<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

செயின் ரியாக்சன்


இந்த வார டைம் பத்திரிக்கையில் வந்திருந்த அந்த பாக்தாத் இளம் சகோதரர்களின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது இவர்கள் படம் பத்திரிக்கையில் வருவது இதுவே கடைசி முறையாக இருக்கவேண்டுமே என்பதுதான்...

13 வயதான முகமதுவும் அவன் தம்பியான அகமதுவும் 'சம்பவம்' நடந்த பொழுது பள்ளியில் இருந்திருக்கிறார்கள். சம்பவம் என்பது, முகமதுவின் அக்காவான 15 வயது அபீர் காசிம் ஹம்சா அல்-ஜனாபியை 21 வயது க்ரீன் என்ற அமெரிக்க சிப்பாய் வன்புணர்ச்சி செய்து, யூனிட் ஆட்கள் உதவியுடன் அவளுடைய பெற்றோர், அவளுடைய 7 வயது தங்கையோடு சேர்த்து அவளையும் எரித்துக்கொன்றது... இதில் எரிக்கப்படுவதற்கு முன்பு அபீரின் தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள்... இந்த சம்பவமும் பத்தோடு பதினொன்றாக, தீவிரவாதிகள் தேடும் வேட்டையின் ஒரு பகுதியாக யார் கவனத்திற்கு வராமல் போயிருக்க வேண்டியது.. திடீரென்று 'சம்பந்தமேயில்லாமல்' க்ரீனின் யூனிட்டைக் குறி வைத்து இயங்கி தீவிரவாதிகள் அந்த யூனிட்டில் இருந்து ஒரு சிப்பாயை கொலை செய்து, மேலும் இரு சிப்பாய்களை கடத்தி தலையை வெட்டியதும்தான் அமெரிக்க ராணுவத்துக்கு முதல் சந்தேகம் வந்தது.. மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த மனவழுத்தம் போக்கும் கேம்பில் க்ரீன் யூனிட்டை சேர்ந்த இன்னொரு சிப்பாய் நடந்த சம்பவத்தை சொல்லிய பின்பே விஷயம் வெளிச்சத்து வந்தது..

ஆனால் இந்த கேம்புக்கு ஒரு மாதம் முன்பே மனநிலை சரியில்லை என்ற காரணத்தால் க்ரீன் ராணுவத்திலிருந்து 'கவுரவமான' வெளியேற்றம் அளிக்கப்பட்டு அமெரிக்கா அனுப்பட்டிருந்தான்... இப்பொது க்ரீனும் அவனோடு சேர்ந்து சம்பவம் நடத்திய மேலும் நாலு சிப்பாய்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. க்ரீனின் சொந்தக்காரர்களிடம் அவனின் குணாதிசயங்களைப் பற்றி விசாரித்து, பென்டகனில் இது சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து, க்ரீனுக்கு கண்டிப்பாக மரண தண்டனைதான் என்று கட்டியம் கூறும் பத்திரிக்கைகள் இந்த சிப்பாயின் செயலால் அனாதை ஆக்கப்பட்டிருக்கும் முகமதுவும் அகமதுவும் என்ன ஆனார்கள் என்று சொல்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை...

*

.... You know, some people just cannot live in the camps. For my brother, it was already like dying. The only thing he lives for is movies. And then some sheik came and tell him that... to die for Allah is beautiful. And if he does this thing, our parents will be taken care of, and he will live on in paradise with 100 virgins. And my brother, he need to believe it very much. So he straps sticks of dynamite to his chest... And he went to the movie .... (from the movie The Siege)

*

தற்கொலைத் தாக்குதல் என்பது புதிய விஷயமில்லை... பதினோராம் நூற்றாண்டில் இருந்து வியட்நாம் போர் வரை தற்கொலைத் தாக்குதலுக்கு சுட்டி வைத்திருக்கிறார்கள் சரித்திரவியலாளர்கள். ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு லெபனானில் சிவில் போரின் போது லெபனான் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா தொடங்கி வைத்ததையே இன்றைய 'நவீனமய' தற்கொலை தாக்குதல் உத்தியின் ஆரம்பம் என்று சொல்கிறார்கள். ஈராக்கிய, அமெரிக்க தூதரகங்கள் தற்கொலைப்படையால் தாக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு நடந்த ட்ரக் பாம் தாக்குதல்களில் 241 அமெரிக்க மரைன் வீரர்களும் 58 ப்ரெஞ்சு பாராட்ரூப்பர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடந்த நாலே மாதங்களில் அமெரிக்க படை லெபனானை விட்டு வெளியேறியது. இந்த வாபஸ் நிகழ்வு, தற்கொலைத் தாக்குதலுக்கு ஒரு அந்தஸ்தையும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு ஊக்கத்தையும் அளித்தது. சிறிதும் பெரிதுமாக லெபனானில் 50க்கும் மேற்பட்ட தற்கொலை தாக்குதல் நடந்தபின், உலகம் முழுவதும் இந்த முறையை சுவீகாரித்துக்கொண்டது. விடுதலைப்புலிகள் இந்த முறைக்கு ஒரு சீரிய செயல்வடிவம் கொடுத்து இதனையும் ஒரு போர் யுக்தியாக மாற்றியதே, உலகெங்கிலும் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இதனை ஒரு போர் முறையாக உபயோகப்படுத்த ஊக்கியாக இருந்த நிகழ்வாக பார்க்கப்படுகின்றது...

1987ல் முதல் சுமார் 150 முறை புலிகள் தற்கொலை தாக்குதல்கள் நிகழ்த்தியிருக்கின்றார்கள் என்று நம்பப்படுகிறது. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள், பாலஸ்தீன ஹமாஸ், பாலஸ்தீன PIJ, Al Aqsa Martyr Brigades, துருக்கியில் குர்தீஷ் இன PKK, செசன்ய விடுதலை இயக்கங்கள் என்று பல இயக்கங்கள் தற்கொலைத் தாக்குதலை ஒரு முக்கிய ஆயுதமாகக் கையாளுகின்றன. செப்டம்பர் 11 நிகழ்வோடு சேர்த்து இதுவரை அல்-கய்தா இயக்கததைச் சேர்ந்த 150 நபர்கள் - ஈராக்கில் மரணமடைந்த 70 தற்கொலைப் படையினர் சேர்க்காமல் - 80 தற்கொலைத் தாக்குதல்களை நடந்தியிருக்கிறார்கள். தற்கொலைப் படையினரில் 15 விழுக்காடு பெண்கள். இதிலும் பெரும்பான்மையோர் தமிழீழ புலிகள் & துருக்கிய PKK இயக்கத்தை சேர்ந்தவர்களே. இயக்கத்து ஆண்களின் வீரத்துக்கு எல்லா வகையிலும் நிகரானது தங்கள் வீரம் என்று காண்பிக்க தற்கொலைப் படை பெண்கள் இந்த பணியில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்/ படுத்தப்படுகிறார்கள். இதில் சோகம் என்னவெனில், ஹமாஸ், PIJ, செசன் தீவிரவாதிகள் போராடும் பிராந்தியத்தில் சிவில் உரிமைகளை பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு நிகரான சுதந்திரத்தை அனுபவிப்பதில்லை.

தற்கொலைத் தாக்குதல் என்பது தீவிரவாதிகளைப் பொறுத்த வரை நேரடியான போரை விட பல்வேறு விதங்களில் இலாபகரமானது... குறைந்த வீரர்களைக் கொண்டு நிறைய சேதம் ஏற்படுத்தலாம். ராணுவத்தில் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாகப் போரிட்டு கொல்வதைக் காட்டிலும் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களைக் கொல்வது சுலபமானது. எல்லையில் நடக்கும் போரை விட நாட்டுக்குள் மக்கள் மத்தியில் நடத்தப்படும் 'போர்' நிறைய சேதத்தையும் சைக்கலாஜிக்கல் முறையில் அதிக பயத்தையும் உருவாக்க வல்லது. தற்கொலை வீரர் என்பவர் ஒன்றும் சீருடை எல்லாம் அணிந்து தனித்துத் தெரிய மாட்டார். மக்களோடு மக்களாக ஒரு கூட்டத்தில் ஊடுருவியிருக்கும் தற்கொலை வீரருக்கும் மற்றவருக்கும் வித்தியாசம் கண்டுகொள்வது கடினம் என்பதால் இதனைத் தடுப்பதும் நேருக்கு நேர் போர் என்பதை விட சிக்கலாகவே இருக்கிறது.

வாழ்வையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் இழந்த, ஏழை அல்லது நிராகரிக்கப்பட்ட சமூகத்திலிருந்தே தற்கொலைப் படையினர் உருவாகிறார்கள் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது. ஆனால் மானுடவியலாளர்கள் இந்தக் கூற்றை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வு கொண்ட இரு சமூகங்களைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்ததில் உருவாகிய தீவிரவாதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்த வரை வித்தியாசம் அதிகம் இல்லை. ஆனால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது என்ற வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமூகம் அடிநிலை சமூகத்தை விட அதிக எண்ணிக்கையில் பாதிப்புள்ளாகியிருக்கிறது. உலகம் முழுவதும் முறியடிக்கப்பட்ட தற்கொலை முயற்சியில் வந்த தாக்குதல்காரர்களை விசாரித்த வரை, இதில் ஈடுபடும் அனைவரும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதும் தெரிய வந்தது.. ஒரு சிலருக்கே திருப்பி பழிவாங்க வேண்டும் என்பது ஆழமான நோக்கமாக இருந்திருக்கிறது.. மற்றவர்களைப் பொறுத்த வரை, ஊட்டப்பட்ட எண்ணங்களால் விளைந்த கற்பனை தந்த சுகம், நாட்டுக்காக அல்லது இனத்துக்காக உயிரை மாய்த்துக்கொள்வதில் உள்ள தியாகம், இறந்த பிறகாவது தனக்கும் தனது குடும்பத்தினருக்கு பெருமை சேர்ப்பது, குடும்பத்திற்கு மீதி வாழ்நாள் முழுமைக்குமான பணம், குடும்ப கௌரவம் அல்லது மானம் (ஹமாஸ் தற்கொலைப்படை பெண்மணி ஒருவர், இரண்டு குழந்தைக்குத் தாய், கள்ளக்காதல் காரணமாக கொண்ட அவச்சொல் நீங்கி அவருக்கு நல்ல பெயரும் கவுரமும் திரும்பக் கிடைக்க ஒரே வழி பல இஸ்ரேலிகளை கொன்று தானும் இறப்பதுதான் என்று இயக்கத்தால் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்) என்று பல காரணங்கள்.

ஒரு இளைஞனோ இளம்பெண்ணோ, குண்டை மடியில் கட்டிக்கொண்டு சென்று குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் எல்லாம் கலந்த கூட்டத்தில் குண்டை வெடிக்க வைத்து தன்னோடு சேர்த்து எல்லாரையும் கொல்லும் அளவு அவர்களுக்கு எப்படி ஒரு மனநிலை வாய்க்கிறது? கொண்ட கொள்கைக்காகத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டால் ஆயிரம் கன்னிப் பெண்களுடன் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தன் உயிர் வாழ்தல் மீதான ஆசையை விட ஆழமாகப் பதிவது எப்படி? மூளைச்சலவையால் இது சாத்தியம்தானா?

இது போன்ற ஒரு படையைத் தயார் செய்வதில் கைதேர்ந்த ஆள்சேர்ப்பாளர்கள், இத்தேர்வுக்கு பலிகடாகளாக ஆகக்கூடிய பலகீனமான மனநிலையில் உள்ளவர்களைக் கவனமாகத் தயார் செய்வார்கள் aka பேச்சாலேயே மயக்குவார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்கள் பலகீனத்தைப் பொறுத்து "சமூக நன்மைக்காக" இந்த தியாகத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நன்மைகளையும் நைச்சியமாகப் புகட்டுவார்கள். இந்தப் புகட்டுதல் உடல்ரீதியாக அன்றி மனரீதியாக - by persuasion and manipulation techniques - நடைபெறும். (குர்திஷ் PKK மட்டுமே இதுவரை தற்கொலைக்கு ஒத்துக்கொள்ள மறுத்த அதன் உறுப்பினர் ஒருவரை சுட்டுக் கொன்றதாகப் பதிவாகியிருக்கிறது)

உறுப்பினர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள அவர்களுக்குப் பல நோக்கங்களும், கோஷங்களும் இயக்கத்தால் கற்பிக்கப்படும். சிலசமயம் கடவுள் மற்றும் மதத்தின் பெயரால். சில சமயம் தேசத்தின் பெயரால். சில சமயம் எதேச்சதிகார நிர்வாகங்களைப் பழிவாங்கும் பெயரால்.. மதம் மற்றும் கடவுள் பெயரால் நடக்கும் போராட்டத்தில் கடவுளின் மொழியைக் கற்பிக்கும்போது இயக்கத்தினருக்கு சாதகமானவற்றை மட்டும் அல்லது இருப்பவற்றை சாதகமமாகத் தோன்றும் வண்ணம் திரித்துப் புகட்டுவார்கள். இதுபோலவே மொழி, நாடு, அதிகார வர்க்கம் என்பவை எல்லாம் தலைமையின் நோக்கத்துக்கு ஏற்ப வேறு யோசனையை சிந்திக்க முடியாத அளவு புகட்டப்படும்.

ஒரு லட்சியத்துக்காக உயிர் துறக்கும் அவர்களுக்கு அதற்குண்டான பலாபலன்கள் பற்றியும் விருப்பத்திற்கேற்றவாறு எடுத்துச்சொல்லப்படும். சில சமயம் அதன் பலாபலன்கள் இறப்புக்கு அப்புறம் - சொர்க்கத்தில் கடவுள் மற்றும் 100 பெண்கள் - கிடைக்கும். சில சமயம் இறப்புக்கு முன்பே - தலைவனின் வசீகரத்தால் கவரப்பட்டு அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய விரும்பும் ஆனால் அவனை காணக்கூட வாய்க்கப் பெறாத வீரருக்கு இறப்பதற்கு முந்தைய நாள் தலைவனுடன் விருந்து - கிடைக்கும். அப்பாவி மக்களைக் கொல்வதைக் குறித்து கொஞ்ச நஞ்ச சஞ்சலம் அதிர்ஷ்டவசமாகத் தோன்றினால், அவர்கள் செயல் போர் நேரத்தில் அந்நாட்டு போர்வீரர்களைக் கொல்வதற்கு இணையாக ஒப்பிடப்பட்டு அதற்கும் ஒரு நியாயம் கற்பிக்கப்படும். ஆனால் போர் வீரர் என்பவர் அந்நாட்டுக் கொள்கையை செயல்படுத்துவதற்காக தானே முடிவெடுத்து போர் புரிய வந்தவர். தம்மால் கொல்லப்படும் அப்பாவி பொதுமக்களில் பலர் அந்நாட்டு கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்ற ஒளிந்திருக்கும் உண்மை 'வீரருக்கு' தோன்றும் அளவு சந்தர்ப்பமே கிடைக்காது...

ஏதோ ஒரு குண்டில் சிதறடிக்கப்பட்ட நம் வாழ்க்கை நமக்கு தந்த பாதிப்பின் வலிக்குப் பதிலடியாக தாம் ஒரு குண்டை வெடிக்க, அந்த குண்டு சிதறடிக்கும் பல நூறு பேரின் வலி இன்னும் ஒரு நூறு குண்டுகளை நாடி... என்று ஒரு செயின் ரியாக்சனுக்கு அடி போடுகிறோம் என்பது அவர்கள் சிதறும் வரை அவர்களுக்கு தோன்றாமலேயே போவதுதான் விதி.

*

"... there are people out there who don't care about money and don't give a damn about respect. People who believe the killing of innocent man and woman is justified. For them it is Rage, Frustration, Hatred. They feel pain and they are determined to share it with the world...." (from the movie, The Peacemaker)

*

வேறு ஏதோ பெயர் தெரியாத ஒரு நாட்டின் ராணுவ வீரன் தன் நாட்டுக்கு வந்து தன் அக்காவின் கன்னத்தில் ஆட்காட்டி விரலால் தடவியபோது அவள் பயத்தால் உறைந்துபோய் நின்றிருந்ததைப் பார்த்ததை நெஞ்சிலேயே சுமந்திருக்கும் முகமதுவுக்கும், என்ன நடந்தது என்று புரியாமலேயே அண்ணன் கையைப் பிடித்துக்கொண்டு 'அனாதை'யாக நிற்கும் அகமதுவுக்கும், எதிர்காலத்தை, இந்தக் கட்டுரையை நாம் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணம், சொந்தமா இயக்கமா யார் தீர்மானிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே, அவர்கள் புகைப்படம் பத்திரிக்கையில் வந்தது இது கடைசி தடவையா இல்லையா என்பதும் செயின் ரியாக்சனின் அடுத்த லிங்க் இங்கே நிற்கிறதா அல்லது தொடர்கிறதா என்பதும்...


நிலா சிறப்பு ஆசிரியராக இருந்து தயாரித்த தமிழோவிய இதழுக்காக சென்ற வாரம் எழுதப்பட்ட கட்டுரை ;

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

நவீன மெக்கார்த்திகள்


img crtsy : loc.gov
We must not confuse dissent with disloyalty. We must remember always that accusation is not proof and that conviction depends upon evidence and due process of law. We will not walk in fear, one of another. We will not be driven by fear into an age of unreason, if we dig deep into our history and our doctrine, and remember that we are not descended from fearful men - not from men who feared to write, to speak, to associate and to defend causes that were, for the moment, unpopular - Edward R. Murrow

*

நாற்பதுகளின் இறுதி... கொரியாவில் போர் மோசமான நிலையை அடைந்துகொண்டிருக்க, கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக, கம்யூனிஸ (கம்யூனிஸ்டுகள்) உள்குத்தால் எங்கே தங்கள் ஜனநாயகத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று ஏற்கனவே அமெரிக்க மக்கள் அஞ்சிக்கொண்டிருந்த நேரம்... ஏற்கனவே HUAC கமிட்டி ஹாலிவுட்டில் யார் யார் இடது சாரி கருத்தியல் ஆதரவாளர்கள் என்று ஆராய்ந்து கொண்டிருந்தது...

விஸ்கான்சினை சேர்ந்த செனட்டர் மெக்கார்த்தி ஒரு சா(சோ)தா அரசியல்வாதி... 1950 ஜனவரியில், நண்பர்களுடனான ஒரு பார்ட்டியின் போது "எப்படியாவது புகழ் அடைய வேண்டும், என்ன செய்யலாம்" என்று ஆலோசனை கேட்க, கம்யூனிச எதிர்ப்பை கையில் எடுக்குமாறு நண்பர்கள் சொன்னார்கள். பிப்ரவரி மாதம் மேற்கு விர்ஜீனியாவில் நடந்த ஒரு மகளிர் சங்க கூட்டத்தில், ஒரு பேப்பரை ஆட்டி, தன் கையில் இருப்பது அமெரிக்க உள்துறையில் இருந்துகொண்டே அமெரிக்க கம்யூனிஸ்டு பார்டியிலும் உறுப்பினர்களாக இருக்கும் 57 பேரின் பெயர் பட்டியல் என்ற "திடுக்கிடும் தகவலை" வெளியிட்டார். இந்த பட்டியல் ஒன்றும் ரகசியம் இல்லை. ஏற்கனவே உள்துறை செயலாளரால் வெளியிடப்பட்டிருந்ததுதான். அதில் உள்ளவர்களில் கொஞ்சம் பேர்தான் உண்மையில் கம்யூனிஸ்டுகள்.. மற்றவர்கள் குடிகாரர்கள், ஃபாஸிஸ்டுகள் மற்றும் செக்ஸ் பித்தர்கள். மெக்கார்த்தியே குடிகாரர் மற்றும் செக்ஸ் பித்தர்தான், இருந்தாலும் முதல் அடியை அடித்தது அவராயிற்றே, கேட்க ஆளில்லை... "இப்படி இரட்டை குதிரை சவாரி செய்பவர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலத்திதையும் இந்த நாட்டின் கொள்கைகளையும் வகுக்கிறார்கள்" என்ற அவரது சவடாலான பேச்சு, மீடியாவிற்கு அவலானது.. மெக்கார்த்தி ஓவர் நைட்டில் பிரபலமானார்.

அச்சத்தில் இருந்த அமெரிக்க சமுதாயத்தில் மெக்கார்த்தியின் பாச்சா நன்றாக பலித்தது. பத்தோடு பதினொன்றாக இருந்திருக்க வேண்டிய செனட்டர் மெக்கார்த்தி chairman of the Government Committee on Operations of the Senate ஆனார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு மெக்கார்த்தியும் ஜால்ராக்களும் கம்யூனிச எதிர்ப்பு ஹிஸ்டீரியா பிடித்து அலைந்தனர். பல அரசாங்க துறைகளும் ஏராளமான தனிநபர்களும் கம்யூனிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுக்கு ஆதாரம்? அது "பாதுகாக்கப்பட்ட ரகசிய" ஆவணம். ஏகப்பட்ட பேர் வேலையிழந்தனர். நிறைய பேர் சிறையிலடைக்கப்பட்டனர். அரசியல் எதிரிகள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்ற குற்றச்சாட்டு நன்றாக வேலை செய்தது. 1952 தேர்தலில் "கம்யூனிசத்தை கடுமையாக அணுகாமல் மென்மையாக அணுகும் உருப்படாத அரசு" என்று மெக்கார்த்தியினால் குற்றம்சாட்டப்பட்ட ட்ரூமென் அரசு தோற்று ஐசன்ஹோவர் ஜனாதிபதியாக ஆனார். செனட்டில் மெக்கார்த்தியை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். யாரை எல்லாம் மெக்கார்த்தி தன்னுடைய அரசியல் எதிரிகளாக கருதுகிறாரோ அவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். யார் யார் எல்லாம் மெக்கார்த்தியின் செயலை விமர்சிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். மெக்கார்த்தியின் விசாரணை முறைகள் நாட்பட மிகவும் கேவலமான முறையில் போக ஆரம்பித்தது.

1953ல் மெக்கார்த்தி ராணுவத்தில் கம்யூனிஸ ஆதிக்கத்தை விசாரிக்க ஆரம்பித்தார்... ராணுவ செயலாளர் ராபர்ட் ஸ்டீவன்ஸிடமும் தன் வேலையை காட்ட ஆரம்பித்த பிறகுதான், ராணுவமும் ஜனாதிபதி ஐசன்ஹோவரும் கடுப்பாகினர். ஆர்மி மெக்கார்த்தியை பற்றிய "உண்மைகளை" மெக்கார்த்தி எதிர்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கு தர ஆரம்பித்தது. ஐசன்ஹோவரின் அறிவுரையின் பேரில் உபஜனாதிபதி நிக்சன் மெக்கார்த்தி நடவடிக்கைகளை "Men who have in the past done effective work exposing Communists in this country have, by reckless talk and questionable methods, made themselves the issue rather than the cause they believe in so deeply" என்று, ஆனால் மெக்கார்த்தியின் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

செனட்டர்களுக்கும் மீடியாவுக்கும் ஒருவழியாக தைரியம் வந்து மெக்கார்த்தியின் வண்டவாளங்களை எக்ஸ்போஸ் செய்து மெக்ககர்த்தி சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த போது ஏற்கனவே மெக்கார்த்தியிசம் என்ற சொல்லாடல் உலகப்பிரபலமாகியிருந்தது.

மெக்கார்த்தியிசம் என்றால், The practice of publicizing accusations of political disloyalty or subversion with insufficient regard to evidence ; The use of unfair investigatory or accusatory methods in order to suppress opposition என்கிறது ஆங்கில அகராதி

*

ஒரு ச்சின்ன ப்ரேக் :: கார்டூனில் தமிழ் மெக்கார்த்திகளுக்கு மொழிப்பாச சட்டை, இனப்பற்று டை, மரபுடைப்பு சூட் ஆகிவற்றை அணிவித்து அழகு பார்க்கும் பொதுஜனத்தை அடையாளம் தெரிகிறதா? டீ சாப்பிட சென்றிருக்கும் மற்ற பொதுஜனங்களையும் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு திராவிட பேனா இலவசம்... (பேனாவின்) வாழ்நாள் முழுமைக்கும் வர்ணாசிரம மை இலவசம்.

*

இவ்வருட ஜனவரி மாதம் வெளிவந்த ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் திருமாவளவன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் ::

சிறுத்தைகள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை இனியனின் படுகொலை பற்றி தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை; கருத்து சொல்லவில்லை. ஏனென்றால் இனியன் தலித். ஒடுக்கப்பட்டவன்! இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை..

அக்காலகட்டத்தில் குஷ்பு ப்ரச்னையின் போதும் அதற்கு முந்தைய சில சந்தர்ப்பங்களிலும் திருமாவின் பெரியாரிய கருத்து பரப்பு பிரசங்களாலும், கருத்து பிடிப்பு கொள்கைகளாலும் கவரப்பட்டிருந்த நான், திருமாவின் நெற்றியில் திருநீறு பார்த்ததும் ஆச்சரியப்பட்டு - திருமா நாத்திகர் என்று நானே தவறாக நினைத்துக்கொண்டதால் - இவர் பட்டையெல்லாம் அடிக்க மாட்டார் என்று யாரோ சொன்னாங்களே என்று பதிவிட்டேன்.. அது, தமிழ்மண பட்டை குறித்த சில விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்த, திருமா நாத்திகர் அல்ல என்ற சந்தேகம் எனக்கு வந்து நான அந்த பதிவை இட்ட மூன்று மணிநேரங்களிலே தூக்கிய, பதிவையெல்லாம் (முகமூடி) தூக்கலாமா என்ற முதலாம் பானிபட் யுத்தங்கள் ச்சை அறச்சீற்ற சத்தங்கள் கேட்க ஆரம்பித்த காலகட்டம்...

*

அந்த பதிவு தூக்கப்பட்டது குறித்த முதல் கருத்து வலைப்பதிவாளர் தருமியிடமிருந்து வந்தது :: திருமாவின் பேட்டியில் இரண்டு விஷயங்களே (இனியன் கொலை மற்றும் இன்னொரு சம்பவம்) எனக்கு அந்தக் கட்டுரையில் மனதில் நின்ற விஷயங்கள். அந்த முதல் காரியம் (aka இனியன் கொலை) பற்றிய அவரது மனக்குமுறல் நம் மனதில் கட்டாயம் தைத்தே ஆக வேண்டிய ஒரு காரியம். ஆனால் வாசித்த ஒருவருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் மனசை விடுங்கள், கண்களில்கூட படாமல் போனதுகூட ஆச்சரியமல்ல... (ஜனவரி 30, 2006)

*

தருமிக்கு விளக்கம் கொடுத்தபோது நான் சொன்னது :: அட, முகமூடிக்கு மனதில் வேண்டாம், கண்ணில் கூட ஏன் தைக்கவில்லை என்று அவராக யூகம் செய்து ஒரு கேள்வியை கேட்கிறார். முகமூடிக்கு தைத்ததா இல்லையா, ஒரு வேளை வேறு விதமாக தைத்திருக்கலாம் என்றெல்லாம் யோசிககவில்லை. முகமூடிக்கு தைத்தது வேறுவிதமாக :: இனியன் கொல்லப்பட்டதை தமிழ்நாட்டில் யாரும் கண்டிக்காததற்கு காரணம் இனியன் தலித், தாழ்த்தப்பட்டவன் என்பது திருமாவின் வாதம். இனியன் ஒரு அரசியல் கட்சியின் அங்கம். இனியன் கொலை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவா, சொந்த காரணங்களுக்காகவா, உட்கட்சி பூசலா என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது. சரி, அப்படியே தலித் என்பதால் மீடியா புறக்கணிக்கிறது என்று கொண்டாலும் கூட திருமா வேண்டிய அளவு கவனம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நடந்தினாரா? அல்லது நடத்த முயற்சித்து போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்பதையாவது பதிவு செய்தாரா? போலீஸ் அனுமதி தராதது மக்கள் விரோதம் என்று கூக்குரல் இட்டாரா? ஏதேதோ ப்ரச்னைகளையெல்லாம், தினமும் காலை மாலை இரு வேளை பத்திரிக்கைகளில் வரும் வரை ஆர்ப்பாட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தனது கட்சியின் பொறுப்பாளர், அதுவும் தலித் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீடியா கவனம் பெறும் வகையில் அதை எடுத்து செல்லாமல் வெறுமே "போதிய அளவு" கண்டிக்கவில்லை என்று ஆனந்த விகடனுக்கு ஆதங்கப்பட்டு பேட்டி கொடுப்பதோடு முடித்துக்கொள்வதா? இப்படியெல்லாம் கேட்க முகமூடிக்கு தகுதி இருக்கிறதா? கேட்டால் எடுபடுமா? (பிப்ரவரி 06, 2006)

*

இந்த வார (ஜூலை 26 இதழ்) ஜூனியர் விகடனில் பழிக்குப் பழியா? என்ற தலைப்பில் வந்த செய்தி :: திருவாரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் அமைப்பாளராக இருந்த இனியன், சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கான்ஸ்டபிள் சுப்பிரமணியன் மற்றும் சகோதரர் ஆனந்த் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்த போலீஸ், மூன்று பேரை தேடிக் கொண்டிருந்தது. (கொலை செய்யப்பட்ட) இனியன் மற்றும் (கொலை செய்த) சுப்பிரமணியன் இரண்டு தரப்பும் தலித் இனம்தான். வேறு ஒரு சாதியைச் சேர்ந்த முக்கிய புள்ளியின் தூண்டுதல் பேரிலேயே கொலை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ஜாமீனில் வந்துவிட்ட கான்ஸ்டபிள் சுப்பிரமணியன், அவருடைய சகோதரரான ஆனந்த் மற்றும் ஸ்ரீதர் ஆகிய மூவரையும் கடந்த 20ம் தேதி காலையில் நாச்சியார்கோயில் அருகே காரை மறித்து வெட்டிக் கொலை செய்திருக்கிறது மர்மக் கும்பல். ‘இனியனின் நெருங்கிய நண்பரான ஒருவர்தான் பழிக்குப்பழி வாங்கும் விதமாக மூன்று பேரையும் கொலை செய்திருக்கக் கூடும் என்ற பேச்சிருக்கிறது. ஒருவேளை, தன்னைப் பற்றி ஏதாவது வாக்குமூலம் கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில், ஏற்கெனவே சுப்பிரமணியனை தூண்டியதாக கூறப்படும் அந்த முக்கிய புள்ளிகூட, கூலிப்படையை வைத்து இந்தக் கொலைகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.

*

அமெரிக்க மெக்கார்த்திக்கு கம்யூனிசம் போல், தமிழகத்து நவீன மெக்கார்த்திகளுக்கு தமிழும் தலித்தியமும்... எங்கெங்கு சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இவ்விரண்டையும் நுழைப்பது நம் மெக்கார்த்திகளுக்கு வசதியாகவும் கைவந்த கலையாகவும் இருக்கிறது... தலித் இறப்பு என்றவுடன் "அவன் தலித் என்பதால் தமிழ்கம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை" என்று மீடியாவுக்கு பேட்டி தந்து தமிழகம் முழுவதும் பரப்புபவர் வலைப்பதிவாளர் அல்ல, அதனால் ஒரு வெங்காய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதற்கு... ஒரு முக்கிய அரசியல்வாதி. இவரும் இவர் ரசிக கண்மணிகளும் சொல்லும் - தலித்தியத்துக்கு எதிராக மேட்டுக்குடி ஊடகங்கள் இருட்டடிப்பு என்னும் வன்முறை - குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பு கொடுத்து இவர்களை போலவே ஊடகங்கள் இந்த விஷயத்தை ஊதியிருந்தால், அப்படியே சுவாரசியத்தை அதிகமாக்க யூகங்கள் அடிப்படையில், கொலை செய்தவன் என்று வேத்து சாதி ஆள் ஒருவனை லேசாக கோடு காட்டியிருந்தால் என்னவாகியிருக்கும்... ஒன்றும் ஆகியிருக்காது... ஜஸ்ட், ஊடக வன்முறைக்கு மாற்றாக ஊர் வன்முறை கோலம் பூண்டிருக்கும்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்


தில்லைக்கோயிலுக்குள் புலவர் ஆறுமுகச்சாமி என்பவர் தமிழ்ப்பதிகம் (திருவாசகம் என்கிறது தட்ஸ்தமிழ், சிவபுராணம் என்கிறது தினமணி) பாட முற்பட்டு தடுக்கப்பட்டதை எதிர்பார்த்தபடியே தமிழ் பாதுகாப்பு இயக்கங்கள் கையில் எடுத்திருக்கின்றன... சமீப அரசியல் நிகழ்வுகளால் சோர்ந்து போயிருந்த அரசியல்வாதி(களு)க்கு இது அடுத்த போராட்ட களமாக ஆகியிருக்கிறது... இந்த நேரத்தில் எல்லாரும் கருத்து கந்தசாமியாகி திருவாய் மலர சிதம்பரத்தில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிய 'தகுதி'யில் நாமும் நம் பங்குக்கு ஒண்ணு ரெண்டு கருத்து சொல்லவில்லை எனில் எப்படி?

சிதம்பரம் கோயிலில் நடராஜரும் சிவகாமியும் சிதம்பர ரகசியமும் இருக்கும் கருவறை சித்சபை எனப்படும். அதை சுற்றி இருப்பது கனகசபை. இதுவே ஆதித்தன் மற்றும் பராந்தகனால் பொற்கூரை வேயப்பட்டது. இதனை சுற்றி பிரகாரமும் அதில் சிவலிங்கங்களும் சில சன்னதிகளும் கோயில் கிணறும் இரு காண்டா மணிகளும் உண்டு. எல்லா சிவன் கோயிலிலும் நடப்பது போன்று இங்கு சைவ ஆகம விதிகளின் படி பூஜைகள் நடைபெறுவது இல்லை. பதஞ்சலி முனிவர் வகுத்த விதிகளின் படி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பொது தீஷிதர்கள் என்பவர்கள் பூஜைகளையும் கோயில் நிர்வாகத்தையும் நடத்துகிறார்கள்.

அது ஏன் தீஷிதர்கள் மட்டும் இதை நடத்த வேண்டும் என்று கேட்கும் வெள்ளைப்பூண்டுகளுக்கு என்னிடம் பதில் இல்லை.. அதற்கு சரித்திரத்தைதான் நாடவேண்டும். மாற்றம் வேண்டும் என்றால் அணுக வேண்டிய முகவரி, தமிழ் பாதுகாப்பு இயக்கம் அல்லது தமிழக அரசு அறநிலையத்துறை.

தீஷிதர்கள் பிராமண குலத்தில் சோழியர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இவர்கள் கொண்டை போடுவது வித்தியாசமாக இருக்கும். இதனாலேயே சோழியன் குடுமி பழமொழி... சோழியன் என்பது சோழ நாட்டுக்காரர்கள் என்பதை குறிக்க. பல சோழர்களுக்கு நடராஜர்தான் இதய (காவல்) தெய்வம். சிதம்பரம் கோயிலிலிருந்து தஞ்சாவூர் அரண்மனைக்கு சுரங்கம் உண்டு என்பது போன்ற கதைகள் பல கேட்டிருக்கிறேன். இங்கு பூஜை நடந்து காண்டா மணி ஒலிக்க அந்த சத்தம் சுரங்கம் வழியாக அரண்மனையில் கேட்டபின்பே ராஜராஜன் உணவருந்துவான் என்பது போன்ற சுவாரசிய சங்கதிகள் அந்த கதையில் அடக்கம்.

சிதம்பரம் மக்களுக்கு பழகிப்போய்விட்ட தீஷிதர் இன மக்களின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்... சிதம்பரம் கோயிலை சுற்றியிருக்கும் தேரோடும் அந்த நாலு வீதிகளிலேயே அவர்கள் வாழ்க்கை ஆரம்பித்து முடிந்துகொண்டிருந்தது, போன தலைமுறை வரை... சிதம்பரம் கோயிலில் ஊழியம் புரிவதை தவிர வேறெதும் செய்யாத, பழமைவாதத்தில் ஊறிப்போன தீஷிதர் இனத்தில் இருந்து முதன் முதலில் ஒரு தீஷிதர் வெளியில் வேறு வேலைக்கு போனது அதிசயமாகவும் புரட்சியாகவும் அப்போது பேசப்பட்டது...

இப்போது தீஷிதர்கள் செய்யும் அட்டூழியங்கள் ::

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு 'பிடுங்குவது' :: நிதி உதவி பெறும் வழிபாட்டு தலங்கள் தவிர்த்து பார்த்தால் உலகத்தின் எந்த வழிபாட்டு தலத்திலுமே உலக நியதியான 'பணக்காரனுக்கு கூடுதல் மரியாதை' வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது வழிபடும் வரிசை சுருங்குவது ஆகட்டும், மந்திரங்கள் ஓதும் தன்மையில் ஆகட்டும், பணம் இருந்தால் பத்தும் பக்காவாக நடக்கும்... சிதம்பரம் கோயிலுக்கு அரசு நிதி உதவி எதுவும் கிடையாது. "கடவுள தொட்டு சேவை செய்ய புண்ணியமில்லா செஞ்சிருக்கணும்" என்ற கருத்தோடு கற்பூரம் காண்பிக்கப்படுவதை கண்டு பரவசமாக நிற்கும் பக்தன் அதுதான் தீஷிதரின் 'தொழில்' என்பதையும் அதன் மூலம்தான் அவரின் குடும்பத்திற்கு சோறு என்பதையும் உணருவதில்லை. இந்த கோயிலின் நடைமுறை தெரியாத பக்தனுக்கு, மற்ற இடங்களில் சாதாரணமாக நடக்கும் அர்ச்சனை ஆராதனை போன்றவற்றுக்கு கூட இங்கே காசு எதிர்பார்க்கிறார்களே என்ற சமதர்ம எண்ணம் வருகிறது... ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமே சாமியை "பார்க்க" மட்டுமே என்று கோயிலுக்கு போனால் தீஷிதர்களால் தொந்தரவு இருக்க முடியாது என்பதே என் அனுபவம். அதை தவிர்த்து ஸ்பெஷல் கவனிப்பு வேண்டும் என்றெல்லாம் எண்ணிப்போனால் சேவைக்கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்க வேண்டியதுதான். என்ன இங்கு மார்க்கெட்டிங்கும் சேவைக்கட்டணமும் சற்று வித்தியாசமாக இருக்கும்.. சாமி பார்க்க வரும் பெரும்பாலானவர்களிடம் தீஷிதர்கள் மாதாந்திர அபிஷேக அர்ச்சனை என்று ஒன்றை ஆரம்பிப்பர்... பகதர் முன்கூட்டியே பணமும் முகவரியும் தந்தால் மாதாமாதம் அவர்கள் நட்சத்திரம் அன்று அவர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.. என்னிடம் அதுகுறித்த பேச்சு ஆரம்பிக்கப்பட்டாலே "நான் லோக்கல்" என்ற ஒரே வார்த்தையில் விஷயம் முடிவுக்கு வரும்.. ஆனால் பல பக்தர்கள் ஆம்வேகாரர்களிடம் மறுக்க கூச்சப்படுவது போலவே இவர்களிடமும் கூச்சப்பட்டு பணத்தை செலுத்திவிட்டு புலம்புவது வாடிக்கையாக நடக்கும் விஷயம். ஆனால் மாதாமாதம் ஒழுங்காக பிரசாதத்தை அனுப்பி வைப்பதில் மோசடி நடந்ததாக இதுவரை புகார் இல்லை. (எல்லா இடங்களையும் போலவே) இங்கும் பணமும் பகட்டும் காண்பிப்பவர்களுக்கு கொஞ்சம் மரியாதை அதிகமாகத்தான் கிடைக்கும் என்பதை உணர்ந்து கோயிலுக்கு போனால் எந்த ப்ரச்னையும் இல்லை...

நடராஜரை புகைப்படம் எடுப்பது :: கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 2004 தேர் வைபவத்தின் போது ஏதோ ஒரு லாட்ஜில் இருந்து தேரும் நடராஜரும் புகைப்படம் எடுக்கப்பட்டு தினமலரில் வெளிவந்தது... அன்று முழுவதும் தீஷிதர்கள் கோபமாக அலைந்தனர்... அன்று மாலை எதேச்சையாக சிதம்பரத்தில் இருந்த நான், சரி சாமியைத்தானே எடுக்கக்கூடாது, அலங்கரிக்கப்பட்ட கலைநயமிக்க தேரையும் ஆனந்தத்தில் குழுமியிருக்கும் கூட்டத்தையும் வீடியோ எடுப்போம் என்று முயல தேரின் மேலிருந்து என்னை நோக்கி கோபமாக வசவு வார்த்தைகள் வந்து விழுந்தன... பக்கத்தில் இருந்த தமிழக காவல்துறை "தம்பி வந்தானுங்கன்னா வீடியோ கேமிராவ உடைச்சி நொறுக்கிறுவானுங்க, உள்ள வச்சிடுங்க" என்றார்.. "என்ன விளையாடுறானுங்களா, கோயிலுக்குள்ள எடுக்ககூடாதுன்னு சொன்னா சரி... பொது இடத்துல இவனுங்க என்ன சட்டம் பேசறது... நீங்க என்னடான்னா போலீஸா இருந்துகிட்டு இப்படி சொல்றீங்க... என்றேன்... "இது ஸ்டேஷன் இல்ல தம்பி.. அவனுங்க இடம். தினமலர்காரன் மேல இருக்கிற கோவத்த எங்கடா காட்லாம்னு அலையிறானுங்க.. இந்த கூட்டத்துல எங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. பேசாம உள்ள வப்பீங்கலா?" என்றார். பக்கத்தில் வேடிக்கை பார்த்த பொதுஜனம் ஒருவர் மிகவும் மெதுவாக சொன்னார் :: "தயிர் சாதம் சாப்டறவனுங்களுக்கே என்ன தெனாவட்டு பாத்தீங்களா.. இருக்கட்டும் இருக்கட்டும் ஒருநா எதுலனா மாட்டாமலா போயிடுவானுங்க.. அன்னிக்கி காமிப்பம் கறிசோறு பலத்த..." அன்று "தினமலர் உபயத்தில்" தீஷிதர்களின் ஈகோவால் தேரில் இருந்த நடராஜருக்கு நடந்த பூஜைகள் வெளிச்சம் பாய்ச்சாமல் இருட்டிலேயே நடந்தன... கோயிலின் உள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற நியதியை மதிக்கும் நான் பொதுவிலும் இப்படியான சட்ட திட்டங்களை அவர்கள் பின்பற்றுவதை அநியாயம் என்று கருதி துண்டை சுற்றிக்கொண்டு ஹாண்டிகாமை மறைத்து ஒரு சில நிகழ்வுகளை வீடியோ எடுத்தேன். ஆனால் இந்த வருடம் அமெரிக்காவில் பொது இடத்தில், அதாவது வானில் நடந்த ஜூலை 4 வாணவேடிக்கையை பார்க்க டிக்கெட் வாங்கி ஸ்டேடியத்தின் உள்ளே நுழையும் போது வீடியோ எடுக்கக்கூடாது என்ற அவர்கள் சட்டத்தை மதித்து கேமிராவை உபயோகிக்காமல் நடந்துகொண்ட நான் அன்று மட்டும் அப்படி செய்ததில் உள்ள சில பூர்த்தியாகாத கட்டங்களை குறித்து யோசித்து பார்க்கிறேன்.

குழந்தை திருமணங்கள் :: என்றால் குழந்தையை வயதில் பெரியவருக்கு கல்யாணம் செய்வது என்ற அர்த்தத்தில் இல்லை... குழந்தையை குழந்தைக்கு கட்டிவைப்பது.. 'வெளி'யில் கொடுக்கம் வாங்கல் இல்லாமல் தீஷிதர் இனத்துக்குள்ளேயே திருமணங்கள் நடக்கும்... அதுவும் சின்ன வயதிலேயே.... கல்யாணம் ஆன தீஷிதர் இன ஆண்தான் சிதம்பரம் கோயிலில் பூஜை செய்ய உரிமை உள்ளவர் என்பது முக்கிய காரணம்... ஆனால் கடுமையான சட்டங்கள் தரும் பயம் காரணமாக இப்போதெல்லாம் வெளிப்படையாக திருமணங்கள் நடைபெறுவது இல்லை, என்றாலும் வேறு வருமானம் இல்லாத குடும்பங்களில் ரகசியமாக நடந்துகொண்டுதான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு... இதில் கற்பனையே செய்ய முடியாத ஒரு கொடுமையும் நடக்கும். குழந்தை திருமணம் நடந்தால் பருவமெய்தும் வரை தாய்வீட்டில் இருக்கும் அந்த சிறுமிகளின் கணவர்கள் - சிறுவர்கள் - ஏதோ காரணத்தால் இறந்துவிட்டால் பழமைவாத ஆணாதிக்கம் நிறைந்த தீஷிதர் இனத்தின் கட்டுப்பாடுக்குள் இருக்கும் அந்த கணவனை இழந்த சிறுமிகளின் உள, புற போராட்டங்கள்... இது கண்டிப்பாக சீர்திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியது...

கோயில் பராமரிப்பு :: அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயிலை எடுத்தால் சிதிலமடைந்திருக்கும் சில இடங்களும் பொலிவடைந்து கோயிலின் நிலை சிறப்பாக மாறும் என்று நம் அறிவுக்கொழுந்துகள் நம்புவது போன்ற நகைச்சுவை வேறெதும் இல்லை... அரசு பராமரிப்பில் உள்ள ஏகப்பட்ட - சிதம்பரம் கோயில் போன்று அளவில் பெரியதாக கூட இருக்க வேண்டாம் - சிறிய ஆனால் புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு மிக்க, பல அரிய ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற பொக்கிஷங்களை தன் வசத்தில் கொண்டிருக்கும் கோயில்களின் இன்றைய நிலை பற்றி யாருக்காவது தெரியுமா? சிதம்பரம் கோயில் அளவு பெரிய கோயில்களின் நிலையை அரசு பராமரிக்கும் லட்சணம் தெரியுமா? மிகச்சமீபத்தில் நான் கண்ட உதாரணம் திருவையாறு... சிதம்பரம் கோயில் போலவே அளவில் பெரிய திருவையாறு கோயிலில் சாமியே இருக்க பயப்படும் அளவு கும்மிருட்டு... அதனோடு ஒப்பிட்டால் அரசு வருமான இல்லாத இந்த கோவிலின் பராமரிப்பு எவ்வளவோ மேம்பட்டது... இந்த கோவிலுக்கு பராமரிப்பு தேவைதான், ஆனால் ஒப்பீட்டு அளவில் சிறப்பாகவே உள்ளது. ஆகவே பராமரிப்பு பற்றியெல்லாம் தற்போதைக்கு கவலைப்பட தேவையில்லை...

இப்பொழுது முக்கிய விஷயமான கோயிலுக்குள் தமிழ் மறுப்பு விவகாரத்துக்கு வருவோம்.

நடராஜர் சன்னதிக்கு எதிரே பெருமாள் சன்னதி குறுக்கிடும் இடத்தில் பூக்கட்டுபவர்களுக்கு பின்புறம் அமர்ந்து சாமான்யர்கள் பூஜை வேளை தவிர்த்த நேரங்களில் பாடல்கள் பாடுவதும், இசை வாத்தியங்கள் ஒலிப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.
ஆகவே ஜாதி காரணமாக தீஷிதர்கள் அல்லாதவர்கள் சத்தமாக பாட தடை என்பது கேள்விக்குறியது...

சிதம்பரம் கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை நான் கண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில் கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் 'டாண் டாண்' என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் 'கிலுகிலு' என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில் சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்... திடீரென அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்... அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார் என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்... பிறகு மீண்டும் மணிச்சத்தம் பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென தமிழ் பதிகங்கள்... இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்... தேவாரமோ, திருவாசகமோ, சிவபுராணமோ தெரியாது... ஆனால் தமிழ்... ஒரு தேர்ந்த ஆர்க்கெஸ்ட்ராவின் இசையில் முகிழ்ந்தால் கிடைக்கும் பரவசம் கிடைக்கும் அந்த அனுபவத்திற்காகவே நாத்திகனாக அலைந்த காலங்களிலும் இந்த பூஜைக்கு செல்வேன் (அப்படியே பெருமாள் மடப்பள்ளி புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கும்)...
ஆகவே தமிழ் பதிகங்களை பாட முற்படுவதாலேயே கோயிலுக்குள் தடையென்று வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கையில்லை...

இரவு ஒன்பது மணிவாக்கில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகைகளை பள்ளியறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும்போதும் தமிழ் பதிகங்கள் பாடக்கேட்டிருக்கிறேன். (இந்த ஊர்வலத்தின் போது இந்து மதத்தின் அனைத்து புனித பிம்பங்களும் கலந்துகொள்வார்கள் என்பது நம்பிக்கை.. அப்போது வாசிக்கப்படும் மிருதங்கம் பார்க்கவும் அதன் ஒலி கேட்க வித்தியாசமாக இருக்கும். அது தும்புருவோ நாரதரோ யாரோ உபயோகித்த மிருதங்கத்தின் மாதிரி என்று சொல்லக்கேள்வி. இந்த பூஜையை கண்டு 12 வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் தக் தக் தகும், தக் தக் தகும், தக் தக் தகும், தகும் தகும்... என்று அந்த மிருந்தங்கத்தின் ரிதம் மனதுக்குள் தங்கியிருக்கிறது)

மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர் கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு அழைத்து சென்று நடராஜ்ரை காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும் தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு அனைத்து பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்... திருவெம்பாவை தமிழ்தான்... தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்... இது சிதம்பர ரகசியம் அல்ல... வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு... தேர் தரிசன கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும் இது தெரியும்... ஆகவே கேட்டதை வைத்து விரும்பிய மாதிரி உருவகித்து நடராஜர் தமிழை மிதிக்கிறார் என்று படம் போடும் நாத்திகர்களின் நோக்கம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை...

கோவிலுக்குள் தமிழ் பதிகங்களை ஓதுவார்கள் அல்லது தீஷிதர்கள் மட்டும்தான் பாட முடியும், வெளியாட்கள் பாடமுடியாது என்று தடை போடுகிறார்கள் என்று வரும் செய்தி உண்மையெனில் அதை வன்மையாக கண்டிப்பதில் முதல் ஆளாக இருக்க விரும்புகிறேன்... ஆனால் தினமணி செய்தியோ புலவர் ஆறுமுகச்சாமி நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவபுராணம் பாட சென்றார் என்கிறது... திருச்சிற்றம்பல மேடை என்று எதை சொல்கிறார்கள் என்று புரியவில்லை... அது கனகசபை அல்லது அதை ஒட்டிய இடங்கள் எனில் ஏற்கனவே வாங்கப்பட்ட தடையுத்தரவை ஒட்டி அவரை கைது செய்ததில் எந்த தப்பும் இல்லை...

img crtsy: lotussculpture.comஇங்கே ப்ரச்னை ஆறுமுகச்சாமி தமிழை பாட விரும்பியதா, அல்லது அவர் பாட விரும்பிய இடமா?

ஆறுமுகச்சாமி சமஸ்கிருதத்தில் பாட முற்பட்டிருந்தால் அவர் மேல் நடவடிக்கை இருந்திருக்காது என்று தமிழ் போராட்டக்குழு நம்புகிறதா?


ஏற்கனவே கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்றது, சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் புலவர் என்று சொல்லப்படுகிறது... கோவில் கொடிமரம் அருகே நூற்றுக்கணக்கானவர்கள் தலைக்கு மேல் கையை உயர்த்தி கும்பிடுவது, சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவது போன்றவற்றை தினமும் பார்க்கலாம். சிவ சிவா என்பது கோவிலில் எப்போதும் கேட்கும் மந்திரம். இதை செய்ததற்காக ஆறுமுகச்சாமி மாத்திரம் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை கொஞ்சம் யோசித்தல் நலம்... பல முறை கண்டிக்கப்பட்டு, கைதும் செய்யப்பட்ட புலவர் ஆறுமுகச்சாமியின் பின்புலம் என்ன, அவரின் நோக்கம் என்ன என்பதை பற்றியெல்லாம் எந்த செய்தியும் வரவில்லை..

எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த விவகாரம் விதவிதமான வேஷங்களை அடைந்து மக்களின் படைப்பிலக்கிய கற்பனைத்திறனை வெளிக்கொணர்கிறது... புலவர் ஆறுமுகச்சாமி விரும்பியோ விரும்பாமலோ நந்தனார் ஆக்கப்படுகிறார்... வழக்கம் போலவே அரசியல்வாதியின் தமிழ்ப்பற்று அறிக்கையை கண்டவுடன் கார்த்திக்ரமாஸ் உட்பட்ட பதிவர்கள் தீஷிதர்கள் தெருப்பொறுக்கிகள், அவர்கள் தொழில் விபச்சாரம் என்று நாகரீகமான வார்த்தைகள் (செந்தமிழ்?!) கொண்டு கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்... சிவன் சொத்து அபகரிக்கப்படுகிறது என்கிறார் ராகவன்... உண்மையிலேயே சிவன் பாதத்தில் இருந்து சதங்கையில் இருந்த வைரம் சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது... அதுதான் சிவன் சொத்து அபகரித்தல்.. இந்த விவகாரம் எப்படி சிவன் சொத்து "அபகரிப்பு" என்பது அவருக்கே வெளிச்சம்... பெரியாரிஸ்டுகள் காலத்தின் கட்டாயத்தில் தமிழை மதிக்காத கோயிலில் தமிழ்ர்கள் புக மறுப்போம் என்று போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கிறார்கள். வெறும் வாயை மென்று கொண்டிருந்த வெள்ளப்பூண்டு கோஷ்டிகளும் தன் பங்குக்கு தமிழக அரசுக்கு கோயில் சுவீகாரம், பிரஹஸ்பதிகளை நாடுகடத்துதல் என்று பலவாறு யோசனைகள் சொல்லி அவல் கருத்துகள் மெல்ல ஆரம்பித்தாயிற்று.

இது உண்மையிலே "தமிழ் பாடுதல் vs தமிழ் பாடும் இடம்" ப்ரச்னையா அல்லது "தயிர் சாதம் vs கறி சோறு" ப்ரச்னையா என்பது தில்லையம்பலத்தானுக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம்




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சூடு தணிய



தமிழ் வலையுலகத்தின் சூட்டை தணிக்க லேகியம் (கோப்பிரைட் யாரோ) கிண்டுவதாகத்தான் இருந்தேன்... ஆனால் ஒரு பிரியாவிடை விருந்து இருப்பதால் ஒரு அவசர பதிவு (அவ்ளோ அவசரமா பதிவு எழுதலன்னாத்தான் என்ன?) எனக்கு தெரிந்த தமிழ் வரிகள் இப்போதைக்கு... இந்த பதிவு நாளை வரை தொடர்ந்து வித விதமாக தோன்றிய மாதிரியெல்லாம் மேம்படுத்தப்படும்.. எனக்கு நானே ஒரு நூறு பின்னூட்டம் போட்டுக்கொள்ளும் எண்ணமும் உண்டு... யாராவது இந்த பதிவுக்கு கமெண்ட் எழுதினால் நன்றி என்பதை கூட 3 பின்னூட்டமாக போடுவேன் என்று சொல்லிக்கொள்கிறேன்...

எனக்கு பிடித்த தமிழ் வரிகள் (நான் கேமிராவை நோக்கி சுட்டுவிரல் நீட்டி பேசுவதாக கற்பனை செய்து கொள்ளவும்)

Don't talk unless you can improve the silence.

Frogs have it easy. They can eat what bugs them.

Stupidity is not a handicap. Park elsewhere!

Sometimes you're the bug, and sometimes you're the windshield..

I would like to help you out. Which way did you come in?

Just because you have one doesn't mean you have to act like one!

I'm a nobody, nobody is perfect, therefore I'm perfect.

Support bacteria, it's the only culture some people have.

When it comes to thought, some people stop at nothing.

An authority: someone who knows lots of things you could care less about.

Just what part of "NO" didn't you understand...?

Never wrestle a pig. You both get dirty and the pig enjoys it.

Teamwork is essential -- it allows you to blame someone else.

To be sure of hitting the target, shoot first, and call whatever you hit the target.

I can please only one person per day. Today is not your day. Tomorrow
isn't looking good either.

The trouble with the rat-race is that even if you win you're still a rat.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சமூகநீதி


img crtsy: fiddlesticksdallas.comஇட ஒதுக்கீடு சம்பந்தமாக நடந்த ஒரு சில விவாதங்களை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது... கோடு போட்டாலே ரோடு போடும் நம் இணையத்தின் புனித *சுக்கள் ரோடே கிடைத்தால் விட்டுவைப்பார்களா? ஒரு கூட்டம் தங்கள் கருத்தோட்டங்களை எல்லாம் சமூக நீதி என்ற பெயரில் விதவிதமான நகைச்சுவை பாணியில் சொல்லியிருந்தது. ஒரு கூட்டம் சமூக நீதி வேண்டும் என்று முதலைக்கண்ணீர் விட்டுக்கொண்டே தாங்கள் பிறந்த சாதியை பற்றி பெருமை பேசிக்கொண்டும் தனக்கு பிடிக்காத சாதிக்காரர்கள் முக்குவதை பார்க்க பேரானந்தமாக இருக்கிறது என்று பொட்டிச் செய்தி வெளியிட்டிருந்தது... இத்தனை களேபரங்களுக்கு இடையில் புள்ளி விவரங்களோடு உண்மையிலேயே அலசி பதிவு போட்டது நாலே பேர்... அவர்களையும் விவாதம் நடந்த்த விடாமல் இடையில் நாட்டாமை குஞ்சுகள் புகுந்து சொந்த புத்தி சுணங்கிய நிலையிலும் ஏதாவது கூவியே ஆகவேண்டும் என்ற அரிப்பில் ஆங்கங்கே வெட்டி ஒட்டி, 'யோவ் அதான் அவரு சொல்றாருல்ல, அட இவரும் சொல்றாரு, அப்புறம் என்ன புரியாம பேசற.. நான் ஒரு நாலு நாள் கழிச்சி விவரமா பதிவு போடுறேன்' என்று ஜகா வாங்கிக்கொண்டிருந்தார்கள்... இதில் ஹைலைட்டாக ஒரு ஆறு ஏழு பாயிண்டுகளை குறிப்பிட்டு இதெல்லாம் மரபணுக்களின் வழியாகவே வருகிறது என்று செக்கூலரிஸ ஆராய்ச்சி வேறு நடந்துகொண்டிருந்தது...

ஆயிரம் நிலவு இருந்தாலும் சூரியனுக்கு ஈடாகுமா, இருக்குது ஒரு சூரியத்தனமான பாயிண்டு "இணையத்தில் விவாதம் நடத்தி ஒரு மயிறும் புடுங்க முடியாது, அப்புறம் எதுக்குடா பேசறீங்க" ஒரு வழியா ஒரே ஒரு ஆளுக்கு விஷயம் புரிஞ்சிடுச்சிங்கற வரைக்கும் கொஞ்சம் சந்தோஷம்... (உலகநீதி புரிஞ்சிட்டதால இனிமே இவர் விவாதம் பண்ணவோ, .யிர்த்தன கருத்துகள் சொல்லவோ மாட்டாரான்னு யாரும் சிறுபிள்ளைத்தனமா கேக்கக்கூடாது... அட்வைஸ் இஸ் ஃபார் அதர்ஸ்)

சரி விஷயத்துக்கு வருவோம்... இவங்கள்ல முக்கா வாசி பேர படிக்கிறப்ப ரொம்ப பெருமிதமா இருக்கு... ஆனா இவங்க எல்லாம் உண்மையிலேயே சமூக நீதி குறித்த அக்கரையோடத்தான் பேசறாங்களா... இல்ல அரசியல்வாதி கணக்கா, அட கூகிள்காரன் ஃப்ரீயா ப்ளாக் கொடுக்கிறான், அதான் சும்மா சவடால் விட்டு பாத்தேன்.. இணையத்துல சவடால் விடாம பொண்டாட்டி புள்ளங்க கிட்டயா விடமுடியும், அங்கதான் நம்ம லட்சணம் தெரியுமே'ன்னு பேசறாங்களான்னு தெரியல..

அதனால வெத்து விவாதம் பண்ணாம ஒரு விஷயத்த ஆரம்பிச்ச மாதிரியும் இருக்கும்., நம்ம சமூக நீதி காக்க போராடும் இணைய சும்பன்கள் சம்பந்தமான சந்தேகத்த நிவர்த்தி பண்ணிய மாதிர்யும் இருக்கும்னு நினைச்சி இதை கேக்கறேன்... இதை வேண்டுகோள் என்றோ உறுதிமொழி என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்... ஆனால் சமூக நீதிங்கறது எனக்கு குளிக்கும்போது பொறி தட்டி, ஆபிஸ் போறப்போ டெவலப் பண்ணி, வலைப்பதிவுல கூட்டம் சேத்து கும்மியடிச்சிட்டு மறந்து போற விஷயம் இல்ல, உண்மையிலேயே அக்கரை இருக்கும் விஷயம்னு நினைக்கிற அன்பர்கள் இதை ஏற்கட்டும்...

அதாவது ஏந்த நாட்டு கரன்சியில் சம்பாதித்தாலும் சரி, இன்றைய நிலையில் Gross salary, இந்திய மதிப்பு ரூ.15000க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் தன் வாரிசுகளுக்கு சாதிச்சான்றிதழ் வாங்க மாட்டேன், ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் அதை கிழித்துப்போடுவேன், சமூகத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் மேலே வர உதவியாக ஏற்கனவே மேலே வந்த என் குடும்பம் இனி நான் சுயநினைவு இருக்கும் வரையில் அரசாங்கத்தின் சாதிச்சான்று வாங்கவோ, அதன் பலன்களை அறுவடை செய்யவோ தடையாக இருப்பேன் என்று உறுதி கூற வேண்டும்

(15K கம்மின்னு நினைச்சீங்கன்னா வறுமைக்கோடுன்னா என்னன்னு இங்க கொஞ்சம் பாத்துகிட்டு உங்க ரேஞ்ச நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...)

இன்று இதை சொல்லும் நான் இதுவரை ஜாதி சான்றிதழ் உபயோகப்படுத்தவில்லை (அதாவது ஜாதி சான்றிதழ் கூட உதவ முடியாத அளவு பூட்ட கேஸ்) எதிர்காலத்தில் இந்தியாவில் செட்டிலானாலும், என் வாரிசுகளுக்கு எந்த சூழ்நிலையிலும் ஜாதி சான்றிதழ் வாங்கவோ, என் வாரிசுகள் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டை உபயோகப்படுத்தவோ நான் சுயநினைவுடன் இருக்கும் வரை விட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். இது சில அரசியல்வியாதிகள் விடுவது மாதிரி வெத்து சத்தியம் இல்லை... இதை மீறினால் சாட்டை எடுத்து என்னை தோலுரியுங்கள் என்று சவடால் விட மாட்டேன்.. நானெல்லாம் சோறு தின்பவன். நாளை தேவைக்கேற்றவாறு ஜல்லியடித்து சப்பைக்கட்டு கட்டுவது என்னை போன்ற உருப்படாத சாமன்யர்களுக்கு வேறு எதையோ தின்பதற்கு சமம்... அது மட்டுமின்றி Pay it forward conceptல் என்னால் முடிந்தவரை குறைந்த பட்சம் மூன்று பேராவது இந்த கொள்கையை பின்பற்ற நான் பாடுபடுவேன் என்றும் கூறிக்கொள்கிறேன்...

இந்த முடிவை எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நன்றாக யோசித்து எடுங்கள். எடுத்த பின்பு அதை எச்சூழ்நிலையிலும் கைவிட முனையாதீர்கள்... அதை வெளிப்படையாக இந்த பதிவிலோ, உங்கள் பதிவிலோ, உங்களுக்கு வசதிப்பட்ட பதிவிலோ அறிவியுங்கள்.... இது ஒரு வலியுறுத்தல் இல்லை என்றாலும் சமூக நீதிக்காக "அறைகூவல்" விடும் சில செக்கூலரிஸ்டுகள் இதை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்... அப்படி எடுக்கவில்லையென்றால் ஒன்றும் குடி முழுகிவிடாது, அதிகபட்சமாக டஸ் பார்ட்டிகள் (டபுள் ஸ்டாண்டர்டு) விடுவது வெறும் முதலைக்கண்ணீர் ஊளை என்று 103 வது தடவையாக இன்னுமொரு முறை நிரூபணமாகும், அவ்வளவுதான்...

இதை விமர்சித்து வரப்போகும் வியாக்கியானங்களின் சிறு ட்ரைலர் ::

அ) இப்படி சொல்வதன் மூலம் அமுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு நைச்சியமான யுக்தி கையாளப்படுகிறது... இனிதான் நீங்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்

ஆ) என்னதான் நான் இன்று நல்ல சம்பளம் வாங்கினாலும் எப்போதும் வாங்குவேன் என்று எப்படி சொல்லமுடியும். அதனால் கொஞ்சம் யோசித்துதான் செய்ய வேண்டும்

இ) 3859 ஆண்டு காலம் இருந்ததை இரு தலைமுறையில் அழிக்க முடியுமா? மேலும் என் ஒருவனின் முடிவு என்ன பெரிதாக சாதிக்கப்போகிறது... அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுவதுதான் இதற்கு ஒரே வழி...

ஈ) அரசாங்கம் தருகிறது.. அனுபவிப்பது எனது வாரிசின் உரிமை... அவன் தனிமனித உரிமைகளில் தலையிட முடியாது...

உ) நான் கொஞ்சம் போல் சுயநினைவு இல்லாமல் இருந்த சமயம் பார்த்து என் பையன் போய் சாதி சான்றிதழ் வாங்கி வந்துவிட்டான். சுயநினைவோடு இருந்திருந்தால் கண்டிப்பாக தடுத்திருப்பேன்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

இது நம்ம ஆறு


என்னையும் ஆறில் இழுத்து இந்த பதிவு வெளிவர காரணமாக இருந்ததற்காக SK மற்றும் இலவசகொத்தனார் இருவருக்கும் தர்ம அடி தருபவர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்... சரி இனி, இது நம்ம ஆறு

காவேரி (மாயவரம்)

சென்னையில் இருந்து பேருந்து மார்க்கம் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் "கால்டெக்ஸ் ஸ்டாப் எல்லாம் எறங்கு" என்று கேட்ட பிறகு தும்மல் வந்தால்கூட கண்ணை திறந்து கொண்டே தும்மவும்... இல்லையெனில் "பொதுப்பணித்துறை :: காவேரி ஆறு" என்ற பலகையை தவற விட்டுவிடுவீர்கள். இது என்ன மாயவரத்தின் கூவத்துக்கு கூட காவேரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள், மாயவரத்துக்காரர்களுக்கு தமிழ்ப்பற்று (?!) சாஸ்தி என்று புது விருந்தினர்கள் வியக்கலாம்.. ஆனால் இங்கு இப்படி பரிதாபமாக காட்சி தருபவள், நம் எல்லாருக்கும் தெரிந்த, வருஷா வருஷம் அரசியல் கொண்டாடப்படும் நம்ம ஹீரோயின் காவேரிதான்...

இந்த சீக்கு கோலம் இன்றய நிலைமைதான்... கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு மருதக்காரர்கள் அடிக்கும் கூத்துக்கு சற்றும் சளைக்காமல், மாயவரத்தின் சுத்துப்பட்டி பதினெட்டும் கூடி கும்மாளமடித்து பதினெட்டாம் பெருக்கு கொண்டாடிய அந்த கால காவிரியின் ரேஞ்சே வேறு.. பெரிசுகள் சொல்வது போல அதெல்லாம் ஒரு காலம்... ஒரு காலம் என்றால் என்னவோ 1800கள் அல்ல, வெறும் 15-20 வருடங்கள்தான்...

நான் சின்ன பையனாக இருக்கையில் பொ.ப.துவின் போர்டையெல்லாம் பார்த்த ஞாபகம் எல்லாம் கிடையாது. முழுப்பரீட்சை லீவுக்கு ஊருக்கு செல்லும்போது பெரும்பாலும் கால்டெக்ஸ் நிறுத்தம்தான். என்னதான் கூட்டம் இருந்தாலும் அந்த காலத்தில் தடம் எண் 12/21 ரங்கா நிற்காமல் சென்றதில்லை. பட்டணத்து கண்டக்டர்களின் சூது வாது எல்லாம் கிராமத்து கண்டக்டர்கள் கத்துக்கொள்ளாத இன்னொசண்ட் காலம். முண்டியடித்து ஏறினால் கொஞ்ச நேரத்தில் தாத்தா பாட்டி ஊர். பஸ்சை விட்டு இறங்கினால் காவேரியை தாண்டிதான் தாத்தா வீட்டுக்கு செல்ல வேண்டும்.. அதாவது நான் தாண்டிசெல்வதுதான் காவேரி என்று நினைத்திருந்தேன்.. ரொம்ப காலத்துக்கு அப்புறம்தான் அது காவேரியின் கிளை வாய்க்கால் என்று தெரிய வந்தது.

சம்மரில் தினமும் இரண்டு வாய்க்கால் தாண்டிச்சென்று காவேரியில் நீச்சலடிப்போம். ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனி சிமெண்டு படித்துறைகள் இருக்கும். இரண்டுக்கும் இடைவெளி கூப்பிடு தூரம்தான்... எதிர்த்துறையில் மண் படித்துறைகள்... பொதுவாக ஆண்கள் பெண்கள் பகுதி இடையில் எல்லைக் கண்ணியம் - ரகசிய பார்வை OK - காக்கப்படும்... பொடிசுகளுக்கு யாருடன் போகிறோம் என்பதை பொருத்து இறங்குவதற்கு மட்டும்தான் படித்துறை... இறங்கியபின்பு எல்லைக்கட்டுப்பாடோ உடைக்கட்டுப்பாடோ இல்லை... ஆண்களும் பெண்களும் அருகருகே எதிர் எதிரே குளித்தாலும், ப்ரச்னை ஏன் சில்மிஷம் கூட பார்த்த ஞாபகம் இல்லை. எல்லாம் ஒரே கிராமம், எதாவது சில்மிஷம் செய்தால் ஊரில் மொத்து உண்டு என்பதாலா, இல்லை அந்த வயதில் சில்மிஷங்களையெல்லாம் கண்டு கொள்ளும் ஞானம் இல்லாததாலா தெரியவில்லை. வீட்டில் இருந்து அழைத்து செல்லும் பெரிசுகள் துணி தோய்த்து காயவைத்து, குளித்து முடித்து காயவைத்தவற்றை எடுத்துக்கொண்டு "டேய் போதும் வாங்கடா ரொம்ப நேரமாச்சி" என்று சொல்லிக்கொண்டே நாங்கள் வருகிறோமா இல்லையா என்று கூட பார்க்காமல் போய்விட்ட பிறகும் கொஞ்ச நேரத்துக்கு தண்ணீரில் கூத்தடித்து, உள்ளங்கையும் விரல்களும் நிறைய சுருக்கங்கள் விழுந்து கலர் மாறிய பின்பு பொறுமையாக கரையேறி அந்த சுடுமணலில் வெறுங்காலோடு ஈரம் சொட்ட சொட்ட 1 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டுக்கு ஓடிப்போவோம். சமயங்களில் காவிரிக்கரையில் பரலோகம் போன ஆத்மா ஏதாவதுக்கு கருமாதி நடந்தால் சிறிது நேரம் நின்று பார்ப்போம்... அன்று இரவு நிலாச்சோறும் சுண்டக்குழம்பு (முதல் நாள் மீதிய நன்றாக சுண்டும் வரை கொதிக்க வைப்பது) சாப்பிடும்போது பேய்க்கதைகளும் போனஸாக பேய்க் கனவும் கண்டிப்பாக உண்டு... என்னதான் பாவம் என்று போதிக்கப்பட்டாலும், காவிரியில் மூச்சா போவதும் "காத்து குமிழி" விடுவதும், பின்பு சாமி சிறுவர்களை தண்டிக்காது என்று நமக்கு நாமே திட்டத்தில் சமாதானம் சொல்லிக்கொள்வதும் தினமும் நடக்கும் விஷயம்.

சமயங்களில் காவிரியில் இருந்து பெண்கள் வீட்டுக்கு தண்ணீர் கொண்டு செல்வார்கள். பெரியவர்களுக்கு குடம் என்றால் சிறுமிகளுக்கு தோண்டி.. தோண்டி என்பது 1:2 அல்லது 1:3 proportionல் அளவில் சிறிதாக்கப்பட்ட குடம். பக்கத்து வீட்டு ராணி ஏதோ ராங்கி பண்ணியதற்காக அவள் முக்கால் கி.மீ தூரம் கஷ்டப்பட்டு கடந்த பிறகு ஒரு பிடி மணலை அள்ளி அவள் தோண்டியில் போட்டதற்காக நான் வாங்கிய அடியை பார்த்த பிறகு அந்த லீவு முழுசுக்கும் "கஸின்ஸ்" என் அப்பாவிடம் ஐஸுக்கு காசு கேட்கவில்லை.

காவிரியில் தண்ணீர் இருந்தால், அல்லிக்குளத்தில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும். பாம்புகள் கண்ணுக்கு தட்டுப்படும்போது மட்டும் பயமாக இருக்கும்... மற்றபடி காவேரி பகல் கோட்டா என்றால் அல்லிக்குளம் மாலை கோட்டா... யார் அதிக நேரம் தண்ணீரில் முங்குவது என்ற போட்டியில் அதிக நேரம் முங்கியதில் நான் சாம்பியன் பட்டம் வாங்காத நாள் ஒன்று உண்டென்றால் அது யாருக்கும் தெரியாமல் நான் மூச்சு பிடிக்க உபயோகப்படுத்தும் அல்லித்தண்டு சொதப்பிய நாளாகத்தான் இருக்கும்... குளத்தின் மறுகரையில் துறை உண்டு... ஆனால் இங்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை... மாடுகளை குளிப்பாட்டும் துறைக்கு ஆணாவது பெண்ணாவது, பேதம் என்ன வேண்டிக்கிடக்கு.. அந்த குளத்தின் தண்ணீரை அதிகம் கலக்குவது எருமைகளா நாங்களா மாடு மேய்ப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்...

காலமாற்றத்தில் 'காவிரியில் தண்ணி திறக்கிறான்' என்று காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை பார்ப்பது ஒரு வருடாந்திர வைபவமாக ஆனது.. நுங்கும் நுறையுமாக எல்லா கழிசடைகளையும் அடித்துக்கொண்டு தண்ணீர் நம்மை கடந்து போகும் அன்று மட்டும் வீச்சு அதிகமாக இருக்கும் என்று குளியல் கட்.

போன வருசம் போனபோது பார்த்ததில் சிமெண்ட் படித்துறை என்ற விஷயமே சிதிலமாகி காணாமல் போயிருந்தது.. அங்கங்கே மண் தோண்டப்பட்ட பள்ளங்கள்... ஊர் விசேஷங்களுக்கு பயன்பட்ட, விசேஷம் இல்லாத நாட்களில் ஓடிப்பிடித்து விளையாட பயன்பட்ட, ஏகப்பட்ட பறவைக்கூடுகளுக்கு சரணாலயமாயிருந்து "வாழ்ந்த" அந்த ஆலமரத்தின் எச்சம் மட்டும் கொஞ்சம் போல் மிச்சம் இருந்தது... வெறும் இருபதே வருடங்களில் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக விளங்கிய காவிரி கலாச்சாரமே அந்த கிராமத்தில் இருந்து முற்றிலுமாக அழிந்து ஒழிந்து போய்விட்டது.

காவேரி (வல்லம்படுகை கொள்ளிடம்)

மாயவரத்துக்கு எப்போதும் பஸ் பயணம்தான்... பஸ் கொள்ளிட பாலத்தை கடக்கும் ஒவ்வொரு முறையும் ரயில் பாலம் பார்ப்பது மிகவும் முக்கியம்.. அறுகோணத்தை அறுத்து வரிசையாக அடுக்கி வைத்த மாதிரி இருக்கும் அந்த கார்டரில் எப்பொழுதும் ஒரு மாற்றமும் இருந்ததில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் அதை எண்ண தவறியதேயில்லை... அந்த பாலத்தை ரயிலில் போய் பார்க்க வேண்டும் என்று எப்போது கேட்டாலும் கிடைக்கும் பதில் "அடுத்த முறை ரயிலில் போகலாம்"... இந்த கேள்வியும் வாக்கியமும் மாறியதில்லை... அறிஞர் அண்ணா இறந்த போது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள ரயில் இன்ஜின் டிரைவரின் எச்சரிக்கையையும் மீறி ரயிலின் மேற்கூரையிலெல்லாம் உட்கார்ந்து மக்கள் பயணம் செய்ய, கூறை மீது வந்தவர்கள் பாலம் அடித்து பரலோகம் போனார்கள் என்று கேள்விப்பட்டது கட்டுக்கதையா இல்லையா என்று சரியாக தெரியவில்லை...

மீசை முளைத்த பின்பு காசு கிடைக்கும்போதெல்லாம் ஓசி பைக்கில் கொள்ளிடத்துக்கு சாப்பிட போவோம். கொள்ளிடத்தில் ஒரு ஓலைக்குடிசையில் மலிவு விலையில் வீட்டு சாப்பாடு... பிரஷ்ஷாக பொறித்த மீன்தான் ஸ்பெஷாலிட்டி என்றாலும் எல்லா கறி வகைகளும் கிடைக்கும். கடைசியில் தயிரை வெட்டி எடுத்து கொடுப்பார்கள்... போகும்போது வண்டி ஓட்டுவதற்கு இருக்கும் போட்டி உண்ட மதமதப்பில் வரும்போது இருக்காது... இத்தனைக்கும் கொள்ளிடக்கரை வரைதான் ரிடர்ன் ஜார்னி... கொள்ளிடக்கரையில் வண்டியை சாய்த்துவிட்டு, மணலில் கட்டையை சாய்த்தால் சாயங்காலம் வரை தூக்கம்... பின்பு ஒரு குளியல் போடுவிட்டு பொழுது சாய வீடு... சில சமயம் வல்லம்படுகையில் கள் குடிக்க ஒரு கும்பல் போகும்... ஆனால் நான் போனதில்லை (இதிலெல்லாம் சந்தேகப்படக்கூடாது... சொன்னா நம்பணும்) கள் குடித்த கும்பல் வந்து முதலை பார்த்தோம், அதில் ஒரு முதலை நம்ம இவனை இழுக்க பார்த்தது, எட்டி உதைத்து தப்பினான் என்று கட்டிய கதைகள் ரொம்ப பிரபலம்... அந்த முதலைகளை இவர்கள் கள் குடிக்கும் முன்பு பார்த்தார்களா கள் அடித்த அப்புறமா என்று யாருமே கேட்கவில்லை...

அகண்ட கொள்ளிடத்தில் முழுக்க தண்ணீர் சென்று நான் பார்த்ததே இல்லை... போன முறை ஊருக்கு போனபோது கொள்ளிடம் அகலத்தில் மட்டும் இல்லாமல், உயரத்திலும் நிரம்பி எந்தளவு ஊருக்குள் தண்ணி வந்தது, எங்கெங்கே வண்டியை நிப்பாட்டி இருந்தார்கள், எவ்வளவு நாளுக்கு பிறகு எப்படி வந்து ஊர் வந்து சேர்ந்தார்கள் என்றெல்லாம் வண்டி ஓட்டுனர் விவரித்ததை கேட்டபோது நம்பவே முடியவில்லை...

காவேரி (ஒகேனக்கல்)

முதன்முதலில் பார்த்த அருவி ஒகேனக்கல்... கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நுழையும் இடம் ஒகேனக்கல். ஹோ வென்ற சத்தத்துடன் விழும் தண்ணீரின் வேகத்தில் அந்த இடம் புகை மாதிரி காட்சியளிப்பதால் அது ஒகேனக்கல் - கன்னடத்தில் ஹொகே என்றால் புகை - என்று சொன்னார்கள்... காலுக்கு கீழே ஓடும் இந்த தண்ணீர்தான் நெடும் பயணத்துக்கு பின்பு நம்மூரையும் தொட்டுக்கொண்டு பூம்புகார் வரைக்கும் பயணிக்கிறதா என்று கற்பனையிலேயே சிலிர்த்துக்கொண்டு அருவிக்கு நடக்கும்போது மாலீஷ் பண்ணிக்கொள்கிறவர்களை பார்க்கலாம்... எண்ணெய் மசாஜுக்குத்தான் மாலீஷ் என்று பெயர்... உடம்பெல்லாம் எண்ணெயை தடவி நன்றாக நீவி விடுவார்கள்... பின்பு முதுகில் கொத்து பரோட்டா.. கடைசியில் நம் கழுத்து கை கால் என்று பார்ட் பார்ட்டாக திருப்பும்போது கடக் முடக் என்று நன்றாகவே சத்தம் கேட்கும்... காசு கொடுத்து காண்டு வாங்குவது என்பது இதுதான்... பார்க்க பயமாக இருந்தாலும் சுகமாகவே இருக்கும்... ஆனால் இப்பொழுது செய்து கொள்ளும் தைரியம் இல்லை... காசு கொடுத்து உட்கார்ந்த பின்பு இவர்களெல்லாம் certified massage therapistஆ என்ற சந்தேகம் வரக்கூடாது... வந்தாலும் கேட்காதீர்கள், ஒகேனக்கலில் இருந்து புத்தூருக்கு இன்னமும் பஸ் விடவில்லை... மாலீஷ் முடிந்த பின்பு அப்படியே போய் அருவியில் கொஞ்ச நேரம் நின்றால் சோப், சீயக்காய் என்று எதுவுமே தேவைப்படாமல் எண்ணெய் இருந்த இடம் தெரியாமல் போகும்... குளித்து முடித்து தலை துவட்டிக்கொண்டு அருவியில் எதிர்நீச்சல் போட்டு ஏறும் மீனை பிடிக்கும் இளைஞனை வேடிக்கை பார்த்துக்கொண்டே படியேறினால் பிடிக்கப்பட்ட அந்த மீன் மிளகாய் தூள் தடவி தயாராக இருக்கும்... ஒரு வார்த்தை - மீன் பொறிக்கப்படும்...

காவிரியில் பரிசல் பயணம் முக்கியம்... எம்.ஜி.ஆரின் டம்மி மலை மேலிருந்து ஆற்றில் விழுந்த இடம், ரஜினி தலை காட்டிய ஆங்கிலப்படம் - go for gold -> bloodstone - எடுக்கப்பட்ட காட்சிகள் என்று காட்டிக்கொண்டே அப்படியே ஒரு சுழலில் விட்டு காண்பிப்பார்கள்... பூலோக சொர்க்கத்தை ஒரு கணம் கண்டு மீண்டு வரலாம்... ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்த ஒகேனக்கல், யார் வந்தாலும் சென்று சென்று ஒரு கட்டத்தில் கூட்டமக பைக் எடுத்துக்கொண்டு சென்று அருவியில் குளிக்கக்கூட செய்யாமல் வெறும் மீன் மட்டும் வாங்கிக்கொண்டு ஆற்றை தாண்டி அந்த பக்கம் மணலில் உட்கார்ந்து பீர் அடித்து திரும்பும் அளவுக்கு போர் அடித்துவிட்டது...

பியாஸ் ஆறு

குலு மணாலி சென்று கொண்டிருந்த போது ஏதோ ஒரு கணத்தில் திடீரென தென்பட்ட அந்த ஆறு ரொம்ப தூரத்துக்கு எங்கள் வண்டி கூடவே வந்து கொண்டிருந்தது... (இல்லை எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தது?) வெள்ளை வெளேரென்று நுரை ததும்ப ஓடிக்கொண்டிருந்த அந்த தண்ணீரை 50-100 அடி உயரத்தில் இருந்த சாலையில் பயணித்த வேனின் கண்ணாடி வழியாக பல கி.மீருக்கு அமைதியாக சலிக்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தேன்... பக்கத்தில் அந்த வட இந்திய பம்ளிமாஸ் வந்து உட்கார்ந்ததை கூட கவனிக்கவில்லை... "ரொம்ப அழகா இருக்கில்ல" என்று கேட்டு அவளும் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு துறுதுறுவென ஆர்வமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததும் ஆற்றின் அழகே கூடிய மாதிரி இருந்தது... இப்போது ஆற்றை மட்டும் ரசிக்க தோன்றவில்லை... வேனை விட்டு இறங்கியவுடன், எப்படியாவது அந்த தண்ணீரில் ஒரு குளியல் போடலாம் என்று வந்த எண்ணம் ஐஸை உருக்கி செய்த மாதிரி இருந்த அந்த தண்ணீரை தொட்டவுடன் போயே போச்... அன்று இரவு நடந்த கேம்ப் ஃபயரில் பம்ளிமாஸின் நளினமான ஆட்டத்தில் ஜோடி சேர்ந்து ஆட எதேச்சையாக கிடைத்த வாய்ப்பும் கூச்சம் (!?) காரணமாக நிறைவேறவில்லை என்றாலும் அந்த பயணம் பசுமையாக நினைவில் நிற்க அந்த இயற்கையும் ஆறும் மட்டும் காரணம் இல்லை என்பதுபோல் சில சமயம் தோன்றும்...

நயாகரா ஆறு

தர்மபுரியில் வாழ்ந்தபோது யார் வந்தாலும் செல்வது ஒகேனக்கல் என்றால் ohioவில் வாழ்ந்த போது யாரும் வந்தால் சுத்தி பார்க்க போவது நயாகரா... அமெரிக்க அருவி, குதிரை லாய அருவி இரண்டையும் அருகில் சென்று பார்க்கும் maid of the mistல் போனாலும் நயாகரா தண்ணீரை அனுபவிக்கலாம் என்றாலும், விளிம்பில் இருந்து நொடிக்கு 168,000 கன அடி விழும் தண்ணீரை முழுமையாக அனுபவிக்க சிறந்த வழி அருவிக்கு சிறிது தூரத்தில் class 6 rapidsல் நொடிக்கு 212,000 கன அடி தண்ணீரை கையாளும் நயாகரா ஆற்று நீரோட்டத்தை எதிர்த்து 1500 குதிரை சக்தி ஜெட் போட்டில் பயணிப்பது... போட் கம்பெனி தரும் உடைகள் நனையாமல் இருக்க அல்ல... ஆக்ரோஷமான அந்த தண்ணீரின் வேகத்தில் முழுக்க நனைத்தபின்பு தண்ணீரின் ஜில்லிப்பில் விரைக்காமல் கதகதப்பாக இருக்க....

அமேசான் ஆறு

பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையோரம் கொஞ்ச நாட்கள் இயற்கை வாழ்வு வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு திரும்பி சில நாட்கள்தான் ஆகிறது... ஆற்றங்கரையோரம் காலையில் காட்டில் "அவுட்டிங்" (நமக்கு சின்ன வயசுலயே பழக்கமான விசயம்தான்), piranhaவுக்கு பசியெடுக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டே ஆற்றுக்குளியல், செயற்கை சமாச்சாரங்கள் கலக்காத உணவு வகை, பிரன்ஹா பிடித்தது - நாம் பிரன்ஹா பிடிக்கலாம், அதுதான் நம்மை பிடிக்கக்கூடாது - என்று இன்னமும் கனவு மாதிரி தோன்றும் அந்த நிகழ்வை எழுத ஆரம்பித்தால் இது ஒரு மெகா தொடர் ஆகும் சாத்தியம் இருப்பதால் நம் ஆறு அனுபவங்களுக்கு ஒரு ச்சின்ன ப்ரேக்...

அறிவுப்பசி அண்ணாசாமி :: ஆறு / நதி இரண்டுக்கும் என்னங்கண்ணா வித்தியாசம் ?

பின்குறிப்பு :: கூவம் உட்பட பல ஆறுகளை மேம்போக்காக 'அனுபவித்து' இருக்கிறேன் என்றாலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆறுகளின் தண்ணீரை மட்டுமே உள்ளும் புறமும் முழுமையாக அனுபவித்திருக்கிறேன் என்பதால் இதர ஆறுகளை டீலில் விடுகிறேன். ஆமாம், ஆறு என்ற தலைப்புக்கேற்ப சரியாத்தானே எழுதியிருக்கிறேன், ஏன் எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறீர்கள்?



š இப்பதிவை மின்னஞ்சலிட