<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தமிழன் ஏன் இலக்கியம் வாங்குவதில்லை?


நான் எனக்கு மிகவும் பரிச்சயமான எங்கள் குடும்பத்தின் - சொந்தக்கார குடும்பங்கள் உட்பட்ட - புத்தக வாசிப்பு பழக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எங்கள் வீட்டிற்கு தினசரி ஒரு தமிழ் பேப்பர், இதழ் தவறாமல் தொடர்ந்து விகடன், குமுதம், ராணிமுத்து, மாலைமதி, கோகுலம் மற்றும் பூந்தளிர். எனக்கு கொஞ்சம் அதிகமாக நினைவு தெரிந்தவுடன் தொடர்ந்து ராணி காமிக்ஸ். பாக்கெட் நாவலில் தவறாமல் பிகேபி, ராஜேஷ் குமார், சுபா, பாலகுமாரன், சுஜாதா. சில‌ மாதங்களுக்கு ஒரு முறை பழைய பேப்பர்காரனிடம் கணிசமான தொகை தேறும் அளவுக்கு வீட்டில் புத்தக வாங்கல் இருந்து கொண்டே இருக்கும். 

எங்கள் நெருங்கிய சொந்தக்காரர்களை பொறுத்த வரை, இருவர் வீட்டில் வாரம் ஒரே ஒரு புத்தகம் - விகடன் அல்லது குமுதம் எதாவது ஒன்று மட்டும் - வாங்கி வந்தார்கள். ஒருவர் வீட்டில் மாதமொரு முறை புத்தகம் ஏதோ ஒன்று வாங்குவார்கள்.  இருவர் வீட்டில் எந்த புத்தகமும் வாங்குவதில்லை. ஆக என்னை பொறுத்த வரை, எங்கள் குடும்பம், எங்கள் சொந்தக்கார குடும்பங்களோடு ஒப்பிட்டால், சராசரிக்கு மேல் புத்தகம் வாசிப்பு உள்ள‌ குடும்பம். உங்களை பொறுத்து சற்று முன்னே பின்னேவும் இருக்கலாம்.

அப்போதெல்லாம் வாராந்திர/மாதாந்திர‌ புத்தகங்களில் எதாவது ஒரு தொடர்கதையாவது மிகவும் சுவாரசியமாக, புத்தக வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் அளவு, இருக்கும். அதையெல்லாம் கிழித்து பைண்ட் செய்து பின்னர் மீண்டும் முழு புத்தகமாக படிப்போம்.

முன்னாலேயே ஒரு பின் குறிப்பு 1:  தமிழன் மீண்டும் படிக்க தூண்டும் அளவு சேமிக்க ஒர்த் ஆன இலக்கியமே வாங்குவான்.

நான் சென்னையில் ஒண்டிக்கட்டை குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கையில் மேன்ஷனில் எல்லாவிதமான புத்தகங்களும் புழக்கத்தில் இருக்கும். ஆனால் அவை புத்தக சந்தையில் விற்பனைக்கு வராத வகையிலான‌.தனி இலக்கியம்.  வேலை பார்த்தது என்னவோ ஐ.டி கம்பெனிதான் என்றாலும் உருப்படாத கன்சர்வேடிவ் சென்னையில் ஃபிகர் பார்க்க வேண்டுமென்றால் ஸ்பென்சர்ஸ் வரைக்கும் போக வேண்டும். ஆகவே வாரா வாரம் வெள்ளிக்கிழமையில் மதிய வாக்கிலேயே அலுவகலத்தில் இருந்து கிளம்பி  ஸ்பென்சர்ஸ் போவேன். அப்படியான ஒரு வெள்ளிக்கிழமையில் ஸ்பென்சர்ஸ் விட்டு வெளியே வரும்போது எதிரே காயிதே மில்லத் கல்லூரியில் புத்தக கண்காட்சி. அது பெண்கள் கல்லூரி. கல்லூரிக்கு அது விடுமுறை காலம் என்றாலும் அதற்கு முன் பெண்கள் மட்டும் கல்லூரி பார்த்ததில்லை என்பதால் அது எப்படித்தான் இருக்கும், அவர்களும் பெஞ்ச் மரம் போன்றவற்றில் ஆட்டின் அம்பு கல்வெட்டு எல்லாம் பொறிப்பார்களா என்ற ஆர்வ‌ குறுகுறுப்பில் காலேஜ் பார்க்கவென்று போனதுதான் முதல் புத்தக கண்காட்சி. அந்த காலகட்டத்தில் நான் போன அன்று மொத்த கண்காட்சிக்குமே மிஞ்சி போனால் வாசகர்கள்/பார்வையாளர்கள் என்று ஒரு 30-40 பேர் இருந்திருப்போம். அவ்வளவு பெரிய மைதானம் காத்தாடியது,

முன்னாலேயே ஒரு பின் குறிப்பு 2:  தற்போதைய ஜனவரி புத்தக கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கில் வாசகர்கள் வருகிறார்கள். பெரிய பைகளில் வாங்கி போகிறார்கள். இருந்தும் எல்லா எழுத்தாளர்களும்/பதிப்பாளர்களும் சொல்வது - புத்தகங்கள் வெறும் ஆயிரங்களில்தான் விற்கின்றன. என்னதான் நடக்கிறது?

உள்ளே சென்றவன், அவ்வளவு புத்தகங்கள் ஒரே இடத்தில் பார்க்க கிடைத்த மகிழ்ச்சியில் பல மணிநேரங்கள் பொறுமையாக செலவிட்டு ஏழெட்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்தேன். என்னவென்று இப்போது துல்லியமாக ஞாபகம் இல்லை, ஆனால் அநேகமாக புத்தக பின்னட்டையின் அறிமுகத்தால் ஈர்க்கப்பட்டு வாங்கிய பரிச்சயமில்லாதவர்கள் எழுதிய நான் ஃபிக்சன்கள் ஒரு பாதியும் மற்ற பாதி சுஜாதா போன்ற மிகவும் பரிச்சயமான பெயர்கள் எழுதிய தொகுப்பு புத்தகங்களும்தான் என்று நினைவு.

முன்னாலேயே ஒரு பின் குறிப்பு 3:  இந்த ப்ரச்னை இன்றளவும் இருக்கிறது. வாரந்திர புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ள ஒரு சராசரி வாசக‌ருக்கு அந்த வாரந்திர புத்தகங்கள் மூலம் அறிமுகமாகும் எழுத்தாளர்கள் தவிர்த்து மற்ற எழுத்தாளர்கள் பற்றியோ, புத்தகங்கள் குறித்தோ சரியான‌ அறிமுகம் கிடைப்பதில்லை

ஆர்வ மிகுதியில் வாங்கினாலும் ரூமுக்கு வந்ததும்தான் உரைத்தது புத்தகங்களில் விலை. அன்று விகடன் போன்றவை ஐந்து ரூபாய். நான் வாங்கிய புத்தகங்களின் சராசரி விலை 40-50 ரூ வரை. ஒரு புத்தகம் வாங்கும் விலையில் 10 விகடன் வாங்கலாமே என்றுதான் சராசரி மனம் கணக்கு போட்டது. இத்தனைக்கும் அப்போது நான் பேச்சு இலர் ஆவதற்கு முந்தைய காலகட்ட பேச்சிலர். குடும்ப சுமை என்று எதுவும் இல்லை. மேலும் வாங்கி வந்த புத்தகங்களை ஒரு முறை படித்த பிற்பாடு சேமிக்கும் அளவு - சிலவற்றை ஒரு முறை முழுதும் படிக்கும் அளவு கூட -  ஒர்த் என்று தோன்றாவிட்டால், அவற்றை தூக்கி போடும்போது என்னவோ காசை கரியாக்குவதாக தோன்றும். பட்டாசு வாங்கும்போதோ, பப்புக்கு போகும்போதோ கூடத்தான் காசை கரியாக்குகிறோம் என்றாலும் அதில் இருக்கும் சந்தோஷங்கள் அளவு புத்தகங்களில் கிடைக்கிறதா என்பதை சராசரி வாசக மனத்தால் நினைத்தால் புரியும்.

முன்னாலேயே ஒரு பின் குறிப்பு 4: விலை என்பது ஒரு மிக முக்கிய காரணி. சராசரியாக டேக் ஹோம் சம்பளமாக 20,000 வாங்கும் ஒரு வாசகனுக்கு 1000 ரூபாய் என்பது அவன் மாத சம்பளத்தில் 5%. ஒரே ஒரு புத்தகத்துக்கு தன் சம்பளத்தின் 5%ஐ செலவு செய்யும் அவன் அந்த புத்தகம் தரும் அனுபவ வொர்தினஸ் குறித்து யோசிப்பான். சராசரி டேக் ஹோம் 20,000ம் எத்தனை பேர் வாங்குகிறார்கள், வாசகர்களுக்கு இருக்கும் இதர குடும்ப செலவுகள் என்ன என்பது மாதிரி இன்னும் 48 காரணிகள் கொண்டு யோசிக்க வேண்டியது புத்தகத்தில் விலை.

எனக்கு இணையம் பரிச்சயமில்லாத காலகட்டங்களில் என்ன விதமான புத்தகங்கள் எப்படி வாங்கினேன்:
குமுதம், விகடன் போன்றவற்றில் செய்யப்படும் புத்தக அறிமுகங்கள் - அதிக பட்சம் 10 வரிகள் - எதாவது ஈர்த்தால் அவற்றை வாங்க முயற்சிப்பேன். சில சமயம் தொலைபேசி எண்கள் இருக்கும், தொலை பேசி அவர்கள் முகவரி வாங்கி நேரில் போய் வாங்கியிருக்கிறேன். அப்படி சென்னையின் பல பப்ளிஷர்கள் இடங்களுக்கு போயிருக்கிறேன். சில இடங்களில் புத்தக பைண்டிங் நடந்து கொண்டிருக்கும், ஈரம் காயாத புத்தகம் வாங்கியிருக்கிறேன். பக்கத்து வீடு கூட அறியாத ஒண்டு குடித்தன வீட்டின் மாடியில் துணி துவைத்துக்கொண்டிருந்த நுரையின் கையோடு 'கருப்பு பிரதிகள்' பதிப்பக தோழரிடமிருந்து ஷோபா சக்தியின் 'ம்' வாங்கினேன். இன்று எல்லா புத்தகங்களும் எல்லா வெளியீட்டாளர்களும் புத்தக சந்தையில் கடை பரப்புகிறார்கள். ஆனால் புத்தக அறிமுகம்?

ஏகப்பட்ட ப்ரச்னைகள் இருந்தாலும் புத்தக சந்தை தவிர்த்து பார்த்தால் வருடம் 11.5 மாதங்கள் சரியான புத்தகக் கடைகள் இல்லாமை ஒரு பெரிய குறை: கண்ணுக்கெட்டும் (அதிக பட்சம் 6.5 அடிக்கு மேல் புத்தகங்கள் இருந்தால் பாவம்) அதிக பட்ச உயரத்தில் துறை வாரியான பிரிவில் அடுக்கி வைக்கப்பட்டு  நல்ல வெளிச்சத்தில் வாங்கத்தூண்டும் வகையில் ப்ரசென்டேஷன் செய்யப்பட்டிருக்கும் தமிழ் புத்தக கடை தமிழகத்தில் எனக்கு தெரிந்து இல்லை. ஆறு அடி உயரம் இருக்கும் நான் கையை உயர மேலே தூக்கி எடுக்கும் அளவு உயரத்தில் புத்தகங்கள். ஒன்று எடுத்தால் நான்கு வரும் அளவு நெருக்கம். அழுது வடிந்து கொண்டு சோகையான வெளிச்சம் என்று ஒரு புத்தக கடை எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ, அப்படி இருக்கின்றன கடைகள்.

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் புதிய புத்தகங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கில் எழுத்தாளர்கள் வருகிறார்கள். ஆனால் யாரை எதற்காக‌ வாங்குவது?

விகடன் தனது பெயராலும், தனது வெளியீடுகளுக்கு தனது வார இதழ்களில் நல்ல விளம்பரம் தருவதாலும் விகடன் ஸ்டால்களில் கூட்டம் சேர்கிறது. டிவியில் பிரபலாமானால் நல்ல பரிச்சயம் மற்றும் விற்பனை கிடைக்கும். கோபிநாத் ஏகப்பட்ட பேருக்கு ஆதர்ச இண்ஸ்பிரேஷன் குரு. சிவகார்த்திகேயன் புத்தகம் வெளியிட்டால் லட்சக்கணக்கில் விற்கும். மற்றபடி வெகுஜன இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களின் பெயர்கள் - வாசகர்களை கவரும் படி எழுதினால் - வாசகர்களிடம் ப‌ரிச்சயமாகிறது.  மற்ற எல்லாரும் கூட்டத்தில் ஒருவர்தான்.  இணையத்தில் (மட்டுமே ஒரு சிறு வட்டத்தில்) பிரபலமான பெயர்களான‌ ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா யாரையும், வாரம் தவறாமல் வெகுஜன இதழ்கள் படிக்கும், தவறாமல் தொலைக்காட்சி பார்க்கும் எனது சொந்தக்காரர்கள் ஒருவருக்கும் தெரியவில்லை.

இணையம் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் தவிர்த்த ஏனையோரை போய்ச்சேரவேயில்லை. எனக்கு தெரிந்து 50 வயதுக்கு மேற்பட்ட நிறைய படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் யாரிடமும் இணையச்சேவை இல்லை. இவர்கள்தான் லைஃபில் ஓரளவு செட்டிலாகி, மாத செலவு குறைந்து, புத்தகங்கள் வாங்கக்கூடிய வசதியுள்ள டார்கெட் வாசகர்கள். ஆனால் இவர்களிடம் புத்தகங்களோ, எழுத்தாளர்களோ ஒழுங்காக அறிமுகவாவதில்லை. அதற்கு காரணம் இவர்கள்தான், இவர்களுக்கு தன்னை தேடி அடையும் ஆர்வம் இல்லை என்று கர்வம் பிடித்த இலக்கியகர்த்தாக்கள்
ஆணவப்பேச்சு பேசுவார்களே ஒழிய அவர்களை சேரும் வழியை அடைய மாட்டார்கள்.

ஒரு கதை உண்டு. ஒரு பெரிய செருப்பு நிறுவனம், இரண்டு மார்கெடிங் ஆட்க‌ளை பழங்குடியினர் வசிக்கும் ஒரு தீவுக்கு சென்று சர்வே எடுத்து வர சொன்னது. வந்தவர்களில் ஒருவன் சொன்னான், அந்த தீவில் வசிக்கும் ஒருவருக்கும் செருப்பு அணியும் பழக்கம் இல்லை. அங்கே கடை பரப்பினால் நமக்கு பிழைப்பு ஓடாது, நஷ்டம்தான் வரும், ஆகவே முயற்சி செய்ய தேவையில்லை. இரண்டாமவன் சொன்னான், அந்த தீவில் வசிக்கும் ஒருவருக்கும் செருப்பு அணியும் பழக்கம் இல்லை. நாம் மட்டும் செருப்பு அணிவதன் பயன்களை சரியான முறையில் எடுத்து சொன்னால் நாம்தான் முண்ணனி செருப்பு நிறுவனம், முழு மார்கெட்டும் நம் கையில், ஆகவே உடனே முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் புத்தக சந்தை என்பது மிகப் பெரிய பொடன்ஷியல் உள்ள மாபெரும் சந்தை. வாசகர்களை  குறை சொல்லிக்கொண்டு கண்ணை மூடி இருக்கும் முதல்வகை மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ்ஸ் கைகளில் இருந்து ஆப்பர்ச்சூனிட்டீஸை சரியாக பயன்படுத்திகொள்ள முனையும் இரண்டாம் வகைக்கு சந்தை மாறும்போது தமிழன் நிறைய‌ இலக்கியம் வாங்குவான். அதற்கு முன் இலக்கியவாதிகள் இலக்கியம் என்றால் என்ன என்பதை வரையரை செய்துகொள்ள வேண்டியது  முக்கியம்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தமிழ் இலக்கிய (?!) புத்தகங்கள் சரியாக விற்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எல்லாருமே தமிழ்நாட்டு பொதுசனங்களை திட்டுகிறார்கள். பிரச்னைக்கு வாசகர்கள் மட்டுமேதான் காரணமா?

1. புத்தக கண்காட்சி வந்த பிறகு கண்காட்சி காலத்தில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் லட்சக்கணக்கில் புத்தகங்கள் விற்கின்றன. இது ஒரு உத்தி, ரொம்ப காலமாக கண்காட்சிகள் நடந்து கொண்டு வந்தாலும், சமீபத்தில் இந்த உத்தி நன்றாக வேலை செய்கிறது. இது மாதிரி பல விதமான உத்திகளை இன்னோவேட்டிவாக யோசித்து செயல் படுத்த வேண்டிய பபாசி போன்ற அமைப்புகள் எதாவது உருப்படியாக செய்கிறார்களா?

2. புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் எல்லாரும் சேர்ந்து புத்தகத்தை வாசகர்களிடையே அறிமுகப்படுத்தி கொண்டு சேர்க்க வேறு உபாயங்கள் இருக்கிறதா என்று ஆராயலாம். ஓபரா புக் க்ளப் என்ற அமைப்பின் வழி இங்கு ஓபரா ஒரு புத்தகத்தை பற்றி அலசுவார், அந்த புத்தகம் லட்சக்கணக்கில் விற்கும். அது போன்ற ஒரு விஷயத்தை நம்மூரில் ஆரம்பித்து பிரபலங்கள் மூலம் தொலைக்காட்சியில் புத்தக அறிமுகம் செய்ய விழையலாம். எஸ்.ரா புத்தகம் பற்றி ரஜினியும், ஜெமோ புத்தகம் பற்றி கமல், இளையராஜா போன்றவர்களும் அறிமுகம் தந்து விரிவாக பேசி, நன்றாக இருக்கிறது அவசியம் வாசியுங்கள் என்று டிவியில் சொன்னால் விற்பனை கண்டிப்பாக அதிகரிக்கும். ஆனால் நண்டு கதைக்கு எடுத்துக்காட்டான தமிழ் எழுத்தாளர்கள் கலைக்காரன் காலில் விழுகிறான் என்று ஈகோ முடி பேசி மல்லாக்க படுத்து எச்சி துப்பிக்கொள்வார்கள்.

3. வெகுஜன மீடியா மூலம் புத்தகங்கள் விரிவாக மக்களுக்கு போய்க்கொண்டே இருக்க வேண்டும். 200 பக்க குமுததில் (ஏ4 ஷீட்டின் கால் பகுதி சைஸ்) ஒரே ஒரு பக்கத்தில் 4 புத்தகங்களுக்கு 2 வரி விமர்சனம் வருகிறது. டிவிக்களில் புத்தக அறிமுகம் கிஞ்சித்தும் கிடையாடு. இத்தனைக்கும் தங்கள் தொடர்பை வைத்து பத்து நிமிசம் புத்தக அறிமுகத்திற்கு ஸ்லாட் வாங்க முடியாத எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் உலகத்தில் உள்ள மற்ற எல்லா ப்ரச்னைகளையும் பற்றி எதாவது கலந்துரையாடலில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இணையத்தில் பத்து தலை ராவணன்களாக‌ வலம் வரும் எந்த எழுத்தாளரையும் மெய் நிகர் உலகத்தில் யாருக்கும் தெரியாது. புத்தக கண்காட்சியில் 5000 ரூபாய்க்கு புத்தகம் வாங்க விருப்பம் கொண்டு செல்லும் ஒருவருக்கு, அவர் படிக்கும் விருப்பத்துக்கு யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது சுத்தமாக தெரியாது. எப்படி தெரிந்து கொள்வது என்பதும் தெரியாது. பின்னர் அவருக்கு தெரிந்த வகையில் கல்கியும் சாண்டில்யனும்தான் வாங்கி செல்வார். மற்றவர்கள் கோல புத்தகமும், சமையல் புத்தகமும்.

இருட்டு கூண்டில் உட்கார்ந்து கொண்டு வாசகர்களை திட்டுவது எல்லாவற்றையும் விட சுலபமானது.
 



சரி, உங்க கருத்து ??