பிலிம்ஃபேர் விருதுகள் 2005
கொஞ்ச நாளாய் டயட்டில் இருந்து - இது பத்திய டயட் இல்லை, கோழியும் மீனும்தான் உணவே, ஆனால் சமையல் முறை சவசவ. சவுத் பீச் எனும் இந்த டயட் பற்றி பிறகு - நண்பன் வீட்டுக்கு கறிவிருந்து சாப்பிடப்போய் ப்ரோட்டோகால் படி சாப்பாடு, pictionary, அரட்டை, புறப்பாடு என்பதாக இருந்திருக்க வேண்டியது.. அரட்டை நேரத்தை தீவிர சினிமா ரசிகையான நண்பனுக்காக தியாகம் செய்து பிலிம்பேர் விருதுகள் பார்க்க அர்ப்பணம்... நம்ம வீட்டுலயே சனி டிவி இருக்குன்னு பேருதானே தவிர என்னிக்காவது ராத்தூங்கறதுக்கு முந்தி அரை மணி பாட்டு பாக்கறதோட சரி... சரி, காசு கொடுத்துதான் பாக்கறதில்ல, ஓசியிலயாவது பார்ப்போமேன்னு உக்காந்து பாத்து முடிச்சப்புறம்தான் டைம் வேஸ்ட் ஞானோதயமே வந்தது... ஹைலைட் :: என்னது அந்நியனுக்கு விருதா என்று ஆச்சரியப்பட்ட பின்பே அது 2005க்கான விருது வழங்கும் விழா என்று புரிந்தது.. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வெயிட் செய்து 2007ல் இரண்டாயிரத்து ஆறுக்கும் சேர்த்து கொடுத்திருக்கலாம்.
தொகுப்பாளர்கள் விழாவுக்கு வரும்முன்பு ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டு வந்திருக்க வேண்டும். காம்பியரிங் சகிக்கவில்லை. காம்பியரிங் சடாமகன் என்னவோ சிந்துபாத் நாயகனாம். கடைசியில் டான்ஸ் ஆடும்போது நல்லா இருந்தார்.
சிறந்த கன்னட நடிகை விருது வாங்க வந்தவர் மிகவும் அழகாக இருந்தார். புடவையில் உள்ளே இன்னொரு லேயர் உடை உடுத்திய மாதிரி அவர் உடையில் என்னவோ வித்தியாசம் தெரிந்தது. என்னவென்று சொல்ல தெரியவில்லை... அவர் நடித்த நின்னே பரேலி படம் மட்டும்தான் எல்லா விருதுகளையும் வாங்கியது என்றாலும் கன்னடத்தில் படம் கூட எடுக்கிறார்களா என்ற என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
பொன்வண்ணன் மனைவி சரண்யா கல்யாணத்துக்கு செல்வது மாதிரி பட்டுப்புடவை, மல்லிகைப்பூ என்று மங்களகரமாக வந்திருந்தார். நம் உடை நம் உடைதான்... அவ்வளவு கூட்டத்திலும் ஒரு தனித்தன்மை, பக்கத்து வீட்டு பெண்மணி மாதிரி ஒரு தோற்றம். நாயகனில் தோன்றி 20 வருஷமாக காத்திருந்து இப்பொழுதுதான் கிடைத்ததாக சொன்னார். தவமாய் தவமிருந்து படத்துக்காக இந்த விருது. ராஜ்கிரணுக்கும் ஒன்று. அவர் சைக்கிளில் போகும் காட்சியை காண்பித்தார்கள். அவரை எப்படி இளமையாக காண்பித்தார்கள்.. படம் பார்க்க வேண்டும்.
சேரனும் இன்னொருவரும் சேர்ந்து விருது வழங்குவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு ஒப்புக்கு கூட சேரன் கூட வந்தவரை விருது வழங்கவோ, அறிவிக்கவோ விடவில்லை.. மிகவும் aggressive ஆக நடந்துகொண்டு பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடை பழமொழியை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தார்.
கமல் கௌதமியுடன் வந்திருந்தார். "ரெண்டு பேர தொரத்தி வுட்டுட்டு மூணாவதா இப்ப கௌதமியா... உருப்படவே மாட்டான்.." என்றார் நண்பரின் மனைவி. "ஏங்க அவன் வாழ்க்கைய அவன் தீர்மானம் பண்ணிக்க கூட உரிமையில்லையா... அது என்னங்க டிவோர்ஸ் ஆனா ஆம்பிளைய மட்டும் திட்டறீங்க" என்றதற்கு முறைத்தார். தமிழ் கலாச்சாரம்.
எல்லோரும் இந்த விருதை இந்தியன் ஆஸ்கர் என்றார்கள். என்ன அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இயக்குனர் கௌதம் விருது வழங்க வந்தவர் என்னவாவது பேச வேண்டும் என்று ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருதுதான் கடைசியில் தருவார்கள் என்று சீரியஸாக விளக்கம் கொடுத்துவிட்டு சென்றார். கேட்கத்தான் ஆளில்லை. விருது எப்படியோ, விருது வழங்கும் விழா ஆஸ்கர் விழாவின் கிட்ட என்ன தூரம் கூட வர முடியாது. விளம்பரம் முடிந்தவுடன் விருது வாங்க வருபவர் யாருன்னு தெரியுமா, பிரும்மாண்டம்னா இவர் இவர்தான் பிரும்மாண்டம் என்று கெக்கே பிக்கே கமெண்ட் அடித்து விளம்பரம் ஓடி விருது வாங்க ஷங்கர் வரும்வரை யூகிக்காமல் இருப்பவர் ம.மா.
என்னிடமிருந்து ரொம்ப நாளா தப்பிச்சி ஓடிக்கிட்டு இருந்தா இந்த பொண்ணு, இன்னிக்கிதான் கிடைச்சா என்றார் ஆஷிஷ் வித்யார்த்தி. அவர் சொன்ன பொண்ணு பிலிம்பேர் விருதில் இருக்கும் பொம்மை. அதை மனிதர் மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னது என்னவோ போல் இருந்தது. ஆனால் இதை நாலைந்து பேர் மேற்கோள் காட்டி பேசினார்கள். சிறந்த கன்னட நடிகர் ஒரு படி மேலே போய் இது பொண்ணு மட்டும் இல்லை தாய் என்று கண்டபடி உணர்ச்சிவசப்பட்டார். அவர் பேசிய மழலைத்தமிழ் நன்றாக இருந்தது. ஆனால், இயல்பாகவும் நன்றாகவும் பேசிய நான்கு பேரில் அவரும் ஒருத்தர்.
தெலுங்கு நடிகர் ஆலி தெலுங்கிலேயே பேசியிருக்கலாம். அவருக்கு தமிழ் தெரிகிறது. தமிழிலாவது பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன் என்று பயங்கரமாக படுத்தினார். எதற்கு நம்மாட்கள் இப்படி கொடுமைப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை.
துறுதுறுப்புக்கு அஸின்.. ச்சோ ச்வீட்.. அஸினை பார்த்தால் கஜினி அஸின்தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஒருவேளை அஸின் நடித்து நான் கஜினி மட்டும்தான் பார்த்திருக்கிறேன் என்பதால் இருக்கலாம். சலங்கை ஒலி பார்த்த அன்று மிகவும் தீவிரமாக காதலித்த ஜெயப்ரதாவை இந்த விருது வழங்கும் விழாவில் பார்த்தவுடன் மீண்டும் காதலிக்கலாம் போல் தோன்றியது... ஆனால் சிறந்த கன்னட நடிகை அதற்கு விடவில்லை.
இடையிடையே விளம்பரத்தில் "உங்க ஆட்சியிலதான் ஏழைகள் சிரிக்கிறார்கள்" என்று கூசாமல் ஜல்லியடித்துக்கொண்டிருந்தார்கள். விளம்பரத்தில் கூட கருணாநிதியை தவிர யாரும் சிரிக்கிற மாதிரி தெரியவில்லை.. ஒரு வேளை கருணாநிதி ஏழையோ என்னவோ... ஆமாம், ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இந்த விளம்பரம் வருகிறதே, இம்மாதிரி ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரம் தரும் அளவு தமிழக அரசின் விளம்பரத்துறையிடம் கஜானா இருக்கிறதா?
தமிழ்ப்பதிவுகள்
