<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஓல்ட் மதராஸ்


சமீபத்தில் எனக்கு கிடைத்த மதராஸ் பொக்கிஷங்கள்... காப்பிரைட் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது... விபரம் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நீக்கிவிடுகிறேன்... அதுவரை "ஹும் எப்பிடி இருந்தது..." என ஒரு பெருமூச்சோடு, என்ஜாய்...


பாரிஸ் கார்னர் 1890


கொத்தவால் சாவடி 1939


நேப்பியர் பாலம் 1895


சென்ட்ரல் ஸ்டேஷன் 1925


மவுண்ட் ரோடு 1905


எஸ்ப்ளனேடு 1910


மௌபரீஸ் சாலை 1885


பைக்ராஃப்ட்ஸ் ரோடு 1890


மைலாப்பூர் 1906



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ராஜ் டி.வி அதிபருடன் ஒரு சந்திப்பு


தினமூடி நிருபர் பேட்டி எடுத்து ரொம்ப நாள் ஆவதால் எங்கே பேட்டி எடுப்பதே மறந்து விடுமோ என்ற கவலையில் தூங்க ஆரம்பிக்கிறார்... ஆச்சர்யப்படாதீங்க, கனவுலதான் அவர் பேட்டி எடுப்பாரு... அப்படி ஒரு இனிமையான இரவில் பொழுது போகாமல் உலாத்திய ராஜ் டி.வி அதிபரை சந்தித்து பேட்டி கண்டார்...


தினமூடி: வணக்கங்க.. டி.வி சேனல் ஆரம்பிக்கணும்கற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது...

ராஜ்: கேபிள் டி.வி வந்த புதுசில நான் நிறைய டி.வி பார்ப்பேன். கொஞ்ச நாள் ஆனப்புறமாத்தான் எனக்கு டி.வியில நிகழ்ச்சிகள விட விளம்பரங்கள ரொம்ப புடிக்கிதுன்னு புரிஞ்சுது... உடனே விளம்பரங்க மட்டும் வரமாதிரி எதுவும் டி.வி சேனல் இருக்கான்னு தேடினேன். ஆச்சரியம் பாருங்க, உலகத்துல எங்கியுமே விளம்பரத்துக்காகன்னு தனியா சேனல் இல்ல... உடனே எனக்கு தட்டுன பொறியில ஆரம்பிக்கப்பட்டதுதான் சின்னத்திரைகளில் பல வண்ணங்கள் படைக்கும் உங்கள் ராஜ் டி.வி.

தினமூடி: உங்க டி.வியில் சாதனை ஏதும் படைக்கும் எண்ணம் இருக்கா?

ராஜ்: இருக்கு.. இப்ப பாத்தீங்கன்னா இந்தியன் படம் போட்டப்போ ஒரு சாதனைய படைக்க நினைச்சோம். அதாவது 2 மணி நேர படத்தை 12 மணி நேரம் ஓட்டுவது எப்படி? மத்த டிவிக்கள்ல விளம்பர இடைவேளைக்காக படத்த சீன் முறையிலதான் பிரிப்பாங்க.. நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பிலிம் முறையில பிரிச்சோம். 3 பிலிம் ஓடினா ஒரு விளம்பர ப்ரேக்.. ஆனா பாருங்க இவ்ளோ கஷ்டத்தையும் ஒரு மொழி தெரியாத ஆப்பரேட்டர் கெடுத்துட்டாரு... அவரு ராத்திரி 9 மணி ஷிஃப்டுக்கு வந்தாரா? என்ன ஓடுது எதுக்கு ஓடுதுன்னே தெரியாம அவரு பாட்டுக்கு ப்ரோக்ராம கட் பண்ணி தன் கேஸட்ட போட்டு விட்டாரு.. ரொம்ப லேட்டாத்தான் நாங்க இத கவனிச்சோம்... சரி 9 மணிநேரம் யாரு இத பாத்துருக்க போறாங்கன்னு நினைச்சோம்.. ஆனா குஜிலியாம்பாறை குசலாவும் சிலுக்குவார்பட்டி சின்ன கமலாவும் மறுநா போன் பண்ணி என்னங்க நீங்க இப்படி க்ளைமாக்ஸ்ல போயி நிறுத்திபுட்டீங்கன்னு எங்கள கடிஞ்சிகிட்டாங்க.. அவங்க தந்த ஊக்கத்துல வர்ற பொங்கலுக்கு 2 மணி நேர படத்தை 24 மணி நேரம் ஓட்டி சாதனை பண்ணனும்னு இப்போ டிஸ்கஷன் ஓடிக்கிட்டு இருக்கு

தினமூடி: அப்புறம் உங்க டி.வியின் முதுகெலும்பு ப்ரோக்ராம்னு நீங்க எத நினைக்கிறீங்க...

ராஜ்: எங்க முதுகெலும்புன்னா அது நேயர் விருப்பப்பாடல்கள்தான்... ராஜ் என்றால் பாட்டு, பாட்டு என்றால் ராஜ் அப்டீன்ற அளவுல நாங்க பிரபலம் ஆயிருக்கோம். அதுக்காக எங்ககிட்ட வெரைட்டி இல்லைன்னு நினைக்காதீங்க.. பாட்டெல்லாம் ஒண்ணுதான்னாலும், அதை நீங்கள் கேட்ட பாடல், நாங்கள் கேட்ட பாடல், பக்கத்து வீட்டு பசங்க கேட்ட பாடல், எதிர்வீட்டு ஆயா கேட்ட பாடல், ஜிம்மி கேட்ட பாடல்னு வெரைட்டியா கொடுக்கிறோம்..

தினமூடி: உங்களுக்கு இவ்ளோ நேயர்களா?

ராஜ்: அட நீங்க வேற.. கஷ்டமர்கள தேடிப்பிடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது.. இப்படித்தான் ஒருதபா கடற்கரையில மதியம் ரெண்டு மணிக்கு காதலர் கேட்ட பாடல்னு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்னு போனா எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி காதலிக்கிறாங்க.. யாரும் விருப்பம் கேக்கவேயில்ல... அப்புறம் குதிரை ஓட்டுனர் கேட்ட பாடல், குதிரை கேட்ட பாடல்னு புதுமையா நிகழ்ச்சி நடத்துணோம்...

தினமூடி: நீங்க எந்த திரை உலக நபர பேட்டி கண்டாலும் கேக்குற ஸ்டாண்டர்டு கேள்வி "அப்ப உங்க மனநிலை எப்படி இருந்தது?" அதாவது நடிகர்/நடிகைன்னா முதன் முதல்ல கேமிரா முன்னாடி நின்னப்போ உங்க மனநிலை எப்படி இருந்ததுன்னு கேனத்தனமா கேப்பீங்க... இப்ப அதே டார்ச்சர நான் தரேன்... முதன் முதல்ல உங்க டிவி நிகழ்ச்சிய ஆகாயவெளியில பரவ விட்டப்போ உங்க மனநிலை எப்படி இருந்த்து...

ராஜ்: எங்கடா இந்த கேள்விய கேக்காம விட்டுடுவீங்களோன்னு பயந்தே போனேன்... ஏன்னா எதிர்காலத்துல யாரும் இப்படி கேட்டா என்ன பண்றதுன்னு, முத முதல்ல டி.வி ஒளிபரப்பானப்ப என்ன மருத்துவ உபகரணங்களோட இணைச்சிகிட்டேன். என்னோட ஈ.சி.ஜி, இரத்த அழுத்தம் எல்லாம் ரிப்போர்ட்டா ரெடியா இருக்கு... அந்தா மேஜை மேல இருக்கு பாருங்க அத எடுத்துக்கோங்க... அப்புறம் உணர்ச்சி எப்படின்னு கேட்டா, சந்தோஷம் 43%, மகிழ்ச்சி 34%, பரபரப்பு 13%, சிலுசிலுப்பு 22% இருந்திச்சின்னு வச்சிக்கோங்களேன்...

தினமூடி: அப்புறம் உங்க டி.விக்கு கிடைச்ச விருதுங்கள பத்தி சொல்லுங்களேன்...

ராஜ்: எங்களாலதான் தங்களோட பிஸினஸ் பொழச்சி கிடக்குன்னு BSNL நிறுவனம் எங்களுக்கு சிறந்த கஷ்டமர் விருது கொடுத்திருக்காங்க... அப்புறம் இந்த மாதிரி ஒரு டி.வி இல்லைன்னா எங்க டிவியில எல்லாம் ஓவரா விளம்பரம் போட்டு கழுத்தறுக்கறோம்னு மக்கள் நினைச்சிறுப்பாங்க... அப்படி இல்லாம "ராஜுக்கு இது எவ்ளோ தேவலாம்"னு மக்கள நினைக்க வச்சதுக்காக மத்த சேனல் எல்லாம் சேந்து சூப்பர் அறுவை விருது கொடுத்திருக்காங்க... (டைம் பார்க்கிறார்) அடடே 6 நிமிஷமா பேசிக்கிட்டு இருக்கேன் போல.. டைம் ஃபார் விளம்பர ப்ரேக் தம்பி...

தினமூடி: அய்யா இது ஒன்னும் லைவ் ரிலே இல்ல... நாமதான் பேசிகிட்டு இருக்கோம்.. இதுக்கு கூட விளம்பர கேப்பா...

ராஜ்: விளம்பரம்கறது எங்க வாழ்க்கையோட இணைஞ்சது தம்பி.. அதனால விளம்பரம் முடிஞ்சி பேட்டி வச்சிக்குவோம்... நீங்க ஒரு 6 மணி நேரம் கழிச்சி வாங்க...

சின்னத்திரைகளில் வண்ணக்.... என்று தேய்ந்து போன ரெக்கார்டு ஓட ஆரம்பிக்கிறது...

குறிப்பு :: எனக்கும் ராஜுக்கும் உள்ள தொடர்பு 4 வருடங்களுக்கு முந்தையது... தற்கால ராஜின் போக்கில் ஏதும் மாற்றம் இருப்பின் கண்டுக்காதீங்க.



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

தமிழகம் காஷ்மீர் ஆகுமா?


இந்த வார தத்துவம்ன்ற தலைப்புலதான் இது வெளி வந்திருக்கும்.. ஆனா பாருங்க, யாராவது மறந்து போய் பழக்க தோஷத்துல த(பி)த்துவம்னு படிச்சிட்டா?


அதாவது, இது அதாகுமா, அது வேறெதாவதாகுமா, பேன் பெருமாளாகுமா அப்படீன்னெல்லாம் உதார் உடுறது தொன்று தொட்டே வர்றதுதான்னு வச்சிக்கோங்க... அட நம்ம விஜயகாந்து கூட என்னன்னு சொல்லையின்னாலும் தமிழ்நாட்ட மாத்திருவேன்னு சொல்லியிருக்காரு... கொஞ்ச நாள் முன்னாடி நம்ம சென்ட்ரல் மினிஸ்டரு மணிசங்கரு மயிலாடுதுறைய துபாய் ஆக்குவேன்னாரு... அப்புறம் ஒரு 10 லோடு மணல் அடிச்சிட்டு ஒட்டகம் வாங்க வடநாட்டு பக்கம் போனவருதான் ஆளயே காணோம்...

சரி தமிழ்நாட்டு கோட்டா முடிஞ்சிதே, யாராவது

கர்நாடகா கிர்கிஸ்தானாகும்
கேரளா க்ரோஷியாவாகும்
பீஹார் பஹ்ரைனாகும்
ஆந்திரம் ஐக்கிய நாடுகள் சபையாகும்

அப்படின்னு சொல்வாங்கன்னு வெயிட்டிங்க்ல இருந்த சமயம், திருப்பியும் நம்ம வைகோ
தமிழகம் காஷ்மீர் ஆகும்னு சொல்றாரு...

இந்த இடத்தில் ஒரு டிஸ்க்ளெய்மர் கார்டு :: "தமிழகம் காஷ்மீர் ஆகும்"ன்ற ஒரு ஸ்டேட்மெண்ட பத்தி மட்டும்தான் இங்க பேசறோம். அது சம்பந்தமா அவரு சொல்ற மத்த விஷயங்களுக்கு இவ்விடத்தில் தற்காலிகமா பொடா.

பொதுஜனங்க கிட்ட, தமிழகம் காஷ்மீர் ஆகும்னு சொல்றாரே இதுக்கு இன்னாபா அர்த்தம்னு கேட்டேன்...

சி சென்டர் பொதுஜனம் என்ன சொல்லுதுன்னா :: அடஇப்ப ஒரு கூட்டத்துல
எதிர் வரும் தேர்தலில் நம்மை எதிர்ப்பது எரிமலையாகவே இருந்தாலும், அவர்களைத் தகர்த்தெறிந்து தமிழ் இனத்தின் மானத்தை காக்க வேண்டும்னு சொல்லிகிறாரு... அத்தால இவர எதுக்கறவங்க செல பேரு சாதா மலை, செல பேரு எரிமலை... எரிமலையா இருந்தாலும் அது பொங்காத சமயமா பாத்து டைனமைட்டு வக்கணும்... இல்ல பொங்கிகினு இருக்குணு வையி, அதுல தண்ணி ஊத்தி புஸ்ஸாக்கிட்டு டைனமைட்டு வக்கணும்... அத்த செஞ்சாத்தான் தமிழ் எனத்தோட மானம் கப்பலேறாதுன்னு எல்லாம் ஆராய்ச்சி செய்வியா? தலைவரு பேச்செயெல்லாம் அனுபவிக்கனும், ஆராயக்கூடாது... அவரு பேச பேச நரம்பெல்லாம் சொம்மா முறுக்கேறும் நைனா... அதோட கபால்னு கெளம்பிடணும்...

ஏ சென்டர் பொதுஜனம் என்ன சொல்லுதுன்னா :: ஒரு வேளை தீவிரவாதத்தால் சிதிலமடைந்து இருக்கும் காஷ்மீர் பகுதியில் அகதிகளாக இருக்கும் மக்களை குறிப்பிட்டு, இலங்கையில் பலாலி விமான தளத்திற்கு இந்தியா உதவி செய்யும் வேளையில் அதனால் சிங்கள இராணுவத்தின் கை ஓங்கும் என்பதால் போர் எனில் தமிழ் மக்கள் அகதிகளாக பெருமளவில் வருவதை குறிக்கும் வண்ணம் அப்படி சொல்லியிருக்கலாம்...

பி சென்டர் பொதுஜனத்துக்குதான் இதுல கன்ப்யூசன்... சரி உடுன்னு செவனேன்னு இருந்த நேரத்துல இன்னிக்கி மகா நடிகன்னு ஒரு படம் டி.வில போட்டான். அதுல அரசியல்வாதியா வர்ற பி.வாசு கேரக்டர் இதே வசனத்த பேசும்... "எலேய் இன்ன மாதிரி இன்ன மாதிரின்னா தமிழ்நாடே காஷ்மீராகும்னு இவங்களுக்கு நாம காமிக்கணும்டா"ன்னு... அவரு சொல்ற அர்த்தம் வேற மாதிரி... அதாவது காஷ்மீர்னா இப்பல்லாம் உடனே ஞாபகம் வர்றது வன்முறையும் துப்பாக்கி சத்தமும்தான அந்த ரெஃபரன்ஸ்ல எச்சரிக்கை கொடுப்பாரு... (வைகோ சொன்னதும் இதே அர்த்தத்தில்தான் என்பது இத பதிந்த பிறகே எனக்கு தெரிய வந்தது. விபரம் பின்னூட்டப்பெட்டியில்..)

ஒரே கன்பூசன்... இந்தியா, இலங்கை ராணுவ ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டதில் மதிமுக முக்கியப் பங்கு வகித்தது. இதை மக்களிடம் மதிமுக தொண்டர்கள் எடுத்துக் கூற வேண்டும்னு தலைவர்
சொன்னத செஞ்சிகிட்டு இருக்கிற தொண்டர்கள்ல யாராவது ஒருத்தர் அத தற்காலிகமா பெண்டிங்க்ல வச்சிட்டு இந்த கொயப்பத்த போக்க ஒதவி செய்ங்கப்பா...

*

ஆசியா டைம்ஸ் பத்திரிக்கையில்
விடுதலைப்புலிகளுக்கும் தாலிபான்களுக்கும் தொடர்பு என்ற தலைப்பில் வந்த செய்தி கண்ணில் பட்டது. பாகிஸ்தானிய உளவு அமைப்பை மேற்கோளாக்கி உடனடி பணம் மற்றும் போதை பொருட்கள் ஆகியவற்றுக்கு ஈடாக அக்-கய்தா புலிகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது, புலிகளின் ஆயுதப்பாதையை உபயோகிப்பது போன்றவை குறித்து ஆசியா டைம்ஸ் பாகிஸ்தானின் தலைமை பொறுப்பில் உள்ள ஒருவரால் (மின்னஞ்சல் முகவரியோடு) எழுதப்பட்ட இந்த கட்டுரை குறித்த மேலதிக தகவல்களை யாராவது விரிவாக அலசலாம்.



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

வால் நட்சத்திரத்தால் ஏற்படும் பாதிப்புகள்


வால் நட்சத்திரத்தின் தோற்றம் எப்படியோ ஆனால் அதன் குணாதிசயம் அதன் இருப்பிடத்தை பொறுத்து மனிதர்களுக்கு பயத்தையே உண்டு பண்ணியிருக்கிறது. இப்பொழுதும் வால் நட்சத்திரம் அருகில் வருகிறதென்றால் அதை பெரும்பாலானோர் ஜாலியாக பார்க்க, ஒரு சிறு கூட்டம் அதை ஒரு எச்சரிக்கை + பயத்தோடே பார்க்கிறது.

வால் நட்சத்திரத்தின் தோற்றமே அதற்கு அப்படி ஒரு பெயர் வருவதற்கு காரணம்... அரிஸ்டாட்டில்தான் முதன்முதலில் தனது குறிப்புகளில் kom என்று பதிகிறார். அதற்கு "தலை முடி" என்று அர்த்தம், வால் நட்சத்திரத்தின் வாலை குறிக்கும் விதத்தில்... பின்பு அவரே kometes என்ற பதத்தை, "நீளமான முடியை அணிந்த" என்ற பதத்தில் உபயோகிக்கிறார். அதுதான் கிரேக்கத்திலிருந்து லத்தீனுக்கு போகும்போது comet, வால் நட்சத்திரம் என்றானது...

இவை பொதுவாக சூரியனுக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் காணப்படும்.. இதற்கு ஒரு நியூக்ளியஸ் மண்டையும் அதை சுற்றி ஒளிவட்டமும் (நெபுல்ஸ் கோமா என்பதை இப்படி மொழிமாற்றம் செய்வதற்கு தமிழ்த்தாய் மன்னிப்பாளாக) இருக்கும். ஒளிவட்டம் 24 லட்சம் கி.மீ அளவு கூட பெரிதாக இருக்கும்.. முட்டை வடிவ வால்தான் இதன் சிறப்பம்சம். இவை ஆபத்தான வாயுக்களான அமோனியா, மீத்தேன், கார்பன் டைஆக்ஸைடு மற்றும் தண்ணீரால் ஆனவை.

ஆஸ்டிராய்டுகள் என்பவை வால் நட்சத்திரத்தின் தம்பிகள் (என்று சொல்லலாமா தெரியவில்லை). இவை பாறைகள் + உலோகத்தால் ஆனவை. இந்த கூட்டணி தங்கள் பாதையில் அமைதியாக பயணம் செய்யும் வரை ஒரு ப்ரச்னையும் இல்லை. ஆனால் இவை சில சமயம் உணர்ச்சி வசப்பட்ட்டு நமக்கு அருகில் வந்துவிடும். அப்பொழுதெல்லாம் நமக்கு ஆபத்துத்தான்.

நியோ எனப்படும் Near Earth Objects பூமிக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராய்வதற்கும் தேவைப்பட்டால் அவற்றின் பாதையை மாற்றி அமைப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டமைப்பு
B612 Foundation இப்பொழுது கூட Apophis என்னும் ஆஸ்டிராய்டு பூமிக்கு மிக அருகில் செல்லப்போவதால் 2036ல் பூமியின் மேல் மோதலாம் என்ற கணிப்பில் நாசா மற்றும் B612 இருவரும் How to Deal with Apophis என்ற கேள்வியுடன் செயலாற்றி வருகிறார்கள்..

இன்னும் 30 வருடம் கழித்து தமிழில் வலைப்பதிவு என்று ஒரு சமாச்சாரம் இருந்தால் எழுதுவதற்காக "அன்புள்ள அஃபோபிஸுக்கு" எனற தலைப்பை ரிசர்வ் செய்து வைக்கிறேன்.

****

வால் நட்சத்திரத்தை வைத்து பல (மூட) நம்பிக்கைகள் இருந்தாலும் அடுத்த செய்தி வாலை பற்றியதாக இருந்தாலும் இதற்கும் வால் நட்சத்திரத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை... படத்தில் இருக்கும் குழந்தையை அனுமாரின் உருவமாக மக்கள் பார்க்கிறார்கள். வால் அளவு 4 இன்ச்... அனுமாரை போல இந்த குழந்தையின் உடலிலும் 9 இடங்களில் புள்ளிகள் இருப்பதாக கேள்வி. இந்த குழந்தையின் தாத்தா இக்பால் குரேஷி கோயில் கோயிலாக சென்று இந்த குழந்தையை காட்டுகிறார், மக்கள் வரிசையில் நின்று தரிசித்து காசு கொடுக்கிறார்கள்... உங்களுக்கு தெரிந்த "வாலு"க்கும் (லாலுவுக்கு அல்ல) நீங்கள் இது போல வால் வைத்து கற்பனை செய்து பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ஆனால்...


நம்மாளு ஒருத்தர் க்ளைடர் ஒட்டுவாரு. ஒரு நாளு அப்படி போகும்போது வழி தவறிட்டாரு.. ஒரே மேகமூட்டம் வேற.. அவரு நேரம் அவருகிட்ட இருந்த வழிகாட்டும் இயந்திரங்க வேற ஒன்னும் வேலை செய்யல... நடுவானில் தடுமாறிக்கொண்டிருந்த ஆளுக்கு அங்க ஒரு வானுயர்ந்த கட்டிடத்த பார்த்ததும் நிம்மதி.. அவரு நல்ல நேரம் அந்த கட்டிடத்தோட மொட்ட மாடில ஒருத்தர் தம்மடிச்சிகிட்டு இருந்தாரு.. பைலட் ரொம்ப தாழ்வா பறந்துகிட்டே தம்மர் கிட்டபோய் "நான் எங்க இருக்கேன்"னு கேட்டாரு.. அதுக்கு தம்மரு, "கட்டிடத்துக்கு மேல 800 அடி உயரத்தில் பறந்துகிட்டு இருக்கிற ஒரு க்ளைடர்ல இருக்கீங்க"ன்னு சொன்னாரு... "டாங்க்ஸ்பா"ன்னு சொல்லிட்டு நம்ம பைலட்டு க்ளைடர பத்திரமா ஏர்போர்ட்டுக்கு ஓட்டிகிட்டு போய்ட்டாரு.. கூட வந்த பைலட்டோட ஃப்ரண்டுக்கோ ஒரே ஆச்சரியம். எப்படிய்யா அந்த டப்பா தகவல வச்சி சரியா ஏர்போர்ட்டுக்கு வந்தன்னு கேட்க, நம்ம பைலட் சொன்னாரு "அந்த மனுசன் சொன்ன தகவ்ல் technically correct, ஆனா completely useless... ஆக அவரு வானிலை ஆராய்ச்சி நிலையத்தில்தான் வேலை செய்றவரா இருக்கணும்னு யூகிச்சி அங்கயிருந்து ஏர்போர்ட் திசைய கணிச்சி ஓட்டிகிட்டு வந்தேன்"னு... மைக்ரோசாப்ட் பற்றி சொல்ற ஜோக்கு இது.. இந்த நேரத்தில நம்ம வானிலை அ(ய்யே)றிக்கை கொடுக்கிற இயக்குனரகத்தை பாத்தா அவங்களுக்குத்தான் இது சரியா இருக்கும்னு தோணுது...

தமிழ்நாடு முழுதும் அல்லது பெருநகரங்களில் மட்டும் அல்லது சில கிராமங்களில்..

மிதமானது முதல் கனமானது வரை..
மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்..
லேசா தூறும், இல்ல கொட்டினாலும் கொட்டும்..
கூட கொஞ்சம் இடி இடிக்கலாம், அல்லது மின்னல் வெட்டினாலும் வெட்டலாம்..
மின்னல்னு இருந்தா வெளிச்சம் கம்மி ஜாஸ்தியாக இருக்கும்...

இவ்ளோதான் நம்ம வானிலை ஆராய்ச்சி நிலைய டெம்ப்ளேட்... இதுல இருந்து வெட்டி ஒட்டி தினமும் டி.வி ஸ்டேஷனுக்கு கொடுத்திடுவாங்க. அத ஸ்டேஷன்ல யாருக்காவது வேண்டிப்பட்டவங்க பொண்ணு கல்யாண ரிசப்ஷன் கணக்கா ட்ரஸ் பண்ணிகிட்டு வானிலை அறிக்கைங்கற பேர்ல லேசா தமிழ நீட்டி நீட்டி படிக்கும்...

குட்டி குட்டி நாட்டுல எல்லாம் சாட்டிலைட்டயும் மெயின்ஃப்ரேம்/சூப்பர் கம்ப்யூட்டரயும் வச்சி தகவல பிரிச்சி மேஞ்சி இன்னும் 10 நாள் கழிச்சி என்ன நடக்கும்னு 80%க்கும் மேல துல்லியமா சொல்ற நேரத்துல, போதா குறைக்கு கிளி ஜோஸ்யனுங்கள ஆரம்பிச்சி வாஸ்து பாக்கறவன், கல்லு விக்கிறவன், கோலமாவு விக்கிறவன், முதலமைச்சர்னு எல்லாரும் பஞ்சாங்கத்த பாத்து "அன்னிக்கே சொன்னேன் மழை வரும்னு"ன்னு சொல்லி வெறுப்பேத்துற நேரத்துல் இவ்ளோ பொத்தாம் பொதுவா வானிலை அறிக்கை கொடுக்கறதுக்கு ஒரு துறை, அதுக்கு ஒரு இயக்குனர் எல்லாம் இருக்காங்களான்னு ஆச்சரியமா சிலர் கேட்கலாம்... ஆனால் இருக்காங்க..

***

மூப்பின் ப்ரச்னை என்ற தலைப்பில் எனக்கு வந்த ஒரு ஃபார்வேர்டு மெயில் :: வாழ்வின் பிற்பகுதியில் வயதானவர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். இதுவரையிலும் செய்து வந்த பணியின் கட்டமைப்பை சிதையசெய்யும் பணி ஓய்வு ; குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கச்செய்த கால அட்டவணையில் ஏற்படும் திடீர் மாற்றம் ; சுற்றமும் நட்பும் கொடுத்து வந்த மரியாதை/அங்கீகாரம் குறையத்தொடங்குவதாக ஏற்படும் எண்ணம் தரும் சமூக இருப்பியல் குறித்த பயம் ; நிதி வரவு மற்றும் அதனால் கிடைத்து வந்த சௌகரியங்களில் ஏற்படும் மாற்றம் தரும் தாழ்வ் மனப்பான்மை... இது தவிர முக்கியமானதாக உடல் செயல்திறனில் ஏற்படும் தொய்வு, அதன் விளைவுகளாக ஞாபக இழப்பு மற்றும் வலிமை குறைதல்..

இவை அனைத்தும் வயதின் காரணமாக ஏற்படும் கூடுதல் சுமை. இவை அவர்களை depression நிலைக்கு எளிதில் எடுத்துச்செல்லும். இது ஒரு நோய் அன்று. இது ஒரு நிலை. இந்நிலையின் ஆரம்பகட்டம் aphasias அதாவது எண்ணங்களை தெளிவான/சிறப்பான வகையில் பேச்சு மற்றும் எழுத்தாக மாற்றும் திறன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ குறைவது... தான் மிகவும் நேசித்தவரின் மறைவு இந்நிலையை துரிதப்படுத்தும் ஒரு ஊக்கியாக செயல்படுவதாகவும் மருத்துவர்கள் சொல்கின்றனர். மனவியல் மருத்துவரின் உதவியை நாடினால் இந்நிலையிலிருந்து விடுபட்டு மூப்பை பொற்காலமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதும் மருத்துவர்கள் சொல்கின்றனர்...

இவ்ளோ நல்ல மெயில, மேல படிக்க வுடாம நம்ம கொலீக்கு "ஆமா, உங்க ஸ்டேட் X.சி.எம் அndணர், அndணரல்லாதோர்னு என்னவோ கருத்து சொல்லிக்கிறாரே, இன்னாபா மேட்டர் அது" ன்னு கவனத்த கலைச்சிட்டாரு... அது பத்தி கருத்து சொல்லலாம்னு நினைச்சேன், ஆனால் சொல்லவில்லை...

***

முந்தியெல்லாம் "அப்படி போடு அறுவாள" டைப்பு கருத்த பாக்கணுமுன்னா நம்ம அரசியல்வாதிங்களோட அறிக்கைங்களத்தான் படிக்கணும்... ஆனா இப்ப இந்த இணைய வசதி பரவலா ஆனதுல இருந்து அரசியல்வாதிங்களே துண்ட எடுத்து மூஞ்ச மூடி வெக்கப்படுற அளவு நம்ம பொதுஜனங்க அறிக்கை விட ஆரம்பிச்சிட்டாங்க... ரீஜண்டா அந்த டைப் கருத்து ஒண்ண பாத்தேன்... "ஆச்சர்யம் ஆனால் அவமானமல்ல..." அப்படீங்கற தலைப்புல தங்கமணி என்ற பெயரில் ஒருவர் சூப்பர் ஜஸ்டிபிகேஸன்
கருத்து ஒண்ணு சொல்லியிருக்காரு பாருங்க...

"டர்பன் அணிந்தவர்களை டெல்லி தெருக்களில் தேடித் தேடி வெட்டியும் கொளுத்தியும் கொன்ற கட்சியின் விசுவாசிகள் டர்பன் தலை வெட்டிய கட்சிக்காரர்களாய் அறியப்படுவதில்லை. ஆனால் தாங்களே வைத்து உருவாக்கிய மரங்களை, (ஒருவிதத்தில் அவைகள் அவர்களின் சொத்துக்களும் கூட, அதை இழப்பதால் வரும் பொருளாததார, சூழலிய பாதிப்புகளுக்கு முகம் கொடுப்பவர்களும் அவர்கள் தான்) வெட்டியதால் அந்தப்போராட்டமும், போராட்டமுறையும் கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல. "

எழுத்தர் சொல்கிறாரே தவிர மரங்களின் வயதோடு ஒப்பிட்டால் வெட்டியவர்கள் அந்த மரங்களை வைத்தவர்களாக* தெரியவில்லை.. அப்படியானால் ஒருவேளை இவர்களின் முன்னோர்கள் வைத்ததாக இருக்கும்... பக்கத்து வீட்டு வரலாறு ஆசிரியரோ, சாலையெங்கும் மரம் நட்டது சக்ரவர்த்தி அசோகர் என்கிறார்.. ஆக பாமக குஞ்சுகளுக்கு அடுத்த தேர்தலுக்கு விளம்பரம் ரெடி ::

அரசர் அசோகரின் அரசியல் வாரிசு அய்யா அவர்களின் சின்னம்...

(* வெட்டிய பின் காலியான இடத்தில் பசுமை தாயகம் என்ற பெயரில் செடி நட்டார்கள் என்பதும் ராசியான இடம் என்பதால் தலைவர் அங்கு வரும்போதெல்லாம் அதே இடத்தில் மீண்டும் மீண்டும் செடி நடுவார் என்பதும் நமக்கு தேவையில்லாத விஷயம்)

இந்த ஆச்சர்யம் ஆனால் அவமானமல்ல ரேஞ்ச் கருத்தை பார்த்துவிட்டு கீழ்க்கண்ட பிட் நோட்டீஸ்களும் தயாராவதாக கேள்வி :

பீஹார் யுபி ஆகிய மாநிலங்களை எல்லாம் அரசாங்கமே பிரிக்கும் போது தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்று சொல்பவர்களை மட்டும் பிரிவினைவாதிகள் என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

பெரிய அளவில் ஆயுதம் ஏந்தி போராடும் ஒரு பிரிவினரை இராணுவம் என்று சொல்லும்போது சிறிய அளவில் ஆயுதம் ஏந்தி போராடும் ஒரு பிரிவினரை மட்டும் தீவிரவாதி என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் ஒரு கூட்டம் சீருடை அணிந்து செய்ததை சீருடை அணியாமல் ஒரு கூட்டம் செய்தால் அவர்களை கேங் ரேபிஸ்டுகள் என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

காங்கோவிலும் ஆஃப்கனிலும் குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணமாக இருக்க இங்கே செய்தால் மட்டும் அதை குற்றம் என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

தசரதன் ஆயிரம் மனைவிகள் வைத்துக்கொண்டு இருந்ததாய் சரித்திரம் இங்கே இரு மனைவிக்கு மேல் வைத்திருப்பவர்களை பாலிகாமிக்கள் என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

தலை வெட்டிய கட்சி தலைவெட்டி கட்சியென்றும் அறியப்படாத நிலையில் தானே வைத்து உருவாக்கிய சந்தன மரங்களை வெட்டியதால் வீரப்பரை சந்தன கடத்தல் வீரப்பன் என்று கொச்சைப்படுத்துவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...




š இப்பதிவை மின்னஞ்சலிட