டாவின்சி கோட் - புதிரா புனிதமா?

உள்நாட்டு பயணம் ஒன்றின் போது வழித்துணைக்கு இருக்கட்டுமே என்று டாவின்சி கோட் நாவல் வாங்கினேன். அப்போது அது சூடான அடுமனை (hot cake) பொருள். ஆனால் in-flight சஞ்சிகையில் சில சுவாரசியமான விஷயங்கள் இருந்ததால் சரி பொறுமையா படிப்போமே என்று டாவின்சி பெட்டிக்குள் அனுப்பப்பட்டார். (இப்போது இன்-ஃப்ளைட் சஞ்சிகைகளை வீட்டுக்கு எடுத்து வரும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்) ஊருக்கு வந்த பிறகு ஒரு அத்தியாயம் படித்ததோடு சரி.. அப்புறம் படம் குறித்த அறிவிப்புகள் பார்த்தவுடன், சரி படம் பார்த்துவிட்டு படிக்கலாம் என்று டாவின்சி பரணுக்கு அனுப்பப்பட்டார். அது நல்லதுக்கு என்றே இப்போது தோன்றுகிறது. ஏனெனில் படம் பார்த்த பெரும்பான்மையினர் கருத்து :: புத்தகம் அளவு படம் நன்றாக இல்லை. அது பொதுவாக எல்லா படங்களுக்கும் வரும் விமர்சனம்தான். கதாபாத்திரங்கள், சூழ்நிலை எல்லாம் ஒரு மாதிரி கற்பனையில் இருக்க படத்தில் எதிர்விதமாக இருந்தால் இது போன்றுதான் விமர்சனம் வரும். ஆனால் புத்தகத்திற்கும் படத்திற்கும் குறைந்தது ஆறு வித்தியாசங்கள் உண்டு என்கின்றனர் மக்கள்.
பொதுவாக படம் வந்தால் பலதரப்பட்ட விமர்சனங்களையும் படித்துவிட்டு ஒரு குன்ஸான ஐடியா கிடைத்தவுடன் படம் பார்க்க செல்வது வழக்கம். ஆனால் போகலாம் (அ) போக வேண்டாம் என்ற அறிவுரைகளை பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.. தமிழில் நிறைய படங்களை சூப்பர் என்று சொல்லப்பட்டு போய் மண்டை காய்ந்து வந்த அனுபவமும், பிளேடு என்று சொல்லப்பட்டு போகாமல் மிஸ் பண்ணிய அனுபவங்களும் நிறைய உண்டு என்பதால். இந்த படத்துக்கு எந்த விமர்சனமும் படிக்கும் முன்பே போகலாம் என்று தீர்மானம் போட்டாயிற்று.
வழக்கம் போலவே படத்துக்கு அரை மணி நேரம் முன்பு போனால், அடுத்த காட்சியும் அதற்கு அடுத்த காட்சியும் அரங்கு நிறைந்துவிட்டது என்று போர்டு தொங்குகிறது. சரி என்று அதற்குக்கும் அடுத்த காட்சிக்கு டிக்கட் வாங்கியாயிற்று (ஒரு நாளைக்கு 14 காட்சிகள். ஒரே வளாகத்தில் உள்ள வெவ்வேறு அரங்குகளில் மாற்றி மாற்றி ஓடும் என்பதால் ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் 45 நிமிடங்கள்தான் வித்தியாசம்) 90 நிமிடங்கள் mall சுற்றி வரலாம் என்று (பர்ஸுக்கு இப்படி வேற தொந்தரவா) நினைத்தால் நீங்க டாவின்சி கோட் என்றால் இப்போதே வரிசையில் நில்லுங்கள் என்று அறிவுருத்தல். முதன் முறையாக புதரகத்தில் வரிசையில் நின்று படம் பார்த்தது இப்படம்தான் என்ற வகையில் இனி இது நீண்ட நாள் நினைவில் இருக்கும். எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம் என்ற அளவுக்கெல்லாம் இல்லையென்றாலும் அரங்கு நிறைந்த காட்சிதான்.
லூவர் அருங்காட்சியகத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்யப்பட்டவர் மியூசியத்தின் பொறுப்பாளர் (க்யூரேட்டருக்கு குணப்படுத்துவர்னு தமிழாக்கினா சரிப்படுமா?). அவர் இறக்கும் அத்தருணத்திலும் பல குறியீடுகளையும் சங்கேத குறிப்புகளையும் ஒரு பெயரையும் எழுதிவிட்டு இறக்கிறார். அது குறியீடுவியளாலர் (symbologist) ராபர்ட் லாங்டனின் பெயர்... சந்தேகத்தின் பெயரிலும் அவர் கொலையுண்டவர் எழுதிய குறியீடுகளை உடைக்க உதவலாம் என்ற காரணத்தாலும் ராபர்ட் மியூசியத்திற்கு வரவழைக்கப்படுகிறார். அவர் தடயவியலாளர் சோஃபியுடன் சேர்ந்து லியனார்டோ-டாவின்சியின் கலைப்படைப்புகளில் பதியப்பட்டுள்ள ரகசிய குறியீடுகளை கட்டுடைக்க கட்டுடைக்க மிகப்பெரும் ரகசியங்கள் சில அவர்களுக்கு தெரிய வருகிறது. இந்த ரகசியங்கள் வெளிப்பட்டால் 2000 ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் மதம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்த நம்பிக்கைகள் தகர்க்கப்படும். அந்த ரகசியங்கள் என்னென்ன, அதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதை... வில்லன்களின் குறிக்கீடுகளையும் மீறி ரகசியங்கள் கட்டுடைக்கப்பட்டனவா; தானாக சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் உருவாக்கியாவது உதடு கடிக்கும் ஹாலிவுட்டில் சந்தர்ப்பம் வாய்த்தும் ஹீரோ ஏன் ஹீரோயின் நெற்றியில் ஒரே ஒரு மென்மையான முத்தத்துடன் முடித்துக்கொள்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை வெள்ளித்திரையில் காண்க (அப்பாடா.. இப்பத்தான் நாலணா சினிமா பாட்டு புஸ்தகத்தின் முன் உள் அட்டை கதை சுருக்கத்திற்கு பக்கத்திலாவது வருது...)ராபர்ட் கதாபாத்திரமாக டாம் ஹாங்க்ஸ்.. என்னமோ மிஸ்ஸிங். ஆரம்பத்திலாவது பரவாயில்லை, பிற்பகுதியில் பெரும்பான்மை நேரம் கதாபாத்திரத்துடன் ஒட்டவேயில்லை போல் எனக்கு தோன்றியது.. நாயகி (என்று சொல்லலாமா) சோஃபி பாத்திர தேர்வு பரவாயில்லை. என் அபிமான நடிகர் லியான் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தில் மறக்க முடியாத பாத்திரம் சிலாஸ்.. கொடூரம், அதீத நம்பிக்கை, நன்றியுணர்ச்சி என்ற அவரின் கண்கள் மறக்க முடியாதவை. * spoilers start * சிலாஸ் ராபர்ட் மீது பாயும்போது அரங்கத்தில் இருக்கும் 70 சதவீதம் மக்கள் சத்தமாகவே gaspகிறார்கள். ஒருவேளை அரங்கம் மயான அமைதியாக இருந்ததால் சத்தம் கொஞ்சம் மிகையாகவே கேட்டதோ என்னவோ * spoilers end * தெளிவான வசனம். தி ப்யூட்டிஃபுல் மைன்ட் படத்துக்கு ஆஸ்கர் வாங்கிய அகிவா கோல்ட்ஸ்மானின் சீரான திரைக்கதை.. உண்மையான லூவரா அல்லது செட்டிங் போட்டு எடுத்தாங்களா, கரணம் தப்பினால் காணாமல் போகும் என்ற அளவில் புதிரை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன போன்ற விஷயங்களுக்கு எல்லாம் இனிமேல்தான் கூகிளாண்டவரை நாட வேண்டும். படத்தில் ஒரு முக்கிய சஸ்பென்ஸ் நான் சீக்கிரமே யூகித்து விட்டாலும் (என்னால்) யூகிக்க முடியாத இன்னொரு சஸ்பென்ஸ் கடைசி நிமிடத்தில் வெளியிட்டு அப்படியே படத்தை முடித்ததால் தியேட்டரை விட்டு வெளியேறும்போது கொடுத்த காசுக்கு படம் திருப்தியாக இருந்ததான ஒரு உணர்வு... ( போன வாரம் போன MI III படம் க்ளைமேக்ஸ் சொதப்பல் என்பதால் "ரெண்டாவது தடவையின்னா என்ன, சும்மா கூட வந்து உக்காரக்கூட முடியாதா" என்ற நண்பர்களின் வேண்டுகோளை கூட புறக்கணிக்கும் அளவு )
படம் முடிந்து வெளியே வந்ததும் தோன்றிய நினைப்பு, இதற்கு முன்னர் இதே லைன்ல ஒரு தமிழ்ப்படம் பார்த்திருக்கிறோமே... அது என்ன படம்? "ஹே ராம்" சரித்திரத்தை ஒட்டியே எழுதப்பட்ட கற்பனைக்கதைதான்.. ஆனால் ஹேராம் கூட இல்லை, என்னவோ இன்னொரு படம். சரித்திரத்தின் கூடவே கொஞ்சம் கற்பனை கலந்து சிலதை வெறுமே விட்டு அந்த இடங்களை வாசகர்களை விட்டு நிரப்பி கலக்கிய படம்.. என்னவோ என்னவோ என்றே இருக்கிறது.. இதுவரை நினைவுக்கு வரவேயில்லை.
படம் முடிந்தவுடன் மொத்த அரங்கமும் ஒரு நிமிடமும் கைதட்டியது. (இதற்கு முன் தியேட்டரில் நான் கைதட்டலை கண்டது ஃபாரன்ஹீட் நைன்/இலவன் படத்திற்கு) பாகனிசம், ஓபஸ் dei என்று தமிழ் வலைப்பதிவுலக சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு தீனி போடும் விஷயங்கள் அதிகம். மிகவும் முக்கியமான விஷயம் இப்படத்தை disclaimer - அதாவது இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே - உடன் பார்க்க சொல்கிறார்கள். உங்களால் முடியுமா?
தமிழ்ப்பதிவுகள்
நான் கண்ட நாய்கள்

நான் கண்ட நாய்கள் பலவிதம்.
நேற்றுப் பிறந்த
குறிதெரியாத "இள"ம்நாய்களிலிருந்து..
விரைவீங்கித் தொங்கும்
வாலிப வயோதிக நாய்கள் வரை..
நான் கண்ட நாய்கள் பலவிதம்.
சில நாய்கள்
கொள்கைக்காகக் கத்துவதாய்
சொல்லிக் கொள்கின்றன.
கொள்கை குறித்தி விசாரிக்கப் போனால்
கத்துவதை விடுத்து கடியையே பதிலாக தருகின்றன...
அந்நாய்களின் கொள்கைகளைக்
அவைகளே தீர்மானிப்பதில்லை என்பதைக்கூட
அறியாமலேயே வாழும் நாய்ப்பாடு பெரும்பாடு...
தனக்குக் கொள்கையில்லை
என்ற பிரகடனத்துடன்
தன் உள்மன அழுக்குகளையெல்லாம்
கொள்கையாக்கிக்
கத்துகிற நாய்கள் சில இங்குண்டு.
இன்னும் சில நாய்கள்
பொறாமையில் கத்தும்..
சில நாய்கள்
அரசியல் சார்பில்
அடியாட்களாய்க் கத்தும்...
ஜாதிகள் இல்லையென்று கொக்கரிக்கும்சில நாய்கள் பின்னொருநாள்
ஜாதிக்கட்சிகளை நக்கி மகிழும்.
அந் நக்கலை நியாயப்படுத்த
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
என்றாலும்
பெண் துவாரம் தேடும்போது
ஜாதியை மறந்துவிடுகிற இவை
தன் ஜோடியை தேடும்போது மட்டும்
ஜாதியை மறக்காத சுபாவத்தை
இயற்கையிலேயே கொண்டிருப்பவை..
இலக்கியச் சேவையென்று
கத்துகிற நாய்கள் சில உண்டு..
எதிரே இல்லாத
பிடிக்காத எழுத்தாளனை
பாய்ந்து பிடுங்குவதாய்
வேஷம் கட்டும் அவற்றை
அவற்றின் கோஷத்தை வைத்தே
எளிதில் அடையாளம் காணலாம்...
பதவிக்காகக்கத்துகிற நாய்களும் சில இங்குண்டு.
இந்நாய்களின் குரலில்
எஜமானன் மீதான நன்றியுணர்ச்சி வழியும்.
பதவி கொடுத்தமைக்கு
நன்றி தெரிவிக்கும் முகமாய்
பரம்பரை பழக்கத்தில்
இவை கத்திக் கொண்டிருக்கின்றன.
இவை
சில நேரங்களில்
எஜமானனுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு
எஜமானன் சொல்லாமலே கத்தி
உபத்திரவங்கள் கொண்டு வருவதுமுண்டு.
இனச்சேவை, மொழிச்சேவை என்ற பெயரில்
இருப்பை காட்ட கத்தும் சில நாய்கள்.
சினிமா சான்ஸு என்ற பெயரில்
சில்லரைக்காக கத்தும் சில நாய்கள்.
தன் குரல் தானே கேட்கிற மகிழ்ச்சியில்
குயிலென்று நினைத்துக் கொண்டு
தொடர்ந்து கத்துகின்ற நாய்களும் உண்டு.
பெரிய நாய்களோடு சேர்ந்து கத்தினால்
கவனிக்கப்படுவோமென்று
கத்துகிற குட்டிநாய்களும் உண்டு.
தனியாகப் பார்க்கும்போதுவாலைக் குழைத்து நெளிந்து வளைந்து
பின் -
கூட்டத்தில் தைரியமாகக்
கத்துகிற நாய்களும் உண்டு.
தன் குரலின் அருமை அறியாமல்
அடிக்கடிக் கத்திக்
கல்லடி வாங்குகிற நாய்களும் உண்டு.
கத்துவதற்கு நேரமில்லை
பின்னர் வருகிறேன் என்று
சொல்லிப்போகிற நாய்களும் உண்டு.
நாய்ப்பெருமை பேசித் திரியும்
இந்நாய்களை
யாரும் நாயென்று விளித்துவிட்டால்
இவற்றுக்குப் பிடிக்காது.
"யார் நாயென்று" தன்னினம் தாழ்த்தித்
தானே கத்துகிற சிந்தனைத்திறம் பெற்றவை இவை.
இருட்டில் வாழ்கிற இந்நாய்கள்
வெளிச்சத்துக்கு ஏங்குபவை.
ஆனால்
வெளிச்சத்தைக் கண்டால் அஞ்சுபவை.
அதனால் -
திருடர்களின் துணைகொண்டு
வெளிச்சக் கம்பங்கள்மீது
சிறுநீர் கழித்துச் சிரிக்கின்றன.
பின்னெழுகிற கோபத்தில்
சிலநேரங்களில்
தங்கள் கண்களுக்குள் தங்கள்
சிறுநீரைப் பீச்சிக் கொண்டு
வெளிச்சத்தைத் துரத்திவிட்டதாய்
ஆனந்தப்படுவதுமுண்டு.
தான் தின்றதைத்
தான் கக்கிப் பின்
தானே நக்கித்தின்னும் நாய்கள் அல்ல இவை.
எஜமானர்களின் ஏவலுக்கேற்ப
அவர்கள் சொல்லும் கக்கலை
அதிசுவாரஸ்யமாய் நக்கித் தின்பவை.
இவ்வாறுஇந்நாய்கள்
இருப்பை நியாயப்படுத்த
தொடர்ந்து கத்துகின்றன.
என்றாலும் -
தன்வீட்டைத் தாண்டிவந்து
பொதுமைதானத்தில்
பூனையுடன்
சண்டைபோடுகிற தைரியத்தைக்கூட
தம் விரைகள்
தமக்கு வழங்காத வருத்தம்
இந்நாய்களுக்கு உண்டு.
தன் குறியைத் தான் விறைத்து
தனக்குமுன்னே ஆட்டிக்காட்டி
அவ்வருத்தம் போக்கிக் கொள்ளும்
இந்நாய்கள்.
குரலையும் இரவல் வாங்கிக்
கத்துகிற இந்நாய்கள்
சுயமாய்க் கத்துகிற வக்கில்லாதவை.
கத்தலையே குரைத்தல் என்று
கற்பனையில் திளைப்பவை
என்றாலும் -
தங்களை
நாய்களென்று உணராதிருப்பதாலும்
பெரும்பாலான நேரங்களில்
தம்பெட்டையைத் திருப்திபடுத்த மட்டுமே
பிறர்மீது பாய்ந்துபிடுங்குவதாலும்
இந்நாய்களை நேசிக்கலாம் நாம்...
இது ஒரு இன்ஸ்பிரேஷன் கவிதை(?!)... நான் கண்ட நாய்கள் மூலத்திற்கு நன்றி... என்னது! மூலத்துக்கு சிட்டுக்குருவி லேகியம் நல்லதா? அடடடடடா... இந்த லேகியம் விக்கிறவனுங்க தொல்ல தாங்க முடியலடா சாமி...
தமிழ்ப்பதிவுகள்
ஜெய்ஹிந்தா? ஜெய்கிந்தா? முன்னூட்டம் 1
சியாச்சின் (ரோஜா தோட்டம்) என்ற பொருத்தமற்ற பெயர் கொண்ட, இந்தியாவும் பாகிஸ்தானும் தினசரி வாழ்வா சாவா யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அரவமே இல்லாத பிரதேசத்தில் 18,600 அடி உயரம் வரை போய் ஜவான்களுடன் இரண்டு வாரம் வசித்த இந்தியா டுடே முதுநிலை செய்தியாளர் டபுள்யூ.பி.எஸ்.சித்துவும், முதன்மை போட்டோகிராபர் பிரமோத் புஷ்கர்ணாவும் உருவாக்கிய, இந்தியா டுடே மே 21 - ஜூன் 5, 1992 இதழில் வெளியான "தேசம் மறந்த யுத்தம்" கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகள்...
**

.... கீழ் முகாமில் உள்ள 'சியாச்சின் போர்ப் பள்ளி'யில் முதலில் 15 விதமான அயிட்டங்களைக் கொண்ட பனி ஆடை அணிவது எப்படி என்று புதியவர்கள் பழக வேண்டி இருக்கும். சுவிஸ் தயாரிப்பான குல்லாய், கையுறை, சட்டை, பாண்ட், உல்லன் சாக்ஸ் எல்லாம் அணிய வேண்டும். பனிச்சரிவின் குகை போன்ற பகுதிதான் வகுப்பறை. புதியவர்களுக்கு இங்குதான் பாடம் நடக்கும். பனிப்பிளவு, பனிச்சுவர், பனிக்குகைகள் பற்றி சொல்லிக்கொடுத்து எச்சரிப்பார்கள். மிக உயரமான காவல் நிலைகளை அடைய நீண்ட நேரம் அவர்கள் மலையேறும் போதும், பனிச்சரிவுப்பகுதியில் தங்கியிருக்க வேண்டிய சமயத்திலும் இவைகளையெல்லாம் அவர்கள் சமாளிக்க வேண்டும். காலையில் ஜாவான்கள் வெள்ளை நிற குளிர் தடுப்பு அங்கி அணிந்து பனி மீது தங்கள் முதல் அனுபவம் பெற சுறுசுறுப்பாக காலடி எடுத்து வைப்பார்கள்.
தாக்கு பிடிக்கும் சோதனையுடன் பயிற்சி முடிவடைகிறது. 10 பேர் கொண்ட பிரிவுகளாக இரவு முழுவதும் பனிச்சரிவில் தங்கியிருக்க வேண்டும். பிழைத்திருப்பவர்கள் பரீட்சையில் பாஸ். திரும்பி வரவில்லையெனில் தேடும் குழு அனுப்பப்படும்.

பனிச்சரிவுப்பகுதிக்கு அனுப்புவதே ஒரு திருவிழாதான். கிட்டத்தட்ட எல்லாருமே குளித்து ஷேவ் செய்து கொள்கிறார்கள். அடுத்த 3 மாதங்களுக்கு இந்த "சுகபோகம்" கிடைக்காது. பலர், தங்கள் வீட்டுக்கு நீண்ட பூடகமான கடிதம் எழுதுகிறார்கள். தாங்கள் எங்கு, எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சொல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. அதனால்தான் பூடகம். அடுத்து துணிமணி பாக்கிங். உஷ்ணம் தரும் ஆடைகள், ஸ்லீப்பிங் பேக், குடும்பத்தினரின் போட்டோ, புத்தகங்கள், சோப்பு, சீப்பு வகையறா இவற்றுடன் ஸ்டவ்வை மறக்காமல் எடுத்துக்கொள்கிறார்கள். கெரசின் ஸ்டவ் மிகவும் முக்கியம். இரவில் உறைபனியிலிருந்து காத்துக்கொள்ள, பனியை உருக்கி குடிநீர் தயாரிக்க, முகம் கழுவிக்கொள்ள இது அவசியம். இவை எல்லாவற்றையும் சுமந்து கொண்டு கீழ் முகாமிலிருந்து நான்கு நாள் நடந்து சென்றால் குமார் என்ற சப்ளை முகாம் 16,000 அடி உயரத்தில் வரும்....
**

....இடமே சொற்பம். அங்கு பதுங்கும் வாய்ப்பு அறவே கிடையாது. சில சமயங்களில் சமயலறையும் டாய்லெட்டும் ஒரே அறையில்தான். சில இடங்களில் குடிசைகள் சரியாக இருந்தாலும் கூட, இயற்கையின் சீற்றம் அதை கற்கால சமாச்சாரமாக்கி விடுகிறது. அக்டோபரில், பூமிக்கு மேலே இருந்த குடிசைகள் பனியில் முழுவதும் புதைந்து விடுகின்றன. அதனால் அதில் நுழைய வீரர்கள் காலி பேரல்களால் ஆக்கப்பட்ட 15 அடி நீளக்குழாய்கள் மூலம் ஊர்ந்து செல்ல வேண்டும். அடுத்து குகை போன்ற இருளடைந்த அறை. அங்கு ஒரே ஒரு கெரசின் ஸ்டவ் வெளிச்சம் தருகிறது. பின்னர் சில கெரசின் விளக்குகள். இந்த இடம் வெதுவெதுப்பாக இருப்பதுதான் ஆச்சர்யம். ஆனால் ஒரே புகை மயம். வியர்வை நாற்றமடிக்கும் உடைகள், சில உணவுப் பொருட்கள் இவற்றின் நெடி முகத்தை துளைக்கிறது. இதற்குள் 8 பேர் வசிக்கிறார்கள். இங்கேயே தூக்கம், பிரார்த்தனை, அவ்வபோது பரஸ்பரம் முறைத்துக்கொள்வது எல்லாமே...
பனிச்சரிவில் உணவு அனைத்தும் டின்களில்தான் வருகின்றன. கிராமப்புறங்களில் இருந்து வரும் ஜவான்களுக்கு சாக்லேட், பிஸ்கட் சுத்தமாக பிடிப்பதில்லை. ஜவான்களுக்கு கூடுதல் சத்துள்ளவற்றை வழங்குவதில் குறியாக இருக்கும் அதிகாரிகள் வித்தியாசமான உணவு வகைகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் ஜவான்களுக்கு பசியே எடுப்பதில்லை. 3 மாத சியாச்சின் பணிக்காலத்தில் கிட்டத்தட்ட 7லிருந்து 12 கிலோ எடை வரை இழந்து விடுகிறார்கள்.
முன்னணி நிலைகளில் மாமூல் வேலை நடக்க 2 அம்சங்கள் தேவை. பகைவர் நடமாட்டமும், வானிலையும். வானிலை மோசமாக இருந்தால் எல்லாரும் கூண்டு அல்லது கூடாரம் அல்லது குடிசைக்குள்ளேயே முடங்கி விடுவார்கள். சுமார் 20,500 அடியில் இருக்கும் 25க்கும் மேற்பட்ட நிலைகளில் இரண்டு மணிநேரத்திலிருந்து இரண்டு வாரம் வரை மோசமான வானிலை நீடிக்கும். அப்போது வெளியுலக தொடர்பே இல்லாமல் போய்விடும். ஆளைப்புதைக்கும் பனியை அப்புறப்படுத்துவதுதான் அவர்களின் அப்போதைய ஒரே பணி...
**
.... ராஜ்புத் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரபான் (28 வயது) என்ற ஜவானின் இறுதிச்சடங்கைப் பார்த்தோம். 20,000 அடி உயரத்தில் இருக்கும் பஹல்வான் என்ற முன்னணி நிலையில் இருந்தவர் அவர். அடிக்கடி பாகிஸ்தானியர்களின் தீவிர பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகும் இடம் அது. ஆனால் சந்திரபான் இறந்தது பகைவர்களின் குண்டுகளால் அல்ல. அந்த உயரத்தில் அழுத்தம் குறைந்த காற்றினால் நுரையீரலில் ரத்தம் கட்டிபோனதால் ஏற்பட்ட மரணம் அது. வெறுமையான அந்தப்பனிப்பிரதேசத்தில் எரியும் சிதையைச் சுற்றி நிற்கும் ஆலிவ் பச்சை உடையணிந்த ஜவான்களுக்கு அது வழக்கமாகிப் போன ஒரு சடங்கு.
சந்திரபான் உண்மையில் 18 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் பானின் மனைவிக்கு தன் கணவனை எரித்த சாம்பலும் அவர் பெற்ற விருதுகளும் கிடைக்கும். இந்த பெண் அதிர்ஷ்டசாலி. மற்றவர்களுக்கு இது கூட கிடைக்காது. அவர்களின் கணவர்கள் பனிப்பாறைப் பிளவுகளில் சிக்கி பனி மலைகளுக்கு அடியில் புதைந்து போனவர்கள் அல்லது உறைபனிப்புயலில் காணாமல் போனவர்கள்....**
....சாதாரண ராணுவ வீரரை பொறுத்த வரை, எல்லை தாண்டி வரும் எதிரியை விட சியாச்சின் போர்முனைதான் பெரிய சவாலாக இருக்கிறது. காரணம்: இறந்தவர்களில் 97 சதவீதம் பேர் "வானிலை மற்றும் நிலப்பரப்பின் தடை"களால் இறந்திருக்கிறார்கள். ஒருமுறை இங்கு பணிபுரிந்தவர்கள் மீண்டும் 15 ஆண்டுகளுக்கு திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள். அந்த அளவிற்கு இங்கே நாளைக் கடத்துவது மிகவும் துன்பகரமானது. இந்திய ஜவான்களின் சாவு விகிதம் திடுக்கிட வைப்பதாக உள்ளது :: 63 சதவீதம். அதாவது அங்கு அனுப்பப்படுபவர்களில் பாதி பேருக்கு சாவு நிச்சயம்....தமிழ்ப்பதிவுகள்
இலக்கிய சந்திப்பு
லாஸ் ஏன்ஜலீஸ் நகரில் மே மாதம் 14ம் திகதி நடந்த இலக்கிய சந்திப்பில் பார்வையாளனாக இருந்த ஒரு பாமரனின் நேரடி அனுபவ குறிப்புகள்.
**
சுப்பன் :: டேய் வீக்கெண்டும் அதுவுமா வீட்ல உக்காந்து என்னா பண்ணிகிட்டு இருக்க. நான் ஒரு இடத்துக்கு போய்கிட்டு இருக்கேன், சூப்பர் பிரியாணி கிடைக்கும்... வரியா..
நான் :: சரி... போம்போது வீட்டுக்கு வா, அப்படியே சேந்து போகலாம்
சுப்பன் :: ஏற்கனவே வெளியிலதான் இருக்கேன்.ஃபயர் ஹைட்ரண்ட் கிட்ட மட்டும்தான் ப்ரீ ஸ்பேஸ் இருக்கு.. அதனால நான் உள்ள வரல, நீ சீக்கிரம் வா
**
நான் :: டேய், 50 மைல் சுத்துல எல்லா தேசி கடை பிரியாணியையும் சாப்பிட்டு பாத்தாச்சி... ஒரு இடத்திலயும் பிரியாணி ஆடுநரியா கூட இருக்காது... அப்புறம் என்னத்த சூப்பர் பிரியாணின்னு கத விடுற
சுப்பன் :: இது ரெஸ்டாரெண்ட் இல்லடா. வேற இடம். அங்க பிரியாணியும் பீரும் இலவசம். என்ன கெரகம் அதோட அங்க நடக்கிற கூத்த சகிச்சிக்கணும்... அதுக்கு இலக்கிய திறனாய்வுன்னு பேர் சொல்றாங்க.. நான் போன வாரம் போயிருந்தேன். அதான் முத கூட்டமாம்.... டேய், என்னடா இது 80 மைல் வேகத்துல போய்கிட்டு இருக்கும்போது கதவ தொறக்குற..
நான் :: மாமு, அந்த கூட்டத்துல வேடிக்கை பாக்குறதும் ஒன்னுதான், இப்படியே ரோட்டுல குதிக்கிறதும் ஒன்னுதான்... இந்த விஷப்பரீச்சை எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, அப்பிடி ஓரமா எறக்கி விடு, பொடி நடையா நடந்தாவது வூடு போய் சேர்றேன்
சுப்பன் :: சும்மா உணர்ச்சிவசப்படாதடா... உன்னிய யாரு கலந்துக்க சொன்னாங்க... நீ பாட்டுக்கு ஒரு பீர் பாட்டிலும் கொஞ்சம் பிரியாணியுமா ஒரு ஓரமா செட்டில் ஆயிக்க... பேசாம டிவிடி கிவிடி எதயாவது பாத்து பொழுத ஓட்டு, சீக்கிரம் கிளம்பிறலாம்... இதுக்கு மேல ரெஸ்டாரெண்டுக்கு போயி காஞ்ச பீஸாவ சாப்பிடணுமான்னு யோசிச்சு பாரு.
**
சுப்பன் :: ஹாய் ஹாய் ஹாய் ஹாய்... என்ன ஏற்கனவே ஆரம்பிச்சிட்டிங்க போலருக்கே கச்சேரிய... பீர் நுரை வாசல் வரைக்கும் பொங்கி வழியுதே.
யாரோ :: வாய்யா தொர... போன கூட்டத்துல உம்மூஞ்சி போன போக்க பாக்கவும் சரி அடுத்த கூட்டத்துக்கு ஆள் கம்மின்னு நினைச்சேன்.
சுப்பன் :: நமக்கு இலக்கியமெல்லாம் அவ்வளவா வராதுங்க. ஆனா நம்ம நம்ம ஃபிரண்டுக்கு கொஞ்சம் வரும். அதான் கூட்டியாந்தேன்.
நான் (மெதுவாக) :: அடப்பாவி
யாரோ :: வாங்க தோழரே. என் புனைபேரு காத்துவாயன். நான் அடிப்படையில ஒரு கவிஞன். அட என்னங்க நீங்க தரையில உக்கார பார்க்கறீங்க. முத முறை நம்ம அரண்மனைக்கு வந்திருக்கீங்க, தமிழ் கலாச்சாரம் என்னாகுறது.. டேய் தெலுங்கினி, தோழருக்கு இருக்கையில உம்பக்கத்துல கொஞ்சம் இடம் கொடு. அப்படியே தங்க கழுகு ஒண்ண ஒடச்சி கொடு. சிகப்பு லேபிள் வர தாமதமாகுது தலைவா. அதுவரைக்கும் இதை இடைப்பாடா வச்சிக்கோங்க.
நான் (சுப்பனிடம்) :: தங்க கழுகுன்னா என்னடா.
சுப்பன் (மெதுவாக) :: கிழிஞ்சிது போ... இதுவே புரியலையின்னா போக போக என்னாகப்போறியோ. தங்க கழுகுன்னா golden eagle. கூட்டத்துல எதுனா புரியலையின்னா நம்மல ஒரு லுக்கு விடு. நான் சொல்றேன்
தெலுங்கினி :: டேய் கள்ளுக்கடை, கொஞ்சம் ரீவைண்ட் பண்ணு.. (என்னிடம்) லார்ட் ஆஃப் வார் படங்க. நல்ல படம். படம் முடியிறப்போ கருத்து ஓடுது, நீங்க வந்ததுல மிஸ் பண்ணிட்டேன். என்னன்னு கொஞ்சம் பாப்போம். கவிஞரே கொஞ்சம் தள்ளி உக்காருங்க
நான் :: கவிஞர் கவிஞர்னு சொல்றீங்களே. கவிதை எல்லாம் நிறைய எழுதியிருக்காரா?
தெலுங்கினி :: நீங்க வேற, ரெண்டோ மூணோ கவிதை, அது கவிதையான்னே சந்தேகமா இருக்கு, அவரு ப்ளாக்குல எழுதியிருக்காரு. ஆனா எங்களுக்கு மெயில் அனுப்ப சொல்ல எப்ப பாத்தாலும் கவிஞர்னே கையெழுத்து போடுவாரு. எதுனா கருத்து சொல்லும்போது "ஒரு கவிஞர் என்ற முறையில் என் கருத்து என்னவெனில்" அப்படீன்னு ஆரம்பிப்பாரு. சரி ரொம்பத்தான் ஆசப்படுறாரேன்னு நாங்க கவிஞரேன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம். அதுல அவருக்கு ஒரு சந்தோசம்.
நான் :: சரி அது என்னங்க காத்துவாயன்னு பேரு.
தெலுங்கினி :: போட்டோ எடுக்கும்போது வாய தொறந்துகிட்டே போஸ் கொடுத்தாரு. அதனால அப்பிடி வச்சிட்டோம்.
**
கள்ளுக்கடை (டிவிடியை பார்வையிட்டுக்கொண்டே) :: உலகத்துலயே பெரிய ஆயுத வியாபாரியான அமெரிக்கா செக்கூருட்டி கவுன்சிலில் பெரும்புள்ளி.. என்ன கொடுமை பாத்தியா..
கவிஞர் (குடித்துக்கொண்டிருந்த பீரை கோபமாக தரையில் அறைந்து) :: தம்பி, எத்தன தடவ சொல்றது அமெரிக்காவ புதரகம்னு சொல்லுன்னு..
புரியாமல் பார்த்த என்னிடம், சுப்பன் :: அமெரிக்காவ தமிழ்ப் படுத்தி இருக்காங்க...
நான் :: அமெரிக்காவுக்கு தமிழ்ல ஐக்கிய அமெரிக்க நாடுகள்தானே
கவிஞர் :: அதில அமெரிக்கா இங்க்லீஸ் இல்லியா. அதனால அதிபர் பெயரால கூப்பிடணும்னு முதல்ல புஷ்ஷகம்னு வச்சோம். அதுல ஷ வடமொழி சொல்லுங்கறதால அது புஸ்ஸகம்னு ஆச்சி. அப்புறம் நான்தான் புஸ்ஸயும் தமிழ்ப்படுத்தி புதரகம்னு வச்சேன். இனிமே உண்மையான தமிழ் ரத்தம் ஓடற திராவிடருங்க எல்லாம் அமெரிக்காவ புதரகம்னுதான் கூப்பிடணும்னு உலக தமிழர்களுக்கு எல்லாம் ஒரு செயின் மெயில் அனுப்புனோமே, உங்களுக்கு வரலியா?
நான் :: அது ஸ்பாம் பில்டர்ல போயிடுச்சி.. ஸ்பாம் க்ளீன் பண்றப்போ பாத்தேன். ஆனா எழுதியிருந்தத பாத்தவுடனே எவனோ வெட்டிப்பய லூஸுத்தனமா அனுப்பியிருக்கான்னு டெலீட் பண்ணிட்டேன். நீங்கன்னு தெரியாம போச்சி. அத விடுங்க.. உங்க கணக்கு படி பாத்தா ஒவ்வொரு நாலு வருசத்துக்கும் பேர மாத்தணுமே..
காத்துவாயன் :: அதுல ஒன்னியும் ப்ரச்னை இல்ல. என்ன கெஜட்லயா மாத்த போரோம்.. எல்லாம் நம்ம இனத்துக்குள்ளதான.. இதுக்கு முன்னாடி பில் (க்ளின்டன்) காலத்துல ரசீதகம்னு கூப்பிட்டோம்.. இப்ப புதரகம்... எலேய் கள்ளுக்கடை, தோழருக்கு எதுவும் சாப்பிட கொடுக்கலையா?
நான் (சுப்பனிடம்) :: இரு வேற என்னா டிவிடி இருக்குன்னு பாக்கறேன்.
கவிஞர் :: தோழரே நான் உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு கண்டுக்காம போறீங்களே.
நான் :: மன்னிச்சுடுங்க, பொத்தாம் பொதுவா தோழர்னு சொன்னீங்களா, அதான் யாரன்னு புரியல.. நீங்க என் பேர சொல்லியே கூப்பிடலாமே
கவிஞர் கோபமாக :: என்னது தோழர்னு கூப்பிடுறது புடிக்கலையா, என்னங்க சுப்பன், உங்க தோழர் தமிழ் விரோதி மாதிரி இருக்கே.. தொழிற்சங்கவாதிகளின் அடையாளச்சொல் கேவலமா போச்சா உங்க நண்பருக்கு?
தெலுங்கினி :: சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.
சுப்பன் (மெதுவாக) :: இலக்கியவாதின்னு அவனுக்கு அவனே நினைச்சுகிட்டு, இலக்கியவாதின்னா எப்பவுமே சமூகத்து மேல கோவமா அலையணும்னு யாரோ சொன்னத கேட்டு அப்பப்போ இப்படித்தான் சவுண்டு விடுவான். தெலுங்கினி ரெண்டு ரவுண்டு உள்ள போனதால அப்பப்போ ஸ்டாண்டர்டு டயலாக்க அள்ளி தெளிப்பான். எதையும் கண்டுக்காம சும்மா வேடிக்க மட்டும் பாரு...
தெலுங்கினி :: கவிஞரே கவிபாய் வந்திட்டாரு.
கவிஞர் :: வாய்யா பாய். என்ன ரொம்ப நாளா ஆளயே காணோம்.
பாய் :: ஒரு மாசம் முன்னாடி ஒரு தமிழ் ஆய்வு கூட்டத்துக்கு போயிருந்தேன். அங்க சும்மா இருக்காம சில கருத்துக்கள சொல்லப்போயி எல்லாப்பயலும் மொத்திட்டானுவ. தமிழுக்காக வாழறவங்க எத எதயெல்லாம் தாங்க வேண்டியிருக்கு பாருங்க.
கவிஞர் :: விடுங்க. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்குல்ல. அந்த சந்தோஷத்துலயே போயி சேந்துடலாம். தமிழுக்காக உயிர் நீத்தோம்னு பெருமையாவது மிஞ்சும்.
நான் :: என்னங்க இது போருக்கு போனவங்க ரேஞ்சுல பேசிக்கிறாங்க.
தெலுங்கினி (கிசுகிசு பாணியில்) :: இந்த பாய் தமிழ் ஆய்வு கூட்டம்ன்னு சொல்றானே அது சும்மா.. சும்மா இல்லாம அவன் ஊரு மேல்நிலைப்பள்ளி படிப்பாலோசனை கூட்டத்துல போயி, எல்லாரும் காலேஜ்ல தமிழ் இலக்கியம்தான் படிக்கணும். இடம் கிடைக்கலையின்னாத்தான் வேற எதுனாவாவது படிக்கணும்னு ஆவேசமா பேசிபுட்டான். அங்க இருந்தவனுங்களுக்கு எல்லாம் இவன் இஞ்சினியரிங் படிச்சவன், அதுவும் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சிட்டு இப்ப அமெரிக்காவுல இருக்கான்னு தெரிஞ்சிச்சி.. சும்மா விடுவானுங்களா. மூடிக்கிட்டு போ, எங்க பொழப்ப நாங்க பாத்துக்கறோம்னு சொல்லிட்டாங்க. அதுக்குத்தான் இந்த பில்டப்பு.
கவிஞர் :: அடடே வாங்க சகதி.
நான்:: என்னது சகதியா.. என்னய்யா இப்படியெல்லாம் பேரு வக்கிறாங்க.
தெலுங்கினி :: யோவ் அது சக்திய்யா.. இலக்கிய வ/கட்டத்துல அல்லா விதத்திலும் சகல எளுத்தாளர்களையும் ஆட்டிப்படைக்கிறவங்களோட ஜால்ராங்கிறதால அப்பிடி பேரு. அவங்க உண்மையான பேரு அருக்காணி. நாங்க செடிக்கான்னு கூப்பிடுவோம்
நான் :: இது அத விட காமெடியா இருக்கே
கள்ளுக்கடை :: பேர பாத்து சாதாரணமா நினைக்காதீங்க. அக்கா ஆறு ஐஸ்வர்யா கணக்கா செடிக்கா தில்லான ஆளு. அவங்க ஏரியாவுல எதுனா அரசியல் பொதுக்கூட்டமின்னா போதும் அக்கா சவுண்ட கேக்கணுமே. மவனே சுத்துப்பட்டி பதினெட்டு பட்டியும் திரளும்.
நான் :: பொதுக்கூட்டத்துல இருந்தெல்லாம் அழைப்பு வர்ற அளவுக்கு அவ்ளோ சூப்பரா பேசுவாங்களா
தெலுங்கினி :: நீங்க வேற. அக்கா வூட்டுல அல்லாரும் அரசியல்வாதிங்க. அக்காவோ தடாலடியா நான் பேசியே தீரணுமின்னு குதிக்கும். வேற வழி. அதுவுமில்லாம அக்கா காட்டுல காச்சிற சாராயத்த கொடுத்து அக்கா வயக்காடு, தோட்டம் தொரவுல ஆடு மேக்கிறவன், வேலை பாக்குறவன்னு எல்லாப்பயலையும் கூப்பிட்டு சவுண்டு கொடுக்கும். வார்த்தயெல்லாம் ஏக வசனத்துல கேக்க சகிக்காது. இருந்தாலும் சரக்க சாப்பிட்ட சந்தோசத்துல எல்லாப்பயலும் கைதட்டி தீத்துடுவானுங்க.
நான் :: வயசு சின்னதா இருக்கே, எதுக்கு எல்லாரும் அக்கா அக்கான்னு கூப்பிடறீங்க
கள்ளுக்கடை :: அரசியல்வாதி இல்லியா, அல்லாரையும் தம்பி தம்பின்னு தோரணையா கூப்பிட்டு பளகிட்டாங்க. அதான் எல்லாரும் வேற வழியில்லாம அக்கான்றானுங்க.
**
கவிஞர் :: தோழரே கொஞ்சம் சப்தத்த கம்மியா வச்சிக்குங்க.. கள்ளுக்கடை எல்லாருக்கும் அடுத்த ரவுண்டு பீர் கொடுப்பா.. (க்கும் என்று கனைத்துக்கொண்டு சத்தமாக) அனைவருக்கும் வணக்கம். அமுக்கு அமைப்பின் இரண்டாவது கூட்டம் இப்போது துவங்குகிறது
நான் :: அமுக்கு அமைப்பா?
சுப்பன் :: ஆமா... போன கூட்டத்துல இந்த மாதிரி இவங்களுக்கு ஒரு அமைப்பு வேணுமின்னு தீர்மானம் போட்டாங்க. அப்ப என்ன தலைப்பு வைக்கலாம்னு ஒரே குழப்பம், அப்ப பாத்து வறுத்த மீன் ஒண்ணே ஒண்ணுதான் மிச்சம் இருந்தது. தெலுங்கினிக்கும் கள்ளுக்கடைக்கும் அந்த மீன் துண்டு மேல ஒரு கண்ணு. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அந்த மீன் துண்டுக்காக பாஞ்சிட்டானுங்க. கூட இருந்தவனெல்லாம் "விடாத அமுக்கு, அமுக்கி பிடி மீன் உனக்குத்தான்"ன்னு கூச்சல் போட்டானுங்க. உடனே நம்ம கவிஞர் "அமுக்கு"ன்ற பேர அமைப்புக்கு வச்சிட்டாரு..
கவிஞர் :: அமுக்கப்பட்டவன் குரல் சத்தமாக கேட்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியமே நம் இலக்கிய இயக்கத்தின் உயிர்நாடி..
தெலுங்கினி :: சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.
கள்ளுக்கடை :: மொத்தட்டும் மொத்தட்டும். எனக்கும் ரொம்ப குளிருது. கொஞ்சம் மொத்து வாங்கினா இதமாத்தான் இருக்கும்.
சுப்பன் :: ஆனா இந்த பேர ஆமோதிச்சப்ப கள்ளுக்கடை அமுக்கப்பட்டவனா, மீன பறிகொடுத்தவனா இருந்தான்... அதான் செம காமெடி
**
பாய் :: கவிஞரே கவித சொல்லுங்க, திறனாய நேரமாவுதுல்ல... ரொம்ப நாளா திரனாயாம கைகாலெல்லாம் நடுங்குது. பிரியாணி வேற ஆறிப்போவுது.
கவிஞர் :: அட போங்க பாய்... இன்னிக்கி பாத்து என் கற்பன குதிர சுணங்கி போய் படுத்து கிடக்கு... (சத்தமாக சிரிக்கிறார்)
கள்ளுக்கடை :: ஆமா, இவரு குதிரை என்னிக்கி எந்திரிச்சிருக்கு..
கவிஞர் :: பாய் நீங்களும் நம்ம கவித பட்டரையில முங்கி முத்தெடுத்தவராச்சே.. நீங்க ஒரு கவிதை சொல்லுங்களேன்.
பாய் :: அட நீங்க வேற, எனக்கு யாராவது கவிதை சொன்னா அத திறனாய தெரியும். அதனாலதான் கவியரசுன்னு போட்டுக்காம வெறுமே கவிஞர்னு எனக்கு அடைமொழி வச்சிருக்கேன்.. அந்த சிக்கன் 65 கட்டி வந்த பேப்பர நீவிவிடுங்கப்பா.. அதுல எதுனா இலக்கியம் இருக்கான்னு பாப்போம். (பொதுவாக) கண்டதை படித்தால் பண்டிதனாவான்னு சொல்வாங்களே. அதுக்கு உதாரணம் நான் தான்.
தெலுங்கினி (மென்மையான குரலில்) :: சந்தடி சாக்குல தன்ன பண்டிதன்னு சொல்லிக்கிறான் பாருங்க.
பாய் :: கேக்குதுப்பா. நீ கூடத்தான் எழுத்தாளன்னு உன்ன நீயே சொல்லிக்கிற. நாங்க எதுனா கேட்டோமா..
தெலுங்கினி :: யோவ். இதுவரைக்கும் நான் எழுதின பதிவுங்கள 40 ஆயிரம் பேரு படிச்சிருக்கான். இது இலக்கியம் இல்லைன்னா எது இலக்கியம்கிறேன்.
பாய் :: அதுக்காக.. ஷகீலா போஸ்டர கூடத்தான் ஒரு நாளக்கி 40 லட்சம் பேரு பாக்கிறான். அது இலக்கியமாடா..
கவிஞர் :: அட அட அட... கலைஞர்களுக்கு சர்ச்சை தேவைதான்.. ஆனா அது சண்டையா மாறிடக்கூடாது பாருங்க..
செடிக்கா :: என்னடா சொல்ற. கலைஞன்னா நெஞ்சுல கீற மஞ்சா சோத்த பாக்கணும். அதுதாண்டா அழகு. இப்ப என்ன எடுத்துக்க, பெண் எழுத்தாளர்களில் பெயர் சொல்ற அளவு தில்லா இருக்கேன்... காரணம் என்ன..
சுப்பன் (மெதுவாக) :: ஆரம்பிச்சிட்டாங்கடா. இனிமே புல் ஸ்விங்க்தான்.. இவனுங்க கலைஞன், கவிஞன், எழுத்தாளன்னு மாத்தி மாத்தி முதுகு சொறியறத பாக்க முடியாது. பிரியாணிய ஆரம்பி. சீக்கிரம் கிளம்பிரணும்.
கவிஞர் :: பாய்.. சிக்கன் 65 பேப்பர்ல என்ன இருக்கு அத படிங்க முதல்ல.
பாய் :: ஆஹா இதுல ஒரு சூப்பர் கவித இருக்கப்பா... பிரமாதம்.. புல்லரிக்கிது.. அருவி மாதிரியில்ல ஓடுது தமிழ் இதுல..
கள்ளுக்கடை :: பாய்.. போதையில பீர் கேன தட்டி வுட்டு, அது கார்ப்பெட்ல ஓடிகிட்டு இருக்கு பாருங்க..
பாய் :: அத அப்பால தொடச்சிக்கிலாம்பா.. கவிதை அனுபவத்துல கொஞ்ச நேரம் என்ன வாழ விடு...
கவிஞர் :: நீங்க மட்டும் அனுபவிச்சா எப்படி பாய். அந்த கவிதையவே இன்னிக்கி திறனாய்வு சப்ஜெக்டா எடுத்துக்கலாம்.. உரக்க படிங்க..
பாய் ::
அன்பே,
உன்னை கண்டேன்
உலகை மறந்தேன்
உன் தங்கையை கண்டேன்
உன்னையே மறந்தேன்.
கவிஞர், தெலுங்கினி, கள்ளுக்கடை எல்லாரும் கோரஸாக :: ஆஹா ஆஹா..
பாய் :: பின்னி பெடலெடுத்துருக்கான் பாருய்யா கவிஞன்.. இதுல்ல கவித
செடிக்கா :: ஏண்டா மரமண்டைங்களா.. பெண்மைய இழிவு படுத்தி எழுதியிருக்கான் அந்த பொறுக்கிப்பய. இத கொளுத்தாம படிச்சிகிட்டு இருக்கீங்களே.
கள்ளுக்கடை :: அதானே.. நீங்க சொன்னா சரிதாங்க்கா..
பாய் :: இதுல என்ன தப்புங்கறீங்க. இதுக்காக ஒரு கவிஞன பொறுக்கின்னு சொல்றது தப்பில்ல.
செடிக்கா :: கவிஞன் மனசுல இருக்கறதுதான வெளில வருது. அவன் பொறுக்கி இல்லாம என்ன?
பாய் :: அக்கா, அது எழுதினவன பொறுத்து.. இதுவே ஒரு மேட்டுக்குடி வர்க்க கவிதையா இருந்தா எழுத்துக்கு ஆசிரியனே பொறுப்புன்னு நானும் மல்லுக்கு நின்னிருப்பேன். ஆனா இந்த கவிஞர் பேரு கட்டையன்னு போட்டிருக்கு. அப்படீன்னா அது ஒடுக்கப்பட்ட குரல்தானே. இது ஏன் ஒரு ஒரு சமூக நீதி குரலாக இருக்க கூடாது
தெலுங்கினி :: ஓ சமூக நீதி... சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.
கள்ளுக்கடை :: மொத்தட்டும் மொத்தட்டும். எனக்கும் ரொம்ப குளிருது. கொஞ்சம் மொத்து வாங்கினா இதமாத்தான் இருக்கும்.
அதுவரை பார்க்காத ஒரு உருவம், பாத்ரூமிலிருந்து எட்டி பார்த்து :: இது பத்தி சொல்ல எனக்கு நிறைய இருக்கு. இப்போதைக்கு இத்தோட ஒத்து போறேன்னு மாத்திரம் சொல்லிக்கிறேன். அப்புறமா வந்து பொறுமையா சொல்றேன்.
நான் :: இப்ப ரொம்ப முக்கியமா ஓடி வந்து இத சொல்லலையின்னாத்தான் என்ன? டாய்லட் பேப்பர் ரோல தரையெல்லாம் உருட்டிகிட்டு அரைகுறையா ஓடி வந்திருக்கீங்க பாருங்க. அப்புறமா வந்து மொத்தமாவே சொல்லுங்க. இப்ப போங்க.
செடிக்கா, பாயை பார்த்து :: இதுலஎன்ன பெரிய சமூகநீதி வெங்காயம்.. பெண்மைய மொத்தமா இழிவு படுத்தி இருக்கான். ஒடுக்கப்பட்ட குரல்ங்கிறதாலதான் இவ்ளோ நேரம் பேசிகிட்டு இருக்கேன். இல்லையின்னா வெட்டியிருப்பேன்.
தெலுங்கினி :: ஓ சமூக நீதி... சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.
கள்ளுக்கடை :: மொத்தட்டும் மொத்தட்டும். எனக்கும் ரொம்ப குளிருது. கொஞ்சம் மொத்து வாங்கினா இதமாத்தான் இருக்கும்.
நான் :: யோவ், நானும் வந்ததில இருந்து பாத்துகிட்டே இருக்கேன். எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவான்னே சொல்லிகிட்டு இருக்க. அதுக்கு இந்தாளும் ஒத்து ஊதறான். உங்களுக்குள்ளயே மாத்தி மாத்தி பேசிக்கறீங்க. எவனாவது இங்க வந்து என்ன ஏதுன்னு கேக்குறானா? அப்புறம் ஏண்டா இப்படி உளர்றீங்க.
சுப்பன் :: இந்த லட்சணத்துல எவனும் வரலையின்னு வேற அழறானுங்க.
தெலுங்கினி :: உங்ககிட்ட அப்புறம் பேசறேன். திறனாய்வுல கலந்துக்கணும்.. அய்யோ, ஏம்ப்பா இப்படி கத்துறீங்க.. யோவ் பாய் இப்ப நீ யார் கட்சி..
கள்ளுக்கடை :: இந்தா இந்த பீர தலையில கொட்டிக்க அடங்கும் (பாய் தலையில் பீர் கொட்டுகிறார்)
சுப்பன் (மெதுவாக) :: அவனுங்களுக்கு முழுசா ஏறிடுச்சி.. வா நாம நைசா கழண்டுக்கலாம்..
**
சுப்பன் (காருக்கு நடக்கும்போது) :: அப்படியே மொட்டை மாடியில கொஞ்சம் பாரு.
கவிஞர் :: (கட்டை சுவரில் சாயந்தபடி) :: ஹிஹிஹி... நான் இயல்புலயே கவிஞன்டா..
பாய் (சுவரை பிடித்தபடி வானத்தை கைகாட்டி) :: ஏஏஏய். ஷாமர்செட் மாம்.. எளுத்தாளனுக்கு பொழுப்புணர்ச்சி வெய்ணுமா வெய்ணாமா.. ஒனிக்கி இ-மெயில் போட்டனே, ஏன் இன்னும் ரீப்ளை சொல்லாம டீலே பண்ற.. பயந்தாங்கொள்ளி...
**
disclaimer :: this weblog entry is a narration of events actually happened in los angeles, usa on may 14, 2006. any actual resemblance to any other individuals, organisation or events is purely unintentional. © mugamoodi
தமிழ்ப்பதிவுகள்
வாக்குப்பதிவு முடிந்தது

குறுகிய கால தற்கொலை சாசனத்தில்
கறுப்பு மை கொண்டு
கையெழுத்து போட்டாச்சி
நம்ம கடமைய முடிச்சாச்சி
இனி இராட்சசி ஆண்டாலென்ன
திராவிட இராவணன் ஆண்டாலென்ன
கோவணத்த இறுக்கி கட்டு
தமிழ்ப்பதிவுகள்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
என்னடா இது ரெண்டு மூணு வாரமா இந்த பச்ச புள்ளய காணோமேன்னு யாராவது கவலப்பட்டீங்களா...
வீடு வரை மனைவி
வீதி வரை உறவு
காடு வரை பிள்ளை
கடைசி வரை கட்சி
ன்னு கண்ணதாசன் சும்மாவா சொன்னாரு. ஆயிரம்தான் சொந்த பந்தம்னாலும் பச்சை குத்தி, நாக்கறுத்து, மூக்கறுத்து, தீக்குளிச்சின்னு கடைசி வரைக்கும் நம்மையே நினைச்சி நமக்காகவே வாழறது கட்சி தொண்டன் ஒருத்தந்தான்ன்னு நிரூபணம் ஆயிடுச்சி பாருங்க.. இதுக்குத்தான் நமக்குன்னு ஒரு கட்சி வேணுமின்னு எல்லாரும் போராடுறது...
கட்சிய பலப்படுத்தலாம்னு ஒரு சுற்று பயணம் போனேன். கூட்டணி பேரமெல்லாம் ரகசியமா நடக்கணுமின்னு எதிரி கட்சி தலைவர் கேட்டுகிட்டதால செயற்குழுவுக்கு கூட தெரிவிக்காம பயணத்த ரகசியமா வச்சிகிட்டேன். (அட கள்ளத்தோணியெல்லாம் இல்லப்பா, இந்தியாவுக்கு தானே போனேன் அதுக்கு ஏன் கள்ளத்தோணி)
சொல்லாம கொள்ளாம போனனலும் அதையெல்லம் மனசுல வச்சிக்காம, திண்ணை எப்படா காலியாவும்னு இருந்த உள்கட்சி வீரபாண்டிங்க சலசலப்பையெல்லாம் சமாளிச்சு, சிங்கம் எப்ப தூங்கும்ணு காத்திருந்து வாலாட்டுன சிறுநரியான எதிர்(ரி) கட்சி ஆளு - ஒரேயொரு தலைவர் கம் தொண்டர்தானப்பா அந்த கட்சியில, கட்சி பேரு கூட வாயில நுழைய மாட்டேங்குது அவங்க எல்லாம் பழம் தின்னு கொட்டையையும் பழமாக்கின பமகவோட மோதறாங்கலாமா - ஆட்டத்தை அடியோட அடக்கி கட்சியோட உண்மையான விசுவாச தொண்டனா கட்சி மானம் காப்பாத்துன மருத்துவர் சின்ன அய்யா. தம்பி இராமநாதன நினைச்சி நானும் இந்த கட்சியும் பெருமைப்படுறோம், பெருமிதப்படுறோம், புளகாங்கிதம் அடையறோம்.. கட்சி தொண்டருங்க எல்லாரும் இதை நினைச்சு நினைச்சு கூட்டம் போட்டு ஆனந்த கண்ணீர்ல விம்முறாங்க...
(சின்ன அய்யான்னவுடனே மருத்துவர்தான் கட்சியின் அடுத்த வாரிசான்னு கேட்டு குடைச்சல் கொடுக்காதீங்கப்பா... ஆனா, கான்வென்டுல படிக்கிற என் மகனோ மருமகனோ காலேஜ் முடிக்கிற வரைக்கும் அவர்தான் கட்சியின் நிரந்தர நம்பர் இரண்டு என்பதை மட்டும் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்)
இராமநாதனின் இந்த சேவையை மெச்சி அவர் படிச்சி முடிச்சவுடனே அவருக்கு அவர் பல்கலைக்கழகத்துலயே நம் சார்பில் டாக்டர் பட்டம் தர ஏற்பாடு செய்யப்படும் என்பதை லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு இதன் மூலம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... உ.ஏ.இ வட்ட செயலாளர் பெனாத்தல் சுரேஷ் என்னவோ உள்குத்து பண்ண முயற்சி பண்ணியிருக்கார்னு தெரியுது.. என்னான்னு இன்னும் 3 நாட்களுக்குள்ள செயற்குழுவுக்கு விளக்கம் அளிக்கலையின்னா அவர் தன்னோட குடும்பத்தோட எதிர்கட்சிக்கு போக அடி போட்டுட்டார்னு என் மனசாட்சி சந்தேகப்படுது... பெனாத்தல் சுரேஷ்ங்கிற பேர பெனாத்தலார்னு நமக்கு நாமே திட்டத்துல போஸ்டர் அடிச்சிகிட்டப்பவே நமக்கு தெரியும் இவருக்கு தலையாக ஆசை வந்திடுச்சின்னு...
**
போன முறைக்கும் இந்த முறைக்கும் விமானத்துலயே வித்தியாசம் தெரிஞ்சுது.. அட பிசினஸ் க்ளாஸ்லாம் இல்லீங்க.. நாமென்ன திராவிட கட்சியா, தொண்டருங்க காசுல பிஸினஸ் க்ளாஸ்ல போக.. விஜயகாந்த மாதிரி கைக்காச போட்டு கட்சி நடத்துற ஆளுங்க. ஜெயிச்சி ஆச்சிய ச்சீ ஆட்சிய பிடிக்கிற வரைக்கும் எக்கானமிதான்... விசயம ப்ளேன்ல இல்ல, ப்ளேன்ல வந்த மக்கள்கிட்ட...
அதாவது இதுக்கு முன்னாடி பயணத்துல எல்லாம் ப்ர்ஸ்ட் ஹாஃப் விமானப்பயணம் சண்டை நடக்காதப்போ இருக்கிற காங்கிரஸ் கட்சி ஆபிஸ் மாதிரி தூங்கி வழிஞ்சிகிட்டு மகா அமைதியா இருக்கும். ஆனா லாஸ்ட் லெக் பயணம் பாக்கணுமே, பயணிகள் ஏறலாம்னு சொல்றதுதான் தெரியும் பாண்டிச்சேரி பாமக ஊர்வலம் மாதிரி அம்ம ஆரம்பிச்சுடுவாங்க நம்மாளுங்க... ஏய் ஓடுறா மாப்ள கடேசியில நம்ம சீட்டுன்னு ரெண்டு பேரு லக்கேஜ் கம்பார்ட்மெண்ட மூட முயற்சி பண்ணிகிட்டு இருந்த விமான பணிப்பெண்ணை இடிச்சி தள்ளிகிட்டு ஒடறானுங்க.. விமானம் கிளம்பினதும் வெள்ளை சொக்காய் வெள்ளை பேண்ட் போட்ட ஒரு எருமை கதவு பக்கத்திலேயே நின்னுகிட்டு பணிப்பெண்கள் அவரை கடக்கும் ஒவ்வொரு முறையும் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒரு ஸ்மால் அளவுக்கு காமிச்சி "மேடம் ஒண் ஸ்மால் ரவுண்ட்" என்று பிச்சை எடுக்காத குறையா இம்சை பண்றான்.. நாலு ரவுண்டுக்கு பிறகு அவங்க பேண்ட்ரி அறையிலயே திரையை விலக்கி தலைய நுழைச்சி கெஞ்ச ஆரம்பிக்க விமான தலைமை சிப்பந்தியே அவரிடம் வந்து பயணம் முழுக்க இப்படி நிக்கக்கூடாது போய் உட்காருங்கன்னு கெஞ்சியும் அதட்டும் குரலில் சொல்லியும் மசியணுமே நம்மாளு.. கடைசியில் பொறுமை இழந்து கால்வாசி பாட்டிலை அப்படியே வாங்கிகிட்டுதான் ஓஞ்சாரு நம்மாளு... பயணம் முழுசுக்குமே சந்தைக்கடை இறைச்சல் கொறயவே இல்ல... ஆனா இந்த முறை எதிர்மாறா ஒரு சத்தமும் காணோம்... மயான அமைதி.. என்னய்யா நடக்குது.. குருவிங்க எல்லாம் எலக்சன் டூட்டியில போயிட்டாங்களா?
மத்தபடி இந்தியா பயணத்துல ஒரு விசேஷமுமில்லை... மின்சார செலவே இல்லாமல் 24 மணிநேரமும் சுடு தண்ணீர் வசதி தரும் அருமையான மெட்ராஸ் வெயில்.. ரொம்ப நாளக்கப்புறம் அட்ரீனலின் அதிகரிக்க வைக்கும் சென்னை சாலை பைக் பயணம்.. ரோஸ் கலர் தந்தூரி சிக்கனையே பார்த்து சலிச்ச நாக்குக்கு வகையா அஞ்சப்பரிலிருந்து விருதுநகர் வரை தேடி தேடி சிறிதளவு ஈயப்பட்ட தென்னிந்திய நடப்பன ஊர்வன வகைகள்.. மத்தபடி ப்ளான் பண்ணிட்டு போன சில பல வேலைகள்..
ப்ளான் பண்ணாம சைக்கிள் கேப்ல நடந்தது வலைப்பதிவாளர் சந்திப்பு... அறிமுகப்படுத்திக்கலாமா வேணாமான்னே போனவன், கூட்டம் முடியிறப்போ அறிமுகப்படுத்திக்கிட்டேன்... ஆனாலும் ஆஜானுபாகுவான மனிதர்னு என்ன பாத்து டோண்டு எழுதியிருந்தது கொஞ்சம் ஓவருங்கண்ணா. 6 அடி உயரமும் அதற்கேற்ற எடையும் (சரி ரெண்டு மாசமா ஜிம் பக்கம் போக முடியாம ஒரு 5 கி அதிகமாயிடுச்சி... அதுக்காக) இருந்தால் ஆஜானுபாகுவா. ஒரு வேளை jeune homme futé என்பதை அப்படி மொழிபெயர்த்துவிட்டாரா? இல்ல, எதிர் கட்சி ஆளுங்க கிட்ட பெட்டி வாங்கிட்டாரா? சரி ரைட்டு.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...
ஜெட் வேகத்தில் முடிந்த பெரிய வலைஞர்கள் கூட்டத்துக்கு பின்னாடி ஒரு குறு வலைஞர்கள் கூட்டம் நடந்தது... புளிக்க வைக்கப்பட்ட திராட்சை ரசம் மற்றும் பார்லி தண்ணீரோடு நடந்த இந்த குறுங்கூட்டம் "என்னை பொருத்த வரை" பெருங்கூட்டத்தை விட சுவாரசியமாக இருந்தது என்பதுதான் உண்மை. முந்தைய கூட்டம் வட்ட மேஜை மாநாடாக நடந்திருந்தால் ஒருவேளை என் எதிர்பார்ப்புக்கு நடந்திருக்குமோ என்னவோ. அல்லாமல் செவ்வக மேஜை மாநாடு என்பதால் யார் என்ன பேசுகிறார்கள் என்பதே மற்றவருக்கு தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ, கூட்டத்தின் பெரும்பான்மையான நேரம் பேச்சு போலியை பற்றி இருந்தது என்று டோண்டு எழுதியதை படித்தவுடன் "அப்படியா" என்று கேட்க தோன்றியது :)
**
வலையில ஐஐடி ப்ரச்னை ஆரம்பிச்சப்போ ஊருக்கு போனேன். கருத்து சொல்லவே முடியல.. நம்ம கருத்து எவனுக்கு வேணும்கிறது ஒரு பக்கம்னாலும் ஊரே நம்ம கருத்த எதிர்நோக்கி வாய பிளந்துகிட்டு உக்காந்து இருக்கிற மாதிரியும் நாம பெரிய கருத்துவியாதி மாதிரியும் செல்ஃப் மார்க்கெட்டிங் பண்ணாத்தான் shine பண்ண முடியுமாமே இந்த காலத்துல.. அது மட்டுமில்லாம சும்மாவெல்லாம் கருத்து சொல்ல முடியுமா.. அதனால ஒரு ப்ரூப், ஒரு ஆத்தண்டிசிட்டிக்கின்னு ஐஐடி அறிவிப்பு பலகை பக்கத்துல குந்தி ஒரு போட்டோ எடுத்துகிட்டேன்.. கூடுதல் தகுதிக்காக ஐஐடி உள்ள ரவுண்டானா வரைக்கும் உலாத்திட்டு வந்தேன்... இனி ஐஐடிக்குள் உலாத்தியவன் என்ற முறையில் நானும் சவுண்டு விடலாம்.. (நான் உடுறதுக்கு முன்னாடி ஐஐடில என்ன ப்ரச்னை எதுக்கு ப்ரச்னைன்னு எதுவும் சொல்லிடாதீங்கப்பு.. அரைகுரையா விட்டாத்தான் சவுண்டுக்கே மதிப்பு...)
**
அவனவன் சிங்கப்பூர்ல உக்காந்துகிட்டு சிலுக்குவார்ப்பட்டிக்கும், குவைத்துல உக்காந்துகிட்டு குஜிலியம்பாறைக்கும் தொகுதி அலசல் பண்ணும்போது நான் தமிழ்நாட்டுல சுற்றுப்பயணமே போயிட்டு வந்துட்டு அலசாம இருந்தா நல்லாவா இருக்கும்... பண்ணிடுவோம். அதாவது நான் பயணம் செஞ்ச வண்டி சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், பாண்டிச்சேரி, கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி, சேத்தியாதோப்பு, திண்டிவனம், மேல்மருவத்தூர், தாம்பரம், சைதாப்பேட்டை ஆகிய ஊர்ங்கல்ல வரும்போதெல்லாம் நான் முழிச்சி பாத்து "என்ன ஊருப்பா"ன்னு கேட்டு கண்ணாடிய இறக்கு எட்டி பாத்தேன்... பண்ருட்டியில பலாப்பழம் வாங்கினோம். பாண்டியிலயும் திண்டிவனத்துலயும் பெட்ரோல் அடிச்சோம். இது போதாதா தொகுதி அலசலுக்கு..
மேல இருக்கிற ஊருங்க எல்லாத்தையும் ஒரு வெள்ள பேப்பர்ல எழுதிகோங்க. பக்கத்துலயே அந்த ஊர் வேட்பாளருங்க எல்லார் பேரும் எழுதிக்கோங்க. வேட்பாளருங்க பேர் தெரியாட்டாலும் ஒண்ணியும் ப்ரச்னை இல்ல.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணின்னு பொதுவா எழுதிக்கோங்க.. அதுல உங்களுக்கு பிடிச்ச வேட்பாளர் அல்லது உங்க அய்யா, அம்மா, அப்பத்தா, தோட்டத்துல புல்லு புடுங்கற பெரிய மூக்கி, மாடு மேக்கிற கொண்ண வாயன் இவங்களுக்கு பிடிச்ச வேட்பாளர் பேர போல்டு பண்ணி ஹைலைட்டர் வச்சி கலர் அடிங்க.. ஆச்சா, முடிஞ்சிது தொகுதி அலசல். "என் கணிப்புப்படி"ன்னு எல்லாருக்கும் படிச்சி காமிங்க... காப்பிரைட் நன்றின்னு நம்ம பேர சொல்லிடுங்க..
**
ஊருக்கு போனதில நிறைய புஸ்தகங்கள் வாங்கிட்டு வந்திருக்கேன்... புஸ்தகம் பேரா, நீங்க வேற.. சும்மா இலக்கியத்துல முங்கி முத்தெடுக்கிறவன்னு பீலா வுடுறதுக்காக புஸ்தகம் வாங்குறோம்.. நானும் வாங்கினேன்னு நாம்பாட்டுக்கு பீலா உட நீங்க பாட்டுக்கு ஆஹா இந்த புஸ்தகமான்னு எடக்கு மடக்கா விளக்கம் கேட்டு வைக்க, நானும் பி.காரன் வாந்தி எடுத்தா மாதிரி எதுனா எழுதறதுல என்ன பிரயோசனம் சொல்லுங்க.. அதனால என்னைக்காவது சுறுசுறுப்பு வந்து எதுனா புஸ்தகத்த படிச்சா பேர சொல்றேங்க..
அப்பால வேற என்ன நடக்குது நாட்டுல.. நம்ம சைடுல ஒண்ணியும் பெரிய விஷயமில்லை... ஜெட்லாக் (இதுக்கு தமிழ்ல என்னப்பா) எல்லாம் தீந்தவுடனே விலாவாரியா சந்திப்போம்னு ஒரு சிறு பீட்டர மட்டும் விட்டு இப்போதைக்கு உத்தரவு வாங்கிக்கிறேன்...
தமிழ்ப்பதிவுகள்
