்.
"எந்த சகபதிவாளரை பற்றி நான் பேசினேன்/நீங்கள் பேசுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அவர் செய்யும் தொழிலை பற்றியோ (அ) அவர் ஜானிட்டராகத்தான் இருக்கிறார் என்பதற்கோ ஆதாரம் காட்ட முடியுமா? நான் படித்த வரை அவரின் பதிவாலோ, இடுகைகளாலோ அவரின் பெயரோ, தொழிலோ மற்ற எந்த பர்சனல் விஷயங்களோ இன்று வரை அறிந்திருக்கவில்லை" என்று நான் கேட்ட பின், "அவரது தொழில் கழிவரை சுத்தம் செய்வது இல்லை என்ற என்னுடைய தகவல் தவறாதது எனில் என் மனப்பூர்வ மன்னிப்பை இங்கே கேட்டுக்கொள்கிறேன்!" என்று தனது மன்னிப்பை குற்றம்சாட்டப்பட்ட தருமி பதிவில் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் கேட்கிறார். நல்லது.
இளவஞ்சி அறியாத மொடர்ன்கேர்ள் என்ற பதிவரை பற்றி பலருக்கு தெரியும். ரொம்ப நாள் முன்பு வாந்தி எடுத்து அதை புகைப்படம் பிடித்து போட்டு - டோண்டுவின் ஒரு பதிவு அந்த படத்துக்கு சமம் என்று - ஒரு பதிவு வந்தது, பின்னர் அது தூக்கப்பட்டது (அது குறித்தெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டோம்) பிறகு குசு விடும் சத்தத்தை வைத்தே ஒரு பதிவு வந்தது. சமீபமாக போலியின் வன்புணர்ச்சியால் டோண்டுவுக்கு குழந்தை கிழந்தை பிறந்தால் என்ன செய்யலாம் என்று ஒரு பதிவு வந்திருக்கிறது. இதையெல்லலம் செக்கூலரிஸ்டுகள் கண்டிக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அவர் புது பதிவர் அல்ல.இலங்கை தமிழில் வலை பதியும் பலருக்கும் அவர் யார் என்று தெரிந்தே இருக்கிறது. இளவஞ்சியின் ஆதர்சங்கள் பலர் அப்பதிவரின் பல பதிவுகளுக்கு பின்னூட்டம் எல்லாம் தருபவர்கள்தான். சின்னவன் என்ற பதிவருக்கும் அப்பதிவரை பற்றி, அவரின் பதிவை பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. அது எப்படி தெரியலாம்? முகமூடிதான் ஒருவேளை சின்னவனோ என்று "பனைமர தேள் தென்னைமரத்தில் நெறி" சந்தேகம் இளவஞ்சிக்கு வருகிறது. திடீரென இந்த சந்தேகம் நிறைய பேருக்கு ஒரே நேரத்தில் வருகிறது, அது பற்றி பிறகு பார்ப்போம். இப்போது கண்முன் உள்ள விஷயத்தை பார்ப்போம்.
விளக்கம் கொடுத்த பின்னும் 'கக்கூசு கிளினர்' என்ற சொற்களில் தொக்கி நிற்கும் தொனி இளவஞ்சிக்கு வித்தியாசமாக படுகிறது. ஒரு முறை நண்பர்கள் சிலர் பீச்சுக்கு சென்றிருந்தோம். அப்போது கோணிப்பையில் குப்பை சேகரிப்பவர் ஒருவர் ஒரு செயலை செய்தார். அதை சுட்டி காட்டிய நான், அந்த குப்பை பொறுக்குபவர் செஞ்சத பாத்தியா என்றேன். குப்பை பொறுக்குபவர் என்று கேவலமாக பேசாதே! ragpicker என்று சொல் என்றான் ஒரு நண்பன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு போலீஸ்காரர், குதிரை ஓட்டுபவர், சுண்டல் விற்பவர் என்ற அடையாளம் போலவே ஒரு அடையாளத்துக்காக சொல்லப்பட்ட குப்பை பொறுக்குபவர் என்பது நாசூக்காக ragpick என்பதாக மாறி, அங்கே நான் சொல்ல வந்த விஷயம் மறக்கப்பட்டு வேறு ஒரு கோணத்தில் விஷயம் அலசப்பட்டது.
அது போலவே கழிவரை சுத்தம் செய்வதை தொழில் முறையாக கொண்ட ஒருவர் அளிக்கும் வாக்குமூலம் என்பதை குறிக்க கக்கூஸ் க்ளீனரின் வாக்குமூலம் என்று சொன்னேன். பதிவின் உள்ளே janitor என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டது. எத்தனை பேருக்கு janitor என்றால் என்னவென்று தெரியும் என்பதை சொல்லுங்கள். கழிவரை சுத்தம் செய்பவரின் வாக்குமூலம் அல்லது ஜானிட்டரின் வாக்குமூலம் என்று சொல்வதே சாலச்சிறந்தது என்று இளவஞ்சி நினைக்கலாம். கழிவரை சுத்தம் செய்யும் தொழிலை பற்றி கேவலமாக எதுவும் சொல்லப்படாத நிலையில் எனக்கு தோன்றிய வாசகத்தை நான் பதிவு செய்தேன். இதற்கு மேலும் 'கக்கூசு கிளினர்' என்ற சொற்களில் தொக்கி நிற்கும் தொனி இளவஞ்சிக்கு சரியானதாக படவில்லையெனில், அவரவருக்கு தோன்றுவதை எழுதி தங்கள் பெரிய மனுசத்தனத்தை வெளிப்படுத்திக்கொள்ளுங்கள். என்னளவில் ஒரு பதிவரின் சில பதிவுகளை சுட்ட அப்பதிவு எழுதப்பட்டது. அந்த பதிவின் பின்புலம் என்ன, ஏன் தூக்கப்பட்டது என்பதனை எல்லாம் மீண்டும் பேச விருப்பமில்லை.
என் பதிவு தூக்கப்படுவது / கருத்தில் தவறிருந்தால் திருத்தப்படுவது என்பதெல்லாம் ஒரு பெரிய குற்றமாக இதுவரை நான் கருதவில்லை. admin என்ற வகையில் எனக்கு அதற்கு உரிமை இருக்கிறது என்றே நினைத்திருந்தேன். தூக்கப்படும் பதிவோடு சம்பந்தப்படாதவர்களுக்கு எல்லாம் நான் விளக்கம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்திருக்கவில்லை. தற்போது உணர்கிறேன். இனி பதிவுகளில் correction/omission ஏதும் நிகழ்ந்தால் முன்கூட்டியே தெரிவிக்க ஏதுவாக, தணிக்கை கமிட்டி மெம்பர்கள் தங்களது mailing list எனக்கு அனுப்பி வைத்தால் முன்கூட்டியே தகவல் அனுப்பிவிடுகிறேன்.
M
இளவஞ்சியின் அடுத்த கேள்வி, அது எப்படி பொது வாழ்க்கைக்கு வந்தபின், ஒருவர் ஒரு கேள்வியை கேட்கும்போது எனக்கு அலுப்பாக உள்ளது என்று சொல்லலாம். வேண்டுமானால் அஞ்சால் அலுப்பு மருந்து அனுப்பி வைக்கிறேன்.
கருத்து1 :: "மற்றவர் வருந்த வேண்டும் என்பதுதான் எதிராளியின் குறிக்கோள் என்றால், எதிராளிக்கு வெற்றியை கொடுக்காதீர்கள். இந்த சம்பவத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாதீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும்... கவலை விடுங்கள்"
கருத்து2 :: போலியின் ஆட்டத்துக்கு provocater என்ற முறையில் டோண்டுவும் காரணம்.
முதல் கருத்து டோண்டுவை நோக்கி நான் சொன்னதுதான். அதை எடுத்துக்கொள்வது எடுத்துக்கொள்ளாததும் அவர் இஷ்டம். அவரை நான் ஒன்றும் கட்டாயப்படுத்த முடியாது. அதே கருத்தை என் புனுகு பூசாத நீதிபத்திகள் பதிவில் மீண்டும் சொல்லியிருக்கிறேன். அது இன்றும் மாறாத, நான் கடைபிடிக்கும் கருத்து. என் கருத்து மாறியிருக்கிறது என்பது நீங்களாக செய்து கொண்ட யூகம்.
நான் சொன்னதைத்தான் பலரும் கூறியிருந்தார்கள், கொஞ்சம் வார்த்தை மீறல்களோடு என்கிறீர்கள் நீங்கள். உண்மையிலேயே கருத்து 1க்கும் 2க்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லையா? கருத்து 1 என்பது ஆலோசனை. கருத்து 2 அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.
டோண்டு எல்லா இடங்களிலும் "போலி புராணம் பாடுவது" அவர் இஷ்டம். அதை பற்றி எனக்கு விமர்சனம் இருக்கலாம், அது எனக்கு எரிச்சலை உண்டு பண்ணலாம். அதை நான் அவரிடம் சொல்லியும் இருக்கிறேன். ஆனால் நமக்கு எரிச்சல் ஊட்டும் எத்தனையோ கருத்துக்கள் பல பதிவுகள் தோறும் மலிந்து கிடக்கின்றன. எல்லாவற்றுக்கும் நாம் எதிர்கருத்தை பதிவு செய்கிறோமா? ஆனால் அவர் செயலை குறை சொல்ல ஆரம்பித்து, அந்த விவாதம் அவர்தான் குற்றவாளி என்பதாக மாறுகிறது. மணியன் என்பவர் சொல்கிறார் :: Provocateur என்றமுறையில் இந்நிலைக்கு டோண்டுவும் ஒரு காரணமே... இந்த குற்றச்சாட்டை பற்றிய எனது பார்வையே, எனது புனுகு பூசாத நீதிபத்திகள் பதிவு.
அப்டிபோடு டோண்டு பதிவில் தனது ஒரு பதிவுக்கு வந்த ஒரேயொரு பின்னூட்டம் அவரை ரொம்ப பாதித்ததாக எழுதுகிறார். அதனால் எழுதும் ஆர்வமே போய்விட்டது என்கிறார். நல்லவேளை நண்பர்கள் உறவினர்கள் யாருக்கும் தெரியாது என்பதில் ஆறுதல் கொள்கிறார். எத்தனை பேர் கண்களில் அது பட்டதோ? என்று ஆயாசம் கொள்கிறார். அடுத்த வரியாக சொல்கிறார்: இப்படி என்னைப்போல் சம்பந்தமில்லாமல் ஏன் டோண்டு அவர்களே அவதியுற வேண்டும்? அதற்கு பிறகும் ஏன் நீங்கள் பிராமணர் மாநாடு சம்பந்தமாக எழுத வேண்டும்
அப்டிபோடு அவதியுறுவதற்கு டோண்டு எவ்வகையில் பொறுப்பாவார், அவர் என்ன எழுத வேண்டும் என்று இவர் எப்படி சொல்லலாம் என்பது எனக்கு புரியவில்லை. அதை நானும் கேட்கவில்லை, நீங்களும் கேட்கவில்லை... அது குறித்து எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை. ஏனெனில் அப்போதைய நிலையில் அப்பதிவிலேயே அது சம்பந்தமான வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்திருந்தது.
ஆனால் புனுகு பூசாத நீதிபத்திகள் பதிவில் வந்து "நீங்கள் சொன்னதையேதானே எல்லாரும் சொல்கிறோம்" என்கிறார் அப்டிபோடு. என் பதிவு அவருக்கு புரிந்ததா என்றே தெரியவில்லை. ஏனெனில், என் பதிவின் நோக்கம் புரிந்திருந்தால், டோண்டு பதிவிலேயே அப்டிபோடுவின் கருத்துக்கு பின்னாலேயே எழுதும் நாட்டாமையின் பின்னூட்டத்திலேயே இருக்கிறது அப்டிபோடுவின் கேள்விக்கான பதில் என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை உணராமல் மீண்டும் வந்து அதே கேள்வியை என் பதிவில் கேட்கிறார். அன்றிருந்த மனநிலையில் மீண்டும் ஒரு முறை அதே வித்தியாசத்தை அப்டிபோடுவுக்கு சொல்ல எனக்கு விருப்பமில்லை.
கவனிக்கவும் :: நான் டோண்டு சொன்னதையோ, அப்டிபோடு சொன்னதையோ இதுவரை விமர்சிக்கவில்லை. எனக்கு தோன்றிய கருத்தை பதிவாக எழுதுகிறேன். பதிவையே புரிந்து கொள்ளாமல், அங்கே கேட்கப்படும் ஒரு கேள்விக்கு அப்போதைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்கிற என் நிலைப்பாட்டை சொல்கிறேன். அதை பெரும் குற்றமாக நீங்கள் கருதினால் நான் என்ன செய்ய முடியும்?
M
மேற்கண்ட இளவஞ்சியின் கேள்விகள் பதிவில் பின்னூட்டம் எழுதவரும் அப்டிபோடு என்மீது மிகவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அதாவது "நாட்டாமை, அன்னியன், திருப்பதி, மோடி மஸ்தான், லோக்கல் அன்னியன் இவர்களெல்லாம் யார்? உங்களின் அவதாரங்களா?" எதற்காக இவர்களெல்லாம் எனது அவதாரங்களா என்று கேட்கிறார் பார்த்தால் அவரின் காரணங்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருக்கின்றன... "டோண்டு அவர்களைக் கேட்டால் முகமூடிக்கும், ரவுசு, நாட்டமைக்கும் ஏன் தாங்கமுடியவில்லை?., மோடி பெயரில் மோடித்தனமாக வந்து என்னை வாழைபழம் சாப்பிடச் சொல்கிறது ஒரு அறிவுஜீவி. சம்பந்தப்பட்ட பதிவரோ அப்படியே அந்த விதயத்தை திசை திருப்பி மூடி வச்சிட்டார்"
இது ஒரு வாதமா? என் பதிவு டோண்டுவை கேட்டதால் தாங்காமல் எழுதப்பட்டதல்ல, கேட்கப்பட்ட கருத்தை தாங்கமுடியாமல் எழுதப்பட்டது. குற்றம் செய்தவரை விட அதற்கு தூண்டுதலாக இருந்தவரை கண்டிப்பதை பற்றி ஒரு பதிவு வந்து, அது டோண்டுவுக்கு ஆதரவாக "தோன்றி"னால் நானும் டோண்டுவும் கூட்டாளியா? அப்போது அந்த பதிவில் உங்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் சொல்லிய மணியன் "மற்றும் பலர்" என்ன உங்கள் அவதாரங்களா? ரவுசு, நாட்டாமைக்கு ஏன் தாங்க முடியவில்லை என்றெல்லாம் கேட்கிறீர்களே, டோண்டு உங்களுக்கு சொன்ன பதிலை கூட தாங்க முடியாமல் பலர் உங்கள் உதவிக்கு வந்தார்களே அதை ஏன் இங்கு நீங்கள் குறிப்பிடவில்லை. உங்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் மற்றவர்கள் அநியாயத்தின் பக்கம் என்று நீங்களே முடிவெடுத்து விட்டீர்களா? மோடி tums, வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றெறிச்சல் சரியாகும் என்று எழுதியதை பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் ஒரு வரி தனிமடலிலாவது சொல்லியிருந்தால் நீக்கியிருப்பேன். அதை விடுத்து, எதுவுமே சொல்லாத நிலையில் "விதயத்தை திசை திருப்பி மூடி வச்சிட்டார்" என்று என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.
இதற்கு காரணமாக சுமத்தும் இன்னுமொரு குற்றச்சாட்டு நீதிபத்திகள் பதிவில் நான் உபயோகப்படுத்திய ஒரே ஒரு வார்த்தை. விவாதத்தில் பதில் சொல்ல அலுப்பாக இருக்கிறது என்று நான் சொல்ல, அப்டிபோடு, "நல்ல காலம் விடுவிடுன்னு பதிவெழுதறதுக்கு அலுப்பில்லாம இருந்துச்சே!! :-))" என்று நகைச்சுவையாக (?!) குறிப்பிடுகிறார். உடனே நான், "என்ன பண்றது அப்டிபோடு, ஏதோ யாரோ என்னமோ சொன்னாங்கன்னுட்டு ஆத்தாமையில செல சமயம் விடுவிடுன்னு எழுதிடறதுதான். அட, அதெல்லாம் செம்மண் பூமியில பொறந்து வளர்றவங்க மட்டும்ல செய்யிறது. மத்தவங்க மூடீட்டு போவாங்களா? இதெயெல்லாம் நல்லது கெட்டதுன்னு சொல்லிக்கொடுக்க நமக்குன்னு ஆரு இருக்கா? இப்பத்தான படிச்சிகிட்டு வாரேன். சீக்கிரம் கத்துக்குவோம்"
இந்த இடத்தில் "நமக்கு" என்று நான் சொன்னது, என் பின்னால் நிற்கும் ஒரு குழுவிற்காக பேசுகிறேன் என்ற அர்த்ததில் அங்கலாய்ப்பாக தோன்றுகிறது அப்டிபோடுவிற்கு.
குழலியின் இது கதையல்ல நிஜம் பதிவில் APDIPODU இவ்வாறு எழுதுகிறார் :: "குழலி., என்ன விளையாட்டு இது? நான் எழுத நினைசதையெல்லாம் நீங்க எழுதிட்டிங்க. மெதுவா வரலாம்னு இருக்க நம்ம பயகல பட்டுன்னு இரண்டு பொடனில போட்டு "வாடா., வெரசா...."ன்னு சொல்றதுதான் என் நோக்கம். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்"... மேலும் இன்னொரு இடத்தில் அப்டிபோடு எழுதியது "நாம எப்பவுமே நம்மள நாமன்னுதான் சொல்லிக்கிறது வழக்கம்".
இப்போது அப்டிபோடு எழுதும் "நாம" "நம்மள" என்பதற்கெல்லாம் வேறு அர்த்தம் தோன்றுகிறது எனக்கு. ஏனெனில் அவர் பாணியிலேயே "நமக்கு" என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட "நமக்கு" என்ற என் வார்த்தை பிரயோகம், அப்டிபோடுவுக்கு நான் மற்றும் என் கூட்டாளிகள் என்பதாக படுகிறது. உடனே பொங்கி எழுகிறார். மத்தவங்க மூடிட்டு போவாங்களா என்பது என்னை குறித்து நானே எழுதிய வார்த்தை. அது தரக்குறைவாக உங்களுக்கு தோன்றலாம், ஆனால் ஒரு பதிவர் (நண்பன்) என்னை பார்த்து சொல்ல அப்போதுதான் அதை படித்துவிட்டு வந்திருந்தேன். இப்பதிவு முடியும்போது அதை நீஙக்ள் அறிவீர்கள்.
ஞானபீட பதிவில் மோடித்தனம் என்று எழுதியபோது அது உங்கள் வட்டார வழக்கு என்று நினைத்தேன். எங்களூரில் மோடிமூட்டுத்தனம் என்று ஒரு சொல் உண்டு. ஆனால் மோடி என்பதை போலி என்ற அளவில் உபயோகப்படுத்துகிறீர்கள். இதன் மூலத்தை என்னால் உணர முடிகிறது. ரொம்ப நாட்களுக்கு முன் தமிழ் ராம்வாட்சர், ஒரு சிலர் பதிவு பெயரில் மட்டுமல்லாமல் போலி பெயரிலும் பின்னூட்டம் எழுதுகிறார்கள் என்று ஐ.பி. எல்லாம் பிடித்து ஒரு பதிவு எழுதினார். போகிற போக்கில் "அய்யா, சம்பவத்த நான் பார்த்தேனுங்க. அப்பால வூட்டுக்கு திரும்பி போற வழியில சம்பவம் நடந்த எடத்துல இருந்து ஒரு 10 மைல் தொலைவுல முகமூடி வீடு இருந்திச்சிங்கய்யா" என்பது போல சம்பந்தமேயில்லாமல் சகுனித்தனமாக என் பெயரையும் தூவி அந்த பதிவை எழுதியிருந்தார். அப்பதிவில் எழுதப்பட்ட பெயர் மோடி. அப்பதிவிலேயே இது misleading ஆகவும் விஷம நோக்கிலும் எழுதப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தேன். அப்பதிவு 2 நாட்களுக்கு பிறகு மொத்தமாக தூக்கப்பட்டது (இதை பற்றியும் யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை) பின்னாளில் வேறொரு இடத்தில் ஏன் இப்படி ராம்வாச்சர் அயோக்கியத்தனமாக எழுதினார் என்று நான் கேட்டபோது பெயரிலி மட்டும் "ராம்வாட்ச் அப்படி செய்தது தவறுதான்" என்று சொல்லிவிட்டு போனார். பெயரிலி ராம்வாச்சர் எழுதியதை தவறில்லை என்றால் ஆச்சா?, பாவம் அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்.. எதற்கு இவரிடம் போய் முறையிட்டுக்கொண்டு என்று வாளாவிருந்தேன். ஆனால் அன்று பற்ற வைத்த திரி நன்றாக வேலை செய்கிறது. இப்போது திடீரென அப்டிபோடுவிற்கு முன்பு மறைந்த சில பதிவில் நடந்த சம்பவங்கள் எல்லாம் திடீரென எப்படி ஞாபகம் வருகிறது என்பது எனக்கு தேவையில்லாத விஷயம். எனக்கு தேவையானது, கீழ்த்தரமான அந்த குற்றச்சாட்டு எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது? ஆத்திரம் கண்ணை மறைக்க உணர்ச்சிவசப்பட்டு அருவருப்பாகவும் அவதூறாகவும் ஞானபீட பதிவுகளில் எனக்கு செய்தி எழுதுவது எதனால்?
சரி, ஏதோ ஒரு அடிப்படையில் உங்கள் ஆதங்கத்தை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் என் பினாமிகள், அவதாரங்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியது சரியான செயல் அல்ல என்பது மேற்கண்ட என் விளக்கங்கள் மூலம் நீங்கள் உணருவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் என் விளக்கத்திற்கு பின்பும் நீங்கள் குற்றம் சாட்டுவதில் மாற்றம் இல்லை என்பது உங்கள் முடிவானால் மட்டும் கீழ்வரும் பத்தியை உங்களுக்கான என் பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு மேல் உங்களுடன் விவாதம் செய்ய என்னால் முடியாது.
உங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு நீங்கள் யார், எங்கிருந்து எழுதுகிறீர்கள், ஆணா பெண்ணா, உங்கள் ஜாதி, மதம் பின்புலம் எதுவும் தேவையில்லாதது. அப்டிபோடு/மரம் என்ற இரண்டு பெயரில் எழுதும் நீங்கள் முகமூடி என்ற ஒரே பெயரில் எழுதும் என்னை பல பெயரில் எழுதுவதாக குற்றம் சாட்டுகிறீர்கள். டோண்டுவுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் எல்லாம் என்னுடைய போலி முகங்கள் என்று சொல்லும் நீங்களே ஒரு போலி என்கிறேன் நான். அன்னப்பறவை, மணியன் என்ற பெயரில் எல்லாம் வலைப்பதிவும், உங்களுக்கு ஆதரவாக உங்கள் கருத்தை வலியுறுத்த பல அவதார பெயர்களிலும், கேவலமான வார்த்தைகளில் திட்டி உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த சில சமயம் உங்கள் பெயர் பல சமயம் போலி பெயர்களிலிலும் உலவுகிறீர்கள். எங்கே போனாலும், "நான் நேர்மையானவள்" என்று சத்தியம் செய்கிறீர்கள். I dont believe your words, even if your tongue came notorized. even otherwise, உங்கள் சத்தியம் மற்றவர் மீது சேற்றை வாரி இறைக்க ஒரு தகுதியாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தான் மட்டும்தான் உலகத்தில் யோக்கியம் மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்ற மனநிலையை விட்டு வெளியே வாருங்கள். கருத்தை கற்பனை குற்றச்சாட்டுகளால் அல்லாமல் கருத்தால் எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் குற்றம் சாட்டும்போது ஒரு விரல் எதிராளியை நோக்கி நீளும் அதே நேரத்தில் உங்களை நோக்கி மூன்று விரல்கள் நீளும் என்ற நிதர்சனத்தை உணருங்கள்.
உங்களை விடவும் நான் உண்மையானவன். பல வலையுலக புனித பிம்பங்களை நேரடியாக பெயர் சொல்லி என் கருத்துக்களை எடுத்து வைத்தவன். உங்களை கேள்வி கேட்க எல்லாம் பினாமி பெயரில் வர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை மற்றபடி உங்கள் மனத்திருப்திக்கு உதவும் எனில் எனது IP எண்ணை வைத்து நீங்கள் ஆராய்ச்சி செய்யலாம். என் IP கண்டுபிடிப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. இல்லை நானே தரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், எனது IP, ISP எல்லாம் தருகிறேன், உங்கள் மீது நம்பிக்கை வரும் அளவு உங்களது முகவரி, தகவல்கள் மற்றும் உங்கள் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வையுங்கள்.
M
இளவஞ்சியில் பதிவில் நண்பன் என்பவர் வந்து என்னை பற்றி தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தியும், அவர் பங்குக்கு என்னை சிலரோடு சம்பந்தப்படுத்தியும் திட்டித்தீர்க்கிறார். முகமூடியின் பிம்பம் என்றெல்லாம் அவர் எழுதுவதை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. அவரின் இந்த செய்கைக்கு காரணம் அவரிடம் பொதுவாக நான் ஒரு சில கேள்விகள் கேட்டதுதான்.
ஊரில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு சிறுவன் "மாடு" என்ற கட்டுரையை மனப்பாடம் செய்திருப்பான். பரீட்சைக்கு போனால் அவனுக்கு "தென்னை மரம்" என்ற தலைப்பை கொடுத்து விடுவார்கள். கொஞ்சம் யோசிக்கும் சிறுவன், மாடு கட்டுரையை எழுதிவிட்டு, இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மாட்டை தென்னை மரத்தில் கட்டியிருந்தார்கள் என்று முடிப்பான். நண்பனுடன் விவாதம் செய்யும் வாய்ப்பு கிடைத்த போதுதான் அந்த சிறுவன் ஒரு கற்பனை கதாபாத்திரம் இல்லை என்பது எனக்கு புரிந்தது. வியக்க வைக்கும் (இப்படி கூட எழுத முடியுமா என்று...) கருத்துக்களை சொல்லும் நண்பனிடம் ஏதாவது எளிமையான கேள்வி கேட்டால் போதும், உடனே கேள்விக்கான நேரடி அர்த்தம் மட்டும் தவிர்த்துவிட்டு கேள்வியின் பின்புலம், அது இது என்றெல்லாம் சொல்லி ஒரு சில பின்னூட்டங்களும், கேட்டவருக்கு என் பதில் என்று ஒரு பதிவும் போட்டுவிடுவார். அதற்கு பயந்து எங்கும் அவருடன் நேரடியாக பேசியதில்லை. ஆனால் பதிரியின் ஒரு பதிவில் விதி விளையாடிவிட்டது.
மூன்றாம் மனிதரின் பார்வையில் பத்ரி எழுதிய பதிவை விமர்சனம் செய்யும் நண்பன் கருத்து சொல்லும்போது :: எல்லாவற்றையும் விட நகைப்புக்குரிய கோரிக்கையாக 15% சதவிகித ஒதுக்கீடு கேட்டதும், அதற்குப் பதிலாக ஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில் சொன்னதுமான நிகழ்வு தான். ஒ.சி-யில் 25% சதவிகிதம் என்பது மொத்தமாகப் பார்க்கும் பொழுது 8% ஆகும். இது நியாயமா? 3% மக்கட்தொகையே கொண்டவர்கள் 15 சதவிகிதம் கேட்டு, அதில் 8% பெறுவது ஒன்றும் பாதகமானதில்லையே! இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள்? பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு - உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்?
இதை கண்டதும் நண்பனிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் :: நண்பன், பத்ரி இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில் :: நீங்கள் இதை இதையெல்லாம் சுட்டியிருக்கலாம், தவறிவிட்டீர்கள் என்ற அளவில் எழுதுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் // இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள்? பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு - உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்? // இது என்ன? பத்ரி என்பவர் ஜாதி உங்களுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் தெரிந்துவிட்டது என்பதால் அதிலேயே தொங்குவீர்களா? மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். இப்போது உங்கள் பாணியில் பேசினால், உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா?
இதையே சுந்தரமூர்த்தியும் கேட்கிறார் :: I thought of asking a similar question as Mugamudi did. You cannot put Badri on trial for the utterances of others lest you will face the same awkward situation for incidents involving people with whom you have nothing in common except the religious identity.
இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று நண்பன் எழுதிய பதிவின் பெயர் :: நண்பனின் அமெரிக்க எதிர்ப்பும், முகமூடிக்கு ஒரு பதிலும் அதில் அவர் எனக்கு சப்பையான ஒரு பதில் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஏகப்பட்ட பேருக்கு பதில் சொல்கிறார். அவரின் அமெரிக்க எதிர்ப்பு பின்புலம் எல்லாம் வெளிப்படுத்துகிறார்.
அப்பதிவில் அவர் கொடுத்த விளக்கம். "முகமூடி உங்கள் தமிழ் சற்று தகராறு பிடித்தது போல் தெரிகிறது. Context என்று ஒன்றுண்டு. அதாவது, இடஞ்சுட்டி பொருள் விளக்குக என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? அதைப் போலத் தான். பேசப்படும் பொருளாக அங்கிருந்தது - பிராமிணர்கள். அவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கையில், பிராமிணர்கள் என்பதை குறிப்பிடாமல், ''நீங்கள்'' என்று சொன்னேன். இந்த நீங்கள் - பத்ரியை சுட்டுகிறது என்று நீங்களாக நினைத்துக் கொண்டீர்கள். என் எண்ணம் அதுவல்ல"
அவரின் விளக்கம் மொன்னையானது என்றாலும் அவ்விஷயத்தை மேலும் பெரிதாக்க விரும்பாமல் நான் சொன்னது :: சுட்டு பதிவு, என் தமிழ் தகராறு பிடித்தது என்றெல்லாம் நீங்கள் சொன்னாலும் நீங்கள் அந்த இடத்தில் கட்டுரையாளரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது படித்தவர்களுக்கு தெரியும். எனினும் பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால் இதுபற்றிய விவாதம் இனி தேவையில்லாதது. அஞ்சறை பெட்டியிலிருந்து தூவி மசாலா சேர்த்து சமைக்கிறீர்கள் என்ற என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. உங்களின் எல்லா எண்ணங்களையும் பதிவாக எழுதி, தலைப்பு வைக்கும்போது மாத்திரம் எங்கோ உங்களை கேள்வி கேட்டவர் ஒருவரின் பெயரை வைப்பது என்பது தெரிந்தே செய்தால அது அயோக்கியத்தனம். ஆனால் நீங்கள் தெரியாமல் செய்கிறீர்கள் என்பதால் மசாலா சமையல். இப்பதிவிலும் கூட எனக்கு பதில் என்று தலைப்பு வைத்துவிட்டு சம்பந்தமேயில்லாத பல விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தலைப்பை பார்த்துவிட்டு, நீங்கள் ஆழமாக பதிப்பவர் என்று ஏற்கனவே முன்முடிவுகளோடு வருபவர்கள் ஏதோ உங்கள் அமெரிக்க எதிர்ப்பு கருத்துக்கு எதிரான முகமூடிக்கு நீங்கள் பதில் சொல்வதாகவே நினைப்பர். உங்களின் ஒரே ஒரு பதிவை தவிர வேறு பதிவுகளை படித்திராத முகமூடிக்கும் உங்கள் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைக்கும் என்ன சம்பந்தம். எளிமையான ஒரே ஒரு கேள்விக்கு தொடர்பிருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் ஆனால் உண்மையில் தொடர்பில்லாத எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு பதிவு. நியாயப்படி பார்த்தால் இப்பதிவின் தலைப்பு "பலருக்கு என் பதில்" என்பதாக இருக்க வேண்டும். தலைப்பு வைப்பது உங்கள் இஷ்டம், அதில் என் பெயர் இருப்பதால்தான் இவ்விளக்கமே அன்றி இது பற்றி எந்தவிதத்திலும் இதற்கு மேல் விவாதம் செய்ய விருப்பம் இல்லை. நன்றி.
அதற்கான அவரின் பதிலின் சுருக்கமான பொழிப்புரை :: என் ஒரேயொரு பதிவை படித்ததாக சொல்லும் நீங்கள் எப்படி மசாலா சமையல் என்று சொல்லலாம். யாரோ சொல்லிவிட்டார்கள், அதை முழுமையாக நம்பிவிட்டீர்கள். மற்றபடிக்கு படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்.
மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரே ஒரு பதிவு என்பதை பிடித்துக்கொள்கிறார். ஏற்கனவே இது குறித்து விமர்சனம் செய்ய விருப்பம் இல்லை என்று நான் சொன்னதால், மீண்டும் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வளர்த்த விரும்பாமல், "ஒரே ஒரு பதிவு என்றாலும் பல இடங்களில் பார்த்த பின்னூட்டங்களே நான் அப்படி எழுதியதற்கு காரணம்" என்பதை அவருக்கு சொல்லவில்லை. ஆனால் இந்த கேள்வி மூலமும் அதற்கு நான் பதில் சொல்லாததாலும் என்னை மடக்கி விட்டதாகவும் என் போலி முகத்தை துகிலுரித்ததாகவும் உணர்ச்சிவசப்படுகிறார்.
M
பின்பு அவர் வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு என்று ஒரு ஒரு பதிவு எழுதுகிறார். பொறுமை இருப்பவர்கள் முழுப்பதிவையும் படிக்கவும். மொட்டை தலை முழங்கால் முடிச்சு என்றால் என்ன என்பது முழுவதுமாக விளங்கும்.
அவரது பதிவின் ஆரம்பமே இப்படியாக இருக்கிறது "இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள்தான்"
இங்கே எதிர்பாராத சோகம் என்று அவர் குறிப்ப்டுவது, தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்ட ஒரு நிகழ்வை பற்றி. அது குறித்த என் கருத்தாக, "நண்பன், இலக்கிய திறனாய்வு எல்லாம் செய்கிறீர்கள், ஆனால் "இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டன" என்று எழுதவேண்டியதை இப்படி எழுதியிருக்கிறீர்களே" என்று சாதாரணமாக கேட்டேன். நான் கேட்டதை விடுத்து திறனய்வு செய்பவர் என்பதை ஒரு குற்றமாக ஆக்கி பதில் சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த பதிவில் ஒரு இடத்தில் "தமிழ் உணவகத்தின் மாடியில் அமர்ந்து அவரது கவிதைத் தொகுதியைப் பற்றிய ஆய்வாகத் தொடங்கினோம் அண்ணன் செ.ரா.பட்டணம் மணி அவர்கள் தலைமையில். அவரது அகராதி கவிதைகள் என்ற குறுங்கவிதைகளிலிருந்து நண்பர்கள் குழாமின் ஒவ்வொருவரும் வாசித்து தங்கள் எண்ணங்களை வெளியிட்டனர். சில கவிதைகள் மிக விரிவான விவாதத்திற்கு இட்டு சென்றன என்றால் மிகையாகாது. சில எளிய கவிதைகள் சிந்தனைக்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது" என்று குறிப்பிடுகிறார். கவிதைகள் குறித்த விவாதத்தில் பங்கு கொள்கிறார், துவக்கு என்ற இலக்கிய அமைப்பில் இருக்கிறார் போன்ற விஷயங்களால் இலக்கிய திறனாய்வு செய்பவர் என்று குறிப்பிட்டுவிட்டேன். அவ்வளவுதான். போனால் போகிறது என்று பிற்பாடு அவரின் வாதத்துக்கு அவர் சொல்லும் நியாயம் : என்னை பொறுத்த வரை வீடுதான் உலகம். அதான் அப்படி எழுதினேன்.
அப்பதிவிலே ஒரு கதையை பற்றிய பார்வையை சொல்ல முனையும் அவர் சொல்லும் மற்றொரு கருத்து :: "படிப்பு என்பது வேலைக்குப் போவதற்காகத் தானா? சிந்தனைத் தெளிவைத் தர, பகுத்தறிவைப் பெற என எந்த ஒரு தகுதியையும் கல்வி நமக்கு அளிப்பதில்லையா? தமிழ் கற்றால் வேலை தரப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஜெர்மன் கற்றால், அல்லது வேற்று மொழி கற்றால் வேலை வாய்ப்புகள் உறுதி என்பது நிஜம்மா அல்லது மாயையா? மாலன் எதனால் கல்வி பெறுவதையும் வேலை வாய்ப்பு பெறுவதையும் ஒரு தட்டில் வைத்து எடை போட முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. அப்படி செய்வது கூடாது என்பது என் எண்ணம். கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட கூடாது"
அவரிடம் நான் கேட்டது "நீங்கள் + உங்களால் அறிவுருத்தப்படும் நிலையில் இருக்கும் உங்கள் நெருங்கிய உற்றார் உறவினர் என்ன படித்தீர்கள்/ஏன் என்பதை முதலில் ஒரு முறை சொல்லிவிடுங்கள். கருத்து கந்தசாமியாக மாறி என்ன வேண்டுமானாலும் பேசலாம், கேள்வி கேட்கலாம். ஆனால் நிதர்சனத்தை சொல்லுங்கள். கூடாது என்பது உங்கள் ஆசை. நடைமுறை என்ன? நான் +2 முடித்தபோது தமிழ் இலக்கியம், எனக்கு விருப்பமான இசைக்கருவி/இசை, பொறியியல் என்ற மூன்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெறுவது என் விருப்பம் என்ற வாய்ப்பு கிடைத்த போது நான் ஏன் பொறியியல் பட்டத்தை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன். ஆசைக்கு படிப்பவர்கள் சிறுபான்மை. வேலைக்கு படிப்பு என்பதுதான் பெரும்பான்மை. சிந்தனை தெளிவுக்கு சைடில் படிக்கலாம் என்பது பகுத்தறிவு. உடனே உதாரணம் காண்பிக்கிறேன் என்று ஒற்றை இலக்கத்தில் ஆள்காண்பிக்காதீர்கள். சுற்றுமுற்றும் பாருங்கள்.(ஏட்டுச்சுரைக்காய் - படித்தவர்கள் எல்லாம் நல்லபடி சிந்திக்கிறார்களா என்ற உபகேள்வியை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)"
போலித்தனமாக அவர் செய்த பிரசங்கத்தை பற்றிய என் கேள்விக்கு இதோ இந்த நிமிடம் வரை அவர் மூச்சு கூட விடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக என்னை மிகவும் கீழ்த்தரமாக திட்ட ஆரம்பிக்கிறார். முதன் முதலில் அக்கதை பிரசுரமான போதே படித்த என்னிடம் "நீங்கள் அந்த கதையை வாசிக்கவில்லை என்று தீர்மானமாக சொல்கிறார். செவிடாகிப்போன காதுகளோடும் குருடாகிப்போன கண்களோடும் வலம் வருகிறேன் எனும் அவர், "மூடிக்கொண்டு போ" என்பதை எனக்கான பதிலாக திரும்ப திரும்ப வலியுறுத்தும் அவர், என்னை புழுவோடு ஒப்பிடும் அவர், கடைசியாக எல்லாரையும் போலவே "முகமூடிக்கு பின்னால் இருக்கும் திருமலை" என்று ஒரே போடாக போடுகிறார். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு மத இயக்கத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டு சட்ட விரோத செயலகள் பல செய்து கைதிலிருந்து தப்ப அமீரகத்திலே தஞ்சம் புகுந்திருக்கும் நண்பன், என்னை பார்த்து குற்றம் சாட்டுகிறார். (அவரின் பாணியில் பேச கேவலமாக இருக்கிறது. என்ன செய்வது. இது நாள் வரை என்னை யாரோடாவது ஒப்பீடு செய்யும்போதெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது இவர்களுக்கு உரைப்பதில்லை... இனி இப்படித்தான். இவ்வரிகள் நீக்கப்பட வேண்டுமாயின், என்னை திருமலையோடு ஒப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்)
நான் எனக்கு தோன்றிய எளிமையான கேள்வியை நேரடியாக கேட்க, இவர் என்னடாவென்றால் தனது கற்பனை மூட்டையை அவிழ்த்து விட்டு என்னன்னவோ பேசுகிறார். கீழ்த்தரமாக திட்டுகிறார். நான் இந்த ஆள் அவ்வளவுதான் என்று எதுவும் பேசாமல், மேலும் எதுவும் பேசவேண்டாம் என்ற கோரிக்கையோடு I'M APPALLED என்பதாக முடித்துக்கொண்டேன். ஆனால் அந்த appalledக்கு பதில் சொல்கிறேன் என்று "முகமூடிக்கு பின்னால் இருந்து கொண்டு மரியாதை வேறு எதிர்பார்க்கிறாயா? உன் புண்களை பொதுவில் நக்குகிறாய். படிக்காமல் விமர்சனம் செய்கிறாய்" என்றெல்லாம் வசவு விழுகிறது.
இதன் தொடர்ச்சியாக இளவஞ்சி பதிவிலும் சென்று "வேடமிட்டுக்கொண்டு திரிகிறேன், அநாநிக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை, என் மீதான தனது அன்பை வெளிப்படுத்துகிறார். ஒரு பதிவு போடுவதும், எதிர்ப்பு வந்ததும் அதை நீக்குவது அல்லது திருத்துவது - கடைந்தெடுத்த அயோக்கியத் தனம். நேர்மையற்ற எழுத்துகளைப் பிறப்பிக்கும் இழிந்த மனிதர்கள்" என்ற பொன்னான கருத்துக்களை உதிர்க்கும் நண்பன் இன்று வரை தனது போலித்தனம் குறித்த கேள்விக்கு விளக்கம் அளிக்கவில்லை. நண்பனின் அந்த பதிவை படித்து விட்டு அப்டிபோடு வேறு நண்பன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்கிறார். என்ன புரிதலோ என்னவோ..
M
வலையுலகில் அனைவருக்கும் OPINIONS இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி மேகம் போல் வலையுலகை சூழ்ந்திருக்கும் ஒரு மாய அரசியல் இருக்கிறது. வெளிப்படையாக பேசாவிட்டாலும் அது எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது. Either you are WITH US or AGAINST US என்ற நிலைப்பாட்டை கோட்பாடாக கொண்டது அது.
எதை பற்றியும் கவலைப்படாமல் எனக்கு தோன்றியதை எழுதி வருகிறேன். அதற்காக பல பட்டங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பல ஊரை விட்டு தள்ளி வைக்க ஏதுவாக, ஊரைதம் பக்கம் வைத்திருக்கும் வலுவான பஞ்சாயத்தார் கொடுத்தது.
என் எழுத்து பிறப்பிக்கும் கற்பிதத்தில் கொடுக்கப்படும் பட்டங்களை பற்றி நான் என்ன செய்ய முடியும். ஜாதி பற்றி பேசாத என் மீது ஜாதி குற்றச்சாட்டும் யூகத்தின் பேரில் வைக்கப்பட்டது. வைத்தவர்கள் எல்லாம் தனது நடுநிலைமையை பச்சையாக ஒரு சார்பில் காண்பித்தவர்கள். முகமூடிக்கெல்லாம் எதற்கு பதில் போட்டு டைம் வேஸ்ட் செய்கிறீர்கள் என்று அப்பட்டமான சார்பு நிலையை எடுத்திருக்கும் அறிவு ஜீவிகள் விவாதிப்பவர்களை கட்டம் கட்டினால், முகமூடிக்கு பின்னூட்டம் போட்டால் உன்னை சும்மா விடமாட்டேன் என்று போலி புதியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறான். போலியாக என்னுடையதை போலவே இன்னொரு பதிவு ஆரம்பித்து புதியவர்களுக்கு எல்லாம் முகமூடியின் சார்பு நிலைகள் பற்றிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே ஒரு பின்னூட்டத்துக்கு அதிர்ச்சியடைபவர்களால் போன மாதம் மட்டும் என்னையும் என் குடும்பத்தாரையும் கீழ்த்தரமாக திட்டி வந்த 87 பின்னூட்டங்களை நான் யாருக்கும் தெரியாமல் மறைத்தது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும் கூட என் முகமூடிக்கு பின்னிருக்கும் முகம் என பலரால் பலரின் பெயர் சொல்லப்படுகிறது. சும்மா சந்தேகமாக அல்ல... அனுமானத்தோடு, வசவும் சேர்த்து. பின்பு பலரின் பெயர்கள் - போலிகள் உட்பட - என் பெயருடன் இணைத்து பேசப்படுகிறது. அது இன்று அப்டிபோடு, இளவஞ்சி, நண்பன் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத அளவா தமிழ் சமுதாயம் கோழைகளாகிவிட்டது? என் முகமூடிக்கு பின்னிருக்கும் முகமும் என் பின்புலம் பற்றிய அனுமானங்களும் என் கருத்தை விட முன்னெடுத்துச்செல்லப்படுவது எதனால்?இந்த பதிவால் ஒரு ப்ரயோஜனமும் இருக்காது என்பது தெரியும். மீண்டும் இரு மாதங்களுக்கு பிறகு, முகமூடி என்ற பிரதான கதாபாத்திரம் தவிர மற்ற பாத்திரங்கள் மட்டும் மாறி இதே காட்சி அரங்கேறும்.
நகைச்சுவையாக எழுதும் முகமூடி ஏன் விமர்சனங்களையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறார் என்று ஒரு முறை ஒரு பதிவர். இதுவரை என்னை பற்றி எழுதப்பட்ட நையாண்டி கிண்டல் பதிவுகளை நான் ரசித்தே வந்திருக்கிறேன். என் மீது சொல்லப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அல்லது அமைதி என்று நிலைப்பாடு எடுத்திருக்கிறேன். சத்தமில்லாமல் நடக்கும் இவை அது தெரிவதில்லை. ஆனால், விமர்சனம் என்பது போய் தமிழ்ப்பதிவுகள்
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு
பிப்ரவரி 2, 2000 : முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி கொடைக்கானலில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியதை அடுத்து தொடரப்பட்ட ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பு. ஜெயலலிதாவும் கோர்ட்டுக்கு வந்திருக்கிறார். சிறப்பு நீதிபதி-2 ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறார். ஒரு முன்னாள் முதல்வருக்கு கடுங்காவல் தண்டனை அநேகமாக அதுதான் முதல்முறை என்று சொல்லப்பட்டது.
சுற்றுலா முடிந்து கோவை திரும்பிக்கொண்டிருந்த வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர் பயணம் செய்த பேருந்துகள் தர்மபுரி வந்த போது ஏற்கனவே களேபரம் ஆரம்பமாகியிருந்தது. தர்மபுரியில் எந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் முதல் பலி பேருந்துகள். கல்லெறிதலில் இருந்து மொத்தமாக எரிப்பது வரை நிகழ்வுகளின் தாக்கத்தை பொருத்து விளைவுகள் இருக்கும்.
+ பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் பேருந்துகளை நிறுத்தி விட்டு ஆசிரியர்கள் தங்கள் தலைமைக்கு நிலைமையின் விபரீதத்தை சொல்லி கருத்து கேட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வண்டியை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பேருந்துகள் இருந்த பெட்ரோல் பங்கிலிருந்து கலெக்டர் அலுவலக (பக்கத்திலேயே எஸ்.பி. அலுவலகம்) திடலுக்கு செல்வது பாதுகாப்புக்கு நல்லது என்பது இவர்கள் எண்ணம். இரண்டுக்கும் இடையேயான தூரம் 4 கி.மீக்கும் கம்மி.
பேருந்து இலக்கியம்பட்டி என்ற இடத்திற்கு அருகில் வரும்போது road block. அங்கே அதிமுக புள்ளி ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட அனைத்து வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவர்கள் வந்த வாகனங்களும் ஒரு புளியமரத்தின் கீழ் நிறுத்தப்படுகிறது. சில மாணவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிய கீழே செல்கின்றனர். சுமார் 20 மாணவிகள் மட்டும் பேருந்துக்குள்ளேயே இருக்கின்றனர். கல்வீச்சுக்கு பயந்து அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்படுகிறது.
அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர்(மூவர்?) ஏற்கனவே தயாராக கையில் இருந்த பெட்ரோலை பஸ்ஸின் முன்பகுதியில் ஊற்றி தீ வைத்துவிட்டு இரு பெட்ரோல் பாம்களையும் பேருந்துக்குள் வீசுகின்றனர். பஸ்ஸிலிருந்து புகை வருவதை கண்ட மாணவர்கள் ஓடி வருகின்றனர். அக்கம்பக்கம் இருந்த பொது மக்கள் கையில் கிடைத்த வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சிக்கின்றனர். தீயணைப்பு வண்டிகள் ஏற்கனவே வேறு இடங்களில் பணியில் இருக்கின்றன. ராஜேந்திரனின் போராட்டம் என்றால் சரக்கு இருக்கும் என்பதால் - சன் டிவி அந்நேரத்தில் அங்கு இருந்தது அப்படித்தான் - அங்கு கூடியிருந்த நிருபர்களில் ஒருவர் அந்த வழியாக சென்ற ஒரு போலீஸ் ஜீப்பை உதவிக்கு அழைக்கிறார். ஜீப்பில் இருந்த வந்த பதில் : இதில் வயர்லெஸ் இல்லை, நான் சென்று உதவி அனுப்புகிறேன்.
ஏறிய வழியிலேயே இறங்கி பழக்கப்பட்ட இயல்பில் பஸ்ஸின் முன்புற வாயிலாக வெளியேற முயற்சிக்க, அதற்கு முன்பே பெட்ரோலால் நனைக்கப்பட்ட முன்புறம் நன்றாக எரிய ஆரம்பிக்கிறது. மாணவிகள் மூடப்பட்ட ஜன்னல்களால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் மூச்சு திணறுகின்றனர். பேருந்தின் கடைசி இருக்கையில் லக்கேஜ்களால் நிறப்பப்பட்டிருக்கிறது. பின்புற படிக்கட்டுகளில் நெஞ்சு வரை இருந்த கதவு பூட்டப்பட்டிருக்கிறது. பதட்டத்தில் சாவி எங்கே என்றே யாருக்கும் தெரியவில்லை. சில மாணவர்கள் பின்புற படிக்கட்டு கதவின் மேற்புற வழியாக சென்று மாணவிகளை இழுத்து வெளியே போடுகிறார்கள். இந்த மாணவர்களுக்கும் புகை மூட்டத்தில் மூச்சு திணறுகிறது. அவர்களை வெளியே வந்துவிடுமாறு எல்லாரும் கத்த அரை மனசாக வெளியே குதிக்கிறார்கள். அனைவரின் கண் முன்னாலும் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தை சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லை சேர்ந்த கோகிலவாணி மூவரையும் நெருப்பு காவு கொள்கிறது. அனைவரும் வெளியேறிக்கொண்டிருந்த நிலையில் இவர்கள் மூவரும் தங்கள் லக்கேஜ்களை எடுக்க முயற்சித்து சில விநாடிகள் தாமதித்துவிட்டனர் என்ற ஒரு பார்வையாளர் அதை விதி என்று சொந்து கொள்கிறார். விதியின் வேறு ரூபங்கள்: தர்மபுரி மாவட்ட அரசு பேருந்துகளை போலவே பச்சை வண்ணத்தில் இருந்த அந்த கல்லூரியின் பேருந்தை தனியார் பேருந்து என்று கூட இனம் காண இயலாத அளவு அந்த குடிகாரர்களின் அறிவு ; எப்போதும் எரிக்கும் முன்னர் இறக்கிவிட்டு செய்யும் செயலை அன்று பார்த்து செய்ய தோணாதது ; பின்புற படிக்கட்டு கதவு பூட்டப்பட்டு சாவி இல்லாதது.
தர்மபுரி SP கந்தசாமி தமது அறிக்கையில் "மது , நெடு என்ற அதிமுகவை சேர்ந்த இருவர்தான் இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் பாம்களை வீசியது என்பது விசாரணையில் தெரிகிறது. முதல் தகவல் அறிக்கையில் அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாவட்டத்தை விட்டே காணாமல் போன மீதி குற்றவாளிகளை தேடி வருகிறோம்" என்கிறார்.
இந்த சம்பவத்திற்கும் தங்கள் கட்சிக்காரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் ஜெயலலிதா. இச்செயல் நடந்த போது சன் டி.வி. கேமரா குழு சரியாக அங்கிருந்தது எப்படி என்று சந்தேகம் எழுப்பிய அவர், இதை திமுகவை சேர்ந்த சமூக விரோதிகள் செய்துவிட்டு பழியை தம்மீது போடுவதாகவும், வேண்டுமென்றே தங்களை குற்றம்சாட்டும் நாளிதழ்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், இச்சம்பவத்தை CBI கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறார்.
CBI விசாரணையை நிராகரிக்கும் முதல்வர் கருணாநிதி குற்றப்புலனாய்வு CB-CID வசம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படுவதாக பிப்.4 அன்று தெரிவிக்கிறார். மாணவ் மாணவியரின் கொந்தளிப்பை நீர்க்கச்செய்யும் விதமாக அன்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு 2 லட்ச ரூபாய்கள் நிவாரணம் வழங்கி ஆணை பிறப்பிக்கிறது. நிவாரணத்தொகை செக்கில் கையெழுத்து வாங்க வந்தபோது "என் மகளுக்கு விலை 2 லட்சம்... கடவுளே அவள் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே, இதற்கா அவளை பெத்தேன்" என்ற ஹேமலதாவின் தாய் காசி அம்மாளின் அழுகை கூடியிருந்த அனைவரையும் கலங்க வைக்கிறது.
*
பிப்ரவரி 10, 2000 : ஜெயலலிதாவிற்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த சிறை தண்டனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2000 ரூபாய் ஒரு நபர் ஜாமீன் + அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனில் ஜெயலலிதா விடுவிக்கப்படுகிறார்.
*
நவம்பர் 5, 2001 : கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்குகிறது. 386 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்படுகின்றனர்.
*
நவம்பர் 14,2001 : சம்பவத்தில் இறந்த கோகிலவாணியின் தந்தை வீராசாமி, பஸ் எரிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென்றும், வழக்கை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இருந்து விடுவித்து கோவையின் ஏதாவது நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்கிறார். குற்றத்தை பதிவு செய்த விருப்பாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் உட்பட அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட 22 பேருமே பல்டி அடித்து சாட்சியம் அளித்ததையும், அந்த பேருந்தில் பயணம் செய்த 6 பேர் மட்டுமே மீதம் விசாரிக்கப்பட இருக்கும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 31 பேரும் செல்வாக்கான லோக்கல் அதிமுக பிரமுகர்கள் என்ற நிலையில் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தனது மனுவில் சுட்டிக்காட்டுகீறார். நீதிபதி டி.பி.தினகரன் இம்மனுவை ஏற்று மீள் அறிவிப்பு வரும் வரை இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கிறார்.
*
நவம்பர் 27, 2000 : கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
*
செப்டம்பர் 12, 2003 : சம்பவத்தில் இறந்த கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை மாற்றக்கோரி சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.கனகராஜ் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. வீராசாமியின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்பதையும், முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் அரசு தரப்பு எல்லா வகையிலும் மெத்தனம் காட்டுகிறது என்பதையும் குறிப்பிட்ட நீதிபதி, அதுவரை சாட்சியம் சொன்ன 22 சாட்சிகளும் பல்டி அடித்ததையும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அதிமுக என்ற ஒரே காரணத்தால் அரசு காட்டும் அலட்சியம் வெட்கப்படக்கூடியது என்றும் சுட்டிக்காட்டுகிறார். "இந்த அமைப்பை ஏமாற்றி பதவியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் நடப்பது நல்லது என்று இவ்வழக்குக்கு பொறுப்பான அதிகாரிகள் நினைப்பார்களேயானால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. சட்டம் தம் கரங்களை நீட்டும் போது அனைவரும் பதில் சொல்ல வேண்டி வரும்"
இவ்வழக்கில் சாட்சியங்கள் கலைக்கப்பட்டதை பொறுப்பற்ற முறையில் பார்த்துக்கொண்டிருந்த கூடுதல் SP மீது நடவடிக்கை எடுக்குமாறு CB-CID IGயை உத்தரவிடும் அவர், பொய்யான ஆவணங்களில் கையெழுத்திட்டது மற்றும் போலி சாட்சியம் அளித்தது ஆகியவற்றுக்காக (பல்டியடித்த) விருப்பாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் மற்றும் அவர் உதவியாளர் சாமுண்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தர்மபுரி கலெக்டரையும் அதே காரணங்களுக்காக அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு SPக்கும் பரிந்துரைக்கிறார். சேலம் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிடும் நீதிபதி வி.கனகராஜ், இவ்வழக்கு முதலில் இருந்து மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும், ஐ.ஜி. வழக்கை கண்காணிக்க வேண்டும், வழக்கை சீக்கிரம் நடத்த வேண்டி ஏற்கனவே இருக்கும் சிறப்பு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் மாற்றப்பட்டு வேறொரு சிறப்பு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்.
*
டிசம்பர் 12, 2003 : வழக்கு மாற்றத்தின் தீர்ப்பின் போது கூறிய சில கருத்துக்களை பதிவுகளிலிருந்து நீக்க வேண்டும் என்று கூடுதல் SP மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் செய்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. வழக்கு டிசம்பர் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்கு பிறகு இவ்வழக்கு விசாரணை பற்றி தகவல் இல்லை
*
பிப்ரவரி 18, 2005 : சேலத்துக்கு வழக்கை மாற்றக்கோரி கோர்ட் தீர்ப்பளித்தும் 15 மாதங்களாக அதற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் தனக்கு நீதி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுடன் வீராசாமி மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி கோர்ட் அவமதிப்பு வழக்கு மனு ஒன்றை பதிகிறார். இதற்கிடையில் CB-CID கூடுதல் எஸ்.பி ராஜேந்திரன், கருத்தை நீக்கும் வழக்கு (டிசம்பர் 30 2003) சம்பந்தப்பட்ட ஆவணங்கள் "காணாமல்" போய்விட்டதாகவும், அந்த சம்பந்தப்பட்ட ஆவணங்களை மீண்டும் உருவாக்க அனுமதி அளிக்குமாறும் அதுவரை மேற்கொண்டு இது சம்பந்தமாக விசாரிக்கக்கூடாது என்றும் நீதிபதிக்கு விண்ணப்பிக்கிறார். நீதிபதி, ஆவணங்கள் காணாமல் போனது குறித்து முறையான விளக்கம் பிப்ரவரி 21க்குள் அளிக்குமாறு ப்ராஸிக்யூட்டருக்கு உத்தரவிடுகிறார். மறுநாளே, காணாமல் போன ஆவணங்கள் கோர்ட்டின் ஆங்கில பதிவறையில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகிறது.
*
பிப்ரவரி 24, 2005 : வீராசாமியின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூன்று IAS அதிகாரிகள், அப்போதைய உள்துறை மந்திரி, வழக்கு மாற்றம் தீர்ப்பு வெளியானபோது பதவியில் இருந்த இரண்டு முன்னாள் உள்துறை மந்திரிகள் ஆகியோர் மீது, சிறப்பு ப்ராஸிக்யூட்டர் நியமனம் மற்றும் நீதிமன்ற மாற்றம் குறித்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதற்கு விளக்கம் கேட்டு affidavit தாக்கல் செய்ய சொல்கிறார். கடுமையான தனது கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவிக்கும் நீதிபதி வி.கனகராஜ் "உங்கள் மீது ஏன் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது? உங்கள் நடத்தையை விளக்க முடியுமா? பணிக்காலத்தில் என்னதான் செய்கிறீர்கள்?" போன்ற கேள்விகளை கேட்கிறார்.
மேலும் அரசு தரப்புக்கு பாதகமாக இரண்டாவது வாக்குமூலம் கொடுத்த கூடுதல் SP ஒருவரின் நடவடிக்கையையையும் கடுமையாக விமர்சிக்கிறார். "குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வண்ணம் கூடுதல் SP தனது வாக்குமூலத்தை வேண்டுமென்றே இரண்டாவது முறையாக மாற்றி அளிக்கிறார். இவருக்கு பொது மக்களின் வரிப்பணம் சம்பளமாக தரப்படுகிறது. ஆனால் அரசுத்தரப்புக்கு பலவீனப்படுத்தும் நோக்கில் அமைகிறது இவரின் வாக்குமூலம்"
கூடுதல் SPக்கு மெமோ அனுப்பப்பட்டிருப்பதாக அட்வகேட்-ஜெனரல் N.R.சந்திரன் கோர்ட்டுக்கு தெரிவிக்கிறார். சிறப்பு ப்ராஸிக்யூட்டராக சீனிவாசன் நியமிக்கப்பட்ட அரசு கெஜட் நகலும் கோர்ட்டுக்கு அளிக்கப்படுகிறது.
*
ஜீன் 5, 2005 : 40 நாட்களுக்கு பின் சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் பஸ் எரிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்குகிறது. கோகிலவாணியின் சகோதரர் தனது சாட்சியத்தில் நகையை மட்டும் வைத்து தனது தமக்கையின் உடலை அடையாளம் காட்டியதை கலங்கிய குரலில் விவரிக்கிறார். தருமபுரி அரசு மருத்துவர்கள் டாக்டர். நடராஜன், டாக்டர். சம்பத் ஆகியோர் சாட்சியம் அளிக்கின்றனர். குறுக்கு விசாரணையின் போது நீதிபதி, டாக்டர் சம்பத்தை பார்த்து சம்மனை கவனமாக படித்து புரிந்து கொண்டு பதிலளிக்குமாறு அறிவுறுத்துகிறார்.
*
ஜீன் 22, 2005 : சன் டிவி நியூஸ் எடிட்டர் ராஜா பஸ் எரிப்பு கேஸட் தனக்கு அனுப்பப்பட்டது, அதை ஒளிபரப்பியது, ஒரு மாதத்திற்கு பிறகு CID கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை ஒப்படைத்தது என்று தனது சாட்சியத்தை அளிக்கிறார்.
*
ஜனவரி 10, 2006 : இவ்வழக்கின் கடைசி சாட்சியிடம் சேலம் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் மொத்தம் உள்ள 386 சாட்சிகளில், 123 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்து, அதன்படி 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் கடைசி சாட்சியாக, சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பின் லோக்கல் காவல்துறையினரிடமிருந்து இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட இவ்வழக்கின் CB-CID முதன்மை விசாரணை அதிகாரியான சமுத்ரபாண்டியன், நீதிபதி கிருஷ்ண ராஜா முன் சாட்சியம் அளிக்கிறார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைக்கிறார். பிப்ரவரி 18 அன்றும் சமுத்திரப்பாண்டியன் சாட்சியம் அளிக்கிறார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு வக்கீல்களின் வாதம் நடைபெறும்.
*
பிப்ரவரி 16, 2007 : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 25 பேருக்கு 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்தது.
**
குறிப்பு :
1. இவ்வழக்கை ஒரே இடத்தில் ஆவணப்படுத்தும் நோக்கில் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேலதிக தகவல்களோ, இப்பதிவில் பிழைகளோ இருப்பின் தயவு செய்து சுட்டவும். (+ குறிப்பிட்ட பத்தியில் உள்ள செய்தி மட்டும் உறுதிப்படுத்தப்படாதது. )
2. தேகளில் துல்லியம் இல்லாமல் இருக்கலாம். எனினும் சம்பவங்கள் கால அடிப்படையில் வரிசையாகவே தொகுக்கப்பட்டுள்ளன.
3. இது முழுமையானது அல்ல. மேலும் கிடைக்கப்பெறும்போது தகவல்களின் அடிப்படையில் இப்பதிவு நீளும்/ சுருங்கும்/ திருத்தப்படும்.
மேலும் தொடர்ச்சி
தமிழ்ப்பதிவுகள்
ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி
நாங்கள் யுவதிகள்எங்களுக்கென கனவுகள் இருந்தன
எங்களுக்கென கற்பனைகள் இருந்தன
எங்களுக்கென ஆசைகள் இருந்தன
விரிந்து கொண்டிருந்த சிறகுகளின்
கடைசித்துளி ஈரம் காய்ந்த பின்
காணப்போகும் கற்பனை உலகை பற்றி
பகிர்ந்து பேசி சிரித்து மகிழ்ந்த
ஒரு அழகிய பொழுதில்
எதற்கென உணரும் முன்னே
எரிக்கப்பட்டோம்
நாங்களே உலகம் என்பதை தவிர
வேறு எந்த இயலும் தெரியாத
எம் இல்லங்களில்
இப்பொழுது
அடுப்பு பற்றும் பொழுதுதெல்லாம்
அழுகையும் சேர்ந்தே பற்றுகிறது
குடிகளை காக்க
கட்டியம் சொன்னவர்கள்
குற்றவாளிகளை மட்டும் காக்கும்
இந்த புண்ணிய பூமியில் பிறந்ததற்காக
நெருப்பின் நாக்குகள்
உயிர் தின்ற
அந்த கடைசி நிமிடம் வரை
நாங்கள் பெருமிதம்தான் கொண்டிருந்தோம்
நாங்கள் யுவதிகள்
எங்களுக்கென கனவுகள் இருந்தன
எங்களுக்கென கற்பனைகள் இருந்தன
எங்களுக்கென ஆசைகள் இருந்தன
*
ஆறு வருடங்கள் முன்பு இதே நாளில் குடிகார தொண்டர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகள் நினைவாக.
தமிழ்ப்பதிவுகள்
கையால் எழுதிய கடிதங்கள்
கையெழுத்து கடிதங்கள் வழக்கொழிந்து போன இன்றைய காலகட்டத்தில் பழைய கடிதங்களை படிப்பதே ஒரு அலாதி சுகம்தான். "பொங்கும் மங்கலம் எங்கும் பொங்குக" என்று மாடு, ஏர்கலப்பை, கரும்பு படத்துடன் கூடிய 10 பைசா அட்டையில் "அன்புள்ள தாத்தா பாட்டிக்கு, அன்பு பேரன் அனுப்பும் வாழ்த்து" என்று எழுதி அனுப்பிய கார்டிலிருந்து பதின்ம வயதில் சமூக விழுமியங்களை நண்பர்களோடு அலசிய 15 பைசா கார்டு வரை ஒரு மூட்டை நிறைய கடிதங்கள் இரு டஜன் பாச்சா உருண்டைகளோடு பரணில் தூங்கியதை இறக்கலாம் என்று சென்ற முறை இந்தியா சென்றிருந்த போது தேடிப்பார்த்தால் காணோம்.
ஒரு நாள் முழுவதும் பரணில் எலிகளோடு போராடியபின் அக்கடிதங்கள் எல்லாம் வெந்நீர் போட உபயோகப்படுத்தப்பட்ட விஷயம் சொல்லப்பட்டது. "கொஞ்சமாவது உங்களுக்கு இலக்கிய ஆர்வம் இருக்கா, பொக்கிஷங்கள இப்படி செல்லாக்காசாக்கி கரியாக்கிட்டீங்களே... உங்கள் மாதிரி ஆளுங்களாலத்தான் பல அரிய பொக்கிஷங்கள இழந்தோம். உவேசா மட்டும் இல்லையின்னா..." என்ற என் ஆதங்கம், "அடங்குடா" என்ற வந்த சத்தத்தில் அடங்கியது.
"என்னடா பொக்கிஷம். எந்த கார்ட எடுத்தாலும், "கண்ணே உன் கண்ணுக்கு ஈடாகுமா அந்த சூரியன். நீ ரொம்ப அழகா இருக்க... நாளக்கி சாயங்காலம் சிவன் கோயில் தெப்பகுளத்துல உனக்காக காத்திருக்கேன். வரும்போது மஞ்சுளாவையும் ரோஸியையும் கூட்டிகிட்டு வா"ன்னு எழுதியிருக்க. அதையே காப்பி எடுத்து மஞ்சுளாவுக்கும் ரோஸிக்கும் தனித்தனியா அனுப்பியிருக்க.. அதை யாரும் வாங்காம திருப்பி அனுப்பியிருக்காங்க... இதெல்லாம் காவியமாடா? கெரகம், அப்ப ஏதோ ஒருதலை காதல்ல அலஞ்சிகிட்டு இருந்தேன்னு நினைச்சேன், நீ தறுதலை காதலால்ல அலஞ்சிகிட்டு இருந்திருக்க..."
"ஆமா அடுத்தவங்க கடுதாசியெல்லாம் நாகரீகம் இல்லாம எதுக்கு படிக்கிறீங்களாம்"
"இது ஒண்ணுதான் கொறச்சல்.. எழுதனுதுதான் எழுதுன, ஒரு இன்லண்டு லெட்டர்ல எழுதி தொலைக்க கூடாது. கார்டுல எழுதியிருக்க. போஸ்ட் மேன்ல இருந்து எல்லாரும் படிச்சி ஏற்கனவே ஊர் உலகத்துல போன மானம்தான்... இப்ப என்ன நாகரீகம் வேண்டிகிடக்கு"
"என் வாழ்க்கை எப்பவுமே ஒரு திறந்த புத்தகம்"னு நான் மொனக ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எல்லாரும் எடத்த காலி பண்ணிட்டாங்க.
ஒரு நாள் மேஜையை நகர்த்தும் போது மேசை ஆடாமல் இருக்க நான்காக மடித்து வைத்திருந்த ஒரு பழுப்பு காகிதம் கிடைத்தது. பிரித்தால் என் பதின்ம வயதில் சமூக விஷயங்களை குறித்து எழுதியிருந்த கடிதம்.
*
அன்புள்ள நண்பா,
நேற்று வழக்கம் போல் நாம் கூடும் டிம்பர் மார்ட் அருகில் நீ வந்து நம் குழுவை காணாமல் ஏமாந்து திரும்பியதை அறிந்து வருந்தினேன். ஒத்த கருத்துடைய நம் நண்பர்கள் மட்டும் கூடி பேசி களிக்க, இடையூறு தராத டிம்பர் மார்ட்டும், அக்கவுண்டில் டீயும் தம்மும் சளைக்காமல் தரும் நாயர் கடையும் இன்றும் வசதியானதுதான். ஆனால் நான்கு பேர் மட்டும் கூடிய காலம் மலையேறிப்போச்சி. பஸ்ஸ்டாண்டுக்கு அருகில் இருந்ததால், போற வர்றவன் எல்லாம் "ஹாய் மச்சி, எங்க இங்க"ன்னு சும்மா விசாரிக்க வந்து, நம் வெட்டி அரட்டையில ஆர்வமாகி நம்ம ஜோதியில ஐக்கியம் ஆக, நேத்து சும்மா தலைய எண்ணினா 23 பேர் இருந்தானுங்க... பல சமயம் எவன் என்னா பேசறான்னே தெரியாம சந்த கடை மாதிரி ஆகிப்போச்சி. முக்கியமா அவனவன் பாதியில கெள்ம்பிற்றானுங்க, கடைசியில நாயர் கடையில காசு கொடுக்கிறப்ப தாவு தீந்துடுது. அதனால சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்கிற ஆத்தா கடையில சபைய கூட்டிட்டோம். ரொம்ப நாளக்கி அப்புறம் நம்ம ஒரிஜினல் சபா 4 பேரோட கூடுனது வித்தியாசமா இருந்திச்சி. உங்கிட்ட சொல்ல முடியல. நீ (மட்டும்) இனிமே ஆத்தா கடைக்கி வந்துடு.
நிற்க. இந்த கடித்த்தில் நான் சொல்ல இன்னுமொரு முக்கிய விஷயம் இருக்கிறது. இதுவரை வாழ்க்கையை பற்றிய மற்றவர்களின் அனுபவத்தையும் அவர்களின் பார்வையையும் மட்டுமே பார்த்து வந்த எனக்கு வாழ்க்கையை அருகிலிருந்து உணர்ந்து பார்க்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் நேற்று வாய்த்தது. அதை பற்றி உன்னிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம். மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை பற்றிய ஒரு குழப்பமான எண்ணங்களில் சிக்கியிருந்த எனக்கு நேற்று கிடைத்த அனுபவம் தெளிவான பார்வையை வழங்கியதில் மகிழ்ச்சி. யதார்த்தத்துக்கும் ·பேண்டஸிக்கும் உள்ள வித்தியாசங்களையும் யதார்த்தத்துக்கு கிடைக்காத உற்சாக வரவேற்பு ·பேண்டஸிக்கு கிடைப்பதையும் கண்கூடாக கண்டபோது ஏற்பட்ட வெறுப்பை என்னவென்று சொல்வது. ஆம். சிவாஜியின் தத்ரூபமான நடிப்பிற்கு அமைதியாக இருந்த ரசிகர்கள் சிலுக்கு சுமிதா ஆடிய க்ளப் டான்ஸின் போது ஆடிய கூத்தும், அடித்த விசிலும், கிழித்தெறிந்த டிக்கெட்டுக்களையும் பார்த்த போது சமூக விழுமியங்களின் மீது வெறுப்புதான் வந்தது. ரீகல் திரையரங்கில் நடக்கும் வாழ்க்கை படம் சீக்கிரம் ஹவுஸ்புல் ஆவதால் முன்கூட்டியே செல். இல்லையெனில் நீயும் என்னை போலவே 2 ரூ டிக்கெட் வாங்கி வாழ்க்கையை மிகவும் அருகிலிருந்து பார்க்க வேண்டிய நிலை வரும்.
அன்புடன், நான்தான்.
*
உணர்ச்சி மேலீட்டில் முகவரி எழுதும் இடத்திலெல்லாம் கடிதத்தையே எழுதி போஸ்ட் பண்ணியிருந்தது, கடிதம் திரும்பி வந்த பிறகே உறைத்தது. அப்போது பார்த்து மேஜை ஆடியதால் அதற்கு கீழே போனதுதான் இப்பொழுதுதான் மீண்டும் கிடைத்தது.
*
இந்த கார்டு எழுதிய பிறகு காலேஜ் சேர்ந்து விட்டதால் அப்புறம் கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. வீட்டிலிருந்து வரும் "நன்றாக படி" கடிதத்தை பார்த்தால் மனசு மாறி படிக்க தோன்றினால் என்ன செய்வது என்று "ஹாஸ்டல்ல போன் இருக்கு, இனி கடிதம் எல்லாம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. ஹாஸ்டலுக்கு போன் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டதால் வந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு கடிதங்களும் நின்று போனது. ஹாஸ்டலுக்கு போன் வந்தபோதெல்லாம், லேடீஸ் ஹாஸ்டல் போனுக்காக காத்திருந்த துரோகிகள், "அவரு இல்லீங்க சினிமாவுக்கு போயிட்டாரு" என்று அவதூறு பரப்பியது தனிக்கதை.
காலேஜில் இருந்த நாலு வருஷமும் சளைக்காமல், "நலம். நலமறிய பணம் அனுப்பவும்" என்று தந்தியில் நான் அனுப்பிய ஹைக்கூக்களை எல்லாம் சேர்த்து வைக்க என் வீட்டில் இருந்தவர்களுக்கு ஏன் தோன்றவேயில்லை என்பது இன்றுவரை எனக்கு புரியாத புதிர்தான்...
தமிழ்ப்பதிவுகள்
