<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மெட்டி ஒலி காற்றோடு - பாகம் II


முன்பொரு காலத்தில் தன்னைத்தானே எழுதிக்கொண்ட ஒரு சிறுகதையின் மிச்சம்.

....

என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண விரும்பாத விஷயம் அது... எதுவும் பேசாமல் வழிவிட்டேன்... இந்த முறை கடைசி வரை திரும்பி பார்க்கவே இல்லை... அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய. ஆனால்... நானாக தொடர்பு கொள்ள செய்த முயற்சி எல்லாவற்றிலும் என் குரல் கேட்டவுடன் எதிர்முனையில் வெறும் மௌனம்தான் கேட்கும்.

"ஏண்டா.. என்ன திடீர்னு வந்துட்ட.. திரும்பி வேலைக்கும் போகல?"

"ஆமா, என்ன பெரிய வேலை. எனக்கு பிடிக்கல..."

மூணு வாரங்கள் அப்படியே போனது. ரயில்வே ஸ்டேஷன் ஜமாவில் டேவிட் மட்டும்தான் கவனித்தான்.

"என்னடா, எப்பவும் நாளைக்கு நாலு தம்முக்கு மேல அடிக்க மாட்ட, இன்னிக்கி என்ன.. வந்து ஒன் அவர் ஆகல அதுக்குள்ள ஒரு பாக்கெட் காலி. அதுவுமில்லாம எப்பவும் எவனையாவது தாளிச்சிகிட்டே இருப்ப.. ரெண்டு நாளா கம்முன்னே இருக்க.. என்ன மேட்டரு"

இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அவளுக்கு பிடிக்காது.

"ஒண்ணுமில்லடா"

"என்ன அந்த பொண்ணு மேட்டரா?"

நிமிர்ந்து பார்த்தேன்.

"எல்லாம் குத்துமதிப்பா யூகிச்சி வச்சிட்டோம்டா.. நீயா என்னிக்காவது சொல்லுவன்னு வெயிட் பண்ணோம். என்ன ஆச்சு திடீர்னு"

"தெரியில..."

"...."

"...."

"சரி விடு. சும்மா நீ என் ஃப்ரண்டுன்னு இத சொல்றேன்னு நினைக்காத.. சீரியஸா சொல்றேன். அவளுக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான்... வேலைய பாரு"

கோயமுத்தூர் ரூம்மேட்டுக்கு ஃபோன் செய்து அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்த என் சமாச்சாரங்களை அடுத்த முறை அவன் ஊருக்கு வரும்போது வீட்டில் தந்துவிடுமாறு சொல்லிவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினேன். வந்தாரை வாழவைக்கும் ட்ரிப்ளிக்கேன் மேன்ஷனில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது.

சென்னையில் படிப்புக்காக பணம் பிரட்ட அலைந்தது, கிடைத்த வாய்ப்புக்கு பங்கம் வராமல் படித்தது அல்லது படிக்க முயற்சித்தது, பகலெல்லாம் பல்லவன் பல்லனாக வேலை தேடி அலைந்தது, பீச்சாங்கரையில் இரவு நேர நிலா ஒளி + மாமாக்கள் அறிவுரைகளுக்கு மத்தியில் தண்ணியடித்து நீந்தியது என்று ஓட்டி ஒரு வேலையில் உட்கார்ந்த போது ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தபோது அவளை 'அகஸ்மாத்தாக' சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டது. அதற்கப்புறம் இரண்டு நாடுகள் மாறி இன்னுமொரு மூன்றாண்டுகள் கழித்து வெகேஷனில் ஊருக்கு போயிருந்த போது ஆங்காங்கே சிதறிப்போயிருந்த நண்பர்களை வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்து சந்தித்த ஒரு மாலைப்பொழுதில் பேச்சுவாக்கில் டேவிட் கேட்டான்.

"ரயில்வே ஸ்டேஷன்ல நாம பேசினமே ஞாபகம் இருக்கா.. இப்ப நினைச்சா தமாஷா இருக்கு இல்ல"

"இல்ல..."

"இன்னுமா ஞாபகம் வச்சிருக்க"

"ஒரு ஓரமா.. ஆமா இப்ப அவள பத்தின டீடய்ல்ஸ் யார்ட்ட கிடைக்கும். அவ பழைய நம்பர்க்கு ஃபோன் பண்ணா உபயோகத்தில் இல்லைன்னு வருது"

"நம்ம மலையாளத்தான்கிட்ட இருக்கும். அவன் இப்ப பெங்களூர்ல இண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல இருக்கான்"

*

"டேய்.. நாந்தாண்டா"

"சொல்லு.. எப்ப வந்த"

"அதெல்லாம் நேரில பேசிக்கலாம். நீ அடுத்த ஃப்ளைட்ட புடிச்சி மெட்ராஸ் வா"

பத்தரை மணிக்கு கால்டாக்ஸியில் மலையாளத்தான் வந்து இறங்கிய போதே பாதி பேர் மட்டையாகியிருந்தனர். அப்புறம் முதல் விமான பயணத்தின் பக்கத்து இருக்கை ஃபிகரிடம் நடந்த கடலை பற்றியெல்லாம் விவரித்துவிட்டு மலையாளத்தான் மலையேறிய போது மணி மூன்றரை. டேவிட் கேட்டான்.

"டேய், அந்த இன்ஸ்டிட்யூட்ல வேலை செஞ்சுதே ஒரு பொண்ணு.. ஞாபகம் இருக்கா.. நீ அவங்க ஃபேமிலி கூட எல்லாம் நல்லா பழக்கம் இல்ல"

"நல்லான்னு இல்ல.. ஓரளவு. அவங்கப்பா அவங்க ஆபிஸ் மேட்டர் எல்லாம் நம்ம கடையிலதான் ப்ரிண்டிங்கு கொடுப்பாரு.. அந்த பொண்ணு மேல இவனுக்கு ஒரு கண்ணு இல்ல"

"அதெல்லாம் கிடக்கட்டும், அவங்க இப்ப எங்க"

"அவங்க அப்பாவுக்கு அப்பவே வேலூருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சிடா.. அதுக்கப்புறம் அவ்வளவா கான்டாக்ட் இல்ல"

"வேலூர் நம்பர் உங்கிட்ட இருக்கா"

"பெங்களூர்ல இருக்கு.. திங்கக்கிழம ஊருக்கு போனவுடனே போன் பண்ணி சொல்றேன்"

செவ்வாய்க்கிழமை வேலூர் நம்பருக்கு போன் செய்தபோது "இல்லீங்களே... ஆறுமாசமா இந்த நம்பர் எங்களுதுதான்.. அப்படி யாரும் தெரியாதுங்களே" என்றார்கள்.

நான் இந்தியாவில் இருந்து திரும்பிய இரு மாதங்களில் அவளுக்கு கல்யாணம் ஆனது என்ற செய்தியை பிறகு மலையாளத்தான் இ-மெயில் செய்தான்.

**

ஊரிலிருந்து வந்திருந்த அம்மாவுடன் லாங் வீக்கெண்டுக்காக நயாகராவுக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அருவி என்றவுடன் பழைய அருவிப்பயண கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர..

"அப்ப ஒரு தடவ சித்தப்பா ஃபேமிலியோட வந்தப்போ, எத்தனை தடவ இந்த அருவிய பாக்குறது எனக்கு போரடிக்குதுன்னு, நான் ஒகேனக்கலுக்கு வரலைன்னு சொல்லி சித்தப்பா ஏகத்துக்கும் அப்ஸெட் ஆயிடுச்சே.. அன்னிக்கி நான் வராததுக்கு காரணம் வேற...போக வேண்டாம்னு எல்லாம் அவ சொல்லல.. போகணுமான்னு கேட்டா, நான் தான் வரலன்னுட்டேன்"

"என்னங்க அம்மாவுக்கு முன்னாடியே இதெல்லாம் சொல்றீங்க"

"ஆமா.. ஏழு வருசம் ஆயிடுச்சி.. இனி என்ன.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. அதுவுமில்லாம அம்மாவுக்கும் அப்பவே அரசல் புரசலா தெரியும் ஏம்மா?"

"அரசல் புரசலா என்ன.. நல்லாவே தெரியும்... நீ கோயமுத்தூர் வேலைய விட்டுட்டு வந்தியே அதுக்கு ஒரு ரெண்டு நாள் முந்தி மிஷினுக்கு போயிட்டு திரும்பி வரும்போது இண்ஸ்டிட்யூட்ல அந்த பொண்ண பார்த்தேன். என்னன்னு இப்ப ஞாபகம் இல்ல, ஆனா அன்னிக்கி அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் பேசிட்டுதான் வந்தேன்..."




š இப்பதிவை மின்னஞ்சலிட