30 கேள்விகளும் மூணாப்பு வாத்தியாரும்
வாத்தி :: எலேய் பசங்களா.. நீங்கள்லாம் நல்ல மனுசங்கதானான்னு தெரிஞ்சிக்க ஒரு பரிச்சை.. மண்டைய ஒடச்சி இந்த நுப்பது கேள்விங்கள தயார் பண்ணியிருக்கேன். இதுக்கு பதில் எளுதி அவனவனுங்களே மார்க்கும் போட்டு நல்ல பசங்களா இல்லியான்னு அப்படி வேலியோரமா போயி உங்களுக்கு நீங்களே தனியா பேசிக்கிங்க...
மாணவன், பெயர் மறந்துவிட்டது எல்லாரும் அவனை ஜால்ரா மணி என்றுதான் கூப்பிடுவார்கள்
ஜா :: (ஜனகராஜ் அஸிஸ்டெண்ட் பாணியில்) சார் நீங்க தெய்வம் சார்...
வாத்தி :: எலேய் ஜால்ரா இந்தா இந்த கேள்வித்தாள பசங்க கையில கொடு
கேள்வித்தாள் விநியோகிக்கப்படுகிறது.
மா 1 :: (எழுந்து நின்று சத்தமாக படிக்கிறான்)
அ) நீங்கள் எல்லாம் கோவணம் கட்டியிருக்கிறீர்களா?
ஆ) சிலேட்டு பலகையை எச்சி தொட்டு சுத்தமாக துடைத்திருக்கிறீர்களா?
இ) தலையில் வேப்பெண்ணெய் வைத்து படிய வாரியிருக்கிறீர்களா?
இதே மாதிரி நுப்பது கேள்விங்க... ஏன் சார். நீங்க மூணாப்பு படிச்சப்ப உங்க வாத்தியாரு கொடுத்தத அப்படியே கொடுத்திட்டீங்களா... இங்க பாருங்க நான் டவுசர் போட்ருக்கேன், நோட்டு பென்சில் வச்சிருக்கேன் அப்ப நான் மனுசன் இல்லியா..
ஜா :: எலேய் உக்கார்றா.. வாத்தியாரையே எதுத்து பேசிறியா
வாத்தி :: வுடு மணி... அவன் ஆண்டை.. விழுமியங்கள் அவன பேச வக்கிது...
ஜா :: சார் (ராகமாக) நீங்க தெய்வம் சார்
வாத்தி :: தம்பி.. இந்த பரீச்சய நானே இன்னும் இந்த எளுதுனதில்ல... எனக்கு மட்டும் நான் மனுசனா இல்லியான்னு தெரிஞ்சிக்க ஆச இருக்காதா... நானும் உங்களோட எளுதறேன் பாரு... நல்லதுப்பா...
மா 1 :: சார்... நியாயமா பாத்தா நீங்க பரீச்சை வக்கிறதே தப்பு. நீங்க இன்னும் டீச்சர் ட்ரெயினிங்கே முடிக்கல. இதுல தோணுன கண்டதையும் கேள்வின்னு கேட்டு மனுசனான்னு ஒரு பரீச்சை வக்கிறீங்க. இத எளுத எனக்கு இஸ்டம் இல்ல... நான் வரேன்..
மா 2 :: ஆண்டை, விழுமியம் அப்படீன்னா என்னடா
ஜா :: அதெல்லாம் நமக்கெதுக்குடா, அய்யா சொன்னா சரியாத்தான் இருக்கும்
மா 2 :: அடப்பாவி என்னன்னு புரியரதுக்கு முந்தியே ஜால்ராவா... உருப்பட்டா மாதிரிதான்
ஜா :: வாத்தியாரு என்ன அஞ்சாப்புல லீடர் ஆக்குறேன்னு சொல்லியிருக்காரு
வாத்தி :: அங்கன என்னடா சத்தம்
ஜா :: ஒன்னியும் இல்ல சார். வளக்கம் போலவே நான் இந்த வாட்டியும் 100% இல்ல சார்... 32% வாங்கிக்கீறேன்.. அப்படின்னா நான் மனுசன் இல்லியா சார்...
டூரிங் கொட்டாயி ஸ்பீக்கரில் ஆளவந்தான் பாடல் ஒலிக்கிறது :: ....பாதி கலந்து செய்த கலவை நான்....
மான் வேட்டை

உன் குரலில் உண்மையிருக்கலாம்...
ஆனால் சிறுத்தைகளுக்கோ அது வேட்டைக்கான அழைப்பு...
காடு சுதந்திரமானதுதான்...
ஆனால் சிறுத்தைகளின் ஆளுகைக்குட்பட்டது...
இனியாவது ஒலியெழுப்பு முன் அனுமதி வாங்கு...
மென்னியில் ஆழப்பதிந்த பற்கள் வலியேற்படுத்தும்தான்
ஆனால் கதறியது போதும்..
மௌனமாய் இரு...
இது பசிக்கான வேட்டையல்ல,
வெறும் ருசிக்கான வேட்டை...
சிறுத்தைக்குக்கு விளையாட வேறோர் இரை கிடைக்கும்,
அப்போது உனக்கு விடுதலை கிடைக்கும்...
கலாச்சார த். தூ.. யவர்கள்

ஃபாஸிஸ்டுகள் ஒன்று கூடி கலாச்சாரத்தேர் இழுக்கிறார்கள்...
புடவை கட்டி என்றிருந்த கலாச்சாரத்தை விமான நிலையம் என்றால் "காட்டி" என்றாக்கிய மகளிர் அணி இன்று புடவையை இறக்கி துடைப்பத்தை தூக்கும் அளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது...
அடங்க மறு என்று அறைகூவல் விடுத்தவன் அடக்கி ஆள ஆசை கொள்கிறான்... தளைகளை களைய புறப்பட்டவன் தனக்குத்தானே மாயவிலங்கு பூட்டி தேட முடியாத அளவு சாக்கடை சகதிக்குள் புதைந்துவிட்டது கண்டு மருகி நிற்கிறது கூட்டம்.
உழைப்பிற்கு காசு கேட்டவர்களை விபச்சாரிகள் என்றவன் செருப்பெறிவதை தமிழ் பண்பாட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டமாக கருதுகிறான்... சாதிக்காக சமுதாயம் வெட்டியவனோ மும்பைக்கு "நாடு" கடத்த கோருகிறான் ...
நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏண்டி தறிகெட்டு போகப்போறான் என்கிறது பண்பாடு... அதற்கு கணவனே கண்கண்ட தெய்வம் மட்டுமல்ல 'கள்' ஆனாலும் கணவன் 'full' ஆனலும் புருஷன்தான்...
அடிச்சே கொல்றானா... அங்கியே கெடந்து செத்தாலும் பரவாயில்ல, இங்க மட்டும் வாழா வெட்டியா வராத என்கிறது கலாச்சாரம்...
அவன் ஆம்பிளைடி, அப்படித்தான் இருப்பான் பொம்பள நீ அனுசரிச்சி போவியா என்பதன் பெயர் காட்டுபஞ்சாயத்து...
கையை பிடித்து இழுத்தவர் மாமனாராய் மட்டுமல்ல கௌரவமான ஆம்பிளையாகவும் இருப்பதால் கைது செய்ய முடியாது... நீ எல்லாரும் பார்க்க கோர்ட்டில் உன் புருஷனுடன் கை கோர்த்து நட... ஜோரா ஒரு முறை கைதட்டுங்க... ஆடுறா ராமா... ஆடுறா ராமா... என்கிறது நாட்டு பஞ்சாயத்து
போர்னோ சைட்டில் படம் டவுன்லோடு ஆகும் காத்திருப்பில் பியர் திறந்து கொண்டே, கேவலம் ஒரு நடிக நம்ம பண்பாட்ட கேவலப்படுத்திட்டா பாருடா என்று எக்காளமிடுகிறது அயல்நாட்டு தமிழ்பாடு
ஓட்டு போடும் வயது வந்தால் காதலிப்பதா... கைது செய்கிறேன்... போய் அம்மா அப்பாவை அழைத்து வா என்று சொன்ன கமிஸார் கமிஷனர் வாழும் ஊரில் கல்யாணத்துக்கு முன் பாதுகாப்பாக உடலுறவா... அபச்சாரம் அபச்சாரம்...
தமிழ் சொந்தங்களே, அவசரப்பட்டு செருப்பையும் துடப்பத்தையும் கீழே போட்டு விடாதீர்...தமிழன் பாதுகாப்பற்று உடலுறவு கொள்வானா என்றெல்லாம் எண்ணாமல், நமது கலாச்சாரத்தையே கேவலப்படுத்தும் "பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை அணிவீர்" என்ற விளம்பரத்துக்கு தார் அடிக்க திரண்டு வாரீர்...
மந்திர கீர்த்தியும் ஆட்டுக்குட்டிகளும்
மந்திர கீர்த்தி :: ஏண்டா கோடங்கி... உன்னய நம்ம ஆடுகள கட்டித்தான வக்க சொன்னேன். எங்கடா போச்சி அதுங்க, பட்டியில காணும்
கோடங்கி :: எதுய்யா.. நம்ம சோமறி ஆட்டையா சொல்றீங்க
மகீ :: இவன் ஒருத்தன் தமிளுநாட்டுல இருந்துகிட்டு ஒளுங்கா தமிள் பேச தெரியாம.. அது சோமறி ஆடில்லடா... செம்மறி.. நான் அத மட்டும் கேக்கலடா அல்லா ஆட்டையும்தான்
கோ :: அதுங்க எங்கனா மேய போயிருக்குங்க.. போயி புடிச்சாரேன்...
கொஞ்ச நேரத்தில் செம்மமறி, வெள்ளாடு, குறும்பாடு மூன்றும் வருகின்றன
மகீ ஆடுகளிடம்:: இந்தா உங்கள பக்கத்து தோட்டத்துக்கு மேய போவேண்டாம்னு எத்தன தடவ சொல்றது... அங்க ஏன் போறீங்க...
ஆடுகள் :: (மண்டைய ஆட்டி) நீங்க சொன்னா சரிதான்
மகீ :: உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்...நான் சொல்ற தோட்டத்த தவிர மத்த எடமெல்லாம் ஒரே குப்ப...
ஆடுகள் :: (மண்டைய ஆட்டி) நீங்க சொன்னா சரிதான்
மகீ :: 10 வயல் தள்ளி ஒரு காடு இருக்கு, குளத்துக்கு அந்தாப்புல ஒரு கழனி இருக்கு.. அங்க மட்டும் போய் மேயிங்க.. அங்கதான் ஒங்க மொதலாளிக்கு மதிப்பு
ஆடுகள் :: (மனதுக்குள்) இவன் தொல்லை தாங்க முடியல... தானும் தோட்டம் வாங்க மாட்டான். இருக்கற தோட்டத்தையும் நொள்ள சொள்ளன்னுகிட்டு (ஆனாலும் பழக்க தோஷத்தில் மண்டைய ஆட்டி) நீங்க சொன்னா சரிதான்
மகீ, கோடங்கியிடம் :: அது சரி நம்ம வெள்ளாட்டுக்கு என்னமோ கண்ணூல கோளாறுன்னு ஆத்தா சொல்லிச்சே, அத புடிச்சி நம்ம கண்டாக்டருகிட்ட கூட்டிப்போ... நான் அப்பால வரேன்
****
கண் மருத்துவமனை
மருத்துவர் வெள்ளாட்டிடம்:: என்ன வெள்ள... இப்படி பேசாம இருந்தா எப்படி.. அந்த போர்டுல இருக்கற முதல் லெட்டர படி
வெள்ள :: (உறுமலாக) தமிழ்.. தமிழ்..
மருத்துவர் :: அட உனக்காக நான் புதுசா போர்டா செய்ய முடியும்... இருக்கறத அட்ஜஸ்ட் பண்ணி படிப்பியா... முதல் எழுத்து என்ன
வெள்ள :: வருணாசிரமக்கொள்கை..
மருத்துவர் :: அய்யோ அய்யோ.. ரெண்டாவது லைனை படி
வெள்ள :: சமஸ்கிருத ஓநாய்கள்
மருத்துவர் :: அதில்லப்பா.. சரியா படி
வெள்ள :: ஆரிய மாயை
மருத்துவர் :: கிழிஞ்சது கிருஷ்ணகிரி
வெள்ள :: கிருஷ்ண என்பது வடமொழி... அய்யனார்னு தனித்தமிழில் சொல்..
மருத்துவர் :: இன்னும் கொஞ்ச நேரம் இவன்கிட்ட பேசினா நாம மென்டல் டாக்டர பாக்கணும் போலருக்கேப்பா...
அப்போது நர்ஸ் குறுக்கே போகிறார்...
வெள்ள:: காவி காவி... காவிக்கூடாரம்
மருத்துவர் :: அடச்சை.. கருமம் புடிச்சது... எத பாத்தாலும் காவி காவின்னுகிட்டு...
அப்போது மந்திர கீர்த்தி வருகிறார்..
மருத்துவர் :: ஏங்க நல்ல கிராக்கிய நம்ம தலையில கட்டினீங்க... அதுங் கண்ணுல ஒண்ணும் கோளாறு இல்ல.. என்ன கேட்டா இது பூட்ட கேஸு... நீங்க வேணா எதுனா கோயில்ல போயி வேப்பில அடிச்சா சரிப்படுமா பாருங்க...
****
செட்டிநாடு அருகில் இருக்கும் தமிழ்த்தாயின் திருக்கோவில்
கோடங்கி அங்கிருக்கும் கல்வெட்டை எழுத்துக்கூட்டி :: க..ரு...ணா..நி..தி... அ..வ..ர்..க..ளின்.. பெ..ரு.. மு.ய..ற்..
மகீ வருகிறார் :: எலே கோடங்கி இங்கன என்ன பண்ற.. பூசாரி எங்க...
கோ :: அவரு ஆத்தாவுக்கு அபிசேகம் பண்ண எளநியோ என்னவோ கொறயுதாம் தோட்டத்துக்கு போயிருக்காருங்க...
மகீ :: எல்லாம் நேத்தே கொடுத்து விட்டேனேடா... என்னவோ... வெள்ளாட்டுக்கு நல்லானா சரிதான்...
பூசாரி ஓடி வருகிறார் :: வாங்கய்யா... சௌக்கியமா இருக்கீகளா.. இப்பல்லாம் நம்ம ஆத்தாவ நீங்க சரியாவே கவனிக்கிறதில்ல...
கோடங்கி :: நீங்க வேற... தமிளுக்கு, கலாசாராத்துக்கு, கண்ணியத்துக்குன்னு நெதம் ஒரு போராட்டம் இருக்கா... அய்யா ரொம்ப பிஸிங்க...
பூசாரி :: என்னமோ போங்கய்யா... ஆத்தாவுக்கு ஒரு படையல் போட்டா, தமிளுக்கு இன்னும் ஆயிரம் வருசத்துக்கு ஒரு ஆபத்தும் வராது... நம்பூதரிகிட்ட சோழி உருட்டி கூட கேட்டுபுட்டேன்.. நீங்கதான் மனசு வைக்கணும்..
மகீ :: எல்லாம் செஞ்சிரலாம் பூசாரி... பூசய ஆரம்பிங்க...
பூசாரி மந்திரம் சொல்கிறார் ::
(ராகமாக) கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை...
(வசனத்தில்) பேர் ஊர் எல்லாம் சொல்லுங்க அர்ச்சனை பண்ணனும்
(ராகமாக) கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி...
(வசனத்தில்) என்ன இவனுக்குத்தான் வேப்பில அடிக்கணுமா.. கவலையே படாதீங்க... கலக்கி புடலாம்
(ராகமாக) கடவுளை பரப்புபவன் அயோக்கியன்...
(வசனத்தில்) தீபாராதனை நடக்குது பாருங்க... ஆத்தா நல்லருள் புரியாத்தா...
என்னங்கய்யா... வேப்பில அடிச்சிறலாமா...
(வெள்ளாட்டை நெருங்குகிறார்) இந்தா என்னாச்சி ஒனக்கு, ஆரு நீ... முனியா பேயா... மரியாதையா ஓடிடு...
பூசாரி பேயாட்டாம் ஆடுகிறார்... ஆடுகள் மிரள்கின்றன...
எல்லா ஆடுகளும் ஒரு குரலில் கத்துகின்றன... அதுகளின் குரல் ஓநாய்களின் குரலாக இருப்பதை கண்டு ஊரே மிரள்கிறது...
ஒரே புகை மயம்...
திரை விழுகிறது...
தமிழுணர்வு
உயிர் கொடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பற்றி சொல்லி அதுகுறித்த கேள்விகள் கேட்டால் வலைப்பதிவாளர்கள் சிலர் தமிழுணர்வால் நெஞ்சு விம்மி துடிக்கிறார்கள்... பிடிக்காத அரசியல்வியாதி கேட்பதால்தானே அதை எதிர்த்து கேட்கிறாய்... அவர்கள் தாயை பற்றி கேட்டால் என்ன செய்வாய் என்று குயுக்தி/அபத்தமாக ஒரு கேள்வி.. அரசியல்வியாதி தாயை பற்றி சொல்வதற்கு மட்டுமல்ல மற்ற எதற்குமே கேள்வி கேட்காமல் - திராவிட பாணியில் சொன்னால் பகுத்தறியாமல் - மண்டையை ஆட்டி ஏற்றுக்கொள்ளும் ஆட்டு மந்தை கூட்டத்தில் நான் இல்லை என்பதால் இந்த கேள்விக்கு பதில் சொல்வதும் தேவையில்லாதது... அதற்காக அப்படி சொல்பவர்களையும் தப்பு என்று சொல்ல முடியாது... தமிழை பழித்தவனை நாய் கடித்தாலும் விடேன் என்ற சினிமாவுக்கு எழுதப்பட்ட வசனத்தை மனப்பாடம் செய்து வளர்ந்தவர்கள் வேறு எப்படி யோசிப்பார்கள்.. அவர்களை பொறுத்த வரை தமிழுக்காக போராடுகிறேன் என்று சொல்லிவிட்டால் போதும், அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை பார்த்து ஏதேனும் கேள்வி எழுப்பினால் உடனே ஃபத்வாதான்...
இந்த தமிழுண்ர்வாளர்கள் பயப்படுவது :: இப்படியே போனால் தமிழுக்கு விரைவில் சங்கு என்ற எண்ணத்தில்... Anxiety Disorder அல்லது Phobia என்பது ஒரு மனநிலை... இம்மனநிலை முற்றும் போது ஏதோ கெட்டது ஒன்று விரைவில் நடக்கப்போகிறது என்று மிகுந்த கற்பனை உணர்ச்சி கொண்டு அதிலேயே வாழ ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கேற்றார்போல் அவர்களின் செயல்பாடுகளும் மாறுபட ஆரம்பிக்கும்... உலகம் அழியப்போகிறது என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு அலைவது போல்தான் இதுவும்.... நம் அரசியல்கட்சிகளுக்கு இந்த மனநிலையா என்றால் இல்லை... ஆனால் அவர்கள் இந்த மனநிலையை சமூகத்துக்கு பரப்பும் செயலை நரம்பு முறுக்கேறும் எதுகை மோனையால் செய்வார்கள்... தமிழ் என்பது மொழி என்பதை மீறி அதற்கு ஒரு உருவகம் கொடுத்து, அதை ஒரு உயிர்ப்புள்ள ஜீவனாக ஆக்கி, அவ்வுருவமும் தாயும் ஒன்று என்பதாக மூளைச்சலவை செய்யப்பட்ட சமூகம், அவ்வரசியல் கட்சிகள் தமிழின் பெயரால் நிகழ்த்தும் அனைத்து செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக கருதும். மீறி விமர்சிப்பவர்கள் சமூக விரோதி என்ற அளவுக்கு பார்க்கப்படுவார்கள்...
இப்போது தமிழுக்கு பெரிய ஆபத்து வந்து விட்டது என்று கூக்குரலிடுகிறார்கள்.. எதன் அடிப்படையில்? இந்த தலைமுறை குழந்தைகளுக்கு தமிழில் ஒழுங்காக பேச எழுத வருவதில்லை என்பது மட்டுமா அது? இவர்கள் கிராமத்தில் படிக்கும் பிள்ளைகளையோ, சிறு நகரங்களில் படிக்கும் பிள்ளைகளையோ கணக்கில் எடுக்கிறார்களா? பெருநகரங்களில் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்கும் சில குழந்தைகள் "பீட்டர் விடுவதை" வைத்து அளக்கிறார்களா? தொலைக்காட்சியில் காம்பியரினிகள் சுளுக்கி சுளுக்கி தமிங்கிலீஷ் பேசுவது உலகத்துக்கே போகிறது. அது ஒரு வேளை அத்தோற்றத்தை தருகிறதா? ( ஆனால் அதை மாற்ற தாத்தாவுக்கே அதிகாரம் கிடையாதாம். அது அவருக்கு சம்பந்தமில்லாதவர்கள், அவர் சொல்லை கேட்காதவர்களின் பிஸினஸாம்... எதிரி தொலைக்காட்சியிலும் அதே கதைதான்... )
தமிழ் என்பது ஒரு மொழி... அதற்கு தனியாக உயிர் கிடையாது... தமிழ் பேசப்படுபவர்களால் மட்டுமே வாழ்வும் வளமும் பெறுகிறது... தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்றால் தனியாக அது எப்படி வாழும்... தமிழ் வாழ தமிழன் வாழ வேண்டும்... தமிழ் வளர மொழி பேசும் சமூகம் வளப்படுத்தப்பட வேண்டும்... சோறில்லாமல் கும்பி காய்பவனிடம் தமிழுக்காக உயிர் கொடுப்போம் என்று கத்தினால் போடா என் .யிரு என்றுதான் சொல்வான்.
திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
தமிழுணர்வால் நெஞ்சு விம்மும் ஒருவரிடம் இந்த சிலப்பதிகார பாடலுக்கு அர்த்தம் கேட்டேன். இதில் வரும் வார்த்தைகள் அனைத்தும் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் "நான் இன்னும் மாணவன் நிலையில்தான் இருக்கிறேன்" என்று ஜல்லியடித்தார் அவர்... ஆனால் எதிர்காலத்துக்காக போராடுவது அவரது கடமையாம்... தார் வாளி கொண்டு வீரு நடை போடுகிறார்.
5000 வருடங்களாக பல்வேறு ஆக்கிரமிப்புக்களையும் அச்சுறுத்தல்களையும் தாங்கி வந்த தமிழ் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் புழக்கத்தில் இல்லாத மொழியாக ஆகிவிடும் என்று சொல்பவர்களே அதனை உணர்ந்துததன் சொல்கிறார்களா என்பது வேறு விஷயம்... அத்தனை அச்சுறுத்தல்களையும் அவ்வப்போது சிலர் போராடித்தானே காப்பாற்றினார்கள் என்று சொல்கிறீர்களா.. அது உண்மைதான்.. ஆனால் அந்த போராட்டத்துக்கும் இப்போதைய சுயநலவாத குரங்கு செயல்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா... தார் அடிப்பதும், ஊர் பெயரை மாற்றுவதும், தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதும்தான் தமிழ் வளர வழியா... ஆங்கிலத்தை ஒழித்தால் தமிழ் வளர்ந்துவிடுமா.. நம் வீட்டு பிள்ளை எப்போதும் இரண்டாம் தகுதியிலேயே இருக்கின்றானே என்ற anxietyல், அவன் முதல் தகுதிக்கு வர சுலப வழி, முதல் தகுதியில் இருப்பவனை கொன்று விடுவதுதான் என்ற முடிவுக்கு வருவது அபத்தமாக இல்லையா...
****
மெட்ராஸ்னு இருக்கிற பேர சென்னைன்னு மாற்றினார்கள்... பம்பாய மாத்துறாங்கோ, கல்கத்தாவ மாத்துறாங்கோன்னு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு வேற... எது எதுல மத்தவங்கள பின்பற்றுவதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா... பம்பாயிலயும் கல்கத்தாவிலயும் சிகப்பு விளக்கு பகுதின்னு ஒன்னு தனியா உண்டு.. சென்னையிலயும் கொண்டு வருவாங்களோ... கேள்வி என்னவென்றால் இது தமிழ் வளர்ச்சிக்கு எந்த அளவில் உதவும்... அதற்கு ஆன லட்சக்கணக்கான ரூபாய்களை இலக்கிய வளர்ச்சிக்கோ, தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக்கோ கொடுக்கலாமே என்றால் இது ஒரு அடையாளக்குறியீடு என்று ஏதாவது சொல்வார்கள்.
ஆனால் இது ஒரு பெரிய விஷயமே இல்லை...விஷயம் என்னவென்றால் மாத்தியவர்... கல்லூரி முதல்வரா இருந்து சபாநாயகரா மாறுன சாத்தையா.. தன் பேர தமிழ்குடிமகன்னு மாத்துன மாதிரியே சுலபமா ஊர் பேர மாத்திட்டாரு... அடுத்த தேர்தல்ல கட்சி ஸீட் தரலையின்ன உடனே கட்சி மாறிட்டாரு... அதுவரை இவர் இருந்த திமுகவோட கொள்கைய அதிமுக பின்பற்ற ஆரம்பிச்சிட்டுதா இல்ல திமுக கொள்கை மாறிடுச்சா.. என்ன ஆச்சின்னு யாருக்கும் தெரியல...
இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு தலைமுறையின் போக்கையே மாத்துற முடிவை எடுப்பது எப்படி சரியாகும்.. இதை கேட்க கூடாதா???
5 வகுப்பு வரை தமிழ் மட்டும்தான் கற்பிக்க வேண்டும்னு ஒரு முடிவு எடுத்தாங்க... இதன் பின்னணியில ஏதாவது அறிவியல் பூர்வமா ஆய்வு செய்யப்பட்டதா... ஆய்வு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது.. எதிர்பார்க்கும் மாற்றங்களை இந்த முடிவுகள் கொடுக்குமா... ஒரு மண்ணும் தெரியாது... இந்த முடிவ நீலாங்கறை பீச் கெஸ்ட் அவுஸ்ல உக்காந்துகிட்டு 4 பேரு எடுத்தா போதுமா.. இது என்ன ஜனநாயக நாடா இல்ல இவங்க அப்பன் வீட்டு சொத்தா... இது சம்பந்தமா முணுக்குன்னு ஒரு எதிர்ப்பு வந்த உடனே, அதை ஆய்வு செய்ய ஒரு குழு போடப்பட்டது... அதுக்கு தலைவரான நீதிபதி தமிழறிஞர் என்று அறியப்பட்டவர்.. அந்த காலகட்டத்தில் சென்னையின் பாதி இலக்கியக்கூட்டங்களில் அந்த நீதிபதியை காணலாம்.. மேலும் அந்த குழுவில் முக்கால்வாசி பேர் தமிழறிஞர்கள்... ரஷ்ய தேர்தல் மாதிரி முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டே அந்த பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடந்தது... அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அறிந்திருப்பார்கள் : அறிஞர்களின் "மாப் மென்டாலிட்டி" பற்றி... அப்புறம் என்ன ஆனது அந்த முடிவு... எதற்கு இந்த கூத்து...
மதராஸ்/சென்னை பல்கலை சர்ச்சையின் போது சன் டிவி பெயர் பற்றி கேட்டதற்கு அது கமர்சியல் விஷயம் என்கிறார் துரை முருகன்... தார் அடித்த ராமதாஸிடம் சன் டிவிக்கு ஏன் அடிக்கவில்லை என்று கேட்டால் அது 10 வருடத்துக்கும் மேலாக எஸ்டாப்ளிஷ் ஆகிவிட்ட ப்ராண்ட் நேம் என்று ஜல்லியடிக்கிறார். அப்ப 200 வருடத்துக்கும் மேலாக எஸ்டாப்ளிஷ் ஆன மதராஸை சென்னை என்று மாற்றினார்களே, அப்ப தோணவில்லையா அது... பல வருடங்களாக எஸ்டாப்ளிஷ் ஆன சிறு கடைகளின் தட்டிகளில் மட்டும் தார் அடித்து சன் டிவிக்கு அடிக்காததற்கு காரணம் எஸ்டாப்ளிஷ்மண்டா அல்லது அடிப்பவனுக்கு ஆட்டோவில் பாலா என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை...
என்னால் தமிழில் பேச, எழுத, புரிந்து கொள்ள முடியும். என் பிள்ளைகளுக்கும் அதை கற்றுக்கொடுப்பேன்.. ஆனால் அதை நானாக செய்வேன்... நீ செய்யத்தான் வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினால் போடா .யிரு என்றுதான் நானும் சொல்வேன்... ரவுடிக்கூட்டத்துக்கு என் கடை பெயரில் தார் அடிக்க உரிமை யார் கொடுத்தது? உன் சுதந்திரம் என்பது என் வீட்டு வேலியின் வெளிப்புறம் வரைதான். அதை தாண்டி வந்தால் செருப்பால் அடிக்கும் உரிமை என்னுடையது... மன்னராட்சி இல்லாத சனநாயக நாட்டில் நீ நினைப்பதை எல்லாம் நான் செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஓட்டு போட்டோமே அதுங்களை கூட்டி சட்டம் கொண்டு வா... அதுவரை என் உரிமையில் தலையிடாதே..
பதவிக்கு வந்தோமா... சாகற வரைக்கும் ஆள் அம்புன்னு எல்லாத்தையும் அனுபவிச்சமா... புள்ள குட்டிங்க இல்ல உடன் பிறவா சொந்தம்னு எல்லாரையும் நல்ல பதவிக்கு வரவழைச்சமா... 10 தலைமுறை உக்காந்து சாப்பிடறதுக்கு சொத்து சேத்தமா... முடியாதப்போ எதுனா தோட்டத்தில ஓய்வு எடுத்தமான்னு போவீங்களா... என்னவோ தமிழ இவனுங்க பேர்ல காப்புரிமை செஞ்ச மாதிரி ரவுடிக்கூட்டத்த கூட்டி அராஜகம் பண்ணிகிட்டு...
எப்பொழுது எல்லாம் மக்களுக்கு பெருந்துன்பம் தோன்றுகிறதோ, அப்பொழுது எல்லாம் மக்களின் மனம் மகிழ்விக்க, அவர்களின் கவனத்தை திசைதிருப்ப உதவுபவை வீரப்பன், தமிழ் போன்றவை... இப்போது வீரப்பன் இல்லை, தமிழ் எப்போதும் இருக்கும்...
.யிர் கொடுத்து வளர்த்த தமிழ் மற்றும் பல
ஒரு வாரமா ஏன் பதிவேதும் போடல என்று ரத்தத்தில் மின்னஞ்சலிய குருமாகிழவன், அண்ணா உங்கள் கருத்தை படிக்காமல் குழப்பத்தில் உள்ளேன், தயவு செய்து விரைவில் பதிவு போடவும் என்று அன்புடன் வினவிய ஹைதராபாத் கீரைத்தோட்டத்தை சேர்ந்த சகோதரி லகலகா மற்றும் தொலைபேசியில், மின்னஞ்சலில், சாட்டிங்கில், விமானத்தில் என்று பலவிதங்களிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...
இப்பொழுதெல்லாம் ஒரு வாரம் தனித்தமிழில், ஒரு வாரம் படம் மட்டும் என்று விதம் விதமாக பதிவுகள் வரும்பொழுது உலகோடு ஒட்ட ஒழுகி நானும் புதுமையான முறையில் தினம் ஒரு பதிவாக போட்டுக்கொண்டுதான் இருந்தேன்... யாருக்கும் அது தெரியாததற்கு காரணம் நான் மௌன பாஷையில் எழுதியதுதான்...
வெட்கம் விட்டு கேட்கிறேன், இப்பொழுதாவது எச்சி.டி.பி://ம்யூசிக் அமெரிக்கா ஆன்லைனிலிருந்து "நான் போடும் மௌன பதிவு பார்க்கவில்லையா" என்ற பாட்டுக்கு லிங்க் கொடுக்கக்கூடாதா நேம்லெஸ்...
****
சிலர் .யிர் கொடுத்து தமிழ் வளர்க்கப்போகிறார்களாம்... இல்லையெனில் இன்னும் 30 வருடத்தில் தமிழுக்கு சங்கு என்று வேறு சிலர் ஒத்து ஊதி பயமுறுத்துகிறார்கள். சிலுக்குவார்பட்டியில் இன்னும் 30 வருடங்களில் நமது கோவணக்கிழவனார்கள் எலிக்கறி சாப்பிடும் அவலத்தை ஆங்கிலத்தில் டிஸ்கஸ் செய்வதை நினைத்து பார்த்தால் வயிற்றை கலக்குகிறது...
தமிழை வளர்த்தே ஆகவேண்டும் என்று வெறி பொங்குகிறது. தமிழ் வளர்க்க 10 வழிமுறைகள் என்று எதுவும் இருக்கிறதத? மேலும் .யிர் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்னென்ன... முழுமையாகவா, இன்ஸ்ந்தால்மெந்திலா எப்படி .யிர் கொடுப்பது, இதுவரை கொடுக்கப்பட்ட .யிர் அளவு என்ன, அதனால தமிழ் பெற்ற வளர்ச்சி எந்தளவு என்பதை யாராவது தெரியப்படுத்துங்கள்..
****
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு இன்னொரு குட்டித்தலைவர் கிடைத்திருக்கிறார்... நவரச நாயகன் என அழைக்கப்பட்டவர் இனி வருங்கால முதல்வர் கார்த்திக் தேவர்... தங்கம் பூசிய உருத்திராட்சம், விளம்பர ஆசையில் தவிக்கும் மனம் தவிர மற்ற அனைத்தையும் துறந்த மதுரை 'மட' அதிபதி ஆதினம் ஸ்வாமிகள் கண்டிப்பாக அருள் புரிவார்... விவேக் தேவரும் துணை புரிவாராக.
****
சென்னை பல்கலைக்கழகம் மதராஸ் பல்கலைக்கழகம் என்றே அழைக்கப்படுமாம். எம்மெல்லே ஸீட் கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறலாம் என்ற கொள்கை உட்பட அனைத்து கொள்கைகளுக்காகவும் உயிர் கொடுத்த குடிமகனார் மதராஸை சென்னாப்பட்டணம் என்று பெயர் மாற்றம் செய்தவுடன் கூவத்தின் அருகில் வாழ்ந்த மக்களெல்லாம் உப்பரிகையில் சந்தோஷ்மாக காலாட்டிக்கொண்டிருக்கிறார்கள்... இப்பொழுது இன்னுமொரு பெயர் நீட்டு வைபவம்... சலசலப்பில் சில லட்சங்கள் செலவாகலாம்... ஆனால் மதராஸ் பல்கலை சான்றிதழ் கொண்டு சென்றால் உடனடியாக வேலை என்னும் லட்சியமல்லவா முக்கியம்.
****
அடச்சே... இது என்ன தூர்தர்சன் செய்திகள் ரேஞ்சுக்கு சவ சவன்னு ஒரு பதிவு.. எல்லாம் ஆபிஸில் வேலை செய்யணும்னு வந்த புது சட்டத்தால வந்த வினை... விரைவில் நார்மல்ஸி திரும்ப அந்த இமயமல பாப்பா அருள் புரியட்டும்.
கூழ், களி, வாத்து மற்றும் இதர பல...
இப்பதிவில் இன்றைய திகதிக்கு மிகவும் முக்கியமான விஷயங்களான
கூழ் சாப்பிடும் முறைகள்?
களி சாப்பிட எளிமையான 5 வழிகள்?
உலக பதிவுகளில் முதல் முறையாக ஃப்ரஷ் வாத்து படம் பிடிப்பது எப்படி?
போன்ற விஷயங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.
****
கூழ் சாப்பிடும் முறைகள்
கூழ் கிண்டுபவர்கள் வீட்டிலிருந்து அழைப்பு வந்தால் நீங்கள் மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டியது :: உங்கள் வாய், பல், நாக்கு, பாலீதீன் கவர், ரயில்வே கால அட்டவணை... அன்பாக கூழ் தருபவரிடம் இதையெல்லாம் கடனாக வாங்குவது டூ மச் அல்லவா...
கூழாளி உங்களுக்கு கூழ் பரிமாறும் விதத்தை வைத்தே உங்களுக்கு தேவையான சமாச்சாரங்கள் என்னவென்று அறிய முடியும். தேவையற்ற பொருட்களை பைக்குள் வைத்து விடவும். அவர்கள் வீட்டு வாண்டு நம் பொருளை பார்த்து விட்டு அதை கேட்டால், தர்மசங்கடமான நிலையை தவிர்க்க அதை கொடுத்துவிட்டு அப்புறம் அந்த குழந்தையை ஏமாற்றி எப்படி நம் பொருளை மீட்பது என்று எண்ணுவதிலேயே நேரம் போய்விடும். கூழ் சுகத்தை அனுபவிக்க முடியாது...
அவர்கள் குவளையிலேயோ, தம்பளிலேயோ கொடுத்தால், கூழ் குடிக்கும் நிலையில் இருக்கின்றது என்று அர்த்தம். உங்கள் வாய், நாக்கு ஆகியவற்றை நீங்கள் இப்போது உபயோகிக்க வேண்டும். முதலில் குவளையை வாயில் வைத்து குடிக்கும் பாவனையில், ஆனால் குடிக்காமல் கூழின் மணத்தை மட்டும் நுகரவும். பின் குவளையை சற்றே சாய்த்து ஒரு சொட்டு அளவில் கூழை ருசி பார்க்கவும். கூழ் ருசியாக இருந்தால் சுவாரசியமாக பேசிக்கொண்டே மேலும் குடிக்கலாம்... கூச்சம் பார்க்காமல் இன்னொரு குவளை கேட்டு வாங்கி குடிக்கவும்.
முக்காலே மூணு வீசம் கூழ், குடிக்க சகிக்காமல் இருப்பதற்கான சாத்தியம்தான் அதிகம்... இந்நிலையில் நீங்கள், நீட்டி முழக்கி ஒரு காமெடி நாடக நடிகரின் பாணியில் "எந்த வூட்டுல எந்த பொண்டாட்டி கூழ் பண்ணாலும் குடிக்க முடியலையேப்பா" என்று ஜோ கடியுங்கள்... அவர்கள் விழுந்து எழுந்து விழுந்து எழுந்து சிரிப்பார்கள். சிரிப்பின் இடையில் எந்திரிக்கும் சைக்கிள் கேப்பில் கூழை ப்ளாஸ்டிக் பேக்கில் ஊற்றிக்கொள்ளுங்கள். இப்போது நிம்மதியான ஒரு மனநிலை வரும். "அட சும்மா தமாசுக்கு... கூழ் சூப்பர்" என்று சொல்லிவிட்டு அதை ஒரே மடக்கில் குடிப்பதாக பாவலா செய்யவும். கவனம்... ஓவர் ரியாக்ட் செய்து மாட்டிக்கொள்ளாமல் செய்வதுதன் இங்கு மிகவும் அவசியம்.
அவர்கள் தட்டில் கூழ் கொடுத்தால், உங்களுக்கு ரயில்வே அட்டவணை தேவைப்படுகிறது என்று அர்த்தம். ரயில்வே அட்டவணையில், அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு எப்போது அடுத்த ரயில் வருகிறது என்று பார்க்கவும். ஸ்டேஷனுக்கு 1/2 பர்லாங் தூரத்தில், ரயில் வரும் 20 நிமிடம் முன்னால் சென்று காத்திருக்கவும். ரயில் வரும் சத்தம் கேட்டால், தண்டவாளம் மிக அருகில் வந்து ரயில் வருகிறதா என்று ஒரு தடவைக்கு இன்னொரு தடவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்விஷயத்துக்கு டைமிங் மிகவும் அவசியம். யாராவது உங்கள் செய்கைகளை கவனிக்கிறார்களா என்று சுற்றிப்பாருங்கள். ரயில் சரியாக 300 அடி தூரத்தில் இருக்கும் போது, தண்டவாளத்தை நோக்கி ஓடுங்கள். குனிந்து கூழை தண்டவாளத்தில் வைத்து விட்டு மீண்டும் பழைய இடத்துக்கு வந்து நின்று கொள்ளுங்கள். ரயில் கூழின் மேல் கடந்து சென்ற பின்னால் உங்கள் கூழ் சாப்பிடும் பதத்தில் இருக்கும்... இப்போது பல்லை உபயோகித்து சாப்பிடவும்.
ரயில் கூழை கடக்கும் போது கூழ் உடைபடாமல் ரயில் தடம் மாறும் சாத்தியமும் இருப்பதை மறுப்பதற்கில்லை... உங்கள் கூழ் அனுபவத்தில் ரயில் தடம் மாறினால், கொடுங்க உங்க கைய... கங்கிராஜுலேஷன்ஸ்... நீங்கள் அடுத்த செய்முறைக்கு எந்த கஷ்டமும் படத்தேவையில்லை.
****
களி சாப்பிட எளிமையான 5 வழிகள்
1. கெட்டி கூழ், ரயில் தண்டவாளம், அதிர்ஷ்டசாலி
2. துப்பாக்கி
3. வீச்சறுவாள்
4. கையெறி குண்டு
5. அமைச்சர் மீது புகார்
****
உலக பதிவுகளில் முதல் முறையாக ஃப்ரஷ் வாத்து படம் பிடிப்பது எப்படி?
வாத்து படம் பிடிக்க தேவையானவை:
அட்லஸ்
கேபிள் வசதி உள்ள தொலைக்காட்சி
ஸ்னோ பூட்ஸ்
குளிர் கோட்டு, மங்கி கேப், கையுறை
சுருட்டு அல்லது பீடி
ஜாக் டானியல்ஸ்
சாக்கு பை அல்லது ஹாட் பேக்
கேமரா அல்லது மனம்
முதலில் அட்லஸை விரியுங்கள்.. வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில் எந்த திசையில் உங்கள் வீட்டுக்கு மிக அருகில் பனிப்பிரதேசம் இருக்கிறதென்று பாருங்கள். தெற்கு வேண்டாம்... தென் ஹெமிஸ்பியரில் ஏதோ மாநாடு நடக்கிறதாம். களியும் அதை உடைக்க சுத்தியலும் தருகிறார்களாம். சுத்தியலால் மண்டை உடையும் சாத்தியமும் இருப்பதால் அத்திசையை தவிருங்கள்...
ஆச்சா.. இப்போது நீங்கள் கண்ட பிரதேசத்தில் பனி இருக்கிறதா என்று கேபிள் தொலைக்காட்சியில் பார்க்கவும். பெண் அறிவிப்பாளினி வானிலை அறிக்கை சொன்னால் நொடியில் சேனல் மாற்றி ஆண் அறிவிப்பாளன் சொல்லும் சேனலுக்கு செல்லுங்கள்... அறிவிப்பாளினியின் உடை, கம்மல் அலங்காரங்களை வீட்டுக்காரம்மா பார்த்தால் உங்கள் பயண நோக்கம் பக்கத்து கடைத்தெருவோடு முடிந்து வாத்துக்கு பதில் உங்களை நீங்களே படம் எடுக்கும் நிலைக்கு ஆளாவீர்கள்.
பனிப்பிரதேசத்தை பற்றி தெரிந்த பின், மற்ற அனைத்து சமாச்சாரங்களையும் எடுத்துக்கொண்டு நடந்தோ, ஓடியோ, பஸ் பிடித்தோ சௌகரியத்துக்கு ஏற்றார் போல் அவ்விடத்தை அடையவும். இப்போதுதான் பொறுமை மிகவும் அவசியம்... ஓடு வாத்து ஓட உறு வாத்து வருமளவும் காத்து நிற்குமாம் (பெரிய) வாத்து என்பதற்கேற்ப நீங்கள் மறைந்திருந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். சுருட்டு, ஜாக் டானியல்ஸ் ஆகியவற்றை துணைக்கழைத்துக்கொள்ளலாம்.
உங்கள் அதிர்ஷ்டம் அங்கே ஒரு வாத்து சோர்ந்து போகிறது பாருங்கள்... பனி தாங்க முடியவில்லை அதனால்... நம் ஹீரோ(யினி) அவர்தான்... காத்துக்கொண்டே இருங்கள். சற்று நேரம் கழித்து அது பனிக்குளிரில் உறைந்து விடும். உடனே நீங்கள் வைத்திருக்கும் சாக்குப்பை அல்லது ஹாட்பேக்கில் உறைந்த வாத்தை போட்டுக்கொண்டு வெது வெதுப்பான குளம் இருக்கும் திசையில் விரைந்து செல்லுங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து. உங்களுக்கு. ஏனெனில் இன்னும் நீங்கள் சாப்பிடவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். வெது குளத்தை அடைந்ததும் அந்த உறை வாத்தை ரிலீஸ் செய்யவும்.
சற்று நேரம் கழித்து உறை நிலை கடந்ததும் உறை வாத்து உயிரோடு எந்திரிக்கும்... இந்த இடத்தில் நிறைய பேருக்கு மயிர் கூச்செறியும், உடல் சிலிர்க்கும், புல்லரிக்கும், ஏற்படும் பரவச அனுபவத்தை வார்த்தையில் சொல்ல இயலாது குணாவாகிவிடுவார்கள்...
எந்திரித்த வாத்து நீர்நிலை கண்ட உற்சாகத்தில் நீந்த ஆரம்பிக்கும்... இது மறுஜென்மம் எடுத்த வாத்து... நீங்கள் எடுக்க போகும் படம்தான் இதுவரை வந்த வாத்து படங்களிலேயே ஃப்ரஷ் ஆனதென்று - நீங்கள் பிடித்த சுருட்டு மட்டும் பீடியால் தீய்ந்து போனது தவிர மிச்சமிருக்கும் - மார் தட்டி சொல்லிக்கொள்ளலாம்... இப்போது உங்கள் கேமராவால் வாத்தை படம் பிடியுங்கள். கேமரா இல்லாதவர்கள் மனதால் படம் பிடியுங்கள். என்ன ஒன்று வலைப்பதிவில் போட முடியாது... அல்லாரும் உங்களை ஒரு பூச்சி போல (அ) குட்டி வாத்து போல பார்ப்பார்கள்... ஆக மனம் இல்லாதவர்கள் அந்த பனிப்பிரதேசத்துக்கு மீண்டும் சென்று மிச்சமிருக்கும் ஜாக் டானியல்ஸை மூக்கு முட்ட குடித்து விட்டு உங்கள் மீது பனியை போட்டுக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள்.
எச்சரிக்கை :: படம் பிடித்து முடித்தவர்கள், தண்ணீரில் விட்ட வாத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் பிடிக்க முயற்சிக்காதீர்கள்... உங்கள் உடை நனைந்து விடும்.
வாத்தின் அறிவிக்கை (அ) மீன்களின் பாதுகை
கருவாச்சி காவியத்த பாதியில நிறுத்தி வெளக்கம் கொடுக்கற டய மண்டு கணக்கா நம்ம பதிவுக்கும் வெளக்கம் கொடுக்க வச்சிட்டீங்களே மக்கா... அதாவது, நேத்து இதெ "இருப்பின் அறிவிக்கை (அ) மீன்களின் பாதுகை"ன்ற தலைப்புல பதிவா போட்டேன்... எதுக்கு? இலக்கிய வட்ட பெருந்தலைகள் நம்ம பதிவ பார்த்துட்டு வழக்கம் போல நமக்கே புரியாத விசயத்த புரிய வச்சி, எதுனா ம்யூசிக் சைட்டுக்கு லிங்க் கொடுத்தா நாமளும் தன்யனாயிடலாம்னு ஒரு நப்பாசையில... ஆனா தலைப்புல வாத்து இல்லாததாலயோ என்னவோ ஆரும் வரக்காணோம். அர்சுன் படத்துல சொல்ற தேசப்பற்று கருத்தயெல்லாம் காத்துல விட்டுட்டு அவரு ஆட்டம் போட்ட நடிகைய கனவுல வச்சி காதலிக்கிற காத்தவராயன் கணக்கா, என் பதிவோட கேரக்டரரயே புரிஞ்சிக்காம அல்லாரும் வாத்து படம் போடறதும், வாத்து போட்டி வக்கிறதும், கலி முத்திடுச்சிடா 'கார்த்தி'கேயா...
சரி இப்ப தலைப்புல வாத்து போட்டாச்சி... இனியாவது தன்யனாக்குங்க சனங்களே...
****
பாயா
கூப்பு
அச்சூ
மடிப்பு
ஜிகினா
சுய்யான்
ஜில்பான்ஸி
காகம்
இரவுக்கடன்
கொடுமுடி
****
அப்புறம் வாத்து படம் இல்லாமயா... இந்திய வலைப்பதிவுகளில் முதல்முறையாக படாத கஷ்டப்பட்டு வாத்தின் எக்ஸ்ரே படம் போட்றுக்கேன். யாராவது மத்தவங்க யாருக்கும் புரியாத மாதிரி நாலுவரில ஒரு கவிதை எழுதுங்கைய்யா... புண்ணியமா போகும்.****
இது சம்பந்தமான கானா பாடல் சுட்டி : http://musicindiaonline.wholesale.nameless.com/ஆத்தி இது வாத்து கூட்டம்
****
கதவிடுக்கு, சன்னலில் துருப்பிடித்த கம்பி எதுவும் மேக்ரோ மோடில் எடுக்க நேரம் இல்லாததால், நான் எடுத்த ஒரு படத்தோட சிறு பகுதி..

மீன்களுக்கு பாதுகையா? எனில் பாதம் உண்டா என்று கேட்பவர்கள் வேறு ஏதாவது பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள்
****
ஒரு மண்ணும் புரியலைன்னு நாலு பேரு சொன்னீங்கன்னா, அறிவு ஜீவி க்ளப்ல சேந்து அப்படியே சிறு பத்திரிக்கைல எழுத போயிருவேன்... என்ன சொல்றீங்க.
முக்கிய அறிவிப்பு :: இந்த பதிவுக்கு புரியவே புரியாதுங்கற மாதிரி பின்னூட்டம் தரவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கேய்...
சிறுகதைப்போட்டி முடிவுகள்
கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்கு வினைசெய்து - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
தாயே உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.
தனக்குத்தானே புரட்சி பட்டம் கொடுத்துக்கொள்ளாத, ஆனால் புரட்சிக்கு இலக்கணமாய் வாழ்ந்த முண்டாசுக்கவிக்கு இன்று நினைவு நாள்.
***
அன்புள்ள முகமூடி,
நீங்கள் அனுப்பிய 30 கதைகளையும் படித்து முடித்துவிட்டேன். சிறந்தவை என என் மனதிற்குப்பட்டவற்றைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் கடைப்பிடித்த தேர்வுமுறை:
1.நீங்கள் அனுப்பிய pdf கோப்புக்களைத்தான் படித்தேன். வலைப்பதிவிற்குச் சென்று படிக்கவில்லை. உங்கள் pdf கோப்புக்களில் எழுதியவர் பெயர் இல்லை.(அது ஓரு பேருதவி) அதனால் இந்தக் கடிதத்தை எழுதும் இந்த வினாடி வரை பரிசைப் பெறப்போகிறவரின் பெயர் எனக்குத் தெரியாது.
2.முப்பது கதைகளில் 10 கதைகளை முதல் சுற்றில் வடிகட்டித் தேர்ந்து கொண்டேன்.
3.அந்தப் பத்துக் கதைகளிலிருந்து பரிசுக்குரியதைத் தேர்ந்திருக்கிறேன்.
கதைகளின் கருப்பொருள்,வடிவக் கட்டமைப்பு, மொழிநடை, வாசிப்பவரிடம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம், இவற்றை மனதில் கொண்டு கதைகள் மதிப்பிடப்பட்டன ::- மாலன்
*****
முதல் பரிசு US $75 :: இரு சம்பவங்கள் :: சுரேஷ் (penathal Suresh)
2ம் பரிசு US $25 :: முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை :: சுதர்சன் கோபால்
3ம் பரிசு US $25 :: வேட்டையாடு விளையாடு :: வினோத்
மூன்று பரிசுகளே அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், தர வரிசையில் நான்காவதும் ஐந்தாவதும் இருக்கும் கதைகளை எழுதியவர் ஒருவரே.. எனவே ஊக்கப் பரிசு Fifty Great Short Stories புத்தகம் பெறும் சிறுகதைகள்
சின்ன வட்டம் :: நெய்வேலி விச்சு
யார் குற்றம் :: நெய்வேலி விச்சு
இப்போட்டி சிறப்பான முறையில் நடக்க பங்களித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி..
பரிசு பெற்ற சுரேஷ் , சுதர்சன் கோபால் , வினோத் , நெய்வேலி விச்சு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
(பரிசு குறித்த தனி மின்னஞ்சலுக்கு பதிலும், அது உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் உங்கள் மின்னஞ்சல் முகவரியும் எனக்கு மின்னஞ்சலிக்கவும்)
******
மாலன் அவர்களின் குறிப்பு தொடர்ச்சி...
...பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கதைகளில் இந்த அம்சங்களை நீங்கள் காணலாம்.
முதல் பரிசுக்குரிய கதையாக நான் கருதுவது இரு சம்பவங்கள் என்ற கதை. முதல் சில வரிகளில் கதைக் களனை கச்சிதமாக கண்முன் கொண்டு வந்துவிட்டார் ஆசிரியர். ஒரு தொழிற்சாலை. டிரக் தயாரிக்கும் தொழிற்சாலை. வட இந்தியாவில் இருக்கிறது. வட இந்தியாவில் இருக்கிறது என்ற தகவல் முக்கியம். ஏனெனில் கதையில் பின்னால் மதக் கலவரம் வர இருக்கிறது. உழைப்பை நம்பிப் பிழைக்கும் ஒருவர், அவர் குடுமப்ச் சூழல் எல்லாம் உரையாடல் மூலம் நிறுவப்படுகிறது. வறுமை, நிச்சியமற்ற எதிர்காலம் இவைதான் மதவாதம் கால் கொள்ள இடமளிக்கிறது என்பது கோடிகாட்டப்படுகிறது. இதெல்லாம் ஆசிரியருக்குப் பிரசாரம் செய்ய வாய்ப்பளிக்கும் இடங்கள். ஆனால் ஆசிரியர் கதையின் வடிவ அமைதி கெடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அதேபோல கதையில் நடக்கும் விபத்து, மதக்கலவரம் இரண்டும் செயற்கையாகத் தோன்றாத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் பயங்கரம் வர்ணிக்கப்படவில்லை. ஆனால் உணர்த்தப்படுகிறது.
இன்று பெரும்பாலும் மனிதர்களது செயல்களை அவர்களது சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன.மன்ம் விரும்பி நல்லது செய்ய முயல்பவர்கள் கூட மதவாதம், மதக் கலவ்ரம் இவற்றிற்கு ஆட்படும் போது, தங்களை அறியாமலே பிறர்க்குத் தீங்கிழைத்துவிடுகின்றனர். இந்தக் கருத்தை நறுக்கென சொல்லியிருக்கிறார் ஆசிரியர். வடிவ அமைதி குன்றாமல், குரலை உயர்த்தாமல், யதார்த்தம் கெடாமல், இன்றைய சமூகத்தின் எரியும் பிரசினையை ஒரு கோணத்தை சிந்தனைக்கு வைக்கும் கதை என்பதால் இதைத் தெரிவு செய்கிறேன்.
^^^^
இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துசாமி சாரிலிருந்து... கதை ஒரு நுட்பமான கதை. ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை சற்றும் மிகையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்கடி மொட்டையடித்துக் கொள்ளும் நிர்பந்த்தத்திற்குள்ளாகிறான் பழனிச்சாமி. அந்த மொட்டைக்குப் பின் ஒரு காரணம் இருக்கிறது. அது எவருக்கும் மகிழ்ச்சிதரும் காரணமல்ல. நிர்கதியான பெண்களை வெள்ளைப் புடவையை விட மஞ்சளும் காவியும்தான் காக்கிறது என்பதில் ஓர் உரத்து முழக்கப்படாத சமூக அவலம் இருக்கிறது. அம்மாவை அம்மாவாக, ஒரு புனிதப் பசுவாகப் பார்க்கிற மனோபாவம்தான் நம்மிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது. அவளை ஒரு பெண்ணாகவும் பார்ப்பதற்கு ஒரு பேருள்ளம் வேண்டும். தி.ஜானகிராமனுக்கு இருந்த அத்தகைய உள்ளத்தை இந்தக் கதாசிரியரிடமும் பார்க்க முடிகிறது. சமூகம் வகுத்துள்ள ஒழுக்கவிதிகளை வலியுறுத்தாமல் பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க முற்படும் அதே வேளையில் அதை முற்றிலும் அங்கீகரிக்க முடியாத சங்கடமும் கடைசியில் வெளிப்படுகிறது.யதார்த்தம், வ்டிவமைதி இவை கருதிக் கூடக் கதை இந்த விதமாக முடிந்திருக்கலாம்.
^^^^
பொதுவாக தமிழ்ச் சிறுகதைகள் எடுத்துக் கொள்ளும் கதைக்களனிலிருந்து வித்தியாசமான ஒன்றைத் தேர்ந்து கொண்டிருக்கிறார் 'வேட்டையாடு விளையாடு' ஆசிரியர். மெருகேறிய நடை.சிறுகதையின் சாத்தியங்கள், அதன் வடிவம் அதன் ஆசிரியருக்கு விதிக்கும் வரம்புகள் இவற்றை விளங்கிக் கொண்டு, திறமையோடு அதைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். சதுரங்க ஆட்டத்தின் தொழில்நுட்பத் தகவல்களின் அளவு அதிகம். ஆனால் அதுதான் கதைக்கு ஒருவித authenticityயைக் கொடுக்கிறது. என்றாலும் சாதாரண வாசகன் அவற்றில் சலிப்படையக் கூடும்.
^^^^
முன்பெல்லாம் 'மதம் என்பது அபின்' என்ற மார்க்சின் வாதத்தை திராவிடர் கழக நண்பர்கள் மதிற்சுவர்களில் எழுதி வைப்பது வழக்கம். அந்த மேற்கோளின் முழு வடிவமும் அதை எழுதியவருக்குத் தெரிந்திருந்தால், அதை எழுத முன்வந்திருப்பார்களா என்று அந்த சுவர் விளம்பரங்களைப் பார்க்கும் போது நான் நினைத்துக் கொள்வதுண்டு. இதயமற்ற சூழலில், ஆத்மாவை இழந்துவிட்ட சமூகத்தில் மதம் என்பது அபின் என்பது மார்க்சின் வாசகம். கடவுளை ஆதரித்து அல்லது எதிர்த்து அந்த வாசகம் பேசவில்லை. அது ஒரு உண்மையைக் குறிப்பிடுகிறது. A statement of a fact. அதாவது இரக்கமற்ற, பேராசை மிகுந்த சூழலில் எளிய மனிதனுக்கு ஒரு paliative ஆக,ஒரு வலி நிவாரணியாக மதம் செயல்படுகிறது என்பது அவர் சுட்டிக்காட்டும் உண்மை. சின்ன வட்டம் கதை இதைப் போன்ற ஓர் உண்மையை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. சில சிறிய ஆனால் முக்கிய மாற்றங்கள். மதத்திற்குப் பதிலாக கடவுள் என்ற நம்பிக்கை. இரக்கமற்ற சமூக சூழல் என்பதற்குப் பதிலாக போட்டி அதிகமாகிவிட்ட வகுப்பறை. தேர்வில் மதிப்பெண் வாங்குவது இத்தனை பெரிய விஷயமாகிவிட்டதா என்று தோன்றினாலும் இன்று பத்து, 12ம் வகுப்புகளில் இருக்கும் நடுத்தர வர்க்க மாணவர்களிடையே மதிப்பெண் பெறுவதென்பது ஒரு மன உளைச்சல் தரும் விஷயமாகத்தான் ஆகி விட்டது. ஓர் ஊன்றுகோலாக தனக்கு வெளியே ஓர் நம்பிக்கை தேவைப்படுவதைச் சொல்ல முனையும் ஆசிரியர், அதிலிருந்து கிளை பிரிந்து பெரிதினும் பெரிது கேள் என்ற Think Big சித்தாந்தத்தில் வந்து முடிக்கிறார். அது கதையை சற்று பலவீனப்படுத்திதான் விடுகிறது. என்றாலும் இன்றைய இந்திய சமூகத்தில் விதைக்கப்படவேண்டிய கருத்துக்களில் think big சிந்தனையும் முக்கியமானது என்பதால் இந்தக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.
^^^^
ஒரு தனிமனிதனுடைய வீழ்ச்சியானாலும் சரி, சமூகத்தினுடைய வீழ்ச்சிக்கு என்றாலும் சரி, அதன் ஆதாரமாக அச்ச உணர்வே அமைந்துவிடுகிறது. Paranoia என்ற மனநோய்க்கு உள்ளான தனிமனிதர்களுடைய செயல்கள் பரிதாபத்திற்குரியதாகவும், குரூரமான நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதுண்டு. ஆனால் ஒரு அதிகார அமைப்பு (establishment) அந்த நிலைக்குள்ளாகும் போது அது பயங்கரமானதாக ஆகிவிடுகிறது. அதனால் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வு சிதைந்து போகும் கொடுமைகளை ஊடகங்கள் அவ்வப்போது நம் முன் வைத்துக் கொண்டுதானிருக்கின்றன. அணமையில் ஒரு பிரேசிலியன் லண்டனில் சுட்டுக் கொல்லப்பட்டது ஓர் உதாரணம். யார் குற்றம் என்ற கதையும் அது போன்ற ஒரு பொருளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இயல்பான சூழ்நிலைகளை அமைத்துக் கொண்டு ஆசிரியர் கதையை நடத்திச் செல்கிறார். ஆனால் அரசதிகாரம் மேற்கொண்ட அபத்தமான நடவடிக்கைக்காக, அந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் ஏன் குற்ற உணர்விற்கு, அவமான உணர்விற்கு உள்ளாக வேண்டும் என்பது விளங்கவில்லை. இது கதையை சற்று ஊனப்படுத்திவிடுகிறது என்றாலும் பேசப்பட வேண்டிய ஒரு சமகால பிரசினையைக் கதை பேசுவதால் அதைப் பாராட்டுகிறேன்.
^^^^
இந்தப் போட்டியில் படிக்கக் கிடைத்த கதைகள் நம் சமகால வாழ்க்கை பற்றி இளைஞர்கள், நடுவயதினர் கொண்டிருக்கும் பார்வைகள், அவர்களது மொழித்திறன், படைப்பாற்றல் இவை பற்றிய ஓர் நேரடி அனுபவத்தை எனக்குத் தந்தன. அவை நம்பிக்கை கொள்ள வைப்பதாகவே இருக்கின்றன.
*****
செப்டெம்பர் 15ம் தேதி முடிவுகளை அறிவிக்க வேண்டிய வேறு ஒரு போட்டியின் National Jury களில் ஒருவராக இருக்கும் மும்முரத்திலும் இப்போட்டிக்கு நடுவராக இருந்து சிறப்பித்த மாலன் அவர்களுக்கு நன்றி...
சிறுகதைப்போட்டி முடிவுகள் - ஒரு முன்னோட்டம்
முப்பது கதைகளை பரிசீலித்து அதிலிருந்து ஐந்து கதைகளை தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. மிகுந்த உடலுழைப்பும், மன உழைப்பும், நேரமும் தேவைப்படும் விஷயமது. இருப்பினும் முகமறியாத ஒருவர் என்றெண்ணாமல் புதியதொரு முயற்சிக்கு நம்மாலான உதவி என்ற உயரிய நோக்கில் இப்போட்டிக்கு நடுவராக இருக்க சம்மதித்து கதைகளை பரிசீலித்து பரிசுக்குறிய கதைகளை தேர்ந்தெடுத்துத்தந்த மாலன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இவை இவை பரிசுக்கிரியவை என்று மட்டும் சொல்லாமல், அக்கதைகளை பற்றிய தனது கருத்துக்களையும் அக்கதைகள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்.
****
மாலனின் வார்த்தைகளிலேயே ::
இன்றைக்கெல்லாம் இருந்தால் தமிழ் சிறுகதைக்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்ப் பத்திரிகைகளின் வயதைவிடத் தமிழ்ச் சிறுகதையின் வயது அதிகம். அச்சியந்திரங்களைவிடத் தமிழ்ச் சிறுகதையின் வயது அதிகம். பேச்சு வழக்கில் இருந்த புனைகதைகள் பற்றி தொல்காப்பியத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. ( அது மாஜிக்கல் ரியலிசம் பற்றிய குறிப்பும் கூட! ) நெடிய பாரம்பரியம் மிக்கத் தமிழ்ச்சிறுகதைக்கு தமிழ்ப் பத்திரிகைகள் கொடுத்து வந்த இடம் குறைந்துவிட்டது என்று என்னிடம் பலர் தனிப்பேச்சில் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. 96 பக்க அளவில் வார இதழ்கள் வந்து கொண்டிருந்த போது அவற்றில் 60-70 சதவீத இடத்தைப் புனைகதைகள் பிடித்துக் கொண்டதுண்டு. இன்று 144 பக்கங்கள் அளவில் வரும் இதழ்களில் 20 சதவீத அளவிற்குக்கூட அவை இடம் பெறுவதில்லை; சினிமா செய்திகளுக்கும், பிரபலங்களின் பேட்டிக்கும் அரசியல் சர்ச்சைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறுகதைகளுக்குப் பத்திரிகைகள் தருவதில்லை என்பது அவர்களது மனக்குறை.
சிறு பத்திரிகைக் கதைகள் புரியும்படி இல்லை, அவை 'நுட்பத்திற்கு'க் கொடுக்கும் முக்கியத்துவத்தை கதையம்சத்திற்குக் கொடுப்பதில்லை, கதையைக் கதையிலிருந்து வெளியேற்றிவிட்ட கதைகளுக்கு மட்டுமே அவை இடமளிக்கின்றன என்பது இன்னொரு ஆதங்கம்.
சரியோ, தவறோ, இன்றும் பலரது இலக்கிய ஆர்வம், கதைகள் படிப்பதில்தான் துவங்குகிறது. அதுவே பின்னாளில் மொழியின் மீதான அக்கறையாகவும் மலர்கிறது. இந்தக் கோணத்தில் பார்க்கும் போது வெகுஜன ஊடகங்களில் கதைக்கான இடம் குறைவது வருத்தத்திற்குரியதே.
இந்தப் பின்னணியில் முகமூடியால் வலைப்பதிவர்களிடையே நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி வரவேற்கவும் ஊக்குவிக்கப்படவேண்டிய ஒன்று.
ஒரு எழுத்தாளனாக நான் எந்தப் போட்டிக்கும் என் கதைகளை அனுப்பிக் கலந்து கொண்டதில்லை. ஆனால் சாவி நடத்திய சிறுகதைப் போட்டி, கல்கி பொன்விழா சிறுகதைப் போட்டி, குமுதம் ஏர்-இந்தியா சிறுகதைப் போட்டி,சிங்கப்பூர் தங்கமுனை சிறுகதைப் போட்டி, கணையாழி குறுநாவல் போட்டி என சில போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியதுண்டு. இந்தப் போட்டிகளில் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. (கணையாழிப் போட்டியில் நடுவராக உடன் பணியாற்றியவர் தி.ஜானகிராமன். துரதிருஷ்டவசமாக அடுத்த ஆண்டு அவர் அமரர் ஆகிவிட போட்டியை அவர் நினைவுப் போட்டியாகவே நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சிங்கப்பூர் போட்டியில், நான் நடுவராகப் பங்கேற்றதற்கு முந்தைய ஆண்டு சுந்தரராமசாமி நடுவராக இருந்தார். அந்த ஆண்டு எந்தக் கதையும் பரிசுக்குரியதல்ல என அவர் அறிவித்துவிட்டதால் சிங்கை எழுத்தாளர்கள் நான் சென்ற ஆண்டு சற்று சினத்தோடே இருந்தார்கள்)
ஒவ்வொரு போட்டியின் போதும் கிட்டிய அனுபவங்கள் வித்தியாசமானதாக இருந்த போதிலும் ஒவ்வொருமுறையும் எனக்கு சிறுகதை என்பதைப் பற்றிய சில புதிய தரிசனங்கள் இந்தப் போட்டிகளின் வழியே கிடைத்ததுண்டு. வலைப்பதிவர்களிடையே நடத்தப்பட்ட இந்தப் போட்டியும் அதற்கு விலக்கல்ல.
பெரும்பாலானோர் போட்டியை சீரியசாகவே எடுத்துக் கொண்டு எழுதியிருந்தார்கள். கதை எழுதியவர்களில் பலர் நெடுநாளைய வாசகர்கள் என்பதை ஊகிக்கமுடிந்தது. சில கைகள் 'பழகிய கைகள்' என்று தோன்றின.பெரும்பாலும் தனி மனிதச் சிக்கல்களைக் கதைக் கருவிற்குத் தேர்ந்து கொண்டிருந்தாலும் சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கதைகளும் போட்டிக்கு வந்திருந்தன. எழுத்து நடை, வர்ணனைகள் இவற்றில் பலர் அக்கறை காட்டவில்லை. 80களில் இது போன்ற போட்டிகளுக்கு வரும் கதைகள் பலவற்றில், சுஜாதாவின் பாதிப்பைக் காண முடியும். இந்தப் போட்டிக்கு வந்த கதைகளில் அப்படிப்பட்ட கதைகள் அநேகமாக இல்லை.இன்னும் சொல்லப்போனால் எந்த பிரபல எழுத்தாளர்களின் தாக்கத்தையுக் காணோம்.
போட்டியை எந்த ஒரு சிறு குறைக்கும் இடமின்றி, அனுபவம் வாய்ந்த பத்திரிகைகளின் போட்டிக்கு நிகராக முகமூடி இந்தப் போட்டியை வடிவமைத்திருந்தார். எத்தனை பரிசு, என்னென்ன பரிசுகள், இறுதித் தேதி, படைப்பின் அளவு, நடுவர் யார் எல்லாம் தெளிவாக பகிரங்கமாக அவரால் அறிவிக்கப்பட்டிருந்தன.
வந்திருந்த படைப்புக்களை pdf கோப்புகளாக மாற்றி எனக்கு அனுப்பியிருந்தார்.அந்தக் கோப்புகளில் எழுதியவர் பெயர் இல்லை.கதையின் தலைப்பு மட்டுமே இருந்தது. நான் அந்த கோப்புகளைப் படித்துத்தான் முடிவெடுத்தேன்.பரிசு பெற்ற கதைகளின் பெயர் எனக்குத் தெரியுமே தவிர அதை எழுதியவர் பெயர்கள் எனக்குத் தெரியாது.
வந்திருந்த 30 கதைகளைப் படித்து அவற்றில் 10 கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அந்தப் பத்திலிருந்து பரிசுக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதனால் அந்தக் கதைகள் குறைந்தது இரண்டு முறைகளுக்கு மேல் என்னால் படிக்கப்பட்ட்ன.
ஒரு நல்ல சிறுகதை என்பது (ஒரே) ஒரு கருத்தை அழுத்தந்திருத்தமாக சொல்ல வேண்டும். அதே நேரத்தில் அது மேடைப் பேச்சாகவோ (rhetoric) , கோஷமாகவோ ஆகிவிடக்கூடாது. எல்லாவற்றையும் விளம்பச் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமில்லை. வாசகனின் கற்பனைக்கும் கொஞ்சம் இடமளிக்க வேண்டும். அதற்காக பூடகமாகப் புதிராக சொல்லக் கூடாது.
கதைகள் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமானால் நல்லது .ஆனால் அந்த அனுபவம் மற்றவருக்கும் சாத்தியமாகக் கூடியதாக, புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்குமானால் கதை சிறப்பாக அமையும். கதையில் கற்பனைக்கு இடமுண்டு. ஆனால் செயற்கைக்கு இடமில்லை. கதை தீர்வு சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் சிந்தனைக்குப் பொறி தர வேண்டும். கூடிய வரையில் கதையை முதல் வரியில் ஆரம்பித்துவிடுவ்து, குறைந்த பட்சம் முதல் வரிக்குப் பக்கத்தில் ஆரம்பித்து விடுவது நல்லது.கடைசி வரி நச்சென்று இருக்க வேண்டும்.
தமிழ் ஓர் அற்புதமான மொழி. சில சிறிய மாற்றங்கள் பெரிய விஷ்யங்களை உணர்த்திவிடும். ஆமையும் முயலும் ரேஸ் ஓடிய கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. அந்தக் கதைக்கு ஒருவர் 'முயலாமை' என்று தலைப்புக் கொடுத்து எழுதி எடுத்துவந்தார். 'என்னையா தலைப்பு இது ?' என்று கேட்டார் ஆசிரியர். முயற்சி மேற்கொள்ளாததால்தானே முயல் தோற்றது. அதைத்தான் மறைமுகமாக சுட்டியிருக்கிறேன் என்றார் கதை எழுதியவர். தலைப்பு நெகடிவாக இருக்க்கிறது. இதை ஏதாவது செய்ய முடியுமா என்று பாரும் என உதவி ஆசிரியருக்கு அனுப்பி வைத்தார். அவர் ஆமையும் முயலும் என்று அதை மாற்றினார். நேரடியாக இருக்கிறதே என்றார் ஆசிரியர்.ஆமையும் முயற்சி செய்யும் அப்படி முயற்சி செய்தால் வெற்றி காண முடியும் என்பதைச் சொல்லியிருக்கிறேன் என்றார் து.ஆ. ஒரு சிறிய மாற்றம். நெகட்டிவான தலைப்பைப் பாசிட்டிவாக மாற்றிவிட்டது.
ஒரு பத்திரிகையில் மாதம் தோறும் ஒருவரிக் கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி வந்தார்கள்.இந்திராகாந்தி இறந்த போது அதைப் பற்றி ஒருவரிக் கவிதை எழுதப் போட்டி அறிவித்தார்கள். போட்டியில் வென்ற கவிதை: 'இன்று இந்திரா, காந்தியானார்'. ஒரு நெடிய அரசியல் வரலாற்றை ஒரு வரியில் நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டார் அந்தக் கவிஞர்!. எதற்கு இந்தக் கதையெல்லாம் இங்கு? தமிழைக் கச்சிதமாகப் பயன்படுத்தினால் நிறைய விஷயங்களைக் குறைந்த வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.
பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கதைகளில் இந்த அம்சங்களை நீங்கள் காணலாம்.....
****
இக்குறிப்பின் தொடர்ச்சி கதைகளை பற்றிய விமர்சனமாக தொடர்வதால் குறிப்பின் தொடர்ச்சியும் பரிசுக்கதைகளை பற்றிய விபரமும் முன்பே சொன்னது போல் மகாகவி நினைவு நாளான நாளை...
அதற்கு முன் :: பரிசுக்குறிய கதைகளாக நடுவரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கதைகளை பற்றிய உங்கள் யூகங்களை நீங்கள் தெரிவிக்கலாமே... அனைத்து கதைகளும் பற்றிய பட்டியல் இங்கே ... நடுவரின் முடிவோடு சரியாக ஒத்துப்போகும் யூகத்தை எழுதுபவருக்கு "சிறந்த யூகி" பட்டம் வேண்டாமென்றால் என்ன வேண்டுமோ அது வழங்கப்படும்...
அப்படி போடு அறுவாள - ஆகஸ்டு டாப் 10
டாப் 10 : கொடைக்கானல் மலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்த காரை காட்டு எருமை ஒன்று வழிமறித்தது. காரை சிறிது நேரம் உற்றுப் பார்த்த காட்டு எருமை பின்னர் தன் வழியே மலைப் பகுதிக்குள் சென்று மறைந்தது (பின்னர் அந்த எருமைக்கு வேப்பிலை அடித்து முற்றிலும் குணப்படுத்திவிட்டதாக எருமையார் குடும்பத்தார் கூறினர்)
டாப் 09 : திருப்பதி வெங்கடேச பெருமாளை நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தரிசனம் செய்தார் ( ரஜினிகாந்தை ஏழுமலையான் சந்தித்தார்னு செய்தி போடற அளவு முத்தாம இருக்கே, அதுவரைக்கும் சரிதான்)
டாப் 08 : தமிழர்களிடம் வரலாற்று அறிவு மிகவும் குறைவாக இருக்கிறது, என்று உலகத் தமிழ்க் கல்வி இயக்க இயக்குனர் பேராசிரியர் சுப்பிரமணியம் கூறினார் (ரொம்ப சரி.. இல்லையின்னா திருப்பியும் ஓட்டு போடுவோமா சொல்லுங்க)
டாப் 07 : சிறையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு வைகோ எழுதிய கடிதங்கள் அனைத்தும் "சிறையில் விரிந்த மடல்கள்' என்ற பெயரில் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. (இது மாதிரி நிறைய புத்தகம் எழுதணும்னு அப்பாவி தொண்டன் ஆசைப்படுறான்.. செய்வீங்களா வைகோண்ணா...)
டாப் 06 : போதுமான ஆசிரியர்கள் இல்லாத சுயநதி பொறியியல் கல்லூரிகளுக்கு, குறைபாடுகளைச் சரி செய்து கொள்ள ஒரு மாத கால அவகாசம் கொடுத்து அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது - அண்ணா பல்கலை துணைவேந்தர் (கட்டிடமே இல்லாம பல பேரு கல்லூரி நடத்திகிட்டு இருக்காங்க. நீங்க இதப்போயி பெருசா பேசிகிட்டு. அதோ பாருங்க ஒரு பையன் பொண்ணு கூட பேசறான்... ஓடுங்க ஓடுங்க பிடிங்க அவன... )
டாப் 05 : இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நியூ படம் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி அப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (அப்படியே 1937ல வந்த ஒரு படம் ஆபாசமா இருக்காம்.. அதையும் ஒரு தபா பாத்துட்டு தடை செஞ்சீங்கன்னா, பசங்க எல்லாம் உருப்படியா இருக்கும்)
டாப் 04 : இந்த நேரத்தில் மாணவர்களை அரசியலுக்கு அழைக்கவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பேட்டை ரவுடிகளும், பிளேடு பக்கிரிகளும், பொறுக்கிகளும் வந்துவிடுவார்கள் - கல்லூரி விழாவில் காளிமுத்து. (என்னங்க நீங்க... வாழும் உதாரணமா இருந்துகிட்டு இதெல்லாம் நீங்க வாய் வார்த்தையா வேற சொல்லணுமா... அம்மா.தி.மு.க.வ பாத்தா தெரியாதா)
டாப் 03 : நம் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் பொறுப்புடன் இல்லாமல் குடிப்பழக்கத்துடன் இருந்தால் உடனே எனக்கு கடிதம் எழுதுங்கள். நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் - டாக்டர் ராமதாஸ் (அதை போதை தெளிந்த பின் எழுதுங்கள். போன முறை வந்த ஒரு கடிதத்தையும் படிக்க முடியவில்லை... என்னது ஒரு வேளை நானூ.... எந்த கட்சி பத்திரிக்கைடா நீ... )
டாப் 02 : இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் கோவை மாநாடு மிகச் சிறந்த மாநாடாக இருந்தது. அதற்கு என்ன காரணம்? பழனிச்சாமி, கோவை ராமநாதன் இவர்களெல்லாம் ஒற்றுமையாக இருந்தது தான் காரணம். நான் அதைப் பற்றி அதிகமாக பேசி என்னுடைய கண்ணே பட்டு விடக் கூடாது என்ற காரணத்தால், திருஷ்டி பட்டுவிடும் என்ற காரணத்தால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் (கண்ணு, திருஷ்டி... காலம் செய்த கோலமடா, கடவுள் செய்த.... அடுத்த தடவ மீட்டிங் பேக்ரவுண்டா பெரியார் படத்த வரையரதுக்கு முந்தி கொஞ்சம் எலுமிச்சம் பழமெல்லாம் வச்சி சுத்தி போடுங்க)
டாப் 01 (அ) ட்ரீம்வொர்க்ஸ் பேக்டரி : வரும் தேர்தலில் நாம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதற்கடுத்து வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நம் கட்சியுடன் கூட்டணி சேர மற்ற கட்சிகள் போட்டி போடும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்...'' - பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ், பேச்சு.
நான் வேற எதுக்கு வீணா... விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் பேச்ச கேளுங்க : "இந்த ஆண்டு அல்ல, வருகிற ஆண்டும் அல்ல, 2011ம் ஆண்டு இந்த விடுதலை சிறுத்தைகளின் ஆட்சி அமையும். அப்போது எங்கள் கட்சி கொடி கோட்டையில் பறக்கும். நமது கட்சி தோழர்கள், இன்றில் இருந்து 2011ம் ஆண்டு என்ன நடக்கும் என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட நமது ஆட்சி அமையும் என்று சொல்ல வேண்டும். இதற்காக நமது கட்சியின் பெயரை புதுடில்லியில் பதிவு செய்து உள்ளேன்...''
சூப்பர் டாப் : எஸ்.ஜே. சூர்யா எடுத்த ‘நியூ’ படத்தில் ஆபாசம் இருக்கிறது. ஆனால், ஆரம்பத்திலேயே அந்தப் படத்துக்கு தடை போடாமல் சென்ஸார் போர்டு என்ன செய்து கொண்டிருந்தது? காலம் தாண்டி எஸ்.ஜே. சூர்யாவுக்கு இவ்வளவு நெருக்கடிகள் கொடுப்பதைப் பார்த்தால், இது அவரைப் பிடிக்காதவர்கள் செய்கிற செயலோ என்று எண்ணத் தோன்றுகிறது. - தயாரிப்பாளர் கே.ராஜன்.
ஒருவேளை சூரியா போராளி அய்யாவுக்கும் மருத்துவர் அய்யாவுக்கும் நெருக்கமானவராகவோ இருப்பாரோ... அவரு "தமிழரா" இல்லையான்னு அய்யாவோட "தம்பி" ஆய்வு செஞ்சி ஒரு அறிக்கை விட்டா, கடலூர்ல போஸ்டர் அடிக்கற ப்ரஸ்காரங்களுக்கும், உள்குத்து ஆராய்ச்சி செய்யரவங்களுக்கும் வசதியா இருக்கும் ;-))
