<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

இது நம்ம ஆறு


என்னையும் ஆறில் இழுத்து இந்த பதிவு வெளிவர காரணமாக இருந்ததற்காக SK மற்றும் இலவசகொத்தனார் இருவருக்கும் தர்ம அடி தருபவர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்... சரி இனி, இது நம்ம ஆறு

காவேரி (மாயவரம்)

சென்னையில் இருந்து பேருந்து மார்க்கம் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் "கால்டெக்ஸ் ஸ்டாப் எல்லாம் எறங்கு" என்று கேட்ட பிறகு தும்மல் வந்தால்கூட கண்ணை திறந்து கொண்டே தும்மவும்... இல்லையெனில் "பொதுப்பணித்துறை :: காவேரி ஆறு" என்ற பலகையை தவற விட்டுவிடுவீர்கள். இது என்ன மாயவரத்தின் கூவத்துக்கு கூட காவேரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள், மாயவரத்துக்காரர்களுக்கு தமிழ்ப்பற்று (?!) சாஸ்தி என்று புது விருந்தினர்கள் வியக்கலாம்.. ஆனால் இங்கு இப்படி பரிதாபமாக காட்சி தருபவள், நம் எல்லாருக்கும் தெரிந்த, வருஷா வருஷம் அரசியல் கொண்டாடப்படும் நம்ம ஹீரோயின் காவேரிதான்...

இந்த சீக்கு கோலம் இன்றய நிலைமைதான்... கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு மருதக்காரர்கள் அடிக்கும் கூத்துக்கு சற்றும் சளைக்காமல், மாயவரத்தின் சுத்துப்பட்டி பதினெட்டும் கூடி கும்மாளமடித்து பதினெட்டாம் பெருக்கு கொண்டாடிய அந்த கால காவிரியின் ரேஞ்சே வேறு.. பெரிசுகள் சொல்வது போல அதெல்லாம் ஒரு காலம்... ஒரு காலம் என்றால் என்னவோ 1800கள் அல்ல, வெறும் 15-20 வருடங்கள்தான்...

நான் சின்ன பையனாக இருக்கையில் பொ.ப.துவின் போர்டையெல்லாம் பார்த்த ஞாபகம் எல்லாம் கிடையாது. முழுப்பரீட்சை லீவுக்கு ஊருக்கு செல்லும்போது பெரும்பாலும் கால்டெக்ஸ் நிறுத்தம்தான். என்னதான் கூட்டம் இருந்தாலும் அந்த காலத்தில் தடம் எண் 12/21 ரங்கா நிற்காமல் சென்றதில்லை. பட்டணத்து கண்டக்டர்களின் சூது வாது எல்லாம் கிராமத்து கண்டக்டர்கள் கத்துக்கொள்ளாத இன்னொசண்ட் காலம். முண்டியடித்து ஏறினால் கொஞ்ச நேரத்தில் தாத்தா பாட்டி ஊர். பஸ்சை விட்டு இறங்கினால் காவேரியை தாண்டிதான் தாத்தா வீட்டுக்கு செல்ல வேண்டும்.. அதாவது நான் தாண்டிசெல்வதுதான் காவேரி என்று நினைத்திருந்தேன்.. ரொம்ப காலத்துக்கு அப்புறம்தான் அது காவேரியின் கிளை வாய்க்கால் என்று தெரிய வந்தது.

சம்மரில் தினமும் இரண்டு வாய்க்கால் தாண்டிச்சென்று காவேரியில் நீச்சலடிப்போம். ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனி சிமெண்டு படித்துறைகள் இருக்கும். இரண்டுக்கும் இடைவெளி கூப்பிடு தூரம்தான்... எதிர்த்துறையில் மண் படித்துறைகள்... பொதுவாக ஆண்கள் பெண்கள் பகுதி இடையில் எல்லைக் கண்ணியம் - ரகசிய பார்வை OK - காக்கப்படும்... பொடிசுகளுக்கு யாருடன் போகிறோம் என்பதை பொருத்து இறங்குவதற்கு மட்டும்தான் படித்துறை... இறங்கியபின்பு எல்லைக்கட்டுப்பாடோ உடைக்கட்டுப்பாடோ இல்லை... ஆண்களும் பெண்களும் அருகருகே எதிர் எதிரே குளித்தாலும், ப்ரச்னை ஏன் சில்மிஷம் கூட பார்த்த ஞாபகம் இல்லை. எல்லாம் ஒரே கிராமம், எதாவது சில்மிஷம் செய்தால் ஊரில் மொத்து உண்டு என்பதாலா, இல்லை அந்த வயதில் சில்மிஷங்களையெல்லாம் கண்டு கொள்ளும் ஞானம் இல்லாததாலா தெரியவில்லை. வீட்டில் இருந்து அழைத்து செல்லும் பெரிசுகள் துணி தோய்த்து காயவைத்து, குளித்து முடித்து காயவைத்தவற்றை எடுத்துக்கொண்டு "டேய் போதும் வாங்கடா ரொம்ப நேரமாச்சி" என்று சொல்லிக்கொண்டே நாங்கள் வருகிறோமா இல்லையா என்று கூட பார்க்காமல் போய்விட்ட பிறகும் கொஞ்ச நேரத்துக்கு தண்ணீரில் கூத்தடித்து, உள்ளங்கையும் விரல்களும் நிறைய சுருக்கங்கள் விழுந்து கலர் மாறிய பின்பு பொறுமையாக கரையேறி அந்த சுடுமணலில் வெறுங்காலோடு ஈரம் சொட்ட சொட்ட 1 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டுக்கு ஓடிப்போவோம். சமயங்களில் காவிரிக்கரையில் பரலோகம் போன ஆத்மா ஏதாவதுக்கு கருமாதி நடந்தால் சிறிது நேரம் நின்று பார்ப்போம்... அன்று இரவு நிலாச்சோறும் சுண்டக்குழம்பு (முதல் நாள் மீதிய நன்றாக சுண்டும் வரை கொதிக்க வைப்பது) சாப்பிடும்போது பேய்க்கதைகளும் போனஸாக பேய்க் கனவும் கண்டிப்பாக உண்டு... என்னதான் பாவம் என்று போதிக்கப்பட்டாலும், காவிரியில் மூச்சா போவதும் "காத்து குமிழி" விடுவதும், பின்பு சாமி சிறுவர்களை தண்டிக்காது என்று நமக்கு நாமே திட்டத்தில் சமாதானம் சொல்லிக்கொள்வதும் தினமும் நடக்கும் விஷயம்.

சமயங்களில் காவிரியில் இருந்து பெண்கள் வீட்டுக்கு தண்ணீர் கொண்டு செல்வார்கள். பெரியவர்களுக்கு குடம் என்றால் சிறுமிகளுக்கு தோண்டி.. தோண்டி என்பது 1:2 அல்லது 1:3 proportionல் அளவில் சிறிதாக்கப்பட்ட குடம். பக்கத்து வீட்டு ராணி ஏதோ ராங்கி பண்ணியதற்காக அவள் முக்கால் கி.மீ தூரம் கஷ்டப்பட்டு கடந்த பிறகு ஒரு பிடி மணலை அள்ளி அவள் தோண்டியில் போட்டதற்காக நான் வாங்கிய அடியை பார்த்த பிறகு அந்த லீவு முழுசுக்கும் "கஸின்ஸ்" என் அப்பாவிடம் ஐஸுக்கு காசு கேட்கவில்லை.

காவிரியில் தண்ணீர் இருந்தால், அல்லிக்குளத்தில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும். பாம்புகள் கண்ணுக்கு தட்டுப்படும்போது மட்டும் பயமாக இருக்கும்... மற்றபடி காவேரி பகல் கோட்டா என்றால் அல்லிக்குளம் மாலை கோட்டா... யார் அதிக நேரம் தண்ணீரில் முங்குவது என்ற போட்டியில் அதிக நேரம் முங்கியதில் நான் சாம்பியன் பட்டம் வாங்காத நாள் ஒன்று உண்டென்றால் அது யாருக்கும் தெரியாமல் நான் மூச்சு பிடிக்க உபயோகப்படுத்தும் அல்லித்தண்டு சொதப்பிய நாளாகத்தான் இருக்கும்... குளத்தின் மறுகரையில் துறை உண்டு... ஆனால் இங்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை... மாடுகளை குளிப்பாட்டும் துறைக்கு ஆணாவது பெண்ணாவது, பேதம் என்ன வேண்டிக்கிடக்கு.. அந்த குளத்தின் தண்ணீரை அதிகம் கலக்குவது எருமைகளா நாங்களா மாடு மேய்ப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்...

காலமாற்றத்தில் 'காவிரியில் தண்ணி திறக்கிறான்' என்று காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை பார்ப்பது ஒரு வருடாந்திர வைபவமாக ஆனது.. நுங்கும் நுறையுமாக எல்லா கழிசடைகளையும் அடித்துக்கொண்டு தண்ணீர் நம்மை கடந்து போகும் அன்று மட்டும் வீச்சு அதிகமாக இருக்கும் என்று குளியல் கட்.

போன வருசம் போனபோது பார்த்ததில் சிமெண்ட் படித்துறை என்ற விஷயமே சிதிலமாகி காணாமல் போயிருந்தது.. அங்கங்கே மண் தோண்டப்பட்ட பள்ளங்கள்... ஊர் விசேஷங்களுக்கு பயன்பட்ட, விசேஷம் இல்லாத நாட்களில் ஓடிப்பிடித்து விளையாட பயன்பட்ட, ஏகப்பட்ட பறவைக்கூடுகளுக்கு சரணாலயமாயிருந்து "வாழ்ந்த" அந்த ஆலமரத்தின் எச்சம் மட்டும் கொஞ்சம் போல் மிச்சம் இருந்தது... வெறும் இருபதே வருடங்களில் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக விளங்கிய காவிரி கலாச்சாரமே அந்த கிராமத்தில் இருந்து முற்றிலுமாக அழிந்து ஒழிந்து போய்விட்டது.

காவேரி (வல்லம்படுகை கொள்ளிடம்)

மாயவரத்துக்கு எப்போதும் பஸ் பயணம்தான்... பஸ் கொள்ளிட பாலத்தை கடக்கும் ஒவ்வொரு முறையும் ரயில் பாலம் பார்ப்பது மிகவும் முக்கியம்.. அறுகோணத்தை அறுத்து வரிசையாக அடுக்கி வைத்த மாதிரி இருக்கும் அந்த கார்டரில் எப்பொழுதும் ஒரு மாற்றமும் இருந்ததில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் அதை எண்ண தவறியதேயில்லை... அந்த பாலத்தை ரயிலில் போய் பார்க்க வேண்டும் என்று எப்போது கேட்டாலும் கிடைக்கும் பதில் "அடுத்த முறை ரயிலில் போகலாம்"... இந்த கேள்வியும் வாக்கியமும் மாறியதில்லை... அறிஞர் அண்ணா இறந்த போது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள ரயில் இன்ஜின் டிரைவரின் எச்சரிக்கையையும் மீறி ரயிலின் மேற்கூரையிலெல்லாம் உட்கார்ந்து மக்கள் பயணம் செய்ய, கூறை மீது வந்தவர்கள் பாலம் அடித்து பரலோகம் போனார்கள் என்று கேள்விப்பட்டது கட்டுக்கதையா இல்லையா என்று சரியாக தெரியவில்லை...

மீசை முளைத்த பின்பு காசு கிடைக்கும்போதெல்லாம் ஓசி பைக்கில் கொள்ளிடத்துக்கு சாப்பிட போவோம். கொள்ளிடத்தில் ஒரு ஓலைக்குடிசையில் மலிவு விலையில் வீட்டு சாப்பாடு... பிரஷ்ஷாக பொறித்த மீன்தான் ஸ்பெஷாலிட்டி என்றாலும் எல்லா கறி வகைகளும் கிடைக்கும். கடைசியில் தயிரை வெட்டி எடுத்து கொடுப்பார்கள்... போகும்போது வண்டி ஓட்டுவதற்கு இருக்கும் போட்டி உண்ட மதமதப்பில் வரும்போது இருக்காது... இத்தனைக்கும் கொள்ளிடக்கரை வரைதான் ரிடர்ன் ஜார்னி... கொள்ளிடக்கரையில் வண்டியை சாய்த்துவிட்டு, மணலில் கட்டையை சாய்த்தால் சாயங்காலம் வரை தூக்கம்... பின்பு ஒரு குளியல் போடுவிட்டு பொழுது சாய வீடு... சில சமயம் வல்லம்படுகையில் கள் குடிக்க ஒரு கும்பல் போகும்... ஆனால் நான் போனதில்லை (இதிலெல்லாம் சந்தேகப்படக்கூடாது... சொன்னா நம்பணும்) கள் குடித்த கும்பல் வந்து முதலை பார்த்தோம், அதில் ஒரு முதலை நம்ம இவனை இழுக்க பார்த்தது, எட்டி உதைத்து தப்பினான் என்று கட்டிய கதைகள் ரொம்ப பிரபலம்... அந்த முதலைகளை இவர்கள் கள் குடிக்கும் முன்பு பார்த்தார்களா கள் அடித்த அப்புறமா என்று யாருமே கேட்கவில்லை...

அகண்ட கொள்ளிடத்தில் முழுக்க தண்ணீர் சென்று நான் பார்த்ததே இல்லை... போன முறை ஊருக்கு போனபோது கொள்ளிடம் அகலத்தில் மட்டும் இல்லாமல், உயரத்திலும் நிரம்பி எந்தளவு ஊருக்குள் தண்ணி வந்தது, எங்கெங்கே வண்டியை நிப்பாட்டி இருந்தார்கள், எவ்வளவு நாளுக்கு பிறகு எப்படி வந்து ஊர் வந்து சேர்ந்தார்கள் என்றெல்லாம் வண்டி ஓட்டுனர் விவரித்ததை கேட்டபோது நம்பவே முடியவில்லை...

காவேரி (ஒகேனக்கல்)

முதன்முதலில் பார்த்த அருவி ஒகேனக்கல்... கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நுழையும் இடம் ஒகேனக்கல். ஹோ வென்ற சத்தத்துடன் விழும் தண்ணீரின் வேகத்தில் அந்த இடம் புகை மாதிரி காட்சியளிப்பதால் அது ஒகேனக்கல் - கன்னடத்தில் ஹொகே என்றால் புகை - என்று சொன்னார்கள்... காலுக்கு கீழே ஓடும் இந்த தண்ணீர்தான் நெடும் பயணத்துக்கு பின்பு நம்மூரையும் தொட்டுக்கொண்டு பூம்புகார் வரைக்கும் பயணிக்கிறதா என்று கற்பனையிலேயே சிலிர்த்துக்கொண்டு அருவிக்கு நடக்கும்போது மாலீஷ் பண்ணிக்கொள்கிறவர்களை பார்க்கலாம்... எண்ணெய் மசாஜுக்குத்தான் மாலீஷ் என்று பெயர்... உடம்பெல்லாம் எண்ணெயை தடவி நன்றாக நீவி விடுவார்கள்... பின்பு முதுகில் கொத்து பரோட்டா.. கடைசியில் நம் கழுத்து கை கால் என்று பார்ட் பார்ட்டாக திருப்பும்போது கடக் முடக் என்று நன்றாகவே சத்தம் கேட்கும்... காசு கொடுத்து காண்டு வாங்குவது என்பது இதுதான்... பார்க்க பயமாக இருந்தாலும் சுகமாகவே இருக்கும்... ஆனால் இப்பொழுது செய்து கொள்ளும் தைரியம் இல்லை... காசு கொடுத்து உட்கார்ந்த பின்பு இவர்களெல்லாம் certified massage therapistஆ என்ற சந்தேகம் வரக்கூடாது... வந்தாலும் கேட்காதீர்கள், ஒகேனக்கலில் இருந்து புத்தூருக்கு இன்னமும் பஸ் விடவில்லை... மாலீஷ் முடிந்த பின்பு அப்படியே போய் அருவியில் கொஞ்ச நேரம் நின்றால் சோப், சீயக்காய் என்று எதுவுமே தேவைப்படாமல் எண்ணெய் இருந்த இடம் தெரியாமல் போகும்... குளித்து முடித்து தலை துவட்டிக்கொண்டு அருவியில் எதிர்நீச்சல் போட்டு ஏறும் மீனை பிடிக்கும் இளைஞனை வேடிக்கை பார்த்துக்கொண்டே படியேறினால் பிடிக்கப்பட்ட அந்த மீன் மிளகாய் தூள் தடவி தயாராக இருக்கும்... ஒரு வார்த்தை - மீன் பொறிக்கப்படும்...

காவிரியில் பரிசல் பயணம் முக்கியம்... எம்.ஜி.ஆரின் டம்மி மலை மேலிருந்து ஆற்றில் விழுந்த இடம், ரஜினி தலை காட்டிய ஆங்கிலப்படம் - go for gold -> bloodstone - எடுக்கப்பட்ட காட்சிகள் என்று காட்டிக்கொண்டே அப்படியே ஒரு சுழலில் விட்டு காண்பிப்பார்கள்... பூலோக சொர்க்கத்தை ஒரு கணம் கண்டு மீண்டு வரலாம்... ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்த ஒகேனக்கல், யார் வந்தாலும் சென்று சென்று ஒரு கட்டத்தில் கூட்டமக பைக் எடுத்துக்கொண்டு சென்று அருவியில் குளிக்கக்கூட செய்யாமல் வெறும் மீன் மட்டும் வாங்கிக்கொண்டு ஆற்றை தாண்டி அந்த பக்கம் மணலில் உட்கார்ந்து பீர் அடித்து திரும்பும் அளவுக்கு போர் அடித்துவிட்டது...

பியாஸ் ஆறு

குலு மணாலி சென்று கொண்டிருந்த போது ஏதோ ஒரு கணத்தில் திடீரென தென்பட்ட அந்த ஆறு ரொம்ப தூரத்துக்கு எங்கள் வண்டி கூடவே வந்து கொண்டிருந்தது... (இல்லை எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தது?) வெள்ளை வெளேரென்று நுரை ததும்ப ஓடிக்கொண்டிருந்த அந்த தண்ணீரை 50-100 அடி உயரத்தில் இருந்த சாலையில் பயணித்த வேனின் கண்ணாடி வழியாக பல கி.மீருக்கு அமைதியாக சலிக்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தேன்... பக்கத்தில் அந்த வட இந்திய பம்ளிமாஸ் வந்து உட்கார்ந்ததை கூட கவனிக்கவில்லை... "ரொம்ப அழகா இருக்கில்ல" என்று கேட்டு அவளும் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு துறுதுறுவென ஆர்வமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததும் ஆற்றின் அழகே கூடிய மாதிரி இருந்தது... இப்போது ஆற்றை மட்டும் ரசிக்க தோன்றவில்லை... வேனை விட்டு இறங்கியவுடன், எப்படியாவது அந்த தண்ணீரில் ஒரு குளியல் போடலாம் என்று வந்த எண்ணம் ஐஸை உருக்கி செய்த மாதிரி இருந்த அந்த தண்ணீரை தொட்டவுடன் போயே போச்... அன்று இரவு நடந்த கேம்ப் ஃபயரில் பம்ளிமாஸின் நளினமான ஆட்டத்தில் ஜோடி சேர்ந்து ஆட எதேச்சையாக கிடைத்த வாய்ப்பும் கூச்சம் (!?) காரணமாக நிறைவேறவில்லை என்றாலும் அந்த பயணம் பசுமையாக நினைவில் நிற்க அந்த இயற்கையும் ஆறும் மட்டும் காரணம் இல்லை என்பதுபோல் சில சமயம் தோன்றும்...

நயாகரா ஆறு

தர்மபுரியில் வாழ்ந்தபோது யார் வந்தாலும் செல்வது ஒகேனக்கல் என்றால் ohioவில் வாழ்ந்த போது யாரும் வந்தால் சுத்தி பார்க்க போவது நயாகரா... அமெரிக்க அருவி, குதிரை லாய அருவி இரண்டையும் அருகில் சென்று பார்க்கும் maid of the mistல் போனாலும் நயாகரா தண்ணீரை அனுபவிக்கலாம் என்றாலும், விளிம்பில் இருந்து நொடிக்கு 168,000 கன அடி விழும் தண்ணீரை முழுமையாக அனுபவிக்க சிறந்த வழி அருவிக்கு சிறிது தூரத்தில் class 6 rapidsல் நொடிக்கு 212,000 கன அடி தண்ணீரை கையாளும் நயாகரா ஆற்று நீரோட்டத்தை எதிர்த்து 1500 குதிரை சக்தி ஜெட் போட்டில் பயணிப்பது... போட் கம்பெனி தரும் உடைகள் நனையாமல் இருக்க அல்ல... ஆக்ரோஷமான அந்த தண்ணீரின் வேகத்தில் முழுக்க நனைத்தபின்பு தண்ணீரின் ஜில்லிப்பில் விரைக்காமல் கதகதப்பாக இருக்க....

அமேசான் ஆறு

பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையோரம் கொஞ்ச நாட்கள் இயற்கை வாழ்வு வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு திரும்பி சில நாட்கள்தான் ஆகிறது... ஆற்றங்கரையோரம் காலையில் காட்டில் "அவுட்டிங்" (நமக்கு சின்ன வயசுலயே பழக்கமான விசயம்தான்), piranhaவுக்கு பசியெடுக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டே ஆற்றுக்குளியல், செயற்கை சமாச்சாரங்கள் கலக்காத உணவு வகை, பிரன்ஹா பிடித்தது - நாம் பிரன்ஹா பிடிக்கலாம், அதுதான் நம்மை பிடிக்கக்கூடாது - என்று இன்னமும் கனவு மாதிரி தோன்றும் அந்த நிகழ்வை எழுத ஆரம்பித்தால் இது ஒரு மெகா தொடர் ஆகும் சாத்தியம் இருப்பதால் நம் ஆறு அனுபவங்களுக்கு ஒரு ச்சின்ன ப்ரேக்...

அறிவுப்பசி அண்ணாசாமி :: ஆறு / நதி இரண்டுக்கும் என்னங்கண்ணா வித்தியாசம் ?

பின்குறிப்பு :: கூவம் உட்பட பல ஆறுகளை மேம்போக்காக 'அனுபவித்து' இருக்கிறேன் என்றாலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆறுகளின் தண்ணீரை மட்டுமே உள்ளும் புறமும் முழுமையாக அனுபவித்திருக்கிறேன் என்பதால் இதர ஆறுகளை டீலில் விடுகிறேன். ஆமாம், ஆறு என்ற தலைப்புக்கேற்ப சரியாத்தானே எழுதியிருக்கிறேன், ஏன் எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறீர்கள்?



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


"அறிஞர் அண்ணா இறந்த போது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள ரயில் இன்ஜின் டிரைவரின் எச்சரிக்கையையும் மீறி ரயிலின் மேற்கூரையிலெல்லாம் உட்கார்ந்து மக்கள் பயணம் செய்ய, கூறை மீது வந்தவர்கள் பாலம் அடித்து பரலோகம் போனார்கள் என்று கேள்விப்பட்டது கட்டுக்கதையா இல்லையா என்று சரியாக தெரியவில்லை..."
நிஜமாக நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



ஆகா முகமூடி ஆறம்பிச்சிடாருயா... நயாகரா போகும் பொழுது அந்த ஜெட் போட் அனுபவத்தை மிஸ் பண்ணிட்டேனே..
 



ஒரு 'ஆற்றாமை'யோடு உங்க ஆறு பதிவைப் படிச்சேன். இதுலேயும் சில இடங்கள் நான் பார்க்க'வேண்டிய'
லிஸ்ட்டில் இருக்கேப்பா.
 



முகமூடியாரின் இப்படியானப் பதிவுகளைத் தானே நாங்க எதிர்பார்க்கிறோம்... அம்புட்டு ஆத்துல்லயும் இறங்கி எந்திரிச்ச பீலிங் தலைவா.. தூள் ஆறு!!!!
 



'ஆறு' போட அழைத்ததை ஏற்று
ஆற்று வெள்ளத்தில் அழைத்துச் சென்று
ஆறும்வரை அள்ளிச் சென்ற
ஆரு முகம்னு தெரியாத
ஆறடி ஆளுக்கு நன்றி!

மிகவும் சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
 



¿ýÚ Ó¸ãÊ ..
 



நீங்க சொன்ன ஆறில், மூன்று பாத்தாச்சு. மிச்சத்தை சீக்கிரமே பார்க்கனும்.

இருந்தாலும் மாயவரத்தில் அந்த பலகை ரொம்பவே அதிகம். அசிங்கப்படுத்தி இருக்கானுங்க...

//அகண்ட கொள்ளிடத்தில் முழுக்க தண்ணீர் சென்று நான் பார்த்ததே இல்லை... போன முறை ஊருக்கு போனபோது கொள்ளிடம் அகலத்தில் மட்டும் இல்லாமல்//
போன வருடத்துக்கு முன்பு வரை நானும் பார்த்தில்லை. போன வருடம் பெய்த பேய் மழையின் போது கொள்ளிடம் நிறைந்து இருந்தது. பாலத்தை தொட்டுக் கொண்டு தண்ணீர் ஒடியதை காணும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சில நாட்களிலே தண்ணீர் வடிந்து விட்டது.
 



எங்க ஊரு காவேரிய பாத்ததில்லியா முகமூடி? இப்ப வேனாம். 20 வருஷத்துக்கு முந்தி.
அதான் பாட்டுல கூட வருமே 'குடந்தையில் பாயும் காவிரி அழகோ' அப்படீன்னு. ஒரு வார்த்த சொல்லுங்க.
 



//பியாஸ் ஆறு

குலு மணாலி சென்று கொண்டிருந்த போது ஏதோ ஒரு கணத்தில் திடீரென தென்பட்ட அந்த ஆறு //

Rothang paas-il, ithu uruvaakum idamenRu solli oru idaththai paarththa njaapakam.

kukai maathiri uLLe pOkum anththa panikk kukaiyil vazukki vizuntha anupavamum uNdu.

thanks for the sweet memories. :-)
 



சரி, உங்க கருத்து ??