<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நாய் அழகுதான் - கடிக்கும் வரை


சுதந்திரமாம் சுதந்திரம்
அண்டிப்பிழைக்கும் நமக்கெதற்கு

என் பிழைப்பே நாய்ப்பிழப்பு
சுயமென்ன வேண்டியிருக்கு

ஆயிரம் வருடம் அடிமை வாழ்வை
அனுபவித்து வாழ்ந்த என்னை
அவிழ்த்துவிட்டால் என்ன செய்ய

கோண வாலும்
கேன சிரிப்பும்
பொழைப்போட்ட போதுமெனக்கு

ஏற்றுக்கொண்டவனே எஜமான்
எஜமான் சொல்லே வேதம்

அடிபணிந்து காலம் ஓட்ட
போட்டதை தின்று பாதுகாக்க
எவனாயிருந்தால்தான் என்ன

நல்லவனா கெட்டவனா
நமக்கெதற்கு கவலை

எஜமானுக்கு முன் நடந்தால்
எலும்பு கிடைக்கும் ரவைக்கு

நியாயமா அநியாயமா
நமக்கெதற்கு சிந்தனை

தலைவனுக்கு எதிரியா
பாய்ந்து பிடுங்கு அ·தே மந்திரம்

img crtsy: dircon.co.ukமனித பாஷை புரியாதுதான்
எஜமானுக்கு வசவா வாழ்த்தா
நாய் நமக்கு அது எதற்கு
சிரிப்பில்லையா எதிராளி முகத்தில்
முதல் குரைப்பில் நன்றி காட்டு

தேவைப்படின் குரைத்து
அளவாக முறைத்து
அவ்வப்போது வாலாட்டி
அழகென்றே சொல்கிறது ஊர்

எனக்கும் வயதாகும்
என் குரைப்பும் மதிப்பிழக்கும்
குரல் நல்ல காவல் என்ற பார்வை
சகிக்க இயலா ஊளையென்றாகும்
அப்போது ஊரே என்மேல் கல்லெறியும்


இருந்தால் போல் இருந்து நேத்து பக்கத்து வீட்டு நாய்க்கு வெறி பிடித்து விட்டது... இவ்வளவு நாள் எப்போதாவது பொத்தாம் பொதுவாக குரைக்கும் நாய் இப்போது சம்பந்தமில்லாமல் எல்லாம் குரைக்க ஆரம்பித்து விட்டது. மூக்கு விடைக்க (பார்க்க படம்) நாக்கில வெறி நீர் ஒழுக ஊளையிடும் அதன் குரலை கேட்க பாவமாக இருக்கிறது. அதன் வாழ்க்கை முறை பற்றி சிந்தித்த போது விளைந்த வார்த்தைகள் மேலே... இதை கவிதை என்று எவரேனும் சொன்னால் :: அட எனக்கு கூட கவிதை வருகிறதே...


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

மீன், மனிதன் மற்றும் பச்சோந்தி


மீன் சாதாரணமாக செய்யும் ஒரு செயலை நம்மால் செய்ய முடியாதது ஏன். ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் கலந்தது செய்த கலவைதான் தண்ணீர் என்றால் தண்ணீருக்கு அடியில் ஏன் நம்மால் சுவாசிக்க முடிவதில்லை... மீன் சுவாசிப்பது H2Oவில் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுவை அல்ல. பதிலாக தண்ணீரில் கலந்திருக்கும் O2 எனப்படும் ஆக்ஸிஜன் வாயுவை.. நிறைய வாயுக்கள் திரவங்களில் கலந்திருக்கும் (சோடாவில் வரும் குமிழிகள் சோடா தண்ணீரில் கலந்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேருவதால் வருவது)

மீன் தண்ணீரில் கலந்திருக்கும்ஆக்ஸிஜன் வாயுவை முள்ளால் "சுவாசிக்கிறது"... தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்து எடுப்பது மிகவும் கடினமான வேலை. ஒரு கரண்டி காற்றில் 20 பங்கு ஆக்ஸிஜன் இருக்கிறதென்றால், ஒரு கரண்டி தண்ணீரில் ஒரு மடங்கு ஆக்ஸிஜன்தான் இருக்கும். மேலும் தண்ணீர் காற்றை விட பல மடங்கு எடை அதிகம்... ஆகவே இந்த பிரித்தெடுக்கும் வேலை முதுகுத்தண்டை பிரிக்கும் ஒரு வேலை... மீனுக்குத்தான் முதுகுத்தண்டே கிடையாதே... மீனுக்கு முள்ளே போதுமானதாக இருப்பதற்கு காரணம், மீன் ஒரு ஜில்லு ரத்த பிராணி என்பதால். அதனால் அதற்கு தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவு கம்மி. சூட்டு ரத்த பிராணியான திமிங்கிலங்கள் தண்ணீருக்கு மேலே வந்து புஸ்ஸ¤ புஸ்ஸ¤ன்னு மூச்சு விடுவதன் காரணம் அதுதான். (அத காமிக்க கூட்டிட்டு போறேன்னு சொல்லி இங்க நெறய க்ரூஸ் கம்பெனி கப்பல் ஓட்டிகிட்டு இருக்காங்க)

சரி நாம் ஏன் தண்ணீருக்கு அடியில் சுவாசிக்க முடியல. நம்ம லங் இயந்திர வடிவமைப்பு அப்படி. தண்ணீரில் இருக்கும் வாயுவை பிரித்தெடுக்கும் அளவு நுரையீரல் பரப்பளவு பெரிதாக இல்லை. மேலும் வடிவமைப்பும் தண்ணீர்க்கு பதிலாக காற்றையே கையாளும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதர்கள் திரவங்களை 'சுவாசிக்க' முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். ·ப்ளூரோகார்பன்ஸில் ஆக்ஸிஜன் வாயுவை நன்கு கலந்து அதை மனிதன் 'சுவாசித்தால்' நுரையீரல் ஆக்ஸிஜன் வாயுவை பிரித்தெடுத்துக்கொள்கிறது

தலைப்பு படி பாத்தா மீன் ஆச்சி, மனிதன் ஆச்சு... பச்சோந்தி... அது கவித கவித...

உனக்கு இரு உலகிலும் இருக்கும் நல்லது மட்டும் வேண்டும்
ஆனால் உனக்கு இரண்டுமே கிடைப்பதில்லை...
வேலியிலேயே (மதில்மேல்) இருக்க பிரியப்படுகிறாய்
எந்த பக்கம் பச்சையோ, வேலியில் இருப்பதே நல்லது...
சிலர் கடினமாக உழைக்கிறார்கள்
img crtsy: www.natures-image.co.ukசிலர் போராடுகிறார்கள்
சிலர் அனைத்தையும் இழக்கிறார்கள்
அதெல்லாம் நமக்கெதுக்கு...
நடிப்பதும் இதமாக இருப்பதும்
விரும்பியதை பெற்றுத்தரும் நமக்கு...

சுற்றுப்புறத்துடன் கலப்பதில் மன்னன் நீ...
நீ யார், எங்கிருந்து வந்தாய் யாருக்கும் தெரியாது.
காலத்துக்கேற்ப மாறிக்கொள்கிறாய்...
உன் ஈடுபாடு சமரசத்துக்குட்படுவது
நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும்
வெட்கமில்லாமல் சமரசம் செய்து கொள்கிறாய்...
முகத்திரையில் பின் மறைந்து கொள்கிறாய்...

உன் இருப்பே உனக்கு முக்கியம்,
அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாய்...
உன் முகத்தில் மறைந்திருக்கும் சிரிப்புக்கு என்ன அர்த்தம்,
யாருக்கும் தெரியவில்லை...

வெளியே வா, வெளியே வா,
வெளியே வந்து தனித்து நில்...
கண்ணுக்கு தெரியா களம் என்று ஒன்றும் இல்லை...
கறுப்பு அல்லது வெள்ளைதான்,
இரண்டில் ஒன்று பார்த்துவிடு...
தப்பை சரியாக்க,
உன் வார்த்தை விளையாட்டை புரிந்து கொள்ள,
நேரம் இல்லை யாருக்கும்...
நீ முடிவெடுக்க வேண்டிய நேரம் இது...

தழுவல்: கருத்துக்கு howstuffworks.com ; கவிதைக்கு Petra வின் Chameleon


அறிவுப்பசி அண்ணாசாமி: ரொம்ப நாளக்கப்புறம் அரசியலே இல்லாம பதிவு போட்ருக்காப்ல இருக்கு...


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

என் முகமூடிக்கு பின்:: ஒரு உண்மைக்கதை


முகமூடி போட்டு எழுதுதுவதென்பது விளையாட்டு முடிவல்ல... என் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்களின் அனுபவங்கள் என்னை முகமூடி போட வைத்தன... அவை::


அப்பத்தான் விவரம் தெரிஞ்ச வயசு... திடீர்னு மண்டைக்குள்ள 1000w பல்பு போட்ட உணர்வு... கையும் காலும் பரபரங்குது... சிந்தனை தறிகெட்டு பறக்குது... பக்கத்துல பாத்தா வெள்ளத்தாளு... எழுத ஆரம்பிச்சவந்தேன், 4 கொயர் பேப்பர் தீந்த பெறவுதான் நிறுத்துனேன்... படிச்சா பஞ்செல்லாம் காதிக்ராப்ட்ல துணியா வர்றப்ப எப்படி வெறப்பா இருக்குங்கறத பத்தி ஞானக்கட்டுர... சரின்னு 'கஞ்சிக்கு காதி'ன்னு பேர வச்சி பெரியவங்களுக்கு படிக்க கொடுத்தா, "எலா உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்" னு, எல்லாம் ஒரே பாட்ட பாடுறாங்கலே தவிர படிக்க கூட மாட்டேங்கறாங்க... இதுல எங்க என் காவியத்த விக்கிறது..


வெறுப்பாயிப்போயி சூடா தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல வாங்கி தின்னுகிட்டே எங்கியோ போயிட்டேன்.. என்னமோ கூட்டம் போல... பெரியவர் ஒருத்தரு மத்தில இருக்காரு... கறுப்பும் செவப்பும் மஞ்சளும் கலந்தா மாதிரி அப்பிடி ஒரு கலரு... சுத்தி ஒளிவட்டத்தோட ஏகப்பட்ட ஆளுங்க... ஜால்ரா சத்தம் வேற பெரிசா கேக்குது... எல்லாம் எலக்கியவாதிகளாம்... சரி என்னாதான் பேசுராங்கன்னு பாத்தா, ஏ அப்பா... மத்தி மனுசன் ஏதோ மகான் போலருக்கு...

"தொட்டு பாத்தா புல்லரிக்குது" ன்னு பாட்டா படிக்கிறாரு ஒரு ஒளிவட்டம், "பாத்தாலே பரவசமா இருக்கு" ன்னு கண்ணீர் உடுறாரு இன்னொரு ஒளிவட்டம்... என்னாங்க விசயம்னு பக்கத்துல இருந்த பெரிசுகிட்ட கேட்டேன்... மத்தி மனுசன் பல மூஞ்சி இருக்கறவராம்.. அதுல இலக்கிய மூஞ்சிக்கு பாராட்டு விழாவாம்.. (அவரு என் பொஸ்தக தலைப்பு மாதிரியே சவுண்டு வர்ற மாதிர் ஒரு பொஸ்தகம் எழுதியிருக்காராம். அதுக்கே நான் பெரும படணுமாம்) அப்பதான் பாக்குறேன், கையில இருந்த சுண்டல் தீந்து போச்சி... பட்டாணி கட்ன காயிதத்த பாத்தா நான் எழுதுன 'கஞ்சிக்கு காதி' கையெழுத்து பிரதியோட தாளு..

இந்த சம்பவத்துல என் அறியா மனசுக்கு என்னமோ புரியிர மாதிரி இருந்துச்சி...

அப்பால கொஞ்ச நாள் போனவாட்டி வளருட்டுமா வேணாமான்னு இருந்த மீசய தடவி பாத்துகிட்டு இருந்தேன்... பக்கத்து தெரு தோலனும் மீசக்காரனும் வந்தாய்ங்க... "எலேய், நம்ம பக்கத்து தோட்டத்துகாரன்கிட்ட மாங்கா கேட்டா தரமாட்டேங்கிராண்டா, வாடா போயி நாலு மரத்த வெட்டி நம்ம பவுரு என்னான்னு காமிப்போம்" னாய்ங்க.. "அடப்பாவி, ஏண்டா மரத்த வெட்டுனா பாவம்ல" ன்னேன்... "போடா போக்கத்தவனே, போன வருசம் ஆடியில காத்தடிக்க சொல்ல எத்தன மரம் விழுந்திச்சி அது பாவமா" ன்னானுங்க... "இல்லடா நம்ம சுயநலத்துக்காக இப்படி செய்யலாமா" ன்னேன்.. "ஏன் அன்னிக்கி தண்ணி வரலன்னு கெராமத்துல எல்லாம் ரோடு குறுக்க செவுரு கட்டுல, அது கூடத்தான் சுயநலம். இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா" ன்னான் தோலன்... "சரி போலீஸ் பிடிச்சிகிட்டா"ன்னேன்... "என்னாடா இவன் கேள்வியா கேக்குறான்... போலீஸ்லாம் நம்மள ஒன்னியும் செய்யாது, வாடா வெங்காயம்" னான் மீசக்காரன்... எனக்கு கெளம்பிருச்சி தெகிரியம்...

போயி மரத்த வெட்டலாம்னு ஒரு குத்து கூட குத்தியிருக்க மாட்டோம், தோட்டகாரன் நம்மள புடிச்சி அடி நொங்கெடுத்திட்டான்... போலீஸ்லயும் புடிச்சி கொடுத்திட்டான் (அது சந்தன மரமாம்) போலீஸ்ல வேற "ஏண்டா, தொரக்கி மரம் வெட்ட சொல்லுதோ... பஸ்ஸ வேற எரிக்க ப்ளான் போட்டீயாம் உங்கூட்டாளி சொன்னான்... ஏன் அவ்ளோ தெனவெடுத்தா எல்லா பயலும் அவனவன் கைய கால வெட்டிகிட்டு உங்க பகுர காமிக்க வேண்டியதுதானே" ன்னு சும்மா சாத்தி எடுத்திட்டாய்ங்க.. கொஞ்ச நாள் உள்ள வேற வச்சிட்டாய்ங்க... ரெண்டு நாள் இருக்கும், என்னமோ கோரிக்கையின்னு ஒன்ன வச்சி ஊரே மரத்த வெட்டுது... பஸ் எல்லாம் எரிக்கிறாய்ங்க... அத செய்ய சொன்ன தலைவரு நானிருந்த செயிலுக்குத்தான் வந்தாரு, ஒடனேயே ரிலீஸ் பண்ணிட்டாய்ங்க...

அப்பத்தான் என்ன பாக்க செயிலுக்கு தமிழ் தாத்தா வந்தாரு... "ஏண்டா உனக்கு
இது தேவையா, வேல வெட்டிய பாத்துகிட்டு செவனேன்னு கெடக்க வேண்டியதுதானே" ன்னாரு.. இளரத்தம்லா, சட்டம் பேசினேன்.. "ஏன் தாத்தா, அந்த தலைவருக்கு ஒரு சட்டம், எனக்கொரு சட்டமா, என்ன மட்டும் ஏன் இன்னும் ரிலீஸ் பண்ணல" ன்னேன்... "அட அறிவு கெட்டவனே, அவரு மேல கைய வச்சா, அரசாங்க பஸ்ஸ¤ அம்புட்டும் கண்ணாடி இல்லாமதான் ஓடும், பெறவு செல பஸ்ஸ எரிச்சி வேற புடுவாய்ங்க... அவரையும் ஒன்னயும் சேத்து பேசறியே, உனக்கு என்னா நக்கலா" ன்னாரு... "சரி சாமீன்ல எடுக்கிறேன், இனி பேசாம கெடக்கனும்" னு சொல்லி சாமீன்ல எடுத்தாரு..

ஏழ சொல்லு அம்பலம் ஏறாது... எத சொன்னாலும் ஒசந்த எடத்துல இருந்து ஒரு அடையாளத்தோட சொன்னாத்தான் அல்லாருக்கும் புரியும்னு என் மனசுல
பதிஞ்சது அப்போதான்...

சரின்னு கொஞ்ச நாள் போலீஸ் கண்ணுல தெரியாம திரியலாம்னு தலய சுத்தமா கெராப்பு வெட்டிகிட்டேன்... மறுநா இஸ்கூல் போனா ஒரே கேலி, "இன்னாடா கரையான் புத்துல தலய கொடுத்திட்டியா, இன்னா மேட்டரு" ன்னாய்ங்க... "இல்லடா மயிரு வெட்டம்போது தூங்கிட்டேன்" னேன்... அதுக்கும் சோம்பேறி, தத்திப்பயன்னு ஒரே கிண்டலு... என்னய இருக்கரதிலயே ரொம்ப கலாய்ச்சது ரசினி சங்கரு, ரசினி செந்திலு ரெண்டு பேரும்தான்... (அவிங்க ரசினி ரசிகருங்க... அதுனால பேரு அப்படி)... நாலு நாளு கழிச்சி பாத்தா ரசினி அமெரிக்கல இருந்து வாராரு... ஏர்போர்ட்ல ஒரே அதகளம்... என்னமோ முக்கியமான பேட்டி கொடுக்கிறாராம்... டி.வி பொட்டில காமிக்கிராங்க... அவுரு பேசுன விசயத்த விட என்ன ரொம்ப பாதிச்சது ரசினி கிராப்புதான்... அவரும் அமெரிக்கால இஸ்டைல் சலூன்ல தூங்கிட்டாராம், நம்ம கெராப்பு மாதிரியே இருந்திச்சி.... மறுக்கா இஸ்கோல்லதான் கூத்தே.. என்ன என்னன்னெல்லாம் சொன்னாங்க அந்த சங்கரும், செந்திலும் அவிங்க ரெண்டு பேரும் எங்க பார்பரு கிட்ட எஸ்ட்ரா பணம் வேற கொடுத்து என்னய மாதிரியே முடி வெட்டிகிட்டு வந்தாய்ங்க... இப்ப என்ன கேலி செஞ்ச இஸ்கூலே வேற மாதிரி பேசுது.. லேட்டஸ்ட் பேஷினாம்... எனக்கு எப்பிடி இருக்கும் பாருங்க...

அது ஆச்சி ரொம்ப வருசம்... இப்ப எங்க வூட்ட மாத்தி கட்ட ஆரம்பிச்சோம்... வூட்டுக்கு பெயின்ட் அடிக்கற வேல பாக்கி. "அல்லாரும் எளுதராங்களே, நாமலும் பிளாகு எளுதனா என்னா"ன்னு ரோசனையில இருந்தேன்... மேஸ்திரி வந்தாரு "என்னாங்க பெட்ரூமுக்கு வேற கலரு, கிச்சனுக்கு வேற கலரு, மத்த ரூம்புக்கெல்லாம் வேற கலருன்னு சொல்லியிருக்கீங்களாமே, பசங்க சொன்னாங்க"ன்னாரு... "அறிவியல் பூர்வமா என்னாமோ கண்டுபிடிச்சிருக்காங்கலாம் மேஸ்திரி... வர்ணங்களுக்கு எல்லாம் ஏதோ பவுரு இருக்காம்... அதுவுமில்லாம, வர்ண வேறுபாடு இருந்தா சுவாரசியமாத்தானே இருக்கும்"னேன்... "அதுவும் சர்தான்"ன்னாரு மேஸ்திரி... "அப்பால நம்ம பெயிண்டருங்க வருவாங்க... வரப்போ வர்ணங்கள கொண்டாந்துருவாங்க"ன்னுட்டு போய்ட்டாரு... பெயிண்டருங்க வந்து வேலய ஆரம்பிச்சாய்ங்க... அப்பதான் ஆபிஸ்லருந்து வந்த அப்பா, "எலேய் இவனே, நம்ம மணி (எங்க நாய் பேருதான்) நாலு நாளா தன்னத்தானே நக்கிக்கிட்டு கெடக்கான் பாரு, நம்ம வெட்டுகிட்ட அத என்னான்னு காட்டி கூட்டியா"ன்னாங்க... "சரிங்கப்பா"ன்னு சொல்லி திரும்பி பாத்தா அந்த பெயின்டருங்க, ரெண்டு சீவன்கள் அந்த ரூம்புல இருக்கறதோ பேசுறதோ எதுவும் ஒணர்ந்ததா தெரியாம பெயின்ட் அடிக்கிறாய்ங்க....

அடுத்த நாள் யாரோ வர்ண வேறுபாடு வேணும், நாய் தன்னத்தானே நக்கிக்கிது அப்டின்னெல்லாம் சொல்லிட்டாருன்னு ஊரே அமளி துமளியாச்சி. நாய் தன்னத்தானே நக்கத்தானே செய்யும், அது ஒரு பெரிய விசயமான்னு எனக்கு ஒன்னும் வெளங்கல.

நடந்த சம்பவமெல்லாம் நாபகத்துக்கு வந்திச்சி... ஒரே கொயப்பம்... அய்யன் சொல்றபடி பாத்தா, ஆரு என்னா சொன்னாலும் அதுல எவ்ளோ மெய்யி எவ்ளோ பொய்யின்னுதான ஒலகம் பாக்கணும். ஆனா நடக்கற விசயத்த அல்லாம் பாத்தா ஆருங்கரத பொருத்து விசயம் வேற வேற மாதிரி அர்த்தம் ஆவுதேன்னு ஒரே கன்பூசன்... இதுல புளாகு எழுதற பேர்ல வேற ஒரு குயப்பம்..

நம்ம தமிழ் தாத்தாகிட்ட ஓடினேன்... அவரு சொன்னாரு:: கவிஞரு அன்னிக்கே
சொன்னபடி, இருக்கற இடத்துல இருந்தாதான் ஒலகம் ஒன்ன மதிக்கும், இல்லாகாட்டி ஒன்னயே அது மிதிக்கும்... அதுனால ஒரே விசயத்துக்கு, சொல்ற ஆளோட தராதரத்த வச்சி வேற வேற அர்த்தத்துல பாக்கும் இந்த ஒலகம்... அதனால நீ ஆருன்னு சொன்னா பக்கத்து தெருலயாவது வெளங்கிக்கிற அளவு பெரியா ஆளா ஆனப்புறம் ஒன்ன பத்தி யோசிக்கலாம்.. அதுவரக்கும் சொல்றத மட்டும் ஒன் வேலயா வச்சிக்க... மூஞ்சிய காமிக்கனுமா, முகமூடி போடனுமன்றது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லன்னு...

சரின்னு முகமூடிங்கற பேர்ல எளுத ஆரம்பிச்சேன்.... இதேன் நம்ம முகமூடிக்கு பின்னாடி உள்ள கத.


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ப.ம.க.வின் புதிய சட்டங்கள்


பச்சோந்தி மக்கள் கட்சி இயற்ற இருக்கும் புதிய சட்டங்களின் வரைவு நகலை அக்கட்சி பொது செயலாளர், (அடுத்த) தலைவர் சின்ன முகமூடி இன்று வெளியிட்டார். மேலும் அவர்களின் சட்டங்களால் யாரும் பாதிப்படையக்கூடாது என்ற அக்கரையில் அதற்கான மாற்று யோசனைகளையும் தெரிவித்தார். அதன் விபரம் ::

1. வன்புணர்தல் (கற்பழிப்பு) காட்சி என்றால் சேவல், கோழியை துரத்துவது போல் காண்பிக்கலாம்... பின்பு திரை வெறுமை ஆக வேண்டும். "மோசமான காட்சிக்கு பின் படம் தொடரும்" என்று ஸ்லைட் போட வேண்டும்... இந்த முழு காட்சியிலும் கோழியின் அலறலோ மத்த எந்த சத்தமோ கேட்காமல் இசை ம்யூட் செய்யப்பட வேண்டும். இந்த காட்சியின் போது திரை வெறுமையாக இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கண்களை மூட வேண்டும். மூடவில்லையெனில் பக்கத்தில் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோர், உட்பட்டோரின் கண்களை மூட வேண்டும். (சட்டம் 18)

2. சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்றாலும் வில்லன் கெட்டவன் என்று சித்தரிக்க அவன் வாயில் புகை வைக்க வேண்டியிருப்ப்பதால் இனி மைதா (அ) கோதுமை மாவு மூட்டையில் இருந்து மாவை அள்ளி போட்டு வில்லன் அதை புகையாக விடுவதாக காட்ட வேண்டும்... அந்த மூட்டையின் மேல் மைதா/கோதுமை என்று எழுதி இருக்க வேண்டும். (சட்டம் 37)

3. வில்லன் தண்ணி அடிப்பதை காண்பிக்க பழரசச்சாறு அருந்துவதாக காண்பிக்கலாம்... என்ன பழரசம், என்ன ப்ராண்டு என்பது தெளிவாக காண்பிக்க வேண்டும்... மேலும் வில்லன் தோன்றும் போதெல்லாம், வில்லனால் சமுதாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை subtitle ஆக போடவேண்டும் (சட்டம் 54)

4. எது திரைப்படம், எது வாழ்க்கை? எது நிழல் எது நிசம்? என்றெல்லாம் பகுத்துணர தெரியாத அறிவுகெட்ட கூமுட்டைகளான இளைஞர்களை அரசியல்வாதிகள் வெட்டியாக பயன்படுத்துகிறார்களே, நாமும் அவர்களை வெறுமனே விசிலடிச்சான் குஞ்சுகளாக மட்டும் வைத்துக்கொள்வோம் என்று எண்ணாமல் கலைஞர்கள் அதிலும் வெகுசன ஊடகமான திரைப்பட நடிகர்கள் தமக்கு மற்றவர்களைவிட அதிகம் சமூகப்பொறுப்புணர்விருக்கின்றதா?? என்று தினமும் காலை ஒருமுறை மாலை ஒரு முறை கேட்டுக்கொள்ள வேண்டும் (சட்டம் 89ஆ)

5. உலக நாகரீக இயக்கம் எடுத்த புள்ளிவிவரப்படி இளைஞர்கள் பெண்களை பார்த்து ஜொள்ளு விடுவதில் உலக அளவில் தமிழ்நாடுதான் முன்ணனியில் இருக்கிறது. இதற்கு காரணம் சினிமாவில் பெண்களை காண்பிப்பதுதான் என்றும் அந்த பு.வி சொல்கிறது... ஆகவே இனி இளைஞர்கள் சமுதாயம் சீர்திருந்தும் வகையில் பெண்களை திரையில் காண்பிக்கவே கூடாது. (சட்டம் 13.அ) கதாநாயகி இல்லாமல் வருமாறு கதை எழுத எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவைப்படின் பெண் கதாபாத்திரத்துக்கு ஆண்கள் மாறுவேஷம் போட்டு நடிப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அப்படிப்பட்ட படங்களுக்கு A சர்டிபிகேட் வழங்கப்படும்.

img crtsy:halwacity

6. ஆண் கதாபாத்திரம் என்றாலும் பெண் வேஷத்தில் இருப்பதால் கழுத்துக்கு மேலும், கை மணிக்கட்டின் கீழும், கால் பாதம் மட்டும் தெரியும்படி மட்டுமே உடை அலங்காரம் இருக்க வேண்டும். இடுப்பு காண்பிக்கவே கூடாது... தப்பி தவறி அந்த வேஷத்தை பார்த்தே யாராவது இளைஞர்கள் உணர்ச்சி வசப்படலாம் என்பதால் "இது ஆண், பெண் அல்ல" என்று கொட்டை எழுத்துக்களில் படம் முழுக்க திரையில் தோன்ற வேண்டும் (சட்டம் 13.ஆ)

சட்டம் 13.ஆ வை மீறிய குற்றத்திற்காக சத்யராஜ் (படம்) அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது... அவர் மன்னிப்பு கேட்க விரும்பினால் ஒரு நிபந்தனையின் கீழ் மன்னிக்கப்படுவார். இனி படங்களில் அவர் பெண் வேஷம் கட்டக்கூடாது... (சத்யராஜுக்கு அன்பு வேண்டுகோள்: வெகுளியான & நல்ல மனமுடைய சின்ன முகமூடி ஐயா அவர்களின் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பவும்.... அடுத்த படத்தில் நீங்கள் நடிக்கவே இல்லை என்றாலும் நாங்கள் பாராட்டு தெரிவித்துவிட்டு இந்த கடிதத்தை ரிலீஸ் செய்து கொள்கிறோம்)

நற்செய்தி: மரத்தை வெட்டி அவ்விடத்தில் செடி நடுதல், சைக்கிள் ஓட்டுதல், மாம்பழம் பறித்தல், தார் பூசுதல் முதலிய காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும்

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

லூஸ் மோகன் -கோயம்பேடு பயணம் (சூன் 27,28)


அண்ணன் லூஸ் மோகனிடம் அவர் காய்கறி வாங்குவது சம்பந்தமாக பேசுவதற்கு கடந்த 6 நாட்களாக தொடர்புக் கொள்ள முயற்சித்து தற்பொழுது பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. திங்கள் செவ்வாய் கோயம்பேட்டில் உள்ளார்.

கோயம்பேடு நண்பர்கள் பேசி, பழகி உங்கள் மெட்ராஸ் பாஷையை வளர்த்துக்கொள்ளலாம்

வருகிற சூலை மாதம் முழுவதும் அவர் வீட்டில்தான் இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி

நன்றி
முகமூடி

பின்னூட்டம் விடுபவர்களின் copy-paste வசதிக்காக சில டெம்ப்ளேட்டுகள் ::


1. இத்தகவலுக்கு நன்றி முகமூடி

2. நீங்கள் லூஸ் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரா

3. நன்றி முகமூடி

4. கோயம்பேட்டில் எந்த பஸ்ஸில் வருகிறார், எந்த கடையில் கறி வாங்குவார் என்று விரிவான அறிக்கை அளித்தால் சந்திக்க முயற்சிப்போமே?

5. முகமூடி இப்படி முடியோடு சொன்னா எப்பிடி... லூஸ் மோகனை சந்திக்க ரொம்ப இஸ்ட்ரெய்ன் எடுத்துக்கிறேன். எப்பிடி மீட் பண்ரதுன்னு ஒரு தபா சொல்லுப்பா


கேள்வி 2க்கு பதில்:: சினிமா, நாடகம் எல்லாம் செந்தமிழும், விளங்காத தமிழும் எழுதி பேசி தனக்கு தானே ரசித்து வந்த மேட்டுக்குடி மேலாதிக்க மக்களை நாங்கள் அண்ணாந்து மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை மாற்றி என்னை மாதிரி தற்குறிகளும் புரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் பேசும் அதே மெட்ராஸ் பாஷையில் பேசும் அண்ணன் லூஸ் மோகனுக்கு நான் பெரும் ரசிகன்...
அவருடைய எளிய பேச்சில் அந்த அப்பிராணி மனசில் என் மனதை பறிகொடுத்தவன்...
மெட்ராஸ் பாஷையை தீண்டத்தகாத பாஷையாக கருதும் மெட்ராஸில் வாழாத மேல் சாதி மக்களுக்கு சம்மட்டி அடி கொடுத்த அவரின் மெட்ராஸ் தமிழுக்கு பெரும் ஆதரவாளன்...


பின் குறிப்பு: இந்த பதிவை எழுத உதவியவை

1. மணிக்கூண்டு தொடங்கி வேறு பல பேர் வரை ஒத்ததாக எழுதப்பட்ட சில பயணக்குறிப்புகள். அவற்றிற்கு என் நன்றிகள்


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி


ப.ம.க
(பச்சோந்தி மக்கள் கட்சி) இன்று முதல் பதிவு செய்யப்பட்ட கட்சி ஆகிறது...

நிறுவன தலைவர்: முகமூடி

மற்ற உயர்மட்ட பதவிகள் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டன... சென்னை ஏரியாவை பெரிய மகனும் (1.1); செங்கை கிழக்கு, வடாற்காடு, தென்னாற்காடு ஏரியாவை மற்றொரு மகனும் (2.3) ; மதுரை, திருச்சி ஏரியாவை ஏதோ ஒரு மகனும் (1.4); வட இந்தியாவை மருமகனும் கவனித்துக்கொள்ள பெருந்தன்மையுடன் இசைந்துள்ளார்கள்...
(x.y புரியாதவர்களுக்கு :: x=மனைவி நம்பர். y=மகன் நம்பர்)

மேலும் ராஜ்யசபா வழியாக மத்திய மந்திரியாக வேண்டும் என்ற நம் கட்சி தொண்டர்களின் அழுகாச்சியை ஏற்று மந்திரி ஆவதாக சேலை கட்டிய என் மருமகள் பெரிய மனசுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காலியாக இருக்கும் கீழ்க்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன ::

ராமநாதபுரம், கோவை, நெல்லை, மும்பை ஏரியா பிரதிநிதிகள் :: தலைவருக்கு குடும்பமாக இருக்க விருப்பப்படும் அழகான பெண்மணி (கள்). வயதுக்கு வந்த மகன் (கு.ப வயசு 32) இருந்தால் கூடுதல் தகுதி. தலைவர் 'வளர்ப்பு' மகனாக சுவீகரித்து மூட்டை நிறைய பணமும், பதவியும் கொடுத்து சிறப்பாக கல்யாணமும் பண்ணி வைப்பார்.

கொள்கை பரப்பு செயலாளர் (hot: அடுத்த முதல்வராகும் வாய்ப்பு) :: அழகான இளம்பெண்கள்... நடிப்பு அனுபவம் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதும் திறமை கூடுதல் தகுதியாக கருதப்படும்.

கொள்ளை பரப்பு செயலாளர் :: நிதி வசூல் செய்யும் திறமை. நம் கட்சி அலுவலக வாசலில் இருக்கும் இரண்டு மாடி அளவு உண்டியலை தலைவர் பிறந்த நாள், தலைவர் கல்யாண நாள் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் நிரப்பும் துடிப்பு

மாவட்ட செயலாளர் :: கனமான பெட்டியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு காட்டுக்குள் மிக அதிக தூரம் ஓடும் திறமை.

மகளிர் அணி :: புடவை கட்டி விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த அனுபவம்.

தொண்டர்கள் :: வீட்டில் கோடாரி, வீச்சரிவாள் வைத்திருக்கும், தலைவருக்கு பணமாலை, காலில் விழுவது போன்ற சுயமரியாதை பழக்கம் கொண்ட எவரும்

கட்சி கொள்கைகள் ::

1. இந்த கட்சி, அந்த கட்சி என்று பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டோம்... யாரோடு சேர்ந்து எக்கேடு கெட்டாலும் எப்போதும் 4 மந்திரி பதவியை கைவசம் வைத்திருக்கும்படி பார்த்துக்கொள்வோம்... அதுதானே தமிழக நலனுக்கு நல்லது.

2. ஓட்டு போடும் மக்கள் கஷ்டப்பட விட மாட்டோம்... கஷ்டம் தெரியாத அளவில் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள 'சூடு இருக்கிறது அதோடு சேர மாட்டேன், சொரணை இருக்கிறது இதோடு சேர மாட்டேன்' என்றெல்லாம் காமெடி பண்ணுவோம்... அப்புறம் உதிர்ந்த ரோமம், நடத்தை கெட்ட குடும்பம், மானம் கெட்ட பொளப்பு முதலிய கோஷங்களை போடுவோம்

3. 'சிறை சிங்கங்கள்', 'பழைய மெட்ராஸ்' போன்ற உதிரி கட்சிகளை பிழைப்பில்லாமல் சோர்ந்து போக விடமாட்டோம். பிரச்சார பீரங்கிகளாக உபயோகித்துக்கொள்வோம்.. ரோடு போடுவது, தார் ஊற்றுவது போன்ற வேலைகளுக்கும் அவர்களை பயன்படுத்துவோம்.

இதுவரை நம் கட்சிக்கு தமிழகம் முழுவதும் 10 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று அறிகிறோம்... இந்த எண்ணிக்கையை மேலும் கூட்ட இளைஞர்கள் உழைக்க வேண்டும்... மக்களிடம் உள்ள காசு வளர்ச்சி நிதி உண்டியலில் வந்து சேர வேண்டும் என்ற உன்னத குறிக்கோள் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து வேறு மயக்கத்தில் இருந்தால் சாட்டை எடுக்க வேண்டி வரும்.

பி.கு :: கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை பேடண்ட் செய்யப்பட்டது. அனுமதியில்லாமல் இதை உபயோகிக்க வேண்டாம் என்று வலைப்பதிவாளர்களை (முக்கியமாக லாடு, மாயவரத்தான், துளசி, குயிலி) கேட்டுக்கொள்கிறோம்.

அறிவுப்பசி அண்ணாசாமி :: பட்டம் இல்லாமல் தலைவரா... தலைவர் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் என்பதால் அவரை கலைஞர். முகமூடி என்று அழைப்பதா அல்லது எதிர்காலத்தில் அவரது சேவையை பாராட்டி யாராவது டாக்டர் பட்டம் கொடுக்கத்தானே போகிறார்கள், அதனால் அவரை மருத்துவர். முகமூடி என்று அழைப்பதா...

மிக முக்கிய அறிவிப்பு :: எங்கள் கட்சிக்கு என்று நாங்கள் கேட்ட பச்சோந்தி அல்லது குரங்கு சின்னத்தை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது தேர்தல் ஆணையம்... இன்னும் இரண்டு நாட்களுக்குள் தராவிட்டால் தாயகம் ..ச்சே.. தமிழகம் பசுமையாக இருக்காது... 5,6 பேரை தீக்குளிக்க வைத்து மேடை போட்டு அழும் அபாக்கிய நிலைக்கு என்னை தள்ளிவிடாதீர்கள்

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

புதிய முறை லஞ்ச ஒழிப்புக்கு சிக்கல்


புதிய வகை லஞ்ச ஒழிப்பு முறை அமலாக்கப்படுவதற்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. advanced methods through scientific research by women என்ற அமைப்பு இந்த புதிய முறையை மிகுந்த ஆராய்ச்சிக்கு பின்பு கண்டுபிடித்துள்ளது... இதன் தலைவர் வீரலட்சுமி கூறுகையில் :: சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும், பொதுமக்களின் துணையோடே நம் நாட்டில் லஞ்சத்தை இல்லாமல் செய்யலாம்... லஞ்ச ஒழிப்பு துறை என்ற தனித்துறையின் மூலம் செலவாகும் அரசாங்க பணத்தை கொண்டே மக்களுக்கு இந்த பயிற்சி அளிக்கலாம்... மேலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வாங்கும் லஞ்சமும் இதன் மூலம் ஒழிக்கப்ப்டுகிறது. முதற் கட்டமாக பெண்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்திருக்கிறோம்... (பார்க்க படம்) படிப்படியாக ஆண்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படும்"

ஆனால் இந்த பயிற்சிக்கு சட்ட வடிவம் தர சில சிக்கல்கள் இருப்பதாக அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்... என்ன சிக்கல் என்பதை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

img crtsy: dinamalar

கருத்து நன்றி: முகமூடி
படங்கள் நன்றி: தினமலர்

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

இளையராஜாவின் திருவாசகத்தை கேட்க..


இளையராஜாவின் திருவாசக இசை வடிவம், வருகிற ஜுன் 30ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் வெளியாகிறது. ‘இது என் வாழ்நாளின் கனவு, என் தவம்!’ என்கிறார் ராஜா!


"ஒரு வீட்டை இரண்டு நாள் கவனிக்காமல் விட்டால், எங்கிருந்தோ தூசி படிந்துவிடுகிறது. ஒரு வாரமானால், புழுதியும் ஒட்டடையும் நிரம்பிவிடும். ஒரு மாதமானால், எலிகளும் பெருச்சாளிகளும் குடியேறிவிடும். ஒரு வருடம் ஆகிவிட்டால்... அது அரண்மனையே ஆனாலும், மண்மேடாகி விடும். ஆனால், நாம் நம் பொக்கிஷங்களை, கலாசார அடையாளங்களை, ஜென்ம ஜென்மாந்திரமாக கவனிக்காமல் இருந்து வருகிறோம். நம் அலட்சியங் களையும் தாண்டி வாழுகிற பலம், அந்தப் பொக்கிஷங்களுக்கு இருப்பது நம்முடைய பாக்கியம்! இனிமேலாவது நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளியிலிருந்து கலாசாரக் குப்பைகள், அநாகரிகப் புழுதிகள் நம் வீட்டுக்குள் வராமல் தடுத்தாக வேண்டும். அப்படி யோசிக்கும்போது எனக்கு வந்த சிறிய யோசனை தான் திருவாசகத்துக்கு இசை கோக்கிற முயற்சி"

"இப்படி ஒரு முயற்சியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செய்துகொண்டு இருந்தேன். அதிக பணமில்லாமல் இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியாது. என் இயல்புக்கு யாரிடமும் போய்க் கேட்க எண்ணம் வராது. அப்படியும் சில முயற்சிகள் எடுத்தேன். யாரும் இசைந்து வரவில்லை. அவர்கள் இதை வியாபார ரீதியாக அணுகியதுதான், இந்த ஐந்து வருட கால தாமதத்துக்குக் காரணம்"
- இளையராஜா (நன்றி: விகடன்)

தற்போதைக்கு ராஜா அடுத்துச் செய்ய விரும்பும் காரியங்கள் :: திவ்ய பிரபந்தத்தை, சிலப்பதிகாரத்தின் சில அபாரமான வரிகளை, ராமாயணம் அல்லது மகாபாரதத்திலிருந்து சில பகுதிகளை இசைவடிவமாக்குவது.

வெளிவராமலே போன அந்த சிம்பனிக்கு, இசைக்கருவி எதுவும் இல்லாமலேயே - நாமெல்லாம் வார்த்தைகளை எழுதுவதை போல - இசைக்குறிப்புகளை(சிம்பனிக்கு 100க்கும் மேற்பட்ட வாத்தியங்களுக்கு இசை கோர்க்க வேண்டும்) எழுதுவதை கவனித்த அந்த சிம்பொனியின் ஒருங்கினைப்பாளர் உலக அரங்கில் இளையராஜாவின் இசை மேதமையை பாராட்டியபோது, நாமெல்லாம் பெருமையடைந்தோம்... பெருமை இருக்கிறது, அந்த இசை மேதையிடம் திட்டங்களும், அபரிமிதமான ஞானமும் இருக்கிறது... இல்லாதது ஒன்றே ஒன்றுதான்... அது நிதி...

நாம் அவருக்கு நிதியுதவி என்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். அவரின் இசைத்தட்டுக்களை காசு கொடுத்து வாங்கினாலே போதும். அது அவரின் அடுத்த முயற்சிக்கு உதவியாக இருக்கும். மேதைகளை இருக்கும் போது தாங்கிப்பிடிக்காமல் அவர்கள் இறந்த பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டி விருது கொடுத்து மறந்து போகும் கலாச்சாரத்தில் நாமும் பங்கெடுக்க வேண்டாம்....

உங்கள் முடிவை இன்றே எடுங்கள். எடுத்த முடிவை வாக்காக இடுங்கள். காசு கொடுப்பதாக எடுத்த முடிவை மாற்றாதீர்கள். ஓசியில் கேட்கும் முடிவை மாற்றுவது தப்பேயில்லை... கேட்கவே மாட்டேன் என்பது உங்கள் முடிவென்றால், இசைத்தட்டை காசு கொடுத்து வாங்கிய பின் யாருக்கு கொடுப்பது என்பதையும் நீங்களே முடிவெடுங்கள்.


இளையராஜாவின் திருவாசகம் இசையை ::
காசு கொடுத்து கேட்பேன்
ஒசியில் கிடைத்தால் கேட்பேன்
கேட்கவே மாட்டேன்

தலைப்பின் தொடர்ச்சி :: 30ம் தேதிக்கு பிறகு காசு கொடுத்து வட்டு வாங்கவும்

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

புலிகளின் மூர்க்க குணம்


புலிகளுக்கு போராட்ட குணம் இருக்கும் அதே அளவு மூர்க்க குணமும் அதிகம் என்றும், ஒரு வகையில் மூர்க்க குணமே புலிகளின் survival க்கான முக்கிய தகுதி என்றும் புலிகளை கூர்ந்து கவனித்துவரும் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.


புலிகளின் சில குணாதிசயங்கள்


தன் எல்லையை பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், புதிய எல்லையை கைப்பற்றவும், தனக்கு போட்டியாகவோ வருபவற்றை காலி செய்யவும் சண்டையிட தயங்காத புலிகள் சண்டைக்கா கூட்டு சேரும்போது ஆண் பெண் பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை... வயது குறைந்த புலிகளும் சண்டையில் ஈடுபடுவதுண்டு.

சில சமயம் புலிகள் தங்களுக்குள்ளேயே எல்லை பிரச்னை காரணமாக சண்டையிடுவதுண்டு.

அதிவேகமாக துரத்திச்சென்று கொல்வது புலிகளின் சிறப்பம்சம். பகலை விட இரவில் செயலபடுவதே புலிகளுக்கு விருப்பம்.

உடலில் இருக்கும் பட்டை பட்டையான அமைப்பை வைத்து புலிகளை அடையாளம் காணலாம்.

காட்டுக்குள் சராசரியாக 15 வருடங்கள் வாழும் புலிகள் காடு அல்லாத சூழ்நிலையில் வாழும் காலம் 16 முதல் 18 வயது வரையே.

நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் புலிகளுக்கு ஆற்றல் அதிகம். 6-8 கிமீ. அகலமுள்ள நதிகளை சர்வசாதாரணமாக நீந்தவல்ல புலிகளால் 29 கிமீ வரை நீந்த இயலுமாம்.

தாக்குதல் காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதவிதமான தகவல் தொடர்பை புலிகள் கையாளுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

புலிகளை பாதுகாப்பதற்கு அமைப்பெல்லாம் இருக்கின்றன. அதன் உறுப்பினர்கள் புலிகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அழிந்து வரும் புலியினத்தின் பாதுகாப்புக்கும் புணரமைப்புக்கும் நிதி ஆதாரம் திரட்டும் அவர்கள் புலிகளின் மேல் வைத்திருப்பது வெறும் பாசம் என்ற நிலை¨யையும் தாண்டிய ஒரு obsessive நிலையில் இருப்பவர்கள். அதன் ஒரு உறுப்பினர் சொல்வது :: புலிகளின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்பவர்கள் புலிகளின் கைகளில் கூட தப்பித்து விடலாம், எங்கள் கைகளில் மாட்டினால் கைமாதான்.

ஆசியாவில் கடவுளுக்கு ஒப்பாகவும் தீமையை அழிக்க வந்த அவதாரமாகவும் கருத்தப்படும் புலிகளுக்கு கலாச்சார பின்புலமும் முக்கியத்துவமும் மிக அதிகம்.

புலிகளை பற்றி மேலும் விபரங்கள் இங்கே

புலிகளின் நலனுக்க்காக நீங்கள் செய்ய வேண்டியது
புலிகளுக்கு நீங்களும் உதவ முடியும்

டிஸ்க்ளெய்மர்: இந்த பதிவு இந்திய வகை புலிகளான tigris எனப்படும் புலி வகைகளை குறித்து மட்டுமே. மற்ற நாடுகளில் வாழும் புலி வகைகளான அல்டைகா, சும்த்ரே, கார்பெட்டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

அறிவுப்பசி அண்ணாசாமி: "புலிநகக்கொன்றை"ன்னு என்னமோ பொஸ்தகம் ரிலீஸ் பண்ணியிருக்காங்களாமே. அது என்னா, புலி நகத்தால எப்படி எதிராளிய வூடு கட்டுறதுங்கறத பத்தியா??

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ரஜினிகாந்தின் புத்தக meme


தமிழ்மணத்தில் பதிவுசெய்துள்ள வலைப்பதிவாளர்களின் புத்தக மீமால் (meme) கவரப்பட்ட ரஜினிகாந்த் இதில் கலந்து கொள்ளவேண்டும் என்று தனக்கும் மிகுந்த ஆவல் இருப்பதாய் அறிவித்ததன் பிண்ணனியில், அதற்கென ஒரு வலைதளத்தை ஒதுக்க இயலும் என்றாலும் தற்போதைக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கிக்கொடுத்து உதவியிருக்கிறது குமுதம்.
தமக்கு பிடித்ததாக ரஜினி சொல்லும் புத்தகங்கள்::

லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்
ஆட்டோ பயாக்ரஃபி ஆஃப் எ யோகி
கீதா ஆஸ் இட் வாஸ்

படித்தால் இமயமலை போகும் அபாயம் இருப்பதால் படிக்கும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிக்கும் படி வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அப்படியே ஒரு பக்கபாட்டு ::

ரஜினிக்கும் சிம்புவிற்கும் ஒரு 5 அல்லது 6 வயது வித்தியாசம் இருக்கலாம்னு சொல்ற "அரசு" ரஜினியை விட சிம்பு பெரியவரா சிறியவரான்னு சரியா சொல்லாம பொதுமக்கள டீல்ல விட்டுட்டாரு. இது குறித்து மாட்டுக்கார மாடசாமிகிட்ட கருத்து கேட்டப்போ ::

அவங்க தலைவருக்கு வயசு சின்னதுன்ற அவங்க நினைபுல எங்களுக்கு ஒன்னியும் ப்ரச்னை இல்லீங்கோ.. ஆனா அதே நெனப்புல ரசினி ரெண்டு கையயும் பயில்வான் மாதிரி தூக்கிகிட்டு வெத்து உடம்போட இருக்கற படையப்பா போஸ்டர ஊரெல்லாம் ஒட்டினாங்களே.... எங்களையெல்லாம் ஒரு நிமிசம் நெனைச்சு பாத்தாங்களா.... சின்ன புள்ளங்கல்லாம் பயந்துடிச்சி... வேப்பில ஒடிச்சி ஒடிச்சி மரமெல்லாம் மொட்டயாயிடிச்சி. ஒமகுச்சிக்கு ஏன் ரஜினி தலைய ஒட்டி க்ராபிக்ஸ் பன்னியிருக்காங்கன்னு கேட்ட பெருசுங்களுக்கு வேற பதில் சொல்ல முடியல..

எங்கள விடுங்க, வாயில்லா சீவனுங்க என்ன பாவம் பண்ணிச்சி.... என் மாடுங்க பாட்டுக்கு நாலு போஸ்டர தின்னமா பால கொடுத்தமான்னு இருந்திச்சிங்க... மேற்படி போஸ்டர பாத்ததுபுட்டு மெரண்டு போயி படுத்ததுங்கதான்... அதுக்கப்புறம் போஸ்டர்னாலே பால் கறக்க மாட்டேங்குது..... என் பொளப்புக்கு பால்தான் போங்க..

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்


என் பதிவில் எழுதிய அனைவரின் கருத்தையும் படித்ததும் எனக்கு தோன்றியது ::


என் பதிவின் தலைப்பு 'இந்தியா இலங்கைக்கு ஆயுதம் தரவேண்டுமா?' என்பதாக இருந்திருக்கலாம்.

இந்தியா இதனால்தான் தளவாடம் தருகிறதோ என்று என் எண்ணத்தை கருத்தாக அன்றி யூகமாக வெளியிட்டிருக்கலாம்.
இந்தியா ஆயுத உதவி விடுத்து வேறு எந்த உபாயங்களில் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் என்ற கேள்வியை படிப்பவர்களுக்கு எழுப்பி ஆக்கபூர்வ விவாத மேடையிட்டிருக்கலாம்.

நானோ (எம்பி பலம் இல்லாமல்) வைகோவோ, கொடுக்கலாம்/ கொடுக்கக்கூடாது என்று சொல்வதால் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆயினும் வைகோ கடிதம் எழுதியதன் மூலம் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தது போலவே, நீங்கள் யாராவது பதிய ஆசைப்பட்டால் http://goidirectory.nic.in என்ற தளத்தில் மேன்மைமிகு. இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரி இருக்கிறது.

என் மனமார்ந்த ஆசை: ஆயுதங்கள் இல்லாத உலகம். பிறந்த மனிதன் இயற்கையாக மரணம் எய்தும் வரை பயமற்ற நிம்மதியான வாழ்க்கை. ஈழத்தமிழர் அவர்தம் மண்ணில் அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் அரசால் ஆளப்படுவது... நன்றி.


இந்த மீள்பதிவுக்கு முந்தைய::

இந்திய கடற்கறையை வடக்கில் கொண்டிருக்கும் இலங்கை, இந்திய பெருங்கடலில் இருக்கும் இடம் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது. கிழக்கில் ஆஸ்திரேலியா வரையும், மேற்கே கிழக்காப்பிரிக்கா வரையும், தெற்கே அன்டார்டிகா வரையும் திறந்த வெளி கடற்பரப்புதான். எண்ணெய் வள மத்திய கிழக்கு நாடுகளை பிற ஆசிய நாடுகளுடன் இணைக்கும் அதிமுக்கிய கடற்பாட்டையில் இருக்கும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

உள்முகம் வெளிமுகம் என்று இரண்டு அமைப்பாக அமைந்திருக்கும் திரிகோணமலை துறைமுகம் உலகத்தின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்று. மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இதன் உள் துறைமுகத்தின் மிக அதிக ஆழம் காரணமாக எவ்வளவு பெரிய கப்பலையும் அதனால கையாள முடியும். நீர்முழுகி கப்பல்கள் உள்ளே சென்று பதுங்கினால் கண்டுபிடிக்க இயலாது.இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் கடற்தளம் ஜப்பானின் ஆக்ரமிப்புக்கு போன பின் இங்கே பிரிட்டிஷ் அரசு அமைத்திருந்த கடற்படை தளம்தான் கூட்டுப்படையினரின் தென்கிழக்காசிய தலைமையகம் ஆனது. இங்கிருந்த வான் நிலையத்திலிருந்துதான் அமெரிக்க வான்படை மியான்மர் மற்றும் மலேயாவில் ஆக்ரமித்திருந்த ஜப்பானின் மேல் குண்டு பொழிந்தது. ஜப்பானும் திரிகோணமலை மேல் குண்டு வீசியது. 1957ல் இந்த துறைமுகத்தை இலங்கை அரசு கையகப்படுத்திக்கொள்ளும் வரை வரை பிரிட்டிஷ் அரசின் கடற்படைத்தளம் இங்கு இருந்தது. (அப்பொழுது கட்டப்பட்ட 99எண்ணெய் சேமிப்புக்கிடங்குகள் - ஒவ்வொன்றும் 15000 டன் எண்ணெய் சேமிக்க கூடியவை - இப்பொழுது இந்திய இலங்கை கூட்டு வர்த்தகத்தில் தனி முக்கியத்துவம் பெற்றது)

1951ல் இலங்கை அமெரிக்கவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. அமெரிக்கா தரும் புதிய ஒளிபரப்பு சாதனங்களுக்கு பதிலாக வாய்ஸ் ஆப் அமெரிக்கா (VOA) நிகழ்ச்சிகளை ரேடியோ சிலோன் (இந்தியாவிலும் அப்போது பிரபலம்) மூலம் ஒளிபரப்புவதுதான் அது. இதன் மூலம் ஆசியா முழுமைக்கும் தன்னுடைய செய்திகளை அமெரிக்கா பரப்பி வருகிறது (இன்றைய மாடர்ன் போர்முறையில் மிக முக்கியமாக ராணுவ நிபுணர்கள் கருதுவது தகவல் தொடர்பைத்தான்)

திரிகோணமலை துறைமுகத்தையும் அமெரிக்கா தன்னுடைய ராணுவ படைகளை deploy செய்யும் கேந்திரமாக பயன்படுத்துவதற்கு முயற்சி செய்தே வந்திருக்கிறது. இங்கேயிருந்தால் சீனாவிற்கு செல்லும் மத்தியகிழக்கின் எண்ணெய் வளத்தை கண்காணிக்கவும் அதன்மூலம் சீனா மேல் ஒரு கண் வைத்திருக்கலாம் என்பது அதன் எண்ணம். உலகம் முழுவதும் தனது விரைந்து தாக்கும் திறனை மேம்படுத்துவதற்கான தளம் தேடும் (base for rapid deployment) முயற்சியில் இறங்கி இருக்கும் அமெரிக்காவுக்கு திரிகோணமலை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி... சுனாமி மீட்புக்கு கூட USS Hercules என்ற விமானந்தாங்கி கப்பலில் ஆயுதம் தாங்கிய வீரர்களை அனுப்பும் அமெரிக்கா இப்போது பல இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்ற பேரில் - முன்பு தனக்கு அனுமதியே இல்லாத பல இடங்களில் கூட சுலபமாக - ராணுவ கேந்திரங்களை நிறுவி வருகிறது.

பொறுமையாக 1954 வாக்கில் இந்தியா இலங்கையின் விவகாரங்களை பார்க்க ஆரம்பித்தது. இலங்கை இந்தியாவின் ராணுவ பாதுகாப்பு வளையத்தின் மிக அருகில் இருப்பது, இந்திய பெருங்கடலின் கடற்பாதுகாப்பு எல்லையிலும் இருப்பது ஆகிய காரணங்களினால் அந்நிய நாடுகளின் விமான கேந்திரம் அல்லது கடற்தளம் திரிகோணமலையை கட்டுபடுத்த ஆரம்பித்தால் இந்திய நாட்டின் வான் மற்றும் கடல் தளங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்தது.இந்தியா தன்னை சுற்றிலும் எதிரிகளை வைத்துள்ளது. தன் இடத்தை ஆக்ரமித்த சீனாவிற்கு பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகியவை நண்பர்கள். அமெரிக்காவும் பரம வைரியான பாகிஸ்தானும் கூட்டாளிகள். இந்தியாவிற்கோ அமெரிக்காவின் எதிரியான ரஷ்யாவுடன் நட்பு.

இந்தியாவிற்கு ஜெயவர்த்தனே அரசு மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு சேருமோ என்ற கவலை இருந்தது.. 1983 கலவரத்துக்கு பின் இந்தியாவின் தமிழ் போராளிகள் ஆதரவு நிலையால் ஜெயவர்த்தனே அமெரிக்க அரசின் ஆதரவை நோக்கி செல்கிறாரோ என்று எண்ணும்படியான செயல்கள் நடந்தன. போததற்கு ஜெயவர்த்தனே பிரிட்டன் பிரதமர் தாட்சருக்கு '1947ல்ஏற்படுத்திய ஒப்பந்தம் - திரிகோணமலை துறைமுகத்தை பிரிட்டன் உபயோகப்படுத்தும் என்ற - இப்போதும் செல்லும், இன்னும் காலாவதியாகவில்லை' என்று செய்தி வேறு அனுப்பினார். இந்தியாவுக்கு இலங்கையில் இயங்கும் VOA பற்றியும் சந்தேகம் உண்டு.தன்னுடைய தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கவும் தன் நீர்முழுகிகளுக்கு சமிஞ்சை அனுப்பவும் அமெரிக்கா VOA சாதனங்களை உபயோகிக்கிறது என்று நினைத்தது அது.

இவ்வளவு விஷயங்களின் பின்னணியில் 1987ல் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டில் பின் இணைப்பாக ஜெயவர்த்தனேவுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் நடந்த கடிதப்போக்குவரத்து மூலம் சேர்க்கப்பட்ட சில விஷயங்களை பார்க்க வேண்டும்.

அ) இந்திய நலனுக்கு குந்தகம் விளையும் என்பதால் திரிகோணமலையோ அல்லது வேறு எந்த துறைமுகமோ எந்த அயல்நாட்டின் ராணுவ உபயோகத்துக்கும் தரப்படக்கூடாது (சென்ற முறை இந்தியா வந்தபோது ரணில் திரிகோணமலையை துறைமுகத்தை அந்நிய ராணுவ பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று உறுதியளித்தார். சுனாமி பாதிப்பின் பிறகு திரிகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களை சுத்தப்படுத்தி வழி ஏற்படுத்தும் முயற்சியை எல்லாருக்கும் முன் இந்தியா செய்தது)

ஆ) திரிகோணமலை எண்ணெய் சேமிப்புக்கிடங்கு புனரமைப்பும், செயல்பாடும் இந்திய-இலங்கை கூட்டு முயற்சியில் நடைபெறும் (இந்த கிடங்குகளை இந்திய அரசாங்கத்திற்கு - IOCக்கு - குத்தகைக்கு விடுவதற்கு இலங்கை அரசுக்கு இருக்கும் உரிமை பற்றி புலிகள் தங்கள் ஈழம் நேஷன் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்கள்)

இ) வெளிநாட்டு வர்த்தக வானொலி ஒளிபரப்பு நிலையங்கள் இலங்கை அரசுடன் வைத்திருக்கும் ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையங்கள் பொது ஒளிபரப்பு அன்றி ராணுவ செய்திகளையோ ரகசிய செய்திகளையோ பரிமாற உதவியாக இருக்கக்கூடாது.

இந்த ஒப்பந்த இணைப்பு வாசகங்களை இலங்கை மீறாமல் இருப்பது இன்றும்/என்றும் இந்தியாவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.

1962ல் க்யூபாவில் தன்னுடைய ஏவுகணைகளை நிறுவ ரஷ்யா (அப்போது யு.எஸ்.எஸ்.ஆர்) முயற்சித்த போது அதை கடுமையாக எதிர்த்தது அமெரிக்கா. அணுஆயுத போரின் விளிம்பு வரை அழைத்து சென்ற அந்த 13நாள்நாடகத்தை உலகமே கவலையாக பார்த்தது. எல்லா வகையிலும் ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுத்தது அமெரிக்கா. ரஷ்யா எதையும் கண்டுகொள்ளவில்லை. திறை மறைவில் நடந்த ரகசிய பேச்சு வார்த்தையில் தன் நட்பு நாடான துருக்கியில் நிலை கொண்டிருக்கும் தன்னுடைய ஏவுகணைகளை காலப்போக்கில் திருப்பி எடுத்துக்கொள்வதாகவும், க்யூபாவின் மேல் எந்த காலத்திலும் படை எடுக்க மாட்டோம் என்றும் - கென்னடியின் தம்பியே ரஷ்ய தூதரை நேரில் கண்டு - உறுதி அளித்ததன் பேரில் ரஷ்யா தன் ஏவுகணை கட்டமைப்பை கலைத்துக்கொண்டது. உலகின் மற்ற எந்த நாட்டை விடவும் மிக அதிக அளவில் அணு ஆயுதம் மட்டுமன்றி மற்ற எல்லாவித ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்த அமெரிக்காவே தன்னுடைய அண்டை நாட்டில் இன்னொரு நாட்டின் ராணுவம் நிலை கொள்வதை அனுமதிக்கவில்லை. ஏன் என்பதற்கு காரணம் யோசித்தால் புரியும்.

அப்படியிருக்க இந்தியா என்னும் - 100 கோடி மக்களையும், துணைக்கண்டம் என்ற அளவில் மிகப்பெரிய நிலப்பரப்பையும், மூன்று பக்கமும் நட்பில்லாத நாடுகளையும் கொண்டிருக்கும் - நாடு தன் தேச நலன் கருதி அருகிலிருக்கும் தேசத்தை அரவணைத்து செல்ல வேண்டியது அவசியமாகிறது. ராணுவ உதவி கேட்டால் செய்ய கூடாது. பொருளாதார உதவி கேட்டால் கொடுக்கக்கூடாது (அதன் மூலமும் தளவாடங்கள் தானே வாங்கப்போகிறது) என்றால் என்ன செய்ய வேண்டும். இந்தியா உதவி செய்யாவிட்டால் இலங்கை சும்மா இருந்துவிடாது. உலக அளவில் உதவி கோரும். இலங்கைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசம் என்ற அடையாளம் இருக்கிறது. அது பிரிவினை கோரும் - தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்கா, இந்தியா மற்றும் இதர நாடுகள் முத்திரை குத்திய - இயக்கத்துடன் செய்த/செய்யும் போருக்கு செலவழிக்க தளவாடங்கள் என்று கேட்டாலும் சரி, சிதைந்து போன தன் உள்கட்டுமானத்தை சரி செய்ய பொருளுதவி என்று கேட்டாலும் சரி - ஆயுதம் வழங்கவும் மற்ற உதவிகள் வழங்கவும் நிறைய நாடுகள் தயாராகவே உள்ளன. அப்படி வரும் நாடுகள் போடும் ஒப்பந்தங்கள் இலங்கைக்கு சாதகம் என்பதை விட இந்தியாவுக்கு பாதகம் என்பதுதான் என் கருத்து.

நேரம் இருந்தால் ஒரு முறை இலங்கைக்கு இந்தியா உதவி என்ற என் சென்ற பதிவை படியுங்கள்


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ஒரு விளக்கம்: இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி?


நார்வே தூதுக்குழு மேற்பார்வையில் புலிகளும் ரணில் அரசும் சமாதானத்தின் விளிம்பை தொட்ட நிலையில் சந்திரிகா அதை கெடுத்த போது சந்திரிகாவை சபிக்காத தமிழர் இல்லை... அதே சமயத்தில் புலிகளின் மேலும் ஒரு சலிப்பு இருக்கிறது... இன்னும் எவ்வளவு காலம் என்ற கேள்வியின் தொடர்ச்சி அது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..


உலகம் முழுக்கவே ஆயுதங்களால் லாபமடைவது ஆயுத வியாபாரிகளும், பாதிக்கப்படுவது பொதுமக்களும்தான் என்பது வெளிப்படை. ஆயினும் ஆயுத வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கும். தன் உள்நாட்டு பாதுகாப்புக்காக என்றே - எல்லா நாட்டையும் போல - இலங்கை ஆயுதம் வாங்கும். வெளியுலகை பொறுத்தவரை இலங்கை என்னும் அங்கீகரிக்கபட்ட நாட்டை ஆளும் சிங்கள அரசுக்கும் தனிநாடு கேட்டு போராடும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட புலிகளுக்கும் சண்டை. ஈழததமிழருக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டா என்பது ஏட்டளவில் இருக்கும். புலிகள் அனைவரும் ஈழத்தமிழர்தான் என்றாலும் நான் இங்கே சொல்வது பொதுமக்களை..

இந்தியா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவதற்கும் (பஸ், ரயில் விடுவதற்கு பொதுமக்கள் ஆதரவு எல்லாம் ஒன்றும் இல்லை) இலங்கையுடன் பாராமுகமாயிருப்பதற்கும் அரசியல் இருக்கிறது. அதன் பார்வையில் இலங்கையில் நடக்கும் உள்நாட்டு ப்ரச்னையை விட தன் தென் பிராந்தியத்தில் தன் ஆளுமை முக்கியம்.. அதே சமயத்தில் இந்தியா நிர்பந்தித்தால் இலங்கை அரசோ புலிகளோ கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா? பின்பு ஏன் நடுநிலையோடு இல்லாமல் இலங்கை அரசுக்கு மாத்திரம் தளவாடங்கள் கொடுக்கலாம் எனும் கேள்வி வரும்.. அதற்கு காரணம்தான் நான் பதிவில் சொன்னது.

வைகோ சமய சந்தர்ப்பம் தெரியாமல் சில விஷயங்களை பேசி மக்களிடம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிவிடுவார். அவர் புலிகளை பற்றி பேசி பொடாவில் சிறையில் இருந்த போது அவரை 'மாவீரன்' என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை (கருத்துக்கணிப்புகள் எல்லாம் எடுக்கப்பட்டன) கட்சி வளர்த்து ஆட்சியில் பங்கு பெற்று பின்பு ஆக்கபூர்வமாக செயல்படுவதை விடுத்து 'சும்மா பேசிவிட்டு' இப்படி சிறையில் கிடக்கிறாரே என்ற எண்ணம்தன் இருந்தது. இரு வாரங்களுக்கு முன் இலங்கை அமைச்சர் இந்தியா வந்தபோதே ராணுவ தளவாடங்கள் பரிமாற்றம் பற்றிய பேசியதாக செய்தி வந்தது.. அப்போது வைகோ தில்லி சென்று பிரதமரை சந்தித்ததாகவும் சில மணி நேரங்கள் இதில் உள்ள பாதகங்கள் பற்றி எடுத்த்து சொல்லியதாகவும் பிரதமர் செவி கொடுத்து கேட்டதாகவும் வைக்கோவின் அறிக்கை சொன்னது... இப்பொழுது திடீரென்று தளவாடங்கள் விற்பனை உறுதிப்படுத்தப்பட்டதென்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ பிரதமருக்கு கடிதம் எழுதினாரென்றும் செய்தி வருகிறது... கூட்டணிக்கடசியை சேர்ந்தவர், இன்றைய பிரதமர் மட்டுமல்ல முந்தைய பிரதமர்களும் அன்பு பாராட்டும் வைகோ எடுத்துச்சொன்னது எடுபடாததற்கு ஏதாவது அரசியல் காரணம் இருக்கலாம். வைகோ வீதிக்கு வந்து போராடாமல் கடிதம் மட்டும் எழுதுவதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்.

ஒரு சராசரி தமிழனுக்கு அரசியல் கூத்துக்கள், சினிமா கூத்துக்கள், அன்றாட கூத்துக்கள் தாண்டி ஈழப்ப்ரச்னை பற்றி 'கொடுக்கப்படும்' செய்திகளின் அடிப்படையிலேயே - தினமலர் என்றல்ல, சன் டிவி, மூன் டிவி எல்லாம் சேர்த்துதான் சொல்கிறேன் - அறிவு இருக்கிறது என்ன செய்வது... நான் "சராசரி தமிழனின்" பிரதிநிதி இல்லைதான், ஆனால் ஈழப்பிரச்னையில் ஈழத்தமிழர் அளவு இந்திய தமிழருக்கு 'விஷயம்' தெரிந்திருக்க சாத்தியம் இல்லை என்றளவு தெரிந்தவன்... இந்த பதிவில் நான் சொல்ல வந்த விஷயத்தை நான் சொல்ல நினைத்த விதத்தில் சொல்லவில்லை என்று உணர்கிறேன். சென்சிடிவ் ஆன இந்த விஷயத்தில் மேலும் மேலும் 'எனக்கு தெரிந்த' கருத்தை சொல்ல நான் விரும்பவில்லை. யார் உணர்வாவது புண்பட்டிருக்குமாயின் வருந்துகிறேன்... விரைவில் இனப்பிரச்னைக்கு தீர்வு அமைந்து அமைதி திரும்ப உளமார ப்ரார்திக்கிறேன்...

குறிப்பு: நான் மீள்பதிவு செய்தபோது ஒட்டு நிலவரம் (-12/24) என்ற அளவிலே இருந்தது. மீள்பதிவு செய்ததினால் reset அகிவிட்டது. ஓட்டு போட்டவர்கள் பொறுத்தறுள்க.

ஒரு குறிப்புக்காக மட்டும்:: "இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்ய வேண்டும்" என்ற தலைப்பில் வந்த என் முந்தைய பதிவு:

விடுதலைப்புலிகளின் நலன் ஒன்றை மட்டுமே விரும்பும் வைகோ இந்தியா இலங்கைக்கு எந்த ராணுவ தளவாடங்களையும் வழங்கக்கூடாது என்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அப்படி வழங்கினால் அது இலங்கை தீவு தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் தமிழர் இதயங்களிலும் ஆற்ற முடியாத காயங்களை ஏற்படுத்தும் என்பது அவரின் வாதம்.

இலங்கை தமிழர் நலன் என்ற தனது வழக்கமான வாசகங்களை உபயோகித்தாலும் அவர் உண்மையில் கூற நினைப்பது இந்தியா ஆயுத உதவி வழங்கினால் அது விடுதலைப்புலிகளுக்கு ஆபத்தாக முடியும் என்பதாகத்தான் இருக்க முடியும்....

விடுதலைப்புலிகள் தமிழர் நலனுக்காக போராடுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டாலும் உலகத்தின் பார்வையில் அது ஒரு தீவிரவாத இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை... செஷன் தீவிரவாதிகளை பற்றி எந்தளவு நாம் கவலை கொள்கிறோமோ அதே அளவுதான் விடுதலைபுலிகளை பற்றிய உலகத்தின் கவலையும்... ஆக கசப்பாக இருந்தாலும் உண்மை நிலை இதுதான் :: இலங்கை என்ற நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இராணுவ உதவி என்று கேட்கும்போது இந்தியா தராவிட்டால் வேறு ஏதாவது ஒரு நாடு அந்த உதவியை அளிக்க முன்வரும்... என் விளக்கம் இங்கே

அமெரிக்க அரசு ராணுவ உதவி என்று இலங்கை எதை கேட்டாலும் தர தயாராக இருக்கும்... மாற்றாக அங்கே ராணுவ தளம் குறிப்பாக கடற்படை தளம் அமைக்க அனுமதி கேட்கும்... டியகோ கார்சியா தீவில் ராணுவ தளம் ஏற்படுத்த நடந்த கூத்துக்களை மறக்கக்கூடாது. தென்கிழக்கு பிராந்திய கண்காணிப்புக்கு குறிப்பாக இந்திய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இலங்கை ஒரு மிகச்சிறந்த பூகோள சாதக இடம்... இந்த பிராந்தியத்தில் கடற்கண்காணிப்புக்கு அமெரிக்கா தகுந்த வசதியில்லாமல் நிறைய செலவு செய்கிறது... ஏற்கனவே சுனாமி மீட்பு என்ற போர்வையில் தளம் பதிக்க சென்ற அமெரிக்க அரசுக்கு இந்தோனீஷிய அரசும் இந்திய அரசும் அனுமதி மறுத்தது... இலங்கை கட்டுப்பாட்டுடன் கூடிய அனுமதி அளித்தது...

அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ இலங்கையில் ராணுவ உதவி என்ற பெயரில் உள்ளே நுழைவதோ அல்லது இலங்கை ஏதோ ஒரு நாட்டிலிருந்து மிக நவீன அன்னிய தயாரிப்பு ராணுவ தளவாடங்களை வாங்குவதோ இந்தியாவின் இறையாண்மைக்கு நல்லதா என்பதை வைகோ போன்றவர்கள் சிந்திக்க வேண்டும்... பிரபாகரன் தனது நண்பர் என்ற காரணத்தால் தன் பிறந்த நாட்டின் கேட்டிற்கு வித்திடத்துணியக்கூடாது...

பி.கு: இதையும் IPKF இலங்கைக்கு சென்றதையும் முடிச்சு போட கூடாது... IPKF என்பது ஒரு கறுப்பு அத்தியாயமாக இப்போது பார்க்கப்பட்டாலும் அது அனுப்பப்பட்ட காலத்தையும் சூழ்நிலையயும் கருத்தில் கொள்ள வேண்டும்

பின்பாட்டு: வைகோவிற்கு இலங்கை தமிழர்கள் மேல் உண்மையான அக்கறை இருப்பின் அவர் இலங்கை தமிழர் நலன் குறித்து பேசியதை தவிர என்ன செய்தார் என்று யாராவது எனக்கு சொல்லுங்கள்... தன் வேரை இழந்து தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையிலான ஒரு வாழ்க்கை தரத்தில், தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் வாழும் அம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏதாவது பாடுபட்டாரா?? அவர்களுக்கு எல்லாம் எந்த அளவில் உழைத்தார்... எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை... பேச்சளவில் வருத்தப்படுவதும் வீறு கொண்டு முழங்குவதும்தான் தமிழர் நலன் என்றால் வைகோவை விட நிறைய பேர் பல மடங்கு மேல்.


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ஆணும் Old Navy சட்டையும் !!


விளம்பரங்களில் ஆண்கள் எப்படியெல்லாம் கேவலமாகவும் சிக்கனமாகவும் (?!) உபயோகிக்கப் (#$%) படுகிறார்கள் என்பதை பற்றி ஏற்கனவே நான் எழுதியதை தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை.... எழுதியிருந்தாத்தானே கிடைக்கும்... எங்க வீட்டில் மூன் தொலைக்காட்சி இல்லாததால் (அது வேற எதுக்கு தண்ட செலவு - நடுராத்திரி தாத்தா ஊளையிடுறத கேட்டா பக்கத்து வீட்ல போலீஸ கூப்பிட்டுடுவாங்க) ஓசியில ஒடுன ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனல பாத்துகிட்டு இருந்தேன்... அப்ப ஒரு விளம்பரம் என்ன மயிர் கூச்செரிய வச்சிட்டுது...

ஒல்ட் நேவி காரங்க ஒரு தீவுல போய் கூட்டமா பாட்டு பாடறாங்க... அந்த பாட்டுல ஒல்ட் நேவி சட்டைங்கள போட்டா எப்படி சுகமா இருக்குங்கறதும் அதுக்கு இப்ப நிறைய தள்ளுபடி கொடுக்கறத பத்தியும் சொல்றாங்க... விளம்பரத்துல வர பொம்பளங்க, குழந்தைங்க, ஒரு குறிப்பிட்ட நிறத்து ஆம்பளங்க எல்லாம் சட்டை போட்றுக்காங்க... ஒரே ஒரு ஆம்பள மட்டும் சட்டை போடல. அவரு வேற கலரு...

இத வெறும் பாட்டுன்னு ஒதுக்க முடியாது.... எனக்கு கோவம் வர காரணம் இருக்கு. எதுக்குன்னு சொல்றேன்:

சட்டை போடாத ஆளும் எல்லாரோடயும் சேர்ந்து பாடறாரு... சட்டையே போடாம சுகமா இருக்குன்னு பொய் சொல்ல வச்சிருக்காங்க அவர..... ஆம்பளங்கன்னா பொய் சொல்வாங்கன்னு ஒரு மாய தோற்றத்த உருவாக்க பாத்திருக்காங்க

சட்டை போடாத ஆம்பள மட்டும் மத்தவங்கள விட வேற நிறம்... இந்த குறிப்பிட்ட நிறமுள்ள ஆம்பிளங்க சட்டை வாங்க வக்கில்லேன்னு சொல்லாம சொல்றாங்களா... இது ரேசியல் டிஸ்க்ரிமினேஷன்.

இந்த விளம்பரத்த பார்க்கும் பெண்பிள்ளைகள் மனசு கெட்டு போகும் வாய்ப்பு இல்லையா... தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு தணிக்கை கிடையாதா.... தெரியாத்தனமா பெண்ணுரிமை அமைப்புகள் ஆம்பளங்கள மட்டும் எப்படி இப்படி அனுமதிக்கலாம்னு போராட ஆரம்பிச்சா நாட்டுக்கு நல்லதா?

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் சட்டை போட்றுக்கேன்... என்னை, அந்த கலர் சட்டை போடு, இந்த கலர் சட்டை போடுன்னு எங்க சீனியருங்க கிண்டல் பண்ணும்போது எனக்கு கோவமா வரும்... நான் பொதுவா சட்டை திருடுற கடை சொந்தக்காரன யாரும் கேக்கறது இல்லை.... எனக்கு அப்புறமா மார்கெட்டுக்கு போன ஒ ஸாரி கல்லூரியில சேந்த என் அண்ணனும் (ஆமா பத்தாங்கிளாஸ்ல 4 வருசம் கோட்டு) சட்டை போட்டுத்தான் போனான். அதுக்கப்புறம் எல்லாரும் சட்டை போட்டுத்தான் போறாங்க...


இப்ப விளம்பரத்த பாத்து மாடு மேய்க்கிற பசங்க சட்டை போடுறதில்லையின்னு கேள்வி படுறேன். என்னமோ போங்க இந்த ஆம்பளங்க மேலயும் தப்பு இருக்கு... எங்களுக்கு மேல் சட்டை இருந்தாத்தான் நடிப்போம்னு சொல்லக்கூட முதுகெலும்பு இல்லாம இருக்கானுங்களே... அட சட்டை வேணாம் ஒரு கச்சையாவது கொடுங்கன்னு பிச்சை எடுக்க கூடாது??

சூட் விளம்பரத்துல வர ஆம்பளங்க பரவாயில்லை, சட்டை போட்டு வரானுங்க... ஒரு சூட் விளம்பரத்துல சட்டை போடாம ஒருத்தன் வந்தப்போ எனக்கு சிரிக்கிறதா அழறதான்னு தெரியாததால தண்ணிய அடிச்சிட்டு... ச்செ.. குடிச்சிட்டு (மினரல் வாட்டர்) தூங்கி போய்ட்டேன்...


டிஸ்க்ளெய்மர்: பெண்ணும் Khaithan மின் விசிறியும் பதிவுக்கும் இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

புத்தக விளையாட்டு - புக் மீம்


எழுத படிக்க தெரியாத என்னைய மஸ்ட்டூ இழுத்து விட்டுட்டாரு இந்த விளையாட்டுல... அவரு என்னமோ சும்மாதான் சொல்லியிருப்பாரா இருக்கும், நமக்கு இத்தான் சாக்குன்னு இறங்கிட்டேன் களத்துல... எல்லாரும் தான் படிச்ச/தனக்கு புடிச்ச புத்தகத்த பத்தியே சொல்றாங்களே, நாமாவது வித்தியாசமா நமக்கு பிடிக்க போற புத்தகத்த சொல்லலாம்னு ஒரு பட்டியல போட்டுட்டேன். இந்த புத்தகங்களையெல்லாம் இனிமேத்தான் யாராவது எழுதணும். மணிமேகலை பிரசுரத்துக்கு எழுதி போட்ருக்கேன்... பதில் வந்தா பாக்கலாம்
(கீழ்கண்ட தலைப்புகள்ல யாராவது எழுத நினைச்சீங்கன்னா, என்கிட்ட அனுமதி வாங்கனும். இல்ல, என் வக்கீல கலந்து ஆலோசிச்சு வழக்கு போடுவேன்)

உங்கள் ஆமையை ரேஸில் ஜெயிக்க வைக்க வேண்டுமா?
பொதுக்குழு கண்ணுக்கு மகனை மட்டும் தெரிய வைப்பது எப்படி?
(இரு புத்தக தள்ளுபடி - முதல் புத்தகம் வாங்குபவர்களுக்கு 2ம் புத்தகம் இலவசம்)

அம்மாவை புகழ ஆயிரம் வார்த்தைகள்
சட்டசபையில் அம்மா மனம் குளிரும் வகையில் சத்தம் போடுவது எப்படி?
சட்டசபையில் மேசையை தட்ட 100 வகைகள்.

தேர்தலில் தோற்றால் தமிழனை திட்ட 90 வாக்கியங்கள்
தேர்தலில் ஜெயித்தால் தமிழனை புகழ 2 வாக்கியங்கள்
(மேற்கண்ட இரண்டு புத்தகங்களுக்கும் திமுக வேட்டியுடன் வந்தால் தள்ளுபடி உண்டு)

கோமாளிகளின் கூடாரம் (முதற் பதிப்பு சட்டசபை படங்களுடன் வந்துவிட்டது இரண்டாம் பதிப்பில் சரிசெய்யப்பட்டது)
சொரணை இல்லை என்று திட்டினாலும் தமிழனுக்கு கோபம் வராததற்கு 10 காரணங்கள்
ஊர் கொளுத்துவது எப்படி (நவீன கண்ணகியின் கதை - திராவிட கட்சி வட்டங்களில் best seller. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்)
கூட்டணிக்கட்சிகளுக்கு பட்டை நாமம் போடுவது எப்படி?
பட்டாபட்டி அண்ட்ராயருடன் ரோட்டில் சிரிப்பு நாடகம் நடத்துவது எப்படி (எம்மெல்லே சிறப்பிதழ்)

செத்த பின்னும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?
உங்களிடம் ஏற்கனவே உள்ள பொருட்களை வைத்து சின்னதாக ஒரு மனிதன் செய்வது எப்படி?
வீணாய் போன தொலைபேசியில் பேசுவது எப்படி?
புத்தி இல்லாவிட்டாலும் புத்திசாலி ஆவது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

அழுகாச்சி சினிமா படங்கள் அகர வரிசைப்படி.
கிருதா அளவு எடுத்து வெட்டுவது எப்படி?

உங்களிடம் இருக்கும் பணத்தை பத்திரமாக எப்படி முதலீடு செய்வது? (முகமூடியின் பேங்க் அக்கவுண்ட் நம்பருடன்)

ஆட்டோ அனுப்புவது எப்படி?
புலிகளின் ஏகாதிபத்தியம் (இந்திய காடுகளில் வாழும் புலி என்னும் மிருகத்தை பற்றியது)

பாதுகாப்பாக வாக்கிங் போவது எப்படி?
பள்ளி பிள்ளைகளுக்கு பாலியல் துன்பம் கொடுத்தபிறகு இடமாற்றல் வாங்கி அதை தொடருவது எப்படி? (வாத்தியார்களுக்கு மட்டும்)


தன்னை தானே நக்குவது எப்படி
(நாய்களுக்கு மட்டும்)
30 நாட்களில் உங்கள் நாய் படிக்க வேண்டுமா?
(இரு புத்தகங்களும் சேர்த்து வாங்கி, 30 நாட்களில் உங்கள் நாய்க்கு படிக்க வராவிட்டால் எங்கள் பிரதிநிதிகள் உங்கள் நாயை நக்கிவிடுவார்கள்)

š இப்பதிவை மின்னஞ்சலிட