<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சாதி ஒழிப்பு, இந்து மத ஒழிப்பு - ஜெயஸ்ரீ கருத்து


சமீபத்தில் சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? என்ற தங்கமணியின் பதிவில் ஜெயஸ்ரீ எழுதியிருந்த ஒரு பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.. பொதுவாக என்னை கவர்ந்த எழுத்துக்களை என் நூலகம் பதிவிலே சேமிப்பது வழக்கம்.. ஆனால் இக்கருத்தை இங்கு 'சேமிக்க' விரும்புகிறேன்.

இதனை தனிப்பதிவாக வெளியிடுவதில் ஆசிரியருக்கு ஏதும் ஆட்சேபம் இருப்பின் எனக்கு அறியத்தரவும். இப்பதிவில் ஆசிரியரின் கருத்தை அப்படியே வெளியிட்டிருக்கிறேன். இதில் வேறு சில பதிவர்களின் பெயர்களும் வருகின்றது. அப்பதிவர்களுக்கு இதில் ஏதும் ஆட்சேபமிருப்பின் எனக்கு தெரியப்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்களின் பெயரை நீக்கிவிடுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பதிவு சம்பந்தமாக யாராவது கருத்து எதுவும் கூற விரும்பினால் தயவு செய்து அதை தங்கமணியின் பதிவிலேயே தெரிவிக்க வேண்டுகிறேன். இதன் மூலம் அப்பதிவு ஒரு முழுமையான விவாதக்களமாக இருக்கும். நான் லைம்லைட்டுக்கு வருவதற்கும் தங்கமணியின் பதிவை திசை திருப்புவதற்கும் இந்த வேலையை செய்கிறேன் என்று குற்றம் சாட்ட விரும்பி பேனாவை கூர்தீட்டுபவர்கள், please, get a life...

**

ஜெயஸ்ரீ ::

நான் வேதநூல்கள், மனு சாமாசாரங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளுகிறேன். கண்ணாலாயே பார்க்காத புத்தங்களையும் அதில் இருக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படிப் பேசமுடியும்? நான்தான் என்று இல்லை, ஸ்ரீரங்கத்தில் பூணூல் போட்ட ரோட்டில் போகும் 10 பையன்களைக் கூப்பிட்டுக் கேட்டாலும் அதையேதான் சொல்வார்கள். யார் இந்த மனு? கீதை தான் வேதமா? அதைத்தான் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் ஒரே ஒரு ஸ்லோகமாவது அல்லது அதன் பொருளாவது என்னையும் சேர்த்து எத்தனை இந்துக்களுக்குத் தெரியும்? மற்ற மதத்துடனான ஒப்பீடலும் அதைவிட எந்தவிதத்தில் இந்துமதம் குறைந்துவிட்டது என்ற கேள்வியையும்கூட தவிர்க்கிறேன். மற்ற மதங்கள் எப்படி இருந்தாலும், கேள்வி இந்துமதத்தில்மேல் மட்டுமே எழுப்பப்பட்டால் அதற்கான பதிலைத்தான் தரவேண்டுமேயன்றி பிற ஒப்பீடுகள் தேவை இல்லாத இடத்தில் பேசவேண்டாம்.

மேலே இருக்கும் இத்தனை அறியாமையுடனும் நான் இந்துதான். அப்படித்தான் ரெகார்டில் இருக்கிறது. இடையில் இருக்கும் ஜாதிகளைவிட்டுவிட்டு நேராக கடைசிக்குப் போகிறேன். என் வாழ்க்கையில் தீண்டாமையோ, பஞ்சமர்களோ எங்கே வந்தார்கள்? ஒரு தோட்டியை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து என்வீட்டில் பாம்பே கக்கூஸ் என்று சொல்லப்படும் ஒன்றுதான். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக என் வீட்டுக் கழிவறையை நான் தான் சுத்தம் செய்கிறேன். நான் ஊரில் இல்லாத/எனக்கு முடியாத நாள்களில் என் கணவர். என் வீட்டு அத்தனை துணிகளையும் எந்த சலவைக்காரரையும் விடப் பிரமாதமாகத் தோய்ப்பேன். [என் மாமியாரிடமிருந்து இதற்கெல்லாம்- வாழ்நாளில் நினைத்தே பார்க்கமுடியாத விஷயம்- ஸ்பெஷல் பாராட்டு வாங்கியிருக்கினாக்கும். ] பிரமாதமாக ஷூ பாலிஷ் போடுவேன். முடிதிருத்துமிடத்திற்குப் போய்வந்தால் வீட்டிற்கு வந்து குளிப்பது, சுகாதாரத்திற்காக மட்டுமே. இல்லை அதெல்லாம் பொய் என்று சொல்பவர்களுக்கு… இன்று எந்த ஜாதிவித்யாசமும் இல்லாமல் பெண்களும் ப்யூட்டி பார்லர் தொடங்கிவிட்டார்கள். அங்கேபோய்விட்டுவந்தால் நானும்கூடக் குளிப்பேன். (ஸ்ரீரங்கத்தில் என் வீட்டையே ஒரு ப்யூட்டிஷியனுக்குத்தான் குடிவைத்திருக்கிறேன். வீட்டை அதற்கு உபயோகித்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வது முழுக்க முழுக்க அக்கம்பக்கத்தவர்கள் புகார்சொல்லும் சுகாதாரப் பிரச்சினைக்காகத்தான்.) அதே பெண்தான் எனக்குத் திருமணம் என்றால் என் வீட்டிற்கே வந்து அலங்காரம் செய்கிறாள்; நான் அப்படியேதான் மணமேடையில் அமர்ந்து மந்திரம் சொல்லி தாலிகட்டிக் கொள்கிறேன். தீண்டாமை முடிவெட்டுபவருக்காக இருந்தால் இது சாத்தியமா? யோசித்தால் குளிப்பது சுகாதாரத்திற்காகத்தான், முடிவெட்டுபவருக்காக இல்லை என்பது தெரியும்.

சரி, மீண்டும் எனக்கே வருகிறேன். மேலே கூறியிருக்கும் அத்தனை வேலைகளையும் செய்யும் நான்தான் என்வீட்டுப் பூஜையறை விளக்கையும் ஏற்றுகிறேன். என் வீட்டு வரவுசெலவு, முக்கியமான முடிவுகளை எடுக்கிறேன். என்வீட்டு அத்தனை நிகழ்வுகளும் என்னை முன்னிறுத்தியே நடக்கின்றன. சமுதாயத்தில் நீங்கள் மேலிருந்து கீழிருக்கும் ஜாதிக்காரர்கள் செய்வதாகச் சொல்லும் அத்தனை வேலைகளையும் நானேதான்- நான் மட்டுமேதான் செய்கிறேன். இப்போது என் வீட்டிலிருப்பவர்களுக்கு நான் என்ன ஜாதி?

மேலே கூறியவற்றில் எல்லாம் பார்த்தால் ஒரே ஒரு விஷயம்தான் எனக்குத் தெரிகிறது. விஞ்ஞான சாதனங்கள் வந்து மேலைநாடுகளைப் போல தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் நிலைவரும்போது இவர்களுக்கான தேவையே இல்லாமல் போகிறது. அப்படித்தான் ஏற்கனவே நிறைய போயிருக்கிறது. அது கிராமங்களில் இல்லை ஏதாவது சில பகுதிகளிலோ இல்லை என்றால் செய்யவேண்டியது என்ன? அங்கும் சுகாதாரமான அல்லது மேம்படுத்தப்பட்ட வீட்டுவசதிகளை உருவாக்கிக் கொள்வது/ உருவாக்கிக்கொள்ள அரசாங்கம் ஆணையிடுவது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை எனக்கு அரசு ஆணையிடமுடியும் என்றால் அதே அரசால் வீட்டின் கழிவறைக்கான திட்டத்தை ஆணையிடமுடியாதா? அடுத்து மனிதனே இன்னும் பாதாளச் சாக்கடையில் இறங்கும் அவலத்தை சரிசெய்ய முடியாமல் ஆனால் வல்லரசு ஆகப் போகிறோம்.

மேலே கூறியவற்றையெல்லாம் சமூகநலச் சிந்தனையாளர்கள் அரசை வற்புறுத்தியோ அல்லது அரசு மக்களை ஆணையிட்டோ சரிசெய்யாமல் இந்துமதத்தை ஒழித்துவிட்டால் எப்படிச் சரியாகும் என்று எனக்குச் சொல்லுங்கள் தங்கமணி. இவர்களின் தொழிலே இல்லாமல்போகவேண்டும் என்று நான் சொல்கிறேன்; இல்லை, இந்துமதத்தை ஒழித்து இவர்களை அர்ச்சகர்களாக்கி– அது எப்படி சாத்தியம்? இந்துமதம் ஒழிக்க முதலில் கோவில்களை இடிக்க வேண்டாமோ?– சுஜாதா வந்து பீயள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். பிரச்சினை ஏன் யாராவது அள்ளவேண்டும் என்ற கேள்வியும் தீர்வு அவரவர் வீட்டில் அவரவரே அள்ளவேண்டும் என்றே நான் சொல்கிறேன். இதற்கும் (இந்து)மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சரி, இவைநீங்கியபின்னும் நீங்கள் குறிப்பிடும் வர்ணாசிரம கொள்கை இருக்கும் என்று சொல்கிறீர்களா? என்வீட்டிற்கு பலதரப்பிலிருந்து நண்பர்கள் வருகிறார்கள். இவர்களை எப்படி உபசரிப்போம் என்று உங்களுக்கே தெரியும். இவர்களின் குடும்பத்தவர்களின் பின்புலங்கள், முந்தைய தொழில் என்ன என்று எனக்குத் தெரியுமா? நாம் பாராட்டுகிறோமா? என்னைப் பொருத்த வரை அவர் இந்த வங்கியில் அல்லது வேறு ஸ்தாபனத்தில் இந்த வேலையைச் செய்பவர். அவ்வளவுதான். எங்கே போயிற்று வர்ணாசிரமம்? அப்படி என்றால் தேவை என்ன? கல்வி. கல்விமட்டுமேதான் சமூக அங்கீகாரமாகி விட்டது.

இந்துமதத்தை ஒழிக்கச் சொல்லும் யாராவது போய் எத்தனை பீயள்ளுபவரின் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்படாமல் இருக்கிறார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறார்களா? ஏன் +2 முடித்ததும்தான் ஒதுக்கீடு? ‘ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளிக்கல்வி’ என்ற பொருளாதார வரையறை இல்லாத அபத்தமான திட்டங்களை அரசு அறிவிக்கும்போது எதிர்த்து அந்தந்தப் பகுதி தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகளை கட்டாயமாக இலவசமாக ஒவ்வொரு வகுப்பிலும் இத்தனை பேரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த முடியாதா? ஒருசாராருக்குத்தான் படிப்புவரும் என்பதெல்லாம் பம்மாத்து. வேண்டுமானால் பள்ளிக்குப் போகாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் ஒரு தலைமுறை மட்டும் சிரமப்படலாம். அடுத்த தலைமுறை, “நான் ஒதுக்கீட்டை அனுபவித்துப் படித்து முன்னேறிவிட்டேன்; என் மகனை/மகளை என்னால் படிக்கவைத்து ஓப்பனிலேயே சீட்வாங்கமுடியும்” என்று சொல்லி, அந்தந்த சமூகத்தினர் அவர்களுக்குக் கீழ் பள்ளி வாசலையே மிதிக்காத பெற்றோரின் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கட்டுமே. எத்தனைபேர் மதத்தை திட்டுவதை நிறுத்திவிட்டு இதைச் செய்வார்கள்? எனக்குத் தெரிந்து மூர்த்தி மட்டும் இதைச் சொல்லி இருக்கிறார்.

அப்புறம் சங்கரமடம்? தெரியாமலே கேட்கிறேன். ஏதோ ஒரு குழுவினர்(சைவ மதத்திலிருக்கு பிராமணர்களிலும் ஒரு பிரிவினர்?) தங்களுக்குள் ஒரு மடம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைத்துவந்திருக்கிறேன். இதுமாதிரி வைணவர்களில்கூட எக்கச்சக்க பிரிவில் மடங்கள் இருக்கின்றன. யாரும் எந்தக் குழுவினரும் தங்களுக்குள் எதையும் நிறுவி வாழ்ந்துகொள்ளலாம். விரும்புவர்கள் செல்வார்கள். விரும்பாதவர்கள் நிராகரிப்பார்கள். இதன் எந்தத் தனி ஒன்றும் முழுமையான இந்துமதத்தைச் சொந்தம் கொண்டாட முடியாது என்பதுபோலவே அல்லாதவர்கள் இங்கே சொந்தம்கொண்டாடத் தேவை இல்லை என்றே நினைத்துவந்திருக்கிறேன். இவை மட்டும்தான் அங்கீகரிக்கப்பட்டவை என்று அரசால் முத்திரைகுத்தப் படவும் இல்லை. இவை தவறும்போது சட்டம் உள்ளே நுழையாமலும் இல்லை. அப்படி ஒன்றிற்கு தலைமைப் பதவியைப் பிடித்து சாதிக்கப் போவது என்ன என்று புரியவில்லை. பிடித்தாலும் இவர்கள் திரும்ப தனியாகப் போய் வேறு மடத்தை நிறுவிக்கொள்ள மாட்டார்களா? சத்தியமூர்த்தி பவனைப் பிடித்தவனே ஒரிஜினல் காங்கிரஸ் மாதிரி விஷயமா இது? இதனால் வாழ்க்கைத் தரம் எந்த விதத்தில் முன்னேறப் போகிறது, சமூக அங்கீகாரம் என்ன கிடைக்கப் போகிறது. இவர்கள் பேச்சை மக்கள் கேட்பவர்களாக இருந்தால், சங்கராச்சாரியார், வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றிச் சொன்னதும் எத்தனை பெண்கள் கைப்பையை கீழே போட்டுவிட்டு வீட்டோடு இருக்கிறார்கள்? புலிநகக் கொன்றை தந்தையைப் போல எந்தத் தந்தை வானமாமலை ஜீயரிடம்போய் தன் பெண் மறுவிவாகத்திற்கு இந்தக் காலத்தில் அனுமதிகேட்டுக்கொண்டு நிற்கப் போகிறார்கள்? [அது என்ன, எல்லாரும் சங்கரமடத்தையே கேட்கிறார்கள். ஏன் வானமாமலையையோ ஆண்டவன் ஆசிரம பீடமோ வேண்டுமென்று கேட்பதில்லை? ]

கோவில்கள், தேர் இழுப்பது எல்லாம் சொல்கிறீர்களா, ஒத்துக்கொள்கிறேன். இவை எல்லாம் ஸ்ரீரங்கம், மதுரை மாதிரி பெரிய ஊர்விழாக்களில் யார் இழுக்கிறார்கள் என்ற பேதமே இல்லை. எங்காவது கிராமங்களில் இருக்கிறதா? அத்துமீறலாம். அரசைத் துணைக்கழைத்துக் கொள்ளலாம். ஆனாலும் இவை எல்லாம் உள்ளிருந்து போராட வேண்டியதே இல்லாமல் மதத்தை ஒழித்து எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். அர்ச்சகராகலாம் என்று அரசு ஆணை வந்தபின் எத்தனைபேர் அர்ச்சகராகப் பயிற்சி எடுக்கிறார்கள் என்ற updation கிடைத்தால் எழுதுங்களேன். ஆனால் மதத்தின் தவறான கொள்கைகளை அடித்து அழித்து எழுதுவது. இதைத்தான் நான் குறிப்பிட்ட social reformers செய்திருக்கிறார்கள்.

பெண்களை இந்துமதம் இழிவுபடுத்தி வைத்திருக்கிறது. அப்படியா? அப்படியா என்று கேட்டால், அவ்வையாரையும் காரைக்கால் அம்மையாரையும் சுட்டிக்காட்டப் போகிறேன் என்று அர்த்தமில்லை. எப்படி என்று யோசிக்கிறேன். பெண்களை இழிவுபடுத்துகிறது என்று சொல்லும்போதே அது ஆண்கள்தான் என்று தெரிகிறது. ஆனால் அதைச் செய்யும் ஆண்கள் நீங்கள் அத்தனைபேரும் யோனியிலிருந்து வந்ததாக மனு(வோ அல்லது வேதமோ) சொல்லிவிட்டதே என்றா பெண்களை இழிவுபடுத்துகிறீர்கள்? இழிவுசெய்வது என்பது பொதுவான ஆணாதிக்க சிந்தனை. அதைச் செய்பவர்கள் யாரும் மதத்தைப் படித்தவர்கள் இல்லை. ஆனால் சில விஷயங்கள் பெண்களுக்கு மறுக்கப்படுவதை வைத்துச் சொல்கிறீர்கள் என்றால் அதுபற்றி யோசிக்கலாம்.

பொதுவில் சமூகத்தில் எல்லாத் துறைகளிலும் சாதிக்க இந்துமதப் பெண்களுக்கு அதிமுக அணி போல எல்லாம் கதவு ஜன்னல்களும் திறந்தே இருக்கின்றன. யார் எந்தத் துறையில் மறுக்கப்பட்டிருக்கிறார்கள் இன்றைக்கு? ஆன்மிக விஷயத்தில் மறுக்கப்படும் விஷயங்களாக (மீண்டும்) கோவில் அர்ச்சகர் தகுதியும், பெற்றோருக்கு ஈமச் சடங்கு செய்வதும் மட்டும்தான். ஆனால் தங்கமணி நமது கோவில்கள் பல்வேறு தன்மைகளைக் கொண்டதாக இருக்கின்றன. ஆண்கள் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சொல்லும் குருவாயூர், ஜரகண்டி என்று கண்சிமிட்டும் நேரத்தில் தள்ளிவிடும் திருப்பதி, பெண்களே அனுமதிக்கப்படாத ஐயப்பன் கோவில், மாதவிலக்கு நாள்களில் கூட பெண்கள் பூஜை செய்யலாம் என்று சொல்லும் ஆதிபராசக்தி, மும்பை மஹாலஷ்மி கோவில்கள், 50 ரூபாயைக் கையில் அழுத்தினால் அர்ச்சகர் பெருமாளையே கையில் தூக்கிக் கொடுக்கும் அருள்மிகு ஸ்ரீரங்கம் கோவில் வரை ….. இவற்றில் எனக்கு ஏற்ற கோவிலுக்குத் தேர்ந்தெடுத்துப் போகும் சுதந்திரம் எனக்கு இருக்கவே செய்கிறது. ஆனால் இங்கே எல்லாம் கருவறை வரை போனால்தான் பெண்களை உயர்வாக வைத்திருக்கிறது என்பதை என்னால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. கோவிலுக்குள் எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்வதுபோன்ற சமூகநீதியாகவோ, அல்லது இது கிடைத்தால் பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிடும் என்றோ, பெண்ணடிமைத்தனத்துக்கு இந்துமதத்தின் இந்த ஒரு கூறுதான் காரணம் என்ற ஜல்லியையோ நம்ப நான் தயாராக இல்லை.

“என் மாதவிலக்கு என் பெர்சனல். அதை நான் பொதுவில் பகிர்ந்துகொள்ள மாட்டேன்” என்றெல்லாம் எங்கள் மாமியார் வீட்டில் மருமகள்கள் முன்வைத்திருக்கிறார்கள். அவை பூஜை செய்யவேண்டும் என்பதற்காக இல்லை; பெர்சனல் விஷயங்களைப் பொதுவில் சொல்லச்சொல்லி எங்களை நிர்பந்திக்கக் கூடாது; தேவை இல்லை என்ற சுயமரியாதை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இப்படிப்பட்ட கருத்துகளையே நான் வரவேற்கிறேன். மேகத்தைக் கிழித்துக்கொண்டு விமானமே ஓட்டலாம்; ‘நான் ஆணையிடுகிறேன்’ என்று அரசாங்கத்தையே கையில் வைத்துக்கொண்டு சண்டித்தனம் செய்ய முடிகிறது. இவை எல்லாம் போதாது, பூஜை செய்தால்தான் உண்டு என்று பெண்ணியம் பேசுபவர்கள் எத்தனைபேர் ஆதிபராசக்தி கோவில்களுக்குப் போய் ஆர்வமாக பூஜை செய்திருக்கிறார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

என் ஆன்மிகச் சிந்தனையைப் பொருத்த வரை கோவில்கள் தொழிலாளர் யூனியன் ஆபீஸ் மாதிரிதான்; கம்யூனிசம் அவரவர் மனத்தில்தான் இருக்கிறது. இதை மாதவிலக்கு நாள்களில் தள்ளிவைப்பதற்காக வருத்தப்படும் டீஜேவின் தோழிக்கும் சொல்லிவைக்கிறேன். தினமும் பூஜை செய்தால்தான் கடவுளை உணரமுடியும், அது மறுக்கப்படும்போது வெறுப்புவருகிறது என்பது அவர் இன்னும் வளரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. 15 நாள் எதுவும் செய்யாமல் ஏதாவது பொட்டல்காட்டில் இருந்தாலும், ப்ரேயர் மீட்டிங்கிற்கு உதவிக்காக கிறித்தவ தோழிவீட்டிற்குப் போனாலும், ஜீவ அப்பமே சாப்பிட்டாலும் என் உள்மன உணர்கள் அப்படியேதான் இருக்கும்.

அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதுமுதல் சமூகத்தில் எதை வேண்டுமானாலும் உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள். ஆனால் கேட்பதில் தீர்மானமாக இருங்கள். இன்று உஷாவின் பதிவில் கணவனைப் பிரிந்து இரண்டு வருடங்கள் ஆனபின்னும் ஒர் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்து செய்துகாட்டிய பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார். http://nunippul.blogspot.com/2006/03/blog-post_10.html நமக்கு உண்மையான தேவை எது என்று தீர்மானமாக முடிவு செய்வது, அதைத் தெளிவாக சமுதாயத்தின் முன்வைப்பது. மனதில் உறுதி, வாக்கில் தெளிவு. சிம்பிள். நம்மை யார் கேட்கமுடியும்? ஆனால் இன்று கேட்கும் பெண்ணெல்லாம் தேவை என்பதால்தான் கேட்கிறார்களா? அப்படி இல்லாமல் பெண்களுக்கு அந்த உரிமை எல்லாக் கோவில்களிலும் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அது ஒன்றே மதத்தின் பொருட்டு பெண்களை அதலபாதாளத்தில் இறக்கிவைத்திருக்கிறது என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பெண்கள் செய்திருக்கும் அத்தனை சாதனைகளையும் கண்டுகொள்ளாமல் எதையாவது யோசித்து யோசித்து காரணங்களை அடுக்குவதாகத்தான் தெரிகிறது.

ஆனால் தீர்மானமாக என்னால் சொல்ல முடியும், பெண்கள்- அதிலும் ஆண் வாரிசு இல்லாத வீட்டிலிருக்கும் பெண்களுக்கு ஈமச் சடங்குகளில் உரிமை வேண்டும் என்று கேட்பது மிகச் சரியே. இதுவும் எல்லாருக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. நிச்சயம் விருப்பமிருப்பவர்கள் செய்ய அனுமதிக்கலாம். விக்ரம் படத்தில் கமலஹாசன் கதாநாயகியிடம் சொல்வதைப் போல் ஆண்களால் செய்வதை எல்லாம் பெண்களாலும் செய்யமுடியும் என்பதில்- குறைந்தபட்சம் எனக்கு- நம்பிக்கை இல்லை. என் குழந்தைக்கு உடல் நலமில்லாமல் என்னால் மாதக்கணக்கில் போராட முடிந்தது. ஆனால் இறந்த என் குழந்தையை எடுத்துக்கொண்டு இடுகாட்டுக்குப் போய்ப் புதைக்க என்னால் முடியாது. அப்போதுதான் என்றில்லை, இப்போதும் சென்னையின் அந்தத் தெருவைக் கடந்து அடுத்த தெருவழியாகவே என்னைக் கூட்டிச் செல்லும் என்வீட்டு ஆண்களை நான் முற்றிலும் புரிந்துகொள்கிறேன். என்னை அவர்கள் கீழிறக்கியதாக எல்லாம் நினைப்பதில்லை. (நேற்று காலையில் என்வீட்டில் புறாவின் ரெண்டு முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வந்துவிட்டதற்கே நிலைகொள்ளாமல் இங்கே பதிவில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுகிறேன். நான் அவ்வளவுதான்.)

சாஸ்திரங்கள் என்ன சொல்லுகிறது என்று தெரியாவிட்டாலும், முந்தைய காலங்களைப் போன்ற இடுகாடுகளாக இல்லாமல் நவீன மின்சார இயந்திரங்களும் கட்டிடங்களும் வந்துவிட்டதென்றால் ஒருவேளை பெண்களுக்கும் இது சுலபமாக இருக்கலாம். (இதிலும் நான் இல்லை.)

ஆனால் தங்கமணி, ஈமச் சடங்குகளில் பெண்களை இந்துமதம் முற்றிலும் விலக்கிவைத்துவிட்டது என்று சொல்வது சரியில்லை. கயா’வில் உடன்பிறந்த ஆண்கள் இல்லாத பெண்கள் தங்கள் பெற்றோருக்கும் முன்னோருக்கும் இந்தக் கிரியைகளைச் செய்யக்கூடிய வசதி இருக்கிறது. இராமாயண சீதை சகோதரர்கள் இல்லாததால் தன் பெற்றோருக்கு இங்கே செய்ததாகச் சொல்லப்படுவதை என் வீட்டுப் பெண்களே பலர் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் முயன்றால் அவரவர் இருக்குமிடத்திலேயே செய்வது சாத்தியம் என்றே தோன்றுகிறது. ஏற்கனவே ஒரு பெண், டிவியில் சுமதியுடன் சேர்ந்து இது பற்றி வாதாடி, தான் தன் தந்தைக்குச் செய்ததாகவும் கூறினார். இந்த மாற்றம் வரும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

இந்தியாவில் விரும்பாதவர்களை இந்துமதம் என்று குறிக்கவேண்டாம் என்றால் அரசைத்தான் கேட்கவேண்டும் என்று யாரோ சொல்ல “இந்து மதம் அப்படித்தான் இருக்கும். வெளியே போங்கடா என்று சொல்றீங்களா?” என்று முத்து(தமிழினி) கேட்டிருக்கிறார். அவர்தானே?

யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கும்கூட அரசு என்னை மத அடையாளங்களோடு எடுத்துக்கொள்வதில் உடன்பாடில்லை. ஆனால் எந்த மதத்தில் இல்லாதவர்களும் இந்தியாவில் இந்துமதமா என்றால் என்னால் இப்படித்தான் யோசிக்கமுடிகிறது.

அப்போது திருச்சி RECல் கணினிப் பிரிவில் புதிதாக கணினி மூலமாக மாணவர்களுக்கு மெஸ்பில் தயாரிக்க ஆரம்பித்தார்கள். manualஆகவும் ஒரு parallel run ஓடிக்கொண்டிருந்தது. A,B,C.. I வரை மெஸ் பெயர்கள். எந்த மெஸ்ஸில் எந்த மாணவன் சாப்பிடுகிறானோ அந்த மெஸ்ஸுக்கான நாள் கணக்குத் தொகை(rate)க்கு எத்தனை நாள் சாப்பிட்ட்டான் என்பதை வைத்து கணினி கணக்கிடும். ஒரு டிரெய்னி மாதிரி போன எனக்கு பில்லைப் பார்த்ததும் என்னைத் தாக்கிய முக்கிய தவறு எந்த மெஸ்ஸிலுமே சாப்பிடாமல் லீவில் போயிருந்தவன் பில்லில், mess rate 0.00 என்று இருந்தது. என்ன அபத்தம்; மெஸ் ரேட் எப்படி பூஜ்யமாக இருக்கும் என்று கேட்டேன். வழக்கம்போல “நாம மயிரு மாதிரி படிச்சுட்டு வந்து ப்ரொகிராம் எழுதறோம். திடீர்னு ஒரு பொண்ணுவந்து போறபோக்குல கேவலமா பேசிட்டுப் போகுமா?” போன்ற சம்பிரதாயங்களுக்குப் பிறகு, ‘தலை’ மட்டும் கூப்பிட்டு விளக்கினார். அதை நாங்கள் கொடுப்பதில்லை. அது ஒரு numeric data. அங்கே எந்த எண்ணும் இல்லை என்றால் அது தன்னைத்தானே 0.00 என்று எழுதிக்கொள்ளும். லாஜிக் தவறாக இருக்கலாம். ஆனாலும் அந்த இடத்தை character data மாதிரி காலியாக விடவே முடியாது” என்று.

இப்போது மதம் பற்றிச் சொல்லும்போதும் எனக்கு அதுவே நினைவுக்கு வருகிறது. நாம் எந்தப் பிற மதமும் இல்லை. எனக்கு இந்து மதமும் சம்மதம் இல்லை/ அல்லது மதம் சம்மதம் என்றாலும் அதைப் பொதுவில் சொல்ல விருப்பமில்லை. என்றால் காலியாக விடலாம்தானே. அது என்ன இந்துமதம் என்று எழுதிக்கொள்ளும் அராஜகம்? பிரான்ஸ் எல்லாம் இல்லையா அதை எல்லாம் தாண்டி?

ஏன் என்றால் என் பிறப்பு, வாழ்க்கை, திருமணம், விவாகரத்து, சொத்துரிமையிலிருந்து இறந்ததும் எரிப்பதா புதைப்பதா வரை சட்டமும் சம்பிரதாயங்களும் மதங்களுக்கு ஒரே மாதிரி இல்லை. என் திருமணம் செல்லுபடியாக, என் கணவன் bigamy செய்தால் காலரில் கைவைக்க, விவாகரத்து செய்யநினைத்தால், என் குடும்பத்திலிருந்து சொத்தைப் பிரித்துவாங்க, வாரிசு உரிமைகள் பேச… இப்படி இறக்கும்வரை சட்டம் மதம் சார்ந்து இருக்கிறது. ஒருவேளை சட்டம் இந்தியாவில் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருந்தால் மதத்தைக் குறிப்பிடத் தேவை இருக்காதா என்று யோசித்தீர்களா? அவ்ளோதான்.

தங்கமணி,

////பெயரிலியோடு சேர்ந்து யுனெஸ்கோவும் சொல்லியது அவர் செய்தது மறுமலர்ச்சிதான் என்று!

PERIYAR, THE PROPHET OF THE NEW AGE
THE SOCRATES OF SOUTH EAST ASIA
FATHER OF THE SOCIAL REFORM MOVEMENT AND
ARCH ENEMY OF IGNORANCE, SUPERSTITIONS,
MEANINGLESS CUSTOMS AND BASE MANNERS.
-UNESCO, 27-6-1970
/////

எனக்கு UNESCOவின் கருத்துகள் எதற்கு தங்கமணி? நாம்தான் நேரிடையாக தமிழகத்தைப் பார்க்கிறோமே. அப்படி என்றால் பெரியார் புரட்சிக்குப் பின் யுனெஸ்கோ சொல்லியிருப்பதைப் போல IGNORANCE, SUPERSTITIONS, MEANINGLESS CUSTOMS AND BASE MANNERS எல்லாம் குறைந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா என்றுதான் ரமணியிடமும் கேட்டேன். நீங்களாவது சொல்லுங்களேன். ஆமாம் என்றால் இப்படியே விட்டுவிடலாம். இந்தப் பதிவுக்கே இனி தேவை இல்லை. எது நடந்துவருகிறதோ அதை அப்படியே நடக்கவிடலாம். எல்லாம் தானே சரியாகிவிடும். இல்லை என்று நினைத்தால் மட்டும் ஏன் இல்லை என்று யோசியுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

நான் பெரியாரை இணையத்தில்தான் படித்தேன் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டாலும் படித்தவைகளில் இரண்டுவகை. ஒன்று பெரியார் நேரிடையாக எழுதியவை/பேட்டி கொடுத்தவை; இரண்டாம் வகை பெரியாரை ஒத்தோ எதிர்த்தோ மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள். முதல் வகையை முற்றிலும் நம்பிப் படிக்கலாம். ஆனால் இந்த இரண்டாம் வகையை ஒரு அடி தள்ளி நின்றுதான் படிக்கமுடியும். ஏனென்றால் இரண்டு பக்கமுமே தன் பக்கத்து சார்புக்காக ஏதாவது வலிந்து எழுதியிருப்பார்கள். எப்பொழுதாவது ரோசாவசந்த் போன்றவர்கள் பின்னூட்டங்களுக்கு இடையில் எடுத்துச் சொல்லும் பெரியார் பற்றிய கருத்துகளை தவிர மற்றவற்றை நான் ஒரு நிச்சயமில்லாத தன்மையோடேயே படிக்கிறேன்.

ஒருமுறை உஷா வலைப்பதிவில் பெரியார் பெண்கள் முன்னேற்றம் அடையவேண்டுமென்றால் இந்தியப் பெண்களும் மேற்கத்தியப் பெண்களைப் போல பேண்ட் அணியவேண்டும்; தலையை பாப்’கட் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்லியிருப்பதாகச் சொன்னார். சத்தியமாக நம்பவில்லை, இப்படி எல்லாம் அபத்தமாகக் கூட நினைப்பார்கள் என்று. ‘நுனிப்புல்’ மேய்ந்துவிட்டாரோ என்றே நினைத்தேன். ஆனால் அதே கருத்தை திண்ணைக் கட்டுரையில் படித்தபோது என்னால் நம்பாமல் இருக்கமுடியவில்லை.

பூணூலை அறுப்பதும் பாப்’கட் செய்துகொள்வது, அசைவ உணவுகளை உண்பது போன்ற இப்படிப் பட்ட மேம்போக்கான புற அடையாளங்களைத் தொலைப்பதுபோன்ற தீர்வுகளை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பதால் எப்படி மாற்றம் வரும்? மாற்றம் மனதில் அல்லவா வரவேண்டும். சட்டைக்குள் இருக்கும் பூணூலை அவிழ்த்ததும் மனிதனுக்கு உலகம் வேறுமாதிரி தெரியுமா? அல்லது பூணூல் அணியாதவர்களுக்குள் இந்த பேதமே வருவதில்லையா? ‘காலையில் பிரபந்தம் சொல்லும் என் நண்பர்கள் மாலையில் என்னுடன் சிக்கன் சாப்பிடுகிறார்கள், இதுபோன்ற மாற்றங்கள்தான் ஜாதியை ஒழிக்கும்’ என்று நரேந்திரன் என்பவர் மகிழ்ந்துபோய் எழுதியிருந்தார். அடப்பாவமே, அப்படி என்றால் சிக்கன் வகையறா சாப்பிடும் அத்தனை ஜாதியினருக்கும் இடையில் மட்டும் ஜாதி வேற்றுமை இல்லையா? காலையில் பிரபந்தம் சொல்பவன் மாலையில் சிக்கன் சாப்பிட்டால் அவனுக்கு ஜாதி பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை; சிக்கன் பிடித்திருக்கிறது என்று மட்டும்தான் அர்த்தம்.

எனக்கு வசதி என்பதற்காக நான் பேண்டிலிருந்து எந்த உடையும் அணியலாம். ஆனால் அதுதான் எனக்குத் தன்னம்பிக்கையை தரும் என்று எப்படிச் சொல்லமுடியும்? அல்லது பேண்ட் போட்ட பெண்ணை மட்டும் ஆண் சமுதாயம் எப்படி ஏற்றிவைத்துப் பார்க்கும். இப்படிச் செய்வதாலேயே பேண்ட் போடுவதுதான்/போடுபவர்கள்(ஆண்) தான் உயர்வானவர்கள் சேலை கட்டுவது(பெண்) கேவலம் என்று நானே ஒத்துக்கொண்டதுபோலாகாதா? நானும் பூணூல் போட்டுக்கொள்வேன் என்று சொல்லும்போதே பூணுல் போட்டவன் உசத்தி என்று ஒத்துக்கொள்வது போலாகாதா? ஏற்கனவே ஒருமுறை சொல்லியதை இப்போதும் சொல்கிறேன்: என் வசதிக்காக நான் எந்த உடையும் அணிவேன். ஆனால் புடைவையும் சுடிதாரும், வளையல் தோடு ஜிமிக்கி ஹாரங்களும், கொலுசும் காலாழி, பீலியும் பெண் என்ற பெருமைக்காக அதீத கர்வத்துடனேயே அணிகிறேன். இப்படி இருக்கும்போதே பேண்ட் அணியும்போது இருப்பதைவிட அதிகத் திமிரோடு என்னால் ஆணைப் பார்க்கமுடிகிறது. இவைகளை மறுப்பது நான் பெண் என்பதை நானே கேவலமாக நினைப்பதாகத்தான் எனக்குத் தெரிகிறது. (மாறவேண்டும் என்று சொல்லும் அத்தனை ஜாதீயப் புற அடையாளங்களுக்கும் இதுவே என் கருத்து.) இப்படிச் செய்வதால் பெண் தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறாள் என்று சொல்லிப் பெண்ணியம் பேசும் பெண்கள் அப்படி மாறிவிட்ட பெண்களுக்கு மட்டும் விடிவு பிறந்துவிட்டதா என்று சொல்லுங்கள். மேலை நாடுகளில் பாப் வெட்டிக்கொண்டுள்ள பெண்கள் அடிமைத்தனங்களிலிருந்து வெளிவந்துவிட்டார்களா? இங்கிருந்து அமெரிக்கா போய் பேண்ட் போட்டுக்கொள்ளும் நம் ஊர் பெண்களுக்கும் மட்டுமாவது விடுதலை கிடைத்துவிட்டதா என்று வேண்டுமானால் தேன்துளி பத்மாவைக் கேட்டுக்கொள்ளலாம். நான் இருப்பது மாதிரிதான் நான் இருப்பேன். ஆனால் நீ எனக்கான இடத்தைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்றுதான் என்னால் சொல்லமுடியும். ஆணுக்குச் சரியான அறிவை, திறமையை வளர்த்துக்கொள்வதும் அதனோடு இயைந்தே எடுத்துச்செல்லும் அன்பினோடும் மட்டுமே ஆணை அடிக்க முடியும்.

இது பெரியார் தீர்விலிருந்து எடுத்துக்கொண்டிருக்கும் ஒரே ஒரு விஷயம். பெரியார் அந்தத் தீர்வை அப்படிச் சொல்லவில்லை, உங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் பிறந்ததால் பெரியார் புரியவில்லை என்று சொல்வீர்களானால் வேறு எப்படிச் சொல்லி இருக்கிறார் என்றும், ஏன் இப்படி நவீன கவிதை மாதிரி புரியாமலே எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார், இதை எல்லாம் யார் புரியும்படி மொழிபெயர்க்கப் போகிறார்கள் என்றும் சொல்லுங்கள்.

////நாம் அடையாளப்படுத்துகிறோமா? அல்லது ஒவ்வொருவரும் ஒரு அடையாளம்தான் நான் (அந்த நபர்) என்று நம்பி அதைக் காப்பாற்ற, விளம்பரப்படுத்த, பரப்ப, மற்றவரை அந்த அடையாளம் சிறந்தது என்று நம்பவைக்க உழைக்கிறார்களா? இது அரசியல் மட்டுமல்ல ஆன்மீகக் கேள்வியும் கூட. இதில் இருந்து ஒருவர் விரும்பினால் நிறைய பதில்களைப் பெறலாம் என்று நினைக்கிறேன். ////

இந்தப் பதிவு முழுக்க ஒரு வசதிக்காக எல்லா இடத்திலும் நான் என்றே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். மரத்தடியில் மதி ‘வாரணமாயிரம்’ பற்றி எழுதச் சொன்னபோது, என் பெர்சனல் விருப்புகளை பொதுவில் எழுதவிருப்பமில்லை என்று ‘சொன்னேன். ஹரியண்ணா, ‘திருப்புளி’ என்றால் என்ன என்று குழுமத்தில் கேட்டதற்கு தயங்கிக்கொண்டு இரண்டுநாள் பதில் சொல்லாமலே இருந்திருக்கிறேன். யாருக்குமே தன்னை பொதுவில் அடையாளப்படுத்திக்கொள்ள விருப்பம் என்பதெல்லாம் சும்மா. ஆனால் என் நினைவலைகளாக நான் எழுத நினைத்தால் பிறந்ததிலிருந்து 21 வருடங்கள் வாழ்ந்த ஊரைப் பற்றி எழுதாமல் வேறு எந்த ஊரை எழுதமுடியும்? எப்படி திருநெல்வேலிக் காரர்களும், மதுரைக்காரர்களும், மன்னார்குடி, மாயவரம் கோவைக் காரர்களும் தங்கள் சொந்த ஊரைப் பற்றி எழுதுகிறீர்களோ அப்படியே நானும் எழுதவேண்டும் என்றால் ஸ்ரீரங்கம் பற்றி மட்டும்தான் எழுதமுடியும். சமையல் குறிப்பு எழுதினால்கூட அப்படித்தான் இருக்கும். ஆனால் அது தவறு என்று சொல்கிறீர்களா? இதில் அடையாளத்தைக் காக்கச் செய்யும் முயற்சி என்ன இருக்கிறது? அல்லது என் ஊர் ஸ்ரீரங்கமாகிவிட்டதாலேயே எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றுக்கருத்தை என் ஊரைப் பற்றி வைக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? சந்தேகம் இல்லாமல் என்னை அருமையாக வளர்த்த ஊர். இன்னும் என் வேர்கள் அங்கேதான் இருக்கின்றன. இங்கே செல்லும்போதுதான் எனக்கும் நீங்கள் எல்லாம் உங்கள் சொந்த ஊருக்குப் போகும்போது தோன்றுவதுபோல “ஞாபகம் வருதே ஞாபகம் வருதே” நினைவுகள். இதை எப்படி மறுக்க முடியும்? நீங்கள் சொல்லும் தவறுகளை பெரியவர்கள்(65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இங்கேயும் செய்யலாம். ஆனால் அரிவாள் கலாசாரம் என்று எப்படி தன் ஊர் மக்களைப் பற்றி குழலி வருத்தப்படுகிறாரோ அதுபோன்ற ஒரு அறியாமை அல்லது இப்படி நடக்கவில்லை என்றால் நமக்கு சொர்க்கம்/மோட்சம் கிடைக்காதோ போன்ற தேவை இல்லாத ஆனால் படிந்துவிட்ட அச்சங்கள் மட்டுமே அவர்களிடம் இருப்பதால் என்னால் அவர்களை ஒரு வருத்தத்துடனாவது புரிந்துகொள்ள முடிகிறது. இதற்காக இவர்கள் எல்லாம் கெட்டவர்களோ மனிதநேயமோ இல்லாதவர்கள் இல்லை. எப்படி நாத்திகம் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஊருக்கு உதவாத உருப்படாதவர்களும் இருக்கிறார்களோ அதே போல் இங்கும் நல்லவர்களும் அல்லாதவர்களும் கலந்தே இருக்கிறார்கள். ஆனால் அரிவாள் கலாசாரம் என்றால் சரி அறியாமை என்று ஒப்புக்கொள்ளும் மக்கள் அதே சந்தேகத்தின் பலனை இவர்களுக்குத் தரமாட்டார்கள்; அது அவரவர் விருப்பம். என்றாலும் ஸ்ரீரங்கம் பற்றிய மாற்றுக்கருத்துகள் வந்த வலைப்பதிவுகளிலெல்லாம் ஓடிப்போய் என் பக்கத்தை நியாயப்படுத்த எப்பொழுதும் எதுவும் எழுதியதில்லை; அதற்காக நான் உழைத்ததில்லை இல்லை என்பதை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். இனியும் அந்த எண்ணம் எதுவும் இல்லை.

இப்பொழுதும் என் நம்பிக்கை அந்தப் பெரியவர்களிடம் இல்லை. அங்கிருந்து கிளம்பி, சென்னை, பெங்களூர், டில்லி, மும்பை, அமெரிக்கா, சிங்கை என்று இடம்பெயர்ந்து விட்ட அதன் அடுத்த தலைமுறையையே நான் கண்காணிக்கிறேன். அவர்களிடம் மிகப் பெரிய அளவில் மாற்றம் இருக்கிறதை என்னால் உணரமுடிகிறது. இல்லை என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன். (என் அக்காவின் நண்பர்… என்ற விதிவிலக்குகளை எடுத்துக்கொண்டு யாரும் ஓடிவராதீர்கள். விதிவிலக்குகள் இல்லாத மூலையே உலகில் எங்கும் இல்லை.)

மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். இந்த மாற்றத்தை அவர்கள் மனுவைப் படித்து “தூ!” என்று துப்பிவிட்டு எடுக்கவில்லை; பெரியாரைப் படித்து புல்லரித்துப் போயும் எடுக்கவில்லை. ஆனால் தான் படிக்கும், வேலை பார்க்கும் இடங்களில் கலந்துவிட்ட பிற ஜாதிகாரர்களின் நட்பும் சூழ்நிலைகளுமே அவர்களை மாற்றி இருக்கிறது. கோ எஜுகேஷன் என்ற முறை பரவலாக்கப் பட்டதிலேயே ஆண்கள் பெண்களை தரம்தாழ்த்திப் பார்க்காமல் சமமான நட்பாகப் பார்ப்பதும், மனைவியை இணையாக நடத்துவதும் முழுவதுமாக ஆரம்பித்துவிட்டது.

இப்படிப்பட்ட எல்லாருக்குமான கல்வியும், சமுதாயச் சூழ்நிலைகளுமே இந்த வேற்றுமைகளை இந்தியாவில் இன்னும் வேகமாக மாற்றும் என்று திடமாக நம்புகிறேன். நான் சொல்ல நினைத்த தீர்வு இதுதான்; இதுமட்டும்தான்.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு உண்மையிலேயே நன்றி தங்கமணி.

o

நான் எங்குமே பிற மதம் பற்றி பேசவில்லை என்றே நினைக்கிறேன். வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் சொல்வதுபோல் (ஆபரேஷன் செய்யும்போது என் கைகள் நடுங்குவதே இல்லை) பிரச்சினைகள் வரும்போது உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால் இப்படித்தான் என்னால் பதில்சொல்ல முடிகிறது. ஹாங்காங்கில் இருக்கும்போது ஒரு சீனப்பெண் அவ்வப்போது வந்து கிறித்துவமதம் பற்றி பேசிவிட்டுப் போவாள். கடைசி நாள் உன் மதம் பற்றிச் சொல்லேன் என்றாள். எனக்குச் சொல்ல எதுவும் இல்லை. எப்படியும் இருக்கலாம் என்கிற மிகப் பரந்தவெளி. ஒரு துக்கிணி இடத்தை மட்டும் ஆக்கிரமித்துக் கூட மற்றவற்றைப் புறக்கணிக்க முடியும். முற்றிலும் புறக்கணித்தாலும் என்னை மதம் வெளியே பிடித்துத் தள்ளாது. இவர்கள் இப்படித்தான் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத ஒவ்வொரு தனிமனிதனும் இதில் தனித்தனி மதம் தான். எனக்கு விருப்பமான பகுதி இந்த மதத்தில் இதுதான் என்று சொன்னேன். இப்போதும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. மதம் பற்றி பேசாமல் பொதுவில் பேசியிருப்பதால் நான் மதத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறேன் என்று அர்த்தமில்லை. ஏற்கனவே சொன்னமாதிரி இது ஒரு உள்ளுணர்வு. யாராவது வெளியிலிருந்து அழித்துவிட்டதால் அழியக்கூடியது இல்லை. ஆனால் அழிக்கவேண்டும் என்றால் ஏன் அழிக்கவேண்டும் என்ற அறியாமையில் இந்த கடிதத்தை சிந்தித்திருக்கிறேன் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நான் சொல்லியிருப்பவை எல்லாம் தவறு, இந்து மதத்தையும் மனுதர்ம வேதங்களையும் தடை செய்தால்தான் வேற்றுமை அழியும் என்றால், தயவுசெய்து இந்துமதத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்று யாருமே படித்திராத பாகங்களை எடுத்துப் போடாமல், இந்து மதத்தை அழிக்க அடுத்தது என்ன செய்யவேண்டும், இப்படி ஒரு மதத்தையே தவறென்று அழித்துவிட்ட முன்மாதிரியாக வேறு மதங்கள் ஏதாவது இருக்கிறதா, நாளை காலையிலிருந்து அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்று ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்லுங்கள். நானும் வந்து வடம் பிடிக்கிறேன்.




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


"தொழில்நுட்ப காரணத்தால்" ;-)) எதேச்சையாக மீண்டு வந்த இப்பதிவை சிலர் இன்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு தரப்பட்ட அறிவுரைகளை புரிந்துகொள்கிறேன். இப்பதிவின் மீது கருத்து சொல்ல விரும்பினால் முன்பே சொன்னது போல் உங்கள் கருத்துக்களை ஒரிஜினல் பதிவில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
 



சரி, உங்க கருத்து ??