<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

யு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு


இந்தியாவில் இருந்து புதிதாக இங்கு வருபவர்கள் யாரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தாலும் முதலில் நான் அவர்களுக்கு மூன்று குறுவிஷயங்கள் சொல்வேன் ::

அ) நம்மூரில் கறுப்பின மக்களை நீக்ரோ என்று அழைப்பது குறிப்பிடுவது பொதுவான ஒரு சொலவடை. ஆனால் இங்கு அப்படி குறிப்பிடுவது தகாத செயல். அவர்களை ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் அல்லது ப்ளாக் என்று குறிப்பிடவேண்டும். எக்காரணம் கொண்டும் நீக்ரோ என்று குறிப்பிடாதீர்கள்.

ஆ) 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தாலன்றி அவர்களுக்கு காசோ, சிகரெட்டோ, சாராயமோ தராதீர்கள்.

இ) 18 வயது குறைந்தவர்களிடம் பாலியல் நடவடிக்கைகள் எந்த ரூபத்தில் என்றாலும் அது சட்டவிரோதம்.

*

நான் இங்கு வந்த புதுசில் அலுவலகம் முடிந்து பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன்.. பஸ்ஸில் கடைசி இருக்கை தவிர்த்து பார்த்தால் என்னோடு சேர்த்து நாலே பயணிகள். கடைசி இருக்கையில் நாலைந்து இளம் பெண்கள். என்னவோ சத்தமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் அவர்களை பின்பார்க்கும் கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்து / முறைத்துக்கொண்டு வந்தது நன்றாக தெரிந்தது. திடீரென அந்த கூட்டத்தில் இருந்து ஒரு பெண் எழுந்து வந்து "உங்க பக்கத்துல உக்காந்துக்கலாமா" என்றாள். எங்கிட்டத்தான் கேக்கிறான்னு புரியவே எனக்கு ஒரு நிமிஷம் ஆச்சு. நடுவுல இரும்புத்திரை ஒண்ணுதான் பாக்கிங்கிற ரேஞ்சுல பல்லவன் & கோவுல எல்லாம் போயிட்டு இங்க ஒரு கிளி தானா வந்து பக்கத்துல உக்காரலாமான்னு கேட்டா பேச்சிலர் பையன் என்னவா ஆவான்.. பேச்சு இலர் தான்... "அஃப் கோர்ஸ்"னு சொன்னப்போ ஜொள்ளுவிட்ட மாதிரி ஞாபகம் இல்ல (ஹை).. அப்புறமா என்கிட்ட பேர் என்ன, என்ன வேலை அப்படி இப்படின்னு சாதாரணமா பேசிகிட்டு இருந்தா.. திடீர்னு உன் தோள் மேல கைய போட்டுக்கலாமான்னு கேட்டா... அடங்கொக்கமக்கான்னு இருந்தாலும் சபலம் சும்மா விடுமா, "ஓக்கே"ன்னேன் நான். அவ என் தோள சுத்தி கைய போட்டதுதான் பாக்கி, கடைசி சீட்ல இருந்து "ஓ"ன்னு ஒரு கூச்சல்.. அவ எம் பக்கத்துல உக்காந்ததுல இருந்து இப்ப வரைக்கும் கடைசி சீட் டெம்பரரியா அமைதியா இருந்ததுங்கிறதே இப்பத்தான் எனக்கு உரைச்சிது. காதலி அருகில் இருந்ததால் உலகமே பேரமைதியா இருக்குதோன்னு தப்புக்கணக்கு போட்டிருக்கிறேன்...

இப்பத்தான் விஷயமே விளங்குது எனக்கு. நன்றாக அயர்ன் செய்யப்பட்ட ப்ளைன் முழுக்கை சட்டை, ஃபார்மல் பேண்ட், கையில் ஒரு கம்ப்யூட்டர் பேக்னு பழம் மாதிரி ஒரு அப்பாவி - சரி சரி நம்ம முக அமைப்பு அபப்டி - இருக்கானே, அவனை கலாய்க்கிறேன்னு பெட்டு கிட்டு கட்டினாளோ என்னவோ... நினைக்கிறதுக்குள்ளே இவ திரும்பி "ஷட் அப்"னு ஒரு குரல் விட்டா, உடனே பின் சீட் கப்சிப். இப்போ என்கிட்ட ஒரு சூப்பர் கதை சொன்னா.. கதையின் சாரம் :: "ப்ரண்ட்ஸ் கூட சினிமா போகலாம்னு கிளம்பினேன், அம்மா காசு தரல, அதனால ஒரு பத்து ரூபா டாலர் இருக்குமா?" ஹை.. திராவிடன்கிட்டயே திருட்டுத்தனமா... "எங்கிட்ட சுத்தமா காசு இல்ல, க்ரடிட் கார்டு வேணுமா"ன்னு (ஜோக் அடிக்கிறேனாம்) கேட்டேன். அவ "பரவாயில்ல, ப்ரண்ட்ஸ் பாத்துப்பாங்க, அட்லீஸ்ட் பாப்கார்ன் (பாப்பான் அல்ல) வாங்க ஒரு ரெண்டு டாலராவது தருவியா"ன்னு கேட்டா, நான் "பஸ்ஸுக்கே கார்டுதான் வச்சிருக்கேன். சுத்தமா நயா பைசா இல்ல"ன்னேன். அவ உடனே என் மேல் பாக்கெட்டுல இருந்த சிகரெட் பாக்கட்ட பாத்தா, "அட்லீஸ்ட் ஒரு சிகரெட்டாவது தருவியா"ன்னு கேட்டுகிட்டே அவளே என் பையில இருந்து பாக்கெட்ட எடுத்து, தலைக்கு மேல ஆட்டி காமிச்சா... உடனே கடைசி சீட்ல இருந்து திருப்பியும் ஒரு "ஓ".. இப்ப ட்ரைவர் "வாட் யுர் டூயிங்" அப்படீன்னு ஒரு குரல் விட்டாரு. உடனே இவ "நத்திங்" அப்படீன்னு சொல்லிட்டு... "இட்ஸ் சோ ச்வீட் ஆஃப் யூ, பட் ஐ டோண்ட் ஸ்மோக்.. தேங்க்ஸ்" அப்படீன்னு சொல்லிட்டு சிகரெட் பாக்கட்ட என் பாக்கட்லயே வச்சிட்டு எந்திரிச்சி போயிட்டா.. அப்புறம் மீண்டும் கலாட்டா ஆரம்பிக்க, என் ஸ்டாப் வந்து நான் இறங்கிட்டேன்.. பஸ் என்ன க்ராஸ் பண்ணப்போ கண்ணாடி வழியா அவ கொடுத்த ப்ளையிங் கிஸ் தெரிஞ்சிது... அட, அவ ஃபோன் நம்பர் கூட வாங்கிக்காம அசமஞ்சமா இருந்திருக்கோமேன்னு நினைப்போடவே வீடு வந்து சேர்ந்தேன்.

மக்கள்ஸ் கிட்ட இந்த கதைய சொன்னவுடனே பூபதி கேட்டான், "அவளுக்கு என்ன வயசு இருக்கும்?".. "தெரில ஒரு 16, 17 வயசு இருக்கும்"னேன் நான். ஆனா யோசிச்சு பாத்தா அத விடவும் கம்மியா இருந்திருக்கும்னுதான் தோணிச்சி.. பூபதி சொன்னான் "நல்லவேலையா நீ எஸ்கேப் மகனே". அதாவது அவ சிகரெட் பாக்கெட்ட கையில வச்சிருக்கிற சமயத்துலயோ, இல்ல சிகரெட் பாக்கெட்ட எடுத்துகிட்டோ போயி அத மாமா பிடிச்சான்னா, அவளுக்கு சிகரெட் தந்ததுக்காக நான் பதில் சொல்ல வேண்டி வருமாம்...

பூகோள ரீதியாக இங்கு ஒருவரின் புறத்தோற்ற சராசரிகள் இந்தியர்களின் தோற்றத்தின் விடவும் மிகவும் மாறுபட்டது. அமெரிக்க சராசரி உயரமும் எடையும் இந்தியர்களை விட அதிகம். ஒரு 14 வயது பையனோ பெண்ணோ எளிதாக 18 வயதினராக தோற்றம் தரலாம். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட், சாராயம் தருவது சட்டப்படி குற்றம். கடையில் அவர்களது அடையாள அட்டை பார்த்து வயதை கன்ஃபர்ம் செய்தே தருவார்கள்/மறுப்பார்கள். ஆகவே யாராவது பணம் தருகிறேன், கொஞ்சம் சிகரெட் வாங்கித்தர முடியுமா என்றால்கூட உடனே மறுத்துவிடுங்கள். அவர்களுக்கு பணம் கூட தராதீர்கள். அதை எதற்கு உபயோகப்படுத்துவார்களோ, யாருக்கு தெரியும். இந்த ஊரில் சட்டங்கள் வித்தியாசமானவை. உங்கள் வீட்டில் தண்ணி பார்ட்டி வைத்து, அதற்கு வருபவர்களில் யாராவது முட்ட முட்ட குடித்துவிட்டு திரும்பி செல்லும் வழியில் மாமாவிடம் மாட்டி, உங்கள் பார்ட்டியில்தான் தண்ணி அடிச்சேன் என்றால் நன்கு குடித்த நிலையிலும் அவர்களை ஏன் மோட்டாரை இயக்க அனுமதித்தாய் என்று கேள்வி கேட்டு மாமா வருவார்.

*

புதிதாக வருபவர்களில் பாதிப்பேருக்கு பொழுதுபோக்கு கம்ப்யூட்டர்தான். புதிய இடம், புதிய சூழல். தனிமை. இங்கு கார் இல்லாமல் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு பயணம் செய்வது மிகவும் கடினம். குறுகிய பயணமாக வருபவர்கள் பெரும்பாலோர் முடிந்த வரை காசு சேர்த்துக்கொண்டு ஊர் போவோமா, கார் வாங்கி அதை போகும்போது விற்று என்று கார் வாங்கவே மாட்டார்கள். கிழக்கு பகுதியில் வருடம் நான்கைந்து மாதம் பனி வேறு. அதோடு குறைந்த விலையில் நிறைந்த இண்டர்நெட் கனெக்சன். இப்பொழுது எப்படியோ, அப்பொழுது டயல் அப்பில் மட்டுமே வளர்ந்த எனக்கெல்லாம சல்லிசாக 24 x 7 ப்ராட்பேண்ட் என்பது அற்புதம். இப்பொழுது பதிவு எழுதி டைம் வேஸ்ட் செய்வது மாதிரி அப்பொழுது டைம் வேஸ்ட் செய்ய பயன்பட்டது சாட்டிங். கார் வாங்கிய பின்புதான் டைம் வேஸ்ட் என்பது டைம் ஸ்பெண்ட் என்பதாக ஆனது.

சாட்டிங் செய்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சைபர் செக்ஸ் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். சுருக்கமாக சொன்னால் சாட்டிங்கில் பாலியல் விஷயங்களை பேசுவது. அமெரிக்க சினிமாக்களை பார்த்து, அமெரிக்க என்பது ஃப்ரீ செக்ஸ் நாடு என்ற பிம்பத்தை வளர்த்துக்கொண்டு இங்கு வருபவர்களுக்கு தெரியாத விஷயங்கள் பல உண்டு. இங்கு யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தவறு. பாலிகமி என்பது கூடக்குறைச்சலாக இருந்தாலும் இங்கும் ஒருவனுக்கு ஒருத்திதான். ச்சீட்டிங் என்பது குறித்த உணர்வு உலகம் முழுவதும் ஒன்றுதான். அமெரிக்காவில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது. அதாவது வயதுக்கு வந்த இருவர், இருவரின் முழுச்சம்மதத்தோடு உடல்ரீதியான தொடர்பு கொள்ளலாம் எனினும் அதற்காக காசு பணம் வேறு ஆதாயங்கள் என்று எந்த பரிவர்த்தனையும் கூடாது.


18 வயதுக்கு குறைந்தவர்கள் குழந்தைகளாக கணக்கில் கொள்ளப்படுகிறார்கள். அவர்களோடு எந்த ரூபத்தில் பாலியல் தொடர்பு கொண்டாலும் அது சட்ட விரோதம். அதாவது 18 வயது குறைந்தவர்ளோடு சாட்டிங் செய்து அதில் பாலியல் குறிக்கோள் இருந்தாலோ, அல்லது பாலியல் சம்பந்தப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் இருந்தாலோ அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் அவ்வப்பொழுது கவுண்டி போலீஸ் டிபார்ட்மெண்டே பெண் பெயரில் ச்சாட் செய்து இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்களை பிடிப்பார்கள். லோக்கலாக இப்படி என்றால் தேசிய ரீதியாக NBC Dateline போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இது போன்று பொறி வைத்து பலரை பிடித்து அவர்களை சட்டத்திடம் ஒப்படைக்கின்றது. இது வரை 179 பேர் NBCஆல் பொறிவைத்து பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போன்ற ஒரு ஆப்பரேஷன் போன வாரம் நடந்தது. Petaluma sting என்ற பெயரில் நடந்த இந்த ஆப்பரேஷனின் வீடியோ க்ளிப்பிங்குகளும் அதன் வரிவடிவ கட்டுரைகளும் இந்த சுட்டியில் இருக்க்கிறது. சென்ற வாரம் பிடிபட்ட 29 பேரில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். இந்தியர்கள் புனிதமானவர்கள் என்பதால் அல்ல, Ph.D in Computer Engineering, புதிதாக மேற்படிப்பு படிக்க வந்தவர்கள் என்று சின்ன வயதுக்காரர்களாக இங்கு இருப்பவர்களின் பெற்றோர் பல்லாயிரக்கணக்கான மைல் தள்ளி தம் மகன்கள் ஜெயில் களி தின்கிறார்களே என்பதை நினைத்தால் அவர்கள் நிலை என்னவாகும் என்ற அந்த நினைப்பில்...

இந்த சுட்டியில் வலதுபுறம் Dateline Videos என்ற பகுதியில்

Part 2 of the Petaluma investigation
3: Silicon Valley men
4: The man who brought a friend

என்ற தலைப்பில் இருப்பது பூராவும் மாட்டிய இந்தியர்களின் வீடியோ க்ளிப்பிங்குகள். இவை சென்ற வாரம் தேசிய தொலைக்காட்சியான NBCல் ஒளிபரப்பப்பட்டது. இதில் The man who brought a friend என்பது இந்தியாவில் இருந்து புத்தம்புதிதாக வந்த நபர். இந்தியன் accent கூட இன்னும் மாறவில்லை. அவரிடம் கார் இல்லையென்று தன் நண்பனை அழைத்துக்கொண்டு வந்து பிடிபட்டிருக்கிறார். எல்லாரும் 30 ஆயிரம் ரூபாய் டாலர் பத்திரத்தில் பெயில் அளிக்கப்பட்டு கோர்ட் அழைப்பு அன்று சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று கூறி விடுவிக்கப்பட, இந்த நபர் கோர்ட்டுக்கு வராமல் எஸ்கேப். இப்போது அவர் மீதான குற்றம் அதிகரிக்கப்பட்டு அவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சைபர் செக்ஸ் என்பது வயதுக்கே உரிய விஷயம்தான். ஆனால் எந்த காரணம் கொண்டும் எதிரே இருப்பவர் ஆணோ பெண்ணோ, வயது 18க்கு கீழ் என்றால் உடனடியாக சேட்டிங்க் விட்டு வெளியேறாவிட்டால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

அதுமட்டுமல்ல (கலிபோர்னியாவை பொறுத்தவரை) Sex Offenders புகைப்படமும் முகவரியும் இந்த வலைத்தளத்திலே நிரந்தரமாக பதியப்படும். இதில் உங்கள் வீட்டு முகவரியை கொடுத்தால் உங்கள் வீட்டு அருகே வாழும் செக்ஸ் அஃபெண்டர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வலைமுகவரியை என்னை போலவே நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். ஹாலோயீன் சமயத்தில் குழந்தையை அழைத்துச்செல்லக்கூடாத இடங்கள் பற்றி விழிப்புணர்வு பரவ இது உதவும்...

18 வயதுக்கு குறைந்தவர்களோடு உடல் ரீதியான தொடர்பு வைத்து பிடிபட்டால் அதோடு எல்லாம் காலி. இங்கே அதற்கான சட்டங்கள் மிகக்கடுமையானவை. வாழ்க்கை முழுவதும் Pedophile என்று அழைக்கபப்டுவார்கள் என்பது சட்ட நடவடிக்கையை ஒப்பிடும்போது ஜுஜுபி. நிறைய மாநிலங்களில் குறைந்த பட்சம் 25 ஆண்டுகளில் இருந்து அதிக பட்சம் ஆயுள் வரை இதற்காக தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனைக்காலம் முழுமைக்கும் பரோல் கிடையாது. இங்கு ஆயுள் என்றால் 14 வருடம் இல்லை... தண்டிக்கப்பட்டவர் உண்மையிலேயே மூச்சை நிறுத்தி சாகும் வரை.

பி.கு :: இதோடு நம்மூரில் பள்ளிகளில் குழந்தைகளிடம் உடல் ரீதியாகவே தகாத முறையில் நடக்கும் வாத்தியான்களுக்கு அளிக்கப்படும் தண்டனை பற்றி ஒரு ஒப்பீடு ஞாபகம் வந்து இம்சை அளிக்கிறது. அதாவது ஒரு பள்ளியில் இருக்கும் எல்லா குழந்தைகளிடமும் தகாத முறையில் நடந்த பிறகு அந்த வாத்தியானே அந்த செய்தியை தைரியமாக வெளியிடலாம். மாநில கல்வி ஆய்வாளர் தலைமையில் ஒரு வெட்டி குழு இதை விசாரித்து அதிக பட்ச தண்டனையாக பணிமாற்றம் செய்வார்கள்.. அதாவது அவனை வேறு பள்ளியில் சென்று இதே வேலையை செய் என்று மா.க.ஆ. குழு மாமா வேலை பார்ப்பார்கள்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

தண்டனை, இனவிடுதலை ஜல்லிகளும் மாற்றுப்பார்வையும்


ஒரு சில மார்க்ஸீய மற்றும் நக்கீரன் டைப் பத்திரிக்கைகளை படித்துவிட்டு டைகர் பீர் குடித்துக்கொண்டே, தோன்றுவதை எழுதும், நிகழ் சமுதாய எண்ணவோட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் சிந்தனையை வைத்துக்கொண்டு ஆனால் நம் சிந்தனையே சமூக விடுதலைக்கான ஒரே தீர்வு என்று நினைத்துக்கொள்ளும் வலைப்பதிவுலக பெரும்பான்மையின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னவென்றால் தனிமனித சமூக, பொருளாதார விடுதலைக்கு முட்டுக்கட்டை தேசியம் மட்டுமே என்பதாக கற்பித்துக்கொண்டு தேசியத்தை பழித்து எழுதுவது. இவர்களுக்காவது, அதிகாரத்தை முழுமையாக எதிர்க்கும் அல்லது அதிகாரத்தை மக்கள் கையில் முழுமையாக சென்று சேர்க்கும் வகையிலான கொள்கைகளா என்றால் என்றால் அதுவும் இல்லை... இனக்குழுக்களை பிறப்பின் அடிப்படையில் அதே இனத்தில் பிறந்த யாராவது ஒருவர் ஆண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற குண்டுசட்டி நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள்...

கிடைக்கின்ற செய்திகளை எல்லாம் அலசி அதில் தன் சுயசிந்தனை கொடுக்கும் மாற்றுப்பார்வையை கலந்து எழுதுவதல்ல இவர்களின் மாற்றுப்பபர்வை... மாற்றுப்பார்வை செய்திகள் என்று கட்டம் கட்டப்பட்ட செய்திளை மட்டுமே தேர்ந்தெடுத்து படித்து அதுவே சத்தியமான செய்தி என்று தீவிரமாக நம்பி அதே கருத்துக்களை மீள்வாந்தி எடுப்பது இவர்களின் வாடிக்கை. உபாதை என்னவென்றாலும் ஒரே மாத்திரையை தரும் தமிழக அரசு மருத்துவமனை மாதிரி எந்த விதமான ப்ரச்னை என்றாலும் தெகல்காவோ, அருந்ததி ராயோ எழுதுவதுதான் சரியான பார்வை என்று மட்டையடிக்கப்படும் கட்டுரைகள் இதில் ஒரு வகை... இந்த கட்டுரைகள் மற்றும் இன்ன பிற பக்கசார்பு கட்டுரைகளை மேற்கோள் காட்டி, இவர்களெல்லாம் எழுத்துலக பிதாமகன்கள் இதை எல்லாம் படித்தாவது உருப்படு என்று இல்லாத பார்வையாளர்களிடம் சலித்துக்கொள்ளும் குட்டி எழுத்தாளர்கள் இன்னொரு வகை... தம்மைப்போலவே இந்த நாசமாய்ப்போன சமூகமும் சிந்திக்காமல் இப்படி உருப்படாமல் கிடக்கிறதே என்ற உண்மையான அக்கரை காரணமாக வரும் புலம்பல் இது என்பதால் அவர்களின் அன்பிற்காக அதை மதிக்கலாம், மறக்கலாம்... ஆனால் அந்த கருத்துக்களை தங்கள் எழுத்தின் உள்ளே புதைக்காமல் என் கருத்தே சாஸ்வதம், மற்றது எல்லாம் திரிப்பு வெறுப்பு தெறிப்பு கொறிப்பு என்றெல்லாம் வெளிப்படையாகவே புலம்பி சலிக்கும் போது மதிப்பு நமக்கு ஆச்சரியமாக மாற ஆரம்பிக்கும்... ஆனால் இடம், பொருள்,ஏவல்,சாதி ஆகியவற்றை பொருத்து கொள்கை மட்டும் விதவிதமாக நிறத்தை மாற்றிக்கொள்ள, புலம்பல் மட்டும் அதேவாக தொடரும் போதுதான் என்ன இழவுடா இது எனும் எரிச்சல்தான் எழுகிறது.

தமது சாதிக்காரன் இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதியாக வந்தால்தான் நீதி உருப்படும் என்ற பரந்த எண்ணம் கொண்டவர்கள், தன் கருத்துக்கு எதிராக இந்திய நீதித்துறையால் அளிக்கப்படும் தீர்ப்புக்களின் மீது சலிப்பை கொள்வது இயல்பானது. நீதித்துறை மாசற்றது என்பது அல்ல என் வாதம். அதில் ஏகப்பட்டை ஓட்டைகள், நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தியல் காரணமாக எழும் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிரான தீர்ப்புகள் வருவது சகஜம்தான். ஆனால் அப்சலின் மரணதண்டனையில் அப்சல் நிரபராதியாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்திற்கு பலமூட்டும் எந்த கருத்துக்களையும் காணோம். அப்சலுக்கு மரணதண்டனை தீர்ப்பு வெளியானதும், மொத்தமாக, மரணதண்டனை என்பதே மனித நேயத்திற்கு எதிரானது என்ற எண்ணம் பலரால் வெளிப்படுத்தப்படுகிறது... இவர்கள் தாங்கள் வகுத்துக்கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருப்பவர்கள். பாம்போ பல்லியோ, எந்த ஜந்துவையும் கொல்ல மாட்டேன் என்று வாழ்பவர்கள் இவர்கள். பாம்போ பல்லியோ, மொத்தமாக கொல்ல மாட்டீர்களா அல்லது உங்கள் வீட்டிற்குள் வராத வரைக்கும் கொல்ல மாட்டீர்களா என்றெல்லாம் கேட்காமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் குடிமுழுகிவிடாது என்பதால் இதை கண்டுகொள்ள வேண்டியதில்லை.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்து, இதற்கு மதச்சாயம், விடுதலை போராட்ட சாயம் எல்லாம் பூசி மெழுகி தனது அழுக்கை வெளிப்படுத்தும் செக்கூலரிஸ்டுகள் எந்த வகையில் சேர்ப்பது என்பதுதான் தெரியவில்லை. வெகுசன ஊடகங்களின் மீது எரிச்சல் கொண்டிருக்கும் இவர்கள், அதே வெகுசன ஊடகங்கள் பரபரப்புக்காக வெளியிடும் குறுக்கப்பட்ட செய்தியாக வரும் தீர்ப்பின் ஒரு பக்கத்தை மட்டும் ப/பிடித்து இவனுக்கு மரணதண்டனை கொடுப்பதால் மட்டும் தீவிரவாதிகள் திருந்தவா போகிறார்கள் என்று உலகம் முழுமைக்குமான தமது அக்கரை வர்ணத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது இவர்களின் வாடிக்கை என்றால் நீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக யாராவது வெளியிட்டு அதை முழுவதுமாக படி என்றால் அதை சொன்னவரின் சாதியை சொல்லி இவன் இப்படித்தான் என்று கும்மியடித்துக்கொண்டு மண்டையை மலத்தால் நிரப்பிக்கொள்வது வேடிக்கை. ஏன் இந்த வாதங்கள் எல்லாம் அப்சலுக்கு கிடைக்கும் மரணதண்டனைக்கு மட்டும் எழுகிறது என்பது போன்ற எல்.கே.ஜி கேள்விகள் இப்போது அர்த்தமற்றவை...

*

தீவிரவாதிக்கு மரணதண்டனை கொடுப்பதால் அவன் திருந்த வாய்ப்பை அடைக்கிறோம். அவனுக்கு மரணதண்டனை என்பதால் ஏற்கனவே உயிரை தர தயாராக இருக்கும் மற்ற தீவிரவாதிகள் திருந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் தவறு, ஆகவே தண்டனையை மாற்றி ஆயுளோ, மன்னிப்போ கொடுக்கலாம்...

சிந்தித்துப்பார்ப்போம். போக்குவரத்தில் சிகப்பு விளக்கை மீறினால் தண்டனை இல்லை என்றால் எத்தனை பேர் குற்ற உணர்ச்சியே இல்லாமல் தாண்டுவோம்... ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டான், இவனை தண்டித்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது என்று யாருக்கும் தண்டனை கொடுக்காமல் போனால் சமூகத்தில் குற்றமா சீவகாருண்யமா எது பெருகும். ஒருவன் ஆசைப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்தால் அதே பெண்ணை கல்யாணம் செய்வது, அல்லது பஞ்சாயத்துக்கு பத்து ரூபாய் அபராதம் கட்டுவது என்பதா அல்லது வன்புணர்ந்தவன் இனி எந்த பெண்ணையுமே புணராத அளவு அவன் உடம்பில் மாற்றம் செய்வது (அட ** அறுப்பதுதான்) , இதில் எது செய்தால் "எதிர்காலத்தில்" இதுபோன்ற குற்றங்கள் குறையும்...

அரசியல், மதம், சாதி என்று எந்த கொளுகையும் இல்லாமல், தன் ஒருத்தன் வருமானத்தில் எப்படி சிக்கனமாக வாழ்ந்தால் கூடப்பிறந்தவளின் கல்யாணம் நடக்கும், குடும்பம் குடிசையில் இருந்து ஓட்டு வீட்டுக்கு மாற எத்தனை வருசங்கள் காத்திருக்க வேண்டும் வேண்டும் என்ற எளிய சிந்தனையில் போய்க்கொண்டிருப்பவன் பக்கத்தில் குக்கர் குண்டு வைத்து அவனை சிதறடிப்பவனின் மன உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும் அளவு அந்த குற்றத்தின் காரணமாக சரி செய்யவே முடியாத சேதத்தை அடைந்த, அந்த துயர நாள் முதல் வாழ்க்கையே மாறி எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தின் மன உளைச்சல்களை ஏன் எண்ணிப்பார்ப்பதில்லை... அப்போது கண்ணுக்கு கண்தான் தீர்ப்பா... அவனை கொன்றால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்பவர்களை நினைத்தால் என்னால் வாயால் சிரிக்க முடியவில்லை.

சமூகத்தின் பெரும்பான்மை சட்டத்திற்கு கட்டுப்பட்டது. இதன் அளவீடுகள் மாறுபடலாம். நடுராத்திரி மூன்று மணி ஒருவழிப்பாதையின் அந்தபக்கம் போலீஸ் இருக்கமாட்டான் என்று சத்தியமே செய்தாலும் ஒரு சிலர் அதில் போக மாட்டார்கள். என்னை போன்ற ஆசாமிகள் போலீஸ் இல்லாத நேரம் என்று கண்டிப்பாக தெரிந்த நேரத்தில் கொஞ்சம் தயக்கத்தோடு கடப்போம். ஒரு சிறுபான்மை இருக்கிறது, அரசியல், அதிகார, பணபலம் என்று ஏதோ ஒரு பின்புலம் காரணமாக சட்டத்தின் மீதும் தண்டனையின் மீதும் எந்த மதிப்பும் இல்லாமல் அலையும் கூட்டம். மற்றபடி பொதுபுத்தி தண்டனைக்கு பயந்தே வாழ்கிறது. அந்த பயம்தான் சமூகம் ஓரளவாவது நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்துகிறது. அந்த பயத்தையும் நீக்கிவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப்பார்கக் வேண்டும். சமூகத்தின் அமைதியை குலைக்கும் வண்ணம் வன்முறையை தூண்டிவிட்டாலும் சரி, அனுமதி வாங்காமல் அறவழிப்போராட்டம் நடத்தினாலும் சரி எந்த காரணமாக இருந்தாலும் டாக்டர் அய்யா கைவைக்க முடியாதவர் என்பதை நிரூபிப்பதற்காக பேருந்தை எரித்தும் பொதுசொத்தை நொறுக்கியும் ஒரு பக்கம் தொண்டர்கள் விளையாடும்போது, "பேருந்து நம் வரிப்பணம், அது நம் சொத்து, அதை சேதப்படுத்துவது சட்டப்படி குற்றம்" என்று அன்னை சத்யா கார்ப்பரேஷன் சாத்வீகமாக தட்டி எழுதி வைத்துக்கொண்டிருந்ததற்கு பதிலாகஒரு நாலு பேரை பிடித்து மிகக்கடுமையாக தண்டித்து அவன் குடும்பம் கஷ்டப்படுவதை - கட்சி பணரீதியாக குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் என்றாலும் - வெகுசன ஊடகங்கள் வெளிச்சத்தில் கொண்டுவந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளித்தபோது தீயினால் சூழப்பட்டு வெளிவர முயற்சித்தும் முடியாத கையாலாகத்தனத்தோடு போராடி உயிர் நீத்த மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்குமா என்பதை நினைத்து பார்ப்போம்.. இந்த பஸ் எரிப்பு வழக்கு கேலிக்கூத்து ஒரு முடிவுக்கு வந்து குற்றம் செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால் அதையும் வரவேற்கிறேன்.

ஏதோ ஒரு ஆத்திரத்தில் கண நேர உணர்ச்சி கொந்தளிப்பில் திட்டமிடாத கொலை செய்துவிட்டு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட கைதிக்கு அந்த தண்டனை வழங்குவதை நான் எதிர்க்கிறேன்... ஆனால் என்ன எழவு கொள்கையாக இருந்தாலும் கொழுப்பெடுத்து நிதானமாக திட்டம் போட்டு குற்றம் செய்து அப்பாவிகளை கொல்பவர்களுக்கு தரப்படும் மரணதண்டனையை முழுமனதோடு ஆதரிக்கிறேன். இதில் நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்... இதை சொன்னால்தான் அது, அப்படி சொன்னால்தான் இது, கண்டிசன் போட்டு எழுதினால்தான் எதிர்காலத்தில் எஸ்கேப் ஆகலாம் என்றெல்லாம் எழுதப்படும் பரமார்த்த வழவழ கொழ கொழ வெண்டிக்காய் குரு எழுத்தல்ல இது, இதுதான் என்னுடைய கொள்கை.

குற்றவாளிக்கு ஆதரவாக மக்கள் போராடுகிறார்களே, இவர்கள் என்ன வெட்டியாகவா போராடுகிறார்கள் என்று ஏதோ ஒரு வட இந்திய வெகுசன பத்திரிக்கையில் வந்த படத்தை பார்த்து நாமாக கருத்து எழுதக்கூடாது. இங்கு என்ன ஆர்னால்டு ஷ்வாஷ்னாகர் படமா காண்பிக்கிறார்கள் - டெர்மினேட்டர் பாகம் ஒன்றில் ஆர்னால்டு கெட்டவன், அடுத்த பாகத்தில் அவன் நல்லவன் என்று குத்துமதிப்பாக புரிந்து கொண்டு, எப்படி இருந்தால் என்ன, சண்டை காட்சிகளும் க்ராபிக்ஸும் சூப்பர், படத்தை ரசிப்போம் என்பதற்கு... குஷ்பு ப்ரச்னையில் கழுதை, துடைப்பம், இன்னபிற எல்லாம் கொண்டு போராடிய விசி தொண்டர்களின் படத்தை ஜூ.வியில் பார்த்து ஒரு நாகாலாந்து ப்ளாக்கர் தமிழ் கலாச்சாரம் பற்றி பதிவு எழுதினால் என்ன எழுதுவார் என்பதை நினைக்க வேண்டும்.

*

நாடாளுமன்றத்தை தாக்குவது சுதந்திரபோராட்டமா? இங்குதான் பகுத்தறிவு வேலை செய்ய வேண்டும்... திராவிடனாக பிறப்பதால் பகுத்தறிவு தானாக இருக்காது. மூளை மட்டும்தான் இருக்கும். அதில் பகுத்தறிவை தனிமனிதந்தான் முயற்சி செய்து புகுத்த வேண்டும். நாலு கால் ஒரு வால் இருப்பதால் கழுதையும் குதிரையும் ஒன்றுதான் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு நான் பகுத்தறிவு பாசறை என்றால் சொல்வதற்கு என்ன இருக்கிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் உரிமை ப்ரச்னை இருக்கிறது என்றே கொள்வோம், அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை தகர்ப்பது என்பது என்ன, பிறப்புரிமையா? அவன் மனிதனையே வெட்டுகிறான், நாம் மரங்களை வெட்டுவதின் ஒரு குற்ற உணர்ச்சியும் கொள்ள தேவையில்லை என்ற அடிப்படையில் பிறக்கும் சிந்தனை கோட்பாட்டின்படி பார்த்தால்தான் அது பிறப்புரிமை.. அவன் *** தின்கிறான், அதனால் நீயும் *** தின்பாயா என்பதுதான் அவர்களிடம் நாம் கேட்க தேவையில்லாதது... ஆனால் நாடாளுமன்றம் என்றால் என்ன என்பதை கேட்கலாம்...

நாடாளுமன்றம் என்பது என்ன வெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இளைப்பாறும் கூடமா.. சிமெண்ட் செங்கல்லால கட்டப்பட்ட வெறும் கட்டிடமா... அது 100 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக தெரியவில்லையா? அங்கே அறிவுஜீவிகளும் இருக்கலாம், அடிமாட்டு ஜந்துகளும் இருக்கலாம்... தகுதியில்லாத பலர் குறுக்கு வழியில் அதில் உட்காரலாம், மக்கள் உரிமைக்கு எதிரான பல விஷயங்கள் அங்கே சட்டங்கள் ஆக்கபப்டலாம்... ஆனால் எந்த காரணமாக இருந்தாலும் அதை ஒரு இயக்கத்தால் சிதைக்க முடிந்தால், அப்புறம் நாடு என்ற அமைப்புக்கு என்ன மரியாதை. நாடாளுமன்றத்தை புனிதமாக்கவில்லை நான், புனிதம் அல்ல என்பதாலேயே அதை செருப்பால் அடிக்கக்கூடாது என்கிறேன் நான்.

காஷ்மீரும் சரி, வடகிழக்கு மாநிலங்களும் சரி எது மக்களின் உரிமை என்று யார் வரையறை செய்வது. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் நடப்பது அரசியல். இன்று நேற்றல்ல, ரொம்ப காலமாகவே நடக்கிறது இந்த அரசியல். காஷ்மீரை இந்தியா சுத்தமாக வெட்டி விட்டுவிட்டால் அது சகல உரிமைகளோடும் தன்னாட்சி கொண்ட ஒரு நாடாக இருக்கும் என்று எத்தனை பேர் உண்மையாக நம்புகிறீர்கள். நேரு செய்த தவறே இவ்வளவு காலம் நம்மை துரத்திக்கொண்டிருக்கும்போது மேலும் ஒரு தவறு செய்வது குறித்து யோசிக்க வேண்டும்.. இங்கு "நமது" என்று நம் நாடு இந்தியா என்று நினைப்பவர்களை குறிப்பிட்டேன். நமது நாடு தமிழகம் என்பவர்களிடம் எனக்கு சொல்ல எதுவும் இல்லை. சீனா தன்னுடைய பிராந்திய எல்லை போக எவ்வளவு பிரதேசங்களை உரிமை கொண்டாடுகிறது என்பதை கணக்கில் கொண்டு வடகிழக்கு சுதந்திரத்தையும் பற்றி யோசிப்போம்.

வடகிழக்கில் தனி ராஜ்ஜியம் நடக்கிறதாம்.. கட்டப்பஞ்சாயத்துக்களும், தனி ராஜ்ஜியங்களும் எங்கும் இருக்கத்தான் செய்யும். பாப்பாபட்டி கீரிப்பட்டியில் பெரும்பான்மையாக இருக்கும் தேவர்கள் தங்களுக்கு தலைவராக ஒரு தலித் வர விரும்பவில்லை என்று வன்முறையில் ஈடுபட்டால் அரசாங்கம் பின்வாங்குகிறதா? எதற்காக வெட்டியாக அங்கே ஒரு நாடகம் நடந்துகொண்டிருக்கிறது பேசாமல் அதை பொதுத்தொகுதியாக மாற்றிவிடுங்கள் என்றா நாம் சொல்கிறோம். கேட்பவனுக்கு எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தால் நாடு என்ற அமைப்பு சிதைந்துவிடாதா? தனித்தமிழ்நாடு உட்பட அதைத்தான் இங்கு பலரும் விரும்புகிறார்கள் என்றாலும் கூட நான் உட்பட பல பேர் தமிழ்நாடு தனிநாடாக இல்லாமல் இந்தியாவோடு இணைந்திருப்பதையே விரும்புகிறோம். "தமிழன்" என்னை ஆண்டால்தான் என் வீட்டில் பாலும் தேலும் ஓடும் இல்லை பிச்சையெடுப்போம் என்ற மட்டையடி திராவிட கருத்தியலின் மீது எங்கள் யாருக்கும் நம்பிக்கையில்லை. பிறப்பால் தமிழரான கருணாநிதி கட்சிக்காரர்கள் வேண்டுமானால் பிறப்பையே தகுதியாக்கி எம்ஜிஆர் மலையாளி, ஜெயலலிதா கன்னடிகா, வைகோ மற்றும் விஜயகாந்த் தெலுங்கர்கள் என்று ஜல்லியடிக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாரும் என்னை பொருத்த வரை தமிழர்கள்தான். எனக்கு மட்டும் இல்லை இன்னும் கோடிக்கணக்கான மக்களும் அதே சிந்தனையில்தான் என்பதை வாணியம்பாடியில் முஸ்லீம்தான் ஜெயிக்க முடியும் என்ற திமுகவின் நம்பிக்கையின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட நாகூர் ஹனீபாவை எதிர்த்து வென்ற இந்து வேட்பாளர் உட்பட பல வெற்றிகள் கடந்த கால தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டிருகின்றன... இனம் மட்டுமல்ல சாதி கூட செல்லாது என்பதே பெரும்பாலான மக்களின் சிந்தனை. வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்பது கூட மருத்துவர் அய்யாவின் மட்டையடி அரசியலை விமர்சனம் செய்யும் அதே வெகுசன ஊடகங்கள் கட்டமைத்த பிம்பங்கள்தான். சாதி பார்த்து ஓட்டு என்பதெல்லாம் பிம்பம் என்பதை கடந்த தேர்தலில் விருத்தாசலம் நிரூபித்தது. ஆனால் தமிழர்கள், வன்னியர்கள் என்று காலங்காலமாக வெகுசன ஊடகங்கள் பிம்பம் ஏற்படுத்தியது. இவர்களின் உரிமைக்காகவும் எழுச்சிக்காகவும் தனிநாடு, தனி மாநிலம் என்றால் என்ன ஆகும்.. தமிழ் இனத்திற்கு கூட பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்காக தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றி தமிழர்களிடம் ஆளக்கொடுப்போம். அப்புறம் தமிழர்களுக்குள்ளே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர்களுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்காக தமிழ் நாட்டுக்குள்ளே அவர்களுக்கு ஒரு குட்டி நாடு ஆக்கிக்கொடுப்போம். இப்படி பிரித்துக்கொண்டெ இருப்போம்.

ஒரு பிராந்தியத்தில் ப்ரச்னை என்றால் ப்ரச்னையை தீர்க்க முயலவேண்டும். வடகிழக்கில் ப்ரச்னை என்ன என்பதை ஆராய்ந்து அதை சரி செய்ய முயலவேண்டும். அவர்களின் அடிப்படை தேவைகள், வாழ்க்கை மேம்பட வசதிகள், போக்குவரத்து, தொழிற்சாலைகள், என்று உள்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க உதவி செய்ய வேண்டும். அதை விடுத்து ஒரு இயக்கத்தின் வன்முறையை மக்களின் போராட்டம் என்று வரையறை செய்வதும், அவர்கள் அடக்கப்படுகிறார்கள் அதனால்தான் அப்பாவிகளை கொல்கிறார்கள் அதற்கு நாமும் சமுதாயமும்தான் காரணம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும், அவர்களுக்கு தர வேண்டிய நியாயமான உரிமை என்று மாநிலம் மாநிலமாக வெட்டி விட்டுக்கொண்டே இருப்பதும் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அதற்கு பெயர் என்னை பொருத்தவரை ஒன்றுதான்... கையாலாகாதவர்களின் சொம்புத்தனம்...




š இப்பதிவை மின்னஞ்சலிட