<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சரக்கு வச்சிருக்கேன்


பன்னிரண்டாவது முடித்து ரிசல்டுக்கு காத்திருந்த நேரம். வீட்டில் அனைவரும் ஊருக்கு போயிருந்தார்கள். வீட்டுக்கு வெட்டி அரட்டை அடிக்க வந்திருந்த மலையாளத்தானிடம் என்னவோ யோசனையில் கேட்டேன்...

"தண்ணியடிக்கிறாங்களே, அப்படி என்னதாண்டா இருக்கு அதில"

அவனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும்.

"எனக்கும் ரொம்ப நாளா ஆசதாண்டா, ஆனா அத பத்தி ஒரு வெவரமும் தெரியாம, என்ன பண்றதுன்னு இருந்தேன்"

"ஓ அப்ப அடிச்சி பாக்கலாங்கற? சரி இன்னிக்கி நல்ல நாளு.. வீட்டுல யாரும் இல்ல... என்ன சொல்ற"

கடைக்கு போக வர கிடைக்கும் மிச்ச காசு சேமிப்பில் முதன் முதலில் கை வைப்பது ஒரு கெட்ட பழக்கத்துக்கா என்று மனதின் ஒரு மூலையில் குற்ற உணர்ச்சி எல்லாம் வரவில்லை... பீர் பாட்டில் எவ்வளவு விலை இருக்கும் என்று தெரியாததால் குத்து மதிப்பாக கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து திணித்துக்கொண்டு அப்படியே சைக்கிளை உருட்டினோம். யாராவது ஒயின் ஷாப்பில் பார்த்து வீட்டில் போட்டு கொடுத்தால் என்ன ஆகும் என்று நினைக்க கூட முடியவில்லை. சரி அதெல்லாம் இப்ப எதுக்கு... தியேட்டருக்கு பக்கத்தில் இருந்த ஒயின் ஷாப் வசதியாக தோன்றியது. தற்காலிகமாக ஒயின் ஷாப்புக்கு பின்புறம் தியேட்டருக்கு சைக்கிள் விடும் ஸ்டாண்டு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதுதான் நல்ல கடை. யாராவது பார்த்தால் கூட படத்துக்கு சைக்கிள் விட போனவன்னு நினைபாங்க.. சடுதியில் வாங்கி விட வேண்டும்.

"ஏங்க இருக்கறதிலேயே சின்ன பீரா ஒண்ணு குடுங்க"

"1/2 பீர் எதுவும் கூலிங்ல இல்லியே கண்ணு, பரவாயில்லையா?"

"பரவாயில்ல கொடுங்க..."

நம்ம அவசரம் நமக்கு... 11 ரூபாயோ என்னவோ, கல்யாணியோ ப்ளாக் நைட்டோ, சரியாக ஞாபகம் இல்லை. வாங்கி பேண்டில் சொருகிக்கொண்டாயிற்று. வீட்டுக்கு வந்தது தெரியவில்லை. அப்போதெல்லாம் பீர் க்ளாஸ் (mug) என்ன சாதா க்ளாஸே வீட்டில் கிடையாது. நெஸ்கபே காபி எப்பவோ வாங்கிய போது இனாமாக கிடைத்தது குடிக்கும் ஷேப்பில் இல்லை.. என்ன இருந்து என்ன, பீர் க்ளாஸில் குடிக்க வேண்டும் என்றெல்லாம் அறியும் அளவா நமக்கு ஐ.கூ... இருக்கவே இருக்கே எவர்சில்வர் டம்ளர்கள்.

"ஏண்டா படத்துல எல்லாம் வருமே... நெய்யில வறுத்த முந்திரி பருப்பு அப்படி எதுவும் இல்லியா"

"ஏன் அப்பிடியே கையில சுத்திக்க கொஞ்சம் மல்லிப்பூ, சிச்சுவேசனுக்கு தோதா சிலுக்கு சுமிதா டான்ஸ் எல்லாம் வேணுமின்னு கேளேன்... நக்கலா.. வீட்டுல எப்பனா பலகாரம் பண்ணா போடறதுக்கு 10 கிராம் முந்திரி வச்சிருக்காங்க.. அத காலி பண்ணா கத கந்தல், வேணா ஊறுகா இருக்கு பாரு அத தொட்டுக்குவோம்"

எல்லாம் சரி, பீர் பாட்டிலை எப்படி திறப்பது.. நெயில் கட்டரை வைத்து பாட்டில் ஓப்பன் பண்ணலாம் என்பதை கூட கற்றுக்கொடுக்காமல் என்னை வளர்த்திருக்கிறார்களே... இப்போது ஓப்பனருக்கு என்ன செய்வது..

"இப்ப என்னடா பண்றது.."

"இரு தெரு முக்கு கடையில போயி மேட்டர வாங்கியாறேன்."



"என்ன தம்பி எதுனா வவுறு சரியில்லையா... என்ன திடீர்னு கலரு சோடா"

"இல்ல கடைக்காரம்மா.. வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்கு, அதான்... அப்பிடியே ஓப்பனரும் கொடு."

"ஓப்பனரு ஒண்ணுதான் இருக்கு. அத உன்கிட்ட கொடுத்திட்டு நான் என்ன பண்றது. இங்கனதான இருக்கு வீடு. திறந்து தாரேன் அப்பிடியே எடுத்திட்டு போ. அதுக்குள்ள எல்லாம் கேஸு போகாது."

அடப்பாவி மொத்தமா காரியத்தையே கெடுத்திடுவா போலருக்கே.. கலரு வாங்கறதே ஓப்பனருக்குத்தானே..

"அட என்னமோ சோடா கடையாட்டம் பிகு பண்ணிக்கிறியே... இன்னும் 5 நிமிசத்துல எவன் வந்து கலரு வாங்க போறான்.. கொடு உடனே வந்து தந்திர்றேன்."

வீட்டுக்கு வந்தவுடன் அவசர அவசரமாக கலரை திறந்து ரெண்டு க்ளாஸில் ரொப்பிவிட்டு பீரை திறந்தால், சைக்கிளில் குலுக்கிய குலுக்கில் பொங்கி வழிகிறது. அவசர அவசரமாக ஓடிப்போய் தட்டை எடுத்து வருவதற்குள் தரையெல்லாம் பீர்.

"சரி முத முதல்ல அடிக்கிறோம், கால்வாசி பீரு பூமித்தாய்க்குன்னு நினைச்சுக்குவோம். வழியிற பீரை இந்தா இந்த எவர்சில்வர் தட்டில் புடிச்சி வையி. நான் அதுக்குள்ள ஓடிப்போயி நான் இந்த ஓப்பனரையும் காலி பாட்டிலையும் கொடுத்திட்டு வந்திர்றேன்."

என்னடா இது வந்த விருந்தாளி, காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்த மாதிரி ரெண்டு நிமிசத்துல கலர குடிச்சிட்டானா என்று கடைக்காரம்மா யோசித்திருக்க வேண்டும். அதையெல்லாம் எதிர்கொள்ள நேரமில்லை. வீட்டுக்கு ஓடு.

எல்லா முஸ்தீபுகளும் ரெடி. கொஞ்சம் சின்ன வெங்காயம், கொஞ்சம் ஊறுகாய். தம்ளரில் கொஞ்சம், சாப்பாடு தட்டில் கொஞ்சம் என்று பீர். குடிக்க ஆரம்பித்தத்தால் வாயில் வைக்க சகிக்கவில்லை. ஒரே கசப்பு. அடச்சே கருமம், இத எப்படிடா குடிக்கிறானுங்க.

அந்த நேரம் வெளியே சைக்கிள் பெல் சத்தம். கிளியும் கரிபால்டியும். அட எதிர்வீட்டு டீச்சர் மதிய சாப்பாட்டுக்கு வர்ற நேரம் இல்ல... தினம் மதியம் அவங்கள சைட் அடிக்கிறதுக்காக கிளி வேகாத வெயில்ல 2 மைல் சைக்கிள மிதிச்சிட்டு வருவான். நம்ம ஜன்னல் வழியா டீச்சர் வீட்டு வாசல் தெரியும். சும்மா தெரு முனையில இருந்து அவங்க வீட்டுக்குள்ள போற வரைக்கும், அப்புறம் சாப்பாடு முடிஞ்சி அவங்க வெளியில வந்து தெரு முனை வரைக்கும் சைட்டு. நடுவால இருக்க ஒரு மணிநேரம் வெட்டி அரட்டை நடக்கும்.

பகீர்னுச்சி... கிளிக்கு தெரிஞ்சா கதை கந்தலாயிடுமே... ஊர் உலகமெல்லாம் நம்ம பொழப்பு நாறிடுமே... அவசர அவசரமா பீர் பாட்டில என்ன பண்றதுன்னு தெரியாம ரூமுல சுருட்டி வச்சிருந்த மெத்தையில சொருகியாச்சி. அவசர அவசரமா தட்டையும் தம்ளரையும் கொண்டு அடுப்படியில போட்டுட்டு புடுதுணி (சூடான பாத்திரங்களை அடுப்பிலிருந்து இறக்க உபயோகப்படுத்துவது) எடுத்தாந்து பீரை தொடைக்குறதுக்குள்ள அவனுங்களே உள்ள வந்திட்டானுங்க...

"என்னடா, மலையாளத்தானும் நீயும் சேந்தா சும்மானா இருக்க மாட்டீங்களே... என்ன நடக்குது இங்க.. என்னவோ நாறுது வேற.." அவனுங்கள சமாளிக்கிறது பெரும்பாடா ஆய்டிச்சி. அவனுங்க போனப்புறம் மெத்தைக்குள்ள இருந்து பீர் பாட்டில டிஸ்போஸ் பண்ணா வீடு முழுக்க பீர் நாத்தம் அடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். எல்லாம் பிரமையா இருக்கும். கொஞ்சம் ஊதுபத்திய கொளுத்தி மெத்தைக்குள்ள எல்லாம் காட்டிட்டு, வீடு முழுக்க புகை போட்டாயிற்று. இருந்தாலும் ஊரிலிருந்து வந்து மெத்தையை பிரிக்கும் போது அவர்களின் விநோதமான பார்வையை எதிர்கொண்டபோது கொஞ்சம் திடுக்கென இருந்தது..


இத எப்படிடா குடிக்கிறானுங்க என்ற கேள்விக்கு ரெண்டு நாளில் விடை கிடைத்தது. கசப்புக்கு காரணம் பீர் கூலிங்க்ல இல்லாததே... சரி கூலிங்கோட அடிச்சி பாத்துறுவோம்..ஆனா ஊருக்கு போன ஆளுங்க அதுக்குள்ள வந்திட்டாங்களே.. மெடிக்கல் குண்டன பிடிப்போம். குண்டன் என் க்ளாஸ்மேட் மட்டுமல்ல அவங்க குடும்பமே எங்களுக்கு பேமிலி ஃப்ரண்டு... அவன் வீட்டில் மாடிக்கு போக சைடில் படிக்கட்டு என்பதால் வீட்டுக்குள் போகாமலே சைடு வழியாக மேலே சென்று விடலாம்.. ஆனா அவனோ ஒரு பழம்.. உதவிக்கு போயி அதுவே ரீகாயில் ஆகி, இவனே நம்ம வீட்டுல போட்டு குடித்திட்டா...

ஆச்சரியமாக, "அதனால என்னடா"ன்னான் அவன். ஆச்சரியம் அடங்குவதற்குள் ஃபுல் பாட்டில் பீர் வாங்கியாயிற்று. நெயில் கட்டரை வைத்து கூட பாட்டிலை திறக்கலாம் என்ற அளவு இப்போது அறிவு வளர்ந்திருந்தது. ஆனால் சித்திரை வெயிலில் கூலிங்காக வாங்கியிருந்தாலும் இளம்சூட்டில் இருப்பதாக ஒரு ஃபீலிங். குண்டன்கிட்ட சொன்னேன் "டேய் உங்க வீட்டுலதான் ஃப்ரிட்ஜ் இருக்குல்ல, நீ என்ன பண்ற, ரகசியமா போயி கொஞ்சம் ஐஸ் கட்டிங்கள எடுத்திட்டு வா. அப்படியே கொஞ்சம் ஊறுகாய் முடிஞ்சா எடுத்திட்டு வா.."

அவன் வருவதற்குள் நானும் மலையாளத்தானும் கிட்டத்தட்ட முக்கால் பாட்டிலை காலி பண்ணிவிட்டோம். இந்த வாட்டி கொஞ்சமா போதை ஏறிய மாதிரி இருந்தது. இப்ப வந்தான்

"ஏண்டா குண்டா, சட்னு வரவேண்டாம்? இவ்ளோ நேரமாடா எடுப்ப"

"இல்லடா, ஊறுகாய நல்லதா ஒரு ப்ளாஸ்டிக் தாள்ல போட வேணாமா? அதத்தேடுனேன். அப்புறம் ஐஸ் எடுத்திட்டு வரும்போது, அம்மா வேற பாத்திட்டாங்க, எங்கடா போறன்னு கேட்டாங்க... வெயில்ல வந்திருக்கன்னு உனக்காக எடுத்திட்டு போறேன்னு சொன்னேன்.. சரி அதுக்கு ஐஸ்வாட்டர எடுத்திட்டு போக வேண்டியதுதான, என்னத்துக்கு ஐஸ்னு கேட்டாங்க"

"நீ என்ன சொன்ன"

"இல்ல அவங்ககிட்ட பீர் இருக்கு, அதுல போட ஐஸ்தான் வேணுமின்னு சொன்னாங்க"



சைட் டிஷ்

% என் தனிப்பட்ட அபிப்ராயத்தின்படி டின் பியரை விட பாட்டிலில் அடைக்கப்பட்ட பியர் சிறந்தது.

% பாட்டிலோ டின்னோ, பியரை அப்படியே சாப்பிடக்கூடாது. பியர் மக்கில்(mug) ஊற்றியே அருந்த வேண்டும். அதுவும் மக்கை சாய்வாக பிடித்து க்ளாஸோடு க்ளாஸாக அல்ல. மக்கின் கால் பங்கு நுரை ததும்பும் அளவு நடுவில் ஊற்ற வேண்டும். அந்த நுரை, பியரின் நறுமணம் மற்றும் ஆவியாகும் பல சமாச்சாரங்களின் வலை போல் இருந்து பியரின் உண்மையான குணத்தை அறிய உதவும். இது போல் செய்வதால் வயிற்றை நிரப்பும் உணர்வை தராது.

% பியரில் உள்ள கார்போஹைட்ரேட்ஸே பியர் தொப்பைக்கு காரணம். கார்ப்ஸ் எல்லா சரக்கிலும் உள்ளது

% ஸ்காட்ச் விஸ்கியை எதுவும் கலக்காமல் அப்படியே குடிப்பதே ஸ்காட்சின் சுவையை முழுமையாக உணர உதவும். ஸ்காட்சோடு ஐஸை கலப்பது அதன் சுவையையும் நறுமணத்தையும் மட்டுப்படுத்தும் செயல். ஸ்காட்ச் தயாரிக்கப்படும் தண்ணீர் கூட அதன் சுவையை தீர்மானிக்கும் ஒரு காரணி. ஐஸ் என்பது நீங்கள் உங்கள் ஏரியாவில் கிடைக்கும் தண்ணீரை வைத்து தயாரிப்பது. ஸ்காட்சோடு கோக், பெப்ஸி போன்றவற்றை கலப்பது ஸ்காட்சுக்கு செய்யும் துரோகம்.

% "தோ மினிட்ஸ்" என்று சுலபமாக சில நிமிடங்களில் (என்) வீட்டில் செய்யப்படும் சுவையான இரண்டு பிரபல காக்டெயில்கள் :: ப்ளடி மாரி மற்றும் ஸ்க்ரூட்ரைவர்.

% liquer வகையை சேர்ந்த goldschlager பாட்டிலின் உள்ளே நிஜமான தங்கத்துகள்கள் இருக்கும். தங்கம் விக்கிற விலையில் $45 பாட்டிலுக்குள் எப்படி அவ்வளவு தங்கம் கட்டுப்படி ஆகிறது, உண்மையில் பாட்டிலில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று சில இளைஞர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். சுவாரசியமாக இருக்கிறது.


சரக்கும் சைடும் தொடர்ச்சி...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


St Patrick Day
வை பீரோட ஆரம்பிச்சி வைச்ச தலை நீங்க குடியும் குடுத்தனமாக வாழ்க என்று வாழ்த்த எனக்கு வயதில்லை

இன்னைக்கு ஏதாவது special பார்ட்டி உண்டா ??
 



நம்மோட ஃபேவரைட் -ஷீவாஸ் தான்.
Smirnoff + லெமனேடும் புடிக்கும்.

விஸ்கியோட ரெட்புல்ல கலந்து பாத்திருக்கீங்களா?

கொஞ்ச நாளா நம்ம ஆஸ்தான பார்மேன் மார்டினி மிக்ஸ்ல மாதுளம் ஜூஸு, அப்புறம் அரபு சரக்கையும் (பட்டைதான்) சேத்துடறாரு. நல்லாத்தான் இருக்குது.
 



கொசுவத்திச் சுருள் ஏத்தி, அப்பிடியே கண்கலங்க வச்சிட்டீங்க :)
 



//சேமிப்பில் முதன் முதலில் கை வைப்பது ஒரு கெட்ட பழக்கத்துக்கா என்று மனதின் ஒரு மூலையில் குற்ற உணர்ச்சி எல்லாம் வரவில்லை... //

reality rocks!!

//தரையெல்லாம் பீர்.//

A Historic Title!

========

Again
Chinnavan, NJ, Mugamoodi

;-)
--------------

Mugamoodi,
Visit Madhumitha's Blog, in search of you!

---------------
 



mugamoodi,
can you please tell me where can i get a template like yours?

thanks for the help.
 



red Bull can increase heart palpitation. the chemicals that increase epinepherin can do that. So if anyone wants to mix whisky with redbull, please be aware.
 



தகவலுக்கு நன்றி தேன் துளி. நானும் கேள்விபட்டிருக்கிறேன்.
 



உண்மையான கலக்கல் பதிவு..

வாங்கிய கலரை பீரோடு கலந்தீர்களா?:-))

கொசுவத்திச் சுருள் ஏத்தி, அப்பிடியே மிதக்க வைச்சிட்டீங்க :-))

புதிதாக வரும் சிறுவர்களுக்கான கையேடு தயாராகிறதா?..நடக்கட்டும் நடக்கட்டும்.. :-))
 



கொசுவத்திச் சுருள் ஏன் என்கடையிலே வந்து வாங்கலை?

என்னதான் 'தண்ணியடிச்சாலும்' எப்படிக் கடை மாறி வாங்கலாம்?:-)

மது வேற 'யார் இந்த முகமூடி?'ன்னு கேட்டாங்க, சென்னை விஜயத்துலே.
 



முகமூடி சொல்லவே இல்ல.

முகமூடி தான் முதல் பரிசாமே
வாழ்த்துகள் முகமூடி.

இன்னும் ஒரு வாரத்தில் வர்றேங்க.நெட்டிற்கு வந்து பப்ளிஷ் மட்டும் போட்டுட்டு ஓடறேன்.
மெதுவா எல்லோருக்கும் எழுதணும்

நன்றி முகமூடி
 



துளசிம்மா
நல்ல வேளையா தப்பிச்சேன்.மது ன்னு மட்டும் போட்டீங்க.
நான் பயந்துட்டேன்.இந்த பதிவ வேற வாசிக்கல.ஆனா தண்ணியடிக்கிறது பத்தி நீங்க எழுதியதும், மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு பத்தி சொல்லிடுவீங்களோன்னு பயந்திட்டேன்.நல்லவேளையா காப்பாத்திட்டீங்க
 



//மது வேற 'யார் இந்த முகமூடி?'ன்னு கேட்டாங்க, சென்னை விஜயத்துலே. //

க்கும்... துளசியக்கா முகமூடி யாருன்னு உம்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா? என்னை நம்பச் சொல்றீங்களா? முகமூடி யாருன்னுதான் உலகத்துக்கே தெரியுமே :-)

அப்டிப்போடு வீச்சருவாள! ;-)
 



மல மல மருத மல என்கிறார் சிலர்
அதுக் கேட்டு குசும்பாய் சிரிகிறார் வேறு சிலர்
சின்னத்தாய் புன்னகை புன்னகைக்கிறார் பலர்.
அன்னம்போல தண்ணீரை பிரிக்கிறேன் என்று
வாத்தாய் குதிக்கிறார் வேறு சிலர்
என் மரமண்டைக்கு எதுவும் புரியவில்லயே !
 



//வாங்கிய கலரை பீரோடு கலந்தீர்களா?:-))//

கலரை பீரோடு கலப்பதா? ஏம்ப்பா பிகரு சாரி கலரு கோச்சுக்காதா ரரா? ;-)
 



கலக்கல் போங்க...

இத படிச்சிட்டு கொஞ்ச நேரம் சிரிச்சிக்கிட்டே இருந்தேன்
 



//பன்னிரண்டாவது முடித்து ரிசல்டுக்கு காத்திருந்த நேரம். வீட்டில் அனைவரும் ஊருக்கு போயிருந்தார்கள். வீட்டுக்கு வெட்டி அரட்டை அடிக்க வந்திருந்த மலையாளத்தானிடம் என்னவோ யோசனையில் கேட்டேன்..//

அதே +2 லீவு, இங்கயும் ஒரு மலையாளத்தான்.. ஆனா, இங்க அவன் என்கிட்ட யோசனை கேட்டான்.. ம்ம்.. வீட்டுக்கு வீடு வாசப்படி.;-)
 



சின்னவன், st. patrick dayக்கு நான் பார்ட்டி கொடுப்பது இல்ல... நான் தமிழன்கறதால புனித பாட்ரிக் நாளுக்கு மட்டும்தான்...

*

பெத்த ராயுடு, எனக்கும் ஷீவாஸ் பிடிக்கும். மத்த உங்க 'கலக்கல்' சமாச்சாரம் முயற்சி செஞ்சது கிடையாது... அரபு சரக்குக்கு பெயர் எதுனா உண்டா?

*

VoW, இதெல்லாம் அரசியல்ல சகஜம்தானே..

*

ஞானபீட, இப்பத்தான ஒரு சூறாவளி ஓஞ்சிது.. இப்ப அடுத்ததா? நடத்துமய்யா, நடத்தும்..

*

அனானி, ப்ளாகர்ல கிடைத்த ஜெனரல் டெம்ப்ளேட்தான். நான் கொஞ்சம் எடிட் செஞ்சிகிட்டேன்.. வேறு விபரம் வேணுமின்னா கேளுங்க முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன்

*

நன்றி தேன்துளி.. இந்த பசங்க பொறுப்பாவே குடிக்கிறதில்லை. அதுக்கு ஒரு விழிப்புணர்வாத்தான் இந்த பதிவே (விழிப்புணர்வு வந்துச்சான்னு எல்லாம் கேக்க கூடாது)

*

ராம்கி, புதியவர்களுக்கு கையேடா... சரக்காராய்ச்சி என்கின்ற கடலின் கரையில் கூழாங்கல்லை பொறுக்கும் சிறுவன் நான்.. நான் போயி.. ஹிஹி
 



துளசி, கொசுவத்திக்கு முழு பேடண்ட் உங்களதுதானே.. நாங்கள்லாம் அப்பப்போ உடைஞ்ச துண்ட வச்சி ஏதோ புகை போடறோம்.. மது கேட்டதுக்கு என்ன பதில் சொன்னீங்க நீங்க :))

*

நன்றி மதுமிதா.. மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடுன்னு துளசி சொல்றது வேற மதுன்னு நினைக்கிறேன்.. (உங்க வீட்டுக்காரவங்க கிட்ட கேட்டா, இந்த மதுவத்தான்னு சொன்னாலும் சொல்லலாம்.. நாராயண.. நாராயண)

*
ஞான்ஸ், விளம்பரம் பண்றது எனக்கு பிடிக்கும், ஆனா பண்றது நானா இருக்கணும்.. இனி இந்த டகால்ட்டி வேலை பண்ணா, வாடகை வசூல் பண்றதா இருக்கேன்.

*

முகமூடி யாருன்னு உலகத்துக்கே தெரியுமா, குசும்பன் நீங்க V for vendetta பத்தி பேசறீங்களா, இல்ல Zorro Mask பத்தி பேசறீங்களா?

*

அன்புத்தம்பி, கொஞ்சம் பிரியறாப்புல எயுதக்கூடாதா?

*

சசி, உங்களுக்கு ஏதும் கொசுவத்தி சுத்திய அனுபவம் உண்டா?

*

ராசா, மலையாளத்தான் உங்ககிட்ட கேட்டது சரி.. அதுக்கப்புறம் என்ன நடந்தது? அதுல்ல முக்கியம்... (வேணா ஐயன் வெளியூரு போற சமயமா ஒரு பதிவ போட்டு திரும்பி வரதுகுள்ள பதிவ தூக்கிருங்களேன்) அப்புறம், நம்ம காட்டுல கள்ளு சமாச்சாரம் எதுவும் உண்டா...
 



I fully enjoyed this post. B'cauz i had lot of exp. on this. :-)

- Suresh Kannan.
 



சரி, உங்க கருத்து ??