தீபாவளி + வாழ்த்துக்கள்

திடீரென குடும்ப மரத்தை (family tree) ரொம்ப ஆழமாக தோண்டி நரகாசுரன் தமது சொந்தம் எனக்கண்டு மகிழ்ந்து/அதிர்ந்து போயிருக்கும் திரு. நரகா அவர்களின் கஸின் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ¤க்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மற்றபடி பெரியோர்கள், சான்றோர்கள், மழலையர், வலைஞர்கள், பெயர் உள்ளவர்கள், பெயர் இல்லாதவர்கள், அனானிஸ் என அனைவருக்கும் தீபாவளி, ரமலான், ஹாலோயின் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை காலத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
தியேட்டரில் பாலாபிஷேகம், தேனாபிஷேகம் ஊற்றி சூடம் கொளுத்தி தீபாவளி கொண்டாடப்போகும் தொண்டர் நண்பர்கள் சூடம் கொளுத்தும் போது உணர்ச்சி வசப்பட்டு தங்களை கொளுத்திக் கொள்ளாமலும், கட்டவுட்டில் இருந்து விழுந்து கைகால்களை உடைத்துக்கொள்ளாமலும் கொண்டாட வாழ்த்துக்கள்.
நமது ப.ம.க தொண்டர்களுக்கு இந்த தீபாவளிக்கு லீவு விடப்பட்டுள்ளது. ஆகவே பழக்க தோஷத்தில் சிறை நிரப்ப போய்விடாமல் வீட்டில் குடும்பம் குட்டியுடன் தீபாவளியை கொண்டாட வாழ்த்துக்கள். ஆனால் வழக்கம் போல கட்சி நிதியை, வீட்டு முன் எலக்ட்ரிக் போஸ்ட் நடப்படுவதை வாய் பிளந்து வேடிக்கை பார்த்த ஒரே காரணத்துக்காக பெர்மணன்ட் மின்சார மந்திரி போஸ்ட் வகிக்கும் நமது பொருளாளர் அறிவுப்பசி அண்ணாசாமி பேருக்கு அனுப்பி வைக்கவும்.
இளவட்டங்கள் இந்த தீபாவளிக்காவது "இந்த டீவியில இருந்து பேசறோம். உங்க மனசுக்கு பிடிச்சவர் பேரு சொல்லுங்க" போன்று ஏதாவது ஒரு ஐடியா பிடித்து உங்கள் மனம் கவர்ந்தவரிடம் மேட்டர் ஓப்பன் செய்து (மேலும் பல ஐடியாக்களுக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய மின்னஞ்சல் செய்யவும். முதுகில் 10000 வாலா வெடித்தால் நான் பொறுப்பல்ல. மேட்டர் ஓகேவானால் உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவத்துக்கு தலைமை நாம்தான்) வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்
குட்டிகள் வீட்டுக்கு வெளியே தண்ணீர் இல்லாமல் ஏதாவது இடம் இருந்தால் பட்டாசு கொளுத்தி ஜமாய்க்கவும். மற்றவர்கள் வீட்டுக்குள்ளயே உக்கார்ந்து சரித்திர நாயகர்கள் தங்கள் (ஒரே படத்தில் நடித்த) அனுபவத்தை பெனாத்துவதை ரசிக்கவும், செல்வராகவனும் தனுஷ¤ம் மாறி மாறி முதுகு சொறிவதை கண்டு இந்த நிலைமைக்கு தங்களை ஆளாக்கிய இயற்கையை திட்டாமல் அனுபவிக்கும் மனம் வாய்க்கவும் வாழ்த்துக்கள்.
அயல்நாடு வாழ் நண்பர்களுக்கு, தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல போன் போட்டால் கட் ஆகாமல் போன் கனெக்ஷன் கிடைக்க வாழ்த்துக்கள்.
தீபாவளியும் பகுத்தறிவும்
என்ன வயசென்று அறிய இயலாத ஒரு வயசிலிருந்து அரும்பு மீசை வளர்ந்த காலகட்டம் வரையிலான தீபாவளி பருவம் நிழலாடுகிறது... தீபாவளிக்கு முன் வரும் ஒன்னாம் தேதி இரவு யாருக்கு ஞாபகம் இருக்குமோ இல்லையோ எனக்கு இருக்கும். அன்றுதான் அப்பாவுக்கு போனஸ் நாள். போனஸ் வந்தால் கண்டிப்பாக பால்கோவாவுடன் இனிப்பு பலகார வகைகள் உண்டு. ஒன்னாம் தேதிக்கு அடுத்த ஞாயிறு தீபாவளி பர்சேஸ். சறுக்கு மரம் விளையாண்டு, ஊசி நூல் கொண்டு தைக்க முடியாத நிலைக்கு கிழிந்தால் தவிர டவுசர் மாற்றப்படாத மிடில் க்ளாஸ் பேமிலியில் ஸ்கூல் யூனிபார்ம் மூணு செட் தவிர புதுத்துணி என்றொரு சமாச்சாரம் கிடைப்பது தீபாவளி தீபாவளிக்குத்தான். சில சமயம் போனஸின் கருணைக்கேற்ப ரெண்டு செட் புதுத்துணியும் கிடைக்கும்.
துணி எடுக்கப்போவதே ஒரு வைபவம்தான். எல்லாரும் சேர்ந்து வெளியே போகும் வருடத்தின் மிகச்சில நாட்களில் அந்த நாளும் ஒன்று. மதிய சாப்பாட்டை சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு கிளம்பி வீட்டை பூட்டியவுடனே வண்டி ஏதாவது வருகிறதா எனப்பார்ப்பேன் நான். கடைத்தெருவுக்கு 2 கி.மீ இருக்கும்... பெரும்பாலும் நடைதான்... ஸ்டாண்டில் வண்டி எடுப்பது வழக்கம் இல்லை, ரெண்டு மடங்கு கேட்பார்கள்... வெகு அபூர்வமாக வழியில் ரிடர்ன் குதிரை வண்டி தென்பட்டால், பேரம் படிந்தால் வண்டி சவாரி... குதிரை வண்டி வழக்கொழிந்து ஆட்டோ வந்தாலும் பேர வைபவத்தில் ஒன்றும் மாற்றம் இல்லை.
அனைவருக்குமாக துணி எடுத்து முடித்தவுடன் ஓட்டல் சாப்பாடு. ஒன்பதாம் வகுப்பு வரை அந்த ஒரு நாள்தான் ஓட்டல் சாப்பாடு. "வீட்டுலதான் தினம் இட்டிலி தோசை, இங்கயுமா" என்று விதவிதமாக வீட்டில் சுலபமாக செய்யாத வகைகளாக ஆர்டர் செய்யப்படும். "அரைமணி பொறுத்திருந்தா வீட்டில போய் சாப்பிட்டிருக்கலாம். இப்ப ஒரு மாச வாடகை அநியாயமா ஓட்டலுக்கு, இந்த ஆடம்பரம் தேவையா?" என்ற டயலாகும் வீடு வரை கூடவே வருவதை தவிர்க்க பில் பணம் ரகசியமாக செட்டில் செய்யப்படும்.
வீட்டுக்கு வந்து ஜவுளிக்கடையில் எடுத்த துணியை ஒரு முறை மீண்டும் எடுத்துப்பார்ப்பது ஒரு தனி சுகம்... மறுநாள் டைலர் கடை வைபவம்...
"கொஞ்சம் லூஸாவே தைங்க டைலர். எல்லாம் வளர்ற பசங்க"
"அப்பா அந்த படத்துல இருக்கற மாதிரி பாக்கெட் வச்சி தைக்க சொல்லுங்கப்பா"
"அட அதெல்லாம் சரிப்படாதுடா.. ஜிகினா வேலையெல்லாம் இல்லாம ப்ளையினா இருந்தாத்தான் ஒரு டீசண்ட் லுக்கு இருக்கும்"
மற்றபடி தீபாவளிக்கு முதல் நாள் ஆபிஸுக்கு கிளம்பும்போதே சொல்லி அனுப்புவேன்:: சாயங்காலம் வண்டி எடுத்துட்டு வாங்கப்பா.. சாயங்காலம் டி.வி.எஸ்.50 வரும்.. "விடுங்கப்பா நான் வீட்டுக்குள்ள ஏத்தி விட்டுற்றேன்." அப்பா தலை வீட்டுக்குள் மறைந்ததும் சத்தம் கேட்காமல் இருப்பதற்காக வண்டியை தெருமுனை வரை தள்ளிக்கொண்டோ ஓடிப்போய் அதே வேகத்தில் தாவி உக்கார்ந்து க்ளட்சை விட்டால்... ஒரு பெரிய ரவுண்டு... முடிந்தால் நம்ம பிரண்டுங்க வீட்டுக்கு எல்லாம் ஒரு விசிட். சொந்தமாக சைக்கிள் வைத்திருக்கும் அவனுங்ககிட்ட அந்த ஒரு நாள் கூட பீலா விடாட்டி நம்மள மதிக்கவே மாட்டாய்ங்க. அப்படியே ட்யூசனில் நாம லுக்கு விடும் டாவு வீட்டு பக்கத்திலும் ஒரு ரவுண்டு. மத்தாப்பு கித்தாப்பு கொளுத்த வெளியில வராமலா இருப்பா...இருந்தா நம்ம மனசெல்லாம் ஒரு மத்தாப்புத்தான்.. இல்லையின்னா இருக்கவே இருக்கு வீட்டுல புஸ்வானம்.
வீட்டுக்கு வந்தால் பட்டாசு பாக்கெட் ஏற்கனவே பிரிக்கப்பட்டிருக்கும்.. "எங்கடா போயிட்ட இவ்வளவு நேரம்.. இந்த சங்கு சக்கரம், புஸ்வானத்த எல்லாம் இப்பவே கொளுத்தலாம்ல..." அதாவது வெளிச்சம் தரும் பட்டாசுகள் இரவுக்கு, சத்தம் தரும் ஐட்டங்கள் மறுநாள் காலைக்கு என்பது ஒரு கணக்கு... முதல் புஸ்வானம் கொளுத்தியதும் பக்கத்து வீட்டு சீனியும் அவன் தம்பியும் எங்க வீட்டில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் காலையில்தான் எல்லா பட்டாசுமே. அதிலும் அவர்கள் வீட்டில் சண்டை வராமல் இருக்க இருவருக்கும் சரிசமமாக பட்டாசு பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும்... எங்கள் வீட்டிலும் அப்படி பிரிக்க சொன்னால், முதுகில்தான் பட்டாசு வெடிக்கும். எப்படி இருந்தாலும் டகால்ட்டி வேலை செய்து நாந்தான் நிறைய வெடிக்கப்போகிறேன். அதனால் ஒரு ப்ரச்னையும் இல்லை. நாலு புஸ்வானம் கொளுத்திவிட்டு திரும்பிப்பார்த்தால் சீனியும் அவன் தம்பியும் எங்கள் வீட்டு பட்டாசுகளை கொளுத்திக்கொண்டிருப்பார்கள்... எனக்கு கடுப்பாக இருக்கும்.
"அவங்க வீட்டில்தான் அவங்களுக்கு வாங்கித்தந்திருக்காங்கல்ல. அத அவனுங்க எனக்கு தரானுங்களா. இவரு மாத்திரம் எதுக்கு அவங்களுக்கு தராரு?"
"யாரு கொளுத்தினா என்னாடா, வெளிச்சம் ஒரே மாதிரிதான வருது. இதுக்கெல்லாம் சுணங்காத போயி சந்தோசமா இரு. உங்கிட்ட பேசினா இங்க பூந்தி கெட்டியாயிடும் ஓடு ஓடு"
பட்டாசு எல்லாம் நன்றாக வெடிக்க வேண்டி, அதையெல்லாம் ஒரு பெரிய பித்தளை தட்டில் போட்டு தணல் பிடுங்கப்பட்ட அடுப்பின் மேல் வைத்துவிட்டு படுத்தால் அன்றிரவு தூக்கமே இருக்காது. எப்ப தூங்கினோம் என்றே தெரியாத நிலையில் "எந்திரிங்க எந்திரிங்க ஹேப்பி தீபாவளி..."
இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் மங்கலான 60W குண்டு பல்பு வெளிச்சத்தில் நடுக்கும் குளிரில் எண்ணெய் வைகப்படும் போது இருக்கும் ஜிலீர், பித்தளை அண்டாவில் விளாவிய சுடுதண்ணீரின் வெதுவெதுப்பான இளம் சூடு, புலி மார்க் சீயக்காய் பொடி இரண்டாம் முறை போடுகையில் ஏற்படும் நுரை ஏற்கனவே கழுத்தில் இருக்கும் மெடிமிக்ஸோடு கலக்கும் போது ஏற்படும் அந்த வாசனை என்று எல்லாமே இன்றும் நினைவில் இருக்கிறது. எல்லாம் முடிந்து எப்படா அப்பா வந்து புதுத்துணி எடுத்துக்கொடுப்பார், பட்டாசு வெடிக்கலாம் என்று காத்திருக்கும் அந்த நேர படபடப்பு ஜாப் இன்டர்வியூவில் கூட கிடைத்ததில்லை.
பட்டாசை அடுக்கி வைப்பது நம்ம வேலை. சாமி கும்பிட்டு முடித்ததுதான் ஞாபகம் இருக்கும் துணி மாறியிருக்கும். ஊதுவத்தி ரெடியாயிருக்கும். டேய் இருடா ஒரு ஸ்வீட்ட வாயில போட்டுட்டு போ என்பதெல்லாம் காதிலேயே விழாது. சிவா அதுக்குள்ள ஆரம்பிச்சிருப்பான் கச்சேரியை. நாங்க மாத்தி மாத்தி போட்டுத்தாக்கும் போது எதிர் வீட்டு மாடியில் ஃபிகர் சாட்டை பிடித்துக்கொண்டிருப்பது ஓரக்கண்ணில் தெரிந்தால் பிஜிலி க்ராக்கர்ஸை கையாலேயே வீசி எறிய, அது பதறுவது தெரிந்தால்... ஆஹா இதுக்காக லஷ்மி வெடியவே போடலாமே...
இந்த சமயத்தில் எல்லார் வீட்டிலிருந்தும் பலகார பரிமாற்றம் ஆரம்பித்திருக்கும். பல பெண்கள் சீர்வரிசை கணக்காக தட்டோடு நடப்பார்கள். அவர்களுக்காக ஜென்டில்மென் ஸ்டைல் வெடிப்பு வைபவம். பட்டாசெல்லாம் முடிந்தவுடன் வீட்டு முன்னால் கிடக்கும் தாளை குமித்து ஒரு பெருமித ஷோ நடக்கும். அப்புறம் புஸ்ஸு கொளுத்தும் படலம். வெடிக்காத பட்டாசையெல்லாம் பொறுக்கி அதனுள் இருக்கும் மருந்தை ஒரு பெரிய தாளில் வைத்து அதனை பற்ற வைத்தால் அணுகுண்டு போட்டால் வரும் மஷ்ரூம் கணக்காய் புகை வரும். அதிக பட்ச புகை யாருக்கு வருகிறதோ அன்று அவந்தான் ஹீரோ.. அதற்காக புது பட்டாசெல்லாம் கூடாது. ஒன்லி பொய்த்துப்போன பொறுக்கிய பட்டாசுகள்தான்.
இப்போ கோவிலுக்கு போகும் நேரம். அப்போதெல்லாம் கேபிள் டிவி என்றொரு சமாச்சாரம் வந்திருக்கவில்லை. ஆகவே எல்லாரும் கோயிலுக்கு வருவார்கள். கோவிலில் முதல் 10 நிமிசம் நிச்சயமாக பய பக்தியுடந்தான் இருந்தேன் என்று ஞாபகம். அதற்கப்புறம்... தலைக்கு குளித்து புதுத்துணியுடன் பார்த்தும் பார்ககாமல் போல் அவள்கள் கோவிலில் சுற்றி வர, இடையில் பார்வை பரிமாற்றங்கள் நடந்ததெல்லாம் மறக்கக்கூடிய சமாச்சாரங்களா என்ன. நிம்மி இப்போது எங்கிருக்கிறாள் என்று விசாரிக்க வேண்டும்.
இன்று வீக்கெண்டில் mall செல்லும் போதெல்லாம் தோன்றினால் புதுத்துணி வாங்குவதால் தீபாவளிக்கென்று தனியாக துணி வாங்க வேண்டும் என்ற நினைப்பு கூட இருப்பதில்லை... ஊரிலிருந்து "ஏண்டா காசக்கரியாக்குற, காசு மதிப்பு உனக்கு கொஞ்சமாவது தெரியுதா" என்று திட்டு வாங்கும் அளவு பட்டாசு வெடிக்கணும் என்று ஒரு ஆசை வருகிறது... தீபாவளி அன்று வீட்டுக்கு போன் போட்டு
"அட நம்ம தெருவுல கூட எவனோ 1000 வாலா வெடிக்கிறான் போலருக்கு"
"ஆமாம் ஆட்டோக்காரர் இருந்தாரே 3ம் வீடு அங்க புதுசா குடி வந்திருக்கவங்க வீட்டு பையந்தான்"
"இருக்கட்டும் இருக்கட்டும்"...
அவ்வளவுதான் தீபாவளி.
நினனத்துப்பார்த்தால் சின்ன வயது மிடில் க்ளாஸ் தீபாவளி சந்தோஷங்கள் ஒரு பொக்கிஷம் போல் தோன்றுகிறது... நல்ல வேளையாக
அ) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும்..
ஆ) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்..
இ) ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் பகுத்தறிவுக்கு ஒப்புமை பெற்ற விஷயமா?
ஈ) இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்?அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?
என்றெல்லாம் பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னதுபோல என்று கண்மூடித்தனமாக யோசித்து, அதை கெடுக்காமல் இருந்தாரே அப்பா என்று தோன்றுகிறது...
தமிழ்ப்பதிவுகள்
மழித்தலும்...

ஒரு பருவத்தின் வளர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்றால் ஒரு பாதி உரோமத்தை மழித்துவிட்டால் போதும் சுலபமாக அறியத்தரலாம் என்று கணக்கு போட்டால் வேறொரு ப்ரச்னை. பாலன்ஸ் இழந்து மறுபாதி உரோமத்தின் எடை தாங்காமல் ஆடு அந்தப்பக்கம் சாய்கிறது. ஆட்டை நிற்க வைத்து படத்தை வசப்படுத்த தேவைப்பட்டது கடும் முயற்சியும் 30 ஆடுகளும்..

பூச்சிகளை அழிக்க ஹவாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தவளைகள் எதிர்பாராத விதமாக அதன் விஷத்தன்மை வாய்ந்த தோல் மூலம் உள்ளூர் பிராணிகளின் உயிருக்கு உலை வைக்க உடனே அவைகள் பேப்பர் வெய்ட் ஆக ஆக்கப்பட்டன... ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உலருவதற்கு முன் வாய் திறந்துவிடக்கூடாது என்பதற்காக க்ளிப்...

தவளை சாப்பிடும் வௌவால் தவளையை நெருங்கியவுடந்தான் அறிகிறது, அது விஷத்தவளை என்பதை...
இது போன்று அரிய பல நல்ல புகைப்படங்கள் கொண்டிருக்கிறது :: National Geographic 100 best pictures, Collectors Edition Vol I.
தினமலரின் சகிப்புத்தன்மை
தினமலர் இன்றைய நட்சத்திர பதிவாக நமது பதிவை குறிப்பிட்டுள்ளது. தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் என்ற தலைப்பில் "முகமூடி - வலைத்தள சூத்திரம்" என்று குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறது...
தங்கள் கருத்துக்களை வலைத்தளத்தில் எழுதுவற்கும் அதற்கான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தான் பெற்ற அனுபவத்திலிருந்து சில தகவல்களை அள்ளி வழங்கியுள்ளார் முகமூடி. ஆழமான கருத்துக்களை பதிவு செய்தல், அரட்டை கச்சேரிகள், அர்த்தமற்ற பிற விஷயங்கள் என்று பிரித்து, அர்த்தத்துடன் ஆழமாக எழுதுவது எப்படி என்று சொல்லித் தருகிறார். எழுத்துத்துறை அல்லாத பிற துறையிலிருந்து எழுதுவோருக்கு இது மிகவும் உதவும் : mugamoodi.blogspot.com
தினமலர் குறிப்பிடும் பதிவு :: ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி ?
தினமலரின் பார்வையை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. பின்ன.. 60 அடிக்கு ஆழமான பின்னூட்டம் இட்ட இளவஞ்சியில ஆரம்பிச்சி தாழங்காய் கடுக்காய் எல்லாம் போட்டு கவித செஞ்ச ஜும்பலயா ழ்பா வரைக்கும் அந்த பதிவோட கேரக்டருக்கு பலர் பலவிதமா அர்த்தம் கொடுக்க, நேர் கொண்ட பார்வை பார்த்த தினமலர் போல் எல்லாரும் இருந்தா கருத்து வேற்றுமைக்கெல்லாம் இடம் வருமா சொல்லுங்க...
வலைப்பதிவுகளை தினமலரில் தினம்தோறும் அறிமுகப்படுத்தும் அந்த முகமிலிக்கு எனது நன்றி.
வலைப்பதிவுகள் பத்தியெல்லாம் அறிமுகமே இல்லாம நேரா தினமலர்ல இருந்து யாராவது வந்தா அவர்கள் பார்க்க (படிக்கவும்தான்) ::
01. ஒரு சைவப் பதிவு
02. அண்ணா பல்கலை மன்னராட்சி
03. சிறுகதைப்போட்டி முடிவுகள்
04. எஸ்.ஏ.ராஜ்குமாருடன் சந்திப்பு
05. மெட்டி ஒலி காற்றோடு
06. உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி
07. புலிகளின் மூர்க்க குணம்
08. முதல் விமான பயண வழிகாட்டி
மேற்கண்ட பதிவுகள தெரிவு செஞ்ச விதத்த சொன்னா நிறைய பேரு நிஜமாவே அடிக்க வருவாங்க. அதனால அப்பீட்டு... விட்டுப்போன மிச்ச சொச்ச பதிவுகள சைடுல பாருங்க ஒரு ட்ராப் டவுன் லிஸ்டு, அதுல இருந்து படிச்சுகுங்க. எல்லாப்பதிவும் இருக்கு.
சரி இந்த பதிவுக்கும் தலைப்புல சகிப்புத்தன்மைன்னு இருக்கே அதுக்கும் என்ன சம்பந்தம்கறீங்களா? இங்க போய் பாருங்க புரியும்...
தினமலர் ஜங்க் மலர்
இப்படி அடுத்து ரிலீஸ் ஆகப்போற என்னோட "சகிப்புத்தன்மை" பதிவுக்கு ஓவரா பில்டப் கொடுக்கிறேன். ஆனா பதிவு ரிலீஸ் ஆகும்போது "யானை படுத்தா குதிரை ஓடினா"ன்னு ஜல்லியடிக்கிற அளவு இல்லாம இருந்தா சரிதான்...
ஒரு முக்கிய அறிவிப்பு
டிஸ்க்ளெய்மர் :: The content of this பதிவு is only intended to be informative and are hypothetical; they hold no reference to any person or persons alive or dead. Any similarity with any1, if at all is purely unintentional (படத்தை பெரிதாக்க சுட்டவும்)


ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட "சகிப்புத்தன்மை" பதிவு போஸ்ட்-ப்ரொடக்ஷன் வேலைகள் பாக்கி காரணமாக தள்ளிப்போவதால் இது சும்மா உல்லாலக்கடி ஜல்லியடி பதிவு
கருத்து சுதந்திரம்
அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னண்ணே...
அண்ணாசாமி: அதுவா... எனக்கு பிடிச்ச கருத்த சொல்றதுக்கு உனக்கு சுதந்திரம் உண்டுன்னு அர்த்தம்
***
இது "அறிவுப்பசி அண்ணாசாமி"ன்னு சைடுல ரொம்ப நாளா இருக்கறதுதான். நான் சமீபத்தில் பார்த்த படங்களுக்கான Fahrenheit 9/11 மற்றும் American History X ஆகிய படங்களின் விமர்சனம் தாங்கி வரப்போகும் "சகிப்புத்தன்மை" பதிவுக்கு ஒரு முன்னோட்டமா இருக்கட்டுமேன்னு இங்க தனியா... (படங்களின் பாதிப்பாக தமிழர் மற்றும் தமிழ் சமுதாயத்தின் சகிப்புத்தன்மை குறித்த என் கண்ணோட்டத்தையும் - தமிழா உனக்கு இது தேவையா? - அதில் எழுதறதால அந்த பதிவுக்கு "சகிப்புத்தன்மை'ன்னு பேரு)
சினிமா விமர்சன பதிவுக்கு இது வரை Trailer பதிவு, தமிழ் கூறும் நல்லுலகத்தில் யாரும் எழுதியதுண்டா? என்பதை இந்த நேரத்திலே கேட்டுக்கொள்ள... விரும்புகிறேன் (சினேகா நடித்ததல்ல)
இதுக்கும் எதேச்சையா இந்த காலகட்டத்துல நடக்குற தமிழ்மண சென்சார் போர்டு (ஒன் மேன் போர்டு என படிக்கவும்) நிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதான் சாக்குன்னு இது எதிர்மறையா இருக்கு, இதயும் தூக்கணும்னு யாரும் ஐடியா கொடுத்திராதீங்கப்பு... எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம், சரியா...
அனிமல் ப்ளானட்

இவன கரையேத்தரதுகுள்ள தாவு தீந்துடுது

என்னதான் கால்குலேட் பண்ணி குதிச்சாலும் சில சமயம் கணக்கு தப்பாயி அடி படுதே

எல்லா பக்கமும் ஓடினாத்தான் உயிர் வாழ முடியும்கற நெலமையில என்ன மட்டும் ஏன் படைச்சான் ஆண்டவன்

எந்த பக்கம் தாவுவீங்கன்னு எங்கிட்ட கேக்குறத அவமானமா கருதுறேன்

புது காட்டுல குறைஞ்சது 40 மரம் இல்லேன்னா இலை கலருக்கு மாறிட வேண்டியதுதான்
சனி டி.வி
இன்னிக்கி நம்ம வூட்டுக்கு சன் டி.வி கனெக்சன் வருதுங்கோ... கூட்டி கழிச்சி பாத்தா ஒரு அஞ்சாறு வருசம் இருக்கும் சன் டி.விய ஒளுங்கா பாத்து... அப்ப மட்டும் எங்க ஒளுங்கா பாத்தோம். பிட்டு பிட்டா பாத்ததுதான்...
ஒரு நா பகல்ல வீட்டுல இருக்க சொல்ல "கோகிலா எங்கே போறா" அப்படீன்னு ஒரு நாடகம் போட்டான். செம த்ரில்லர்பா அந்த கத.. நாடகம் ஆரம்பிக்க சொல்ல படா சோக்கா தீம் பாட்டுன்னு ஒரு சங்கதி. அது முடிஞ்சவுடனே விளம்பரம்... அப்பால ஆரம்பிச்சிது நாடகம். என்ன மாதிரி பிட்டு பிட்டா மெகா பாக்குறவனுங்க வசதிக்காக முன் கதை சுருக்கம்னு ஒரு பத்து நிமிசம் நேத்து போட்ட கதைய காமிக்கிறான்... அப்புறம் இன்னிக்கி கத ஆரம்பிக்கிது...
கோகிலா மளிக வாங்க கடைக்கி போறாப்புல கதை. அவ செருப்ப தேடுறதுல ஆரம்பிச்சி போடுற வரக்கும் கேமிரா அவ செருப்பயே சுத்துது.. அப்புறம் கூடய தூக்கிகிட்டு தெருவுல இறங்கி நடக்க ஆரம்பிக்கிறா... தெருவுல ஆள் நடமாட்டமே இல்ல... மெதுவா கேமிரா அவ பின்னாடியே போவுது... எனக்கு மனசு பக்கு பக்குன்னு அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டுது. என்னமோ ஆவ போவுது கோகிலாவுக்கு, ஆள அரவமே இல்லாத இந்த ரோட்டுல இவ எதுக்கு பகல் 11 மணிக்கு தனியா போறான்னு மனசு பரபரங்குது... இப்போ தெரு மொனக்கி வந்திட்டா... அய்யோ திரும்புறப்ப வில்லன் நின்னுகிட்டு இருக்க போறான். அவள என்னமோ பண்ண போறான்னு டென்சன் கூடுது... இந்த நேரம் பாத்து விளம்பரம் போட்டான்யா... சபிச்சிகிட்டே உக்காந்திருக்கேன். வெயில் தணிக்க வாங்குன 'ஆச்சி மோர்' பாக்கெட் பிரிக்காம அப்பிடியே இருக்கு... 10 நிமிசம் விளம்பரம் முடிஞ்சி திருப்பியும் ஆரம்பிச்சிது கத... இப்ப கோகில தெருவ திரும்பிட்டா... 10 அடி போனப்புறம் பாத்த ஒரு நாய் ஓடுது... அய்யோ இது நல்ல சகுனம் இல்லியே வில்லன் இப்ப வரப்போறானான்னு பாத்தா அவன் வரக்காணோம். கொஞ்சம் நிம்மதி... நடக்குறா நடக்குறா... நடந்துகிட்டே இருக்கிறா... அடுத்த தெரு முனையும் வந்திடுச்சி... இந்த தெரு முனையில வில்லன் இருப்பானோன்னு ஒரு பயம் வந்திச்சா... அப்ப மறுபடி விளம்பரம்.... விளம்பர ப்ரேக்ல தபால் எடுக்கலாம்னு வெளில போனா அப்பத்தான் போஸ்ட் மேன் வந்திருந்தாரு. அவரு கிட்ட ஒரு 5 நிமிசம் கடல போட்டுட்டு அய்யோ கோகிலா எங்கியாவது போயிட போறான்னு பதறி அடிச்சி வந்தா அப்பவும் கோகிலா நடந்துகிட்டு இருந்தா... அடங்கொக்கமக்கா... இவ உண்மையிலேயே எங்கதாண்டா போறான்னு யோசிக்க ஆரம்பிக்கிறப்ப இன்னொரு வயசான அம்மா எதுத்தாப்புல வராங்க.. அவங்க கோகிலாவ நிறுத்தி "ஏண்டி கோகிலா நான் கேள்விபட்டது உண்மையா"ன்னு கேக்க, அந்த கேள்வியில அதிர்ச்சி ஆகுற கோகிலா முகபாவத்த ஃப்ரீஸ் பண்றதோட அன்னிக்கி எபிஸோடு முடிஞ்சி போச்சி...
துணி காயப்போட மாடிக்கி போன அப்பத்தா வந்து 'எலேய் இன்னிக்கி என்னடா நடந்திச்சி"ங்குது.. என்னத்தன்னு சொல்வேன்... "வெறும் நடைதான் அப்பத்தா வேற ஒண்ணுமில்ல"ன்னேன்... அது என்னய நம்பாம "வர வர இவன் என்னய மதிக்கவே மாட்டேங்குறான்"னு அப்பாகிட்ட ஒரே புலம்பல்.
அப்புறம் இங்க வந்தப்புறம் சன் டிவி வாங்கணும்னே என்னவோ தோணல... ஆமா அங்க இருந்தப்பியே டிவி பாத்ததில்ல.. ராத்திரி ராதிகா நாடகம் போடறப்ப அஞ்சி நிமிசம் பாக்குறாப்புல உக்காந்திருப்பேன். யுவராணி வந்தா ஒரு பத்து நிமிசம் பாக்குறது வளக்கம். இல்லயின்னா வில்லன் வாசு வற்றப்போ "போயிட்டு வரேன்"ன்னு மெதுவா சொல்லீட்டு அவங்க நாடக சுவாரசியத்துல இருக்க சொல்லவே அப்பீட் ஆயிடுவேன். மிட்நைட் திரும்பி வரப்போ இப்ப எதுக்கு கச்சேரின்னு பேசாம இருந்திடுவாங்க. மறுநா காலையில இனிமே நாடகத்துக்கு நடுவுல எஸ்கேப் ஆவற வேல வச்சிக்காதன்னு ஒரு வார்னிங் வரும். அது அன்னிக்கி நாடகம் ஆரம்பிக்கிற வரைக்கும்தான்... ராதிகா சேச்சி வாள்க..
போன வருசம் வாங்கலாம்னு சின்னதத ஒரு ரோசன வந்தப்போ, பொங்கல் சமயத்துல நண்பன் வீட்டுல பாத்தா சன் டிவி ஓடிகிட்டு இருந்திச்சி.. தூர்தர்சன் ரேஞ்சுக்கு காடி கலர்ல பெயின்ட் அடிச்சி மாடு பட கட்டவுட்டு வைக்க போருன்னு ஒரு செட்டிங்கு. இந்தப்புறம் விசயலச்சுமி நவநீதகிருஸ்னன் கோஷ்டி அந்தப்புறம் புஷ்பவனம் குப்புசாமி கோஷ்டி. நடுவுல நம்ம கங்க அமரன். புரியாத விசயம் என்னன்னா கங்கை அமரன் எதுக்கு வெள்ள கலர் சுடிதார்லயே இந்த மாதிரி பங்சனுக்கு வராருன்னு.. அடப்பாவி அதுக்கு பேரு குர்தான்னான் என் ·ப்ரண்டு.. குர்தான்னா நம்ம வைரமுத்து போடுறதாச்சே... கங்கை அமரன் டைட் பேண்டு, பாக்கெட் இல்லாத நீள சட்டை, துப்பட்டா எல்லாம் போட்டா அது சுடிதானேன்னா ஒத்துக்க மாட்டேங்கிறாய்ங்க.. சரி பங்சனுக்கு போவோம். இவங்க ஒரு பாட்டு பாட அவங்க அதுக்கு எசப்பாட்டு பாடன்னு ஒரே கூத்து. கிராமத்துலயிருந்து வந்திருந்த அவங்க கெழவி "என்னா கருமாந்திரமடா அது... ஒரே நாராசம். அத நிறுத்தி தொல"ன்னு கூப்பாடு. அப்புறம் பாட்டி பாடுன பாட்ட கேட்டுகிட்டே பொங்க சாப்பிட்டோம். அத்தோட அந்த ஐடியா அப்பீட்டு.
நான் சன் டிவியில் விரும்பி பாத்தது சண்டே மாலை 3.30க்கு வரும் காமெடி, டெயிலி நைட் அர்ச்சனா வற்ற காமெடி டைம் (காமெடிக்காக மட்டும்) அப்புறம் விசுவின் அரட்டை அரங்கம். யார்னா பொம்பள எதுனா சமூக/குடும்ப கஸ்டத்த சொல்லி அழ அத பாத்து விசு கதறி கதறி அழன்னு ஒரே காமெடி ப்ளஸ் சென்டிமெண்டா பொளுது போவும்.
இன்னிக்கி சன் டிவி வந்தவுடனே முதல் வேளையா கோகிலா ஒழுங்கா போவ வேண்டிய எடத்துக்கு போயிட்டாளா இல்லயான்னு பாக்கணும். அப்புறம் தீம் பாட்டுல யானையெல்லாம் சும்மா பந்தாவா வற்ற நம்ம ராதிகாவோட நாடகம். விசு அளுவாச்சிக்கு நடுவுல சொல்ற பத்தாம்பசலி கருத்துக்கள கேக்கணும் போல இருக்கு... அட எல்லாத்தயும் ரெக்கார்டட் கேஸட்டா தேசி கடையில பாத்துக்கலாம்னு வச்சிக்கிங்க... ஆனா சன் டிவி வாங்குறதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு... அது தினம் தினம் இன்னொவேட்டிவா நடக்குற லைவ் போராட்ட காமெடிங்க...
பிஞ்சின் மரணம்
21 வயது holly ashcraft செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்த பட்ச 25 வருட சிறை முதல் அதிக பட்ச ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். அவர் செய்த குற்றம் :: புதிதாய் பிறந்த குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து குப்பை தொட்டியில் போட்டது.
நேற்று குழந்தை கிடந்த குப்பை தொட்டிக்கு அருகில் இருந்த டிபார்மெண்ட்ல் கடையில் இருந்து அவசர உதவிக்கான 911 அழைப்பு வந்ததை அடுத்து விரைந்த பாராமெடிக்ஸ் குழு குழந்தை ஏற்கனவே இறந்து இருந்ததை கண்டுபிடித்தனர். தொப்புள் கொடி கூட சரியாக பிரிந்திராத பச்சை குழந்தை. அந்த தொலைபேசி அழைப்பு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட, அதை கேட்ட ஒருவர் அந்த குரலின் சொந்தக்காரரை அடையாளம் கண்டு அவரை பேசி சரிகட்டி போலீஸிடம் பேச வைக்க அந்த அனானியின் துணையால் இன்று ஆஷ்க்ராஃப்ட் கைது செய்யப்பட்டார். அவர் USC - தென் கலிபோர்னியா பல்கலைக்கழக - மாணவி.
இங்கே குழந்தையை வைத்துக்கொள்ள விரும்பாவிட்டால் அதை அருகில் உள்ள மருத்துவமனை அல்லது தீயணைப்பு நிலையம் ஆகியவற்றில் கொடுத்துவிடலாம். எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். ஏன் ஆஷ்க்ராஃப்ட் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து குப்பை தொட்டியில் போட்டார் என்று இதுவரை தெரியவில்லை. இப்போது child abuse, murder ஆகிய பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 25 வருட சிறை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும்.
****
இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் அபூர்வம். மைக்கேல் ஜாக்ஸன் போல் பணபலம் இந்த பெண்ணுக்கு இருந்தால் ஒரு வேளை அட்டர்னிகள் அவளுக்கு விடுதலை வாங்கித்தராலம் அல்லது குறைந்த பட்ச தண்டனை வாங்கித்தரலாம். அப்படி இல்லாத பட்சத்தில் சட்ட இயந்திரம் வேக வேகமாக செயல்பட்டு எப்படியாவது அவளுக்கு அதிக பட்ச தண்டனை வாங்கித்தர போராடும் (குழந்தை கொடுமைப்படுத்தப்பட்டதற்கான முகாந்திரம் இல்லையென்று சொன்னார்கள். இருப்பினும் child abuse பிரிவிலும் அவள் வழக்கு வருவதாக சேனல் 11 மதியம் சொன்னது)
இந்த விஷயம் பார்த்த நண்பர்கள் குழாம் ஆத்திரமடைந்து அவளை சபித்தது... பச்சை குழந்தையை குப்பையில் எறிந்த அவளை தூக்கில் போட்டாலும் சரி என்று உணர்ச்சிவசப்பட்டது. என்ன நடந்தது என்ற விசாரணை நடக்கும் முன்பே சமூகத்தால் அவளுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே, அவளை பார்த்தால் பரிதாபம்தான் பிறக்கிறது என்ற என் கருத்தில் அவர்களின் கோபம் அதிகமானது. நம்மூரில் நடக்கும் பெண் சிசுக்கொலைகள் ஞாபகப்படுத்தப்பட்டது.
****
"குழந்தை வளர்க்க துப்பில்லாதவ எதுக்கு பெத்துக்கணும்" இதை கேட்பவர்கள் பெண் சிசுக்கொலையின் பிண்ணனியில் இருக்கும் சமூக அவலத்தை உணர்வதற்கான எந்த வாய்ப்பும் கிடைக்காதவர்களாக இருக்கலாம். 12 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம் என்ற விஷயத்திற்காக இரண்டு ஆண்டுகள் தன் சொந்தக்கார பெண்ணின் திருமணம் தள்ளிப்போனதாக காய்கறிகாரம்மா சொன்னார். அவர் பேச்சினூடாக அவர் "மேல்தட்டு ஏழைகள்" லிஸ்டில் வருபவர் என்பது புரிந்தது. கீழ்த்தட்டு ஏழைகள் என்போர் 5 பவுனுக்கும் குறைவான நகைகள், 5 ஆயிரம் நகை என்ற அளவில் எல்லாம் பாதிக்கப்படுவர் என்பது புரிந்தது. அதை விட குறைந்த பணத்துக்காக "வாழா வெட்டி" பட்டம் கொடுக்கப்பட்ட பெண்களை பற்றியும் கேள்விப்பட்டேன்.
"சரி குழந்தையை கலைத்து விடுவதுதானே"... அதற்கான வசதி வாய்ப்பு கிடையாது. அல்லது ஒரு கட்டத்திற்கு மேல் அது முடியாமல் போகலாம். மேலும் கருக்கலைப்பு அரசாங்கத்தால் த்டை செய்யப்பட்ட விஷயம். மட்டுமல்ல, அது குற்றம் / பாவம் என்பதாகவும் இருக்கிறது.
"அப்ப தொட்டில் குழந்தை திட்டத்தில் விட்டுவிடுவதுதானே?"... நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாத பெரும்பான்மையினர் இருக்கும் இடத்தில் திரைப்படங்கள் ஆதரவற்ற கேரக்டர்களுக்கு தரும் அர்த்தங்ளும் பயம்/வெறுப்பு தருபவையாகவே இருக்கிறது. பெரும்பாலான படங்களில் "அனாதைகள்" ரவுடிகளாகவும் பொறுக்கிகளாகவுமே சித்தரிக்கப்படுகிறார்கள். ஆதரவற்ற ஒரு குழந்தை ஒரு காப்பகத்தில் கவனிக்கப்பட்டு, ஒழுங்காக கல்வி கற்று ஒரு வேலையில் சேர்ந்து நல்ல முறையில் சமூகத்தில் வாழ்வதாக எந்த திரைப்படமாவது வந்திருக்கிறதா?
கைவிடப்படும் குழந்தைகளை அரசாங்கம் வளர்க்கிறது என்பது வரை சரி. ஆனால் இந்த திட்டம் எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறதா? ஏன் ஒரிரு இடங்களில் மட்டும் தொட்டில் இருக்கிறது? ஏன் எல்லா போலீஸ் நிலையங்கள் அல்லது தீயணைப்பு நிலையங்கள், சமூக நல மையங்கள் முதலிய இடங்களில் தொட்டில்களை வைக்க கூடாது? பெரும்பாலானவர்கள் அரசாங்கத்திடம் விடுவதை காட்டிலும் கொல்வதற்கு ஏன் முன்னுரிமை கொடுக்கிறார்கள்? நாம் பெத்த குழந்தை அனாதையாக கஷ்டப்பட்டு வளர்வதை காட்டிலும் ஒரேடியாக போய் சேருவதே மேல் என்று நினைக்கிறார்களா? அந்த குழந்தைகள் வளர்ந்த பின் அரசாங்கம் என்ன செய்கிறது? அக்குழந்தைகளின் கல்யாணம் முதலிய எதிர்கால திட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எத்தனை குழந்தைகள் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றன? அப்படி ஒப்படைக்கப்படும் குழந்தைகள் நன்றாக பராமரிக்கப்படுகிறார்களா என்று அரசு கவனிக்கிறதா? எனபன போன்ற கேள்விகளுக்கு அரசு விளம்பரங்கள் மூலம் விடை சொன்னால் ஒருவேளை மாற்றம் வருமோ?
பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்
அக்கணத்தை அனுபவித்து நடனம் ஆடிக்கொண்டிருந்த
அந்த அழகான வாலிபர்களை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞரின் அப்போதைய ஒரே நோக்கம் :: ப்ளாஷ் வெளிச்சத்தை கூரையில் அடித்து அதன் பிரதிபலிப்பில் படம் பிடிக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் அந்த அழகான யுவ யுவதிகளின் மேல் வெளிச்சம் "அடி"க்காமல் அவர்கள் கவனம் சிதறாமல் அவர்கள் உலகை அவர்கள் அனுபவித்திருப்பர் என்பது அவரின் எண்ணம். கலைஞர் : லைஃப் பத்திரிக்கையின் ஆஸ்தான Nila Leen காலம் : 1947
போன முறை நூலகம் சென்றிருந்த போது பழைய புத்தக விற்பனையில் சொற்ப விலைக்கு "The Best of Life - Subscribers Special Edition" எனும் பொக்கிஷம் கிடைத்தது. Life பத்திரிக்கையில் 1946-1966 காலகட்டத்தில் வெளிவந்த காலத்தை வெல்லும் புகைப்படங்கள் ஒரு தொகுப்பாக.
அதில் The Challenge of youth-watching :: following the kids into "The Gap" என்னும் தலைப்பில் இளைஞர்கள் வாழ்க்கை - தலைமுறை இடைவெளி பற்றிய குறிப்பில் வந்த புகைப்படம் இது (ஸ்கான் செய்யப்பட்டது. பெரிதாக்க சுட்டவும்). இந்த 1947 புகைப்படத்துக்கும், இங்கே இல்லாத ஒரு 1966 புகைப்படத்தையும் குறித்து Life இவ்வாறு எழுதுகிறது.
From the starry-eyed young dancers at the left to the calorific couple* at right, there is clear evidence of a quantum jump. It began when young people's activities were looked on with affectionate approval by nostalgic parents and ended with the era of the Generation Gap. About the time the Silent Generation of the Eisenhower years gave way to the Beatlemaniacs, the chances in youth escalated exponentially.
* 1966 ஆண்டு கலிபோர்னியா கார்னிவலில் மேலாடை இன்றி சுதந்திரமாக ஆடிக்கொண்டிருந்த இளம் ஜோடியின் படம் மற்றும் கட்டுரையின் இதர படங்களை இங்கு வெளியிட விரும்பவில்லை.
குறிப்பு : இப்படங்களை வெளியிட்டு, கலாச்சாரம் நாசமாகப்போகிறதே என்ற சமூக அக்கறையில் லைஃப் பத்திரிக்கை எதுவும் எழுதியதா, அதன் அடிப்படையில் துல்ஸா ஷெரீஃப் அந்த ஹோட்டல் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என்பது பற்றியெல்லாம் செய்தி இல்லை. இடது பக்கத்தில் இருப்பது 1971 ஏப்ரம் 2 ம் தேதியிட்ட Life பத்திரிக்கையில் வந்த, சமுதாயத்துக்கு முக்கியமானது என்று அக்காலகட்டத்தில் அது கருதிய விஷயத்தை அலசும் ஒரு கட்டுரை குறித்த அட்டைப்படம்.
யாருக்காவது இது பேசக்கூடாத விஷயமாக இருந்து இப்படத்தை கலாச்சார அவமதிப்பாக கருதினால் தயவு செய்து செருப்பு, துடைப்பத்துடன் மகளிர் அணியை அனுப்பி விடாதீர்கள். அதற்கு பதிலாக கேஷுவல் ஷீ மற்றும் யூரேகா X35 வேக்குவம் க்ளீனர் பேக் ஆகியவற்றுடன் அனுப்புவது மிகுந்த பலன் தரும், குறைந்த பட்சம் எனக்காவது.
ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி ?
பதிவுகள் இரண்டு வகைப்படும். ஆழமான பதிவுகள், அர்த்தமற்ற அரட்டை கச்சேரிகள்... ஆழமான பதிவுகள் அல்லாத அனைத்துமே அர்த்தமற்றவை லிஸ்டில் சேரும்.
முதலில் ஆழமான பதிவு எழுதுவது... அது எல்லோரும் நினைப்பது போல் கடினமல்ல. ரொம்பவும் எளிமையானதே. வாக்கியங்கள் அமைத்து விளையாடி இருக்கிறீர்களா? அதுதான் ஆழப்பதிவு எழுத அவசியமான திறமை... கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.

இப்பொழுது எல்லா பத்தியிலிருந்தும் ஒவ்வொரு வார்த்தை எடுத்து நடு நடுவில் சில பொருத்தமான வார்த்தைகள் தூவி வாக்கியம் அமைக்க வேண்டும்.
உ.ம் : திராவிட கோட்பாட்டில் விளைந்த மானுடவியல் எழுச்சி
முதலில் பின்னூட்டத்தில் ஆரம்பியுங்கள். ஆனால் கரணம் தப்பினால் மரணம்தான். வாக்கியங்கள் அமைக்கும் போது வார்த்தைகளை மாற்றி அமைத்தீர்களெனில் நீங்கள் காலி. அண்ணன்மார்களால் உங்களுக்கு முத்திரை குத்தப்படும். அப்புறம் நீங்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் ரசிகர்கள் அனானிமஸாக வந்து "முத்திரையாளரிடமிருந்து இது மாதிரி பின்னூட்டங்கள் வராமல் இருந்தால்தான் அதிசயமே" என்று பின்னூட்டம் இடுவார்கள்.
பயம் வேண்டாம். வலைப்பதிவுகளை கொஞ்ச காலம் பார்வையிட்டால் எப்படி வாக்கியம் அமைக்க வேண்டும் எப்படி அமைக்க கூடாது என்பது சுலபமாக புரிபடும். பழக பழக மேற்கண்ட வகையில் வாக்கியங்கள் பல அமைக்கும் திறமை வசப்படும்.
நீங்கள் ஆழமான பதிவரோ என்று பலரும் சந்தேகத்தோடும் ஆச்சரியத்தோடும் பார்க்க ஆரம்பிக்கும் காலகட்டம் இது. இதை நீங்கள் சரியாக உயயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்கியங்கள் அமைக்கும் போது தூவல் வார்த்தைகளை வாக்கியத்தோடு பொருந்தா வண்ணம் போட வேண்டும்
இந்து கருத்தியலை அறீவீக்கையாக்கும் (அச)மஞ்ச ஆதமாக்களின் அருத்தமற்ற அ(ப)/(ரு)த்தங்களின் விளைவாக பிராமணீய நிலைப்பாட்டுக்கு சிறார்களும் மற்றும் அறிஞர்களும் கொடுத்த (சம்)மட்டையடி காலத்துக்கும் ஆழமான கடுப்பை கொடுக்கும் என்பது திண்ணம்.
உங்களின் வாக்கியங்களில் உலக அறிஞர்களின் பெயர்களை உபயோகிப்பது மிகுந்த பலன் தரும். மார்ஸ், ப்ளூட்டோ, நெப்ட்யூன் போன்ற அறிஞர்களின் பெயர்கள் ஆரம்ப நிலையில் உதவலாம். காலம் செல்ல செல்ல நீங்கள் இன்னும் ஆழமான அறிஞர்கள் பெயரை உபயோகிக்க வேண்டும். இதற்கு நீங்கள் ஸ்க்ராம்ப்ளர் விளையாட தெரிந்த, தமிழ் தெரியாத பக்கத்து வீட்டு பையனின் உதவியை நாடலாம். பல எழுத்துக்களை அவனிடம் கொடுத்து ஒரு வார்த்தையாக கோர்க்க சொல்லுங்கள். உதாரணமாக அவன் பா மற்றும் ழ் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தால் தமிழ் தெரியாததால் அதை ழ்பா என்று சேர்ப்பான். உங்கள் அறிஞர் ரெடி. நீங்கள் செய்ய வேண்டியது உலகில் அதிகம் பேர் அறியாத ஒரு நாட்டை கண்டுபிடிப்பது மட்டுமே.
ஆப்பிரிக்க காண்டத்தில்* இருக்கும் ஜும்பலயா நாட்டில் வாழ்ந்த ழ்பா (1837-1893) திராவிட கொள்கை குறித்து சொல்வதை பாருங்கள். இந்து கருத்தியலை அறீவீக்கையாக்கும் (அச)மஞ்ச ஆதமாக்களின் அருத்தமற்ற அ(ப)/(ரு)த்தங்களின் விளைவாக பிராமணீய நிலைப்பாட்டுக்கு சிறார்களும் மற்றும் அறிஞர்களும் கொடுத்த (சம்)மட்டையடி காலத்துக்கும் ஆழமான கடுப்பை கொடுக்கும் என்பது திண்ணம். இதை இப்போதைய அறிவிலிகாள் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, அறிந்து கொள்ளவும் ஆர்வமற்றவ்ர்களாக இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது தமிழ் நல்லுலகத்தின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. எது எக்கோடு கெடுகிறதோ, அடுத்த தலைமுறை நாசம் என்பது மட்டும் தெளிவு..
(* :: கண்டம் என்பதன் இலக்கிய மொழி)
இது போன்ற இரண்டு பின்னூட்டங்கள் கொடுத்தால் போதும். சந்தேகம் அச்சரியம் எல்லாம் அகன்று நீங்கள் ஆழமான பதிவர் என்பது முடிவே ஆகிவிடும்.
இப்போது அடுத்த நிலை. இது போன்ற பல பின்னூட்டங்களை சரளமாக அமைக்கும் திறமை அமையும் போது நீங்கள் பதிவு ஆரம்பிக்க வேண்டும். ஆழமான பதிவர் என்பது வேறு, ஆழமான பதிவு என்பது வேறு. ஆழமான பதிவுக்கு நாம் போர்வெல் போடுபவர்களை ஆராய வேண்டும். தண்ணீரை தேடுவதுதான் போர்வெல் போடுவதன் நோக்கம். தண்ணீர் கிடைப்பது எவ்வளவுக்கெவ்வளவு கஷ்டமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு போர்வெல்லின் ஆழமும் அதிகரிக்கும். ஆகவே உங்கள் பதிவு படிப்பவருக்கு புரிவதற்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறதோ அவ்வளவு ஆழமான பதிவர் நீங்கள் என்பதாக உலகம் முடிவு செய்யும்.
இப்போது நீங்கள் ஆழமான பதிவர் ஆகிவிட்டீர்கள், பதிவுகளும் எழுதப்படுகின்றன. ஆனால் உங்கள் பதிவுக்கு ஒரு நாலு பேராவது பின்னூட்டம் இடவில்லையெனில் அது விழலுக்கு இறைத்த நீராகாதா? சாதா பின்னூட்டம் பெற இது சாமான்யர்களுக்கான பதிவும் அல்ல. ஆக எக்ஸ்க்ளூசிவ் பின்னூட்டங்கள் பெற நீங்கள் எக்ஸ்க்ளூசிவ் ரசிகர்கள் பெற வேண்டியது அவசியம்.
எக்ஸ்க்ளூசிவ் ரசிகர்கள் இரண்டு வகைப்படுவர்.
அ)ஆழமான பதிவை புரிந்து பின்னூட்டமிடுபவர்கள்
ஆ)ஆழமான பதிவை புரியாமலே பின்னூட்டமிடுபவர்கள்
அ) முதல் ரகம் doesn't exist. அது போன்றவர்கள் இருப்பதாக ஒரு தோற்றம் வரும். அது மாயை. சில சமயத்தில் ஆழமான பதிவர்கள் சிலர் உங்கள் நண்பர்களாக இருக்கும் நிலையில் புரிந்து பின்னூட்டமிடும் தோற்றத்தில் அவர்கள் சில பின்னூட்டங்கள் இடலாம். அந்த பின்னூட்டங்களும் "எல்லாருக்கும் புரிகிறது நமக்கு மட்டும் புரியவில்லையே" என்று சாதாரணமானவர்களை தாழ்வு மனப்பான்மையில் தள்ளும் வகையில் புரியாமல் இருக்கும். ஆனால் உண்மையில் அவர்கள் அவர்கள் பாணியில் ஆழமான பின்னூட்டங்கள் இடுகிறார்கள். உதாரணமாக இப்போது கற்பு குறித்த விவாதிக்கும் எந்த பதிவிலும் சென்று நீங்கள் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை இடலாம்.
நியாந்தர்தால் கால மனிதர்களின் கலாச்சாரத்தை ஒப்பு நோக்கும் காலத்தில் ஒரு சாரார் கற்(றுப்)பு என்னும் கைவிலங்கை கால்விலங்காக போட அதுகுறித்த தளைகளை உடைத்தெரியும் ஆன்றோரின் வாக்கியத்தை சரிவர புரிந்து கொள்ளாததற்கு &(%$# க்கு பின்னாலுள்ள *%*# அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுவரை இது அதிகப்பிரசிங்கித்தனமாகவே எனக்கு படுகிறது.
ஆ) இப்போது இரண்டாம் ரகம். நம்புங்கள். இவர்களை நீங்கள் நினைப்பதை விடவும் உங்களுக்கு பேருதவி புரிவார்கள். அவர்களின் நம்பிக்கையை பெற முன்பெல்லாம் மிகவும் மெனக்கெட வேண்டும். ஆனால் மந்திர கீர்த்தி சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இதுவும் சுலபமாகிவிட்டது.
மகீ சூத்திரம் - எளிய விளக்கம் :: ஹைஸ்கூல் விளையாட்டுத்திடலுக்கு சென்று பாருங்கள். கிரிக்கெட் மாட்ச் இடையில் சிறு வாக்குவாதம் நடைபெறும். பொதுவாக பேட், பால், ஸ்டம்பு ஸ்பான்ஸர் செய்தவனின் பின்னால் ஒரு கூட்டம் நின்றுகொண்டிருக்கும். அவர்கள்தான் உங்கள் இலக்கு. நீங்கள் இப்போது ஸ்பான்ஸர் செய்தவனுக்கு சாதகமாக தோன்றும் வண்ணம் ஒரு சில வாக்கியங்கள்
நீங்க எதுக்கு பேசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க, அவன் திருந்த மாட்டான். அவன் &%*# இருந்து வரான். அவன் நம்மாளு இல்ல.
போன்று பேச வேண்டும். இதைத்தான் நஞ்சை விதைத்தல் என்கிறார் வள்ளுவர். இதை ஆங்கிலேயன் பாணி பிரித்தாளும் சூழ்ச்சி என்போரும் உண்டு.. நமக்கு அது முக்கியமல்ல... இதை பேசும் போது தன்னம்பிக்கையோடு, கூட்டத்தின் மீது உங்கள் அடிமனதில் இருந்து பாசமாக இருக்கிறீர்கள் என்று தோன்றும் வண்ணம் பேச வேண்டும். இப்போது கூட்டத்தில் இருக்கும் பாசத்துக்கு ஏங்கும் தம்பிகள் சிலர் அண்ணா என்பார்கள். அவ்வளவுதான் உங்களுக்கு ரசிக சிகாமணிகள் கிடைத்து விட்டார்கள்.
இனி உங்களின் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் கியாரண்டி... என்ன ஒன்று பின்னூட்டங்கள் எல்லாம் ஸ்டீரியோ டைப்பாக
#) அண்ணே நீங்க சொன்னதற்கு பிறகுதான் எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் இருப்பதே புரிகிறது...
#) அண்ணே என்ன பண்றது பட்டாத்தான புரியுது, இனி நீங்க சொல்ற மாதிரியே தலையாட்டுறேன்...
#) ஸார் நீங்க தெய்வம் சார்..
என்றே இருக்கும்... கொஞ்ச நாள் சென்று
உங்கள் எழுத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்... இல்லை எழுத்துக்கு எழுத்து உடன்படுகிறேன்.. அய்யோ காற்புள்ளி கமாவெல்லாம் கண் கலங்க வைக்குதே.. உங்க கைய என் நெஞ்சுகுள்ள உட்டு வார்த்தைய பிடுங்கி எழுதுன மாதிரியே இருக்கு... உற்சாகம் பீறிடுது... சட்டைய பிச்சிகிட்டு கதறணும் போல இருக்கே...
என்றாகும் போது நீங்கள் cream of ஆழப்பதிவர் லிஸ்டில் சேர்ந்து விட்டீர்கள்...காலம் செல்ல செல்ல உங்களின் ஆழத்தை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். இப்போது நீங்கள் சாதா ஆழப்பதிவர்கள் லிஸ்டில் இருக்கிறீர்கள். போக போக நீங்கள் எழுதவதன் நோக்கம் உங்களுக்கே புரியாமல் ஆகும் காலகட்டத்தில் நீங்கள் சூப்பர் ஆழப்பதிவர் லிஸ்டில் சேர விண்ணப்பிக்கலாம். அதில் சேர உங்கள் பதிவு மட்டுமல்ல, அதற்கு நீங்கள் போடும் படமும் புரியக்கூடாது.


இடமிருக்கும் படம் சா(சோ)தா பதிவர்கள் போடுவது. வலமிருப்பது அதே படம் சூப்பர் ஆழம் போடுவது. இதற்கு நீங்கள் ஃபோட்டோ ஷாப்பில் சிறிதளவாவது தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
இந்த வித்தை கைகூடும் போது நீங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் இருக்கும் சூப்பர் ஆழப்பதிவர் க்ளப்பில் ஒருவர்...
சாதாவோ சூப்பரோ ஆழப்பதிவராவதில் பயன்கள் பல உண்டு. முக்கியமானது உங்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை. உதாரணமாக சாதாரண பதிவர் மற்ற ஒருவரின் கருத்தை எதிர்க்கிறார் என்று கொள்வோம், சாதாரணர் மென்மையான குட்டு வார்த்தைகளை உபயோகித்தாலும் சமூகம் அவரை கீழ்த்தரமாக பார்க்கும். என்ன பண்பாடோ என்று சலிப்படையும். ஆனால் ஆழப்பதிவரோ ஒருவரின் சாதி, பிண்ணனி, குணாதிசயங்கள் என்று எதை பற்றியும் திட்டலாம். கேவலமான திட்டு வார்த்தைக்ள் உபயோகிக்கலாம். அவையெல்லாம் ஆழப்பதிவரானவர், சமுதாயத்தின் பிற்போக்குத்தனத்தின் மீதுள்ள தனது தார்மீகக்கோபத்தில், சமுதாயம் திருந்த வேண்டுமே என்ற சமூக அக்கறையோடு, வீணாய் போன சமூகத்துக்கு கொடுக்கும் சம்மட்டியடியாகவே பார்க்கப்படும்.
ஆல் த பெஸ்ட்.
உலக வலைபதிவர் மாநாடு - மேல்விபரங்கள்
வலைபதிவர் டெலிகான் மாநாடு நடந்து ரொம்ப நாளாச்சே... ஈ ஓட்டிகிட்டு கிடக்கறதுக்கு ஆராவது வலைப்பதிவு மாநாட்டுக்கு கூப்பிட்டாலாவது போயிட்டு வரலாமேன்னு நினைச்ச நேரத்துலதான் சின்னவன் உலக வலைபதிவர் மாநாடு! நடத்துறதா சொல்லி கூப்பிட்டாரு... உடனே ஒத்துகிட்டேன். ஓட்டல் பில்ல மத்தவங்க தலையில கட்டிரலாம், தைரியமா வாங்கன்னு சின்னவன் சொன்னதும் ஒரு கூடுதல் காரணம்.
மாநாடு நடந்த ஓட்டல் நம்ம வீட்டுல இருந்து ஆட்டோவுல போனா அரை மணி நேரப்பயணம்தான்... ஆனா போனவாரம் நம்ம தரைவழி போக்குவரத்து அமைச்சர் போட்ட புது சட்டத்துல 6 மணிநேரம் ஆச்சுது. அதாவது இங்கிலீஷ்காரன் இன்ஜின் கண்டுபிடிச்சதுல இருந்து அயல்நாட்டு மோக அடிமைகள் வாழும் தமிழகத்துல நம்ம பாரம்பரிய வாகனங்களான குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் அருகிப்போயிட்டுது. அதனால இனி சிங்கில்ஸ்னா குதிரையிலயும், 1-5 பேருன்னா ஒத்த மாட்டு வண்டியிலயும், >5ன்னா எருமை மாட்டு வண்டியிலயும்தான் போகணும்னு ஆர்டர். அமைச்சரோட ஒண்ணுவிட்ட அத்தை மாமனாருதான் குதிரைங்க சப்ளைக்கு மொத்த ஆர்டர். இன்னும் பெல்ஜியத்துல இருந்து ஆர்டர் பண்ண குதிரைங்க எல்லாம் வராததால ஒத்த மாட்டு வண்டிக்கு பார்ட்னருக்கு வெயிட்டிங் 2 மணிநேரம், பயணம் ஒரு 4 மணிநேரம்னு மொத்தம் 6 மணிநேரம்.
அங்க போனப்புறம் பாத்தா வெளில ஒரே கூட்டம்... பின்ன ஒட்டக வண்டியும், பூனாவுல இருந்து நடந்தே தேஞ்ச செருப்பும், கட்டுமரமும் வெளில இருந்தா சனங்க கூடாதா..
ஒரு வழியா கூட்டம் ஆரம்பிச்சுது.. என்ன நடந்ததுன்னு சின்னவனின் பதிவில் நீங்க பாத்துருக்கலாம். சின்னவன் ஒட்டம் பிடிச்சவுடன் அல்லாரும் சாப்பிடறதுல மும்முரமாயிட்டோம்...
சாப்பிட்டு முடிச்சப்புறம்தான் தெரிஞ்சுது, ஆரும் சோமபானத்த பத்தி நினைக்கவேயில்லைன்னு... பரிமாறுபவர கூப்பிட்டு சோம பானம் ஆர்டர் சொன்னா இல்லைங்கறார். சரி சுறா பானமாவது இருக்கான்னு கேட்டா அதுவும் இல்லையாம். தென்னங்கள்ளு, பனங்கள்ளு, பட்டை எதுவுமே இல்லையாம்... அப்புறம் தமிளர் ஒருத்தர் பொங்கி எழுந்து போராடுவோம்னு சொன்னப்புறம் ஆளனுப்பி வரவழைக்கிறேன்னு சொன்னாரு...
கொஞ்ச நேரம் கழிச்சி ஞா... ஒருத்தருக்கு மட்டும் ஃபெர்மெண்டட் திராட்சை ரசமும் மற்றவர்களுக்கு பச்சை தண்ணீரும் கொடுத்தாங்க. கேட்டதுக்கு 65 வயசுக்கு கம்மியா இருக்கவங்க கெட்டுப்போவாம இருக்க பச்சை தண்ணீர் மட்டும்தான் தரணும்னு ஹெல்த் மினிஸ்டர் முடிவாம். அப்ப நாங்க தமிழ் வலைப்பூக்கள அடுத்த தளத்துக்கு எடுத்து செல்வது பத்தி பேசிகிட்டு இருந்தோம். அத கேட்ட பரிமாறுபவர் ஏற்கனவே மொட்ட மாடில இருக்கறத ஞாபகப்படுத்தி, அடுத்த தளத்துக்கு போக ஆசப்பட்டா தம்மால ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டார்.
அப்புறம் இது மாதிரி மாநாட்டுல பேசப்படும் "முக்கிய ப்ரச்னை" பத்தி பேசிட்டீங்களான்னு சர்வர் கேட்டப்புறம்தான் தெரிஞ்சுது, இதுவரைக்கும் அது பத்தி பேசவேயில்லையேன்னு... சரின்னு ஒரு 4 மணிநேரம் "முக்கிய" ப்ரச்னை பத்தி பேசுனோம்... இறுதியா "முக்கிய" ப்ரச்னைக்கு ஒரே தீர்வுன்னு எல்லாரும் ஏக மனதா ஒத்துகிட்டத பத்தி உங்களுக்கு சொல்ல ஆசைதான். சில பல அரசியல் காரணுங்களுக்காக சொல்ல முடியாத நிலையில இருக்கேன். வேணும்கிறவங்க தனி மடல் அனுப்புங்க...அப்புறம் போட்டோ இல்லாமயா.. சைடுல கொடுத்திருக்கேன் பாருங்க. இடமிருந்து 3வதா கட்டம் போட்ட லுங்கியில இருக்கிறது நாந்தான்... கேமிரா கொஞ்சம் மக்கர் பண்ணிடுச்சி. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. சரி லேட்டாயிடுச்சி, அவிங்க அவிங்க பொளப்ப பாக்க போலாம்னு முடிவு செஞ்சு புறப்பட்டோம். கதவ பூட்றப்ப பாத்தா ரூமுக்குள்ள ஒருத்தர் மட்டும் பழரசம் தந்த சுகானுபவத்துல ஃபேன் சுற்றுகிறது, காத்து வீசுகிறதுன்னு கண்ணாடிய பாத்து பேசிகிட்டு இருந்தாரு...
