2006 பதிவுகள் - லிஸ்டிங் பதிவுகள் பற்றி ஒரு பதிவு
வருசக்கடைசியானா போதும், என்ன பதிவுகள் எழுதலாம்னு யோசிக்கவே வேண்டியதில்லை. போன வருசம் நடந்த பல விசயங்கள பத்தி ஆ(பீ)ராய்ஞ்சி "என் பார்வையில் இது அல்லது அது" அப்படீன்னு கண்ணோட்டப்பதிவா எழுதித்தள்ளிடலாம். ஆமா, இப்படி எழுதறதால என்ன புண்ணியம். புண்ணியமாவது பாவமாவது... பதிவாளன் (பாவபுண்ணிய) கணக்கு பாத்தா என்னவோ கூட மிஞ்சாதுன்னு ப(கி)ழமொழி கேள்விப்பட்டதில்லை?
கண்ணோட்டப்பதிவு சரி, தலைப்பு?
பூமிசூடேற்றம் முந்தைய வருடங்களை விட இவ்வருடம் மட்டும் 3.6 மடங்காக உயர்ந்தது எப்படி?
உலகத்தில் இவ்வருடம் நடந்த நவீன வகை கவலை தரவைக்கும் குற்றங்கள்.
இந்த வருடம் பணவீக்கம் எப்படி, அது வரும் வருடங்களை எப்படி பாதிக்கிறது...
ஸ்டாப் ஸ்டாப்... நீங்க தமிழ் வலைப்பதிவாளர்தானே? என்ன யோசனை இது சிறுபிள்ளத்தனமா... இப்படியெல்லாம் சிந்திக்கப்படாது...

நீங்கள் எழுதவேண்டிய பதிவின் தலைப்பு :
2006 தமிழ் பதிவுகள் - எனது பார்வையில்
சரி. இது ரொம்ப ஈஸிதானே, கண்டமேனிக்கு எழுதலாம்னு ஒரு ஸ்(மை)மால் சந்தோசம்? நோ வே... கண்டமேனிக்கு எழுத இது என்ன இஸம் பற்றிய குறிப்புகளா.. இதுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்குண்ணே..
**
இலக்கண குறிப்புகள் ::
அ) டிஸ்கி விடுதல் :: முதலில் டிஸ்கி எனப்படும் பின்குறிப்பு எழுதிட்டுதான் பதிவே எழுத ஆரம்பிக்க வேண்டும். பின்குறிப்பு எனப்படுவது : "இது, என் பார்வையில் எனக்கு சிறந்ததாக தோன்றியதை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே. என் தேர்வுகளில் ஒன்றிரண்டாவது, 'அட சரியாத்தான் சொல்லியிருக்கான்' என்று உங்களுக்கும் தோன்றினால் அது விபத்தே அன்றி வேறல்ல"
இது ஏன் முக்கியம் :: ஒரு சாம்பிள். நியாயமாக பார்த்தால், இடது சாரி மார்க்சீய சிந்தனைகளை பற்றியும் தென் அமெரிக்க புரட்சிகளை பற்றியும் தமிழகத்தில் உரிமைக்குரல் எப்படி மேல்வர்க்க ஆட்களால் நசுக்கப்படுகிறது என்பது பற்றியும் சென்ற வருடம் 70 பதிவுகள் எழுதி 'இது எனது 70வது பதிவு' என்று வேறு ஒரு பதிவு எழுதி அதில் 69 பேர் வந்து வாழ்த்துக்கள் என்று பின்னூட்டமும் விட்டிருப்பார்கள்.. ஆனால் அதை விட்டுவிட்டு "&%#@ பாப்பான்கள்/பாப்பாத்திகள்" என்று (இங்கே &%#@ என்ற இடத்தில் சாப்பிடும், தூங்கும், குளிக்கும், துணிதோய்க்கும், பாத்திரம் தேய்க்கும், பாட மறுக்கும் என்று எதையாவது ஃபில்லப் செய்துகொள்ளலாம்) எழுதி அவா இவா என்று சில பல வார்த்தைகளை தூவி மொத்தமே ஒரு வருடத்தில் 6 இடுகைகள் மட்டும் போட்டிருக்கும் பதிவரின் பதிவை - பலவித இண்டர்னல் அஃபர்ஸ் காரணமாக - சிறந்த புரச்சிகர பதிவு என்று சொன்னால் எவனாவது பொழுது போகாத பொடலைச்சாமி வந்து அதை கேள்வி கேட்கலாம். அப்போது பின்குறிப்புதான் கைகொடுக்கும். <போல்டு>"என் பார்வையில்"போல்டு> ன்னு சொல்லியிருக்கேன் பாருங்கன்னு பொடலைக்கு பதில் சொல்லி ஈஸி எஸ்கேப் ஆகலாம்.
ஆ) பதிவுகள் தேர்வு :: இப்போது சிறந்த பதிவுகள் பட்டியல் தயாரிக்க வேண்டும். தயாரிப்பு என்பது தமிழ் பதிவு சூழலில் கொஞ்சம் டெலிகஸி சார்ந்த விஷயம்.. அது என்ன என்று பார்க்கும் முன், எத்தனை பேரை "சிறந்த" பட்டியலில் சேர்ப்பது என்பதை முடிவு செய்வோம். அப்படியே கொஞ்சம் கொசுவத்தி சுருள் ஓட்டி தமிழக அரசு கலைமாமணி பட்டம் தரும் வைபவத்தை நினைவு படுத்திக்கொள்ளவும். பணமுடிப்பு, பட்டம், விழா ஏற்பாடு என்று செலவு பிடிக்கும் அதையே மானாவரியாக அள்ளி அள்ளிக்கொடுக்கும்போது, நாம் எதற்காக வஞ்சனை செய்யணும்?
இப்ப டெலிகஸி மேட்டருக்கு வருவோம்... உங்கள் பதிவுகள் தேர்வு கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பட்டியல் படித்து முடிக்கும் வாசகருக்கு உங்கள் "பொலிட்டிகல்லி கரெக்ட்னெஸ்" பளிச்சென்று தெரியவேண்டும். ஆனால் அது உங்களுக்கு அமையவிருக்கும் "லைஃப் டைம் தொடர் வாசகர்" வட்டத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் அளவில் அமையக்கூடாது. சில சமயங்களில் சீரியஸ் விவாதப்பதிவுகள் வரும். அப்போது ஒரு கோஷ்டி குழுவாக வந்து கும்மியடிக்கும். அதிலிருந்து பவர்ஃபுல் கோஷ்டி எது, இளிச்சவாய் கோஷ்டி எது என்று அடையாளம் காணலாம். அந்த பவர்ஃபுல் கோஷ்டியில் இருந்து அதிகமாக நாய்ஸ் விடுபவரை உங்களின் பட்டியலில் சேர்ப்பது உங்கள் வலைப்பதிவு எதிர்காலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இ) கேட்டகரி தலைப்புகள் :: எந்த தலைப்பும் தராமல், எனக்கு பிடித்த பதிவுகள் என்று மொட்டையாக எழுதலாம். ஆனால் அது சுவாரசியமற்றதாகவும், உங்கள் 'சீசன்டு' எழுத்தாளர் பட்டத்திற்கு அவமதிப்பாகவும் ஆகலாம். ஆகவே என்ன என்ன கேட்டகரியில் பதிவுகளை அறிவிப்பது என்று யோசிக்க வேண்டிவது ரொம்ப முக்கியம். நாமோ பதிவுகள் தேர்வின்போது எக்கச்சக்கமாக தேர்வு செய்துவிட்டோம். அதில் எதையும் விடவும் முடியாது. இப்ப என்ன செய்வது. கவலைப்படாதீர்கள்... கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது பரிசு தரும் வெப்சைட்டையோ ஃபாலோ செய்து அதிலிருந்து தலைப்பு தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்களே பெர்முட்டேஷன் காம்பினேஷனில் தலைப்பு அமைக்கலாம். உ.ம் :: சிறந்த சமையல் பதிவு, சிறந்த வெங்காய சமையல் பதிவு, சிறந்த சின்ன வெங்காய பதிவு, சிறந்த வெட்டும்போது கண் எரியாமல் இருக்கும் சின்ன வெங்காய பதிவு, இதர இதர இதர...
**
பின் கொறிப்பு :: இந்த பதிவு "மூத்த" வலைஞரான பாஸ்டனை நையாண்டி செய்வது போல் உள்ளது. ஆகையால் (VAI - Vaலைப்பதிவு Aத்தாரிட்டி ஆஃப் Iண்டியா) சட்டத்தின் கீழ் இப்பதிவுக்கு எதாவது 'அடையாள' தண்டனை கொடுத்து கண்காணிக்க வேண்டியது சமூக முன்னேற்றத்துக்கும் சட்ட பாதுகாப்புக்கும் மிகவும் அவசியமானது என்று பெட்டி
**
கொறிப்புக்கு பின் வரும் குறிப்பு :: பணக்காரனாவது எப்படி என்று எழுதியவனே பிச்சைக்காரனாக இருந்தால் எப்படி? ஆகவே இதோ ஒரு.. 2006 தமிழ் பதிவுகள் - என் பார்வையில்
முன்குறிப்பு :: இது, என் பார்வையில் எனக்கு சிறந்ததாக தோன்றியதை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே.
செய்தி :: மருத்துவம், செக்ஸ், வேலைவாய்ப்பு, செய்திக்குறிப்பு, வெட்டி, வீண்வம்பு, தும்பு, அரசியல் கட் பேஸ்ட், அரசியல் அலசல், தன் கட்சி தலைவனை புகழ்தல், எதிர் கட்சியை சேர்ந்த தலைவனை சாதி சொல்லி திட்டுதல், விஞ்ஞானம், அஞ்ஞானம், ஆராய்ச்சி, அபிவிருத்தி, உண்மையான புரட்சி குறிப்பு, சரோஜாதேவி டைப் புரட்சி குறிப்பு, திராவிடம், தமிழ் வளர்ச்சி, தமிழ் அவளர்ச்சி, தமிழுக்காக வெறும் சவுண்டு மட்டும் கொடுப்பது போன்ற கேட்டகரிகளில் சிறந்த பதிவர்களாக நான் கருதும் பதிவர்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் இப்போது, இந்த பட்டியலில் இருக்கும் பதிவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இன்ஷ்டண்ட் பின்னூட்டங்களில் ஒன்றையாவது இப்பதிவில் பின்னூட்டம் இடவில்லை என்றால் அவர்களுக்கு தூங்கும்போது கண் தெரியாமல் போகக்கடவது.
அ) இயர் எண்ட், என்ன பண்ணுவது என்று முழிக்கும் நேரத்தில் அவசியமான பதிவு. நீங்கள் குறிப்பிடும் எல்லாவற்றையும் படிக்கிறேன்.
ஆ) அனைவரையும் என் டெம்பிளேட்டில் சேர்த்துவிட்டேன். இப்போதுதான் பேஜ் லோடிங் ஆக அதிக நேரம் ஆகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
இ) இன்னா நைனா ஒரே கும்மாங்குத்தா கீதே.
ஈ) என் பதிவை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
உ) என் பதிவை "நீங்கள்" குறிப்பிட்டிருப்பது மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும், வெட்கமாகவும், சோகமாகவும் இருக்கிறது.
தமிழ்ப்பதிவுகள்
புதுப்பிக்கப்பட்ட தளம்
எங்கள் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் பதினான்காவது மாடியில் அலுவலகம் நடத்திக்கொண்டிருந்த டுபாக்கூர் & கோ தங்கள் சொந்த கட்டிடத்தில் குடிபெயர்ந்த பிறகு அந்த தளத்தையும் எங்கள் ஆட்களே குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள். அதை ஸ்டேட்-ஆஃப்-த-ஆர்ட் தளமாக நிர்மாணிக்கப்போவதாக கேள்விப்பட்டபோது, அட நம்மாளுங்களுக்கு கூட இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுமா என்று நாங்கள் ஆச்சரியமாக பேசிக்கொண்டோம். அதற்கப்புறம் பொழுதுபோகாதவர்கள் எல்லாம் இது சம்பந்தமான மெயில்கள் பரிமாறும்போது மட்டும் இப்படி ஒன்று இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியவரும். திடீரென ஒரு நாள், தள நிர்மாணம் முடிவடைந்துவிட்டது என்றும் திறந்த வீட்டில் நுழைந்து பார்க்க (open house) வரும் வெள்ளி அன்று அனைவரும் வரலாம் என்றும் மெயில் வந்தது. அன்று வேலைப்பளுவால் செல்லவில்லை. அதற்கப்புறம் அங்கு செல்லவே வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி, ஈயடிக்கும் இடத்தில் எறும்புக்கு என்ன வேலை... அங்கு வேறு டிபார்ட்மெண்ட்.
இன்று காலை பதினான்காவது தள கான்பரன்ஸ் அறையில் நடக்கும் தங்களது மீட்டிங்கில் கலந்து கொள்ள வருமாறு 'அவசியம் கலந்துகொள்ளவேண்டியவர்கள்' பட்டியலில் பெயர் போட்டு மெயில் வந்ததும் வேறு வழியில்லாமல் பதினான்காவது தளத்துக்கு சென்றேன். எங்கள் மீட்டிங் நடக்க வேண்டிய அறையில், அதற்கு முன்பு மீட்டிங் போட்டிருந்தவர்கள் இன்னமும் முடிக்காமல் கடலை வறுத்துக்கொண்டிருந்தார்கள். சரி அப்படி என்னத்தை ஸ்டேட் ஆப்பு த ஆர்ட்டு கட்டிவிட்டார்கள் என்று சித்தி ச்சே சுத்தி பார்த்து வரலாம் என்று கிளம்பினேன்.
சிரிப்புதான் வந்தது. தனித்தனி cubicleஆக இருந்ததையெல்லாம் அப்புறப்படுத்தி ஓபன் டைப் ஆபிஸ் என்று நெஞ்சு வரை மட்டும் தடுப்பு ஏற்படுத்தி இந்த மூலையில் நின்று பார்த்தால் அந்த மூலையில் இருப்பவனை பார்க்கலாம் என்ற அளவில் கல்யாண மண்டபம் போல் ஆக்கிவிட்டிருந்தார்கள். இது வித்தியாசமாக இருந்தாலும் நமக்கு ஸ்டேட் ஆர்ட் எல்லாம் இல்லை. ரொம்ப காலமாகவே நம்மூரில் - இடப்பற்றாக்குறையால் - நிர்மாணிக்கப்படும் ஆபிஸ் தள டிசைன்தான். நம்மூரில் நான்கு பேர் முதுகோடு முதுகு இடித்துக்கொண்டு இருப்போமே அதையே இங்கு ஏகப்பட்ட இடம் விட்டு நடுவில் ஒரு தடம் விட்டு ஓபன் ஆபிஸ் என்று வைத்திருந்தார்கள்.
சரி, தனித்தனி க்யூபிக்கலில் ஜில்பான்ஸி ஆடிக்கொண்டிருந்தவர்களை ஒருவரின் கண்ணி திரையை குறந்தது அவருக்கு diagonal ஆக அமர்ந்திருக்கும் - குறைந்த பட்சம் - நாலு பேராவது பார்க்க இயலும் எனும் சூழ்நிலையில் விட்டால்... இந்த ஏற்பாடு சகிக்கவில்லை என்று நான் சந்தித்த அனைத்து ந(ண்)பர்களும் குறிப்பிட்டார்கள். முக்கால்வாசி ஆட்கள் docking stationஐ உபயோகப்படுத்தாமல் மடிக்கணினியை மூலையில் வைத்துக்கொண்டு வழக்கம் போலவே ஸ்டாக் மார்கெட்டோடு போராடிக்கொண்டிருந்தார்கள். யாருக்குமே ப்ரைவஸி என்பதே கிடையாது. கான்பரன்ஸ் அறைகள் கூட கண்ணாடி தடுப்புகள் ஊடே அமைக்கப்பட்டிருந்தன. முக்கியமான மீட்டிங் என்றால் பாதிப்பேரின் கண்கள் கான்பரன்ஸ் அறைகளையே பார்த்துக்கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்பவர்களின் முகபாவங்களை வைத்தே அறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நிறைய பேருக்கு மனோதத்துவம் கைவசப்பட்டிருந்தது.
மற்ற தளங்களை விட கிச்சன் மிகவும் பெரிதாக இருந்தது. நான்கு குளிர்சாதன பெட்டிகள் (அதே அளவு ஆட்கள் இருக்கும் எங்கள் தளத்தில் இரண்டு), நான்கு புதிய பெரிய மைக்ரோவேவ் (பழைய சிறிய இரண்டு), புதிய வகை காப்புசினோ மெசின்கள் இரண்டு (பழையது ஒன்று), அதிநவீன வெண்டிங் மெசின்கள் மூன்று (பழையது ஒன்று) என்று கலக்கலாக இருந்தது. "இங்கு மெயிடுகள் கிடையாது. இதை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" என்ற சாயம் போன ப்ரிண்ட்-அவுட்டில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.
சுத்திய வரை போதும் என்று கான்பரன்ஸ் ஹால் வந்தால் பழைய மீட்டிங் இன்னமும் முடிவடைந்திருக்கவில்லை. சரி என்று பாத்ரூம் பக்கம் நடையை கட்டினேன் (வெறுமே சுத்தி பார்க்க மட்டும் இல்லை). பாத்ரூமும் கலக்கலாக இருந்தது. விஸ்தாரமான அறையில் ஒரு சோபா போட்டிருந்தார்கள். ஏற்கனவே நிறைய பேர் காலையில் எழுந்து வந்து இங்குதான் பாதி வேலையை முடிக்கிறான்கள், இந்த லட்சணத்தில் சோபா வேறா.. உருப்பட்டா மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் தண்ணீர் புழங்கும் அறையில் இப்படி துணி சோபா போட்டிருக்கிறார்களே, விரைவில் mold பிடித்துவிடாதா என்ற யோசனையில் 'காரியமாற்றும்' இடத்தை பார்த்தால் அதிர்ச்சி. நின்ற வாக்கில் செயலாற்ற உதவும் பீங்கான்களை காணோம். அடப்பாவிகளா புதுமை என்ற பெயரில் இதற்கு கூடவா ஆப்பு வைக்க வேண்டும் என்று கம்மோடு அறையில் நுழைந்து "ஆஜா ஆஜா ஆஜா (ஜில்லுன்னு ஒரு காதல்)" விசிலடித்துக்கொண்டே வேலையை முடித்துவிட்டு, கை கழுவ வந்து பார்த்தால் முதல் குழாயில் தண்ணீர் வரவில்லை. அதானே, என்னதான் புதுசாக இருந்தாலும் இப்படி ஏதாவது திருஷ்டி இருக்க வேண்டுமே என்று எதிர்பக்க கடைசி குழாய்க்கு நகர்ந்து (பீங்கான், கம்மோடு, தண்ணீர் குழாய் என்று எதாக இருந்தாலும் ஒன்று இந்த கடைசி அல்லது அந்த கடைசி என்றே தேர்ந்தெடுக்கும் எனக்கு ஏதாவது ப்ரச்னையா) கைகழுவிவிட்டு பக்கத்தில் இருந்த டவல் ஹோல்டரை பார்த்தால் பேப்பர் டவல் இல்லை. சரி என்று பழைய மூலைக்கு திரும்பி வந்து அல்ட்ரா சாஃப்ட் பேப்பர் டவலில் கைதுடைத்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியேறும் சமயம் பாத்ரூம் டிசைனை பற்றியதாக சிந்தனை மாறியது.
மூடியிருந்த ஆபிஸை திறந்த வெளியாக்கியதாவது வேண்டுமானால் ப்ரொடக்டிவிட்டுக்கு உதவினாலும் உதவலாம், ஆனால் பாத்ரூமை மூடப்பட்ட அறைகளாக மாற்றியது எந்த விதத்தில் உபயோகம். தனித்தனி அறையால் சில நேரங்களில் நெரிசல் + க்யூ ஏற்பட்டு அதனால் அனாவசியமான நேர விரயம்தானே ஏற்படும் என்ற சிந்தனையில் வெளியேறியபோது 'ஏச்சி ஏச்சி என்ன பேச்சு' என்ற வரியில் இருந்த என் விசில் அப்படியே நின்றது. தட்டிய பொறியில் திரும்பி மேலே பார்த்தேன். WOMEN என்று எழுதியிருந்தது.
தமிழ்ப்பதிவுகள்
