<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஜெய்ஹிந்தா? ஜெய்கிந்தா? முன்னூட்டம் 1


சியாச்சின் (ரோஜா தோட்டம்) என்ற பொருத்தமற்ற பெயர் கொண்ட, இந்தியாவும் பாகிஸ்தானும் தினசரி வாழ்வா சாவா யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அரவமே இல்லாத பிரதேசத்தில் 18,600 அடி உயரம் வரை போய் ஜவான்களுடன் இரண்டு வாரம் வசித்த இந்தியா டுடே முதுநிலை செய்தியாளர் டபுள்யூ.பி.எஸ்.சித்துவும், முதன்மை போட்டோகிராபர் பிரமோத் புஷ்கர்ணாவும் உருவாக்கிய, இந்தியா டுடே மே 21 - ஜூன் 5, 1992 இதழில் வெளியான "தேசம் மறந்த யுத்தம்" கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகள்...

**



.... கீழ் முகாமில் உள்ள 'சியாச்சின் போர்ப் பள்ளி'யில் முதலில் 15 விதமான அயிட்டங்களைக் கொண்ட பனி ஆடை அணிவது எப்படி என்று புதியவர்கள் பழக வேண்டி இருக்கும். சுவிஸ் தயாரிப்பான குல்லாய், கையுறை, சட்டை, பாண்ட், உல்லன் சாக்ஸ் எல்லாம் அணிய வேண்டும். பனிச்சரிவின் குகை போன்ற பகுதிதான் வகுப்பறை. புதியவர்களுக்கு இங்குதான் பாடம் நடக்கும். பனிப்பிளவு, பனிச்சுவர், பனிக்குகைகள் பற்றி சொல்லிக்கொடுத்து எச்சரிப்பார்கள். மிக உயரமான காவல் நிலைகளை அடைய நீண்ட நேரம் அவர்கள் மலையேறும் போதும், பனிச்சரிவுப்பகுதியில் தங்கியிருக்க வேண்டிய சமயத்திலும் இவைகளையெல்லாம் அவர்கள் சமாளிக்க வேண்டும். காலையில் ஜாவான்கள் வெள்ளை நிற குளிர் தடுப்பு அங்கி அணிந்து பனி மீது தங்கள் முதல் அனுபவம் பெற சுறுசுறுப்பாக காலடி எடுத்து வைப்பார்கள்.

தாக்கு பிடிக்கும் சோதனையுடன் பயிற்சி முடிவடைகிறது. 10 பேர் கொண்ட பிரிவுகளாக இரவு முழுவதும் பனிச்சரிவில் தங்கியிருக்க வேண்டும். பிழைத்திருப்பவர்கள் பரீட்சையில் பாஸ். திரும்பி வரவில்லையெனில் தேடும் குழு அனுப்பப்படும்.



பனிச்சரிவுப்பகுதிக்கு அனுப்புவதே ஒரு திருவிழாதான். கிட்டத்தட்ட எல்லாருமே குளித்து ஷேவ் செய்து கொள்கிறார்கள். அடுத்த 3 மாதங்களுக்கு இந்த "சுகபோகம்" கிடைக்காது. பலர், தங்கள் வீட்டுக்கு நீண்ட பூடகமான கடிதம் எழுதுகிறார்கள். தாங்கள் எங்கு, எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சொல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. அதனால்தான் பூடகம். அடுத்து துணிமணி பாக்கிங். உஷ்ணம் தரும் ஆடைகள், ஸ்லீப்பிங் பேக், குடும்பத்தினரின் போட்டோ, புத்தகங்கள், சோப்பு, சீப்பு வகையறா இவற்றுடன் ஸ்டவ்வை மறக்காமல் எடுத்துக்கொள்கிறார்கள். கெரசின் ஸ்டவ் மிகவும் முக்கியம். இரவில் உறைபனியிலிருந்து காத்துக்கொள்ள, பனியை உருக்கி குடிநீர் தயாரிக்க, முகம் கழுவிக்கொள்ள இது அவசியம். இவை எல்லாவற்றையும் சுமந்து கொண்டு கீழ் முகாமிலிருந்து நான்கு நாள் நடந்து சென்றால் குமார் என்ற சப்ளை முகாம் 16,000 அடி உயரத்தில் வரும்....

**



....இடமே சொற்பம். அங்கு பதுங்கும் வாய்ப்பு அறவே கிடையாது. சில சமயங்களில் சமயலறையும் டாய்லெட்டும் ஒரே அறையில்தான். சில இடங்களில் குடிசைகள் சரியாக இருந்தாலும் கூட, இயற்கையின் சீற்றம் அதை கற்கால சமாச்சாரமாக்கி விடுகிறது. அக்டோபரில், பூமிக்கு மேலே இருந்த குடிசைகள் பனியில் முழுவதும் புதைந்து விடுகின்றன. அதனால் அதில் நுழைய வீரர்கள் காலி பேரல்களால் ஆக்கப்பட்ட 15 அடி நீளக்குழாய்கள் மூலம் ஊர்ந்து செல்ல வேண்டும். அடுத்து குகை போன்ற இருளடைந்த அறை. அங்கு ஒரே ஒரு கெரசின் ஸ்டவ் வெளிச்சம் தருகிறது. பின்னர் சில கெரசின் விளக்குகள். இந்த இடம் வெதுவெதுப்பாக இருப்பதுதான் ஆச்சர்யம். ஆனால் ஒரே புகை மயம். வியர்வை நாற்றமடிக்கும் உடைகள், சில உணவுப் பொருட்கள் இவற்றின் நெடி முகத்தை துளைக்கிறது. இதற்குள் 8 பேர் வசிக்கிறார்கள். இங்கேயே தூக்கம், பிரார்த்தனை, அவ்வபோது பரஸ்பரம் முறைத்துக்கொள்வது எல்லாமே...

பனிச்சரிவில் உணவு அனைத்தும் டின்களில்தான் வருகின்றன. கிராமப்புறங்களில் இருந்து வரும் ஜவான்களுக்கு சாக்லேட், பிஸ்கட் சுத்தமாக பிடிப்பதில்லை. ஜவான்களுக்கு கூடுதல் சத்துள்ளவற்றை வழங்குவதில் குறியாக இருக்கும் அதிகாரிகள் வித்தியாசமான உணவு வகைகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் ஜவான்களுக்கு பசியே எடுப்பதில்லை. 3 மாத சியாச்சின் பணிக்காலத்தில் கிட்டத்தட்ட 7லிருந்து 12 கிலோ எடை வரை இழந்து விடுகிறார்கள்.



முன்னணி நிலைகளில் மாமூல் வேலை நடக்க 2 அம்சங்கள் தேவை. பகைவர் நடமாட்டமும், வானிலையும். வானிலை மோசமாக இருந்தால் எல்லாரும் கூண்டு அல்லது கூடாரம் அல்லது குடிசைக்குள்ளேயே முடங்கி விடுவார்கள். சுமார் 20,500 அடியில் இருக்கும் 25க்கும் மேற்பட்ட நிலைகளில் இரண்டு மணிநேரத்திலிருந்து இரண்டு வாரம் வரை மோசமான வானிலை நீடிக்கும். அப்போது வெளியுலக தொடர்பே இல்லாமல் போய்விடும். ஆளைப்புதைக்கும் பனியை அப்புறப்படுத்துவதுதான் அவர்களின் அப்போதைய ஒரே பணி...

**

.... ராஜ்புத் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரபான் (28 வயது) என்ற ஜவானின் இறுதிச்சடங்கைப் பார்த்தோம். 20,000 அடி உயரத்தில் இருக்கும் பஹல்வான் என்ற முன்னணி நிலையில் இருந்தவர் அவர். அடிக்கடி பாகிஸ்தானியர்களின் தீவிர பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகும் இடம் அது. ஆனால் சந்திரபான் இறந்தது பகைவர்களின் குண்டுகளால் அல்ல. அந்த உயரத்தில் அழுத்தம் குறைந்த காற்றினால் நுரையீரலில் ரத்தம் கட்டிபோனதால் ஏற்பட்ட மரணம் அது. வெறுமையான அந்தப்பனிப்பிரதேசத்தில் எரியும் சிதையைச் சுற்றி நிற்கும் ஆலிவ் பச்சை உடையணிந்த ஜவான்களுக்கு அது வழக்கமாகிப் போன ஒரு சடங்கு.

சந்திரபான் உண்மையில் 18 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் பானின் மனைவிக்கு தன் கணவனை எரித்த சாம்பலும் அவர் பெற்ற விருதுகளும் கிடைக்கும். இந்த பெண் அதிர்ஷ்டசாலி. மற்றவர்களுக்கு இது கூட கிடைக்காது. அவர்களின் கணவர்கள் பனிப்பாறைப் பிளவுகளில் சிக்கி பனி மலைகளுக்கு அடியில் புதைந்து போனவர்கள் அல்லது உறைபனிப்புயலில் காணாமல் போனவர்கள்....

**

....சாதாரண ராணுவ வீரரை பொறுத்த வரை, எல்லை தாண்டி வரும் எதிரியை விட சியாச்சின் போர்முனைதான் பெரிய சவாலாக இருக்கிறது. காரணம்: இறந்தவர்களில் 97 சதவீதம் பேர் "வானிலை மற்றும் நிலப்பரப்பின் தடை"களால் இறந்திருக்கிறார்கள். ஒருமுறை இங்கு பணிபுரிந்தவர்கள் மீண்டும் 15 ஆண்டுகளுக்கு திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள். அந்த அளவிற்கு இங்கே நாளைக் கடத்துவது மிகவும் துன்பகரமானது. இந்திய ஜவான்களின் சாவு விகிதம் திடுக்கிட வைப்பதாக உள்ளது :: 63 சதவீதம். அதாவது அங்கு அனுப்பப்படுபவர்களில் பாதி பேருக்கு சாவு நிச்சயம்....




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


முகமூடி, பல முறை கண்ணில் பட்ட விஷயம் என்றாலும், ஒவ்வொரு முறையும் படிக்க, படிக்க மனம் பதறித்தான் போகிறது.
இந்த பலிகளுக்கு, சீனாவிடமே இந்த இடத்தை ஒப்படைத்துவிடலாமே?
ஜெய் ஹிந்த் ( வாழ்வில் முதல் முறையாய் சொல்கிறேன்)
 



படிச்ச உடனே மனசு கனமாயிடுச்சு.. உயிரைக் கொடுத்து நாட்டைக் காப்பாத்துறாங்கன்னு சொல்லுறது எந்தளவுக்கு உண்மைங்கறது இந்தக் கட்டுரையைப் படிச்ச உடனே முகத்தில் அறைஞ்சாப்பல்ல இருக்கு.
 



எதிரி பாக்கிஸ்தானா? சீனா என்று எழுதிவிட்டேன்.
 



முகமூடி,

அருமையான பதிவு!


//இந்திய ஜவான்களின் சாவு விகிதம் திடுக்கிட வைப்பதாக உள்ளது :: 63 சதவீதம்//

இப்போது இந்த அளவுக்கு இல்லை....

இத்தனை கஷ்டங்களிலும் நமது ஜவான்கள் சியாச்சினுக்கு செல்ல ஆர்வமாக தான் உள்ளார்கள்.வருடா வருடம் அத்தனை ஜவான்கள் முன்வருகிறார்கள்.

சியாச்சினில் ஒரு tenure பனிபுரிவதை பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்!
 



//இந்த பலிகளுக்கு, சீனாவிடமே இந்த இடத்தை ஒப்படைத்துவிடலாமே?//

உஷா அவர்களே...
விடிய விடிய ராமாயனம் கேட்டு... :)

சியாச்சின் என்பது நமக்கு பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீருக்கும் இடையில் உள்ள ஒரு பகுதி.இந்த பகுதியில் ஒரு glacier இருப்பதால் அங்கே 1971 ஆம் ஆண்டு line of control எங்கு இருக்கிறது என்று முடிவுசெய்யாமல் விட்டுவிட்டார்கள்.

இந்த பகுதி பாகிஸ்தான் கட்டுபாட்டில் சென்றால் மிக சுலபமாக பாதி காஷ்மீரை விழுங்கிவிடமுடியும் எதிரியினால்.

வெறும் வீம்புக்கு யாரும் இத்தனை உயிர்பலிகள் கொடுப்பதில்லை!

///சீனாவிடமே இந்த இடத்தை ஒப்படைத்துவிடலாமே?
//

சீனாவுடன் தகறாரில் இருப்பது அக்சாய்-ச்சின்.இது முழுக்க-முழுக்க சீன கட்டுபாட்டில் இருக்கிறது.


ஜெய் ஹிந்த்!
 



அப்படியே மாப்ளாஸ்தான், காஷ்மீர், திருபுரா, ஹிமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா என ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு எதேச்சதிகார கருத்தியல்களின் கீழ் ஜாலியாக பிச்சை எடுத்துக்கொண்டு உயிர்வாழலாம்.
 



முகமூடி,
இது இப்படி இருக்க எப்படி வெளியுறவுத்துறையால் கைகுலுக்க முடிகிறது அடுத்த நாட்டுடன்?
அவர்கள் பக்கமும் இப்படிச் சாவுகள் இருக்குமே?

படிக்கப் படிக்க நெஞ்சு வலிக்கிறது.எத்தனை முறை இது போல் படித்தாலும் ஒன்றும் செய்ய இயலாத கையாலத்தன்மை வெட்கமாக இருக்கிரது என்னை நினைக்கயிலேயே.
 



போன பதிவுக்கு சிரித்துச் சிரித்து பதில் எழுதத் தாமதம் ஆயிற்று என்றால்,
இதைப் படித்ததும் நெஞ்சு கனத்து, கண் பனித்து , கை உறைந்து போயிற்று!
என்ன கடினமான பயிற்சி, மற்றும் இயற்கைச் சீற்றத்துஇற்கு இடையே நம் ஜவான்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

தரமான பதிவு!

தேசத்தை விட்டுப் போனால், சிலருக்கு தேசப்பற்று மறந்து போகுமோ?

எப்படி 'பேசாமல் கொடுத்து விடலாமே' எனச் சொல்லத் தோன்றுகிறது?

"ஜெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..........ஹிந்த்!"
 



என்ன உஷா, இவ்வளவு சுலபமா சொல்லிடிங்க. அவர்க்களிடம் கொடுக்க தான் இவ்வளவு பொருள், உயிர்க்கள், அவர்க்களின் உணர்ச்சிகள், அவர்க்களின் தியாகம் அனைத்தையும் இழ்ந்தோம். இதற்கு முடிவு என்று ஏற்படும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. கண்டிப்பாக இதுக்கு முடிவு ஏற்படுத்த முடியும். அதற்கு நமக்கு தேவை ஒரு நிலையான ஆட்சி, உறுதியான பிரதமர், ஒத்துழைக்கும் மக்கள். தீர்வு எந்த வழியிலும் ஏற்படுத்த முடியும்.
முகமூடி பொது பார்வைக்கு கொண்டு வந்தற்கு நன்றி.
இது காணும் போது எல்லாம் உள்ளம் கொதிக்கின்றது. கண்ணீர் மல்க, உடம்பு சிலிர்க்க சொல்லிகின்றேன் - ஜெய்ஹிந்து.
 



//63 சதவீதம். அதாவது அங்கு அனுப்பப்படுபவர்களில் பாதி பேருக்கு சாவு நிச்சயம்....//

:(((((( பாதி பேருக்கு மேல்!!!! :(((((((
 



சமுத்ரா, மியூஸ், நாகை சிவா! சொன்ன வார்த்தைகள், இன்னும் எத்தனை நாட்களுக்கு என்ற இயலாமையின் வெளிப்பாடு.
 



இவ்வளவு கஷ்டப்பட்டு இவர்கள் நமக்காக உயிர் துறக்கிறார்கள்.ஆனால் இங்கே ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு தாய் நாட்டை திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.ஒருநடை அவர்களை சியாச்சினுக்கு அனுப்பி வைத்தால் என்ன?

நெஞ்சு நெகிழ வைத்த பதிவு.

தம்பி சமுத்ரா.அது யாருங்க உங்க அவதார்ல இருக்குற பெரியவரு?
 



திரு முகமூடி,

சியாச்சினில் ஆர்மி மருத்துவத் துறையில் ஒரு வருடம் வாழ்ந்த என் உறவினர் கூறிய பல உண்மை நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.

தொலைத்தொடர்பு என்பது எவ்வளவு தூரம் முன்னேறியிருப்பினும் இயற்கையின் கொடூரமான தாக்குதல்களின் போது அவர்கள் வெளியுலகத்தைத் தொடர்பு கொள்ளவே பல நாட்களாகும்.

இவர்களுக்கு பனி-ஸ்கூட்டர் வேண்டுமென்று பாதுகாப்புத் துறைக்குப் போன கோப்பினை அங்கிருந்த அதிகாரிகள் தாமதப்படுத்தினர் என்பதற்காக,
அப்போதைய பாதுகாப்பு அமைச்சராய் இருந்த திரு.ஜார்ஜ் பெர்னாண்டஸ் 3 அதிகாரிகளை சியாச்சினுக்குச் சென்று நேரில் நிலைமைக் கண்டு
வருமாறு (தண்டனை) பணித்தார். கேவலம் வயிற்றுப்போக்கு, சுரம், ஜலதோஷம் போன்ற காரணங்களைக் காட்டி அவர்கள் செல்லவில்லை.

இப்போதாவது அவர்களுக்கு ஸ்நோ-ஸ்கூட்டர் கிடைத்ததா என்று தெரியவில்லை. இதுதான் அந்த ஜவான்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை.

ஆனால் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படாமல் தமது கடமையைச் செய்து போய்க்கொண்டே இருப்பார்கள்.

ரோஜா என்றவொரு ரம் மிலிட்டரி கேண்டீனில் கிடைக்கும். அப்போது (1990'களில்) ஒரு Full ரூ 12.00'தான். எல்லையோரங்களில் பல ஜவான்களுக்கு கதகதப்புக் கொடுப்பது "ரோஜா" போன்றவையே. ஒரு வேளை சியாச்சின் என்பது காரணப் பெயரோ? :-) சில நாட்களில் ரேஷன் வரத் தாமதமானால் ரம்மையும் ரேஷன் முறையிலேயே பெற்று குளிரோடு போராடவேண்டும்.

என்னுடைய பணிக்காலத்தில் பல ஜவான்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தங்களது பணிக்காலம் முடிந்தாலும் கிடைக்கும்
பென்ஷனுடன், மிலிட்டரிக்காரனுக்கு பிற பெரிய வேலைகள் சமுதாயம் வழங்க முடியாத போது, குடும்பம் நடத்த, மீண்டும் DSC எனப்படும்

அரசாங்க செக்யூரிடி வேலைகளுக்கே மீண்டும் வருவார்கள். இவர்களுக்கு 'வர்தி'யே (இராணுவச் சீருடை) வாழ்க்கையாகிப் போய்விடும். வாழ்நாள் முழுதும்
குடுப்பத்தோடு ஒன்ற முடியாத அவலம் நிறைய ஜவான்களுக்கு உண்டு. அதீத மன உளைச்சல்களால் அவதியுறும் இவர்களை அதிகாரிகள் மிகுந்த கருணையோடு பார்த்துக் கொள்வார்கள். சாப்ஜியுடனான (அதிகாரியுடனான) ஒரு ஜவானின் பிணைப்பு சொற்களால் வருணிக்க முடியாது. எந்த உத்தரவு வந்தாலும் விறைப்பான ஒரு சல்யூட்... எம்மதத்தினராக இருந்தாலும் "ராம் ராம் ஸாப்" என்ற ஒப்புதலுடன் பணியாற்றுதல்...

பணிக்காலத்திலும், அதன் பின்னரும் என்றுமே ஜவான்கள் "சே ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்?" என்று சலித்துக் கொள்வதில்லை. மேலாக
தாமொரு ஜவான் என்பதில் அதீத பெருமிதம்தான் கொள்வார்கள்.

இடுகைக்கு நன்றி என்று எளிதாக சொல்லி விடலாம். பொறுமையாக, படங்களோடு, எளிமையாக, உறைக்கும் உண்மைகளை எடுத்திட்டமைக்கு மிக மிக நன்றி. முன்னோட்டமே இப்படியென்றால் வரும் இடுகைகள் எப்படியிருக்குமோ? யே தில் மாங்கே மோர் (உள்ளம் கேட்குமே அதிகம் என்ற பெப்ஸி வாசகம்) என்று கோஷமிட்டு கார்கில் போரில் பங்கு பெற்றோரின் கோஷம் தான் என் பதிலும் கூட.

ஜெய்ஹிந்த்!!!
 



ஒவ்வொரு முறையும் பாலைவனக்குளிரில் உறையும் போது என்னை நான்
சூடு படுத்திக்க்கொண்டதுண்டு , ந்மது படை வீரர்களை மனத்தில் இருத்திக்கொண்டு.

கனத்த இதயத்துடந்தான் எழுதுகிறேன், உறைய வைக்கும் குளிரில் அடகு வைத்த
உயிரை இந்த சகோதரர்கள் மீட்டெடுக்கும் நாள் எந்த நாளோ.

உலகத்தின் எந்த முடுக்கில் இருந்தாலும் நம்மைப் போன்ற NRI களுக்கு
(never returning indians) இதயத்தில் மட்டுமல்ல, உடம்பின் ஒவ்வொரு அணுவின் துடிப்பிலும் தேசப்ப்ற்று உண்டு.

எல்லாம் வல்ல இறைநிலை இந்தச் சகோதரர்களுக்கு உறுதுணையாய்
நிற்கட்டும்.

ஜெய் ஹிந்த்.
 



ஒவ்வொரு முறையும் பாலைவனக்குளிரில் உறையும் போது என்னை நான்
சூடு படுத்திக்க்கொண்டதுண்டு , ந்மது படை வீரர்களை மனத்தில் இருத்திக்கொண்டு.

கனத்த இதயத்துடந்தான் எழுதுகிறேன், உறைய வைக்கும் குளிரில் அடகு வைத்த
உயிரை இந்த சகோதரர்கள் மீட்டெடுக்கும் நாள் எந்த நாளோ.

உலகத்தின் எந்த முடுக்கில் இருந்தாலும் நம்மைப் போன்ற NRI களுக்கு
(never returning indians) இதயத்தில் மட்டுமல்ல, உடம்பின் ஒவ்வொரு அணுவின் துடிப்பிலும் தேசப்ப்ற்று உண்டு.

எல்லாம் வல்ல இறைநிலை இந்தச் சகோதரர்களுக்கு உறுதுணையாய்
நிற்கட்டும்.

ஜெய் ஹிந்த்.
 



Dear Mugamoodi

Great Job proceed. Some soldiers would lose their potency due to long years of stay in such extreme cold weather. When they retire from service, they hardly get an job and mostly they have settle for meagre Rs.1000 per month watchman job.

My cousin, 43 who was a GunMan in this glacier point is looking for a job after retirement. He could not get a decent job even after 3 years of search. That is how we respect the people who are protecting our borders and saving our lives.

Jai Hind
 



//தம்பி சமுத்ரா.அது யாருங்க உங்க அவதார்ல இருக்குற பெரியவரு?//


அந்தப் பெரியவர் யாரா?!!!!

அவர்தாங்க ஜெனரல் மானேக் ஷா!


"ஜெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..........ஹிந்த்!"
 



வணக்கம் முகமூடி!

அருமையான பதிவு.முன்னரே இது பற்றி சில பத்திரிக்கைகளில் படித்து இருந்த போதிலும் மீண்டும் படிக்கையில் ஒரு வகையான விவரிக்க இயலாத உணர்வு என்னை கவ்வியது! சியாச்சின் பகுதிக்கு சென்ற முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜியார்ஜ் பெர்னான்டஸ்.துணிவு மிக்கவர் ஆனால் அவர் காலத்தில் தான் சவப்பெட்டி ஊழல் நடந்தது!
 



இந்த துன்பம் ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

1. சீனாவுக்கும், பாக்கிஸ்தானுக்கும் நில வழி தொடர்பு ஏற்பட்டபின் 'காரகோரம் நெடுஞ்சாலை' வழியாக அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டன.

2. இந்தியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் நேரடி நிலத்தொடர்பு இருப்பது வர்த்தகத்துக்கும், பாதுகாப்புக்கும் நல்லது.

3. இனி வரும் காலங்களில் நாடுகளுக்கிடையே நிகழப்போகும் போர்களுக்கு முக்கிய காரணியாக இருக்கப்போவது நீர். பாரத, பாகிஸ்தானிய, சீன ஆறுகளின் நீராதாரமாக இருப்பது இமயமலை சிகரங்களில் இருக்கும் க்ளேசியர்கள்தான்.

இப்பொழுது புரிகிறதா, இமயமலை சிகரங்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதென்று?

நாம் எல்லோரும் அந்த வீரர்களுக்காக உச் கொட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுகிறோம், மூன்று மாதம் கழித்து இதே தலைப்பில் இன்னொரு பதிவு வரும்வரை.

எல்லா பனிபாதுகாப்பு ஆடைகளும், தளவாடங்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
இந்த பனி-ஆயத்த ஆடைகளையோ, தளவாடங்களையோ இந்தியாவிலேயே தயாரித்து குறைந்த விலையில் நமது ராணுவத்துக்கு வழங்குவதைப் பற்றி ஏன் யாரும் யோசிப்பதில்லை?

இதுவும் ஒரு வகையில் நாட்டுப்பற்றுதானே?
 



ஜெய்ஹிந்த் !!! ஜெய்ஹிந்த் !!!
 



முகமூடி

அருமையான அங்கத உணர்வுடனும், சமயோதிடமுள்ள நகைச்சுவையுணர்வும் உங்கள் எழுத்தில் மிளிர்திறது. உங்களது நீரிய எழுத்துப் பணி தொடர என் அன்பான வாழ்த்துக்கள். எனது ஆதரவும் பாராட்டுக்களும் என்றும் உங்களுக்கு உண்டு.

உங்கள் எழுத்துப் பணியைத் தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பு நண்பன்
ச.திருமலைராஜன்


பி.கு இப்ப என்ன திடீரென்று ஆதரவு தருகிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்ப இணையத்தில் யாராவது யாருக்காவது ஆதரவு தருவதுதான் ·பாஷனாமே, நான் எனக்குப் பிடித்த பதிவரான முகமூடிக்கு எனது ஆதரவினை அளிக்கிறேன். அவ்வளவுதான்.
 



வேறு ஒரு நாட்டை பிடித்து வைத்துக்கொண்டு (காஷ்மீர்)...........
நல்ல நாட்டுப்பற்று :)
 



வேறு ஒரு நாட்டை பிடித்து வைத்துக்கொண்டு (காஷ்மீர்)...........
நல்ல நாட்டுப்பற்று :) /////////

ஆமாங்க அனானி.
பாகிஸ்தான் வேறொரு நாட்டை(POK எனும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை) சட்ட விரோதமாக பிடித்து தான் வைத்துள்ளது.

சுட்டி காட்டியமைக்கு நன்றி.
 



//எல்லா பனிபாதுகாப்பு ஆடைகளும், தளவாடங்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
இந்த பனி-ஆயத்த ஆடைகளையோ, தளவாடங்களையோ இந்தியாவிலேயே தயாரித்து குறைந்த விலையில் நமது ராணுவத்துக்கு வழங்குவதைப் பற்றி ஏன் யாரும் யோசிப்பதில்லை?//

ராயுடு, இத பத்தி எல்லாம் தான் நான் என்னாட மிலிட்டர் பதிவில் எழுதிகிட்டு இருக்கேன்.வந்து பாருங்களேன்.

அப்புறம் எல்லோருக்கும் ஒரு செய்தி :
இப்போது சியாச்சின் பகுதியில் நமது மெட்ராஸ் ரெஜிமெண்ட வீரர்கள் நிறுத்தபட்டுள்ளனர்.
 



சரி, உங்க கருத்து ??