<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அமெரிக்க அதிபர் தேர்தல் - சிறு குறிப்பு


நீ என்ன அரசியலில் பெரிய அப்பாடக்கரா?

இல்லை.

அப்புறம் எந்த அடிப்படையில் சிறு குறிப்பு வரைகிறாய்?

நல்ல கேள்வி. நேத்து மதர்ஸ் டே டின்னர் சாப்பிட போன இடத்தில் நவம்பர் எலக்சன் பற்றி பேச்சு வந்தது. என் சொந்த காதால் இந்த இரண்டு டயலாக்குகளையும் கேட்டேன்.

அ) சாண்டர்ஸா? அப்டின்னு ஒரு பொலிட்டீசியனா? எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. ஹில்லரிதான் எங்காளு. ஒரு லேடி ஃபர்ஸ்ட் டைமா பிரசிடண்ட் ஆகி சரித்திரம் படைக்க போறாங்க, எவ்ளோ பெரிய விஷயம். அவங்களுக்கு ஓட்டு போட்டு ஆதரவு தரணும்னு நாங்கள்லாம் வாட்ஸப்ல ஏற்கனவே முடிவு செஞ்சிட்டோம்;

ஆ) ட்ரம்புக்கு வோட்டு போடுவதுதான் இந்தியாவுக்கு நல்லதுன்னு போன வாரம் &^$*%& சைட்ல ஒரு செம ஆர்டிகிள் பார்த்தேன். சோ ட்ரம்புக்குத்தான் என் வோட்டு.

கோகனட் மில்க் மஃபின் என்ற ஒரு புது ஐட்டம் நன்றாக இருந்ததால் அதனால் எதேச்சையாக தொண்டையை அடைத்துக்கொண்டு அந்த விவாதத்தில் பங்கு பெறாமல் போன ஒரு குற்றவுணர்ச்சி நேற்றில் இருந்து அரித்துக்கொண்டே இருந்ததால் எனக்கு தெரிந்த ஆஃபாயில் அரசியல் ஞானத்தை ஆம்லெட் போட்டே தீர வேண்டும் என்று இந்த குறிப்பு.

மேலும் அமைந்தகரை டைம்ஸ் போன்ற வாராந்திர மேகசின்களில் வேறு சனி ஞாயிறு சிறப்பு பதிப்பில் சிறப்பு நிருபர்கள் ‘அமெரிக்காவுலயே புஷ் பையன், க்ளிண்டன் பொண்டாட்டின்னு வாரிசு அரசியல் இருக்க சொல்லோ, எங்க தலைவர் வந்தா மட்டும் தப்புன்றீங்கோ’ என்று தர்க்க பூர்வ கேள்வியை ரொம்ப நாட்களாகவே எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள், அவர்களிடமும் ஒரு உரையாடலை ஏற்படுத்தலாம் என்று ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.

சரி, நடத்து... எலக்டோரல் காலேஜ்ல இருந்து ஆரம்பிக்க போறியா?

நோ, எலக்‌ஷன் ப்ராசஸ் என்ன மட்டும்தான். ஏன் இப்பிடி நடக்குது, எதற்கு அப்படி நடக்குது என்பதற்கான சரித்திர பூகோள ஆராய்ச்சிகளை ஆர்வம் இருப்பவர்கள் விக்கிபீடியாவில் தேடிக்கொள்வார்கள்.

அப்புறம்?

ஆங்கில சொல்லை மொழிபெயர்த்து படுத்தாமல் தமிழில் ஆங்கில சொற்களாகவே எழுத உத்தேசம்.

++

முன்னோட்டம் # 1

அமெரிக்க அரசாங்கம் Checks and balances கோட்பாட்டின்படி ஒரு பிரிவுக்கு மட்டும் ஏகபோக அதிகாரம் சென்று விடக்கூடாது என்ற குறிக்கோள் அடிப்படையில் அதிகாரம் பரவலாக்கப்பட்டு மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

(1) Legislative:
Senate மற்றும் House of Representatives என்று இரு பிரிவுகள் அடங்கிய காங்கிரஸால் ஆனது.
பொறுப்பதிகாரம்: சட்டம் இயற்றுவது, அதிபர் செய்யும் நியமனங்களை ஏற்பது அல்லது நிராகரிப்பது, தேவைப்பட்டால் அதிபரையே பதவியில் இருந்து நீக்குவது

(2) Executive:
அதிபர், துணை அதிபர் மற்றும் கேபினட்டால் ஆனது.
பொறுப்பதிகாரம்: சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, காங்கிரஸ் இயற்றும் சட்டங்களை ஏற்கவோ மறுக்கவோ அதிகாரம் (வீட்டோ பவர்) உண்டு.

(3) Judicial:
சுப்ரீம் கோர்ட் ஒன்பது ஜஸ்டிஸ்கள் ஆனது.
ஜஸ்டிஸ்கள் அதிபரால் நியமிக்கப்பட்டு செனட்டால் ஒப்புதல் அளிக்கப் படுபவர்கள்.
பொறுப்பதிகாரம்: சட்டத்தை நிலைநாட்டுவது, அரசியலமைப்புக்கு ஒவ்வாத சட்டங்களை நிராகரிப்பது.

முன்னோட்டம் # 2

- அமெரிக்காவில் 50 மாநிலங்கள்

- ஒரு மாநிலத்துக்கு இரண்டு செனட்டர்கள் என்று மொத்தம் 100 செனட்டர்கள். இவர்கள் பதவிக்காலம் ஆறு வருடங்கள்.
- 50 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 435 பிரதிநிதிகள் (ரெப்ரசெண்டேட்டிவ்கள்). இவர்கள் பதவிக்காலம் இரண்டு வருடங்கள்.

- அதிபர்/துணை பதவிக்காலம் நான்கு வருடங்கள்.

- செனட்டர்கள், ரெப்ரசன்டேட்டிவ்கள் மற்றும் அதிபர்/துணை அதிபர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். கேபினட் செக்ரட்டரிகள் (நம்மூர் அமைச்சர் போல) அதிபரால் நியமிக்கப்பட்டு காங்கிரஸால் ஒப்புதல் தரப்படுபவர்கள்.
நவம்பர் 8, 2016 அன்று அதிபர், துணை அதிபர், 34 செனட் உறுப்பினர்கள், 435 ரெப்ரசெண்டேடிவ்ஸ் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.

+++

 நவம்பர் 8, 2016 அன்று அதிபர், துணை அதிபர், 34 செனட் உறுப்பினர்கள், 435 ரெப்ரசெண்டேடிவ்ஸ் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு கட்சியில் இருந்தும் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அமெரிக்க அதிபராக மூன்று தகுதிகள் தேவை.
(1) பிறக்கும்போது அமெரிக்க குடிமகனாக பிறந்தவர்- natural born citizen
(2) 35 வயது
(3) அமெரிக்காவில் குறைந்தது 14 வருடங்கள் வாழ்ந்தவர்.

இந்த மூன்றும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அதிபர் பதவிக்கு போட்டி போடலாம்.

அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் பிரதானம். டெமாக்ரடிக் (ஜனநாயகம்) மற்றும் ரிபப்ளிகன் (குடியரசு). இவை இரண்டை தாண்டியும் கட்சிகள் உண்டு, ஆனால் அவற்றில் இருந்து அதிபர் என்பது தமிழ்நாட்டில் பாஜக முதல்வர் என்பது போல. எனவே சாய்ஸில் விடுவோம்.

கட்சி என்பது இந்தியாவில் போல் தலைவர், தலைவரை மீறி அணுவும் அசையாது போல் கிடையாது. கட்சிகளுக்கென்று சில அடிப்படை கொள்கைகள் உண்டு. டெமாக்ரடிக்ஸ் லிபரல்ஸ் (Liberals). ரிபப்ளிகன்கள் கன்சர்வேடிவ்ஸ் (Conservatives). பொதுவாக கட்சி சார்ந்த - ஏற்கனவே கவர்னர், செனட்டர் போன்ற பதவிகளில் பழம் தின்று கொட்டை போட்ட - ஆட்கள்தான் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார்கள் எனினும் எந்த ஒரு தனி நபரும் கொள்கை சார்ந்து கட்சி பிரகடனம் செய்து கொண்டு அப்படியே தேர்தலில் நிற்கலாம். குத்து மதிப்பாக சொன்னால் ரஜினிகாந்த் திடீரென தன்னை திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது போல. ட்ரம்ப் அப்படி திடீர் குபீர் ரிபப்ளிகன் ஆகி தேர்தலில் நிற்பவர்தான்.

இந்த வருடம் டெமக்ரடிக் பேனரில் 3 பேரும், ரிபப்ளிகன் பேனரில் 12 பேரும் அதிபர் ஆக விருப்பம் கொண்டார்கள். இப்படி கிளம்பும் எல்லோரையும் வடிகட்டி ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டுமே என்று முடிவுக்கு வர உதவுவது ப்ரைமரி தேர்தல் முறை. அதாவது பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் வேட்பாளர் தகுதித் தேர்தல். இது பிப்ரவரி 1 ஆரம்பித்து ஜூன் 14 வரை ஒவ்வொரு மாநிலமாக எல்லா மாநிலங்களிலும் மற்றும் அமெரிக்க ஆளுகைக்குட்பட்ட பிராந்தியங்களிலும் நடக்கும்.

மக்கள் வேட்பாளரை நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. அதாவது வேட்பாளர் பெயர், சின்னம் பார்த்து ஓட்டு குத்துவதில்லை. அதற்கு பதிலாக வேட்பாளரை ஆதரிப்பேன் என்று உறுதி அளிக்கும் வேட்பாளர் பிரதிநிதிகளுக்கு ஓட்டு போடுகிறார்கள். இவர்களுக்கு டெலிகேட்ஸ் (delegates) என்று பெயர். ப்ரைமரீஸ் எல்லாம் முடிந்த பின்பு டெலிகேட்ஸ் எல்லாம் ஒரு இடத்தில் கூடி (Convention) கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். உறுதி அளித்துவிட்டு பின்பு தனி டீலிங் போட்டுக்கொண்டு மாற்றி ஓட்டு போட்டால் என்ன செய்வார்களாம் என்பது எம்.எல்.ஏக்களை கடத்தி ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ‘கவனித்து’ ஆட்சி அமையப் பெற்ற் சரித்திர புகழ் பெற்ற நிலத்தில் இருந்து வந்த நமக்கு இயல்பாகவே எழும் சந்தேகம்தான். அப்படி மாற்றி ஓட்டலாம் என்றாலும் 99 சத்வீதம் செய்ய மாட்டார்கள்.
 
தகுதித் தேர்தல் இரண்டு வகைப்படும். ரகசிய ஓட்டு முறையில் வாக்குப்பெட்டி வைத்து தேர்தல் மாதிரியே நடப்பதற்கு பெயர் ப்ரைமரி (Primary). யாருடையதாவது வீடு, பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிப் பேசி வெளிப்படையாக தலையை எண்ணி டெலிகேட்டை தேர்ந்தெடுக்கும் முறைக்கு பெயர் காகஸ் (Caucus). ப்ரைமரி தேர்தலை நடத்துவது மாநில நிர்வாகம். காகஸ் கட்சிகளால் நடத்தப்படுவது. ஒவ்வொரு மாநிலம் ஒவ்வொரு முறையை கடைபிடிக்கும்.

ப்ரைமரிஸ் குறிப்புகள்:

(அ) ஒவ்வொரு கட்சியும் தங்கள் ப்ரைமரி தேர்தல் திறந்த தேர்தலா (open primary) அல்லது மூடிய தேர்தலா (closed primary) என்று முன்கூட்டியே அறிவித்துவிடும். மூடிய தேர்தல் எனில் அந்த கட்சியில் பதிவு செய்த வாக்காளர் (registered voter) மட்டுமே ஓட்டு போட முடியும். திறந்த தேர்தல் என்றால் கட்சியில் பதிவு செய்த, செய்யாத யாரும் ஓட்டு போடலாம்.

உதாரணமாக கலிஃபோர்னியாவில் ரிபப்ளிகன் கட்சியின் தேர்வு மூடிய தேர்தல் முறை. தன்னை ரிபப்ளிகன் என்று பதிவு செய்த கலிஃபோர்னியா வாக்காளர் மட்டுமே ரிபப்ளிகன் ப்ரைமரியில் ஓட்டு போடலாம். ஆனால் டெமக்ரடிக் கட்சியின் தேர்வு ஓப்பன் முறை. தன்னை டெமக்ரடிக் வாக்காளர், அல்லது கட்சி சார்பில்லாத வாக்காளர் (Independent) என்று பதிவு செய்த யாரும் டெமக்ரடிக் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

ஜூன் 7 நடக்க இருக்கும் ப்ரைமரிக்கு மே மாதம் வரை எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது ஆன்லைனில் ஐந்து நிமிட வேலை. கவனிக்க வேண்டிய விஷயம்: பதிவு செய்த வாக்காளர்கள் கட்டுப்பாடு ப்ரைமரி (அதாவது தகுதித்) தேர்தலுக்கு மட்டுமே. பொதுத் தேர்தலில் வாக்காளர் எவரும் எந்த கட்சி வேட்பாளருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்.

(ஆ) சில மாநிலங்களில் டெலிகேட்ஸ் எண்ணிக்கை போட்டியில் இருக்கும் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விகிதப்படி பிரித்து கொடுக்கப்படும். உதாரணமாக 90 டெலிகேட்ஸ் மூன்று வேட்பாளர்கள் எனில் மூவரும் சம அளவில் ஓட்டு பெற்றிருந்தால் மூவருக்கும் தலா 30 டெலிகேட்ஸ். மற்ற மாநிலங்களில் எந்த வேட்பாளர் மெஜாரிட்டி வாக்குகள் பெறுகிறாரோ அவருக்கு அம்மாநிலத்தின் அனைத்து டெலிகேட்களும் அப்படியே கொடுக்கப்படும். உதாரணமாக 90 டெலிகேட்ஸ் மூன்று வேட்பாளர்கள் எனில் மூவரில் யார் அதிக ஓட்டு பெற்றிருக்கிறார்களோ அவருக்கு 90 டெலிகேட்ஸும் அப்படியே.

(இ) ப்ரைமரிஸ் காலத்தில் வேட்பளர்கள் இடையே தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கும். டெமக்ரடிக் வேட்பாளர்களுக்குள் Democratic Debates . ரிபப்ளிகன் வேட்பாளர்களுக்குள் Republican Debates. முக்கிய விஷயங்களில், எதிர்கால திட்டங்களில் ஒவ்வொரு வேட்பாளருக்குமான சிந்தனை என்ன என்று கேட்பார். டிவிக்களில் நேரடி ஒளிபரப்பாகும் இந்த விவாதங்கள் Independent வாக்காளர்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும்.

(ஈ) ரிபப்ளிகன் கட்சியில் 2,472 டெலிகேட்ஸ். எந்த வேட்பாளர் ஜூலை 18 முதல் 21 வரை க்ளீவ்லாண்ட்ல் நடைபெறும் ரிபப்ளிகன் கன்வென்ஷனுக்கு போகும் போது 1,237 டெலிகேட்ஸ் வைத்திருக்கிறாரோ அவரே ரிபப்ளிகன் வேட்பாளர்.

(உ) டெமக்ராடிக் கட்சியில் 4,051 டெலிகேட்ஸ். இது தவிர சூப்பர் டெலிகேட்ஸ் என்ற பட்டம் கொண்ட, தன் சுய விருப்பத்தின்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு அளிக்கும் பவர் கொண்ட கட்சி சார்ந்த அப்பாடகர்கள் 715 பேர். ஆக மொத்தம் 4,766. எந்த வேட்பாளர் ஜூலை 25 முதல் 28 வரை ஃபிலடெல்ஃபியாவில் நடைபெறும் டெமக்ரடிக் கன்வென்ஷனுக்கு போகும் போது 2,384 டெலிகேட்ஸ் வைத்திருக்கிறாரோ அவரே டெமக்ராடிக் வேட்பாளர்.

(ஊ) மெஜாரிட்டி நம்பர் டெலிகேட்ஸ் ஒரு தனி வேட்பாளருக்கு கிடைக்கவில்லை என்றால் போட்டி கன்வென்ஷன் (contested convention) நடைபெறும். வேட்பாளரை ஆதரிப்பேன் என்று உறுதி அளித்திருந்த டெலிகேட்ஸ் ஓட்டு ஓபன் ஆக்கப்பட்டு குதிரை பேரம் நடந்து ஒரு வழியாக ஒவ்வொரு கட்சியிலும் அதிபர் பதவிக்கான வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுகப்படுவதுடன் ப்ரைமரிஸ் தேர்தல் சுபம்.

+++

ப்ரைமரீஸ் தேர்தல்கள் முடிந்தவுடன் நடக்கும் கட்சி சார்பான கன்வென்ஷன்களின் முடிவில் அந்தந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். (தற்போதைய நிலவரத்தின் படி ரிபப்ளிகன் பார்ட்டி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், டெமக்ரடிக் பார்ட்டி சார்பில் ஹில்லரி க்ளிண்டனும் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன)

அவர்கள் தங்களுடைய துணை அதிபர் வேட்பாளர் யார் என்பதை பொது தேர்தலுக்கு முன்பு தேர்வு செய்து அறிவிப்பார்கள். தேர்தல் நடக்கும்போது அதிபர் மற்றும் துணை அதிபர் என்று ஒரு பேக்கேஜாகவே வாக்கு.

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நவம்பர் மாதம் முதல் திங்களுக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய் (அதாவது 2016ல் நவம்பர் 8) அன்று பொதுத் தேர்தல் நடைபெறும்.

பொதுத்தேர்தலில் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம். எனினும் தேசம் முழுமைக்கும் என்று வாக்குகள் எண்ணப்பட்டு அதில் யார் அதிக வாக்குகள் பெற்றார்களோ அவர்கள்தான் அதிபர் என்று *** முடிவு செய்யப்படுவதில்லை ***

பதிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்குகள் கணக்கிடப்படு, அந்த மாநிலத்தில் யார் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளரோ அவர் அந்த மாநிலத்தின் வெற்றி வேட்பாளர் என்று முடிவாகும்.

அதாவது கலிஃபோர்னியா மாநிலத்தில் மட்டும் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதில் டெமக்ரடிக் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றவர் என்றால் கலிஃபோர்னியாவில் டெமக்ரடிக் வேட்பாளர் வெற்றியாளர் என்று முடிவாகும்.

அமெரிக்காவில் 50 மாநிலங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கட்சி வெற்றியாளர் என்று தேர்வு செய்தால் 50 ல் மெஜாரிட்டி 26 மாநிலத்தில் வெற்றி பெற்றவர் அதிபர் என்று வர வேண்டும். *** ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் ***

மாநிலத்துக்கு மாநிலம் மக்கள் தொகை வேறுபடுகிறது. கலிஃபோர்னியா மாநிலத்தின் மக்கள் தொகை 3 கோடியே 88 லட்சம். வயோமிங் மாநிலத்தின் மக்கள் தொகை வெறும் 5 லட்சம். கலிஃபோர்னியாவுக்கும் ஒரு மார்க், வயோமிங்கிற்கும் ஒரு மார்க் என்றால் 4 கோடி மக்கள் தொகைக்கு என்று ஒரு வெயிட் வேணாம்? போங்காட்டமால்ல இருக்கு என்று கேள்வி எழுகிறது.

ஆகவே மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்துக்கும் எலக்டர்ஸ் (Electors) நம்பர் கணக்கிடப்படுகிறது. 50 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 435 ரெப்ரசெண்டேடிவ்ஸ் என்று முன்பு பார்த்தோமே, அது மக்கள் தொகை அடிப்படையில் தான். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட்ஸ் எண்ணிக்கை ப்ளஸ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறாத எண்ணிக்கையில் 2 செனட்டர்கள். இரண்டையும் கூட்டினால் வருவது அந்த மாநிலத்தின் எலக்டோரல் வோட்ஸ் (Electoral Votes).

உதாரணம் -

கலிஃபோர்னியா மாநிலம் - மக்கள் தொகை 3.88 கோடி -
53 காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட்ஸ் + 2 செனட்டர்கள் = 55 எலக்டோரல் வோட்ஸ்

டெக்சாஸ் மாநிலம் - மக்கள் தொகை 2.69 கோடி
36 காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட்ஸ் + 2 செனட்டர்கள் = 38 எலக்டோரல் வோட்ஸ்

வெர்மாண்ட் மாநிலம் - 6.26 லட்சம்
1 காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட் + 2 செனட்டர்கள் = 3 எலக்டோரல் வோட்ஸ்

மொத்தமாக 50 மாநிலங்களுக்கும் இப்படியே கணக்கு போட்டால் வருவது 435 காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட்ஸ் + 100 செனட்டர்கள் = 535 எலக்டோரல் வோட்ஸ். கூடவே Washington D.C க்கு ஒரு மூன்றை சேர்த்தால் மொத்தம் 538 எலக்டோரல் வோட்ஸ்.

இப்போது மீண்டும் மாநில வாரியான ஓட்டை பார்த்தோம் என்றால் -
ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்குகள் கணக்கிடப்படு, அந்த மாநிலத்தில் யார் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளரோ அவருக்கு அந்த மாநிலத்தின் எலக்டோரல் வோட்ஸ் மொத்தமும் அளிக்கப்படும்.

அதாவது ,
கலிஃபோர்னியா மாநிலத்தில் டெமக்ரடிக் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால் அவருக்கு 55 எலக்டோரல் வோட்ஸ்.

டெக்சாஸில் ரிபப்ளிகன் வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுகிறார். அவருக்கு 38 எலக்டோரல் வோட்ஸ்.

இப்படியே எல்லா மாநிலங்களிலும் வெற்றி பெறும் வேட்பாளருக்கு அந்தந்த மாநிலத்தின் எலக்டோரல் வோட்ஸ் சேர்க்கப்படும்.

இறுதியில் 538 ல் மெஜாரிட்டியான 270 எலக்டோரல் வோட்டுக்களை எந்த வேட்பாளர் பெறுகிறாரோ அவரே அமெரிக்காவின் அடுத்த அதிபர்.

தேர்தல் மாலையே அடுத்த அதிபர் யார் என்று பெரும்பாலும் தெரிந்துவிடும். அவர் தேர்தல் நடந்த வருடத்துக்கு அடுத்த வருடம் ஜனவரி 20 அன்று பதவி ஏற்றுக்கொள்வார். சுபம்.

குறிப்புகள்:

1. சில சமயங்களில் பெருவாரியான மக்கள் ஒரு வேட்பாளரை விரும்பினாலும் (பாப்புலர் ஓட்டு) எலக்டோரல் வோட்டு முறையால் இன்னொரு வேட்பாளர் வெற்றி பெறுவார். சமீபத்திய உதாரணம் ஜார்ஜ் புஷ் vs அல் கோர் 2000ம் ஆண்டு. அந்த தேர்தலில் அல் கோர் பெற்ற மொத்த வாக்குகள் 50,999,897 (48.4%). புஷ் ஜூனியர் பெற்ற மொத்த வாக்குகள் 50,456,002 (47.9%) ஆனாலும் புஷ் ஜூனியர் அதிபராக தேர்வானார். காரணம் புஷ் பெற்ற எலக்டோரல் வோட்டுகள் 271 அல் கோர் 266

2. பெரும்பாலான மாநிலங்கள் காலகாலமாக ஒரு கட்சி சார்பானவை. உதாரணம் கலிஃபோர்னியா டெமக்ரடிக். டெக்சாஸ் ரிபப்ளிகன். ஆனால் ஒரு சில மாநிலங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் மதில் மேல் பூனைகள். எலக்டோரல் வோட்ஸ் அதிகமாகவுள்ள மதில் மேல் பூனை மாநிலங்களே - குறிப்பாக ஃப்ளோரிடா (29), பென்சில்வேனியா (20), ஒஹயோ (18) -அதிபர் தேர்தலில் முக்கிய யார் வெற்றி பெருகிறார்கள் என்பதில் முக்கிய பங்காற்றுபவை. 




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


என்னுடைய Nri உறவுகளிடமெல்லாம் இப்படிப்பட்டக் கட்டுரைகளை எதிர்பார்த்து ஏமாந்த எனக்கு உங்களின் இந்தக் கட்டுரை மிகப் பெரும் ஆறுதல் தருவதாயுள்ளது !எனது முகநூல் பக்கத்தில் உங்கள் வலைப் பூ முகவரியுடனும், உங்களின் அனுமதியோடும் இந்தக் கட்டுரையை ஒரு மறுபதிவிடலாமா?! இல்லைச் சாராம்சத்தை மட்டும் (உங்களைப் பற்றிய அடையாளம் தவிர்த்து உங்களின் இந்த எழுத்துக்களை மட்டும்) காப்பிப் பேஸ்ட் செய்து பதிவிட்டுக் கொள்ளலாமா ?!
 



சரி, உங்க கருத்து ??