சிறுகதைப்போட்டி முடிவுகள் - ஒரு முன்னோட்டம்
முப்பது கதைகளை பரிசீலித்து அதிலிருந்து ஐந்து கதைகளை தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. மிகுந்த உடலுழைப்பும், மன உழைப்பும், நேரமும் தேவைப்படும் விஷயமது. இருப்பினும் முகமறியாத ஒருவர் என்றெண்ணாமல் புதியதொரு முயற்சிக்கு நம்மாலான உதவி என்ற உயரிய நோக்கில் இப்போட்டிக்கு நடுவராக இருக்க சம்மதித்து கதைகளை பரிசீலித்து பரிசுக்குறிய கதைகளை தேர்ந்தெடுத்துத்தந்த மாலன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இவை இவை பரிசுக்கிரியவை என்று மட்டும் சொல்லாமல், அக்கதைகளை பற்றிய தனது கருத்துக்களையும் அக்கதைகள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்.
****
மாலனின் வார்த்தைகளிலேயே ::
இன்றைக்கெல்லாம் இருந்தால் தமிழ் சிறுகதைக்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்ப் பத்திரிகைகளின் வயதைவிடத் தமிழ்ச் சிறுகதையின் வயது அதிகம். அச்சியந்திரங்களைவிடத் தமிழ்ச் சிறுகதையின் வயது அதிகம். பேச்சு வழக்கில் இருந்த புனைகதைகள் பற்றி தொல்காப்பியத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. ( அது மாஜிக்கல் ரியலிசம் பற்றிய குறிப்பும் கூட! ) நெடிய பாரம்பரியம் மிக்கத் தமிழ்ச்சிறுகதைக்கு தமிழ்ப் பத்திரிகைகள் கொடுத்து வந்த இடம் குறைந்துவிட்டது என்று என்னிடம் பலர் தனிப்பேச்சில் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. 96 பக்க அளவில் வார இதழ்கள் வந்து கொண்டிருந்த போது அவற்றில் 60-70 சதவீத இடத்தைப் புனைகதைகள் பிடித்துக் கொண்டதுண்டு. இன்று 144 பக்கங்கள் அளவில் வரும் இதழ்களில் 20 சதவீத அளவிற்குக்கூட அவை இடம் பெறுவதில்லை; சினிமா செய்திகளுக்கும், பிரபலங்களின் பேட்டிக்கும் அரசியல் சர்ச்சைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறுகதைகளுக்குப் பத்திரிகைகள் தருவதில்லை என்பது அவர்களது மனக்குறை.
சிறு பத்திரிகைக் கதைகள் புரியும்படி இல்லை, அவை 'நுட்பத்திற்கு'க் கொடுக்கும் முக்கியத்துவத்தை கதையம்சத்திற்குக் கொடுப்பதில்லை, கதையைக் கதையிலிருந்து வெளியேற்றிவிட்ட கதைகளுக்கு மட்டுமே அவை இடமளிக்கின்றன என்பது இன்னொரு ஆதங்கம்.
சரியோ, தவறோ, இன்றும் பலரது இலக்கிய ஆர்வம், கதைகள் படிப்பதில்தான் துவங்குகிறது. அதுவே பின்னாளில் மொழியின் மீதான அக்கறையாகவும் மலர்கிறது. இந்தக் கோணத்தில் பார்க்கும் போது வெகுஜன ஊடகங்களில் கதைக்கான இடம் குறைவது வருத்தத்திற்குரியதே.
இந்தப் பின்னணியில் முகமூடியால் வலைப்பதிவர்களிடையே நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி வரவேற்கவும் ஊக்குவிக்கப்படவேண்டிய ஒன்று.
ஒரு எழுத்தாளனாக நான் எந்தப் போட்டிக்கும் என் கதைகளை அனுப்பிக் கலந்து கொண்டதில்லை. ஆனால் சாவி நடத்திய சிறுகதைப் போட்டி, கல்கி பொன்விழா சிறுகதைப் போட்டி, குமுதம் ஏர்-இந்தியா சிறுகதைப் போட்டி,சிங்கப்பூர் தங்கமுனை சிறுகதைப் போட்டி, கணையாழி குறுநாவல் போட்டி என சில போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியதுண்டு. இந்தப் போட்டிகளில் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. (கணையாழிப் போட்டியில் நடுவராக உடன் பணியாற்றியவர் தி.ஜானகிராமன். துரதிருஷ்டவசமாக அடுத்த ஆண்டு அவர் அமரர் ஆகிவிட போட்டியை அவர் நினைவுப் போட்டியாகவே நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சிங்கப்பூர் போட்டியில், நான் நடுவராகப் பங்கேற்றதற்கு முந்தைய ஆண்டு சுந்தரராமசாமி நடுவராக இருந்தார். அந்த ஆண்டு எந்தக் கதையும் பரிசுக்குரியதல்ல என அவர் அறிவித்துவிட்டதால் சிங்கை எழுத்தாளர்கள் நான் சென்ற ஆண்டு சற்று சினத்தோடே இருந்தார்கள்)
ஒவ்வொரு போட்டியின் போதும் கிட்டிய அனுபவங்கள் வித்தியாசமானதாக இருந்த போதிலும் ஒவ்வொருமுறையும் எனக்கு சிறுகதை என்பதைப் பற்றிய சில புதிய தரிசனங்கள் இந்தப் போட்டிகளின் வழியே கிடைத்ததுண்டு. வலைப்பதிவர்களிடையே நடத்தப்பட்ட இந்தப் போட்டியும் அதற்கு விலக்கல்ல.
பெரும்பாலானோர் போட்டியை சீரியசாகவே எடுத்துக் கொண்டு எழுதியிருந்தார்கள். கதை எழுதியவர்களில் பலர் நெடுநாளைய வாசகர்கள் என்பதை ஊகிக்கமுடிந்தது. சில கைகள் 'பழகிய கைகள்' என்று தோன்றின.பெரும்பாலும் தனி மனிதச் சிக்கல்களைக் கதைக் கருவிற்குத் தேர்ந்து கொண்டிருந்தாலும் சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கதைகளும் போட்டிக்கு வந்திருந்தன. எழுத்து நடை, வர்ணனைகள் இவற்றில் பலர் அக்கறை காட்டவில்லை. 80களில் இது போன்ற போட்டிகளுக்கு வரும் கதைகள் பலவற்றில், சுஜாதாவின் பாதிப்பைக் காண முடியும். இந்தப் போட்டிக்கு வந்த கதைகளில் அப்படிப்பட்ட கதைகள் அநேகமாக இல்லை.இன்னும் சொல்லப்போனால் எந்த பிரபல எழுத்தாளர்களின் தாக்கத்தையுக் காணோம்.
போட்டியை எந்த ஒரு சிறு குறைக்கும் இடமின்றி, அனுபவம் வாய்ந்த பத்திரிகைகளின் போட்டிக்கு நிகராக முகமூடி இந்தப் போட்டியை வடிவமைத்திருந்தார். எத்தனை பரிசு, என்னென்ன பரிசுகள், இறுதித் தேதி, படைப்பின் அளவு, நடுவர் யார் எல்லாம் தெளிவாக பகிரங்கமாக அவரால் அறிவிக்கப்பட்டிருந்தன.
வந்திருந்த படைப்புக்களை pdf கோப்புகளாக மாற்றி எனக்கு அனுப்பியிருந்தார்.அந்தக் கோப்புகளில் எழுதியவர் பெயர் இல்லை.கதையின் தலைப்பு மட்டுமே இருந்தது. நான் அந்த கோப்புகளைப் படித்துத்தான் முடிவெடுத்தேன்.பரிசு பெற்ற கதைகளின் பெயர் எனக்குத் தெரியுமே தவிர அதை எழுதியவர் பெயர்கள் எனக்குத் தெரியாது.
வந்திருந்த 30 கதைகளைப் படித்து அவற்றில் 10 கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அந்தப் பத்திலிருந்து பரிசுக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதனால் அந்தக் கதைகள் குறைந்தது இரண்டு முறைகளுக்கு மேல் என்னால் படிக்கப்பட்ட்ன.
ஒரு நல்ல சிறுகதை என்பது (ஒரே) ஒரு கருத்தை அழுத்தந்திருத்தமாக சொல்ல வேண்டும். அதே நேரத்தில் அது மேடைப் பேச்சாகவோ (rhetoric) , கோஷமாகவோ ஆகிவிடக்கூடாது. எல்லாவற்றையும் விளம்பச் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமில்லை. வாசகனின் கற்பனைக்கும் கொஞ்சம் இடமளிக்க வேண்டும். அதற்காக பூடகமாகப் புதிராக சொல்லக் கூடாது.
கதைகள் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமானால் நல்லது .ஆனால் அந்த அனுபவம் மற்றவருக்கும் சாத்தியமாகக் கூடியதாக, புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்குமானால் கதை சிறப்பாக அமையும். கதையில் கற்பனைக்கு இடமுண்டு. ஆனால் செயற்கைக்கு இடமில்லை. கதை தீர்வு சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் சிந்தனைக்குப் பொறி தர வேண்டும். கூடிய வரையில் கதையை முதல் வரியில் ஆரம்பித்துவிடுவ்து, குறைந்த பட்சம் முதல் வரிக்குப் பக்கத்தில் ஆரம்பித்து விடுவது நல்லது.கடைசி வரி நச்சென்று இருக்க வேண்டும்.
தமிழ் ஓர் அற்புதமான மொழி. சில சிறிய மாற்றங்கள் பெரிய விஷ்யங்களை உணர்த்திவிடும். ஆமையும் முயலும் ரேஸ் ஓடிய கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. அந்தக் கதைக்கு ஒருவர் 'முயலாமை' என்று தலைப்புக் கொடுத்து எழுதி எடுத்துவந்தார். 'என்னையா தலைப்பு இது ?' என்று கேட்டார் ஆசிரியர். முயற்சி மேற்கொள்ளாததால்தானே முயல் தோற்றது. அதைத்தான் மறைமுகமாக சுட்டியிருக்கிறேன் என்றார் கதை எழுதியவர். தலைப்பு நெகடிவாக இருக்க்கிறது. இதை ஏதாவது செய்ய முடியுமா என்று பாரும் என உதவி ஆசிரியருக்கு அனுப்பி வைத்தார். அவர் ஆமையும் முயலும் என்று அதை மாற்றினார். நேரடியாக இருக்கிறதே என்றார் ஆசிரியர்.ஆமையும் முயற்சி செய்யும் அப்படி முயற்சி செய்தால் வெற்றி காண முடியும் என்பதைச் சொல்லியிருக்கிறேன் என்றார் து.ஆ. ஒரு சிறிய மாற்றம். நெகட்டிவான தலைப்பைப் பாசிட்டிவாக மாற்றிவிட்டது.
ஒரு பத்திரிகையில் மாதம் தோறும் ஒருவரிக் கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி வந்தார்கள்.இந்திராகாந்தி இறந்த போது அதைப் பற்றி ஒருவரிக் கவிதை எழுதப் போட்டி அறிவித்தார்கள். போட்டியில் வென்ற கவிதை: 'இன்று இந்திரா, காந்தியானார்'. ஒரு நெடிய அரசியல் வரலாற்றை ஒரு வரியில் நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டார் அந்தக் கவிஞர்!. எதற்கு இந்தக் கதையெல்லாம் இங்கு? தமிழைக் கச்சிதமாகப் பயன்படுத்தினால் நிறைய விஷயங்களைக் குறைந்த வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.
பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கதைகளில் இந்த அம்சங்களை நீங்கள் காணலாம்.....
****
இக்குறிப்பின் தொடர்ச்சி கதைகளை பற்றிய விமர்சனமாக தொடர்வதால் குறிப்பின் தொடர்ச்சியும் பரிசுக்கதைகளை பற்றிய விபரமும் முன்பே சொன்னது போல் மகாகவி நினைவு நாளான நாளை...
அதற்கு முன் :: பரிசுக்குறிய கதைகளாக நடுவரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கதைகளை பற்றிய உங்கள் யூகங்களை நீங்கள் தெரிவிக்கலாமே... அனைத்து கதைகளும் பற்றிய பட்டியல் இங்கே ... நடுவரின் முடிவோடு சரியாக ஒத்துப்போகும் யூகத்தை எழுதுபவருக்கு "சிறந்த யூகி" பட்டம் வேண்டாமென்றால் என்ன வேண்டுமோ அது வழங்கப்படும்...
மக்கள்ஸ் கருத்து ::
முகமூடி,
தனிப்பட்ட வசவுகளே பெரும்பான்மையான அடையாளமாகி விட்டிருக்கும் தமிழிணையத்தில் உங்களின் இந்த முயற்சி ஆக்கப்பூர்வமானது. வாழ்த்துக்கள்.
பல நல்ல கதைகள்.. நல்ல flow, வித்தியாசமான சிந்தனைகள் என்று பல நண்பர்கள் எழுதியிருந்தார்கள்..முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். என் யூகத்தில் சஞ்சித் மற்றும் விசை வினோத் இருவரும் பரிசுகள் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன்.
சரி, உங்க கருத்து ??
முகமூடி,
தனிப்பட்ட வசவுகளே பெரும்பான்மையான அடையாளமாகி விட்டிருக்கும் தமிழிணையத்தில் உங்களின் இந்த முயற்சி ஆக்கப்பூர்வமானது. வாழ்த்துக்கள்.
பல நல்ல கதைகள்.. நல்ல flow, வித்தியாசமான சிந்தனைகள் என்று பல நண்பர்கள் எழுதியிருந்தார்கள்..முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். என் யூகத்தில் சஞ்சித் மற்றும் விசை வினோத் இருவரும் பரிசுகள் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன்.
சரி, உங்க கருத்து ??