<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/?m%3D0\x26vt\x3d-745251474864776225', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

செயின் ரியாக்சன்


இந்த வார டைம் பத்திரிக்கையில் வந்திருந்த அந்த பாக்தாத் இளம் சகோதரர்களின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது இவர்கள் படம் பத்திரிக்கையில் வருவது இதுவே கடைசி முறையாக இருக்கவேண்டுமே என்பதுதான்...

13 வயதான முகமதுவும் அவன் தம்பியான அகமதுவும் 'சம்பவம்' நடந்த பொழுது பள்ளியில் இருந்திருக்கிறார்கள். சம்பவம் என்பது, முகமதுவின் அக்காவான 15 வயது அபீர் காசிம் ஹம்சா அல்-ஜனாபியை 21 வயது க்ரீன் என்ற அமெரிக்க சிப்பாய் வன்புணர்ச்சி செய்து, யூனிட் ஆட்கள் உதவியுடன் அவளுடைய பெற்றோர், அவளுடைய 7 வயது தங்கையோடு சேர்த்து அவளையும் எரித்துக்கொன்றது... இதில் எரிக்கப்படுவதற்கு முன்பு அபீரின் தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள்... இந்த சம்பவமும் பத்தோடு பதினொன்றாக, தீவிரவாதிகள் தேடும் வேட்டையின் ஒரு பகுதியாக யார் கவனத்திற்கு வராமல் போயிருக்க வேண்டியது.. திடீரென்று 'சம்பந்தமேயில்லாமல்' க்ரீனின் யூனிட்டைக் குறி வைத்து இயங்கி தீவிரவாதிகள் அந்த யூனிட்டில் இருந்து ஒரு சிப்பாயை கொலை செய்து, மேலும் இரு சிப்பாய்களை கடத்தி தலையை வெட்டியதும்தான் அமெரிக்க ராணுவத்துக்கு முதல் சந்தேகம் வந்தது.. மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த மனவழுத்தம் போக்கும் கேம்பில் க்ரீன் யூனிட்டை சேர்ந்த இன்னொரு சிப்பாய் நடந்த சம்பவத்தை சொல்லிய பின்பே விஷயம் வெளிச்சத்து வந்தது..

ஆனால் இந்த கேம்புக்கு ஒரு மாதம் முன்பே மனநிலை சரியில்லை என்ற காரணத்தால் க்ரீன் ராணுவத்திலிருந்து 'கவுரவமான' வெளியேற்றம் அளிக்கப்பட்டு அமெரிக்கா அனுப்பட்டிருந்தான்... இப்பொது க்ரீனும் அவனோடு சேர்ந்து சம்பவம் நடத்திய மேலும் நாலு சிப்பாய்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. க்ரீனின் சொந்தக்காரர்களிடம் அவனின் குணாதிசயங்களைப் பற்றி விசாரித்து, பென்டகனில் இது சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து, க்ரீனுக்கு கண்டிப்பாக மரண தண்டனைதான் என்று கட்டியம் கூறும் பத்திரிக்கைகள் இந்த சிப்பாயின் செயலால் அனாதை ஆக்கப்பட்டிருக்கும் முகமதுவும் அகமதுவும் என்ன ஆனார்கள் என்று சொல்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை...

*

.... You know, some people just cannot live in the camps. For my brother, it was already like dying. The only thing he lives for is movies. And then some sheik came and tell him that... to die for Allah is beautiful. And if he does this thing, our parents will be taken care of, and he will live on in paradise with 100 virgins. And my brother, he need to believe it very much. So he straps sticks of dynamite to his chest... And he went to the movie .... (from the movie The Siege)

*

தற்கொலைத் தாக்குதல் என்பது புதிய விஷயமில்லை... பதினோராம் நூற்றாண்டில் இருந்து வியட்நாம் போர் வரை தற்கொலைத் தாக்குதலுக்கு சுட்டி வைத்திருக்கிறார்கள் சரித்திரவியலாளர்கள். ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு லெபனானில் சிவில் போரின் போது லெபனான் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா தொடங்கி வைத்ததையே இன்றைய 'நவீனமய' தற்கொலை தாக்குதல் உத்தியின் ஆரம்பம் என்று சொல்கிறார்கள். ஈராக்கிய, அமெரிக்க தூதரகங்கள் தற்கொலைப்படையால் தாக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு நடந்த ட்ரக் பாம் தாக்குதல்களில் 241 அமெரிக்க மரைன் வீரர்களும் 58 ப்ரெஞ்சு பாராட்ரூப்பர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடந்த நாலே மாதங்களில் அமெரிக்க படை லெபனானை விட்டு வெளியேறியது. இந்த வாபஸ் நிகழ்வு, தற்கொலைத் தாக்குதலுக்கு ஒரு அந்தஸ்தையும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு ஊக்கத்தையும் அளித்தது. சிறிதும் பெரிதுமாக லெபனானில் 50க்கும் மேற்பட்ட தற்கொலை தாக்குதல் நடந்தபின், உலகம் முழுவதும் இந்த முறையை சுவீகாரித்துக்கொண்டது. விடுதலைப்புலிகள் இந்த முறைக்கு ஒரு சீரிய செயல்வடிவம் கொடுத்து இதனையும் ஒரு போர் யுக்தியாக மாற்றியதே, உலகெங்கிலும் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இதனை ஒரு போர் முறையாக உபயோகப்படுத்த ஊக்கியாக இருந்த நிகழ்வாக பார்க்கப்படுகின்றது...

1987ல் முதல் சுமார் 150 முறை புலிகள் தற்கொலை தாக்குதல்கள் நிகழ்த்தியிருக்கின்றார்கள் என்று நம்பப்படுகிறது. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள், பாலஸ்தீன ஹமாஸ், பாலஸ்தீன PIJ, Al Aqsa Martyr Brigades, துருக்கியில் குர்தீஷ் இன PKK, செசன்ய விடுதலை இயக்கங்கள் என்று பல இயக்கங்கள் தற்கொலைத் தாக்குதலை ஒரு முக்கிய ஆயுதமாகக் கையாளுகின்றன. செப்டம்பர் 11 நிகழ்வோடு சேர்த்து இதுவரை அல்-கய்தா இயக்கததைச் சேர்ந்த 150 நபர்கள் - ஈராக்கில் மரணமடைந்த 70 தற்கொலைப் படையினர் சேர்க்காமல் - 80 தற்கொலைத் தாக்குதல்களை நடந்தியிருக்கிறார்கள். தற்கொலைப் படையினரில் 15 விழுக்காடு பெண்கள். இதிலும் பெரும்பான்மையோர் தமிழீழ புலிகள் & துருக்கிய PKK இயக்கத்தை சேர்ந்தவர்களே. இயக்கத்து ஆண்களின் வீரத்துக்கு எல்லா வகையிலும் நிகரானது தங்கள் வீரம் என்று காண்பிக்க தற்கொலைப் படை பெண்கள் இந்த பணியில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்/ படுத்தப்படுகிறார்கள். இதில் சோகம் என்னவெனில், ஹமாஸ், PIJ, செசன் தீவிரவாதிகள் போராடும் பிராந்தியத்தில் சிவில் உரிமைகளை பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு நிகரான சுதந்திரத்தை அனுபவிப்பதில்லை.

தற்கொலைத் தாக்குதல் என்பது தீவிரவாதிகளைப் பொறுத்த வரை நேரடியான போரை விட பல்வேறு விதங்களில் இலாபகரமானது... குறைந்த வீரர்களைக் கொண்டு நிறைய சேதம் ஏற்படுத்தலாம். ராணுவத்தில் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாகப் போரிட்டு கொல்வதைக் காட்டிலும் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களைக் கொல்வது சுலபமானது. எல்லையில் நடக்கும் போரை விட நாட்டுக்குள் மக்கள் மத்தியில் நடத்தப்படும் 'போர்' நிறைய சேதத்தையும் சைக்கலாஜிக்கல் முறையில் அதிக பயத்தையும் உருவாக்க வல்லது. தற்கொலை வீரர் என்பவர் ஒன்றும் சீருடை எல்லாம் அணிந்து தனித்துத் தெரிய மாட்டார். மக்களோடு மக்களாக ஒரு கூட்டத்தில் ஊடுருவியிருக்கும் தற்கொலை வீரருக்கும் மற்றவருக்கும் வித்தியாசம் கண்டுகொள்வது கடினம் என்பதால் இதனைத் தடுப்பதும் நேருக்கு நேர் போர் என்பதை விட சிக்கலாகவே இருக்கிறது.

வாழ்வையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் இழந்த, ஏழை அல்லது நிராகரிக்கப்பட்ட சமூகத்திலிருந்தே தற்கொலைப் படையினர் உருவாகிறார்கள் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது. ஆனால் மானுடவியலாளர்கள் இந்தக் கூற்றை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வு கொண்ட இரு சமூகங்களைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்ததில் உருவாகிய தீவிரவாதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்த வரை வித்தியாசம் அதிகம் இல்லை. ஆனால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது என்ற வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமூகம் அடிநிலை சமூகத்தை விட அதிக எண்ணிக்கையில் பாதிப்புள்ளாகியிருக்கிறது. உலகம் முழுவதும் முறியடிக்கப்பட்ட தற்கொலை முயற்சியில் வந்த தாக்குதல்காரர்களை விசாரித்த வரை, இதில் ஈடுபடும் அனைவரும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதும் தெரிய வந்தது.. ஒரு சிலருக்கே திருப்பி பழிவாங்க வேண்டும் என்பது ஆழமான நோக்கமாக இருந்திருக்கிறது.. மற்றவர்களைப் பொறுத்த வரை, ஊட்டப்பட்ட எண்ணங்களால் விளைந்த கற்பனை தந்த சுகம், நாட்டுக்காக அல்லது இனத்துக்காக உயிரை மாய்த்துக்கொள்வதில் உள்ள தியாகம், இறந்த பிறகாவது தனக்கும் தனது குடும்பத்தினருக்கு பெருமை சேர்ப்பது, குடும்பத்திற்கு மீதி வாழ்நாள் முழுமைக்குமான பணம், குடும்ப கௌரவம் அல்லது மானம் (ஹமாஸ் தற்கொலைப்படை பெண்மணி ஒருவர், இரண்டு குழந்தைக்குத் தாய், கள்ளக்காதல் காரணமாக கொண்ட அவச்சொல் நீங்கி அவருக்கு நல்ல பெயரும் கவுரமும் திரும்பக் கிடைக்க ஒரே வழி பல இஸ்ரேலிகளை கொன்று தானும் இறப்பதுதான் என்று இயக்கத்தால் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்) என்று பல காரணங்கள்.

ஒரு இளைஞனோ இளம்பெண்ணோ, குண்டை மடியில் கட்டிக்கொண்டு சென்று குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் எல்லாம் கலந்த கூட்டத்தில் குண்டை வெடிக்க வைத்து தன்னோடு சேர்த்து எல்லாரையும் கொல்லும் அளவு அவர்களுக்கு எப்படி ஒரு மனநிலை வாய்க்கிறது? கொண்ட கொள்கைக்காகத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டால் ஆயிரம் கன்னிப் பெண்களுடன் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தன் உயிர் வாழ்தல் மீதான ஆசையை விட ஆழமாகப் பதிவது எப்படி? மூளைச்சலவையால் இது சாத்தியம்தானா?

இது போன்ற ஒரு படையைத் தயார் செய்வதில் கைதேர்ந்த ஆள்சேர்ப்பாளர்கள், இத்தேர்வுக்கு பலிகடாகளாக ஆகக்கூடிய பலகீனமான மனநிலையில் உள்ளவர்களைக் கவனமாகத் தயார் செய்வார்கள் aka பேச்சாலேயே மயக்குவார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்கள் பலகீனத்தைப் பொறுத்து "சமூக நன்மைக்காக" இந்த தியாகத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நன்மைகளையும் நைச்சியமாகப் புகட்டுவார்கள். இந்தப் புகட்டுதல் உடல்ரீதியாக அன்றி மனரீதியாக - by persuasion and manipulation techniques - நடைபெறும். (குர்திஷ் PKK மட்டுமே இதுவரை தற்கொலைக்கு ஒத்துக்கொள்ள மறுத்த அதன் உறுப்பினர் ஒருவரை சுட்டுக் கொன்றதாகப் பதிவாகியிருக்கிறது)

உறுப்பினர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள அவர்களுக்குப் பல நோக்கங்களும், கோஷங்களும் இயக்கத்தால் கற்பிக்கப்படும். சிலசமயம் கடவுள் மற்றும் மதத்தின் பெயரால். சில சமயம் தேசத்தின் பெயரால். சில சமயம் எதேச்சதிகார நிர்வாகங்களைப் பழிவாங்கும் பெயரால்.. மதம் மற்றும் கடவுள் பெயரால் நடக்கும் போராட்டத்தில் கடவுளின் மொழியைக் கற்பிக்கும்போது இயக்கத்தினருக்கு சாதகமானவற்றை மட்டும் அல்லது இருப்பவற்றை சாதகமமாகத் தோன்றும் வண்ணம் திரித்துப் புகட்டுவார்கள். இதுபோலவே மொழி, நாடு, அதிகார வர்க்கம் என்பவை எல்லாம் தலைமையின் நோக்கத்துக்கு ஏற்ப வேறு யோசனையை சிந்திக்க முடியாத அளவு புகட்டப்படும்.

ஒரு லட்சியத்துக்காக உயிர் துறக்கும் அவர்களுக்கு அதற்குண்டான பலாபலன்கள் பற்றியும் விருப்பத்திற்கேற்றவாறு எடுத்துச்சொல்லப்படும். சில சமயம் அதன் பலாபலன்கள் இறப்புக்கு அப்புறம் - சொர்க்கத்தில் கடவுள் மற்றும் 100 பெண்கள் - கிடைக்கும். சில சமயம் இறப்புக்கு முன்பே - தலைவனின் வசீகரத்தால் கவரப்பட்டு அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய விரும்பும் ஆனால் அவனை காணக்கூட வாய்க்கப் பெறாத வீரருக்கு இறப்பதற்கு முந்தைய நாள் தலைவனுடன் விருந்து - கிடைக்கும். அப்பாவி மக்களைக் கொல்வதைக் குறித்து கொஞ்ச நஞ்ச சஞ்சலம் அதிர்ஷ்டவசமாகத் தோன்றினால், அவர்கள் செயல் போர் நேரத்தில் அந்நாட்டு போர்வீரர்களைக் கொல்வதற்கு இணையாக ஒப்பிடப்பட்டு அதற்கும் ஒரு நியாயம் கற்பிக்கப்படும். ஆனால் போர் வீரர் என்பவர் அந்நாட்டுக் கொள்கையை செயல்படுத்துவதற்காக தானே முடிவெடுத்து போர் புரிய வந்தவர். தம்மால் கொல்லப்படும் அப்பாவி பொதுமக்களில் பலர் அந்நாட்டு கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்ற ஒளிந்திருக்கும் உண்மை 'வீரருக்கு' தோன்றும் அளவு சந்தர்ப்பமே கிடைக்காது...

ஏதோ ஒரு குண்டில் சிதறடிக்கப்பட்ட நம் வாழ்க்கை நமக்கு தந்த பாதிப்பின் வலிக்குப் பதிலடியாக தாம் ஒரு குண்டை வெடிக்க, அந்த குண்டு சிதறடிக்கும் பல நூறு பேரின் வலி இன்னும் ஒரு நூறு குண்டுகளை நாடி... என்று ஒரு செயின் ரியாக்சனுக்கு அடி போடுகிறோம் என்பது அவர்கள் சிதறும் வரை அவர்களுக்கு தோன்றாமலேயே போவதுதான் விதி.

*

"... there are people out there who don't care about money and don't give a damn about respect. People who believe the killing of innocent man and woman is justified. For them it is Rage, Frustration, Hatred. They feel pain and they are determined to share it with the world...." (from the movie, The Peacemaker)

*

வேறு ஏதோ பெயர் தெரியாத ஒரு நாட்டின் ராணுவ வீரன் தன் நாட்டுக்கு வந்து தன் அக்காவின் கன்னத்தில் ஆட்காட்டி விரலால் தடவியபோது அவள் பயத்தால் உறைந்துபோய் நின்றிருந்ததைப் பார்த்ததை நெஞ்சிலேயே சுமந்திருக்கும் முகமதுவுக்கும், என்ன நடந்தது என்று புரியாமலேயே அண்ணன் கையைப் பிடித்துக்கொண்டு 'அனாதை'யாக நிற்கும் அகமதுவுக்கும், எதிர்காலத்தை, இந்தக் கட்டுரையை நாம் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணம், சொந்தமா இயக்கமா யார் தீர்மானிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே, அவர்கள் புகைப்படம் பத்திரிக்கையில் வந்தது இது கடைசி தடவையா இல்லையா என்பதும் செயின் ரியாக்சனின் அடுத்த லிங்க் இங்கே நிற்கிறதா அல்லது தொடர்கிறதா என்பதும்...


நிலா சிறப்பு ஆசிரியராக இருந்து தயாரித்த தமிழோவிய இதழுக்காக சென்ற வாரம் எழுதப்பட்ட கட்டுரை ;

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராகும் இரு நண்பர்களைப் பற்றிய படம் paradise now முழுக்க முழுக்க இதுபற்றிப் பேசுகிறது.அதேபோல விடுதலைப்புலிகளின் கடலோரக் காற்று குறும்படம் கரும்புலித் தாக்குதலுக்கு தயார் செய்யும் போராளிகள் மக்களோடு ஊடாடுவதைப் பற்றியது
 



மிகவும் கொடுமை.
 



தற்கொலைத் தாக்குதல் மட்டும்தான் செயின் ரியாக்சனுக்கு வழி வகுக்கிறாதா?தாக்குதல்கள் எவையுமே ஒரு புள்ளியில் முடிவடைந்து விடுவதில்லையே(ஈடுபடும் இருவருமே அழிவது தவிர)செயின் ரியாக்சன் தானே.உதாரணத்திற்கு மும்பையில் குண்டு வெடிக்கிறது என்ன ஏது என்று விசாரிக்காமல் முஸ்லிம்களைக் குற்றம் சாட்டுகிறார் அமைச்சர்.தன்னுடைய மதத்தைப் புண்படுத்திவிட்டார்கள் என்று எத்தனை பேர் 'அந்தப் பக்கம்' போனார்களோ
 



அந்தக் கடைசி வரிகளை கொஞ்சம் மாற்றி எழுதியிருந்தால் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன், திரு. ஈழநாதன்.

"பார்! நம்முடைய மதத்தைப் புண்படுத்திவிட்டார்கள்" என்று எத்தனை பேரை "அந்தப் பக்கம்" இழுத்தார்களோ?"

இதுதான் நடப்பு.

விவரமான பதிவு.
 



----தன் அக்காவின் கன்னத்தில் ஆட்காட்டி விரலால் தடவியபோது அவள் பயத்தால் உறைந்துபோய் நின்றிருந்ததைப் பார்த்ததை நெஞ்சிலேயே சுமந்திருக்கும் முகமதுவுக்கும், என்ன நடந்தது என்று புரியாமலேயே அண்ணன் கையைப் பிடித்துக்கொண்டு 'அனாதை'யாக நிற்கும் அகமதுவுக்கும்,---

கொஞம் தொலைக்கட்சித் தொடர் டச் தெரிகிறது. தேவிபாலா ரொம்ப பாதித்து விட்டாரா ;-)


----சுமார் 20 வருடங்களுக்கு முன்பு லெபனானில் சிவில் போரின் போது லெபனான் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா தொடங்கி வைத்ததையே ----

தெரியாத தகவல்... நன்றி!

நம்மால் முடிந்தது... இதில் கைகோர்த்துக் கொள்ளலாம்: Big Brothers Big Sisters
 



//தற்கொலைத் தாக்குதல் என்பது தீவிரவாதிகளைப் பொறுத்த வரை நேரடியான போரை விட பல்வேறு விதங்களில் இலாபகரமானது... குறைந்த வீரர்களைக் கொண்டு நிறைய சேதம் ஏற்படுத்தலாம். ராணுவத்தில் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாகப் போரிட்டு கொல்வதைக் காட்டிலும் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களைக் கொல்வது சுலபமானது. எல்லையில் நடக்கும் போரை விட நாட்டுக்குள் மக்கள் மத்தியில் நடத்தப்படும் 'போர்' நிறைய சேதத்தையும் சைக்கலாஜிக்கல் முறையில் அதிக பயத்தையும் உருவாக்க வல்லது. //

அணு ஆயுதத்திற்கும் இது பொருந்தும்; இதற்கு மேலும் பல விஷயங்கள் பொருந்தும். உதாரணமாய் அணு ஆயுதம் பயன்படுத்தப் படாத போது கூட சிறந்த ஆயுதமாய் சில காரியங்களை சாதிக்க பயன்படும்.
 



சரியோ பிழையோ ..நீங்கள் சில விடயங்கள் சிறப்பாக விவாடிப்பதாக நான் கருதுவதாலும், இங்கு பொருட்பிழை இருப்பதாலும் சுட்டிகாட்டவேண்டும் போல இருந்தது. அதனால் மட்டும்....

[இங்கு பல விடயங்கள் பொதுமைப்படுத்தப்பட்டதால் எனக்கு அப்படி ஒரு புரிதலோ தெரியவில்லை!]



/**தற்கொலைத் தாக்குதல் என்பது தீவிரவாதிகளைப் பொறுத்த வரை நேரடியான போரை விட பல்வேறு விதங்களில் இலாபகரமானது... குறைந்த வீரர்களைக் கொண்டு நிறைய சேதம் ஏற்படுத்தலாம். ராணுவத்தில் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாகப் போரிட்டு கொல்வதைக் காட்டிலும் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களைக் கொல்வது சுலபமானது. எல்லையில் நடக்கும் போரை விட நாட்டுக்குள் மக்கள் மத்தியில் நடத்தப்படும் 'போர்' நிறைய சேதத்தையும் சைக்கலாஜிக்கல் முறையில் அதிக பயத்தையும் உருவாக்க வல்லது. தற்கொலை வீரர் என்பவர் ஒன்றும் சீருடை எல்லாம் அணிந்து தனித்துத் தெரிய மாட்டார். மக்களோடு மக்களாக ஒரு கூட்டத்தில் ஊடுருவியிருக்கும் தற்கொலை வீரருக்கும் மற்றவருக்கும் வித்தியாசம் கண்டுகொள்வது கடினம் என்பதால் இதனைத் தடுப்பதும் நேருக்கு நேர் போர் என்பதை விட சிக்கலாகவே இருக்கிறது.
**/

** அமேரிக்கா இராக் மீதான ஆரம்பத்தாக்குதலில் விமானத்தாக்குதல் நடத்தியது நாட்டு எல்லையில் போர் நடத்தவா?
** போர் / எதிரி என்று வந்துவிட்டால் தாக்குதல் எப்படியும் இருக்காலாம். (என்று போரியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். என்ன செய்வது? ஆதாரம் இல்லை ;)
** விடுதலைபுலிகளை பொறுத்தவரை பெரும்பாலும் ராணுவ இலக்குகளே தற்கொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது. (பெரும்பாலும் என்று escape clause இருப்பது எவ்வளவு வசதி)
**


2. மூளைச்சலவையால் சாத்தியமானவை பல இருக்கிறது. நாட்டுப்பற்று/ இனப்பற்று .etc.
இந்தியாவுக்கு 2012 ஒலிம்பிக்ஸ்ல் தங்கம் கிடைக்கப்போவது ஒருவகை மூளைச்சலவையால் [என்று மானிடவியலாளர் கருதுகிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். ]
[He knows that if he runs people will be happy. he does not know the impact it has on his body - telegraph 23/07/2006]


3. தற்கொலைப்படை என்ற வலிமையான ஆயுதம் அளவுக்கு மிக அதிகமாக பவிக்கப்படுவதாக ( ஆயுதம் வைத்திருப்பவர்களால்) - [ஆயுத விற்பனர் சொல்கிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். என்ன செய்வது? ஆதாரம் இல்லை ;) ] .

4. செயின் ரியாக்சன் - [தமிழில் தலைப்பு கொடுத்தால் என்ன? ] - செயின் ரியாக்சனின் ஆரம்பம் என்ன?
க்ரீன் வாங்கிய அடி அமெரிக்கவில் ஒரு சமூக/ குடும்பப் பிரச்சனையால். அவனால் பாதிக்கப்பட்டது எங்கோ இருந்த அகமது. உலகம் இயங்குவது இப்படிப்பட்ட chain reaction ஆல் தான் (என்று ... ) . தற்கொலை தாக்குதலுக்கும் chain reaction என்ன special தொடர்பு?


5. /**ஏதோ ஒரு குண்டில் சிதறடிக்கப்பட்ட நம் வாழ்க்கை நமக்கு தந்த பாதிப்பின் வலிக்குப் பதிலடியாக தாம் ஒரு குண்டை வெடிக்க, அந்த குண்டு சிதறடிக்கும் பல நூறு பேரின் வலி இன்னும் ஒரு நூறு குண்டுகளை நாடி... என்று ஒரு செயின் ரியாக்சனுக்கு அடி போடுகிறோம் என்பது அவர்கள் சிதறும் வரை அவர்களுக்கு தோன்றாமலேயே போவதுதான் விதி. **/

9/11 தற்கொலை தாக்குதலின் பின் அமேரிக்காவில் இருந்து எத்தனை தற்கொலை தாக்குதல் உருவானது?

இல்லை ... தற்கொலை தாக்குதலின் chain reaction வேறுவகையாய் இருக்குமென்றால், தற்கொலையை தூண்டியது எது?

6. தற்கொலைத்தாக்குதல்க்காரர் தம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்துவதால்தான் தான் அவர்களால் "அதை" செய்ய முடிகிறது. அது கலாச்சாரத்துடனும் இணைந்தது (என்று ... ) . UK ல் இருந் து இஸ்ரேல் சென்று தாக்கியவர்களும்/ லண்டன் தாக்குதல் நடத்தியவர்களும் பாக்கிஸ்தானிய மூலம் கொண்டவர்கள்.

7. ஏனோ சியாச்சின் ஞாபகம் வருகிறது.
தாக்குதலின் பின் தப்புவதற்கு 37% க்கு குறைவாக வா́ய்ப்பு இருந்தால் மட்டும் அது தற்கொலை தாக்குதலா?


8. கொலைகள் செய்வது Vs எனது உயிர் உட்பட கொலைகள் செய்வது - உயிர்வலியை எல்லோருக்கு இருக்கும்.

9. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது வெளியே மழை. மெதுவாக காற்றும் வீசுகிறது. நான் இங்கு எழுதுவதை எனது சூழல் நிர்ணயிக்கிறது. மழை நீருக்கு பதில் குண்டு விழுந்தால் நான் என்ன செய்வேன்? [தற்கொலைத்தாக்குதல் செய்யமாட்டேன்!]


பிகு:
எனக்கு முகம் இல்லாததில் ஒரு வசதி. யாரும் என்னை கேள்விகளை கேட்டால் பதில் சொல்ல தேவையில்லை. கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

-பிடி
 



முகமூடி நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
 



சரி, உங்க கருத்து ??