<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மெட்டி ஒலி காற்றோடு...


'நமக்குள் சரிப்பட்டு வரும்போல் தோன்றவில்லை... இனி நாம் நண்பர்களாக இருப்போம்...'


இதை சொல்லும்போது அவளால் என் கண்ணை பார்த்து கூட சொல்ல முடியவில்லை.. சற்று நேரம் கழித்து முகம் நிமிர்த்திய போது ஒரு அடிபட்ட பார்வை.. குற்ற உணர்ச்சி.. நான் எதுவுமே பேசவில்லை.. அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். பேசவும் தோன்றவில்லை... 'சரி' என்று மட்டும் சொன்னேன்.. விவாதம் பண்ணுவேன், மனம் மாற்ற முயற்சிப்பேன், குறைந்தபட்சம் ஏனென்றாவது கேட்பேன் என்று நினைத்திருக்க வேண்டும்.. ஜீவனேயில்லாமல் 'ரொம்ப தாங்க்ஸ்' என்றாள்.

மூன்று மாதங்கள்தான் ஆகிறது.. ஆனால் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்ததில் ஒரு ஜென்மத்திற்கான நினைவுகள்.. மனதுக்குள் கணவன் மனைவியாகவும் வரித்தாயிற்று. நண்பர்களாம் நண்பர்கள், காதலித்தவர்கள் நண்பர்களாக வாழுவது எப்படி சாத்தியமாம்.. இருவருக்கு மட்டுமேயான அந்த அன்னியோன்னியத்தை எப்படி துறப்பது.. பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் காதலித்த காலத்தின் வாசம் மிஞ்சியிருக்கிறதே, அதை என்ன செய்வது. ஒவ்வொரு பொருளையும் சொல்லையும் நமக்கு மட்டும் ஏற்றார் போல் மாற்றி உபயோகித்தோமே, அதை மீண்டும் சாதாரணமாக உபயோகிக்க முடியுமா.

மறுநாளிலிருந்து எதுவுமே நடக்காத மாதிரி நடக்க முயற்சித்தேன்.. இயல்பாக இருப்பது போல் நடிக்கிறேன் என்பதை அவள் உணர்ந்திருக்கலாம்.. ஆனால் அவள் மிகவும் சாதாரணமாக இருந்தாள்... அழுத்தம் என்று தெரியும், அதற்காக இப்படியா.. இயல்பான பேச்சு, செய்கை என்று நாளாக ஆக பழகிவிட்டது...


ஒருநாள் மழை சாரலடித்துக்கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில்
'நாளைக்கு லீவாச்சே என்ன ப்ரோக்ராம்..'
'இல்ல டவுனுக்கு வரணும் ஆர்கெஸ்ட்ராக்கு டிக்கெட் வாங்கி வச்சிருக்கா என் ப்ரெண்டு..'
'அப்படியா போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வாயேன்..'

நான் எதேச்சையாகத்தான் சொன்னேன், அதுவரை எத்தனையோ வற்புறுத்தியும் வீட்டுக்கு வந்ததில்லை அவள்.

'சரி ஈவனிங் 5 மணிக்கு முடிஞ்சா வரேன்'..
இந்த முடிஞ்சாவுக்கு அர்த்தம் நாசூக்கான இல்லை என்பதாகத்தான் உணர்ந்திருந்தேன். ஆனாலும் முதல் முறை சரி என்றதே ஆச்சரியம்தான்..

அழைப்பு மணி ஒலித்த போது நான் பாட்டு கேட்டுக்கொண்டே துணிமணி மடித்துக்கொண்டிருந்தேன்.. அவள் தோழி மற்றும் தம்பியோடு வந்திருந்தாள். என் அறையை ரசித்து ரசித்து பார்த்தாள். என் சுவரில் இருந்த சித்திரங்கள், அறையில் நிரம்பியிருந்த வாசனை, காண்ட்ராஸ்டாக இருந்த வண்ணங்கள் எல்லாவற்றையும் சிலாகித்து பேசினாள். மேஜை விரிப்பை நீவிவிட்டு அதன் மேலிருந்த பொருட்களை மாற்றி அமைத்தாள். அடுக்கி இருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து கூட பார்க்காமல் மீண்டும் அங்கேயே வைத்தாள். "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சில் தாலாட்ட" ஒலிக்க ஆரம்பித்தது.. அவள் தம்பி எதையோ உருட்டிக்கொண்டிருந்தான்... என்ன செய்வதென்று அறியாமல் அமர்ந்திருந்த அவள் தோழியிடம் நான் பேச்சுக்கொடுத்தாலும் அவள் செய்கைகளையே மௌனமாக கவனித்துக்கொண்டிருந்தேன்...

"வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்...."
இந்த வரி கசிந்த போது அவள் என்னை பார்த்த பார்வை... இந்த ஜென்மத்துக்கும் மறக்காது எனக்கு..

கேஸட் கவரை எடுத்து பார்த்தாள்... 'இந்த 2 காஸெட்டையும் நான் கேட்டுட்டு தரட்டுமா..' உனக்காகத்தானடா பப்பி அந்த காஸெட்டே பண்ணேன்.. 'ஓ எடுத்துட்டு போங்க..'

'சரி டைம் ஆச்சி.. நாங்க கிளம்பறோம்.. நீங்களும் வாங்களேன் ஆர்கெஸ்ட்ராவுக்கு..'
'இல்லை, எனக்கு ஆர்கெஸ்ட்ரா எல்லாம் அவ்ளோ இஷ்டம் இல்லை..'
பொய்.. என்னால் ரொம்ப நேரம் நடிக்க முடியாது... அவளுக்காக வாங்கி வைத்த 'லிட்டில் ஹார்ட்ஸ்' பிஸ்கட் சாப்பிடப்படாமலேயே இருந்தது...


அவர்களை வழியனுப்பி அங்கேயே நின்று கொண்டிருந்தேன். தெருமுனை திரும்பும்போது தலை திருப்பி விழியாலேயே 'சென்று வருகிறேன்' என்றாள். மீண்டும் அதே பார்வை..


மறுநாள் அவள் வேலையிடத்தில் அவளை பார்த்த போது மேஜை மேல் ஊன்றியிருந்த என் கையை திருப்பி, என் சட்டைப்பையில் இருந்து பேனா எடுத்து என் உள்ளங்கையில் அவள் பெயர் எழுதினாள்... அதன் அர்த்தம் இரண்டு நாள் கழித்து அஞ்சலில் வந்தது... நான்கு பக்க கடிதத்தில் சொல்லியிருந்தாள், இனியும் அவளால் நடிக்க முடியாதென்று.

மூன்று மாதங்கள்.. நான் கோயமுத்தூரில் வேலை கிடைத்து சென்ற பிறகு அவளுக்கு எழுதிய கடிதம் ஒவ்வொன்றையும் ஒரு நேர்த்தியோடு தயார் செய்வேன். அவளிடமிருந்துதான் பதில் கடிதமே இல்லை. அவளிடம் போனில் பேசும் சூழ்நிலையும் இல்லை.. ஒரு நாள் கடிதம் வந்தது.. "நன்கு யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். நமக்கு இந்த ஜென்மத்தில் பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.. என்னால் வீட்டை விட்டு வெளியில் வரும் திடமும் இல்லை.. தினம் தினம் மனதோடு போராடி, இந்த டார்ச்சரை என்னால் தாங்க முடியவில்லை.. நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுவதற்கு உரிமையுண்டு.. ஆனால், இனி நாம் சந்திக்க வேண்டாம். என்னை தொடர்பு கொள்ளவும் முயற்சிக்காதீர்கள்.."

மறுநாள் காலையில் 300 கி.மீ தள்ளி அவளுடைய பஸ்நிறுத்தத்தில் என்னை அவள் எதிர்பார்க்கவில்லை.. என்னை கண்டவுடன் அருகில் வந்து ஏதாவது சொல்லுவாள் என்று காத்திருக்க, எதிர்பாராமல் வந்த அவள் தோழியிடம் கேட்டு அவளுடன் சைக்கிளில் செல்லுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.. நான் 'வந்த பஸ்ஸில்' ஏறி அவர்களுக்கு முன்பே அடுத்த நிறுத்ததில் இருந்தேன்.. அவர்கள் முன்பு இரு கைகளையும் நீட்டி நின்றேன்.. அப்போதைய மனநிலையில் லாரி முன்பு கூட நின்றிருப்பேன்...

என்ன நெனைச்சிகிட்டு இருக்க நீ...
மௌனம்...

கதவை விடாம தட்டினா என்னைக்காவது ஒரு நா திறக்காமலா போயிடும், தட்றதுக்கு முன்னாடியே திறக்காதுன்னு முடிவுக்கு வந்தா எப்படி...
மௌனம்...

சரி மூஞ்சிக்கி நேரா ஒரு தடவ் சொல்லிட்டு போலாம்ல.. அது என்ன ஒரு லெட்டர்ல மேட்டர் முடிச்சிட்ட.. ஏன் என்கிட்ட பேசற அளவு கூடவா உனக்கு நம்பிக்கை இல்ல, ஒரு வார்த்த கூட பேசாம போற...
மௌனம்...

என்னடா பப்பி நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன், நீ பாட்டுல பேசாம இருந்தா எப்படி.. நீ வேணும்கிறப்ப விளையாடுறதுக்கும் வேணாம்னா தூக்கி மூலையில போடுறதுக்கும் நான் என்ன உன்னோட விளையாட்டு பொம்மையா... எனக்கும் மனசுல உணர்ச்சி இருக்குடி...
பொசுக்கென அவள் கண்ணில் கண்ணீர்...

என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண விரும்பாத விஷயம் அது... எதுவும் பேசாமல் வழிவிட்டேன்... இந்த முறை கடைசி வரை திரும்பி பார்க்கவே இல்லை...

அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய... வாழ்க்கையில் மீண்டும் அவளை என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது...

*

தொடர்ச்சி...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


அட போங்க அண்ணாத்தே என்னமோ, இப்போ இதெல்லாம் படிச்சா உணர்ச்சி வசப்பட வைக்கின்றது டீன் ஏஜ் பையனாட்டம்...

சூப்பர் தல சூப்பர்
 



முகமூடிகுள்ளார இப்படி ஒரு முகமூடியா??
நல்ல கதை.. ம்ம்.. கலக்குங்க :-)
 



கடந்த காலத்தின் தாக்கம் ரொம்பவே தெரிகிறது உங்கள் எழுத்துக்களில். நடையும் அருமை. படித்த பின்பு கொஞ்சம் இருக்கமாகவே உணர்ந்தேன்.
 



kadhai madhiri theriyalai. yaar love panni irundhalum thannai relate panna mudiyum inge. Superb !
 



ஏனுங்க அலெக்சாண்டர் டூமாஸ் கதாபாத்திரம்,(Tha man with iron mask)
நீங்க அறிவிப்பு செய்த சிறுகதை போட்டில நீங்க எழுதுன இந்தக் கதையும்
பங்கு பெறுமா? அப்படின்னா எல்லாரும் இரண்டாம் பரிசுக்குதான் முயற்சி
பண்ணனும் போலிருக்கு.
உங்க கதை...sorry ...sorry... நீங்க எழுதியிருக்கிற கதை உண்மையிலேயே முதல் தரம்.

மேலோட்டமா பார்த்தவுடன் தெரிந்து விடுகிற subject,தெரிந்த முடிவு ( வெற்றி or தோல்வி--ஜோடி இல்லாட்டி தாடி)
எல்லாமிருந்தும்...ஆயிரமிருந்தும்...அனைத்தும் இருந்தும்..இந்த subject ஐ கதை எழுதினால் படிக்க...சினிமா எடுத்தால் பார்க்க அலுப்பதில்லையே...

இதுதான்....காதல்.....என்பதா......


அன்புடன்...ச.சங்கர்
 



தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குழலி, ராசா, ஜேவிசி, அனானி, பாண்டி...

சங்கர்... நீங்க எல்லாம் அன்போட சொல்றதால இந்த கதைய போட்டிக்கு அனுப்பறேன்... பரிசு கெடச்சா நக்கல் பண்ண கூடாது சொல்லிப்புட்டேன்...

(அப்படி செய்ய முடியுமா என்ன... வேணா பரிசுக்காக இல்லாம நடுவரின் ஒரு விமர்சனத்துக்காக அனுப்பலாம்)
 



* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.



ஹிஹி.. பழக்க தோஷம் தான்..

முகமூடி என்ன ஆச்சு உங்களுக்கு ?
 



//முகமூடி என்ன ஆச்சு உங்களுக்கு ? //

அதானே?

காதலு பெசாசே காதலு பெசாசே
ஏதோ சௌக்கியம் பர்ருவாயில்ல?

:-)

பாசஸு பாத்துப் போங்க... இல்லாங்காட்டி காதலு முருகன் கதைதாம்...
 



// முகமூடி என்ன ஆச்சு உங்களுக்கு ? //
// அதானே? //

இன்னாபா... செக்கூலரிஸ்ட் ஆனப்புறமா எலக்கியவாதியும் ஆவ வேண்டாமா... அப்பத்தானே நாளக்கி எனக்கு எலக்கிய வட்டத்துல ஒரு மருவாதி கெடக்கும்... மேட போட்டு என் கைய தொட்டு பாத்து அல்லாரும் சிலிப்பாங்க...

குசும்பா... "&$லெஸ்" இப்பவாவது மௌனம் கலைச்சி நல்லதோ கெட்டதோ 4 வார்த்த பேசுவாரா...
 



:-) ம்ஹீம்... இது சரியாப்படல.... ஆட்டோகிராப் படம் பார்த்து.. சின்ன வயசு நியாபகம் வந்துருச்சா.. தல.. ?!

எழுத்து நடையெல்லாம்.. ரொம்ப..இயல்பா.. கதை மாதிரி இல்லாம இருந்தது.. நல்லாருந்தது....

என்ன.. எப்பவும் போல.. காதல் பத்தினு படிச்சதும்... கோபம் தான் வந்தது.. அதான் சேர முடியாதுனு தெரியுதுல.. இதுல.. என்னத்த.. லவ்வு.. கேனத்தனமா இல்ல.. காதலாம்..காதல்.. தல.. நீங்களும்.. இத்த சிலாகிச்சு எழுதாதீங்க...
 



மூகமூடிக்குள் இத்தனை முகங்களா?? கதை நல்லாயிருக்கு ..
 



// காதல் பத்தினு படிச்சதும்... கோபம் தான் வந்தது.. அதான் சேர முடியாதுனு தெரியுதுல.. இதுல.. என்னத்த.. லவ்வு.. கேனத்தனமா இல்ல.. காதலாம்..காதல்.. தல.. நீங்களும்.. இத்த சிலாகிச்சு எழுதாதீங்க... //

செந்தில்... நோ சில்லி ஃபீலிங்க்ஸ்... உங்க பின்னாடி ஒரு கதை இருக்கும் போல...

நன்றி தாஸு... ;-))
 



ஹாய் முகமூடி

என்னதிது...? கும்பல்ல கோவிந்தாவா..? சொந்தக் கதை .. சோகக் கதை எல்லாம் தத்ரூபமா .. வாக்குமூலம் போல வெளியில வருது..?

கதையை படிச்சு முடிச்சதும் ரொம்ப அழுகயா வந்தது..

போட்டிக்கு அனுபினா..முதல் பரிசு உங்களுக்குத்தான்.
 



நன்றி சிறகுகள்... போட்டிக்கு அனுப்பித்தான் பரிசு வாங்ணுமா என்ன, நீங்களா பாத்து ஏதாவது பரிசு கொடுத்தா கூட சரிதான் ;-)
 



கலக்கலான ஒரு சிறுகதை...

மவுனம்... எது கேட்டாலும் மவுனம்...என்று ஒரு காதலி..
உணர்வுகளை உணர முடிகிறது..

கதையின் நாயகனுடன் தம்மையே ஒற்றி பார்க்க முடிகிறது. அது தான் இந்த கதையின் வெற்றி..

வாழ்த்துக்கள்.
 



aval thirumbi parkkamal sendradhilirundhe theriyavillaya ithudan indha nigazhchi mudivadaindadhu - meendum sandikka mattom endru. avalukkaga edhirparpadhu muttalthanam. avan vazhkkai ithudan mudiyavillai endru unarndhu munneruvadhudhan budhisalithanam.

by the way, indha kadhayai thangal manaiviyidam sollivitteergala?
 



நன்றி சதீஷ்
***
அனானி,

உங்க மனைவி கிட்ட சொல்லிட்டீங்களான்னு நீங்க கேட்பது ரெண்டு அனுமானங்களின் அடிப்படையில...

அ) இது எனது சொந்த கதை
ஆ) எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி

ரெண்டுக்கும் எனது பதில் : ஹிஹி
 



திசைகளில் வாசித்து மகிழ்ந்த கதை. யதார்த்தமான கரு, மிகவும் யதார்த்தமான நடை. "நண்பர்களாகவே" இருந்தால் என்னாகும் என்று நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
 



??அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய... வாழ்க்கையில் மீண்டும் அவளை என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது...??

i too waiting...lol...to meet HER! its been 7 years so far since the last time we met and she got kids too!!!!
 



உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சேதுக்கரசி.. திசைகளில் வெளியிட்டு ஊக்கமளித்த மாலனுக்கும்..(இன்னொரு கதை எழுதிடலமா?)

***

// and she got kids too!!!! // உங்களுக்கு?? உங்க ஃபீலிங்க்ஸ் புரியுது அனானி அண்ணாத்த.. நோ சில்லி ஃபீலிங்க்ஸ் ;-))
 



fine story
 



very good story
by
vedarethinam@rediffmail.com
 



//உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சேதுக்கரசி.. திசைகளில் வெளியிட்டு ஊக்கமளித்த மாலனுக்கும்..(இன்னொரு கதை எழுதிடலமா?) //

இந்தக் கதையின் தொடர்ச்சியாக 17-09-2007 அன்று தாங்கள் எழுதியதையும் வாசித்தேன். நன்றாக இருந்தன. ஆனால் முதல் பகுதியில் எங்குமே வராத அம்மா இறுதியில் பேசியது என்னவோ பொருத்தமாக இல்லை.
 



நன்றி அனானிஸ்

*

நன்றி பாலராஜன் கீதா. முதல் பாகத்தில் நாயகன் தன்னையும் காதலியையும் சுற்றி நிகழும் சம்பவங்களை மட்டுமே பார்க்கிறானே அன்றி அம்மாவின் நடவடிக்கைகளை கவனிக்க தவறுகிறான். மேலும் இரண்டாம் பாகத்தின் இறுதியில் பார்த்தீர்கள் என்றால் அம்மாவிற்கு இந்த விஷயம் அரசல் புரசலாக தெரிந்திருக்கலாம் என்றே நாயகன் நம்புகிறான். அம்மாவிற்கு இது பற்றி அப்போதே தெரியும் என்பது அவனுக்கே இறுதியில்தான் தெரிய வருகிறது.

(என்னதான் ஜல்லியடித்தாலும், இதற்கு இரண்டாம் பாகம் எழுதுவோம் என்றெல்லாம் அப்பொழுது நினைத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை ஹிஹி)
 



உங்க blog active-ஆ இருக்கான்னு கூட தெரியலை முகமூடி.. இன்னைக்கு கீதம் FMல "மெட்டி ஒலி காற்றோடு" பாட்டைக் கேட்டதும் எனக்கு இந்தக் கதை தான் ஞாபகம் வந்தது..:)
 



நான் ஏன் அப்போ ஏதும் பின்னூட்டமிடவில்லை?

 



சரி, உங்க கருத்து ??